ஏன் இடம் மாறினான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 181 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏன் இடம் மாறினான்? 

ஆனந்தனுக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்தது. இரண்டு நாட்களாகிறது. இன்னும் பன்னிரண்டு நாட்களுக்குள் அவன் கொழும்புக்கு பயணமாக வேண்டுமாம். இட மாற்றத்தை எதிர்த்து தலைமை அலுவலகத்திற்கு மனுச் செய்திருந்தான். 

அவன் தான் பிறந்த ஊரில் கடமையேற்று இரண்டு வருடங்கள் தான் பூர்த்தியாகியிருந்தது. நான்கு வருடங்கள் கடமையாற்ற உரிமையிருந்தும் அதற்குள் திடீர் இட மாற்றம். 

அவனால் அந்த இடமாற்றத்தை ஜீரணிக்க முடிய வில்லை. உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரமளிக்கப் பட்ட அதிகாரி அவன். தனது கொள்கைக்கேற்ப கற்றுக் கொண்டவைக்கேற்ப சகல மக்களும் அவன் பார்வையில் ஒரே மாதிரியே. இயன்றவரை பணி புரியத்துடித்தான். 

ஊரில் குடிநீருக்காக வாடும் மக்கள் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ஆவன செய்தான். தேவையான இடத்து புதிதாகச் சனசமூக நிலையம், நூல் நிலையம் அமைத்திட உதவினான். தொற்று நோய்த் தடுப்பு, தாய்-சேய் நலப் பணிமனை, ஆயுள்வேத மருத்துவ சேவை இப்படிப் பல… ஆனந்தனின் உற்ற நண்பன் செல்வம் நல்லதோர் புகைப் படப்பிடிப்பாளன். அந்நியப் படை அப் பிரதேசங்களில் ‘அமைதி காத்த’ காலத்தில் செல்வத்தின் கமரா, பல நிகழ்ச்சிகளைப் படம் பிடித்திருந்தது. அவை உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரமாக ஆனந்தன் உதவி செய்ததுண்டு. 

முன்னர் ஒரு தடவை ‘குமுதினி’ப் படகில் கடற்படைக் கழுகுகள் நிகழ்த்திய கொலை வெறியின் தாக்கத்தையும் செல்வம் புகைப்படம் பிடித்தது மாத்திரமன்றி, அதில் பலியானவர்களின் உடல்களை அக்கோரத்தையே வீடியோக் கமரா மூலம் படம் பிடித்திருந்தான். அவை உள் நாட்டு, வெளிநாட்டு பத்திரிகைகளுக்கும், மனித உரிமை நிறுவனங்களுக்கும் போய்ச் சேர்ந்தது உண்மைதான். 

ஊரிலும் அடுத்துள்ள கிராமங்களிலும் நடந்த அந்நியப் படையினரின் அட்டூழியங்களும் செல்வரத்தினத்தின் கமராவுக்குத் தப்பவில்லை. படையினரின் கண்களுக்கும் அவன் தப்பவில்லை. 

ஒரு நாள் அவனும் நண்பர்கள் இருவரும் கைது செய்யப் பட்டு முகாமில் அடைக்கப்பட்டனர். சித்திரவதைகளும், விசாரணைகளும் பலவிதம்… ஊரில் நல்ல பிள்ளையென மதிக்கப்பட்ட அவனை விடுவிக்க மக்கள் திரண்டனர். அந்த மக்களுடன் ஆனந்தனும்…. 

நூற்றுக்கு மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் பெண்கள் அந்தப் பிரதேச பெரிய முகாமுக்கு படையெடுத்தாற் போலச் சென்றனர். எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாத செல்வத்தையும் அவன் நண்பர்களையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரினர். முகாம் பெரியவரின் கடுமை யான எச்சரிக்கை தான் பதிலாகக் கிடைத்தது. 

ஆனந்தன் இயன்றவரை வாதாடிப் பார்த்தான். செல்வமும் நண்பர்களும் வன்முறையாளர்களல்ல; அவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு உதவுபவர்கள்; அவ்வளவுதான்; அவர்களை விடுதலை செய்யுங்கள் எனக் கேட்டான். முடிவு பூச்சியம் தான். இருப்பினும் என்ன…! ஆனந்தன் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட ஆண்களும், ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களும், முதியவர்கள், குழந்தைகள் உட்பட முகாம் வாசலின் ஓரமாக சத்தியாக் கிரகம் இருந்தனர். அவ்வப்போது படையினரின் கடும் எச்சரிக்கைகள் வந்தன. கலங்கவில்லை ஒருவரும்..காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை இது நீடித் தது. ஒரு தடவை ஒரு பெரிய ‘ட்ரக்’ வண்டி இவர்களின் ஊடாகச் செல்ல எத்தனித்தது. எவருமே அசையவில்லை. 

ஐந்து முப்பது மணியளவில் முகாம் பெரியவர் மேஜர் ஆனந்தனைத் தனியே அழைத்தார். ‘எல்லாம் உமது ஏற்பாடுதானே..’? ‘இல்லை.. இது சனங்களின் ஏற்பாடு…’ என்றான். கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தண்ணீர்துளி விழுந்த மாதிரி மேஜர் சீறினார். பின்னர் அடங்கி விசாரித்தார். 

‘நீர் ஒர் அரசாங்க அதிகாரி என்பது எமக்குத் தெரியும். உமது நம்பிக்கையில் அவர்களை விடுதலை செய்கிறேன். ஆனால் தொடர்ந்தும் அவர்கள் எமக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எமது நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும்’ என்றார் மேஜர். முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் சில நாட்களில் இனந்தெரியாதவர்களால் திரும்பி வராத இடத்துக்கு அனுப்பப்படும் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடந்துள்ளதை ஆனந்தன் அறிவான். 

இரண்டு நாட்களாகவில்லை. காலை ஆறு மணியிருக் கும். ஆனந்தன் வீட்டிற்கு முன்னால் வீதியில் இரண்டு ஜீப், நான்கு ‘ட்ரக்’நிறைய படையினர். அவனது வீட்டுக் ‘கேற்’ பலாத்காரமாகத் திறக்கப்பட்டு வீட்டுக் கதவு தட்டப் பட்டது. 

அப்போது தான் அவன் மனைவி குசினியில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவர்களது ஒரு வயது மகள் தந்தையின் மேல் கால் போட்டபடி நித்திரையில் இருந்தாள். 

கதவில் அடித்த சத்தத்தில் குழந்தை விழித்துக் கொண்டு மிரண்டது. குழந்தை தன் மீது போட்டிருந்த காலை எடுத் ததும், கதவுச் சத்தம் கேட்டதும் ஆனந்தனுக்கு என்னவோ போலிருந்தது. இதற்குள் மனைவி ஓடி வந்தாள். ‘பக்கத்து ஐயர் வளவுக்குள்ளால் தப்பி ஓடுங்கோ. அரக்கர் வந்து நிக்கிறாங்கள்.. 

‘ஒன்றுக்கும் பயப்படாதே…’ குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தன் முன் அறைக்கு வந்து கதவைத் திறந்தான். 

மனைவியும் பக்கத்தில்… கதவின் முன்நின்ற படையினர் இருவர், அவனை ‘கேற்’றின் முன் ஜீப்பிலிருக்கும் பெரிய வரிடம் வருமாறு அழைத்தனர். 

படிகளால் இறங்கியவன் வளவை ஒரு முறை நோட்ட மிட்டான். வளவைச் சுற்றி வெளிப்புறமாக மரங்களோடு மரங்களாக அவர்கள். 

ஜீப்பின் அருகில் அவன்… “எப்படி ஊர் நிலவரம்..’? ‘ஒரு பிரச்சினையுமில்லை..’ என்றான். “அப்படியா வாருங்கள் என்னுடன் சிறிது தூரம் இந்தப் பக்கமாக போய்க்கொண்டு பேசுவம்…’ 

அவனுக்குப் பல விடயங்கள் படமாக விரிந்தன. அவர்கள் குறிவைத்து விட்டார்கள் என்பது புரிந்தது. “இங்கேயே பேசுவோம்’ என்றான். 

“பரவாயில்லை பிள்ளையை மனைவியிடம் கொடுத்து விட்டு ஜீப்பில் ஏறுங்கள். போய்க்கொண்டே பேசுவோம்.” என்றார் மீண்டும் பெரியவர். 

இதற்கிடையில் அவர்களில் ஒருவன் வந்து குழந்தை யைப் பிடுங்க ஆனந்தனை ஒருவன் கையில் பிடித்தான். ஆனந்தனின் மனைவி பாய்ந்து பிள்ளையைப் பிடித்துக் கொண்டு கத்தினாள். 

“மிஸ்டர் ஆனந்தன்.. ஜீப்பில் ஏறலாம்” பெரியவர் கண்டிப்பான குரலில் சொன்னார். “மனைவி, பிள்ளையை விட்டு இப்போது வரமுடியவில்லை.. மன்னிக்கவேணும்”. 

சில விநாடி அமைதிக்குப் பின்.. “மிஸ்டர் ஆனந்தன்.. நீர் ஊரில் பெரிய ஆளோ.. எமக்கு எதிராக எதுவும் செய்து விட முடியும் என்று நினைக்கிறீரோ.. ஜீப்பில் ஏறும்.” 

திடீரென அவர்களில் நான்கைந்து பேர் பாய்ந்து வந்து ஆனந்தனை இழுத்தனர். மனைவியையும் குழந்தையையும் வேலியோடு சாய்த்தனர். செல்ல மகள் “அப்பா” என்று கத்தினாள். 

ஜீப்பில் ஏற்றுவதற்காக அவனை இழுத்து வந்தனர். எல்லோருக்கும் திகைப்பு… எங்கிருந்து இப்படி வந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர்; அதிகமானோர் பெண்கள். ஜீப்பைச் சுற்றி இருபதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறார்கள், மாணவிகள். 

ஆனந்தனைத் தாய்மார்கள் சூழ்ந்து கொண்டனர். அத்தனை வாகனங்களைச் சுற்றியும் சனங்கள் வந்து கூடினர். வளவுக்குப் பின்னால் மரங்களோடு நின்ற படை யினரும் ஓடி வந்து சேர்ந்தனர். படையினர் சத்தம் போட்டு எச்சரிக்கை செய்ய, சனங்களும் “ஆனந்தனை விடுங்கோ’ என்று கூச்சல். 

ஜீப்பிலிருந்து மேஜர் பாய்ந்து கீழே இறங்கினார். இடுப்புப் பட்டியில் கை வைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்று பார்த்தார். படையினர் துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்தபடி… “உனக்குச் சுட வேண்டுமானால் எங்களைச் சுடு; தம்பியைத் தொடாதே. எங்கள் மக்களை அழிக்காதே. கருணாமூர்த்தி தோன்றிய மண்ணில் பிறந்த உங்களுக்குக் கருணையே இல்லையா…” ஓர் இளம் பெண் மேஜரைப் பார்த்துக் கத்தினாள். “அண்ணாவில் கை வைக்காதே..” சிறுவர்கள் சத்தமிட்டனர். 

“ஆனந்தன் சட்டவிரோதமாக என்ன செய்தான்…” அறுபது வயது ஐயர் அம்மா முன்னால் வந்த மேஜரின் முகத்திலடித்தாற் போல் கேட்டா. 

மேஜர் மனதில் என்னவோ நினைத்துக் கொண்டு சிரித்தான். 

“பிள்ளைகளை அநியாயமா பிடிச்சுக் கொண்டு போகாதீங்க..என்னை வேணுமெண்டாச் சுடுங்க… ஆனந்தனை ஒன்றும் செய்யாதீங்க..” 

எழுபத்தேழு வயது நிறைந்த, சிவன் கோவில் மார்க் கண்டேயக் குருக்கள் கைத்தடியை ஊன்றிப் பிடித்தபடி மேஜருக்குச் சொன்னார். 

அவ்வளவுதான்.. 

அதற்குள் என்னென்னவோ சத்தங்கள்… இரைச்சல்கள் பெண்கள் மத்தியிலிருந்து…. சிலர் கை நிறைய மண்… படையினர் பலர் பாய்ந்து சனத்திற்கு எதிர்ப்புறமாக அணிவகுத்து நின்றனர். சனங்களில் பலர் வாகனங்களைச் சுற்றி அமர்ந்துவிட்டனர். 

“என்ன இது” சத்தமாகக் கத்தினார் மேஜர். “வந்த வழியே போங்கோ” சனங்கள் சத்தமிட்டனர். சனங்களை வழிவிடுமாறும், தான் ஒருவரையும் கைது செய்யவில்லை யென்றும் உரத்துச் சொன்னார் மேஜர். “என் சேவைக் காலத்தில் இது என் முதல் அனுபவம். உன்னைப் பின்பு சந்திக்கிறேன்…” என்று ஆனந்தனை நோக்கி மெதுவாகச் சொன்னார். 

வாகனங்கள் மெல்ல ஊர்ந்தன. “அந்நியக் கழுகுகளுக்கு எங்கள் மண்ணில் இடங்கொடுக்கவே கூடாது.. எங்கள் கால்களில் நாங்கள் நிற்கவேணும்” ஒரு மாணவி சத்த மாகச் சொன்னாள். 

தெருவில் எழுந்த புழுதி வாகனங்கள் சென்ற திசையை மறைத்தது. கண்களில் கண்ணீர் ததும்ப, சனங்களின் மத்தி யில் அவன்… 

மனைவியின் கையிலிருந்த செல்ல மகள் “அப்பா” என்றவாறு அவனிடம் தாவினாள். 

இடமாற்ற உத்தரவை எதிர்த்துச் செய்திருந்த மனுவின் பிரகாரம், சிறிது பரிகாரம் போல் மறுநாள் செய்தி வந்தது. 

ஒரு கிழமைக்குள் வவுனியா அலுவலகத்தில் அவனைக் கடமையேற்கும்படியான அறிவுறுத்தல்தான் அது. தொழிற்சங்க ரீதியாக அதனையும் எதிர்த்து மனுச் செய்ய முயற்சித்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவன் இடமாற்றம் பெற்றுச் செல்வது தான் அவனுக்குப் பாதுகாப்பானது என சனங்கள் வலியுறுத்தினர். 

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்த அவன், விடுதலையான மறுநாளே கொழும்புக்கு புறப்பட்டு போய்ச் சேர்ந்து, ஜேர்மனி செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்த நண்பன் செல்வத்துக்கு, ஊருக்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து கடிதம் எழுதினான்.

– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *