ஒப்பரேஷன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 174 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மெல்ல.. மெல்ல… மெதுவா தூக்கி வையுங்கோ… தம்பி கவலைப்படாதேயும்… கொழும்பில எல்லாம் சரிப் படுத்திக்கொண்டு வாரும். இந்த நேரத்தில் அம்புலன்ஸ் கிடைச்சதே பெரிய காரியம். பத்திரமா படுத்திரும். அழக்கூடாது. நம்பிக்கையோட இருக்க வேணும்… சரிதானே…” 

அம்புலன்ஸ் வண்டியில் ஸ்ரெச்சரோடு தூக்கி அவனை ஏற்றி அனுப்பும்போது, கலங்கிய கண்களோடு அந்த நேர்ஸ் சொன்ன பரிவான வார்த்தைகள்… அவன் மனம் வருந்திக்கொண்டிருந்தது. அவன் கண்கள் கலங்க அந்த நேர்ஸை பரிவோடு பார்த்தான். 

“மீண்டும் இவங்கள பார்ப்போமா… என்னை ஏன் பிழைக்க வைக்க முயற்சிக்கிறாங்கள். எனக்கு ஏன் வாழ்க்கை. ஆருக்காக நான் வாழ வேணும். எனக்குப் போல வேதனையள் ஆருக்கும் வந்திருக்குமா… கடவுள் எண்டு ஒருத்தன் இருக்கிறானா… இருந்தா .. எனக்கு ஏன் இவ்வளவு வேதனையள்… நான் ஆருக்கு என்ன கெடுதி செய்தன்…ஐயோ… என்ர செல்வம் எல்லாத்தையும் இழந்திற்றேனே… என் மனோ… என்ர ராசாத்தி… உன்னைப் பறிகொடுத்த பின்னும் நான் உயிரோடிருக்க வேணுமா… கிளிக்குஞ்சு போல பெத்துத் தந்த பிள்ளை யையும் இழந்தேனே… இனி நான் ஏன் சீவிக்க வேணும். ஆரிட்ட சொல்லி அழுவேன்… ஐயையோ…!”

அம்புலன்ஸ் பரந்தன் சந்தியைக் கடந்து வேகமாக விரைகிறது. 

சலம் போவதெற்கென கொழுவியிருந்த குழாய் பொருத்தப்பட்ட இடத்தில், சலவாசலில் வலி தாங்க முடியவில்லை. ஓவென்று கத்த வேண்டும் போலிருந்தது. பக்கத்திலிருந்த ஆளிடம் சொன்னான். கத்தினான். “ஐயோ… இந்தக் குழாயை ஒருக்கா கழட்டி விடுங்கோ..’ 

அம்புலன்ஸ் கிளிநொச்சி ஆஸ்பத்திரி வாசலில் நின்றது. அவசரமாக டாக்டர் வந்து யாழ். ஆஸ்பத்திரியில் கொடுத்த துண்டினை வாங்கிப் பார்த்தார். பின் அவனைப் பார்த்தார். 

“சொறி… நான் அதைக் கழட்ட மாட்டன். இப்படியே கொழும்புக்குக் கொண்டு போங்கோ… கொழும்பு ஆஸ்பத்திரிக்குத்தான் துண்டு எழுதியிருக்கு நான் அதில் கைவைக்கப்படாது…” அம்புலன்ஸ் மீண்டும் ஓடுகிறது. அவனுக்கு உயிரே போவது போலிருக்கிறது. 

“நான் மாத்திரம் பிழைக்க இவ்வளவு கஸ்ரப்பட வேணுமா… என்ர மனுசி.. பிள்ளை பிளைச்சிடும் எண்டா எவ்வளவு கஸ்ரத்தையும் தாங்கியிருப்பேனே.. நான் பாவி… எனக்கேன் இப்பிடி ஒரு நிலை…” 

பிள்ளை பிறந்து பத்து நாளாகவில்லை. எங்கும் ஒரே பிரச்சினை… சண்டை… இதுவரை காணாத கேட்டிராத சத்தங்கள். நிகழ்வுகள். ஆயிரமாய்… ஹிந்தி மொழிச் சத்தங்கள்… இரண்டாம் நாளே பெரியாஸ்பத்திரியி லிருந்து துண்டு வெட்டி கொண்டு வந்திருந்த தாயையும், பிள்ளையையும் பதுங்குகுழிக்குள் எத்தனை மணித் தியாலம் தான் வைத்திருப்பது. 

கூரைக்கு மேலால் விசில் ஊதினமாதிரி சத்தத்தோடு போகிறது ஷெல்… அருகில் எங்கோ விழுந்து இரண்டு, மூன்று பயங்கரச் சத்தங்கள் கேட்கிறது. 

அவளுக்கு காய்ச்சல் வந்து நடுங்குகிறது. பிள்ளையின் காதுக்குள் எப்போதும் பஞ்சு அடைத்தபடிதான். தொடர்ந்து இப்படியே வைத்திருக்கப் பயமாகவிருந்தது. சூட்டுச் சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டது. கார் ஒன்றைத் தேடிப் பிடித்து பக்கத்துக் கிராமமொன்றுக்குக் கூட்டிச் சென்று ஒரு வீட்டில் கெஞ்சி இடம் கேட்டு வைத்திருந்து விட்டு மானிப்பாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் காட்டினான். அவர்கள் கைவிரித்து விட்டனர். பெரியாஸ்பத்திரிதான் இனிக் கதி…! 

ரொம்பச் சிரமப்பட்டு பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து வார்ட்டில் சேர்த்தான். அன்று ஒரு டாக்டர் தான் அத்தனை வார்ட்டையும் கவனித்துக் கொண்டிருந்தார். அங்கும் ஒரே நெருக்கடி. 

அந்த டாக்டரும் மறுநாள் இல்லை. ஊழியர்களும் குறைவு. பலர் ஆஸ்பத்திரியில் அடைபட்டுக் கிடந்தனர். வெளியில் போகவே பயமாகவிருந்தது. 

ஒரு நேர்ஸ் அவனிடம் வந்தாள். கை நிறைய ‘அம்பிசிலின்’ கப்சூல்களை அள்ளி அவனிடம் கொடுத் தாள். ‘ஆறு மணித்தியாலத்துக்கு ஒரு தரம்… இரண்டு கப்சூல்கள் வீதம்…’ நோயாளியை ஒரு தரம் உற்றுப் பார்த்து விட்டு அந்த நேர்ஸ் பறந்து மற்றக் கட்டிடத்துக்குள் போனாள்.இப்போது அவன்தான் அங்கு நேர்ஸ் மாதிரி… மனைவியையும் பார்த்துக் கொள்வதோடு…. வேறு சிலருக்கும் இயன்றவரை உதவினான். 

அவளைத் தூக்கி வைத்து அழுகையைத் துடைத்து அவளுக்கு கப்சூல்களைக் கொடுத்தான். தொடர்ந்து படுக்கையில் கிடந்ததால் ஏற்பட்ட புண்களைக் கழுவித் துடைத்துவிட்டான். வார்ட்டில்கிடைக்கும் சாப்பாட்டை, கொண்டு வந்திருந்த ஹோர்லிக்ஸை கொடுத்துக் கொண்டிருந்தான். மனைவியோடு பக்கத்தில் பச்சிளம் குழந்தை. பாலூட்ட அவளால் முடியாது. அவள் பால் குழந்தைக்குக் கூடாதாம்… அந்த நேர்ஸ் சொல்லியிருந் தாள். குழந்தையை தெரிந்த ஒருவர் மூலம் வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான். 

அங்கு கொண்டுபோய் நான்கு நாட்களுக்குள்ளேயே குழந்தைக்குக் காய்ச்சல். இடைக்கிடை பிரச்சினை கூடுவதும் குறைவதுமாகவிருந்ததால் பரிகாரியிடமும் கொண்டுபோய் காட்ட முடியாத நிலை. சரியான உண வில்லை. அங்கு வந்து ஐந்தாவது நாள் குழந்தை இறந்து விட்டது. அவனுக்குத் தெரியாது. அன்று அந்த வார்ட்டுக்கு வந்த நேர்ஸ் இவனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டுச் சொன்னாள். “தம்பி… பாலசிங்கம்.. உம்மைப் பார்க்க பரிதாபமாக இருக்கு… கலியாணம் முடிச்சுப் பதினைஞ்சு மாசம் எண்டு சொன்னீர். இப்ப அவவின்ர உடம்பில ரத்தத்தில கிருமி கலந்திற்று. சரியாக கவனிக்காததால இந்த நிலை… இங்க டாக்டர்மார் இல்லை… நீங்க கொண்டு வந்த நேரம் அந்த நல்ல டாக்டர் இங்க இல்லை. அவர் போயிற்றார்… நேர்ஸ்மார் கூட இப்ப ஒழுங்காக வரமுடியாத நிலை. நான் கூட இங்கதான் தங்கி யிருக்கிறான்.கிட்டத்தட்ட நான் ஒரு அநாதை மாதிரி… என்ர வாழ்க்கை அப்பிடி… சனத்துக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யிறது தான் எனக்குக் கடவுள் தந்ததொண்டு எண்டு நினைச்சு இங்கேயே இருந்து இப்ப வேலை செய்யிறன்…இவ பிழைக்கிறது கஸ்ரம்.. மனதைத் திடப்படுத்திக்கொள்ளும்… ஏதாவது வழியில கஸ்ரப் பட்டு வீட்டுக்குக் கொண்டு போக முடிஞ்சா கொண்டு போகப் பாரும்… பிறகு இங்க தகனம் பண்ணக் கூட கஸ்ரமாக இருக்கும். இந்தக் கப்சூல்களை நான் சொன்ன மாதிரி தொடர்ந்து குடும். கவலைப் படாதேயும்” 

அவனுக்குத் தலை சுற்றியது. ‘எங்கேயோ போய் விழும் ஷெல் என்ர தலையில விழாதா, என்ர மனுசி என்னை விட்டு போறதுக்குள்ள இதில ஷெல் விழுந்தா நானும் சேர்ந்து என்ர ராசாத்தியோட போயிடுவேனே… இதுக்குத் தானா இவ்வளவு கஸ்ரப்பட்டு இங்க கொண்டு வந்தனான்…’அன்று காலை அவள் கண் சிறிது தெளிவாகத் திறந்திருந்தது. பக்கத்தில் வருமாறு கூப்பிட்டவள், “சோறு தாங்கோ” என்றாள். தன் கையை மெல்லத் தூக்கி அவன் கண்களைத் துடைத்தும் விட்டாள். வார்ட்டில் திரிந்து சோறு வாங்கி வந்தான். தண்ணீர்ச் சாப்பாடே வேண்டாம் என்றவள் இன்று சோறு கேட்பது அவனுக்கு ஒருவிதம் தென்பாகவும் வியப்பாகவும் இருந்தது. அவளை முன் பக்கமாகத் தூக்கித் தன் மார்பில் சாய்த்து வைத்து, இடது கையால் அணைத்துக் கொண்டு குழந்தைக்குக் கொடுப்பது போல, சோற்றைக் குழைத்து தீத்தி விட்டான். இரண்டு கவளம் சாப்பிட்டாள். பின்பு சாப்பிட முடியவில்லை. 

கண்களில் நீர் வடிந்தது. “அழாதே” என்று சொல்லித் துடைத்து விட்டான். திருமணமான நாள் முதல் இன்று வரையான ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண்முன் படமாக ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தது. உலரப் போட்ட ஈரத் துணியிலிருந்து துளித் துளியாய் நீர் சொட்டுவது போல அவன் கண்களிலிருந்தும் நீர் சொட்டிற்று. 

அவன் மார்பில் அவள் சாய்ந்து படுத்திருந்தாள். என்னென்னவோ நடந்து போன நினைவுகள் வந்து மோதுகின்றன. “எனக்கு அப்பா… அம்மா… இல்லை… நீங்கதான் எனக்கு எல்லாம்… உங்களை தூர இடத்துக்குப் போய் உழைக்க விடமாட்டேன். என்ன கஸ்ரம் வந்தாலும் நீங்க இங்கதான் இருக்கோணும். எனக்கு நீங்க தான்… உங்களுக்கு நான் தான்..” 

ஆறு மாதத்துக்கு முன்பு கடுமையான காய்ச்சல் வந்த போது விடிய விடிய விழித்திருந்து குடிநீரும் மருந்தும் தந்து சொன்னவை… வாயைக் கழுவி விட்டான். 

இவன் கண்களையே அவள் பார்த்துக் கொண்டு.. “அழாதேயுங்கோ… எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்கு… நீங்க அழப்படாது… நல்லா இருக்கோணும்… உங்க பெரியக்காவின்ர காணியை எப்பிடியும் மீட்டுக் கொடுக்கோணும்… அவையள் பாடு கஸ்ரம். பார்த்துக் கொள்ளுங்கோ… நான் உங்கட மனோதானே… என்ர கையை உங்கட கையுக்கை பொத்தி வைச்சிருங்கோ…” அதுக்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அப்படியே வைச் சிருந்தான். அடிக்கடி அவள் நெஞ்சைத் தொட்டுப் பார்ப்பான். மூக்கின் மேல் கையைப் பிடித்துப் பார்ப்பான். அவள் தலையை அணைத்துக் கொள்வான். கண் கலங்கு வான். இப்படி… பிற்பகல் மூன்று மணியிருக்கும் அவளிடமிருந்து மூச்சே வரவில்லை. அவள் கண்கள் அவனையே பார்த்த வண்ணம் நிலை குத்தி நின்றன. 

ஓவென்று அழுதான். வார்ட்டில் போவோர் வருவோர் என ஆட்களே இல்லை. பக்கத்து வார்ட்டில் நின்ற ஒரு சிலர் வந்து பார்த்தனர். ஆறுதல் கூறினர். 

அங்கு நேர்ஸ் வந்தாள். “தம்பி.. பாலசிங்கம்.. அழாதை யும்.. நடக்க வேண்டியதைப் பாரும். வில்லூண்டிக்கு வண்டி பிடிச்சுக் கொண்டு போய் எரிக்க காசு ஏதும் வைச்சிருக்கிறீரோ.. இப்ப அதுவும் கஸ்ரம்… வழியில் பிரச்சினையாம்… ஒண்டு செய்யும்… இங்க ஆஸ்பத்திரி வளவில சில உடம்புகளை கொழுத்தியிருக்கிறாங்க… இதையும் இங்க கொழுத்த பெமிஷன் கேட்டு இங்கேயே எரியும். யோசிக்காதேயும்… நடக்க வேண்டியதை பாக்க வேணும்…எழும்பி வாரும்… முதல்ல அதுக்கு பெமிஷன் கேட்டுப் பாப்பம்” நிலைமைகளை அந்த நேர்ஸ் விளங்கப் படுத்தியதால் ஒருவாறு அனுமதி கிடைத்தது. ஆஸ்பத்திரி வளவில் தேடித் திரிந்து உடைந்த கட்டில் கால்கள், மரத் துண்டுகள், தடிகள், குச்சிகள், சருகுகள், கழிவுப் பஞ்சுக் குவியல்கள் எல்லாம் சேர்த்து ஒரு பெரிய மரத்துக்குக் கீழே அவளைத் தகனம் செய்தான். 

இரவு முழுவதும் ‘ஒரு’ ஜாம் வெற்றுப் போத்தலை அருகில் வைத்துக்கொண்டு அவள் எரிந்து, அந்தச் சாம்பல் ஆறும் வரை காவல் இருந்தான். அந்தப் போத்தலுக்குள் அந்தியேட்டிக்கென எலும்புச் சாம்பலை எடுத்தான். 

தலைமாட்டில் சாம்பல் போத்தலுடன் இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே இருந்தான். வெளியில் ஓரளவு நிலைமை சரிவந்ததும், வீட்டிற்குப் போகுமுன் அந்த நேர்ஸ் வந்து கதைத்துவிட்டு நூறு ரூபா கொடுத்தாள். இவன் வேண்டாமென்று மறுத்த போதும், “இந்த சகோதரத்தால் இவ்வளவு தான் இப்ப தர முடியும் தம்பி… பிடியும். வீட்டை போய் ஆகவேண்டியதைப் பாரும்” என்று சொல்லி அதனைக் கைக்குள் திணித்து விட்டுப் போய்விட்டாள். 

“இப்படிப்பட்ட நல்ல சனத்தாலதான்…” வீட்டிற்குப் போனவனுக்கு மேலும் அதிர்ச்சி. குழந்தை இறந்த செய்தி… என்ன செய்வது என்றே தெரியாமல் ஒருமாதம் வரை வீட்டில் அடைபட்டுக் கிடந்தான். பெரியக்கா புருஷனோடு போய் அந்தியேட்டியை முடித்துவிட்ட திருப்தி. 

“சின்னக்காவின் கலியாணத்துக்கென ஈடு வைத்த பெரியக்காவின் காணியை மீட்டுக் குடுக்கவேணும். என்ர ராசாத்தி கடைசியா சொன்ன விஷயம்… வட்டியோட நாப்பதாயிரம். எப்பிடி உழைச்சு மீழுவன்… அதை மீட்டுக் கொடுக்க மட்டுமாவது நான் உயிரோடயிருக்க வேணும்” 

நினைத்துப் பார்த்தவனுக்கு தலை சுற்றியது. சைக்கி ளோடு விழுந்தவனை ஒரு சிலர் கூட்டி வந்து வீட்டில் சேர்த்தனர். வீட்டில் அவனைக் கவனிக்க யாருமில்லை. ஒரே மச்சான்… அவன் வண்டி பிடித்து அவனது பெரியக்கா வீட்டில் கொண்டுபோய் விட்டான். அவ்வளவுதான் மச்சானின் மனிதாபிமானம். 

“என்ர ராசாத்தி இருந்தா… இப்பிடியா..” அவன் மீண்டும் பெரியாஸ்பத்திரியில்… ஒரு கிழமை வார்ட்டில் சிகிச்சை. 

“தலையில இரத்த உறைவாம். ஏதோ கட்டியாம். உடன் பெரிய ஒப்பறேசன் செய்யவேணுமாம்…” அந்த நேர்ஸ் அடையாளம் கண்டு உதவினாள். கொழும்பு பெரியாஸ் பத்திரிக்கு அம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். 

கொழும்பு ஆஸ்பத்திரி வாசலில் அம்புலன்ஸ் நின்றது. “ஐயோ… அம்மா… இதைக் கழட்டுங்கோ…” ஒரு அற்றென்டன் வந்தான். ஸ்ரெச்சரில் அவனைத் தூக்கி ஏற்றி விட்டு அந்தக் குழாயைப் பிடுங்கி விட்டான். “ஐயோ…” அவனுக்கு உயிர் போய் வந்தது. ரத்தமும் சலமும் ஒன்றாகப் போனது. 

வார்ட்டில் படுக்கை கிடைத்து. உணவும் பரவா யில்லை. கொழும்பில் முன்னர் கடையில் வேலை செய்த போது கற்றுக் கொண்ட சிங்களம் கை கொடுத்தது. ஒருவாறு சமாளித்தான். 

‘தலையில் நரம்புகளில் வீக்கம்…கட்டி… ஒப்பறேசன்’ நினைக்க அழுகைதான் வந்தது. தலையை ஒட்ட வழித்து விட்டார்கள்… மொழிங்குத் தோற்றம் என்பார்களே.. அப்படி… இவனுக்கு சிறிது சந்தோஷம்… ‘என்னை யாரும் இங்கு வந்தாலும் அடையாளம் காண முடியாது.’ 

பெரிய டாக்டர் ஒரு தமிழர். அவரைக் கண்டதும் ஓடிப் போய் கும்பிட்டான். தன் கதையைக் கூறி கெதியில் தன்னை யாழ்ப்பாணம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டான். 

“தம்பி…இப்பிடி என்னோட கதையாதையும். பாவ மாகத்தானிருக்கு. உமக்கு நான் நேரடியா உதவ முடியாது. இது டொக்டர் அமரதேவாவின்ர வார்ட். அவர்தான் உமக்கு ஒப்பறேஷன் செய்வார். நான் அவருக்கு போனில் உம்மைப்பற்றி சொல்லுறன். இப்பிடி என்னட்ட வராதையும். என்னையும் சந்தேகப்படுவாங்கள். சந்தேகப் பார்வை இங்கேயும் அதிகம். நீரும் கவனமாயிரும்.” 

அவனது கன்னப் பக்கமாக சரிபாதி தலையைப் பிளந்து ஒப்பறேசன் நடந்தது. மறுபக்கமும் ஒப்பறேசன் செய்ய வேண்டுமென்றும் அதற்கு கொழும்பில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பத்தாயிரம் ரூபா கட்டி படம் எடுத்து ஒப்பறேசன் செய்யுமாறும் கூறி, பாதித் தலை ஒப்பறேசன் முடிந்த சில நாட்களில் துண்டு வெட்டி அனுப்பி விட்டனர். 

சீதன வீடு, தாலிக்கொடி, நகைகள், வீட்டுப் பொருட்கள், போட்டிருந்த மோதிரம், அவன் உழைத்துத் தேடியவை எல்லாவற்றையும் மனைவி வீட்டாரே சொந்த மாக்கிவிட்டனர். அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவனது பழைய சைக்கிளைத் தவிர… 

‘பெரியக்கா குடும்பம் பாவம்.. நாலு பொம்பிளைப் பிள்ளைகள். இவையின்ர காணியை மீட்டுக் குடுக்க வேணும். வட்டியோட நாப்பதாயிரம். என்ர ராசாத்தி கடைசியா சொல்லிப் போட்டுப் போனது… அதை கட்டாயம் மீளவேணும். அதுவரையாவது நான் சீவிக்க வேணும். எனக்கு இனி ஒப்பறேசன் எதுவும் வேணாம். சா… வந்தால் வரட்டும். உழைக்கவேணும். உழைத்து அதை மீட்டுக் குடுக்கவேணும்… 

ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தான். பெரியாஸ் பத்திரியிலிருந்து மரணச் சான்றிதழ்… அவன் மனைவி இயற்கை மரணமடைந்திருந்ததாக அதில் குறிப்பிடப் பட்டிருந்தது… 

அதிகாலை .. சூரிய உதயத்தோடு .. மாட்டு வண்டில் சத்தங்கள்… பாலசிங்கம் எழுந்து தனது பழைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சுன்னாகம் சந்தையை நோக்கி மீண்டும் போகிறான். 

– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *