ஏழையர்குச் செய்வது இறைவர்க்காகும்!
(கதைப் பாடல்)

தொப்பை வயிறு பருத்தவர்
தொந்தி சரிய நடப்பவர்
தூக்குச் சட்டி ரெண்டினை
தூக்கிப் போனார் ஆலயம்.
ஆலயத்து மேடையில்
அமர்ந்திருந்த மனிதரோ
ஆண்டவனின் பெருமையைச்
சொற்பொ ழிவா யாற்றினார்!
பேருரையை ஆற்றியே
பெரிய மனிதர் முடித்ததும்
பருத்த மனிதர் சட்டியைப்
பணிந்து வைத்தார் பாங்குடன்!
‘என்ன உள்ளே வைத்துள்ளீர்?!’
என்று அவரும் கேட்டிட
‘வண்ண வண்ண இனிப்புகள்
வாங்கி வந்தேன்!’ என்றதும்
உண்ணும் உனது இனிப்புகள்
உள்ளே நுழைந்து போனதும்
என்ன அதற்குப் பேரென
எடுத்து ரைக்க வேண்டுமோ?!
‘என்னுரையைப் போற்றிநீர்
எதுகொடுத்த போதிலும்
பொன்னு ரைக்கெ துவுமே
பொருத்தமில்லை!’ உணர்ந்துகொள்!!
நன்றி காட்ட விரும்பினால்,
நல்லு ரையைப் போற்றினால்
ஏழைபாளை பசியினை
இரை கொடுத்துத் தீர்த்திடும்!
மக்களுக்குச் செய்வதே
மகேசனுக்குச் செய்வதாம்!
மற்றுமுள்ள உதவிகள்
மகிமை பெறுவதில்லையே?!
என்று சொல்ல தொப்பையார்
ஏற்றுக் கொண்டு திரும்பினார்
அன்று முதற்கொண்டவர்
ஏழை யர்க்கே உதவினார்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |