‘ஐ லவ் யு’ என்று சொல்ல மாட்டாயா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2025
பார்வையிட்டோர்: 2,420 
 
 

ஜெனிஃபர் என்ற அழகிய பெண்ணும் மார்டின் என்ற கடின உழைப்பாளியும் மிகவும் அன்பான ஆங்கிலேயதம்பதிகள். ஜெனிஃபர்க்கு வயது முப்பது. மார்ட்டினுக்கு வயது முப்பத்தி இரண்டு. அவர்களுக்குத் திருமணமாகிப் பத்து வருடங்கள் ஆகின்றன.

அவர்களுக்கு இரு குழந்தைகள். அவர்களின் மூத்த பெண் லோராவுக்கு ஏழு வயது. இரண்டாவது பையன் பீட்டருக்கு மூன்றரை வயது. ஜெனிஃபர் மார்ட்டின் தம்பதிகள் ஒரு சிறு நகரையண்டிய இயற்கை வளம் பரவிய ஒரு கிராமத்தில் அவர்கள் வாங்கி அலங்காரம் செய்யப் பட்ட அழகிய வீட்டில் வசிக்கிறார்கள். அந்த வீடு ஒரு நகரில் ஒதுக்குப்புறத்தில் இருப்பதால். அந்த வீட்டை ஒட்டி மிகவும் வசதியான மக்கள் வாழ்கிறார்கள். நகர்ப்புற சத்தங்கள் அற்ற அமைதியான இடமான அந்த. சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

ஜெனிஃபரின் வீட்டையண்டி உள்ள பின்பக்கத்தில் சில தெருக்கள் தாண்டி பெரிய வீதி உள்ளது. அதில் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் ஒரு தரம் லண்டனுக்கு செல்லும் பஸ் வசதி இருக்கும். அவர்களின் வீட்டுக்கு முன்;; கொஞ்சம் தூரத்தில் பிரமாண்டமான சாலையில் இங்கிலாந்தின் பல பக்கங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் வாகனங்கள் மிக வேகமாக போய்க் கொண்டிருக்கும். ஆனால் அந்த சப்தங்கள் அவர்களை அண்டாத மாதிரி அவர்கள் வீட்டுக்கும் இந்த வீதிகளுக்கும் இடையில் மிக உயர்ந்த மரங்களையடக்கிய பகுதியுள்ளது. அந்த அழகிய இடத்தைத் தாண்டி இரண்டு கல்வி நிலையங்கள் உள்ளன. ஒன்று பன்னிரண்டு வயதுக்குட்பட்டோர் படிக்கும் பாடசாலை. அதை ஒட்டி இருப்பது சிறு குழந்தைகள் செல்லும் Nநர்சரிக் கல்வி நிலையம.;

இங்கிலாந்தில் வழக்கமாகச் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளில் புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கும். அந்தக் காலகட்டத்திற்கு முதல் சில புதிய குடும்பங்கள் இந்தப் பக்கம் வீடு வாங்கி வருவதும் நடக்கும். அதாவது பாடசாலை வாழ்க்கையை ஆரம்பிக்கும் குழந்தைகள் கல்வியை முன்னெடுக்க மிகவும் அழகான இயற்கை சூழ்ந்த பகுதிகளைத் தேர்ந்தெடுப்பதைச் சில பெற்றோhகள்; விரும்புவதுண்டு. அப்படி ஒரு இளம் தம்பதிகள் தங்கள் மூனறரை வயது மகனுடன் அந்தப் பக்கம் குடிவந்தார்கள். அவர்களில் அந்த இளம் தாய் இந்திய அல்லது ஏதோ ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்த ‘இந்திய’ முகபாவமுள்ள சாந்தமான பெண். அவளின் கணவன் மிகவும் வாட்ட சாட்டமான ஆங்கிலேயேன்.

அந்தப் பெண்ணை ஜெனிஃபர் அவளின் மகன் பீட்டர் செல்லும் நேர்ஸரிக்குத் தன்மகனைக் கொண்டு சென்றபோது சந்தித்தாள். அந்த ‘இந்தியப்’ பெண் தன் பெயர் உஷா அவளின் கணவனின் பெயர் டேவிட் தனது மகனின் பெயர் ஆகாஷ் என்றும் சொன்னாள். தன் கணவர் சில மைல்கள் தூரத்தில் இந்தக் கிராமத்திற்குப் பக்கத்திலிருக்கும் பிரமாண்டான தொழில் நிறுவனத்தில் பெரிய வேலை கிடைத்ததால் அவர்கள் இந்த இடத்திற்கு வந்ததாக உஷா சொன்னாள்.

ஜெனிஃபர் இதுவரைக்கும் எந்த இந்தியப் பெண்ணிடமும் பேசிப் பழக்கமில்லை. அவள் பிறந்தது படித்ததது திருமணம் செய்து கொண்டதெல்லாம் இந்தக் கிராமத்திற்தான். எப்போதாவது இருந்து லண்டனிலுள்ள பெரிய கடைகளுக்குச் செல்லும்போது அங்கு பல்லின மக்களின் நடைமுறைகளைப் பார்த்து ஆச்சரியப் படுவாள்.

அந்த இருதாய்களும் நாளடைவில் கொஞ்சம் சினேகிதத்துடன் பழக ஆரம்பித்தார்கள். மனம் விட்டுச் சில விடயங்களைப் பேச ஆரம்பித்தார்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்த வாழ்க்கையைத் தொடர்வதால் ஜெனிஃபர் உஷாவின் தொடர்பு மூலம் பல விடயங்களைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

உஷா – டேவிட் இருவரும் லண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும். காதல் வயப்பட்டதாகவும் திருமணமாகி இப்போது ஏழு வருடங்கள; என்றும் அவளும் கணவரும் அவர்கள் சந்தித்துக் கொண்ட கடந்த பத்து வருடங்களாக மிகவும் அன்பாக இருப்பதாகவும் உஷா சொன்னாள். தனது தாய் தகப்பன் உஷாவின் காதலை அங்கரிக்கவில்லை என்றும் இதுவரை அவர்கள் அவளுடன் ஒரு தொடர்பும் வைத்திருக்கவில்லை என்றும் உஷா சோகமான தொனியிற் சொன்னாள்.

ஜெனிஃபரும் உஷாவும் பேசிப் பழகத் தொடங்கிய காலத்தில்> ‘இந்த கிராமத்தில் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் உனது நட்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஜெனிஃபர்’’ என்று

உஷாசொன்னாள். ஜெனிஃபர் இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அதனால் சிறு வயதிலிருந்து அவளுக்கு பலரைத் தெரியும். அவளுக்கு யாரiயும் தெரியாத ஊருக்கு போய் வாழ்வது என்பது தெரியாத ஒரு அனுப்பவம். அதனால் அவளுக்கு உஷாவில் ஒரு அனுதாபம் பிறந்தது.

சில மாதங்களுக்குப் பின் உஷா ஜெனிஃபரைத் தனது வீட்டுக்குத் தேனீர் சாப்பிட அழைத்தாள். ஜெனிஃபருக்கு இதுவரைக்கும் தனக்கு சொந்தக்காரர் அல்லது அந்த ஊரிற் தெரிந்தவர்கள் தவிர யார் வீட்டுக்கும் தேனீர் விருந்தாளியாகப் போய்ப் பழக்கமில்லை. அதுவும் கலப்புக் கல்யாணம் செய்து கொண்ட இந்திய – ஆங்கிலேயே தம்பதிகளைப்பற்றி அவளுக்குப் பெரிய புரிதலும் இல்லை. அதனால் தனது கணவனுக்கு ‘உஷா என்னைத் தனது வீட்டுக்கு அழைக்கிறாள். அங்கு போகும்போது எதுவும் கொண்டு போக வேண்டுமா’’? என்று கேட்டார்.

ஜெனிபரின் கணவர் மார்ட்டின் புதியவீடுகள் கட்டும் ஒரு பெரிய அமைப்பில் வேலை செய்பவன். அதனால் அடிக்கடி லண்டனுக்குச் செல்வான். அதனால் அவன் லண்டனில் பல்வித இனங்களோடும் பழகும். அனுபவத்தைக் கொண்டவன். முக்கியமாக இந்தியர்கள் எப்படித் தங்கள் உறவுகளுடன் நெருங்கி வாழ்கிறார்கள் அத்துடன் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் அன்பாக இருப்பார்கள் என்பதெல்லாம் கண்டிருக்கிறான். அவன் சில சமயங்களில் இந்திய வீடுகளை திருத்தும் வேலை செய்யும் போது அவர்கள் அவனை அன்பாக கவனித்து. அனுசரிப்புவதாக சொல்லி இருக்கிறான்.

ஜெனிஃபர் உஷாவின் வீட்டுக்குக் கேக் செய்து கொண்டு சென்றhள். அவர்கள் இருவரின் குழந்தைகளும் அதாவது உஷாவின் மகன்; ஆகாஷ்சும் ஜெனிஃபரின் மகன் பீட்டரும் ஒன்றாக நர்சரியில் படிப்பவர்கள். அவர்கள் தங்களின் தாய்களைவிட மிகவும் சினேகிதமாகப் பழகுபவர்கள். அதனால் அவர்கள் ஒன்று சேர்ந்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

உஷா ஜெனிஃபரை அன்பாக வரவேற்று இந்திய சிற்றுண்டிகளை கொடுத்தாள். இருவரும் பல விடயங்களைப் பேசத் தொடங்கினார்கள். உஷா தான் லண்டனுக்கு வந்தபோது இந்நாட்டைப் புரிந்து கொள்ள அவளது சகமாணவனாக அவளுடன் ஒன்றாhகப் படித்த டேவிட் உதவியதாகவும் அதன் நீட்சியாக இருவரும் காதல் கொண்டதாகவும் அது கல்யாணத்தில் முடிந்ததாகவும் சொன்னாள். அவள் அப்படி சொல்லும்போது அவளின் கண்கள் கலங்கின. ஜெனிஃபர் அப்போது உஷாவை உற்று நோக்கினாள். உஷா பேசும் போது அந்தக் குரலில் இருந்த சோகம் ஜெனிஃபரைச் சுண்டி இழுத்தது.

அதாவது உஷா தனது நிலையை விளக்கும் போது அவளது காதல் கல்யாணம் தனது தாய் தகப்பனுக்கு பிடிக்காத படியால் அதன்பின் அவர்கள் அவளோடு எந்த தொடர்பும் இல்லை என்றும் இங்கிலாந்தில் அவளின் கணவர் டேவிட் தன்னை அன்பாக நடத்துவதாகவும் மனம் விட்டுச் சொன்னாள். ஜெனிஃபர் இதுவரைக்கும் தனக்கும் அவளது கணவர் மார்ட்டினுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை என்று உணர்ந்து கொண்டாள். அதாவது அந்த சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்த படியால் அங்கிருப்பவர்கள் ஒருத்தரை ஒருத்தர் தெரிந்தவர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று மற்றவர்கள் ஊகிக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டது அந்த சிறு கிராமம். பல ஆங்கிலேயக் கிராமங்கள் போல் அந்த கிராமமும் இன்னும் பழமை வாதத்தில் இருந்தது. பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் ஆண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் அத்துடன் அவர்களின் சமுதாயக் கட்டுமானங்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற நியதியில் அவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

அன்று பின்னேரம் வீட்டுக்கு வந்ததும் ஜெனிஃபரின் மனதில். பலவிதமான சிந்தனைகள் போய்க்கொண்டிருந்தன. அவளுக்கு அன்னியர்களைத் தெரியாது. முன்பின் தெரியாதவனை முகம் பார்த்து சிரித்தது தெரியாது. அவள் பெரும்பாலான கிராமத்து பெண்கள் போல். அந்த கிராமத்தில் படித்தாள். ஒரு சில கிராமத்து பெண்கள் வெளியில் சென்று படித்தார்கள். ஒரு சிலர் நகரங்களில் வேலை எடுத்துக் கொண்ட பின் அங்கேயே. கல்யாணம் செய்துகொண்டு இருந்தார்கள் என்று தெரியும் ஆனால் அவர்கள் வெளியில் போனதும் தங்கள் தாய் தகப்பனை பார்க்க வருவார்களே தவிர ஒட்டுமொத்தமாக திரும்பி வந்து அந்த கிராமத்தில் வீட்டோடு இருந்ததாக அவளுக்கு தெரியாது.

அந்த சந்திப்புக்கு பின் ஜெனிஃபரும் உஷாவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். உஷா தன் குடும்ப உறவுகள் இல்லாமல் தனித்து இருந்ததால் ஜெனிஃபர்; உஷாவில் கொட்டிய மிக அன்பு அவளைக் கவர்ந்தது. பிரமாண்டமான நகரான லண்டனில் படிக்கும்போது வரும் உறவுகள் படிப்பு முடிந்ததும் வேறு திசைகளில் பிரிந்து போவது போல் இந்த கிராமத்தில் இல்லை. இந்தக் கிராமத்திலுள்ளவர்கள் பல வருடங்களாக வாழ்பவர்கள். பெரு நகரமாறுதல்களை முகம் கொடுக்க பெரிய அக்கறை எடுக்காதவர்கள். அந்த வாழ்க்கை முறை ஜெனிஃபருக்கு இதுவரைக்கும் மிகவும் நிம்மதியான வாழ்க்கை முறையாக இருந்தது. ஆனால் உஷாவின் உறவு வந்ததும் அவள் மனதில் ஒரு நெருடல் வர ஆரம்பித்தது.

உஷாவும் கணவரும் லண்டனில் படித்தவர்கள். அதனால் அவர்களுக்கு லண்டனில் நிறைய சிநேகிதர்கள் இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி லண்டன் சென்றார்கள்.அத்துடன் அவர்கள் தாங்கள் படிக்கும் போது தங்கள் வார விடுமுறையைப் பல இடங்கள் பார்ப்பதற்கும் பல முக்கியமான இடங்களைப் பற்றி அறிவதற்கும் செலவிட்டார்கள். அதனால் இப்போதும். அந்த வாழ்க்கை முறையை அவர்கள் தங்கள் விடுமுறையில் முக்கிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள். அதாவது உஷாவும் கணவரும் தங்கள் மகனுடன் வார விடுமுறையில் லண்டனுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் திரும்பி வருவார்கள். அத்துடன் அவர்களின் லண்டன் சினேகிதர்கள் உஷாவின் வீட்டுக்கு வருவதும் அவர்கள் பெரிய பார்ட்டிகள் வைப்பதும் மிகவும் அன்னியமான விடயமாக ஜெனிபருக்குப் புரிந்தது. அதே நேரம் உஷா டேவிட் தம்பதிகளுக்கு லண்டனிலோ இந்தக்கிராமத்திலோ பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் என்று யாரும் கிடையாது என்பதை ஜெனிஃபர் உள்வாங்கிக் கொள்ளத் தவறி விட்டாள்.

அதாவது ஜெனிஃபர் இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து திருமணம் செய்து வாழ்க்கையை கொண்டு நடத்தி கொண்டு இருப்பவள் ஏதோ ஒரு முக்கிய விசேஷ நாட்களில் லண்டன் சென்றிருக்கிறாள். அதே தவிர அவள் தன் வீடு தன் கணவன் தன் இரு குழந்தைகள், தாய் தந்தையர் சகோதர சகோதரிகள் அத்துடன் தனது பெரிய குடும்ப உறவுகள் என்று மிகவும் நிறைவாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தாள். இப்போது ஜெனிஃபருக்கு உஷாவின் வாழ்க்கை மிக வித்தியாசமானதாகப்பட்டது;.

உஷா தனது இருபது வயதில் லண்டனுக்கு வந்ததாகவும் அதற்கு முன்னர் அவள் தனது பிறந்த இடத்தை விட்டுத் தூரத்து நகரிலுள்ள பெண்கள் கல்லூரியில் தங்கிப் படித்ததால் அவளின் பார்வை தனித்துவத்தில் நம்பிக்கையுள்ளதாக இருந்தது என்றாள். உஷா தனது வாழ்க்கையை பார்க்கும் விதத்திற்கும் ஜெனிஃபர் வாழ்க்கை அனுபவங்களுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் இருந்தன. அதிலும் முக்கியமாக உஷாவின் கணவர் டேவிட் உஷாவை நடத்தும் விதமும் ஜெனிஃபரைச் சிந்திக்கப் பண்ணியது.

சில வேளைகளில் ஜெனிஃபரும் உஷாவும் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நாள் உஷாவின் கணவர் சில மணித்தியாலங்கள் முந்தி வேலையிலிருந்து வந்தான். வந்ததும் வராததுமாக அவன்; தனது மனைவி உஷாவை அனணைத்து ‘ஐ லவ் யூ டார்லிங் உஷா’’ என்று சொல்லிவிட்டுத் தனது மகனையும் அணைத்து ‘ ஐ லவ் யு டார்லிங் ஆகாஷ்’ என்று சொன்னார். அது ஜெனிஃபருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால். ஜெனிஃபரின் கணவர் மார்ட்டின் ஒரு நாளும் வேலையால் வந்ததும் ஜெனிஃபரை அனைத்து ‘ஐ லவ் யூ டா லிங்’ என்று சொன்னது கிடையாது. அவர்களின் குழந்தைகளையும் அனைத்து ‘ஐ லவ் யூ மை டார்லிங்ஸ்’ என்று சொன்னதும் கிடையாது. மார்ட்டின் வேலை முடிந்துவீட்டுக்கு வந்ததும் ஜெனிஃபர் அவனுக்கு பிடித்த உணவுகளை தயாரித்து வைத்திருப்பாள். மார்ட்டின் வந்த களைப்புடன் உணவைக் குழந்தைகளுடன் இருந்து முடித்துவிட்டு டெலிவிஷனுக்கு முன் போயிருப்பான்.

அவர்களின் குழந்தைகள் சிலவேளைகளில் ஏதும் தங்கள் பள்ளிக்கூட விஷயங்களைப் பற்றிப் பேசினால் ‘அம்மாவுடன் பேசிக் கொள்ளுங்கள்’ என்று மார்ட்டின் சொல்லிவிடுவான். அவன் பெரும்பாலான உழைக்கும் மனிதர்கள்போல் காலையிலிருந்து மாலை வரை வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்பவன்தான்.ஆனால் அவன் வேலை பல இடங்களில் உள்ள வீடமைப்புக்களுடனிருந்ததால் சிலவேளைகளில் மிகவும் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறுவான். அந்த நேரங்களிலில் ஜெனிஃபரைக் காலையில் எழுப்பி உணவு செய்யக் கேட்பதில்லை. காரில் போகும்போது ஏதோ வாங்கிச் சாப்பிடுவான்.அதே மாதிரி மாலையில் சிலவேளை மிகவும் பிந்தி வருவான்.

சனிக்கிழமை குடும்ப விடயங்களான சுப்பர் மார்க்கெட்டுக்குக் குடும்பத்தோடு போவது அல்லது கால் பந்தாட்டம் பார்க்கப் போவது என்று எப்போதாவது செய்வான.; வீட்டுப் பொறுப்பில் பெரும்பாலானவற்றையும் பிள்ளைகளைப் பற்றிய விடயங்களையும் ஜெனிஃபர் பெரும்பாலும் கவனித்துக் கொள்வாள். அதனால் குழந்தைகளின் கேள்விக்கு மறுமொழிகளை அம்மாவிடம் கேளுங்கள் என்று சொல்வான்.

ஆனால் உஷாவுpன் கணவர் அப்படியல்ல. ஓவ்வொரு நாளும் ஒரே நேரம் வேலைக்குச் சென்று பெரும்பாலும் வழக்கமான நேரத்திற்கு வீடு வரும் ஆபிஸர்.அத்துடன் தங்கள் மகனின் விடயங்களை ஒருமித்துச் செய்பவர்கள். உஷாவுடன் பேசி முடிவுகட்டாமல் பெரும்பாலும் எதையும் செய்யாதவன் டேவிட் என்பதை ஜெனிஃபர் அவதானித்திருந்தாள்.

அதனால் உஷாவும் கணவரும் வாழும் நெருக்கமான வாழ்க்கை ஜெனிஃபருக்கு வித்தியாசமாக இருந்தது. அவர்களின் நெருக்கம். தனக்கும் மார்ட்டினுக்கும் இருக்கிறதா என்ற கேள்வி அவள் மனதில் படர ஆரம்பித்தது. அதனால் இப்போது மாட்டின் வந்ததும் அவனுடைய செயல் முறைகளை அவதானிக்கத் தொடங்கினாள். அத்துடன் தனது. உறவு நிலையையும் சற்று மாற்ற வேண்டும் என்று யோசித்தாள். அதாவது இதுவரைக்கும் மார்ட்டின் வீட்டுக்கு வந்ததும். ‘நான் உங்களுக்குப் பிடித்த சாப்பாடு; செய்திருக்கிறேன் மார்ட்டின்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ‘ எப்படி இன்றைய சாப்பாடு; பிடித்திருக்கிறதா’? என்று கேட்க ஆரம்பித்தாள். அவள் கணவன் மார்ட்டின் அவளை நிமிர்ந்து பார்த்து. ‘நான் உனது தயாரிப்புகளை விரும்புவன் என்று உனக்குத் தெரியும்தானே’ என்று கிண்டலான அன்புக் குரலில் சொல்வான்.

ஜெனிஃபரும் உஷாவும் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சில வேளைகளில் பிக்னிக்செல்வார்கள். அப்போது உஷா தன் கணவனைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். தான் அவனை மிகவும் நேசிப்பதாகவும் அவன் தன்னை மிகவும் அன்புடன் நேசிப்பதாகவும் சொன்னாள். தன்னை இப்படி நேசிக்கும் ஒரு நல்ல கணவனைக் கடவுள் தனக்கு தந்தது தனது பாக்கியம் என்று சொன்னாள். இது ஒன்றும். ஜெனிஃபருக்கு புரியவில்லை. கணவன் மனைவி என்றால் நெருக்கமாக இருப்பார்கள்தானே? அதில் என்ன பெரிய விஷயம்? என்று அவளுக்கு புரியவில்லை. அவளின் கணவர் மார்ட்டின் மிகவும் நல்ல கணவர் அத்துடன் அவன் பொருளாதார ரீதியான வசதியான வாழ்க்கையுடனான மகிழ்ச்சியையும் அவனின் குடும்பத்திற்குக் கொடுக்கிறான். ஆனால் உஷா தன் கணவரைப் பற்றிச் சொல்லும் போது அவளுக்குக் கிடைத்த வாழ்க்கை முறை எனக்கிருக்கிறதா? தனது கணவர் தனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறாரா என்ற கேள்வி ஜெனிஃபருக்குக் குழப்பத்தைக் கொடுக்கத் தொடங்கியது.

ஏனென்றால் இது வரைக்கும் உஷாவின் கணவர் டேவிட் வேலையால் வந்து அவளை அணைத்துக்கொண்டு ‘ஐ லவ் யூ உஷா டார்லிங்’ என்று சொல்வதுது போல் மார்ட்டின் வேலையால் வந்ததும் அவளை அணைத்து ‘லவ் யூ ஜெனிஃபர்’ என்று சொன்னதேயில்லை. அதனால் அவன் உண்மையாகவே தன்னை முழுமையாக காதலிக்கிறானா? அல்லது மார்ட்டின் தன்னை ஒரு வீட்டுக்காரியாக மட்டும் பார்க்கpறானா? அல்லது தான் எப்படி இருந்தாலும் ஜெனிஃபர் சந்தோஷப்படுவாள் என்று நினைக்கிறானா? அல்லது ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது எல்லாம் எங்களுக்கு தேவையில்லை என்று அவனுக்கு ஒரு சிந்தனை இருக்கிறதா?அல்லது அவன் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு காதலி இருக்கிறாளா என்று பல கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக் குழம்பிக் கொண்டாள்.

தன் மனம் மிகவும் சிக்கலாக போய்க் கொண்டிருந்ததை அவள் புரியவில்லை. தன்னுடைய சிக்கலான சிந்தனையை உஷாவிடம். சொல்லி ஒப்பாரி வைக்கவும் அவள் தயாராக இல்லை. இதுவரையும். ஒரு அன்பான கணவன். அழகான வீடு. அருமையான இரு குழந்தைகள். அமைதியான சூழ்நிலை. வசதியான வாழ்க்கை. நெருங்கிய உறவுகள். ஓரு வருடத்தில் இரு தரம் வெளிநாடு போய் விடுதலையைக் கழிப்பதுஎன்றெல்லாம் இருந்தhலும் அவை ஏதோ ஒரு போலியாகத் இருந்தது. மேற் சொன்னவற்றை பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். நான் எனக்காக வாழ்கிறேனா. அல்லது மற்றவர்களுக்காக வாழ்கிறேனா? என்று இன்னும் பல கேள்விகள் அவளின் அடிமனத்தில் குமுறியது. இது வரையும் ஆழமாக பதிந்திருந்த குடும்பப்பணி. தன்னலமற்ற குடும்ப சுவை எனக்கு வசதியான வாழ்க்கை இருக்கிறது என்ற நிம்மதியை குலைக்கத் தொடங்கியது. எது உண்மை. எது மாயை? என்று அவளுக்கு புரியவில்லை.

அந்த வருட இறுதியில் நத்தார் பண்டிகை வந்ததும் வழக்கம்போல். இங்கிலாந்து வர்ண அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டது. இங்கிலாந்தில் வாழும் பல இன மக்களும் சாதி மத நிறபேதம் இன்றி நத்தhர் மட்டுமல்லாமல் புதுவருட விடுதலையையும் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடினார்கள். உஷாவும் கணவரும் தங்கள் மகனுடன் விடுமுறையை கழிக்க லண்டனுக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் அங்கு தங்களpன் சினேகிதர்களுடன் எங்கு போவார்கள்? என்ன செய்வார்கள்? என்ன என்ன சந்தோஷமான விஷயங்களில் ஒன்றாகக் கலந்து கொள்வார்கள் என்றெல்லாம் உஷா ஜெனிஃபர்க்கு சொல்லியிருந்தாள்.

ஜெனிஃபரின் வாழ்க்கையில் இது வரைக்கும் நத்தார் கொண்டாட்டத்தை இந்தக் கிராமத்தை அடுத்து எந்த இடத்திலும் கொண்டாடியதில்லை. நத்தார் பண்டிகை என்பது தன் குடும்பம் தன் உறவினர் என்பவர்களைச் சந்திப்பது. அவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது. அவர்களுடன் சேர்ந்து விருந்து உண்பது என்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்த அனுபவங்கள். அதைத் தாண்டி அவளுக்கு வேறு எந்த விதமான தேவையும் இருக்கவில்லை. ஆசையும் இருக்கவில்லை.

வெளியில் போய் மிகவும் அந்நியமான அனுபவங்களை அடைவதற்கு அவளுக்கு இது வரைக்கும் சந்தர்ப்பம் இல்லை. சந்தர்ப்பம் வந்தால். உஷா சொல்வது போல் தானும் வித்தியாசமான அனுபவங்கள் மூலம். ஒரு புதிய மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் காணலாம் என்பதை அவள் உணர்ந்தாள்.

நத்தர் பண்டிகை நெருங்க நெருங்க ஜெனிஃபரின் மனத்திலே. பலவிதமான சிந்தனைகளின் நெருக்கத்தால் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. அவளுக்கு எப்படிப் பழையபடி தனது சாதாரண நிலைக்கு வருவது என்று தெரியவில்லை. தான் எதிர்பார்ப்பது என்ன? உஷா மாதிரி நான் வாழ வேண்டுமா? அல்லது உஷாவின் கணவர் மாதிரி என் கணவர் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேனா என்றெல்லாம் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்வதற்கு வசதி இருக்கின்ற போதும் தன் கணவர் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கும் தன்மை அவளுக்கு அலுப்புத் தரத் தொடங்கியது.

‘நான் இனி மாட்டின் வேலையால் வீட்டுக்கு வரும்போது அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று ஜெனிஃபர் திட்டம் தீட்டிக்கொண்டாள். அதனால் அவன் வந்த போதும் வழக்கம் போல சாப்பாடு செய்து வைத்துவிட்டு. இன்றைக்கு உங்கள் வேலை எப்படி இருந்தது என்று கேட்டாள். இந்தக் கேள்வியை அவள் மார்ட்டினிடம் ஒவ்வொரு நாளும் கேட்காவிட்டாலும் அவன் முகத்தில் களைப்பு இருந்தால் ‘இன்றைக்கு சரியான கடுமையான வேலை இருந்ததா’ என்று அன்புடன் கேட்பதை தவிர்க்கவில்லை. ஆனால் இப்போதோ அடிக்கடி. ‘நீங்கள். இன்று சந்தோஷமாக வேலையை முடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்’’ என்று ஜெனிஃபர் சொன்னால் அவன் அதற்கு ‘நீ இப்படி கேட்டதுக்கு நன்றி. ஐ லவ் யு’’ என்று சொல்லுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மார்ட்டின். ‘வழக்கம் போல இருந்து’ என்றான்

நத்தார் தொடக்கம் புத்தாண்டு பண்டிகையும் வந்தது பிரமாண்டமான. ஆரவாரங்களைச் செய்துவிட்டு மறைந்துவிட்டது. அவர்கள் வழக்கம்போல் பெற்றோர் சகோதர சகோதர்கள் சினேகிதர்கள் என்று பலருடன் கொண்டாடினார்கள்.’’ நாங்கள் இருவரும் தனியாக எங்கேயாவது போவோமா என்றோ அல்லது எங்கள் குழந்தைகளுடன் ஏதோ ஒரு வெளி நாடு போவோமா என்று மார்ட்டின் கேட்கவில்லை.

இன்னும் நூறு பண்டிகைகள் வந்தாலும் அவன் நேற்று இருந்த மார்ட்டின் போல் தான் என்றும் இருப்பான் என்று ஜெனிபருக்கு புரிந்தது.

விடுதலைக்கு லண்டனுக்கு போயிருந்த உஷா குடும்பத்தினர் இப்போது வந்திருப்பார்கள் என்று ஜெனிஃபர் நினைத்தாள். ஆனால் போக நேரம் இருக்கவில்லை.

கடந்த ஒரு சில மாதங்களாக இந்த என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என சிந்தித்துக்கொண்டிருந்த ஜெனிஃபர் நத்தார் விடுதலை நாட்களில் இரண்டு கிழமைகளுக்கு மேல் உஷாவைக் காணாதபடியால் அவள் மனம் பல கற்பனைகளைச் சித்தரித்தது. ‘’உஷா எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள், எத்தனை சினேகிதர்களைச் சந்தித்து எங்கெங்கெல்லாம் போயிருப்பாள்? என்று பல கேள்விகளும் விளக்கங்களும் அவள் மனதை வருத்தியபோது அவளுக்குத் தன்; நிலைமையில் அவளுக்கு ஒரு பரிதாபம் வந்தது.

வழக்கம் போல் ஒரு நாள் மார்ட்டின் இரவு பத்து மணிக்கு தனது சிநேகிதர்களுடன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அவர்களின் இரு குழந்தைகளும் தங்கள் படுக்கை அறைகளுக்குச் சென்று விட்டார்கள். ஜெனிஃபர் வழக்கம் போல் மார்ட்டினுக்கு அவன் விரும்பும் இரவு பானமான ஹாட் சாக்லேட் போட்டுக் கொடுத்தாள். ‘நன்றி’ சொல்லிவிட்டு அதை வாங்கி குடித்துக்கொண்டு டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தான். ஜெனிஃபர்ரின் முகத்தையும் பார்க்கவில்லை. ஜெனிஃபர் சட்டென்று அவனைக் கட்டியணைத்து ‘ஐ லவ் யூ மார்ட்;டின்’’ என்று சொன்னாள். அவன் அவளை நிமிர்ந்து பார்த்து. ‘ஆர் யூ ஓகே ஜெனிஃபர்?’’. என்று வேடிக்கையாக கேட்டான்.

ஜெனிஃபருக்குப் பொல்லாத கோபம் வந்தது. ‘எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை. எனது கணவரை ஐ லவ் யூ. என்று என்று சொல்வதற்கு புத்தி பேதலித்து இருக்க வேண்டுமா’? என்று அரைகுறைக் கோபத்துடன் கேட்டாள். அவன் அதைப் பொருட்படுத்தாது தன் கவனத்தை டெலிவிஷனpல் பதித்து இருந்தான். அன்றிரவு ஜெனிஃபர்க்கு சரியாக நித்திரை இல்லை. எப்படித் தன் கணவரைத் தன்னிடம் மிகவும் அன்புள்ள கணவராக மாற்றுவது. அவனை ‘ஐ லவ் யு ஜெனிஃபர்;’ என்று எப்படிச் சொல்ல வைப்பது என்று அவளுக்கு புரியவில்லை.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் மார்ட்டின் பதினொரு மணிக்கு. மதுக்கடைக்கு சென்று மத்தியான சாப்பாடு ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்தான். ஜெனிஃபர் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை விருந்தான மாட்டு வதக்கல் பல மரக்கறிகள் எல்லாம் செய்து அத்துடன் அவனுக்குப் பிடித்த இனிப்பும் செய்து வைத்திருந்தாள். அவன் வந்து சாப்பிட்டுவிட்டு. ‘நல்ல சாப்பாடு.’என்று அவளை அன்புடன் பார்த்துச் சொன்னான். அத்துடன் சேர்ந்து. ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல மாட்டாயா?’ என்று ஜெனிஃபர் ஏங்கினாள்;.

மதிய சாப்பாடு முடிந்ததும். வழக்கம் போல் மார்ட்டின் டெலிவிஷனpல் ஃபுட்பால் பார்க்க ஆரம்பித்தான்.குழந்தைகள் இருவரும் தங்கள் பாட்டியாருடன்; பார்க்குக்குச் சென்று விட்டார்கள். ஜெனிஃபர் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு வந்த போதும் அவன் கால்பந்தாட்டம் டெலிவிஷனில். அமோகமாக நடந்து கொண்டிருந்ததை ரசித்து சத்தம் போட்டுக்கொண்டு ஆரவாரித்துக் கொண்டு இருந்தான்.

‘இந்த வீட்டில் எல்லோருக்கும் நான் ஒரு வேலைக்காரி. அதை விட இவர்கள் என்னைப் பெரிதா மதிப்பதில்லை; என்ற எண்ணம் வந்ததும் ஜெனிஃபர்ருக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது. ஜெனிஃபர் தனக்கு வந்த கோபத்தைக் காட்டக் கதவை அடித்துச் சாத்திவிட்டு வெளியேறினாள். வெளியில் சரியான குளிர். அக்கம் பக்கம் எல்லாம் மிகவும் அமைதியாக இருந்தது. அவளுக்கு தெரியும் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கால்பந்தாட்டத்தை ரசித்துக் கொண்டிருப்பார்கள். பெண்கள் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு கணவருக்கு பக்கத்தில் இருப்பார்கள் என்று தெரியும். அதுதான் பெரும்பாலான கிராமத்து வாழ்க்கை முறை. ஆனால் அன்று அவளுக்கு மிகவும் கோபம் வந்தது. இவர்களுக்கு நான் இந்த வீட்டில் சில மணித்தியாலங்கள் இல்லாவிட்டால் என்ன நடக்கும் அன்று உணரத் தெரியாதா? என்று நினைத்தபோதுஅவளுக்கு மிக பிரமாண்டமான ஆத்திரம் வந்தது.

அத்துடன் தனது நிலைமையை நினைத்துத் தன்னில் அவளுக்கு ஒரு பரிதாபமும் ஒரு தாங்க முடியாத துயரும் வந்தது. ஜெனிஃபர் சட்டென்று. எங்கு போவது என்று தெரியாமல் வெளியில் நடந்தாள். அவள் கார் வைத்திருப்பவள். இன்று அவளுக்கு வந்த ஆத்திரத்தில் கார் எடுக்காமல் வெளியே வந்து விட்டாள்.

அவள் பெரிய வீதிக்கு வந்ததும் ஒரு சிலர் லண்டனுக்கு செல்லும் பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவளுக்குத் தானும் லண்டனுக்கு போய்ச் சில மணித்தியாலங்கள் என்றாலும் தனது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது.

அதன் பின் அவள் திரும்பி வந்ததும் வீட்டில் சில மணித்தியாலங்கள அவளில்லாமல் இருந்த அவர்கள் எப்படித் தன்னை.நடத்துவார்கள்? ஓரு நாளும் எங்களை விட்டுப் பிரியாத ஜெனிஃபரைச்; சில மணித்தியாலங்கள் காணவில்லை என்று போலிஸாரைத் தொடர்பு கொள்வார்களா? ‘என் குழந்தைகள் என்னைக் கண்டதும் எங்கே அம்மா போயிருந்தாய்’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார்களா? என்று ஜெனிஃபர் பல கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். நான் வீட்டில் இருப்பது அல்லது இல்லாதது அவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்று இன்று பார்க்கலாம் என்றெல்லாம் யோசித்து பார்த்தாள்.

அவள் அந்த லண்டன் செல்லும் பஸ் தரிப்பில் கொஞ்ச நேரம் நின்றபோது பஸ் வரவில்லை. அதாவது லண்டனுக்கு ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு பஸ் அந்த இடத்துக்கு வரும். அதனால் அவள் கடைசியாக வந்த பஸ்சை தவற விட்டதும் இனி இன்னும் ஒரு மணித்தியாலம் காத்திருக்க வேண்டும் என்பதும் புரிந்தது. அங்கு நின்றவர்கள் இன்னும் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவளால் ஒரு மணித்தியாலம் பொறுமையாக இருக்க முடியவில்லை.

எங்காவது செல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஜெனிஃபர் எதிர்ப் பக்கத்திலிருந்து லண்டனிலிருந்து வரும் பஸ் அவர்களின் பக்கத்து நகருக்குச் செல்ல வந்து கொண்டிருந்ததைக் கண்டதும் ஜெனிஃபர் அடுத்த பக்கம் செல்லும் பஸ்சுக்கு அவசரமாகத் தெருவைக் கடந்து சென்றாள். அது அவளை அடுத்த சிறு நகரத்துக்கு கொண்டு சேர்த்தது. அங்கு போனதும் அந்த சிறுநகரம் அவளுக்கு மிகவும் தெரிந்த இடம் என்ற படியால் அவள் அங்கு இங்கு என்று தேவையற்ற விதத்தில் நடந்து திரிய விருப்பமில்லை. அப்போது பக்கத்துச் சினிமா திரைக்கு பிரமாண்டமான தொகையில் மக்கள் தங்கள் குழந்தைகள் சகிதம் திரண்டு சென்று கொண்டிருந்தார்கள். விடுதலைக் காலங்களில் குழந்தைகளுக்காகக் காட்டப் படும் டிஸ்னி திரைப்படம் விளம்பரத்தில் காணப் பட்டது. அந்தப் படம் நல்ல படமாக இருக்கலாம் என்று அவள் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள.; தாய் தகப்பனுடன் பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். ஒரு சில குழந்தைகள் தங்கள்; பாட்டி தாத்தாக்களுடன் வந்திருந்தனர். அவள் மனதில் தனது குழந்தைகளுடன் வந்திருந்தால் அவர்கள் எவ்வளவு சந்தோசப் பட்டிருப்பார்கள் என்று நினைத்ததும் அவள் மனம் சோகத்தில் குமுறியது.

ஜெனிஃபர் உள்ளே சென்றதும் சென்றதும் அந்த சினிமாத் தியேட்டரில் இவளைத் தவிர யாரும் தனியாக வரவில்லை. ஒரு சிலர் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவளுக்கு அது தர்மசங்கடமாக இருந்தது. ஆனாலும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு இடைவெளி நேரம் வரை உட்கார்ந்தருரந்தாள். என்ன படம் என்ன கதை என்ற விளக்கங்களை அவள் மனம் கிரகிக்கவில்லை.

இடைவெளி நேரத்தில் சினிமாத் தியேட்டரைவிட்டு வெளியே வந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்ததும் அவள் கணவர் டெலிவிஷன் பார்த்த களைப்பில் சோஃபாவில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். குழந்தைகள் பாட்டியாருடன் அவர்கள் அறைகளில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஜெனிஃபர் வீட்டில் இல்லை என்பதை ஒருத்தரும் கவனிக்கவுமில்லை. அவளைக்; காணவில்லை என்று போலீசாருக்கு அறிவிக்கவும் இல்லை. போலீசார் தன்னைத் தேடவுமில்லை. தன் குடும்பத்துக்குத் தான் சில மணித்தியாலங்கள் ‘ காணாமற் போனதே தெரியாது’’ என்று நினைத்தபோது ஜெனிஃபர்க்கு அழுகை வந்தது.

அந்த நேரும் அவளின் தாயார் தனது பேரக் குழந்தைகளுடன் கழித்த பொன்னான நேரத்தின் பூரிப்ப அவள் முகத்தில் பிரதிபலிக்க மாடியிலிருந்து கீழே வந்தாள். ‘’எங்கே உனது சினேகிதி உஷா வீட்டுக்குப் போயிருந்தாயா. குழந்தைகள் பார்க்கில் சந்தோசமாக விளையாடினார்கள். சரி கொஞ்சம் றெஸ்ட் எடு.அடுத்த வாரம் சந்திப்போம்’’ என்று சொல்லி விட்டு மகளையணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டுத் தாயார் சென்றாள்.

அப்போது மார்ட்டின் தூக்கத்தால் எழும்பி ‘ஜெனிஃபர் தேனீர் இருக்குமா’’? என்று கேட்டான். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் சில மணித்தியாலங்கள்’காணாமற’; போனதைப் பற்றி இந்த வீட்டில் ஒருத்தரும் கண்டு கொள்ளவேயில்லை. இந்த வீட்டில் தன்னை யாரும் புரிந்து கொள்வதில்லை என்பதைத் தெரிந்து கொண்டதும் அவளுக்கு விக்கி விக்கி அழவேண்டும் போலிருந்தது. ஆனால் கணவருக்கு முன்னாள் அழக்கூடாது என்ற. வைராக்கியத்தால் அழுவதைத் தடுத்தாள்.

ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்ட அடுத்த நாள் திங்கள்க்; கிழமை குழந்தைகளின் பாடசாலைகள் ஆரம்பித்தன. விடுதலைக்கு போய் வந்தவர்கள் பாடசாலைக்கு வந்திருந்தார்கள். ஆனால் உஷாவும் குடும்பம் திரும்பி வரவில்லை. ஜெனிஃபருக்கு ஏன் உஷா குடும்பம் இன்னும் திரும்பி வரவில்லை என்று தெரியவில்லை. அவர்கள் இந்த ஊருக்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்கிடையில் இந்த ஊர் பிடிக்காமல் லண்டனிலேயே நின்று விட்டார்களா? ஜெனிஃபர் தனக்குத் தானே யோசித்தாள்.

சில நாட்களின் பின் ஜெனிஃபர் தன் மகனைப் பாடசாலைக்கு கொண்டு போகும்போது உஷா தன் மகனுடன் வந்திருந்தாள். உஷாவின் முகத்தில் வழக்கமான மகிழ்ச்சி இல்லை. தனது வீட்டுக்கு வரமுடியுமா என்று ஜெனிஃபரைக் கேட்டாள். ஜெனிஃபர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆமாம் என்றாள். ஏனென்றால் அவளுக்கும் மனதில் மகிழ்ச்சி இல்லை. தனது குடும்பத்தை பற்றி யாரிடமாவது திட்டி அழவேண்டும் போலிருந்தது. உஷா வீட்டில் ஜெனிஃபர் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது உஷா சட்டென்று அழத் தொடங்கினாள்

‘ என் அன்பான உஷாஏன் அழுகிறாய்’?

உஷாவின் அழுகையைத் தாங்காத ஜெனிஃபர் அவளை அணைத்துக்கொண்டு என்ன நடந்தது? என்று கேட்டாள். உஷா ஜெனிஃபரின் அன்பில் உருகி உஷா இன்னும் அதிகமாக விக்கி விக்கி அழுதாள். அந்த சோகத்தை ஜெனிஃபரால்த்; தாங்க முடியாமலிருந்தது.

‘என்ன நடந்தது உஷா’ என்று ஜெனிஃபர் அன்புடன் கேட்டாள்.

‘நானும் என் கணவரும் பிரிவதாக முடிவு செய்து விட்டோம்’ என்றாள் உஷா.

‘அய்யய்யோ ஏன்’? ஜெனிஃபர் பதறினாள்.

‘ என் கணவர் டேவிட்டுக்கு ஒரு இரகசிய காதலி இருக்கிறது என்று நாங்கள் லண்டனில் தங்கியிருந்தபோது எனக்குத் தெரிந்தது. ஆபீஸ் விஷயமாகச் சில வேளைகளில் லண்டன் செல்கிறேன் என்று டேவிட் சென்றபோது நான் எந்த சந்தேகமும் இல்லாமல் அவனை நம்பினேன். ஆனால் அந்த ஆபீஸ் விஷயம். என்ன என்ற உண்மை தெரிந்ததும் என்னால் தாங்க முடியவில்லை நான் ஒரு முட்டாள் என்று நினைத்து அவன் செய்து கொண்டிருந்த விளையாட்டைப் புரிந்து கொண்டநான் அவனை என் வாழ்க்கையிலிருந்து. நீக்கிவிட்டேன்’’ உஷா அழுதபடி தொடர்ந்தாள்.

‘வாழ்க்கை ஒரு மாயை. அதில் ஒவ்வொரு நாளும் நாங்கள் காண்பதும். அனுபவிப்பதும் நாளைக்கு என்ன நடக்குNமா என்று தெரியாத ஒரு மாயையானது வாழ்க்கை. நானும் அதைத்தான் அனுபவித்தேன். ஆனால் நான் அவனைக் காதலித்ததை நான் ஒரு துன்ப நினைவாக எடுக்கமாட்டேன். அவன் உண்மையாக என்னை காதலித்தான். எங்களுக்கு ஒரு அருமையான குழந்தை இருக்கிறான். அவ்வளவு போதும். என் கணவனுக்கு என்னில் கிடைக்கும் இன்பம் போதாது என்றால் எங்கயாவது போய் சந்தோஷமாக இருக்கட்டும். நான் அவனைத் திட்ட மாட்டேன். ஏனென்றால் அவனைத் திட்டுவது என் மகனை திட்டுவதற்குச் சமம். ஏனென்றால் என் மகனைக் காணும் ஒவ்வொரு நிமிடமும் என் கணவன் என் முன்னிலையில் இருக்கிறான். இன்றைக்கு என் மனதிலிருக்கும் துன்பம் நாளைக்கு குறைந்து போகலாம். குறைய வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு இருப்பது ஒரு வாழ்க்கைதான். அதில் பல வழிகள் இருக்கின்றன. என் தனி வழியில் நான் திடமாக நிற்பேன். அவன் ஐ லவ் யூ என்று சொன்ன போதும் எனக்குத்தான் சொல்கிறான் என்று நினைத்தேன். ஆனால் அவன் மனதில் வேறு யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தான் என்பதை என்னால் தாங்க முடியவில்லை’’

உஷாவின் துயர்க் கதையைக் கேட்;ட ஜெனிஃபருக்கு உஷாவுக்கு என்ன மறுமொழி சொல்லுவது என்று தெரியவில்லை.

உஷா இன்னும் பல விடயங்களைச் சொல்லி அழுது கொண்டிருந்தாள்.

‘’ மை டியர் உஷா என்னை நீ உனது சகோதரியாய் நினைத்து எவ்வளவோ சொல்லி விட்டாய். நீP இந்த ஊரில் இருக்கும் வரை நானும் எனது குடும்பமும் உன்னைப் பாதுகாப்போம் எனது மகன் பீட்டர் உனது மகன் ஆகாஷ்சுடன் மிகவும் அன்பாய் இருப்பது உனக்குத் தெரியும் இருவருக்கும் அவர்களின் இணைவு பல நன்மைகளைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று தனது சினேகிதியைத் தேற்றினாள் ஜெனிஃபர்.

‘’ என் அருமைச் சினேகிதி ஜெனிஃபர் நீ ஒரு பெரிய அதிர்ஷ்டசாலி. மார்ட்டின் ஒரு நல்ல மனிதன் மட்டுமல்ல. அதிகவும் தாராள நடைமுறையில் உன்னை நடத்துகிறான். மார்ட்டின் பெரிதாக எதையும் எதிர்பார்க்காமல் தனது குடும்பத்தோடு ஐக்கியமானவன். ஆனால் எனது டேவிட் என்னில் அன்பாக இருப்பாதாகவும் லண்டன் பெண்ணின் உறவு வெறும் செக்ஸ் உறவு என்று சொன்னான். என்னால் தற்போதைக்கு ஒன்றையும் சிந்திக்க முடியாது.’’ என்ற உஷா ஆழ்ந்த வேதனையுடன் சொன்னாள்.

‘எங்களுக்கு முன் நடப்பவை பலபோலியா. வாழ்க்கையே ஒரு போலிதானா? மார்ட்டின் செக்ஸ் பற்றி ஒருநாளும் எதையும் அலட்டிக் கொண்டதில்லை. நான் முழுமையான திருப்தியை அவனுக்குக் கொடுகிறேனா?’ ஜெனிஃபர் வீட்டுக்கு வரும் போது தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு வந்தாள். ஜெனிஃபருக்கு அன்பு தர அவளது அம்மா அப்பா குழந்தைகள் கணவர் என்று பலர் இருக்கிறார்கள். உஷாவின் நிலை அவளுக்குப் பரிதாபத்தைத் தந்தது. தன்னால் முடிந்தவரை உஷாவை அன்புடன் கவனிப்பது முக்கியம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

ஜெனிஃபர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் மார்ட்டின் கதவை சாத்தி விட்டு வருவது தெரிந்ததும் ‘மார்ட்டின் வாருங்கள் தேனீர் தயாராகவிருக்கிறது’’ என்றாள். அவன் வந்தான். உஷாவின் கணவர் டேவிட் வீட்டுக்கு வரும்போது ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது மாதிரி மார்ட்டின் சொல்லவில்லை. அவன் முகத்தில் பசி இருந்தததை ஜெனிஃபர் கண்டு விட்டாள். அவனின் வாடிய தோற்றத்தைக் கண்டதும் அவளது மனம் இரங்கியது. அந்த முகத்தில் இருந்த ‘சாப்பிட ஏதும் இருக்குமா’ என்ற கேள்வியின் தடயத்தையும் ஜெனிஃபர் கவனிக்க மறக்கவில்லை. அவள் அவனைக் கட்டிக்கொண்டு ‘மார்ட்டின் ஐ லவ் யூ என்று ஒரு நாள் சொல்லேன்’ என்றாள் குறும்பாக.

‘நான் ஐ லவ் யு சொல்லித்தான் உனக்கு என் அன்பைப் புரியவைக்க வேண்டுமா ஜெனிஃபர்?’ மார்ட்டின் அன்பாகக் கேள்வியைக் கேட்டுவிட்டு மேசையில் அமர்ந்தான்..

அவள் அவனுக்கு தேநீர் பரிமாறிக் கொண்டிருக்கிறாள். அவனோடு சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவள். ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொண்டவர்கள். காதல் என்பது வார்த்தைகளிலா இருக்கிறது. தனக்குள் இருந்து வரும் பல கேள்விகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜெனிஃபர் முடிவுக்கு வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *