ஏமாற்றம்!




“நீங்கள் நல்லவராக இருக்கலாம். கடுமையாக ஓய்வின்றி உழைத்து சிக்கனமாக செலவழித்து முன்னேறி வீடு, சொத்துக்கள், பணம் என சேமிக்கவும் செய்யலாம். படிப்பவர்களாக இருந்தால் முதல் மதிப்பெண் கூட வாங்கலாம். இப்படிப்பட்ட உங்களுக்கு பிறரைப்பற்றி சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. சிந்திக்க நேரமும் இல்லை. ஆனால் படிக்காமல், உழைக்காமல், எந்த முயற்ச்சியும் செய்யாமல் சூழ்ச்சியுடன் சோம்பேரியாக இருப்பவர்கள் உங்களை எப்படி ஏமாற்றுவது? என சிந்தித்துக்கொண்டு தான் இருப்பார்கள்” என ராமசாமி சொன்ன போது கிராமத்தில் வாழும் பெரியசாமியும், அவரது குடும்பத்தினரும் விது, விது என விபரமின்றி புரியாமல் விழித்தனர்.

“இப்படியெல்லாம் ஒலகத்துல மனசங்க இருப்பாங்களா என்ன?” அப்பாவியாய் கேட்டார் பெரியசாமி.
“அவர்கள் வெளியில் மட்டுமில்லாமல் உறவிலும் இருப்பார்கள். உங்களுடைய குழந்தைகளிடம் நன்றாகப்பேசி ஏமாற்றி பெண் எடுக்க, கொடுக்க அதனால் உழைக்காமலேயே சொத்துடையவர்களாக ஆகி விட கங்கணம் கட்டிக்கொண்டிருப்பார்கள். பெண் கொடுக்க சம்மதம் என முகஸ்துதியால் காட்டினாலே போதும், பெண்ணின் விருப்பத்தைக்கூட கேட்காமல் மோதிரம் போட்டு சம்மந்தம் முடிந்து விட்டதாக கூறி, திருமணத்தை நடத்தி உங்களுக்கு சம அந்தஸ்துக்கு வந்து விட்டதாக ஊரில் தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்” என அதிகம் படித்து பட்டணத்தில் வாழும் உறவினர் ராமசாமி தனது அனுபவத்தினடிப்படையில் பேசியது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.
“உழைத்து சேமிப்பதோடு அதை ஆண்டு அனுபவிக்கவும் பழகுங்கள். சும்மா இருப்பவர்கள் ஊர் சுற்றிகளாக, அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அறிவாளியாக பேசும் போது, நீங்கள் உழைத்து சேர்த்த சொத்துக்களை குறுக்கு வழியில் அடைந்து அனுபவிக்க முயலும் போது, நீங்கள் மிகவும் நேர்மையானவர்களாக, உழைக்க மட்டும் தெரிந்து விட்டு அவர்களது கண்களுக்கு முட்டாளாகத்தெரிவீர்கள். கொஞ்சம் சூழ்ச்சியும் பழகுங்கள்” என்றார்.
“என்னடாது…? இத்தன காலங்கழிச்சு எழுபது வயசுல என்னப்போயி சூழ்ச்சி பழகச்சொல்லறே….? உனக்கு புத்தி கித்தி மழுங்கிப்போச்சா…?” என ராமசாமியைப்பார்த்து அண்ணன் முறையான பெரியசாமி கேட்டார்.
“பிறரைக்கெடுக்க, ஏமாற்ற சூழ்ச்சி பழகச்சொல்லலை. சூழ்ச்சியாளர்களிடமிருந்து உங்களை, உங்களோட சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள பழகுங்கள் என்கிறேன்” என்றார்.
“ஒரு நபர் பணப்பசையுள்ள பத்து சொந்தக்காரர்கள் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதும், சிறு, சிறு உதவிகள் அவர்களுக்கு செய்து நற்பெயர் வாங்கி விட்டு, ஒரு வீட்டுக்கு பத்து லட்சம் என கைமாற்றலாக வட்டியில்லாமல் வாங்கி, அந்தப்பணத்தில் ஊரடிவாரத்தில் தோட்டம் பத்து ஏக்கர் மகன் பெயரில் வாங்கி, வீடு கட்டி, வாகனம் எடுத்து, தொழில் துவங்கி, மகனுக்கு வசதியான சொத்துள்ள இடத்தில் திருமணத்தை செய்து வைத்து விட்டு, வாங்கிய பணத்தை உறவுகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றி, தலைமறைவாக வெளியூரான தாளவாடிக்கு சென்று குத்தகை தோட்டத்தில் சாதாரண வேலையாளாக வேசம் போட்டார்.”
“அப்படியா? அடப்பாவி…”
“கொடுத்தவர்கள் மகனிடம் வந்து கேட்க, மகன் தனக்கு எதுவும் தெரியாது என கையை விரிக்க, ஏமாந்தவர்கள் சாபம் விட்டு விட்டு வெறுங்கையோடு சென்றனர். முப்பது வருடங்களுக்கு பின் மகனுக்கு மாமியார் சொத்து மதிப்பு நூறு கோடி. இவர் பத்து குடும்பத்தை ஏமாற்றி கைமாற்றல் வாங்கிய பணத்தால் வாங்கிய சொத்து மதிப்பு முப்பது கோடி. அவரது மகனின் மகள் பேத்திக்கு மிகப்பெரிய இடத்தில், அரசியல் பெரும்புள்ளி வீட்டிலிருந்து சம்மந்தம் வருவதாக பெருமை பேசுகிறார்.”
“இப்படி ஏமாத்தி சொத்து சேத்து, பெரிய மனுசத்தனம் பண்ணறது பாவமில்லியா?”
பெரியசாமி அதிர்ச்சியுடன் கேட்டார்.
“அவர் உறவுகளை ஏமாற்றியது இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. கடவுள் ஏன் அவரை, அவரது குடும்பத்தினரை இன்னும் தண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்? எனவும் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார் ராமசாமி.
“கடவுள் எங்களுக்கு உம்பட ரூபத்துல வந்து ஏமாத்தறவங்களப்பத்தி சொல்லிப் போட்டாரு. இன்னைக்குத்தான் பழனிச்சாமி மவன் குப்புசாமிக்கு என்ற காடு வித்த பணத்த பத்து லட்சத்தையும் கைமாத்தலா குடுக்கலாம்னு இருந்தேன். நேத்தைக்குத்தா வந்து கெஞ்சற மாதர எங்கிட்ட கேட்டுப்போட்டு போனான். கடவுள் மனசங்க மூலமா வந்து வழி காட்டுவார்னு கேள்விப்பட்டிருக்கறேன். அதை இன்னைக்கு உன்ற மூலமா பார்த்துட்டேன். இன்னைக்கே இருக்கற பணத்த பேங்க்ல கொண்டு போய் போட்டுட்டு வந்திடறேன்” என கூறியவாறு ராமசாமியைப்பார்த்து கைகூப்பி வணங்கினார் பெரியசாமி.