கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2025
பார்வையிட்டோர்: 353 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பஸ் வருகிற வரத்தில், நிறுத்தத்தின் எந்த இடத்தில் அது நிற்கும் என்பதை ஊகிப்பதில்தான் வெற்றி தங்கியுள்ளது. இதை அநுமானித்து ஏறு தழுவுதல்போல் லாகவமாகத் தொற்றிக் கொள்வதுதான் கெட்டித்தனம் எந்த நெரிசலுக்கும் முன்னால் ஏறிவிடலாம். அன் றும், அந்த மத்தியான நேரத்து எதிர்பா ராக் கும்பலில் பாமன்கடைச் சந்தியில் இப் படித்தான் முதல் ஆளாக நான் ஏறினேன். 

முழு பஸ்ஸிலும் ஒரேயொரு இடந்தானிருந்தது காலியாக கடைசிக்கு முதல் வரிசையில், வாசலுக்கு நேரெதிர் இருக் கையில். அதில் உட்கார்ந்து ஐம்பது சதத் திற்கு ஒரு ரிக்கற்றை வாங்கிய பின்தான் இத்தனை நாட்களுக்குப் பிறகு – நான் திடீ ரென்று சிவதாசனைக் காண நேர்ந்தது. கொண்டக்டர்தான் சிவதாசன். 

“எப்பிடி?…” என்று நானும், “ஹலோ!” என்று அவனும்; வியப்பும் மகிழ்ச்சியுமாய்ப் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டதுடன் நிறுத்திக் கொண்டோம். எனக்குப் பின் னால் இடித்துத் தள்ளிக்கொண்டு ஏறிய கூட்டம் இந்தளவுக்குத்தான் எங்களை அநுமதித்தது. ‘எல்லோருக்கும் குடுத்து முடிச்சிட்டு வரட்டும்’ என்று பார்த்துக்கொண்டிருந்தேன். 

சிவா, பிசிறில்லாத உச்சரிப்புடன் அநாயாசமாகச் சிங்களம் பேசினான் ஆட்களை அதட்டி முன்னே துரத்தினான்; ரிக்கற் வாங்கச் சொன்னான்; கேள்விகள் கேட்டான்; கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தானும் பதில் சொன்னான். அதே வேகத்தில் அதே அநாயாசத்துடன் எனக்கு முன் ஸீற்றில் சாய்ந்து, வாசலைப் பார்த்து நின்றபடி அவன் இயங்கிக்கொண்டிருந்தான். இந்த நெருக்கல்களின் இடை யிடை என்னைப் பார்த்து பழைய நட்புரிமை கலந்த முறுவல்கள். ‘பொறு முடித்துவிட்டுப் பேச வருகிறேன்’ என்கிற கண்கள். 

ஆள், கொஞ்சம் மாறிப்போயிருந்தான். முன் வழுக்கை, இந்த இளம் வயதிலேயே விழுந்திருந்தது. அடர்த்தியாகத் தாடியும் மீசையும் வளர்த்திருந்த முகத்திற்கு, இந்த வழுக்கை கவர்ச்சி கூட்டியது. முன்னையிலும் உயரமாயும் மெலிவாயும் தெரிந்தான். சாதாரண ஷேட்டும் லோங்ஸ் சும். இடுப்பில் அகன்ற பட்டியில் தொங்கிய சில்லறைப் பை. கைகளில், ஓய்வின்றிச் சுழல்கின்ற மெஷின். அதட்டல்- வெருட்டல்களிலும் பார்க்க அன்பும் பகடியுமே அவன் பேச்சில் அதிகந் தொனிக்க, சிவா, சுமுகமான கொண்டக் டர்கள் என்கிற சிறுபான்மையைச் சேர்ந்தவனாகத் தன்னை இனங்காட்டினான். 

கண்டு எப்படியும் ஐந்து வருஷமாவது இருக்கும். கடைசியாக அவன் வேலையாகி வந்த புதிதில் இங்கு தான் எங்கோ சந்தித்திருந்தேன். ஊரவன், பாலியகால நண்பன். இருந்தும் அதன் பிறகு இன்றுதான் காண நேர்ந் திருக்கிறது. இப்படித்தான் வயிற்றுப்பாட்டிற்கான ஒட்டங் கள், ஊரையும் உறவுகளையும் எட்டிப்போக வைத்துவிடுகின்றன….

பாமன்கடையில் ஏறியவர்களுக்கு ரிக்கற் கொடுத்து முடிப்பதற்கிடையில், நெசவாலை நிறுத்தம் வந்துவிட்டது. இதிலும் நியாயமான சனம். கனத்த பிளாஸ்ரிக் கூடையொன்றைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு கடைசியாக ஏறிய ஒரு பெடியனைப் பார்த்து, 

”மெள்ள ஏறடா, கவனம்…” என்று கத்தியபடி, அவன் பின்னால் தானும் ஒரு கைக்குழந்தையுடன் தடுமாறி வந்த பெண்ணுக்கு என் இடத்தைக் கொடுக்க நேர்ந்தது. எழுந்து நின்றேன். அவர்கள் ஏறி முடியும்வரை நிதான மாகப் பார்த்துத்தான் மணியடித்தான், சிவா. நான் விட்ட ஸீற்றில் உட்கார்ந்தாள். குழந்தையை மடியிலிருத்தி, கூடை யினை வாங்கிக் காலடியில் வைத்து, பையனை இழுத்துத் இப்படி தனக்கும் மற்ற ஆளுக்கும் நடுவில் நிற்க வைத்து அந்தப் பெண் நிலை கொண்டதும் அவள் பக்கம் குனிந்து, ”கொஹேத?” என்றான், சிவா. 

அவளை இன்னொரு தடவை பார்த்தேன். பெடியனுக் குக்கூட நெற்றியில் திருநீறு தெரிந்தது. 

“அஸ்வாட்டுவட்ட கீயத?” 

“பணஹய்….” 

ஒன்றரை ரிக்கட் வாங்கிக்கொண்டாள். 

எல்லாவற்றையும்விட இப்போது இதைத்தான் – இதற்கான காரணத்தைத்தான் முதலில் கேட்கவேண்டும் போலிருந்தது. இதை உணர்ந்தவன்போல. ‘இன்னும் கொஞ்சம் பொறு’ என்கிற கண்களால் என்னைப் பார்த்து விட்டு முன்னே போனான் சிவா. 

எட, பிறகு அப்படித்தான் -நெசவாலை நிறுத்தத்தில் ஏறியவர்களைக் கவனித்து முடிப்பதற்கிடையில், திம்பிரிகஸ் யாய. நெருக்கியடித்துக்கொண்டு எங்கள் எதிர்பார்ப்பைத் தகர்க்கிற மாதிரி ஆட்கள் ஏறினார்கள். 

கசக்கிப் பிழிந்துவிட்டார்கள். அவனை. பஸ், ஜாவத்தை றோட்டில் திரும்பியபோது அருகில் போய் நின்றாவது பேசு வோமா என்ற எண்ணம் வந்தது. கூடவே, வேலையைக் குழப்புவது சரியில்லை என்றுமிருந்தது. மற்றப் புதினங்களைப் பேசாமல் விட்டாலும் இதைக் கேட்டுவிட வேண்டும். ஆனால், கேட்பது முடியும் என்றும் தோன்றவில்லை. 

கெப்பிட்டிப்பொ சந்தி தாண்டியபோது, அவன் திம்பிரிகஸ்யாய ஆட்களிற் பாதிப்பேருக்குத் தான் ரிக்கற் கொடுத்து முடித்திருந்தான். போதாக் குறைக்கு, இப்போது பஸ்ஸின் நடுவில் போய் நின்றுகொண்டிருந்தான். 

இனி எப்போதோ? காண்கிறபோது கேட்போம் என்று நெரிசலைப் பிளக்க ஆரம்பித்தேன் – ரொறிங்ரனில் இறங்கியாக வேண்டும். அதற்கிடையில் சைகையாலாவது சொல்லிக்கொள்ளவும் வேண்டும். 

சிவாவுக்கு, சின்ன வயதில் காது குத்திய ஓட்டை இருந்ததா என்கிற யோசனை வெக்கையும் வியர்வைப் பிசுக்குமாய்த் திணறிக்கொண்டிருக்கிற இந்த வேளையின் ஒரு கணத்தில் எனக்கு வந்தது. ஆனால், சரியாக ஞாபக மில்லை. 

– மல்லிகை, 1979.

– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *