ஏன்?
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ராஜா, இன்னைக்கு உன் ரோஜா வரலையாடா ஐயா?”

சைகிள் ‘ஸ்டாண்ட் அருகே நின்ற மூவரும் நாராம்பு நாதனைக் கண்டதும், ஏககாலத்தில் மேற்கண்டவாறு கேட்டார்கள். கேட்டார்களாவது! கூவினார்கள். அவர்கள் நின்ற நிலை, அவர்களது தொனி, முகங்களிலே பிரதிபலித்த ஏளன பாவம் எல்லாமாகச் சேர்ந்து நாராம்புநாதனுக்கு எரிச்சலூட்டின. வேறுயாராவது அங்கு நின்று, அப்படி அவள் வரவில்லை என்ற சேதியை, சுபாவமாக வெளியிட்டு எங்கே என வினவியிருந்தால், ‘ஆ! அவள் வரவில்லையா? ஏன்?’ என அலறியிருப்பான். ஆனால் அவர்கள் தினமும் அவன் அவளுடனும், அவள் தம்பியுடனும் வரும்வரை காத்திருந்து, வந்ததும் அவர்களைப் பார்த்துப் பல் இளிப்பது, அர்ததம் நிறைந்த பார்வை பரிமாறிக்கொள்வது கேலிச்சொல் உதிர்ப்பது என்று ஏதாவது என்று ஏதாவது குரங்குச் சேஷ்டைகள் செய்துகொண்டேயிருப்பார்கள். அவனுக்குக் கோபம் வரும். ஆனால் உடன் இருந்த வேணு வனக்குமாரசாமி – அவள் தம்பி – அவனைத் தள்ளிக் கொண்டு போய்விடுவான். போய், ‘காவாலிப் பயல்கள்! அவங்களோடு வீண் விவகாரம் எதுக்கு? எதையாவது சொல்லிவிட்டுப் போறாங்க! கவனியாததுபோலப் போய் விட்டால் குலைத்துவிட்டுக் கொஞ்ச நாளிலே ஓஞ்சு போவாங்க’ எனச் சமாதானம் செய்வான்.
‘இவனுகளா! என்னைக்காவது அவங்க பல் முப்பத்திரண்டையும் உதிர்த்து கையிலே கொடுத்தாத்தான் அவங்க ஓய்வாங்க.’ என்பான் நாராம்பு.
துரோபதை வஸ்திராபஹரணத்தின்போதுகூட பொறுமையை உபயோகித்தாராமே தருமர். அவரைப் போல தன்னையும் தமக்கையையும் அவமானத்திற்காளாக் குவதையும் பொருட்படுத்தாது சமாதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிவந்தான் தம்பி வேணு. அவன் வார்த்தையை மீறி எதுவும் செய்யமுடியவில்லை நாராம்பு. மேலும் அவள்- குழல்வாய் மொழிகூட இருந்தாள். அவளையும் வைத்துக்கொண்டு கலாட்டா செய்யப்போக கலவரத்தில் அவளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடக்கூடாதே என அவன் பயந்ததும் நேரடி நடவடிக்கையிலிருந்து அவன் விலகிப் போய்க்கொண்டிருந்ததற்கு மற்றொரு காரணம்; ஆனால் இன்று தடுக்க வேணுவில்லை. தயங்கக் காரணமான குழல்வாய்மொழி இல்லை. வகுப்புகள் ஆரம்பமாகி விட்டதால் மைதானத்திலோ, சுற்றுப் புறத்திலோ, யாரும் தட்டுப்படவில்லை. ‘மணியடித்து கிளாஸ் ஆரம்பிச்ச பிறகும் கூடவா இந்த அக்காத்திப் பசங்க எங்களுக்காக இங்கே காத்துக் கொண்டிருக்காங்கோ!’ என எண்ணினான். பலநாள் கோபமும் ஒன்று திரண்டு விசுவரூப மெடுத்தது. சைகிளை ‘ஸ்டாண்’டில் விட்டுப் பூட்டி விட்டு, ‘காரிய’ரிலிருந்த புத்தகங்களை அவிழ்த்து எடுக்கும் போதே ‘ஏண்டா, ஐயா மகனுகளே! அவளைப் பற்றி உங்களுக்கு என்னடா அவ்வளவு அக்கரை!’ என்றான்.
‘எங்களுக்கு எதற்கு அக்கரை? கொடுக்குப் பிடித்துக் கொண்டு அலையும் உனக்குத்தான் அக்கரை இருக்கும்!’ என்றான் மும்மூர்த்திகளில் ஒருவன். மற்ற இருவரும் சிரித்தார்கள்.
நாராம்புநாதனின் கோபம் அதிகமாயிற்று. ‘வீணப் பயல்களா!’ எனச் சொல்லியபடி புத்தகம் கட்டும் தோல் வாரை ஓங்கினான்.
‘மிஸ்டர் நாராம்புநாதன்! என்ன கலாட்டா இது வகுப்பிற்குப் போகவில்லை? என்னப்பா இது, இங்கே என்ன சச்சரவு’
பின்னால் பிரின்ஸ்பால் சப்தம் கேட்டது. திரும்பிய நாராம்பு ‘இவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். அதுதான்…’ என முணகினான்.
‘நீ இப்போ நடப்பது மட்டும் ரொம்ப ஒழுங்கோ. கலாசாலை மாணவர்களாய்க் கண்ணியமாய் நடந்து கொள்ளுங்கள். வகுப்புகளுக்குப் போங்கள்!’ என்றார் பிரின்ஸ்பால். மறுகணம் அனைவரும் அவ்விடம் விட்டு அகன்றனர்.
வகுப்புக்குப் போகும் வரை நாராம்புவின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நரம்பும் துடித்தது. அளவுகடந்த கோபமும், அவமானமும் அவனைப் பிடுங்கித்தின்றன. யாரார் எப்படிப் போனால் என்ன என்று இராமல் அனாவசியமாகப் பிறர் காரியங்களில் தலையிட்டு, அவர்களைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் போதே எல்லாம் தெரிந்ததாகப் பாவித்து, வீண் வதந்திகள் விளைவதற் கேதுவாக கலாட்டா செய்து திரியும் பேர்வழி களை என்னதான் செய்யக்கூடாது என எண்ணினான். வகுப்பை அடைந்ததும் முதன் முதலாக அவன் பார்வை வழக்கமாக வேணு உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு பாய்ந்தது. அங்கு அவன் இல்லை.
தன் இடத்தில் அமர்ந்த பிறகும் பாடம் கேட்பதில் கவனம் செல்லவில்லை நாராம்புவிற்கு. வேணு என் வரவில்லை? யாருக்காவது உடல் நலக் குறைவாக இருக்குமோ? அன்றி வரும் வழியில் ஆபத்தோ! எனப் பல விதமாக எண்ணி காரணம் காண முயன்றான். அப்படி சுலபத்தில் பிரச்னைகளுக்கு விடை காண முடிந்துவிட்டால் தான் மனிதன் மகத்தான காரியங்களைச் சாதித்துவிடலாமே! யோசித்த நாராம்புவிற்கு மூளைதான் குழம்பியது. மனது சஞ்சலமடைந்தது. அந்த பீரியட் முடிந்ததும் புறப்பட்டுப் போய்விட வேண்டும்; போய்ப்பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தான். வகுப்பிற்கு வராமலே போயிருந்திருக்கலாம், வந்து உட்கார்ந்ததும் உடனே கிளம்பிப் போவது நன்றாக இராது எனத் தயங்கினான்.
கடைசியாக அப்போதைய சங்கடங்களுக்கு மாற்றாக நினைவு ஏணியில் படிப்படியாக ஏறி பழைய கால இன்பச் சம்பவங்களுக்கு இடையே உலவி நிம்மதி காண முயன் றான்.
குழல்வாய் மொழி சள்ளங்கபடற்ற சிறுமியாகப் புள்ளிமான் போல் துள்ளி விளையாடித் திரிந்த சமயத்தில் அவர்கள் – அவள்து குடும்பத்தினர்-பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கி அதில் குடியேறினர். விரைவிலேயே அண்டை வீட்டுக்காரர்களுக்கிடையே அத்தியந்த நட்பு ஏற்பட்டது. ஒருவர் வீட்டிற்கு மற்றவர் வருவது போவது, குழந்தைகள் ஒன்றாக லூட்டி அடிப்பது,பள் ளிக்கூடம் போவது என்று இப்படித் தாராளமாகக் கலந்து பழகினர். வயதில் கொஞ்சம் மூத்தவள், படிப் விலும் ஒரு வகுப்பு முந்திப் படிக்கிறாள் என்ற சலுகை காரணமாகக் குழல்வாய் மொழி வேணுவையும் அவனையும் அதட்டி அட்டகாசம் செய்வாள். பள்ளிக்கூடம் போகும் பாதையில் தானே தலைமை வகித்து நடத்திச் செல்வாள். புட்டாப்போட்ட கருப்புப் பாவாடையும், சீட்டி பாடியும் அணிந்து, மல்லிகைப் பூக் கொத்து அலங்கரிக்கும் ஜடை யுடன் முன்னால் நடந்து அவள் ஓரமாவா, அப்படி இப்படி என்று எச்சரித்து நடந்ததையெல்லாம் எண்ணிப்பார்க்க நாராம்புவிற்கு இன்பமாக இருந்தது. இடையிடையே அவள் தாயும், அவன் அம்மாவும் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களும் பொழுது போக்கிற்காக வம்பளந்து கொண்டிருக்கையில் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துப் பார்த்தான்.
அவனைக் கண்டதும் அவள் தாய் சொல்வாள் ‘தம்பி மட்டும் நம்ம ஜாதியாய் இருந்து, வயசும் அவளைவிட அதிகமாய் இருந்தால் நம்ம தங்கச்சியை அவனுக்குக் கட்டிக்கொடுத்திடலாம்.’
‘வயசைப்பற்றிக்கூடப் பரவாயில்லை நாலு புளியங் கொட்டையை முழுங்கச் சொன்னாப் போச்சு, ஆனால் உயர்ந்த ஜாதிக்காரரான அவங்க அம்மா உன் வீட்டிலே பெண் கொள்ளச் சம்மதிக்கணுமே!’ என்பாள் ஒருத்தி.
‘இந்தக் காலத்திலே அதெல்லாம் யாரு கவனிக்கிரா,’ எனப் பதிலளிப்பாள் அவன் அம்மா. ஆனால், அவள் பதில் ஒப்புக்குச் சொல்லப்பட்டது; உண்மையானது அல்ல என்பது, பின்னால் அவள் வீட்டிற்கு வந்து ‘புளு, புளு’ப் பதிலிருந்து தெரியும்.
அந்தக் காலத்திலெல்லாம் ஜாதிப் பாகுபாடுகள் மீது அவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்!
அதன் பிறகு காலத்தோடு அவர்கள் வளர்ச்சி யடைந்து அவள் ‘பெரிய மனுஷி’யான பிறகு நடந்து கொண்ட விதங்கள்! அதை இப்பொழுது நினைத்த போது கூட எவ்வளவோ ஆனந்தமாயிருந்தது. பெரியவளான் பிறகு பள்ளிக்கூடம் போக வேண்டாம் என நிறுத்தி விட்டார்கள். வேணுவைத்தேடி அடிக்கடி அவள் வீட்டிற்குப் போகும்போது அவள் ஒடி ஒளிந்தது, தப்பித் தவறி எதிரிலே பட்டுவிட்டால் கன்னம் குப்பென்று சிவக்க, ஒரு மென்னகை சிதறிவிட்டு, மின்னல் போல் மறைவது எல்லாம் அவனுக்கு வாழ்வில் ‘சுதாரிப்பு’ ஊட்டிய சம்பவங்கள். ஆனால் அவள் அவனோடு பேசமாட்டாள். எங்கிருந்தோ நாணம் வந்து அவளைக் கவிழ்ந்து கொண்டு, முன்பிருந்த குழல்வாய் மொழிதானா அவள் எனச் சந்தேதிக்கச் செய்தது.
பிறகு அவள் திருமணம் வந்தது. எங்கிருந்தோ வந்த ஒருவன் அம்மி மிதித்து, அருந்ததி காட்டி அழைத்துப் போனான் அவளை. கணவன் வீடு போன ஒரு மாதத்திற் கெல்லாம் திரும்ப வந்துவிட்டாள். அவள் புருஷனை ஏதோ வியாதி கவர்ந்து சென்றுவிட்டதாம்.
பிறந்தகம் வந்த ஒருவருஷம் துயரத்திலேயே கழிந் தது நடந்தது நடந்த பிறகு வருந்தி என்ன பயன்! மீண் டும் படிக்கட்டும்; படிப்பிலாவது ஒரு ஆறுதல் ஏற்படும் என்றார்கள் அநேகர். சம்பிரதாய முறைக்கு விரோதமாக நடக்கலாமா என அஞ்சினர் அவளது தாயும் தந்தையும். கடைசியாக இணங்கினர். மீண்டும் அவள் பள்ளிக்கூடம் வந்தாள்.
இடைக்காலத்தில் அவனும்,வேணுவும் மேல் வகுப்பிற்குப் போய்விட்டார்கள் இருந்தும் மூவரும் முன்போல் ஒன்றாகவே கிளம்பி, கலாசாலை வரை வந்து, பின் அவள் அவளது வகுப்பிற்கும், அவர்கள் அவர்களது வகுப்பிற்குமாகப் பிரிந்து செல்வது வழக்கமாயிற்று. வழியில் முன்னளவு கலகலப்பு இன்றி, மோனச் சிந்தனையிலாழ்ந் தவளாய் வருவாள் குழல்வாய் மொழி. கலாசாலை முன் நின்று இவர்களைக் கேலி செய்யத் தொடங்கியவர்களைக் கண்டதும் தான் இனித் தனியாக வருவதாகச் சொன்னாள் பலமுறை. அப்பொழுதெல்லாம் வேணு அது சரியல்ல, கேலி செய்பவர்கள், அவளைப் பின் தொடர்ந்து வந்து அதி கமாகக் ‘கோட்டா’ பண்ணத் தொக்காகிவிடும் எனச் சொல்லி மறுத்துவிட்டான்.
இப்படியாக அவர்கள் வாழ்வின் பல சம்பவங்கள் தொடர்பற்ற நினைவுகளாகச் சிந்தையில் எழவே நாராம்பு நாதன் அவற்றைப் பற்றி யோசித்தபடியே நிகழ்காலத் திற்கு வந்தான்.
அன்று அவசர அலுவல் காரணமாக விடியற்கருக் கலிலேயே எழுந்து, சைகிளை எடுத்துக்கொண்டு பக்கத்து ருக்குப் போகவேண்டி வந்தது. நேரமாகும், அப்ப டியே நேராகக் கலாசாலைக்கு வந்துவிடலாம் என்று புத் தகங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். வேணுவிடம் அச்செய்தியைச் சொல்லும்படி தன் வீட்டில் அறிவித்து விட்டுக் கிளம்பினான் கலாசாலை வந்தபொழுதும் அவர் களைக்காணோம். காரணம்:
வகுப்பு முடிந்ததற் கறிகுறியாக மணியோசை ஒலித்து ஓய்ந்தது. புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளி யேறி, சைகிளில் வீடு நோக்கி விரைந்தான்.
தெரு முனையை அடைந்ததுமே அவள் வீட்டிற்கு முன்னால் மனிதனது அந்திம யாத்திரைக்கு வேண்டிய உப கரணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான் அவ்வீட்டுத் திண்ணையிலும், அவன் வீட்டுதிண்ணையிலும் சிலர் குழுமியிருந்தார்கள். யார் இறந்துவிட்டது? சாவு திடீரென அங்கு யார்மீது கவிந்தது? வேகமாக வீட்டை நெருங்கியபொழுது அவள் வீட்டிலிருந்து எழுந்த ஒப்பாரி ஓலம் கேட்டது. திண்ணைமீது விம்மும் குரலும், வீங்கிச் சிவந்து, நீர்சிந்தும் கண்களுமாக அமர்ந்திருந்தான் வேணு. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் வீட்டில் விசாரிக் கலாமென்று அவசரமாக உள்ளே போனான். அவனது அம்மா இல்லை பக்கத்து வீட்டிற்குப் பிலாக்கணம் பாடப் போயிருந்தாள். வேலைக்காரச் சிறுமியை விசாரித்ததில் பக்கத்து வீட்டுச் சின்னம்மா செத்துப்போனதாகத் தெரி வித்தாள். ‘அவனுக்கு ஒரே திகைப்பாகப் போய்விட்டது. அவசர அவசரமாகச் சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டிற்குப் போனான்.
வேணுவிடம் போய் என்ன என்று விசாரித்தான்; அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் ‘ஓ’வென அலறினான்.
உள்ளே போனதும் பட்டாசாலையில் குளிப்பாட்டி கோடியுடுத்தி குழல்வாய்மொழியைக் கிடத்தி இருந்தார் கள். செந்தாமரை போன்ற எழில் வீசும் அவள் வதனத் திலே நீலம் புரையோடியிருந்தது போல் தெரிந்தது. மற் றப்படி கண்ணுறங்குபவள் போல்தான் காணப்பட்டாள். அருகே நின்ற ஒருவரிடம் அவளுக்கு என்ன செய்தது என வினவினான்.
‘வாய்வுக்குத்து’ எனச் சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு வெளியேறினார் அவர்.
‘எல்லாம் தயாராகிவிட்டது, எடுத்து வாருங்கள். என்ற சப்தம் எழுந்தது வெளியிலிருந்து.
எதையும் கவனியாது தனது கடமையையே கருத்தாகக் கொண்டவன் போல் ரெட்டைச் சங்கை நீட்டி முழக்கினான் ‘பண்டுவ’ முத்து. பெண்களின் பிலாக்கணம் எவ் வியது.
நேற்றுவரை குழல்வாய் மொழியாக நடமாடிக் கொண்டிருந்த சடலத்தை எடுத்துப்போய் பாடையில் பிணைத்து தூக்கி நடந்தார்கள். பிரேத ஊர்வலம் கிளம்பியது; நாராம்பு நாதனும் இயந்திர ரீதியில் கலந்தான். முந்தின நாள்வரை குத்துக்கல்போல் இருந்த அவளுக்கு ‘வாய்வுக்குத்தா?’ அவள் எப்படிச் செத்தாள்? இறந்தது ஏன்? என்ற பிரச்னைகள் எழுந்தன. விடைகாண முடியாமல் அவன் மயானம் நோக்கிக் கூட்டத்துடன் போய்க் கொண்டிருந்தான்.
விஷமருந்தித் தற்கொலை செய்து கொள்பவர்களைக் கூட வாய்வுக்குத்தினால் இறந்தார்கள் என்று சொல்லி, இரண்டு மூன்று முருங்கை இலைக்கொத்தை அடையாளமாகக் கசக்கிப் போட்டுவிட்டு, அவசர அவசரமாகக் கொண்டுபோய்த் தகனம் செய்துவிடுவார்கள் என்று எவ்வளவோ கதைகள் கேட்டிருக்கிறான் அவன். குழல்வாய்மொழியின் முகத்திலும் நீலநிறம் படிந்திருந் ததே, ஒருவேளை இவளும் விஷம் குடித்துத்தான்…
‘சே! இவள் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?’ என அச்சந்தேகத்தை ஒதுக்கித் தள்ளினான்.
மயானத்தை அடைந்ததும், வேணுவைத் தனியாக அழைத்துப்போய், ‘அக்காளுக்கு என்னடா செய்தது? நேற்று ராத்திரிக் கூட ரொம்ப நேரம் படித்துக் கொண்டி ருந்த மாதிரி தெரிந்ததே ! விளக்கு வெகுநேரம் எரிந்ததே! இன்று காலையில் திடீரென என்ன விபத்து நேர்ந்து விட்டது?’ என விசாரித்தான்.
அவ்வளவு நேரமும் ஒருவாறு சிரமத்துடன் அடங்கி யிருந்த வேணுவின் அழுகை மீண்டும் பலமாயிற்று. ‘கேவிக் கேவி’ அழத் தொடங்கினான் அவன். ‘என்னடா விஷயும்? எனடா இப்படி அழுகிறாய்? அவள் செத்துப் போய்விட்டாள். இனி அழுது என்ன பிரயோஜனம்?’ என ஆற்ற முயன்ற நாராம்புவிற்கு, அழுகையின் ஊடே கிடைத்த பதில் ‘அவள் செத்ததற்கு இந்தப் பாவிதான் காரணம்’ என்ற வார்த்தைகள் தான்.
அந்தப் பதில் நாராம்புவைத் திகைக்க வைத்து விட் டது. குழல்வாய்மொழி சாக வேணுகாரணமா? வேணுவா விஷம் கொடுத்திருப்பான்? அவன் அவ்வளவு கொடியவனா? எதையுமே நம்ப முடியவில்லை அவனால். அந்த வார்த்தைகளைச் சொல்வதற்கே வேணு மிகவும் சிரமப்பட்டானாதலால், அவனை மேலும் தொந்திரவு செய்ய வேண்டாம், சௌகரியமாக விஷயத்தை விளக்கம் செய்து கொள்ளலாம் என விட்டு விட்டான்,
கலாசாலைக்கு இரண்டு நாள் லீவு எழுதிப்போட்டு விட்டு, நண்பனுடனேயே இருந்தான் நாராம்பு வேணு சோகமே உருவாய், அதிகம் எதுவும் பேசாமல், கேட்ட கேள்விகளுக்கு அரை குறையாகப் பதில் சொல்லுவதும் வற்புறுத்தல்களுக்கு இணங்கி, ‘அணில் கொரிப்பதை’ப் போல கொஞ்சம் சாப்பிடுவதுமாக இருந்தான். அவன் மட்டுமென்ன? அவன் வீட்டிலுள்ளவர்களும் அப்படித் தானிருந்தனர்.நாராம்புவும் அவனது தாயும் தான் தங்கள் வீட்டிலிருந்து உணவு எடுத்துப் போவது, அனைவரையும் வற்புறுத்திச் சாப்பிடச் செய்வது, ஆறுதல் கூறுவது அனைத்தையும் கவனித்தனர். ‘வங்கிழடு எதுவுமா செத்துப் போச்சு எல்லோருக்கும் காகிதம் போட்டுத் தெரிவிக்க! இளஞ்சாவு; செய்தியைப் பராபரியாகக் கேட்டு வருகிறவர்கள் வரட்டும்’ என அக்கம்பக்கத்தவர் அபிப் பிராயம் கூறியதால் உறவினர் யாருக்கும் கடிதம் போட வில்லை. எனவே, துஷ்டி விசாரிக்க என அதிகப்பேர் வர வில்லை.
புரியாத மர்மமாக, அவனது இதயத்தில் அடிக்கடி எழுந்து அல்லலுறுத்தும் பிரச்னையாக இருந்த போதிலும், அந்தச் சாவிற்கும் வேணுவிற்கும் எப்படிச் சம்பந்தம் என்ற விஷயம் பற்றி பேச்சையே வேணுவிடம் நாராம்பு எடுக்கவில்லை.
மயானத்திலிருந்து திரும்பிய அன்று தன் தாயை விசாரித்துப்பார்த்தான். தான்தான் காரணம் என்று வேணு சொன்னதைக் கூட சாடைமாடையாகக் குறிப்பிட்டான்.
‘மூதிகளைப் போகச் சொல்லு. இவனும் எங்காவது போய்ச் செத்துத் தொலைவதுதானே!’ என்றாள் அவள். அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று கூறி அவசர காரியத்தைக் கவனிக்கப் போவது போல் போய்விட்டாள்.
அதனால் மர்மம் அதிகரித்ததே தவிர விவரம் புரியவில்லை.
இரண்டாவது நாள் மாலை நாராம்பு வேணுவை வெளியிலே எங்காவது போய் வரலாம் என அழைத்துப் போனான். போகும் வழியிலோ, அல்லது நதிக்கரையில் அமர்ந்ததுமோ எல்லா விவரங்களையும் பற்றிப் பேசித் தெரிந்து கொள்ளலாம் என்பது அவன் எண்ணம். சம்மதித்துக் கூடப் புறப்பட்டு வந்துவிட்டான் என்றாலும் வழி நெடுக மௌனமாகவே வந்தான் வேணு. அந்த சமாச்சாரம் பற்றிய பேச்சு எடுத்தால் உடனே அவன் அழுது விடுவான் என எச்சரிப்பது போலத்தோன்றியது அவனது முகபாவம். எனவே நாராம்பு பேச்சுத் துவக்க அஞ்சினான். நாளடைவில் தெரிகிறது, அல்லது அவனாகவே மனம் தேறித் தானாகச் சொல்லும்வரை காத்திருப்பது என முடிவுசெய்தான் ஆற்றங்கரையை அடைந்ததும் இரண்டு பர்லாங்கு தூரம் நடந்தார்கள். இன்னும் ஒரு பர்லாங் போனால் மயானம் வந்துவிடும் அந்த இடத்திற்குப் போனால் ஒரு வேளை நண்பனின் சோகம் அதிகரித்தாலும் அதிகரிக்கலாம் எனத் தயங்கினான் நாராம்பு. எனவே, அப்படியே அமர்ந்து விடலாம் என உட்கார்ந்தான். வேணுவும் மௌனமாக அமர்ந்தான்.
ஆற்றில் அந்த இடத்தில் மிகவும் ஆழமான மடு ஒன்று இருந்தது. ஆறு வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. இருந்தும் ஓடுவது தெரியாமலே தேங்கி நிற்பது போலத் தோற்றமளித்தது அந்த இடத்தில். நண்பர்கள் இருவரும் கருநீல நிற நீர்ப்பரப்பில், கரையோர நாணற் புதர்களில், எதிர்கரையில் தள்ளியிருந்த குன்றுகளில், கூட்டங் கூட்ட மாகப் பறந்து செல்லும் காகங்கள் மீது என மாறி மாறிக் கண் பதித்தவாறு மௌனமாக இருந்தார்கள். நாராம்பு விற்கு அப்படி இருப்பது வேதனையாக இருந்தது. பேசுவதானால் என்ன பேசுவதென்றும் புரியவில்லை. குழப்பமான நிலையில் மனது எவ்வளவோ நினைவுகளுக்கு நிலைக்கள னாய் இருந்தாலும் மேலுக்கு சாதாரணமாக அமர்ந்திருப்பவன் மாதிரி இருந்தான்.
‘இந்தக் கசத்தில் விழுந்து நானும் உயிரை விட்டுவிடலாமா என்றிருக்கு!’
திடீரென அவ்வித அபிப்பிராயம் வேணுவிட மிருந்து கிளம்பக் கேட்ட நாராம்பு திடுக்கிட்டுவிட்டான்.
‘உலகத்தில் பிறப்பும் இறப்பும் சகஜம். சாகிறவர் களுடன் அவர்களுக்காக ஒவ்வொருவரும் சாவதென்றால் என்ன ஆவது?’ என்றான்.
வேணு பதில் சொல்லவில்லை.
‘ஏண்டா உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? என் முன் மாதிரி என்னோடு கலகலப்பாகப் பேச மறுக்கிறாய்? என்னிடம் எதையோ மறைக்கப் பார்க்கிறாய்? காரணம் என்ன?’ என்று உருக்கம் கலந்த தொனியில் கேட்டான் நாராம்பு.
‘மறைக்கவில்லை. எப்படிச் சொல்வது என்றுதான் புரிய வில்லை நான் மடையன். அடியோடு அறிவைப் பறி கொடுத்து விட்டவன். அதனால் அனர்த்தம் விளைந்தது. அதை ஊருக்கெல்லாம் இன்னமும் தண்டோராப் போடச் சொல்கிறாயா?’ என்றான் வேணு. அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. மீண்டும் பழைய கதைதான். விம்மலும், விக்கலும் பேச்சுக்குத் தடையாய் முளைத்தன.
‘அழுகையை நிறுத்து, உனக்காகச் சொல்லக் கூடிய நிலை வந்தவுடன் சொல். அதுவரை நான் இனி இதைக் குறித்துக் கேட்டுத் தொந்திரவு செய்யவில்லை,’ எனச சொல்லிய நாராம்பு, புறப்படுவோமா?’ எனறான்.
இருவரும் எழுந்து வீட்டிற்குக் கிளம்பினார்கள். மறு படியும் இருவருக்கு மிடையே மௌனமே நிலவியது. இந்தத் தடவையும் வேணுதான் மௌனத்தைக் கலைத்தான். நாராம்பு நான் போனபிறகு நான் எதாவது குற்றம் செய்திருப்பதாக நினைத்தால் நீ என்னை மன்னித்து விடு’ என்றான்.
நாராம்புவிற்கு என்ன பதில் சொல்வது எனப் புரிய வில்லை. நண்பன் மீது இரக்கம் இல்லாமல் இல்லை. ஆனால் அவன் நடந்துகொள்ளும் முறை கோபமூட்டுவதாயிருக்தது.
“அசட்டுத்தனமாகப் பேசாதே. நாளையிலிருந்து காலேஜுக்குவா. வீட்டிற்குத்தான் யாரும் துஷடிக்கு வருவதில்லையே. இங்கேயே யிருந்தால் இதே நினைவாகத் தானிருக்கும். மித மிஞ்சிய சோகத்தில் விரக்தி விளைவது இயல்பு காலேஜுக்குப் போனால் எல்லாம் சரியாகி விடும்.’ என்றான்
வேணு ‘உம்’மென்றுதானிருந்தான். ‘என்ன நாளைக்கு வருகிறாயா?”
‘இல்லை. நான் வர இன்னும் இரண்டு நாட்களாகட்டும்,’ எனப் பதிலளித்தான் வேணு.
‘உன் பிரியம்,’ எனச் சொல்லிப் பிரிந்தான் நாராம்பு.
ஒருவருக்காக மற்றவர்கள் அனுதாபம் அறிவிப்பதும், துன்பம் துடைக்கத் துணை புரிவதும் ஓரளவிற்குத் தான் சாத்தியம். அவரவர் கவலைகளே அவரவருக்குப் பெரிதாக-அன்றாட வாழ்வில் மனிதனை அழுத்தும் சுமையாக -ஆக்க எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.
நாராம்புநாதன் மறுநாள் முதல் கலாசாலைக்குப் போகத் து வங்கி விட்டான். இப்பொழுதெல்லாம், குழல்வாய்மொழியின் சோக முடிவை அறிந்ததனால், வழக் கமாகக் கேலி செய்பவர்கள் அவனைக் கேலி செய்வதில்லை. பதிலாக அனைவரும் அவளது துரித முடிவிற்குக் காரணம் என்ன என்று அவனை விசாரித்தார்கள். அவனுக்கே தெரி யாதபோது மற்றவர்களுக்குப் பதில் சொல்வது எப்படி? ‘எனக்குத்தெரியாது,’ என்று எல்லோருக்கும் பதில் சொல்லிவந்தான். அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் புதிருக்கு விடை வேணுவிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கலாசாலைக்குப் போகும்போது. காலையில் அல்லது மத்தியானம் வேணுவைப் பார்த்து விட்டுப் போவான். மாலையில் வீடு திரும்பியதும் வேணு வின் வீட்டிற்குப் போய் அவனுடன் பொழுதைக் கழிப் பான். ஆனால் நோக்கம் ஈடேற வில்லை. வேணு சதா உம்மணா மூஞ்சியாகவே காட்சி தந்தான். வரவர மெலிந்து வந்தான். உள்ளம் தேறி தெளிவு ஏற்பட வகை யிருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு வாரம் கடந்தது. ஒரு நாள் மத்தியானம் வழக் கம்போல் நாராம்புநாதன் பக்கத்து வீட்டிற்குப் போனான். உள்ளே வேணுவின் தந்தை குரல் ஒலித்தது, ‘வேணு சாப்பிட்டாச்சா?’
‘அவன் சாப்பிடுவானோ எக்கேடு கெடுவானோ? எனக்கு அதா கவலை ?’
வேணுவின் தாயார்தான் அப்படிப் பதிலளித்தாள்.
சந்தர்ப்பம் சரியில்லை; சாயங்காலம் வந்து பார்த்துக் கொள்ளலாம் எனத் திரும்பிவிட்டான் நாராம்பு. மகளைப் பறி கொடுத்த துயரம் தாயை அவ்வாறு பதில் சொல்லத் தூண்டியதா? ? அல்லது மகன்மீது கோபமா? பெற்ற தாயே கரித்துக் கொட்டும்படி என்ன குற்றம் செய்து விட்டான் அவன்? எல்லாம் மிகவும் விசித்திரமாக இருக்கிறதே என என்னினான்.
மாலையில் திரும்பியதும், உடனே வேணுவைப் பார்க் கக் கிளம்பினான். வீட்டிலே அவன் இல்லை.
‘அவன் அயலூர் போயிருக்கிறான். இந்தப் புத்தகங் களை உன்னிடம் கொடுக்கச் சொன்னான்’ என அழகாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த நாலைந்து புத்தகங்கள் கொண்ட ஒரு கட்டைக் கொடுத்தாள்.
புத்தகக் கட்டை வாங்காமல் தயங்கி நின்ற நாராம்பு, ‘அவனாகத்தான் போகிறேன் என்று போனானா? இல்லை நீங்கள் அனுப்பினீர்களா? எப்பொழுது திரும்ப வருவான்?’ என விசாரித்தான்.
‘ஏன் இப்படிக் கேட்கிறாய் நான்தான் அனுப்பினேன் வர ஒரு வாரமாகும்,’ என்றாள் அவள்.
அதற்குமேல் எதுவும் கேட்க முடியவில்லை. அவள் பதில் சொன்னமாதிரி நம்பிக்கை யூட்டுவதாயிருந்தது. ஆனால் ஒரு வாரத்தில் திரும்புபவன் இவ்வளவு அக்கரை யாக எதற்காகத் தன்னிடம் வாங்கிய புத்தகங்களைக்கட்டிக் கொடுத்துவிட்டுப் போகவேண்டும்? புத்தகக் கட்டை வாங்கிக்கொண்டு வேகமாக வீடு திரும்பினான். போனவுடன் கட்டை அவிழ்த்துப் புத்தகங்களைப் புரட்டினான். ஒரு புத்தகத்திற்குள் ஒரு கவரில் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுத்துப் படித்தான்.
இனிய நண்ப,
விடைபெற்றுக் கொள்கிறேன்.
ஒருவாரத்திற்கு முன் கேட்டுக்கொண்டதையே மீண்டும் வேண்டிக் கொள்கிறேன். உன் விஷயத்தில் எனக்குத் தெரியாமலே நான் ஏதாவது தீங்கு இழைத்திருந்தால் அதை மன்னித்துவிடு.
எவ்வளவோ முறை கேட்டாய். சொல்ல முடியாத தால் சொல்லவில்லை. இப்பொழுது சொல்லியிருக்கிறேன். படித்து முடித்ததும் கிழித்து எறிந்துவிடு.
இப்பொழுது மகத்தான தவறாகத் தோன்றுகிறது. நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும் என்று படுகிறது. ஆனால் உணர்ச்சிச் சூறைவந்து மோதும் போது சாவதானமாகச்சிந்தித்து முடிவுகட்ட அவகாசமேது? ஒரு முறை தவறிவிட்டால் பின்பு கவலையே இல்லாமல் திரும் பத் திரும்ப தவறில் நீந்தத்துணிந்துவிட முடிகிறது-யார் கண்ணிலாவது அகப்படும் வரை.
எங்கள் விஷயத்திலும் அப்படித்தான் நேர்ந்தது. முத லில் எப்படி வழுக்கி விழ நேர்ந்தது என்பதை எல்லாம் நான் வர்ணித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. முடிவைக் கூறுகிறேன் அக்காள் கதை நீ அறிந்தது தான். வாழ்வின் இன்பத்தை ருசிக்கத் தொடங்கிய போதே தட்டிப் பறிக்கப்பட்டவள். உணர்ச்சி வசப்பட்டு எப்படியோ என்னைத் தவறுக்குத் தூண்டினாள். விளைவுகளைச் சிந்தித்து பாதுகாத்துக் கொள்ளத் தவறி வீழ்ந்தேன் நானும். அவ ளது மரணத்திற்கு முன்தினம் வெகு நேரம் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததாகக் கூறினாயே! அந்த விளக்குத்தான் எங்கள் செயலை அம்பலமாக்க உதவியது. இன்பபோதையிலே எங்களை மறந்து விளக்கை அணைக்காமலே உறங்கிவிட்டோம். வெகுநேரம் விளக்கு எரிவதை தற்செயலாக வெளியே வந்த அன்னை பார்த்தது, வெகு நேரமாகிவிட்டது, படித்தது போதும், படுத்துக்கொள்ளச் சொல்லலாம் என எண்ணி மாடிக்கு வந்திருக்கவேண்டும். வந்தவள் எங்கள் கோலத்தைக் கண்டு எப்படி இடிந்து போயிருப்பாள் என்பதை இப் பொழுது நினைத்தாலும் அதளபாதாளத்தில் அமிழ்வது போலிருக்கிறது. விளக்கை அணைத்துவிட்டு அவள் போயி ருக்கவேண்டும். எங்களை எழுப்பவில்லை. அவள் அவ் வாறு வந்து போயிருக்கிறாள் என்பதே மறு நாள் காலை யில்தான் தெரியும். அதிகாலையில் எழுந்தேன். அக்காள் முன்பே கீழே போயிருக்கக்கண்டேன். மாடிப்படி இறங்கு கையில் அக்காளை அன்னை வைது கொண்டிருப்பது தெரிந்தது. ‘மூதி! உன்னைக் குளத்திலே கிணத்திலே தள்ளிக் கொல்லலாமா என்றிருக்கு. நாளைக்கு வாயிலே வயித் துலே வந்தால் நாலுபேர் என்னைப் பார்த்துச் சிரிக்கவா? எங்க வம்சத்திலே, வழியிலே இல்லாம எனக்குன்னு எங் கிருந்து வந்து சேர்ந்தயோ?’ மெதுவாக நழுவி வெளியே போய் விட்டேன். வழக்கத்திற்கு விரோதமாக வெகு நேரம் கழித்துத் திரும்பியபொழுது அக்காள் வாந்திஎடுத்த வண்ணம் ஏதோநோயால் துடிப்பதுபோல் துடித்துக் கொண்டிருந்தாள். அப்பா எங்கோ போயிருந்தவர் அப் பொழுது தான் வந்தார். டாக்டர் யாரையாவது கூட்டி வரட்டுமா என்றார். ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்க வரதுக்குள்ளே அவ போயிடுவா. பிறகு விபரீதங் களெல்லாம் வேறே விளையப்போகுது. விஷம் குடிச்சிச் சாகனும்னு விதி இருக்கிறபோது என்ன செய்ய முடி யும். செத்துத் தொலையட்டும்,’ என்றாள். சம்பிர தாயப் பண்புகள் அன்னையின் இருதயத்தைக் கூடக் கல்லாக்கக் கூடியது என்பதை அன்று தான் உணர்ந்தேன். அதிகம் வளர்த்த விரும்பவில்லை. யாரைக் குறை கூறுவது என்ப தும் தெரியவில்லை. வீட்டில் இருப்பது நரக வேதனையாகத் தான் முடியும். வெளியேறுகிறேன். தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற நினைவு மீண்டும் தலைதூக்கா திருக்குமானால் மீண்டும் எப்பவாவது சந்திக்கலாம்.
அன்பன்
வேணு.
கடிதத்தைப் படித்து முடிந்ததும் புதிர்களாக அலைக் கழித்த பிரச்னைகளுக்கு விடைகிடைத்தது. ஆனால் இளம் உள்ளங்களை உணர்ச்சி சூறையாகப் பற்றும் என்பதை உணர்ந்து அதற்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்படுத்த, சம்பிரதாயக் குட்டைகளில் ஊறிய மட்டைகள் ஏன் முன் வருவதில்லை என்பது புரியவில்லை.
– கள்ளக் கோழி கதைகள், முதற் பதிப்பு: ஜூன் 1949, எரிமலைப் பதிப்பகம், திருச்சி.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 6, 2025
பார்வையிட்டோர்: 1,155