எழுத மறந்த கதை
(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னொரு காலத்தில் ஒரு ஏழைக்குடியானவனும் ஒரு ராஜாவும் ஒரே தேசத்தில் வசித்து வந்தார்கள்.
ஒருநாள், ராஜாவும் அந்தக் குடியானவனும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“குடியானவனாக வாழும் வாழ்க்கை ரொம்பக் கஷ்டமானது” என்று குடியானவன் சொன்னான்.
“ஒரு ராஜ்யத்துக்கு அரசனாக இருந்து ராஜ்ய பரிபாலனம் பண்ணும் வாழ்க்கைதான் மிகவும் கஷ்டமானது” என்று ராஜா சொன்னான்.
விவாதம் நீண்டுகொண்டே போனது. கடைசியில் இருவரும் ஒரு ஏற்பாட்டுக்கு வர ஒப்புக்கொண்டார்கள். அதன்படி,
ராஜா கொஞ்சநாள் குடியானவனுடைய வீட்டுக்குப் போய் குடியானவனாக இருப்பது என்றும், குடியானவன் கொஞ்சநாள் ராஜாவின் அரண்மனைக்குப் போய் ராஜாவாக இருப்பது என்றும் முடிவாயிற்று.
அன்று இரவு அரண்மனையில் தூங்கியதைப்போல குடியானவன் தன் வாழ்நாளிலேயே ஆனந்தமாக என்றும் தூங்கியதேயில்லை.
ஹம்சதூளிகா மஞ்சத்தில்ப் படுத்திருப்பதுதான் என்ன சொகம்! விடிந்ததுகூடத் தெரியவில்லை.
ராணியானவள் தாதிப்பெண்கள் புடைசூழ வந்து இசை மீட்டி, பாட்டிசைத்துத் துயில் எழுப்பினாள் இவனை. சொர்க்கலோகம்போல இருந்தது அரண்மனை.
பன்னீரில் நீராடி, கலிப கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்கள் பூசி, அறுசுவை போசனம் உண்டு, தாம்பூலம் தரித்து, மன்னன் தர்பாருக்குக் கிளம்பும்வேளையில், மந்திரியானவர் வந்து,
“மகாராஜாவுக்கு வெற்றி உண்டாகட்டும்” என்று சொல்லி வணங்கி,
“மன்னர் மன்னவ, நம் அண்டைநாட்டரசன் நம்மீது போர்த் தொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறான்” என்று தெரிவித்தான். இந்தக் “குடியானவராஜா”வுக்கு, ஒரு ராஜாவானவன் இன்னொரு ராஜாமீது படைஎடுத்தால், ‘சண்டை’ போடவேண்டும் என்று தெரிந்திருந்தது.
ஆகவே அவன், “நம்முடைய படைகள் உடனே யுத்தத்துக்கு வேண்டிய சகல ஆயத்தங்களுடன் தயார்நிலையில் இருக்கட்டும்” என்று உத்தரவிட்டான்.
மந்திரிக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் வந்துவிட்டது!
குடிசையில் படுத்துக்கிடந்த நிஜராஜாவுக்கு அன்றிரவு வள்ளி சாகத் தூக்கமே கிடையாது.
கட்டாந்தரையில் கோரைப்பாயை விரித்துப் படுத்திருந்தான். குழந்தைகள் பசியாலும் குளிராலும் ஒரு மூலையில் முனகிக்கொண்டே சுருண்டு படுத்துக்கிடந்தன. அந்தக் குடியானவனின் தாய் ராத்திரி பூராவும் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டேயிருந்தாள். தகப்பனோ விடியும்வரை லொக்கு லொக்கு என்று பயங்கரமாக இருமிக்கொண்டிருந்தான்.
“ராஜாகுடியானவன்” புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். கை களைக் கோர்த்து தலைக்கடியில் வைத்துக்கொண்டு கூரைவழியாகத் தெரியும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே பொழுதைக் கழித்தான்.
காலையில் எழுந்ததும், குடியானவத் தொழிலான ஏரைப் பூட்டிக் கொண்டு உழச் சென்றான். அவனால் வெயிலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேழி பிடித்த கையில் பொக்கலிங்கள் பொத்து வடிந்தன. நாக்கு வறண்டு ஆயாசமாக வந்தது. வேலையை பாதி யிலேயே விட்டுவிட்டு வந்தான்.
வரும் வழியில் அவனை கடன்காரர்கள் மறித்துக்கொண்டார்கள். வரி பாக்கிக்காக ராஜசேவகர்கள் அவனுடைய மாடுகளை பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்கள்! மனைவிக்கு “இடுப்புவலி” கண்டிருப்பதாகத் தகவல் வந்தது.
“ராஜாகுடியனாவன்” அந்த இடத்திலேயே ரண்டு கையையும் தலையில் வைத்துக்கொண்டு அப்படியே அசந்து உட்கார்ந்துவிட்ான். அந்நேரம் அங்கே வந்த கவிராயர் ஒருவர் விவசாயத்தைப்பற்றியும் அவனைப்பற்றியும் புகழ்ந்துபாடி பரிசில் கேட்டார்.
கவிராயரின் உருவம் சரியாகத் தெரியவில்லை. கண்ணீர் மறைத்ததால்.
அரண்மனையில், குடியானவராஜா மந்திராலோசனை சபையைக் கூட்டினான்.
அந்த ராஜ்யத்தில் பல்வேறு காரியங்களுக்கு பல்வேறு மந்திரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
உணவு மந்திரி சொன்னார்,
“மகாராஜா, ஜனங்கள் சாப்பாட்டுக்கே வழியின்றி மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மழை சரியாகப் பெய்தே அனேக வருசங்கள் ஆகிறது. ஒரே பஞ்சம். ஜனங்கள் பட்டினியாலும், வேலைக்கிடைக்காத தாலும் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்.”
சட்டமந்திரி சொன்னார்,
“ஜனங்கள் நீதியிலிருந்து விலகிவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் கொள்ளை, கொலை, திருட்டு, விபசாரம் இவைகள் மலிந்துவிட்டன”
நிதிமந்திரி சொன்னார்,
“வரி பாக்கிகள் சரிவரவே வசூலாகவில்லை. கெடுபிடி செய்தால் ஜனங்கள் எதிர்க்கிறார்கள்”
யோசித்தார் குடியானவராஜா.
இந்த நிலைமையில் யுத்தம் என்றால் ஜனங்கள் உற்சாகம் கொள்ள மாட்டார்கள். என்ன செய்யலாம்? எதிரிராஜாவை தந்திரமாகக் கொஞ்சகாலம் சமாதானம் செய்துகொள்வதே உசிதமானது என சித்தம் பண்ணி, அந்த அரசனுக்கு ஓலை அனுப்பி வரவழைத்து அவனோடு ஓர் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டான்.
மறுநாளும் குடியானவராஜா சபையைக்கூட்டி நாட்டின் பஞ்ச நிலைமையை ஆராய்ந்தான். பஞ்சத்திற்கு என்ன காரணம் என்று கேட்டபோது ஒவ்வொரு மந்திரியும் ஒவ்வொருவிதமாக பதில்ச் சொன்னார்கள்.
அவைகளையெல்லாம் கேட்ட குடியானவராஜா பகபகவெனச் சிரித்தான். “அட பைத்தியக்கார மந்திரிகளே, பூமியில்த்தானே மழை இல்லை; சமுத்திரத்தில் ஏன் மழை கொட்டுகிறது என்று தெரியுமா உங்களில் யாருக்காவது?” என்று கேட்டான்.
“தெரியாது மகாராஜா” என்று ஒப்புக்கொண்டார்கள்.
“தண்ணீரையும். பசுமையையும் கண்டுவிட்டால்ப் போதும் மேகங்கள் தாயைக்கண்ட சேயைப்போல பாய்ந்து இறங்கிவிடும்” என்றான் குடியானவராஜா.
“ஆகவே, நான் சொல்லுகிறபடி செய்யுங்கள் உடனே. பூமியில் விழும் மழைத்தண்ணீரில் ஒரு துளிகூட நமக்குப் பயன்படாமல் சமுத்திரத்துக்குச் செல்லக்கூடாது; பூமியில்ப் பாய்கிற நதிகளில் நமக்குப் பாசனத்துக்குப் பயன்படாமல் துளி தண்ணீர்கூட கடலுக்குச் செல்லக்கூடாது” என்று உத்தரவிட்டான் அந்த ராஜா.
ஜனங்கள் தாமாகவே வந்து, உற்சாகமான இந்தக் காரியத்துக்கு ஒத்துழைத்ததால் மந்திரிகள் சீக்கிரமாகவே இந்த உத்தரவை நிறை வேற்றினார்கள். விவசாயம் செழித்தது. மாதம் மும்மாரி மழை பொழிந்தது. நாடு சுபிட்சம் கண்டது.
பக்கத்துநாட்டு ராஜா இந்த நாட்டின்மேல்ப் பாய சமயம் பார்த் திருந்தான். ஆனால் அவன் எண்ணம் கடேசிவரை நிறைவேறவே இல்லை. காரணம், அந்த நாட்டு மக்கள், இந்த நாட்டில்ச் செய்தது போல தங்கள் நாட்டிலும் செய்யவேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!
இப்போது,
ஓர்நாள் குடியானவனும் ராஜாவும் சந்தித்துக்கொண்டார்கள். அந்தக் குடியனாவனுக்கே ராஜா தன் ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு காட்டுக்குத் தவம்செய்யப் போய்விட்டானாம்.
குடியானவனும் தனது அரண்மனைவாசம் முதலிய ஆடம்பரங் களைத் துறந்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்டு நீதி தவறாமல் நாட்டைப் பரிபாலனம் பண்ணிக்கொண்டு வருகிறான்.
– சரஸ்வதி, 25 மே 1959.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |