ஒன்றரை ஏக்கர் நிலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2025
பார்வையிட்டோர்: 180 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடித்த அந்த சமயந்தான் அந்த வலி. ஆனால் அவர் நிலத் தைக் கட்டாயம் விற்க வேண்டுமென பிடிவாதம் செய்ததையும், அதன் விளைவாக அவளுடைய பெற்றேர்களை ஏளனமாகப் பேசினதையும் நினைக்க நினைக்க அவளுக்குத் தாங்கவொண்ணாததாக இருந்தன.

“அதில் உனக்கு என்ன வரும்படி வருகி றது? போயும் போயும் ஒரு வருஷத்திலே இருபது ரூபாய் காசாவது மிஞ்சுகிறதா? உரத் துக்குக் கொடுக்கவும், உழவுக்குக் கொடுக்கவும் கடைசியாய்ச் சர்க்காருக்குத் தீர்வையைக் கொடுக் கவும் சரியாய்ப் போய்விடுகிறது. ”ஏன் மாரி? நான் சொல்வதைக் கேள். அந்த நிலத்துக்கு இப்ப நல்ல விலை. வித்துப்புட்டு இங்கே டவுனிலே நல்ல வீடாய் வாங்கிப் போட்டு விட்டால் மாதா மாதம் வாடகையை வாங்கி வரலாம்.”

“உம், நிலத்தை விற்கிற பேச்சை இன் தடவை மட்டும் பேசவேண்டாம். அதிலே ஒன்னுமே வராட்டீனாக்கூடப் பரவாயில்லை. அப்பா வாங்கிக் கொடுத்தது. இத்தனை காலமாய் எதோ கஞ்சி வாத் துட்டு வருகிறதே, எனக்கூட விசுவாசம் வேண்டாமா?” 

கோபால்சாமி செட்டியாருக்கு ஆத்திரம் மீறு கிறது. தான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கொஞ்சமும் மதியாமல் இப்படி உதாசீனம் செய்து ஒரே பிடிவாதமாயிருப்பதில் மிகவும் கோபம். 

மாரியாயிக்கு அவளுடைய தகப்பனார் அவள் பெயருக்கே ஸ்ரீதன மாக ஒன்றரை ஏக்கர் நஞ்சை நிலம் வாங்கிவிட்டது. 15 வருஷமாக அதை அவர் கள் அனுபவித்து வந்தனர். ஆனால் அந்த நிலக் கிரயத்தின் மதிப்புக்கு வட்டிபோட்டுப் பார்த்ததில் மிகவும் ஈனமாக இருந்தபடியால் கோபால்சாமி செட்டியாருக்கு அதை விற்று விட்டு வட்டி கட் டக்கூடியதாகப் பார்த்து ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென ஆசை. அந்த ஆசை இப்போதுதான் அவருககுக் கைகூடும் சமயம் வந்ததென எண்ணினார். 1000 ரூபாய் ஆனாலும் கொடுத்து விடலாமென நினைத்தார். திடீரென இருவர் போட்டியில் 1500 வரை உயர்ந்துவிட்டது. 

கோபால்சாமி செட்டியார் விலை திகைத்துவிட்டு மனைவியைச் சம்மதிக்கச் செய்ய வந்துகொண்டிருந் ர். ஒற்றையடிப் பாதை. செட்டியார் வருகிற பாதை இதுவெனக்கூட சரியாய்க்கவனிக்காமல் தன் சிந்தனையை நிலக்கிரய விஷபத்திலேயே செலுத்திக் கொண்டிருந்தார். “நாளை கிரயம் முடிந்துவிடும். 1500 ரூபாய்க்கும் பெரிய வீடாய் வாங்கி, வாட கைக்கு விட்டால், உம், 20 ரூபாய் மாதாமாதம் கறந்துவிடலாம். இதை விட்டுவிட்டு அந்து, காஞ்சு, கறைஞ்சுபோன நிலத்தைக் கட்டியழுதுகொண்டு… நமக்கு இது நல்ல காலம்தான். ஆமாம், உடனே விற்றுவிடவேண்டும். தாமதம் செய்தால் விலை கேட் டவன் சாக்கில் ஏதாவது பின்வலித்துவிட்டால் என்ன செய்வது?” 

செட்டியார் இவ்விதம் பலவாறாக நினைத்துக் கொண்டு துரிதமாய் வந்தார். பூரிப்புடனும் உற்சாக முடனும்தான் அவர் வீட்டினுள் நுழைந்தார். அங்க வஸ்திரத்தை இரண்டு பக்கமும் சரியாகத் தொங்க விட்டுக்கொண்டு ஒரு கனைப்புக் கனைத்தார். “அடி மாரி!’ என்று வெங்கலமணிஒசைபோல் அழைத்தார். 

அச்சமயம், உள்ளே சமையல் அறையில் ‘டப்’ எனும் சப்தம் கேட்டது. மாரி பதார்த்தம் சமைக்க வேண்டி தேங்காயை உடைத்தாள். உடைந்த சப் தம் அது. “உம், என்னுங்க!” மாரி உட்கார்ந்த படியே திரும்பி எட்டிப் பார்த்தாள். 

செட்டியார் உற்சாகமாக வந்து விஷயத்தைச் சொன்னார். மாரி தேங்காய்ப்பூ திருகியதையும் அப்படியே போட்டுவிட்டு எழுந்தாள். 

“அந்தப் பேச்சை எடாதிங்க” என ஆரம்பித்தாள். செட்டியாருக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவருடைய கனவு, கற்பனையை அவள், தேங்காயை உடைத்ததுபோல உடைத்து விட்டாள். எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். மாரி ஒரே பிடிவாதமாக நிலத்தை விற்கக் கூடாதெனச் சொன்னாள். 

இதனால் மாரிக்கு இரண்டு உதை, செட்டியார், கொடியில் கிடந்த துண்டை உதறி மேலே போட் டுக்கொண்டு வெளியேறி விட்டார். 

“ஒரு பெண்ணுக்கு அவ்வளவு தெம்பா?”

அடுப்பில், இரும்புச் சட்டியில் எண்ணெய் ஊற் றினபடியே இருந்தது. கவிழ்த்திய பானையை நிமிர்க்கவில்லை. அடுப்பில் எரிந்த தீ, விறகைப் பற்றிக் கொண்டே வந்து வெளியே எரிந்து கொண்டிருந்தது. 

மாரி உதை வாங்கிக்கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே இன்னும் இருந்தாள். செட்டியார் வெளியேறி வெகுநேரம் ஆகியும் இன்னும் மாரி தன் அழு கையை விடவில்லை. முதன் முதலில் புருஷனை வாய் விட்டு ஏசி அழுதாள். இப்போது தேம்புவதிலேயும் சளியைச் சிந்திவிட்டெறிவதிலேயும் இருந்தாள். 

செட்டியார் உதைத்தாரே, அந்த உதையின் வேதனை கூட அவளுக்கு பிரமாதமாக இல்லை. அடித்த அந்த சாயம்தான் அந்த வலி. ஆனால் அவர் நிலத்தைக் கட்டாயம் விற்கவேண்டுமெனப் பிடிவாதம் செய்ததையும், அதன் விளைவாக அவளுடைய பெற் றோர்களை ஏளனமாகப் பேசியதையும் நினைக்க நினைக்க அவளுக்குத் தாங்கவொண்ணாததாக இருந்தன. 

“அவுக கொடுத்த அன்னத்தைத் தின்றுகொண் டே அவுகளை இப்படிப் பேசினா நல்லதுக்கா? ஒருக் காலும் விளங்கவே மாட்டா!” என அவள் புருஷனைச் சபித்துக்கொண்டிருந்தாள். 

அடுப்பிலிருந்த தீ விறகு முழுவதும் கரிந்து போனவுடன், அதுவும் அணைந்துவிட்டது. மாரியும் நேரம் செல்லச்செல்ல செட்டியார் ஏசிய ஏச்சைக்கூட மறந்துவிட்டாள். ஆனால் அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்கிற விஷயம் பாவம் அவளை விட வில்லை. இடியும் மின்னலும் போய்விட்டாலும் புயல் விடவில்லையே! 

“இந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் விற்க வேண்டுமென இவ்வளவு ஆத்திரம் ஏன்? ஏதோ! அப்பா அம்மா கொடுத்தவைகளில் பணம் காசு நகைகள் எல்லாம் போயே போய் விட்டன. இந்த மண்ணுதானே மிச்சம். இதைக்கூட நான் உயிருடன் இருக்கும்வரைவைத்து அனுபவிக்கக் கூடாதா?” என மாரியின் சிந்தனையில் அலைபுரண்டது. 

“இதுக்காக இப்படிக் கோபித்துப் போய்விட்டாரே, ஐயோ அடுப்பில் வைத்தவை” 

மாரிக்கு அப்போதுதான் அடுப்படி ஞாபகம் வந்தது. சமையலறைக்குள் சென்றாள். அணைந்த விறகைத் திரும்பவும் தீயிட்டு, விட்டுப்போன வேலையைத் தொடர்ந்தாள். 

“கோபித்துட்டு எந்தப் பக்கம் போனாரோ? அவன் சோமுகூட இல்லையே. இருந்தாலாச்சும் போய்த் தேடிவரச்சொல்லலாம். உம், அவர் நிலத்தை விற்கத்கான்வேண்டுமென்கிறார். அதை அவர் விற்ற தினால் என்ன லாபம்? அவர் வெளியே போய் நாலு இடம் பார்த்து பேசி வருகிறவர்; நாலு விஷயமும் தெரிந்தவர்; இந்த நிலத்தை விற்றால் அதைக்கொண்டு இங்கேயே வரும்படி வருகிறாப்போலே ஒரு சொத்து வாங்கிவிடலாம். இது நல்ல விலை என்பதினால்தானே அவர் இவ்வளவு பாடுபடுகிறோர்! அந்த நிலத்தை விற்றுவிட்டால் அந்தப் பணத்தை வாயால் விழுங்கி விடுவதில்லையே! அப்பா வாங்கிக்கொடுத்த சொத்தே என்றாலும் அதை விற்று வேறு சொத்து வாங்கி விட்டால் அதுவும் அவர்கள் வாங்கிக்கொடுத்தது மாதிரிதானே! இது தெரியாமே வீணே கன்னா பின்னானு கத்தி அவுகளையும் சாப்பிடாமே வெரட்டி யாச்சு, வரட்டும்” இவ்விதமாக மாரி யோசனை செய்து முடிவுசெய்துகொண்டாள். 

தாளிக்கவேண்டியவைகளை இரும்புச் சட்டியில் போட்டு கரண்டியால் கிண்டிவிட்டாள். அப்போது சுவரின் மேல் ஒட்டியிருந்த ஒரு பல்லி கீழே விழுந்தது. அடுப்புக்கு மேல், மாரி அதைப் பார்த்தவள் திரும்பவும் நன்றாய் உட்கார்ந்து கொண்டாள். அந்தப் பல்லியை இமை கொட்டாமல் பார்த்தாள். 

மாரியாயியுடைய தகப்பனாரும் தாயாரும் இறந்து வெகு நாளாகிவிட்டன. அவர்கள் இருக்கிறபோது மாரியாயி தன்னுடைய நிலத்தைப் பார்க்கச் சென்றிருந்தாள். அவளை அவளுடைய தகப்பனார் அழைத்துப் போயிருந்தார். 

நிலத்தின் வரப்பின்மேல் அவர்கள் நடந்து பார் வையிட்டபோதுவெள்ளையன் அவர்களுக்குநிலத்தைச் சுற்றிக் காட்டினான். ‘அந்தோ- அந்த வாப்பிலே இருந்து இந்தப் பக்கம் ஒரு கல் நட்டுருக்கே, அது வரைக்கும் நம்ம நிலம்” எனவெள்ளையன் காட்டினான். 

“மாரி, பாத்துக்கத்தா உன் நிலத்தை” என அவளுடைய தந்தை மிகவும் பூரிப்புடன் சொன்னார். 

மாரியோ அந்த வார்த்தைகளைக் கேட்டு வாய் பேசவும் முடியாமல் ஒரு புன்சிரிப்பிலேயே தன் ஆனந்தத்தையும், திருப்தியையும் தெரிவித்தாள். அந்தச் சமயம் அந்த நிலத்திற்குக் கிழக்கே ஒரு மூலையில் நின்ற கருவேல மரத்தில் கௌரியின் ‘தெக் தெக்’கெனும் சப்தம் கேட்டது. 

“அம்மா! உங்களுக்கு ஈல்ல அதிர்ஷ்டம்பா! ஐயா சொல்லவும் எங்க அய்யனார் சாமியும் உத்திரவு கொடுத்திட்டாரு” என வெள்ளையன் சொன்னான். 

மாரி சுவரிலிருந்து விழுந்த பல்லியைப் பார்க் கவும் 15 வருஷத்திற்கு முந்திய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. இப்போதுதான் நடக்கிறதை அவள் அனுபவிப்பதாக உணர்ந்தாள். 

வெள்ளையன் நிலத்தின் விஸ்தீரணத்தைக் காட் டியதும் அவளுடைய தந்தை “மாரி பார்த்துக்கத்தா உன் நிலத்தை” என்றதும் பல்லி சப்தித்ததையும் மறுபடியும் அவள் நினைத்தாள். 

“உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமம்மா!” என வெள் ளையன் சொன்னதும் கொஞ்சம் நேரத்திற்கு முன் தான் கூறியதுபோல் அவளுக்கு இருந்தது. ‘உன் நிலம்” “அது என் நிலம். நான் விற்கவா? என் தந்தை எனக்குக் கொடுத்தது. அவர் என்னை அழைத்து அந்தவரப்பின்மேல் நின்றுகொண்டு காட்டிய அந்த நிலம். அய்யனார் உத்தரவு தந்த நிலம். அதை நான் விற்கவா? அதை விற்பதால் அதிலும் பெரிய சொத்து கிடைக்கலாம். பணம் கூட அடையலாம். ஆனால் என் அப்பா வரப்பின் மேலிருந்து காட்டிய அந்த நிலம் கிடைக்குமா? அந்த வெள்ளை யனைப் பெறமுடியுமா? தை மாதம் செருங்கிக்கொண் டிருக்கிறபோதே பூசணிப்பழத்துடன் விடிவதற்குள் வந்து “அம்மா” என அன்புடன் அழைக்கும் அந்த வயோதிக உருவத்தைப் பெறமுடியுமா? முடியாது. வேறு எந்தப் பாக்கியம் கிடைத்தாலும் நான் அந்த நிலத்தை விற்கவேமாட்டேன். அவர் காலில் விழுந் தாவது கெஞ்சுகிறேன்” மாரியாயின் தீர்மானம் இவ்விதமாக மாறிவிட்டது. இதில் மிகவும் உறுதியாக அவள் இருந்தாள் என்றாலும், புருஷன் அதற்காக கோ பித்துவெளியேறியதை நினைக்க கொஞ்சம் சபலமும் தட்டியது. 

செட்டியார் இன்னும் திரும்பி வரவில்லை. பகலும் கடந்து இரவும் வந்துவிட்டது. மாரியும் இன்னும் அன்னம் தண்ணீர்கூட இல்லாமல் ஏங்கி இருந்தாள். வீட்டின் நிலையருகே நின்று கொண்டே கண்ணில் தென்படுபவர்களிடமெல்லாம் செட்டியாரைப் பற்றி விசாரித்தாள். பயனிலை. இதனால் மாரி பெரி தும் விசனம் மூண்டு வாடிவிட்டாள். 

அவள் ஏக்கத்தைத் தீர்க்க ஒருவன் தோன்றி னான். ”ஐயோ என்ன அண்ணி! பாவம், அண்ணன் ‘கோ’ என அழுதுகிட்டு எங்க திண்ணையில் கிடக்கி றாரு; கொஞ்சம் சாப்பிடுங்களென எவ்வளவோ சொன் னாலும் கேட்கிறாரில்லை” என அவன் சொன்னான். 

மாரிக்கு தூக்கி வாரிப் போட்டாற்போலிருக் தது. வீட்டுக் கதவை பூட்டிவிட்டு வேகமாக வந்தாள். செட்டியாரை எழுந்துவரும்படி கெஞ்சினாள் 

“ஒரு பொம்பளையினாலே ஆம்பளே பேசின பேச்சு வீணாப் போறதா? நீ போ. உன் நிலத்திலேயே குடியிரு. போ. என்னை மட்டும் கூப்பிடாதே” என்றார். 

மாரியின் மனம் கொந்தளித்தது. ஏன் ஜனனம் எடுத்தோம் என்று அவளுக்குத் தோன்றியது. கணவனைத் திருப்தி செய்வதா? அல்லது பீதியை ஏற்பதா? அந்த நிலத்திலே தனக்கிருக்கும் அவ்வளவு அவாவையும் அவர் அறிந்து கொள்ள முடியவில்லையே! எப்படியிருந்தாலும் அவர் திருப்தி அடைய வேண்டும். நம்மவர் நம்முள்ளத்திலேயே சாகட்டும். அவருடைய ஆசைக்கு இணங்குவோம் என நினைத்தாள். 

சப்ரிஜிஸ்திரார் ஆபீஸில் கிரயப் பத்திரம் பதி வானது. மாரி கையெழுத்திட்டாள். அதுவரை அவ ளுடைய மனம் எத்தனையோ தடவை மாறி மாறி இருக்கும். அவளுடைய தந்தையும்,வெள்ளையனும், வரப்பும், கல்தூணும், வேல மரமும், சிறு செடிக ளும் நாத்துக்களும் அவள் முன் வந்திருக்கும். கடை சியாக கையெழுத்துப் போடும்போதும் அந்தக் குழப்பம்தான். 

கோபால்சாமி செட்டியாரிடம் மாரி கிரய ரூபாய்களைக் கொடுத்தாள். அப்போது கௌரி கத்தியது. மாரியின் மனம் திடுக்கிட்டது. அந்த வெள்ளையன் ஞாபகம் வந்தது. “அம்மா! உங்களுக்கு இனி அதிர்ஷ்டந்தான்” எனச்சொல்ல அந்த வெள் ளையன் இல்லையே என அவள் மனம் ஏங்கியது. கண்களில் நீர்த்துளிகள் சிந்தின. 

”ஏன்மாரி? பைத்தியக்காரியாட்டம் அழலாமா? கண்ணீரைத் தொடை” என கோபால்சாமி செட் டியார் தேறுதல் சொன்னார். 

“ஒன்றுமில்லை” என மாரி மொழிந்தாள்.

“பின் கண் கலங்கலாமா? முதன் முதலாய்ப் பணம் வாங்கிட்டுப்போகையிலே” என்றார். 

‘”உம், ஒன்றுமில்லை. அடுத்தாப்புலே தை புறக் வும் நம் வெள்ளையன் வந்து “அம்மா! நெல் வண்டி வந்துருக்குங்க” எனச் சொல்லக் கேட்கப் போகிறேனா எனத்தான் துக்கம்” என்றாள். 

கண்ணீரோ மளமளவெனக் கொட்டியது. 

– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *