எல்லாம் நன்மைக்கே!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2025
பார்வையிட்டோர்: 12,678 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“காம்யா!”

“என்ன மாமா?”” என்று கேட்டுக் கொண்டே காம்யா மாமா விசுவத்தின் அறைக்குள் நுழைந்தாள்,

”இந்தா, இந்தக் கல்யாணப் பத்திரிகையைப் பார், ‘குமாரி சுகந்தின்னு உன் பேருக்கு வர வேண்டியது போல, மரியாதைக்கு என் பேருக்கு அனுப்பியிருக்காங்க, யாருன்னு புரியுதா பார்”.

பத்திரிகையை வாங்கிப் பார்த்தாள் காம்யா. “புரியுது. மாமா. என் பெரியப்பா பெண் சங்கரியின் மகள் இவ. இந்த விவரம் போன மாசம்தான் எனக்குத் தெரிஞ்சது. என் கூட செக்ரட்டேரியட் கோர்ஸ் படிச்சா, அவங்க அப்பா வழியிலேயே தூரத்து உறவுப் பையனையே கட்டிக்கிறா. முன்னமே நிச்சயமான கல்யாணம்தான். பத்திரிகை அனுப்புவதாகச் சொன்னா. ஆனால்…” சிறிது தயங்கினாள் பெண்.

“என்ன அம்மா, என்ன தயங்கறே?”

“மதுரையிலே யில்ல கல்யாணம்? நான் மெட்ராஸிலேயே இருக்கும்னு நினைச்சேன், அதனாலே அனுப்பச் சொன்னேன்.”

‘”எங்கே நடந்தா என்ன? நீ போய்ட்டு வாயேன்.”

காம்யா, தன் மாமன் முகத்தை நன்றியோடு நோக்கினாள்.

அவர் தொடர்ந்தார், “நான் உன் பெரியப்பா வாசற்படியை மிதிக்க மாட்டேன். அன்னிக்கு இரண்டு வயதுக் குழந்தையான உன்னை எடுத்துண்டு உன் அம்மா தன் மைத்துனள் வீட்டுப் படி ஏறினாளே? எவ்வளவு தயை, தாட்சண்யம் இல்லாமல் திருப்பி அனுப்பினாங்க? உன் அப்பனோட அந்திமக் கிரியைக்குக் கூட உன்னையும் உன் அம்மாவையும் அவங்க வச்சுக்கலை, பணத்திலே புரண்டால் என்ன? சல்லிக் காசு இல்லாமல் அவளைத் துரத்திட்டாங்க. நடு நடுங்கிண்டு தயங்கிண்டு இந்த வீட்டிலே துழைஞ்சா, அண்ணன்காரன் தன் பொண்ணைப் பார்த்துக்குவான்னு நம்பிக்கையிலே அவளும் சீக்கிரமாப் போயிட்டா போலிருக்கு. எனக்கு வளர்த்து ஆசை காட்ட ஒரு பெண் குழந்தை நீ கிடைச்சே” எங்கோ கனவுலகத்திலே பேசுவது போல தனக்குத் தானே பழைய கதையைச் சொல்லிப் பார்ப்பது போல, குனிந்த தலையுடன் அவர் பேசினார்.

“மாமா, அவங்க வீட்டுக் கல்யாணத்துக்குப் போகாவிட்டாலும் பரவாயில்லை. உங்களை மதிக்காத வீட்டிலே எனக்கு மட்டும் என்ன வேலை?” என்றாள் காம்யா உறுதியாக.

“நான் ஏதோ வருத்தப்பட்டேன். அதற்காக நீ போகாமல் இருக்க வேண்டாம். உன் பெரியப்பா செய்த பிழைக்கு அவர் பேத்தி என்ன செய்வாள்? இன்னி ராத்திரி ‘பாண்டியன்’லே புதுச் சரக்கு எடுத்துண்டு வீரப்பன் போறான். அவன் துணையில் போ. கல்யாணம் முடிஞ்ச மறுநாளே ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி வந்துவிடு, இரண்டு நாளுக்கெல்லாம் தீபாவளி வருது, நீ வரும் விவரம் டெலிபோனில் சொன்னால், நான் பஸ்ஸடிக்கு வந்து உன்னை வீட்டுக்கு அழைத்து வரேன்”.

“சரி, மாமா.” அவரது பரிவு அவள் கண்களைப் பனிக்கச் செய்தது.

”இதோ, பார் காம்யா; ஒரே ஒரு வார்த்தை. சுவனமாகக் கேள். அங்கே ஜவுளி வாங்கக் கடைக்குப் போவாங்க. கூடுமான வரை நம்பக் கடைக்கு நீ போகாதே. நம்ப ரவி கூடப் பேசாதே. உன்னை அவனுக்கென்று வரித்திருக்கிறது எல்லோருக்கும் தெரியும். அநாவசியமாக உங்க ரெண்டு பேர் பேரையும் இணைச்சு வம்பு கிளம்பக் கூடாது, என்ன?”

“சரி, மாமா'” என்றாள் காம்யா. அவளுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“காமு!” என்று மாமியின் குரல் கேட்டு “இதோ வந்துட்டேன் மாமி” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு உள்ளே ஓடினாள்.

“நீ மதுரைக்குப் போகணுமாமே? போய் வா. என்றைக்கோ தப்புப் பண்ணிளுங்கன்னு இன்னிக்கு எதுக்கு நாம் பகைமை பாராட்டனும்? என்ன நான் சொல்றது? போய் உன் பெரியப்பா குடும்பத்தோடு ஓண்டிக்கப் பார், மெல்லக் கல்யாண விஷயமும் எட்டவிடு” என்று மாமி புத்திமதி கூறினாள்.

காம்யாவுக்கு நன்றாகப் புரித்தது. தனக்கு மருமகளாக வரப் போகிறவள் சீர் செய் நேர்த்தி, பிறந்தகத்துப் பின்னணி இல்லாதவளாக இருக்கக்கூடாது என்று மாமி இப்பொழுது புது உறவுகளைக் கொண்டாடப் பார்க்கிறாள். ஓட்டாத உறவுகள் இனி ஓட்டப் போகின்றனவா?

காம்யா, மாமி எடுத்துத்தந்த புடவைகள், நகைகளை எடுத்து வைத்துக் கொண்டாள், அதற்கேற்ப மற்ற சாமக்கிரியைகளையும் ஆய்ந்து எடுத்து வைத்தாள். தோழிக்காக நூறு ரூபாவில் ஓர் அலங்காரப் பெட்டி வாங்கிக் கொண்டாள்.

மதுரைக்குச் சென்றதும் அவளுக்கு நல்வ வரவேற்பு இருந்தது. பழைய உறவுகளை யாரும் பாராட்டவில்லை. கல்யாணப் பெண்ணின் தோழி என்ற முறையில் அவளை அன்போடு உபசரித்தார்கள். காம்யாவும் அதுபோலவே இருந்து விட்டாள். தன் தகப்பனாரின் குடும்பத்தைப் பற்றிக் கொள்ள யத்தனிக்க வில்லை, அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக் கூட இல்லை.

“நீ வந்த பிறகுதான் ஜவுளிக் கடைக்குப் போகணும்னு சொல்லிவிட்டாள் சுகந்தி” என்றாள் அவள் தாய் சங்கரி.

“இன்னும் இரண்டு நாள் கூட இல்லையே?”

“அதனால் என்ன? இப்பக் கார் வரும், நாம் கிளம்பலாம்…”

மதுரையில் உள்ள முக்கிய ஜவுளிக் கடைகளில் எல்லாம் ஏறி ஏறி இறங்கினார்கள். காம்யாவின் மாமாவின் கடையான ‘காமாட்சி’ ஸ்டோருக்குக் கடைசியாகப் போனார்கள். “உன் மாமா கடைக்குப் போகலாம். வா” என்று இழுத்தாள் சுகந்தி.

“பார்க்கணும்னு ஆசைதான். ஆனால் எங்க மாமா இங்கே போக வேண்டாம்னு சொல்லி அனுப்பினார்”.

“ஏனாம்?”

“உனக்குத் தெரியாதாக்கும்? என் மாமா பிள்ளை ரவி இப்ப மதுரைச் கடையைத் தானே பார்த்துக்கறார்?”

”ஓகோ!!” கலகலவென்று சிரித்தாள் தோழி.

“இதோ பார், இதுதான் உங்க கடை, வா, பேசாமல், நான் புடவைகளைப் பார்க்கிறேன், நீ உன் ரவியைப் பார்த்துக்க, என்ன?” என்று கொஞ்சுதலாக மொழிந்து விட்டு காம்யாவின் கன்னத்தைக் கிள்ளினாள் தோழி.

காம்யா சங்கோஜமும் ஆவலுமாக ‘காமாட்சி ஸ்டோர்’ஸுக்குள் நுழைந்தாள்.

ரவி கல்லாப் பெட்டி அருகில் அமர்ந்திருந்தான், காம்யாவை ஆச்சரியத்துடன் பார்த்தான், அவளும் லேசாக முறுவலித்துவிட்டுத் தன் தோழியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவன் அருகே போய் தாழ்ந்த குரலில், “இவ என் ஃப்ரெண்ட் சுகந்தி, இவ கல்யாணத்துக்காக நான் வந்திருக்கேன்” என்று விவரித்தாள்.

“காம்யா, என்ன இப்படி? இவங்கதான் கல்யாணப் பெண்ணா?” என்று கேட்டுக் கொண்டே வீரப்பன் எதிரே வந்தார்.

ஒரு கணம் காம்யா தயங்கினாள், வீரப்பன் தன் மாமாவுக்கு வலது கை. குடும்ப விஷயம் முழுவதும் அணு அணுவாக அறிந்தவர், இந்தக் கடைக்குள் போக வேண்டாம் என்று தன் மாமா பணித்திருக்கும் போது தான் இங்கு வந்ததை இவர் தன் மாமாவிடம் சொல்லி விடுவாரோ என்று அவள் நடுங்கி விட்டாள். அதற்கேற்றாற் போல் வீரப்பனும் அவள் அருகில் வந்து தாழ்ந்த குரலில், “பாப்பா, கொஞ்சம் என் கூட வெளியே வா” என்று அழைத்தார்.

“என்னாங்க?” என்று கேட்டாள் காம்யா. வெளியே வந்தபிறகு.

“காம்யா, என்னை எதுக்கு அனுப்பியிருக்காங்க தெரியுமா?”

“சரக்குக் கொண்டு தர, எனக்குத் துணையாக.”

“உனக்குத் துணை என்பது சாக்கு. நம்ப கடையிலே ரொம்ப நஷ்டம் காட்டறது. அதுக்கு வழியே இல்லை. அதுதான் என்னைக் கவனிக்க அனுப்பி யிருக்காரு.”

“கண்டு பிடிக்க முடிஞ்சுதா?”

”சொல்றதுக்குக் கஷ்டமா இருக்குது. பாப்பா.”

“சொல்லுங்க.”

“எனக்கு ரவி மேலே சந்தேகம் விழுது. அது தப்பில்லையா. அம்மா?”

”என்னங்க நீங்க? சொத்த வியாபாரத்தைக் கவனிக்காமல் இருப்பாரா? வேறு யாராவது சிப்பந்தி கோல்மால் செய்கிறானா, பாருங்க” என்ற காம்யா, சிரித்துக் கொண்டே கடைக்குள் போனாள்.


வீட்டுக்குச் சென்ற பிறகு தோழிகள் இருவரும் அமைதியாகப் படுத்துக்கொண்டு அரட்டை அடிக்கும்போது அவள், ”எங்க கடையிலே வாங்கலேன்னு ரலிக்கு ரொம்ப வருத்தம். நீ ஒண்ணுமே வாங்கலியே, எனக்காகவாவது அந்தக் கடையில் எடுத்திருக்கணும்.” என்றாள்.

”ஏனோ தெரியலையே? அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அவங்களைக் காரணம் கேட்கிறேன். இரு.”

“காம்யா, நாங்க முன்னே யெல்லாம் உங்க மாமா கடையிலேதான் எடுப்போம். இப்ப என்னவோ மட்டப் பட்டு, நார் பட்டு எல்லாம் கலக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே?” என்றாள் சுகந்தியின் தாய்.

”யார் சொன்னாங்க ஆன்ட்டி? மாமா ரொம்பக் கறாரானவர், ஒருக்காலும் அப்படி நடக்காது…”

”நீ சொல்றே…இப்பப் புதுசா ஒரு மானேஜர் வந்திருக்காரே, அவரா சொல்லித்தான் நாங்க சில பேர் அங்கே போவதில்லை. அவர்தான் அடுத்த கடையைச் சிபாரிசு செய்தார்.” என்றாள் தோழியின் தாயார்.

‘ரவியேவா!’ காம்யாவுக்கு இந்தச் செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அதன் பிறகு காம்யாவுக்குக் கல்யாணத்தில் மனமே செல்லவில்லை. பொறுமையாக இரண்டு நாட்களைத் தள்ளிவிட்டு அவள் ஊருக்குத் திரும்பி விட்டாள். வீடு திரும்பியதும் அவள் தன் மாமாவைத்தேடிச் சென்றாள். “மாமா, நான் உங்களோடு தனியாகப் பேச முடியுமா?” என்று மிகத் தயக்கத்துடன் கேட்டாள்.

“வா, வா. நீ மதுரைக்குப் போனது பற்றி எல்லாம் சொல்லு, காத்துண்டு இருக்கேன்” என்றார் மாமா, உற்சாகமாக.

“கல்யாணம் நல்லாத்தான் நடந்தது மாமா. ஆனா… மாமா, நீங்களே போய் மதுரைக் கடைக் கல்லாப் பெட்டியிலே கொஞ்ச நாள் இருங்க” என்று கூறிவிட்டு காம்யா கண்களில் நீர் தளும்ப நின்றாள்.

“என்ன சொல்லு”.

“என்ன சொல்லட்டும் மாமா? விருப்பமில்லாதலங்களை வரவழைத்துக் கடையிலே அமர்த்தினீங்க போலும், உங்களுக்கே துரோகம் செய்யறவங்களை என்னாலே எப்படி மாமா எப்படி…” மேலே பேசமுடியாமல் திணறினாள் பெண்.

”வீரப்பனுக்குத் தெரியுமா?”

“விவரம் தெரியாதுன்னு நினைக்கிறேன், சந்தேகம் மட்டும் இருந்தது. மேற்கொண்டு நான் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.”

“கேட்கவே நல்லா இருக்குது! பம்பாயிலே அவங்க சின்ன மாமாபொண்ணும் இவனும் கண்டபடி சுத்தறதாச் சொன்னாங்க. இப்படிப் பிடிச்சுப் போட்டேன். சரி, நல்லது. காம்யா, நீ போ, நான் பார்த்துக்கறேன். நீ கவலை இல்லாமல் சிரித்த முகத்துடன் இரு.”

காம்யா நடுங்கி விட்டாள். “மாமா நீங்க இப்படி இடிஞ்சு போவீங்கன்னுதான் நான் சொல்லத் தயங்கினேன். நானே உங்க சந்தோஷத்தைக் குலைச்சுட்டேனே?” என்று அலமந்தாள்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லை. குழந்தை. வாழ்க்கையிலே எத்தனையோ தோல்விகளை சந்தித்த பிறகுதான் வெற்றியைக் காண முடியும். இந்தச் செய்தியைத் தாங்கிக்கச் சக்தி இருக்குது எனக்கு. ஆனால் நான் ஆசையோடு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கப் பார்த்தேன்”

காம்யா தன் மாமாவுக்குக் காபியை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றாள், ”மாமா, மாமியிடம் ஒரு தினுசாகச் சொல்லிலிட்டேன்” என்று கூறினாள்.

“என்ள சொன்னே? பெரியப்பா வீட்டிலிருந்து சீர் செனத்தி வராதுன்னு கோடி காட்டிட்டியோ?”

“கோடியுமில்லே நுனியும் இல்லை அவுங்க நம்முடன் உறவு வைச்சுக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டேன்”.

”அது அவளுக்கு தல்ல பாயிண்ட். ஏற்கனவே முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். இப்ப நிம்மதி. சீர் கறந்து தன் பிள்ளைக்குக் கல்யாணம் செய்துவைப்பாள். ” என்று மாமா பேசி முடிப்பதற்குள் யாரோ தெருக் கதவை நாசுக்காகத் தட்டுவது கேட்டு மாமனும் மருமகளும் திரும்பினார்கள்.

ஓர் இளைஞன் வாசற்படியில் நின்றிருந்தான். “உங்களோடு முக்கியமா ஒரு பேச்சுப் பேச வந்திருக்கிறேன். உள்ளே வரலாமா?”

“வாங்க, உள்ளே வாங்க” என்று அழைத்தார் மாமா, நாற்காலியில் அமரும் படி கை காட்டியவாறே. “நீங்க….?” என்று சந்தேகத்துடன் இழுத்தார்.

“என் பெயர் கிரி, சுகந்தி எழுதிவிட்டாளோ என்று சந்தேகப்பட்டேன். இந்தாங்க, இது எங்க அப்பா கடிதம். உங்களுக்கும் சுகந்தி தாத்தாவுக்கும் மனஸ்தாபம்னு கேள்விப்பட்டேன். இது குடும்பமே வேறே..”

மாமா வந்த இளைஞளை உற்றுப் பார்த்தார், சிவ வினாடிகள். பிறகு அவன் குடும்பத்தார் அவன் படிப்பு, வேலை, முன்னேறும் வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் அலசினார்.

“காம்யா எனக்கு மிகவும் செல்லம். அவளை நன்றாகக் காப்பாற்றக் கூடியவர்களா என்று நான் திருப்தியாகணும்”.

“உங்கள் சம்மதம் தெரிந்தால், என் அப்பா, அம்மாவே இங்கே வந்து முறையாகப் பெண் கேட்பாங்க.”

கொஞ்ச நேரம் கழித்து மாமாவின் விளி மணி அடித்தது கேட்டு, காம்யா வந்து “என்ன மாமா?” என்று வினவினாள்.

“போய் மாமியைச் சீக்கிரம் அனுப்பு. நீ டிபன் எடுத்துண்டு வா, என்ன?” என்று பணித்தார் மாமா.

காம்யா சென்று, மாமியை அனுப்பி வீட்டு தன் மாமா சொன்ன வேலைகளைச் செய்வதில் முனைந்தாள். மாமா அங்கு வந்தார்.

“மாமா!”

“பையனை உங்க மாமி கையிலே தவிக்க விட்டு விட்டுவந்திட்டேன் ”என்று கூறி அவர் கண் சிமிட்டினார்.

“என்ன மாமா இதெல்லாம்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?”

”அவனைப் பார்த்ததும் நீ என் தூக்கிப் போட்ட மாதிரி சுலவரம் அடைஞ்சே? இந்தக் கிரிதானே?” என்று அவள் வாயைக் கிண்டினார் மாமா.

காம்யாவின் கண்கள் பனித்துவிட்டன. “உண்மையா இத்த மனிதனை நான் பார்த்தது தவிர, பேசியது இல்லை. விவரமும் தெரியாது, என்னை நம்புங்க, மாமா, நான் ஊருக்குக் கிளம்பறச்சே சுகந்தி என்னவோ உளறினாள். அதனால்தான் எனக்குக் கல்யாணமே வேண்டாம், மாமா, நீங்க நினைச்சு மாதிரி மாமியும் நினைக்கலாமில்லையா? இந்த ஆளைப் பார்த்ததும் ரவி மீது பழி சுமத்தினதாக…” அவள் குரல் தழதழத்தது.

“போதும் உளறினது. உன்னை நம்பாமல் இருக்க எனக்கு என்ன பைத்தியமா? பையன் நல்லவனாக இருக்கிறான். உன்னை மனசோடு விரும்புகிறான். எதற்கும் சொல்லி வைக்கலாம்னு வந்தேன். வா, வா” என்று கூறிவீட்டு அவர் ஆனந்தமாக ஒரு பாட்டை முனகியபடியே தன் அலுவலக அறைக்கு மீண்டார்.

– மங்கையர் மலர், நவம்பர் 1982.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *