ஏட்டிக்குப் போட்டி




ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர்.
அவன் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தான்.
அவன் மனைவி குணக் கேடானவள். கணவன் ஏதாவது சொன்னால், அதற்கு மறுப்பு கூறுவது அவள் வழக்கம்.
அவனும் அவளுக்குப் பதில் சொல்லாமல், மௌனமாகவே இருந்து விடுவான்.
அவனுடைய தாய் இறந்து போய், ஒரு வருடம் ஆகிறது. மறுநாள் அந்த நினைவு நாளைக் கருதி நெருங்கிய உறவினர்களை அழைத்து உணவு அளிப்பது, அவனுடைய சமூக வழக்கம்.
அதைச் செய்ய வேண்டும் என்பது அவனுடைய விருப்பம்.
மனைவிடம் அதைச் சொன்னால், அவள் மறுத்து விடுவாளோ என்று வருத்தப்பட்டுக் கொண்டே கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.
வரும் வழியில், அவனுடைய பள்ளி ஆசிரியர் எதிரே வந்தார்.
“உன் முகம் வாட்டமாய் காணப்படுகிறதே, என்ன விஷயம்?” என்று கேட்டார்.
“ஐயா, என் தாய் இறந்து ஒரு வருடம் ஆகிறது. அந்த நினையு நாளுக்கு, உறவினர்களை அழைத்து உணவு அளிக்க வேண்டும்; அதைச் சொன்னால், என் மனைவி செய்ய மறுத்து விடுவாளே என்ற கவலை எனக்கு” என்றான் அவன்.
“இதற்காக ஏன் கவலைப்படுகிறாய்?. நான் சொல்கிறபடி, உன் மனைவியிடம் சொல்லு. உன் விருப்பம் போல் நினைவுநாள் நடைபெறும்” என்று கூறி, ஒரு யோசனை சொல்லி விட்டுச் சென்றார்.
அவன் ஆறுதலோடு வீட்டுக்கு வந்தான். மனைவியிடம், “என் தாயின் முதல் நினைவுநாள் நாளைக்கு, சமூக வழக்கப்படி உறவினர்களை அழைத்து உணவு அளிக்க வேண்டாம். நாம் இருவரும், அப்பளம், வடை, பாயசத்தோடு சாப்பிடுவோம்” என்றான் அவன்.
உடனே அவன் மனைவி, “உங்களுக்கு ஏன் புத்தி இப்படிக்கு கெட்டுப் போய் விட்டது! பெற்ற தாயின் நினைவுநாளை ஒட்டி உறவினர்களை அழைத்து உணவு அளிப்பதே மதிப்பு. அதைச் செய்யாமல், இருந்தால் உறவினர்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்று கூறி, வேண்டிய பொருள்களை அவளே சென்று வாங்கினாள். உறவினர்களை அழைத்தாள், அப்பளம், வடை, பாயாசத்துடன் விருந்து நடத்தி விட்டாள்.
கணவனுக்கு தன விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி தாளவில்லை. அதன் பின், எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறானோ அதை வேண்டாம் என்று எதிரிடையாகவே கூறுவான். ஆனால், அவள் அதை நிறைவேற்றி விடுவாள்.
ஆசிரியர் சொல்லிக் கொடுத்த யோசனை இதுதான்!
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் தொகுப்பிலிருந்து (ஜூன் 1998).