எமலோகத்தில் ஒரு கூட்டம்




எமலோகத்தில் எமதர்மர் தலைமையில் அவசர அவசரமாக ஒரு கூட்டம் நல்ல எமகண்ட நேரத்தில் நடந்துக் கொண்டிருந்தது.

சித்ரகுப்தன் மற்றும் எமதூதர்கள் சபை முழுக்க நிறைந்திருந்தனர். விஷயம் இது தான். பூலோகத்தில் வெங்கடேஸ்வரன் என்ற நபர் ஒரு வருடத்திற்கு முன்னரே எமலோகத்திற்கு வர வேண்டியது. அவர் எப்படித் தப்பி நழுவிக் கொண்டிருக்கிறார் என்பது தான் அந்தக் கூட்டத்தில் முக்கியமான விவாதப் பொருளாகியது. ‘ஈரேழு உலகம்’ பத்திரிக்கையில் நாரதர் ‘இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. விதிப்படி ஒருவரின் ஆயுள் முடியும் போது, அவரின் உயிரைப் பறிக்கும் எமதர்மனின் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் பேச்சிற்கே இடமில்லை. இந்த முறைமையில் யாரும்
தலையிட அனுமதிக்கக் கூடாது” என்று பதிப்பிட்டு இருந்தார். ‘கடந்த பல்வேறு காலகட்டங்களில் எமதர்மருக்கு நிர்ப்பந்தங்கள் இருந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, சத்தியவான்-சாவித்திரி, மார்க்கண்டேயர் போன்றவர்களின் வரலாற்றை நினைவு கூர்ந்தார். இந்த மாதிரி நிர்பந்தங்களுக்கு எமதர்மர் இனி எப்போதும் துணைப் போகக்கூடாது’ என்றும் நாரதர் தன் எண்ணத்தை அதில் வெளிப்படுத்தி இருந்தார். ஒட்டுமொத்த மீடியாக்களும் அந்தக் கூட்டத்தின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
சித்ரகுப்தன் முன்னுரையை வழங்கினார்.
“இந்த வெங்கடேஸ்வரன் என்ற நபர் தமிழ்நாட்டில் பிறந்தவர் அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் ‘’வெங்கி என்பது தான் அவருடைய பட்டப் பெயர். அவர் காலேஜ் படிப்பு முடிந்து சில வருடங்கள் ஹைதராபாத்தில் வேலையில் இருந்த போது அவர் பெயர் ரேஷன் கார்டில் வெங்கடேஸ்வரலு என்று ஆகிவிட்டது. பின்னர் அங்கிருந்து கர்நாடகா பெங்களூருவில் அவர் வேலை நிமித்தமாக மாறிச் சென்று, அங்கே ரேஷன் கார்டில் வெங்கடேஸ்வரா என்று மாற்றம் பெற்றது”.
தலைமை எமதூதர் மேற்கொண்டு விவரங்களை முன்மொழிந்தார்.
“அவருடைய ஆதார் கார்டில் அப்பாவின் பெயரை இனிஷியலாகப் போட்டு, ‘எ வெங்கடேஷ்’ என்றும், பான் கார்டில் ‘வெங்கடேஷ் ஆனந்த்’ என்று முழுப்பெயராகவும், பாஸ்போர்ட்டில் ‘வெங்கடேஷ் ஆனந்த் குமார்’ என்று நீட்டியும் இருக்கின்றன. அவருக்கு மூன்று பிறந்த தேதிகள் இருக்கின்றன. ஒன்று ஜாதகப்படி எழுதியது. இன்னொன்று ஸ்கூல் பிரகாரம். பான் கார்டில் வேறொரு பிறந்த தேதி. இத்தகைய குழப்பமான நிலையில் அந்த நபரை இழுத்துக் கொண்டு வருவது பெரும்பாடாக இருக்கிறது. “ஆதார் தரவுத்தளத்தில் (DATABASE) உள்ள கைரேகை அல்லது கருவிழி வைத்து அவரை ‘அவர் தான்’ என்று நீங்கள் முடிவு செய்திருக்கலாம்?”.
“இந்த நபர் தன்னுடைய கைரேகையைத் தேய்த்து மாற்றிக் கொண்டுள்ளார். அவருடைய கருவிழியும் சரிவர ஒத்துப் போக வில்லை”.
“அந்த நபரின் பட்டப்படிப்பு போலி என்று உறுதியாகி, வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு, திரும்ப தமிழ்நாட்டில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். கோடிக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மிகவும் துரிதமாக மிகப்பெரிய அரசியல் தலைவராகி விட்டார். இரண்டு முறை ஜெயில் வாசமும் அனுபவித்துள்ளார். அவரில்லாமல் ஒரு
அணுவும் அசைய முடியாத அளவிற்கு அரசியல் பலத்துடன் திகழ்கிறார். நம் பாசக் கயிறுடன் தங்கள் கையொப்பமிட்ட அவரின் மரணத்தேதி குறித்த ஆவணத்துடன் சென்று அவரை இழுக்க முற்படும் போது அவர் நம்மை ஆவேசமாக தடுத்தாண்டு விட்டார்”.
“நீங்கள் எப்படிப்பட்ட நபரைப் பிடிக்க வருகிறீர்கள் என்று தெரியுமா?. நீங்கள் குறிப்பிடுபவர் நானில்லை. நான் கீழ்கோர்ட்டில் தடை வாங்கி விட்டேன்”.
தலைமை எமதூதர் மேலும் விளக்கினார்.
“நாம் ஹைகோர்ட் சென்று அந்த தடையை விலக்கிக்கொள்ள அப்பில் செய்தோம். ஆனால், அந்த நபர் நெஞ்சுவலி என்று பிரபலமான அவருடைய ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார். அர்ஜெண்டாக ஆபரேஷன் செய்ய வேண்டுமாம்.”
“ஆபரேஷன் முடிந்ததா இல்லையா?”.
“உடல் நலத்தை மானிட்டர் செய்ய வேண்டும் என்று இரண்டு வாரங்கள் கடத்தி விட்டார்கள். இன்னும் அறுவை சிகிச்சைக்காக எதுவும் ஆரம்பிக்கவில்லை. பிபி, சுகர், ECG எல்லாம் நார்மல் ஆக வேண்டுமாம். உடம்பில் இருக்கும் ஒன்பது ஓட்டைகளையும் சரி செய்ய வேண்டுமாம்”.
“நீங்கள் சுப்ரீம் கோர்ட் செல்ல வேண்டியது தானே”.
“அதையும் பார்த்து விட்டோம். கோடை விடுமுறைக்குப் பின் தான் இந்த கேசை எடுப்பார்கள் என்று கூறி விட்டார்கள். அதற்காகக் காத்திருந்தோம். பின்னர், சுப்ரீம் கோர்ட் எங்களை கீழ் கோர்ட்டுக்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டது. இப்போது எங்கள் வழக்கு கீழ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த எமதூதர்கள் போவதும் வருவதுமாக அலைந்து கால் தேய்ந்தது தான் மிச்சம்”.
முடிவில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆலோசனைக் கூட்டம் விழி பிதுங்கி நின்றது. எந்த முடிவும் எட்டப்படாமல். அந்தக் கூட்டம் அடுத்தக் கூட்டத்திற்கு எப்போது தேதி என்றும் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இவர்களுக்கெல்லாம் கொரோனா போன்று எதையாவது அவிழ்த்து விட்டால் தான் காரியத்தை சுலபமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று ஒரு சில எமதூதர்கள் அங்கலாய்த்தார்கள். இதற்கிடையில், கண்காணிக்கும் டாக்டர்கள் குழுவில் இருந்த ஒரு சிறப்பு டாக்டர் மாரடைப்பால் இறந்து விட, இன்னொரு டாக்டர் தன்னுடைய உயிருக்கு எண்திசைகளிருந்தும் அச்சுறுத்தல் ஆபத்து என்று சொல்லி குழுவிலிருந்து விலகி விட்டார். “என்ன நடக்கிறது இந்த பூவுலகில்?” என்று திரிலோக சஞ்சாரி நாரதர் பத்திரிக்கையில் விளாசினார். நிலைமையை
ஒரு வாரத்திற்குள் எமதர்மன் சரிப்படுத்த முடியாதப் பட்சத்தில் முக்கண் சிவபெருமானே களத்தில் இறங்க வாய்ப்புண்டு என்று கடைசியாக வந்த நம்பத்தகாத தகவல்கள் தெரிவிக்கின்றன.