ஐன்னல் வானம்






சீராக இருந்த அடிவைப்புகளின் நீளம் குறைகிறது. நடையில் தயக்கத்திலான தளர்வு. கண்களின் பார்வையில் நிற்கும் பூக்கோட்ட ஹௌஸ். கண்ணாடிச் சில்லுகள் மேல் விளிம்பில் பதித்த சுற்று மதிலின் உயரமும், தோட்டத்துப் பொன்னரளியும், முற்றத்து வாதாம்பிகளும் மறைத்த பாகங்கள் தவிர்த்துத் தெரிகிறது அவ் வீடு. வெயிலில் பட்டுத் தெறிக்கிற சுவற்றினுடைய சுண்ணாம்பில் அதிகம் கலந்த நீலக் குளுமை. பிறை ஓடுகளில் மழைகொண்டு கருத்த சுவடுகள். அதன் மீது விழுந்து, காற்றால் தள்ளப்பட்டு சரிந்து விழ இருக்கும் சருகுகள் கூட தெரிகிற அருகாமைதான்.
உள்ளின் பார்வையோ சுவர்களை ஊடுறுவிக் காண்கின்றன. திண்ணையில் அமர்ந்து முற்றத்து வழி தன் கண்ணீர் வற்றிய வறண்ட கண்களை வைத்திருக்கிற அம்மா. இடைவழியில் தென்னம்பாயினுடைய நிமிராத சுருளலின் மீது கிழிந்த சேலை விரித்து, இற்றுக் கிடக்கும் அம்மா. விறகுகள் எரிந்தணைந்து ஊதப்படாமல் புகை நிறைக்கிற அடுக்களைக்குள் அவள் சுவரோடு சாய்ந்து கால் நீட்டி வெறித்திருப்பாளோ? அல்லது மகனுடைய போட்டோவை மடியில் வைத்துக் கொண்டு…
அடிவைப்புகள் துவளுகின்றன.
அம்மாவைத் தானெப்படி நேராகக் காண்பது? தனது ஜீவனும் உலகமுமாயிருந்தவனை இழந்து நிற்கும் தாயிடம் எனக்குக் கேட்க என்னதான் உள்ளது? அவள் சொல்வதையேனும் செவிமடுக்கிற தைரியம் வேண்டுமே!
“ஆங். இதாருடாப்பா, தம்பிக் குருப்போ?” எதிர்வரும் கொச்சாம்பி சைக்கிளை ப்ரேக் பிடித்து அருகே இடது கால் ஊன்றி நிறுத்துகிறார். “நீ எப்ப வந்தே?”
“நேத்து.”
“இல்ல, கல்ஃபிலே நல்ல சம்பளம் கெடைக்கும்னு ஊர்க்காரங்க சொல்றாங்களே…”
“ஆமா.”
“பின்ன என்ன, நீ இப்படி மெலிஞ்சு போயிருக்கற? சுகமில்லாம இருந்தயோ?”
“அதொண்ணுமில்ல. அங்கத்த க்ளைமேட்டு…”
“சரிதான். வெயில் உருக்கீருமில்லையா?”
சசி முறுவவிக்கிறான். கொச்சாம்பி அண்ணனின் குடும்ப நலத்தைப் பற்றி ஒரு விசாரிப்பு.
“காரியங்களெல்லாம் அப்படி பத்தே பத்துல போகுது” என்பதாக இருக்கிறது அவருடைய பதில், என்றும் போல. பின்னாலிருந்த வலது புறப் பெடலை, அழுத்த வசமாக்கும் பொருட்டு முன்னே கொண்டுவர, செருப்பற்ற கால்விரல்களில் திருப்பிச் கழற்றி நிறுத்தியவரின் கை, மடக்கப்பட்ட நான்கு விரல்களுடன் உயர்ந்து, கட்டை விரலால் பூக்கோட்ட ஹௌஸின் திசையைச் சுட்டுகிறது. “மற்றவனைப் பற்றி ஏதும் விபரம் உண்டா?”
“நான் இங்க இப்பத்தான் வர்றேன்.”
“அப்படியா?” என புருவம் உயர்த்திவிட்டு, தலையசைப்பில் விடைபெற்று பெடலை அழுத்துகிறார். தனது ப்ரத்யேக ஓசைகளுடன் சசிக்குப் பின்னே செல்கிறது சைக்கிள்.
மண்பாதை எதிரே ஒற்றையாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. குழிவுகளும், பெயர்ந்த கற்களும், பாதச் சுவடுகளும், செருப்புகள் மற்றும் டயர்களின் அடையாளங்களுமாய். பாதையோரம் வளச் செடிகள் பூத்து நிற்கின்றன. வரிசைத் தென்னைகளினடியே நீண்டு வளரும் புற்களோடு, அகன்று விரிந்த சேம்பு இலைகள். வயல்வெளி வரப்பினூடே வெகு தூரத்தில் ஒரு பெண்ணும், அவளுக்கு முன்பாக சட்டையணியாத சிறுவனும் நடப்பது ஊர்வதாகத் தெரிகிறது. ஆள் காணப்படாமல் சந்துக்குள்ளிருந்து, “மத்தி… மத்தேய்…” எனும் குரல்.
பாலைவன தேசத்தின் உருக்கும் நாட்களில் ஞாபகங்களாக வீசி வருடி எக்கம் தருகிற குளுங்காற்று இதோ வீசிக்கொண்டிருக்கிறது. பசுமையும் நிழலும் கண்ணில் நிறைகின்றன. என்றாலும், தான் இப்போதுதான் ஏதோ அன்னிய தேசத்தில் உள்ளது போலவும், தனித்து விடப்பட்டது போலவும் அவனுடைய உணர்வு. துயரமானதொரு வெறுமை. அவன், தான் யாரோவாக நடக்கிறான். தான் நடந்துகொண்டிருப்பதைத் தானே பார்த்துக்கொண்டிருப்பது போலொரு நிலையும் அவனுள் உண்டாகியி ருக்கிறது. அவன் கொண்டியிடாத மதில் கேட்டைத் தள்ளித் திறப்பதையும், அப்போது உண்டான இரும்பின் உராய்வு ஓசையையும், அங்கே வீசுகிற பவளமல்லி மணத்தையும் அவன் பார்க்கிறான்.
காய்ந்த முற்றம், மாடத்தில் துளசி வாடியுலர்ந்து குச்சிகளாக நிற்கிறது. திண்ணையிலும் திறந்த சுதவினுள் தென்படுவதிலும் யாருமில்லை. செருப்புகளைக் கழற்றிவிட்டு படிகளேறுகிறான்.
“அம்மா…”
பதிலில்லை; அழைப்பு கேட்டிராது.
உரக்க அழைக்கிறான். “அம்மா…”
பகலின் இருள் மங்கலாக வீட்டுக்குள் வியாபித்துள்ள அறைகளில் எங்கிருந்தோ பதில் வருகிறது. “ஆங்…”
சசி உள்ளே நடக்கிறான். நடு அறையினுள் உள் திறந்த கதவிலிருந்து கீழ் நிலையில் ஊன்றிய கையும், எட்டிப் பார்க்கிற அம்மாவின் முகமும்.
“குட்டா… நீயா?” ஊன்றப்பட்ட கையால் எழுகிறாள் அம்மா. தன்னிடமிருந்த சேலையைக் கீழே வைத்துவிட்டு, “வாடா மகனே… வா, வா…” வேகமாய் முன்னே நீண்டு வந்து அவனது கைகளைப் பற்றும் முதிய விரல்கள்.
“மகனே, எப்ப வந்தே?”
“நேத்துதான் அம்மா.”
“நேத்தே வந்துட்டயா? தெரிஞ்சிருந்தா நேத்து மண்ணெண்ணையும், சர்க்கரையும் வாங்க ரேஷன் கடைக்கு வந்திருந்தேன்; அப்படியே வீட்டுக்கும் வந்திருப்பேன்.”
“நீங்க வரலேன்னா என்ன? நான் இங்க வருவனில்லையா?”
“நீ வராமப் போவயா? வா, மகனே, உக்காரு.”
அம்மா கையைப் பற்றிப் பிடித்தவாறே நடு அறைக்குள் கூட்டிச் சென்று, பீரோவினருகே இருந்த ஸ்டூலை எடுத்துப் போட்டாள்.
“எத்தனை நாள் லீவு?
“ஒரு மாசம்.”
“போயி மூணு வருசம் ஆச்சில்லையா?”
“ஆமா.”
“ம்…” யோசனையாய் அம்மா மீண்டும் கதவில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்துகொள்கிறாள். கூரையிலிருந்து ஓட்டு விலக்கத்தில் ஒழுகும் சூரிய ஒளி சாய்ந்து தரையில் விழுகிறது. அறையின் வெற்றிடத்தில் அலைந்துகொண்டிருக்கும் தூசிகள் ஒளிச் சாய்வினுள் ஒளிர்கின்றன. அவனும் அம்மாவும் மௌனத்தில். அம்மா இப்போது அவனைத் தவிர்த்து வெறுமனே எதிரே குறிப்பற்ற பார்வையுடனிருக்கிறாள். அவளைக் கலைக்க வேண்டாமென்று சசியும். அம்மாவின் மௌனத்தினுள்ளில் இப்போது அனேகம் சொற்கள் கொதித்துக்கொண்டிருக்கக் கூடும். அதிலிருந்து தேர்ந்தெடுத்துப் பேசுபவளல்ல அவள். சொற்களைக் கடந்தும் ஆறாதிருக்கிற கொதிப்பு கொஞ்சம் தணியட்டும் என்பதனால்தான்.
“உண்ணிகிட்டயிருந்து இது வரைக்கும் ஒரு விபரமுமில்லை குட்டா.”
முடிவாகச் சொல்ல வேண்டியதை அம்மா சொன்னது சசிக்குத் திகைப்பாயிருக்கிறது. ஒரு வேளை, அதிலிருந்து துவங்கலாம் அவளது இந்த மௌனிப்பினுடைய கதை. வறண்ட அழுகைகளோடு கூட.
அவன் காத்திருக்கிறான்.
அம்மாவோ முன்னம் வைத்திருந்த சேலையைத் தரையிலிருந்து எடுத்துக் கொண்டு, கிழிசலைத் தைத்துக்கொண்டிருந்த செயலை விட்டதிலிருந்து தொடருகிறாள். அப்போதும் அவனிடமிருந்து வேறெந்த வார்த்தைகளும் வெளிப்படவில்லை. அவ்வாறாக அவள் முடித்துக்கொண்டாளோ? நடந்ததெல்லாம் இவனுக்கும் தெரிந்ததுதானே என்பதனால் இருக்கலாம். ராஜீவன் வீட்டைவிட்டுச் சென்றுவிட்ட காரியம், பத்திருபது நாட்களுக்குப் பிறகு கங்காதரன் எழுதியிருந்த கடிதத்திலேயே தெரிய வந்திருந்தது. அது பற்றிய விபரம் கேட்டு எழுதியதற்கு பதிலும்.
ஒரு காரணமுமில்லாமல், குறிப்புகள் எழுதியும் வைக்காமல் ராஜீவன் போய்விட்டிருக்கிறான். அவன் போகுமிடங்களிலெல்லாம் விசாரித்துத் தேடியும் அவனைக் கிடைக்கவில்லை. சசி எழுதும் கடிதங்களில் நண்பர்களிடமும், தனது வீட்டாருக்கு செய்யும் ஃபோன்களிலும் ஒவ்வொரு முறையும் ராஜீவனைப் பற்றி தகவல்கள் உண்டா எனக் கேட்பான். ஒப்பந்தத்தின் பிணைக்கப்பட்ட சங்கிலிக் கண்ணிகளை மீறி அவனால் இங்கே வா முடியாத நிலையில், ராஜீவன் வெளியேறிச் சென்றதிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் வந்திருக்கிறான். இந்த
அவகாசத்தினுள்ளில் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அம்மா அதை ஒரு வாக்கியத்தில் சொல்லி முடித்துக்கொண்டுவிட்டாள்.
அம்மா, ஏதாவது சொல் அம்மா. நான் சசியல்லவா வந்திருக்கிறேன். மூன்றாம் மனிதர்களிடம் போலவா என்னிடமும் இப்படி முறித்துக் கொள்ளவேண்டும்? நான் உங்களுடைய சசிதானே! பிழைத்துக்கொள்வதற்கான வழிகள் இங்கேயே இருந்தாலும், மேலும் உயர வேண்டும் என்பதற்காக நான் நம்முடைய மண்ணிலிருந்து பறந்துபோனேன். கடல் தாண்டிப் பறந்து அடைந்த தேசம் மட்டும் பாலையல்ல. ஆணைகளும் ஏவல்களும் கூலிகளும் உடல்களுக்கேயான அச் சூழ்நிலையில், என்னுடைய ஆத்மா பறந்து பறந்து வந்த இடம் வேறெது? கோடி கோடி முறை அதற்கு தன் ஞாபகங்களில் தண்ணீர் கொடுத்து இளைப்பாற்றி வருடிவிட்டது நீங்களெல்லாம்தானே! இத்தனை காலம் என்னுடைய ஆத்மாவை இளைப்பாற்றி வருடிய அந்த விரல்கள், சற்று முன் பற்றிப் பிடித்தது எனது உடலை மட்டும்தானா?
அம்மா இன்னும் தைத்துக்கொண்டிருக்கிறாள். ஒரு புராதனக் கிழவி, கிழிசல்கள் ஒரு போதும் தீராத சேலையைக் காலங் காலமாகத் தைத்துக்கொண்டிருப்பது போல. ஓட்டு விலக்கச் சூரிய ஒளிக் கீற்றின் சிறு வட்டம் துல்லிய நடுக்கத்தோடு அவளின் நீட்டப்பட்ட கால் மீது ஊர்ந்து நகர்கிறது.
தன்னிடம் மட்டுமல்ல; வேறு யாரிடமுமே அம்மா தன்னுடைய தவிப்புகளைச் சொல்லியிருக்கப்போவதில்லை என்று சசிக்குத் தோன்றுகிறது. எப்போதுமே அவள் முழுதாய் வெளிக்காட்டிக்கொள்கிற ரகமல்ல. அவளின் பெண்ணுருவில் அதிகமும் உள்ளது ஓர் ஆண் மனம். பேசுவதும் அத்தியாவசியமான சில வார்த்தைகளை மட்டுமே. அது மனதின் அடியாழத்திலிருந்து வருவது. ஆகவே, அதற்கான உண்மையும் வலிமையும் கொண்டதாக இருக்குமவை. அதைப் பற்றிக்கொண்டு நாம் அவளை நெருங்க விழையும்போதே அவள் அந்த வார்த்தைகளின் இடைவெளிகளுக்குள் புகுந்து அடியாழத்திற்குச் சென்று விடுவாள்.
பூக்கோட்ட ஹௌஸில் வசித்தது மொத்தும் மூன்று நபர்கள். அம்மா, ராஜீவன் மற்றும் தனிமை.
ராஜீவனுக்குத் தனியறை. மேற்குக் கோடியில் உள்ள அந்த அறை மற்ற அறைகளையெல்லாம் கடந்து போகவேண்டியதும், மிக ஒதுக்கமானதுமாகும். ஒரேயொரு நாற்காலியுடன் மேஜை, புத்தகங்களுக்கான மூடப்படாத மர அலமாரி, துணிகள் வைக்கும் ஸ்டீல் பீரோ, கட்டில், டேப் ரெக்கார்டர்
ஆகியவற்றுடன் உள்ளது அது. பெரும்பாலும் வேற்றாள்கள் அவனறையில் அனுமதிக்கப்படுவதில்லை. அவனில்லாதபோது அவனாலோ அம்மாவாலோ பூட்டப்படும். கங்காதரளோ சசியோ அவனைக் காண வந்தாலும் கட்டிலில்தான் அமர்ந்துகொள்ள நேரிடும். அதையும் நீடிக்கவிடாமல் “நாம திண்ணைல போய் இருக்கலாம்” என அழைத்துச் சென்றுவிடுவான்.
ராஜீவனுடைய அறையில் அவனுள்ளபோது ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்கும். புத்தகங்கள் வாசிப்பதோ, குறைந்த ஒலியில் இசை கேட்பதோ இல்லாதபோது அவன் ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்துக்கொண்டு அமர்த்திருப்பான். மேஜையுடனுள்ள நாற்காலியில் இருந்தாலும், கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாலும், ஜன்னல் தெரிகிற வசமாயிருக்கும். வானம் தவிர பிற புறக் காட்சிகள் எதுவும் தெரியப்படாத விதத்தில். சர்வ காலமும் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும்படியாக வானம் அவனை வசீகரிக்திருக்க வேண்டும்.
அவன் சொல்வான்:
“வானம் போலும் அற்புதம் வேறொன்று கிடையாது, சசி. பஞ்ச பூதங்களில் அதுவே தலைவனென்று தோன்றுகிறது. மற்றவைகளை மனிதன் தொட்டும், கையகப்படுத்திக்கொண்டும் இருக்கிறான். அவனால் ஒருக்காலும் தொட முடியாதது வானம். ஆனாலும் மனிதனுக்குத் தனது செல்வங்களையெல்லாம் வழங்கிக்கொண்டிருப்பது.”
பின்பொருமுறை:
“வானம் என்ற ஒரு வஸ்து உண்மையில் இல்லவே இல்லை. அது, சூரியக் கதிர்களின் கண்ணுக்குப் புலப்படாத அக நிறங்கள் புரியுமொரு ஜாலம்தான். இல்லாத ஒன்றினுடைய, இருப்பதுதான தோற்றம். ஆக, இருக்கிற இந்த பூமியும் மற்ற கிரகங்களும் இல்லாது போனாலும் கூட, இல்லாத அந்த வானம் என்றும் இருந்துகொண்டேயிருக்கும் அல்லவா?”
வேறொரு சந்தர்ப்பத்தில்:
“சசி, நாமெல்லாம் நிஜங்களா அல்லது மாயங்களா? அதாவது, நாம் நிஜமாகவே இருக்கிறோமா அல்லது நாம் இருப்பதான ஒரு தோற்றம்தானா? அப்படித்தான் இருக்கவேண்டும். காரணம், நானும், நீயும், புல்லும், அதோ – அங்கே குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கிற கோழியும், அந்தக் கட்டடங்களும், நாளை – அல்லது இன்னொரு நாளையில் – இல்லாது போகப்போகிறோம். ஒரு நாள் இல்லாமல் ஆகப்போவது, எப்படி அதற்கு முன்பு இருக்க முடியும்?”
மற்றொரு நாள்:
“இரவின் ஆழ்ந்த உறக்கத்தில் எனக்கு ஓர் உணர்வு. உறக்கமேதான். அதனுள் கனவு போலுமில்லை அது. உள்ளூடாக அந்த உணர்வு. என்னை யாரோ மிகையாக உற்று கவனித்துக்கொண்டேயிருப்பது போல. இன்னும் சரியாகச் சொல்வதெனில், ஜன்னல் வழியே பார்ப்பது போல. நான் உடனே உறக்கத்தைக் கலைத்து விழித்தேன். நீல வானம் என்னை, என்னை மட்டும் சூழ்ந்துகொண்டது. திகைப்புடன் உன்னித்தால், இரவு விளக்கின் ஒளி அறைச் சுவர்களை அப்படியாக்கியிருக்கிறது. அப்போதும் எனக்கு அது வானமே எனும் நினைப்பைக் கைவிட மனசில்லை. என்னுடைய வானம், எனது அறைக்குள்ளேயே வந்துவிட்டது என்பது, ஒரு பிரமையாக, தோற்றமாக, பின்னர் வெறும் நினைப்பாகவே இருப்பினும், அதை நான் ஏன் கைவிட வேண்டும்? அப்போது, நீல வானத்தினுள் திறந்த ஜன்னல், கருத்துத் தெரிகிற வானத்தைக் காட்டுகிறது. வானத்தினுள் வானம். இப்பால், வானத்தினுள் நானும். நான் கருத்த வானத்தைப் பார்க்கிறேன். அதுவோ தன்னுடைய ஆயிரமாயிரம் கண்களால் என்னையே ஊடுருவப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாமே ராஜீவன் தன்னுடைய நோட்டில் எழுதி வைத்திருப்பதாகவும் சொல்லியிருந்தான். படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்ட பிறகு, தான் பயன்படுத்தி வந்த ரெக்கார்டு நோட்டுகளில் படிப்பு சம்மந்தமாய் எழுதிய காகிதங்களைக் கிழித்துவிட்டு எழுதுவதாயிருந்தது அவனுடைய வழக்கம். பால்ய காலத்தில் தனது நெருக்கடியான மனாவஸ்தைகளையெல்லாம் காகிதத்தில் எழுதிவிட்டு, யார் கையிலும் அது கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக உடனே தீயிட்டுக் கொளுத்திவிடுகிற அவனது செய்கை பிற்பாடு இப்படி ஆகியிருந்தது.
ஒருவேளை அந்த நோட்டில், தான் வீட்டை விட்டுச் செல்ல நேர்ந்த காரணத்தையும் எழுதியிருப்பானோ? அம்மாவிடம் கேட்டால் தெரியும். அல்லது அவளுக்கு அந்த நோட்டுகளைப் பற்றியே தெரியாமலும் இருக்கலாம். சசிக்கு நேரடியாக அம்மாவிடம் அதை விசாரிப்பது பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. அவள் கிழிசலைத் தைத்து முடித்து, இறுதியில் முடிச்சிட்டுவிட்டு பல்லில் கடித்து நூலைத் துண்டிக்கிறாள். ஊசியுடன் மிஞ்சியிருந்த, கையகலமே நீளமுள்ள நூலை உருவி எடுக்கிறாள். கண்டிலிருந்து நூலெடுத்து, கண்களருகே ஊசியின் காதை வைத்துக் கோர்த்துக்கொண்டு, தையல் தொடர்கிறது.
“அம்மா…”
“என்ன, குட்டா?”
“இல்ல,… இவன் எதுக்காக வீட்டை விட்டுப் போனான்னு ஏதாவது குறிப்பு தெரிஞ்சுதா?”
அம்மா நிமிர்ந்து சசியின் முகம் பார்க்கிறாள். “இல்லையே மகனே. அவன் யாருகிட்டயும் எதுவும் சொல்லல. எழுதியும் வெக்கல. ராத்திரி நேரத்துல போனது. எனக்கு வெடிஞ்சும் அது பத்தித் தெரியல. வெளிய எங்காவது போயிருப்பான்னு நெனச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, அவன் கொஞ்சம் துணிகளையும் எடுத்துட்டுப் போயிருக்கறது.”
“அவன் இதைச் செய்யறதுக்குக் காரணம் இருந்தாகணுமில்லையா?”
அம்மா பெருமூச்சு விடுகிறாள். “விதி…! வேறென்ன சொல்றது?”
சசி தயக்கத்துடன் சொல்கிறான். “எனக்கென்னமோ அவன் தப்பிச்சு ஓடியிருக்கறதாத் தோணுது.”
இப்போது குழப்பமுடன் அவனை ஏறிடுகிறது அம்மாவின் முகம். நெற்றிச் சுருக்கங்களில் ஓடும் சிந்தனை. ஈரம் பளபளக்கிற கண்களில் மின்னுவதென்ன? அம்மாவுக்கு இவன் கூறியது விளங்கவில்லையோ?
அம்மா சொல்கிறாள்: “அவன்கிட்டயிருந்து அவன் எப்படித் தப்பிக்க முடியும்?”
எதிர்பாராமையின் திகைப்பு சசியை உலுக்குகிறது. அம்மாவுக்கும் இது… ஓ, அவள் அவனது தாயல்லவா. அதோடு, ராஜீவன் இவளின் பாகம்தான்.
“அவனுக்கு அது தெரியும்போது திரும்ப வருவான். இல்லேன்னா சாவான்.”
“அப்படியொண்ணும் நடக்காது அம்மா. அவன் முட்டாளோ கோழையோ அல்ல, தற்கொலை செஞ்சுக்கறதுக்கு.”
“என்னோட உண்ணி புத்திசாலியும் தைரியமானவனும்தான். அதனால்தான் நான் சொல்றேன்.”
அவளது முகம் தாழ்கிறது. கண்களில் கசியும் தாய்மை. அம்மாவுக்கு இவ்வளவு தெரியுமா? ராஜீவனைப் பற்றி, தான் அறியாததும், அவனே அறியாததும் கூட. சசியால் நம்ப முடியாதவளாக அவள் ஆகிறாள்.
அல்ல, அவள் ஆனவளல்ல. அப்படியே இருந்தவளும் இருக்கிறவளும்.
ராஜீவன் இவளைவிட்டு எங்கே போனான்? போனது வீட்டிலிருந்தல்ல என்றால், இருந்ததும் வீட்டிலல்ல என்று அவன் சொல்லக்கூடும். என்றால், இத்தனை பெரிய பூக்கோட்ட ஹௌஸில் வசித்தது மூன்றாவது நபர் மட்டுமா? அம்மாவுக்கும் ராஜீவனுக்கும் இடையில்…
“நானா இருந்தது அதை ஒரு காலத்துல செய்ய வேண்டியது. தாய்ப்பால் மறக்காத என்னோட உண்ணிக்காக நான் கோழையானேன். சின்ன வயசிலயே அவன் புத்திசாலி. தைரியம் வர்றதுக்குத்தான் இவ்வளவு காலம் ஆயிருச்சு.”
அம்மா தன்னிடம் நெருங்கி வருவதாக சசிக்குத் தெரியும்போதே அவள் சேலையினுடைய கிழிசலைத் தைக்கத் தொடங்கி, வார்த்தைகளின் இடைவெளிகளுக்குள் புகுந்து சென்று, மனதின் அடியாழத்தில் மறைந்து விடுகிறாள். அம்மா, அம்மா,… என்னதான் இதுவென்று புரியவில்லையே உன் மாயம். பாவி, நீ இப்படித்தான் ராஜீவனையும் கதறவிட்டாயோ? உங்களுக் கிடையே மூன்றாவது நபராக இருந்த தனிமை உன்னுடையதுதானா? அதை ராஜிவனில் சுமத்தியது நீயா? பாவி, துஷ்டி! உன் மகனை அறைக்குள்ளே பூட்டி வைத்தாய். அந்தக் குழந்தை வானத்தையே அதற்குள் கொண்டு வந்து, தான் ஒருத்தனாக அதனோடு விளையாடிக் கொண்டிருந்ததே…
“அம்மா…”
“என்ன மகனே?”
அவள் நிமிராமல், தனது செயலை நிறுத்தாமல் கேட்கிறாள்.
“எனக்கு ராஜீவனோட ரூமைப் பாக்கணும்.”
இப்போது நிமிர்கிறாள். “அதைத் தெறந்தே கொஞ்ச காலமாயாச்சு குட்டா. எனக்கு அங்க போகவே முடியறதில்ல.” அம்மா கைச் செயலை நிறுத்திவிட்டு எழுந்து செல்கிறாள். ஏதோ பாத்திரங்களை நகர்த்துவதும் பெட்டியைத் திறப்பதுமான சப்தங்கள். தொடரும் காலடி ஓசைகள். அவனிடம் நெருங்கி, வலது கை விரல்கள் சாவியை நீட்டுகின்றன. அந்த சாவியில் மெலிதான நடுக்கம். ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்திருந்தால் அந்த நடுக்கத்தின் பின்னுள்ள முகத்தை அவளது முகத்தில் கண்டிருக்கலாம். ஓடியோடிச் சென்று அவள் மறைத்துவைக்கிற முகத்தை. சசி அதை விரும்பவில்லை. தலையைக் குனிந்தபடியே அவன் சாவியைப் பெற்றுக்கொண்டு விலகுகிறான்.
ராஜீவனுடைய அறையில் கதவு திறந்ததுமே புழுக்கத்துடனான நாற்றம். ஜன்னலைத் திறந்தே வைத்திருக்கிறது. மழை கொண்டு இற்றுவிட்டதில் சிதைவுற்றிருக்கின்றன அவை. சுவர்களில் ஒட்டடைகள் தொங்கியாடுகின்றன. தரையிலும் பொருட்கள் மீதும் கூடுதலாக தூசு படிந்திருக்கிறது. அதோடு பல்லி முட்டையோடுகள், எலிப் புழுக்கைகள், பறவை எச்சங்கள், சருகுகள், கூளங்கள். கரப்பான்பூச்சிகளும் மீசை நீட்டி அலைகின்றன. பீரோவில் எலியோ, ஏதோ கடிக்கிற ஒலிக் குறிப்பு விட்டு விட்டு எழுகிறது.
சசி மேஜையிடம் செல்கிறான். அதன் மீது பொருட்கள் ஏதுமில்லை. ராஜீவன் நோட்டுகளை வைக்கிற, கீழேயுள்ள ட்ராயர் பூட்டப்பட்டிருக்கிறது. பூட்டப்படாத மேல் ட்ராயரிலிருந்து சாவியெடுத்து கீழ் ட்ராயரைத் திறக்கிறான். உள்ளே சில பழைய சஞ்சிகைகள், புத்தகங்களுடன் ரெக்கார்ட் நோட்டுகள் காணப்படுகின்றன. மேலுள்ளதை எடுக்கிறான். மூன்று வருடத்திற்கு முந்தைய தேதிகளுடன் எழுதப்பட்டதாயிருக்கிறது அது. ஒவ்வொரு தேதிக்கும் சிலதில் குறுகியதும், சிலதில் நீண்டதுமான இடைவெளி. எழுதப்பட்டிருப்பவை ராஜீவனுடைய மனாவஸ்தைகளும் தத்துவார்த்த சிந்தனைகளும். சசி கடைசியாக எழுதப்பட்டிருக்கும் பக்கத்தைக் காணப் புரட்டுகிறான். ராஜீவன் வீட்டிலிருந்து வெளியேறியதாக சொல்லப்பட்டதற்கு பல மாதங்கள் முந்தைய தேதிதான் கடைசியாக உள்ளது. என்றால் அவன் வீட்டை விட்டுச் செல்லும்போதும் குறிப்புகள் எதையும் எழுதி வைக்காமல்தான்…
எழுதப்பட்ட கடைசிப் பக்கத்தில் இப்படி இருந்தது:
ராஜீவன்
ஜீவன்
வன்
ன்
.
புள்ளிக்குக் கீழே நீண்ட வெற்றிடம்.
சசி வெகு நேரம் அந்தப் பக்கத்தையே வெறித்துக்கொண்டிருக்கிறான். ராஜீவன் ஒவ்வொரு எழுத்தாக இழந்து, ன் என ஓர் எழுத்தாகி, பின்பு ஒரு புள்ளியாகி, இறுதியில் சூன்யமாகிறான் அல்லது சூன்யத்தில் கலந்துவிடுகிறான்.
நெஞ்சைக் கவ்வும் துக்கத்தோடு சசி நோட்டை மூடி கீழ் ட்ராயரிலேயே வைத்து அதைப் பூட்டிவிட்டு சாவியை அது முன்பிருந்தபடி மேலுள்ள ட்ராயரில் வைக்கிறான். ஆயாசத்தோடு திறந்த ஜன்னலைப் பார்க்கையில், ஜன்னலின் நீள் நிலைச்சட்டங்களுக்குள், குறுக்குக் கம்பிகளால் துண்டு போடப்பட்டிருக்கிறது வானம். ஆதியந்தமற்ற சூன்யத்தை அவன் காண் கிறான். அதை உற்று நோக்கும்போதே அதனுள் ஒரு முகம் தனக்குத் தெரிய இருப்பதையும். அது என்றென்றும் இந்த அறையைப் பார்த்தபடியே இருக்கும் என்று அவனுக்குத் தோன்றுகிறது.
– கணையாழி, ஐனவரி 2002
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |