எமன்! எமன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2025
பார்வையிட்டோர்: 277 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏ மூதேவி! இங்கே வா” என்று கூப்பிட்டாள் சொர் ணம். பல்லாவரம் குவாரியில் கல்லுடைக்கிற மாதிரி அவள் நெற்றியில் விண்விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது. (இல்லாவிட்டால் மட்டும், “பானு, என் செல்லம்மா, கண் ணம்மா” என்று கூப்பிட்டுவிடப் போகிறாளா என்ன? அது ஒன்றுமில்லை.)

பானு சிலேட்டைச் சுவரோடு சாய்த்து, எழுத்து அழிந் விடாமல் வைத்தாள். மெதுவாய் வந்தாள். எச்சில் தொட்டு சிலேட்டைத் துடைத்ததைச் சித்தி பார்த்து விட்டாளோ என்ற குலைநடுக்கம், குழந்தையின் பச்சை மேனியெங்கும் பரவுவது, கிழிசல் பாவாடை சொக்காயை யும் மீறிக்கொண்டு தெரிய வந்தது.

”என்ன சித்தி?”

சொர்ணம் தலையைச் சுற்றி, நெற்றியின் குறுக்காக ஒரு துண்டை இறுகக் கட்டிக் கொண்டிருந்தாள். “சோற்றுக்குக் கூப்பிட்டால் பறந்து கொண்டு வருகிறாயே, அந்த மாதிரி மற்றச் சமயங்களிலும் வாயேன், தரித்திரம்!” என்று அர்ச்சனை செய்துவிட்டு, “மூன்றாவது வீட்டு வாசல்லே பால்காரன் வந்து நிற்கிறானா, பார்த்துத் தொலை!” என்று கட்டளையிட்டாள்.

இந்த மட்டோடு விட்டாளே என்ற மகிழ்ச்சியுடன் வாசலுக்கு ஓடிப் பார்த்துவிட்டுத் திரும்பிய பானு, “காணலே சித்தி அவனை” என்றாள்.

“நீ போனாயானால் என்னதான் விடியும்?” என்று சிடு சிடுத்துவிட்டு, “இந்தாடி, எங்கே ஓடறே? இதைக் கொஞ்சம் இழுத்து இறுக்கி விடு” என்று, நெற்றிக் கட்டைக் காட்டினாள் சொர்ணம்.

குழந்தை தன் பிஞ்சுக் கையால் என்ன இழுத்தும், கட்டு அதற்கு மேல் இறுகவில்லை. “கொட்டிக்கிறாயே வேளைக்கு இரண்டு படி? எங்கே போகிறது எல்லாம்?” என்றாள் சொர்ணம். தனக்கும் அதுதான் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிற மாதிரி பானு தலையைக் குனிந்து கொண்டு மௌனமாக நின்றாள்.

”மண்டையிடி பிளக்கிறது. மரமாட்டம் நிற்காதே. அந் தப் பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் ஓட்டலில் காப்பி வாங்கி வா. அந்தப் பாவி எப்ப வருவானோ தெரியவில்லையே? ஈசுவரா!” என்று தன் தலைக்கட்டைத்தானே இறுக்கிக் கொண்டாள் சொர்ணம்.

பானு வலை பீரோவைத் திறந்து பிளாஸ்க்கையும் சில் லறையையும் எடுத்துக் கொண்டபோது, ‘அந்தப் பாவி எப்ப வருவானோ?’ என்று சித்தி யாரைச் சொன்னாள் என்று யோசித்தாள். அப்பாவையா, பால்காரனையா என்று அவ ளுக்குத் தெரியவில்லை.

“எவ்வளவடி சில்லறை எடுத்துக் கொண்டே? காட்டி விட்டுப் போ” என்று சித்தி அதட்டினாள். “சுத்தத் திருட்டுக் கொட்டாச்சே!”

“இருபது பைசா எடுத்துக் கொண்டேன், சித்தி” என்று தன் உள்ளங்கையைப் பிரித்துக் காட்டினாள் பானு.

“கெட்ட கேட்டுக்கு மருதாணி இல்லாமல்தான் அழுகிறது! அந்தக் கிழத்துக்கும் வேலையில்லை, உனக்கும் நாதியில்லை” என்று, என்றைக்கோ ஒருநாள் பானுவுக்கு மருதாணி இட்டு விட்ட எதிர் வீட்டுப் பாட்டியம்மா ஒருத்தியைத் திட்டினாள் சொர்ணம். “சீக்கிரம் வந்து தொலை, பராக்குப் பார்த்துக் கொண்டு எங்கேயும் நிற்காமல். தெரிகிறதா?”

“இதோ அஞ்சு மினிட்டிலே வந்திடறேன் சித்தி” என்று வாக்களித்துவிட்டு, பிளாஸ்க்கின் வாரைத் தோளில் மாட்டிக் கொண்டு, பிளாஸ்கையும் மார்போடு அணைத்துக் கொண்டு புறப்பட்டாள் பானு. வெள்ளை வெளேரென்று துணி கட்டிக் கொண்டிருந்த சித்தியின் கடுமையான, ஆனால் அழகிய முகம் அவள் நினைவில் நின்று கூடவே துணை வந்தது. சித்திக்கு எத்தனை சுருட்டை சுருட்டையாய்க் கறுப்பு முடி! நக நுனியாலே இமையின் கீழே மை தீற் றிக் கொள்கிறபோது சித்தியோட ரவுண்டு தலை என்ன அழகாய்ச் சாய்ந்து கண்ணாடியைப் பார்த்துக் கொள்ளும்! வெற்றிலை போட்டுக் கொண்டால் கிளியாட்டம் என்ன மாய் உதடெல்லாம் சிவந்து ரத்தம் வர்ற மாதிரி இருக்கும்! சாமி பகவானே, நான் கூடப் பெரியவளானதும் எங்க சித்தி மாதிரியே அழகாயிருக்கணும்…

தனக்குத்தானே பேசிக் கொண்டு நடந்த பானு, சாலை மத்தியில் கப்பிக் கற்கள் குவித்து வைத்திருப்பதைக் கவ னிக்கவில்லை. கால் இடறித் தடாலென்று விழுந்தாள்.


ஓட்டலில் எல்லா சர்வர்களும உல்லாசமான, உற்சா கமான வாலிபர்கள்தான். இருந்தாலும், பக்கத்துத் தியேட்ட ரில் சர்வர் சுந்தரம் சினிமா சக்கைப்போடு போட்டான பிறகு அவர்களுடைய உற்சாக மீட்டரில் மேலும் பத்து டிகிரி ஏறியிருந்தது.அங்கே சினிமா பார்த்துவிட்டு இங்கே டிபன் சாப்பிட வருகிறவர்கள், “என்னய்யா சர்வர் சுந்தரம், என்ன இருக்கு சூடா?” என்று விசாரித்தால், மகுடாபிஷே கம் பண்ணின மாதிரியான ஒரு பரவசம் சர்வர்களின் மேனி யில் புளகித்து ஓடுவது வழக்கமாயிற்று.

சும்மா ஆணழகனாயும் உற்சாகியாகவும் மட்டுமே இருந்து வந்த சர்வர் பாலு, வாழ்க்கையிலே வேறுவிதமான ரொமான்ஸ்கள் எங்கே, எப்படிக் கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருந்தான். பார்சல் கட்டித் தருகிற இடத்தில் அன்று அவனுக்கு டூட்டி போட்டிருந்தார்கள்.

காலியாகி விட்ட தாம்பாளத்தில் மைசூர் போண்டா வைக் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போனான் சமையல் அஸிஸ்டெண்ட்.

“பாலு, போண்டாவைப் பார்த்தியா? மாஸ்டர் கன்னங் கரேல்னு தீசலாய் அடிச்சிட்டார், நம்ம பாத்திரம் கழுவுகிற நாகம்மா நிறத்துக்கு!” என்று சர்வர் நடராஜன் சிரித்தான்.

“அது ஏம்ப்பா ‘நம்ம’ நாகம்மான்னு சொல்லி, என் னோட ஜாயிண்ட் போடுகிறே? நீயே வைச்சுக்க!” என்று பாலு திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பளபள வென்ற பிளாஸ்க் அவன் எதிரிலிருந்த பலகையில் வைக்கப் பட்டது.

“பாப்பாவுக்கு என்ன வேணும்?” என்று கேட்டான் பாலு, ‘கௌண்ட்ட’ருக்கு மறுபுறத்தில் இருந்தவாறே குனிந்து.

‘நான் ஒண்ணும் பாப்பா இல்லே, அண்ணா! என் பேர் குமாரி பானு.ஒரு கப் காப்பி போடுங்க” என்றாள் பானு. ”அடீங்கம்மான்னானாம்!” என்று பிளாஸ்கின் குப்பியைத் திறந்தவன், ‘அடடா! பிளாஸ்க் உடைஞ்சு போயிருக்குதே பாப்பா?” என்றான்.

”உடைஞ்சு போச்சா?” பானுவின் முகம் சவம்போல் வெளுத்து விட்டது. ”ஐயையோ! எங்க சித்தி என்னைக் கொன்னுடுவாளே அண்ணா! என்னைக் கொன் னுடுவாளே!” என்று மளமளவென்று கண்ணீர் வழிந்து கன் னத்தில் ஓட, ஹோவென்று அழத் தொடங்கி விட்டாள்.

“ஐயய்யே! குமாரி பானு இப்படியெல்லாம் அழ லாமோ?” என்று பரிகாசத்துடன் அவள் கண்ணைத் துடைத்து விட்டான் பாலு. “எங்கேயாவது விழுந்திட்டியா?” “ஆமாம், அண்ணா. எங்க சித்தி என்னைக் கொன்னுடுவாளே?”

“ஏன், பார்க்காமல் வந்தியா தெருவிலே?”

“யோசிச்சுக்கிட்டே வந்தேன் அண்ணா. எங்க சித்தி என்னைக் கொன்னுடுவாளே இப்போ?”

”அட! யோசிச்சுக் கிட்டே வந்தியா? பெரிய சாக்ரடீசு தான். என்ன யோசிச்சுக்கிட்டு வந்தே?”

“எங்க சித்தி மாதிரியே அழகாயிருக்கணும்னு சாமியை வேண்டிக்கிட்டு வந்தேன்.”

ஹோஹ்ஹோ என்று சிரித்த சர்வர் நடராஜன், பாலுவின் விலாவிலே குத்தினான்.

“அட, சும்மாயிரப்பா’ என்று அவனுக்கு அதட்டல் போட்டானே தவிர, பாலுவின் எண்ணங்கள் மடை உடைத் துக் கொண்டு கிளம்பின.

”நடராஜா, நீ கொஞ்சம் பார்த்துக் கொள். இந்தக் குழந் தைக்கு ஏதாவது ஆறுதல் சொல்லி விட்டு வரு கிறேன்” என்றவன், மாடிக்கு விரைந்து தன் ஸ்லாக்கை மாட்டிக் கொண்டான். கிராப்பை வாரிவிட்டுக் கொண்டு, தன் சொந்த உபயோகத்துக்காக வாங்கி வைத்திருந்த பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டான். ஒரு கப் காப்பி ஊற்றிக் கொண்டு, “குமாரி பானு, நீ என்னோடு வா. நான் சொல் கிறேன் உன் சித்தியிடம்” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு முதலாளியிடம் சென்றான். கால்மணி நேரம் அனு மதி வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.


“ஏண்டி மூதேவி, இதோ இருக்கிற ஓட்டலுக்குப் போய்விட்டு வர உனக்கு இத்தனை நாழியா?” என்று சீறிய சொர்ணம், மூதேவிக்குப் பின்னால் ஒருவன் நிற்பதைக் கண் டதும் மருட்சி அடைந்தாள்.

“அடப் பாவமே! தலைவலியோடு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தீர்களா?” என்று பாலு இயல்பாகக் கேட்டதும் தான் அவளுக்கு நினைவு வந்தது. தலையில் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்து எடுத்துவிட்டு, “யாரு நீங்க? இவள் என்ன பண்ணினாள்?” என்று கேட்டாள்.

என்ன சொல்லிக் காப்பாற்றப் போகிறானோ தன்னை என்று கலவரத்துடன் அவன் முகத்தையே பார்த்தாள் பானு.

”ஒன்றுமில்லை… நீங்கள் முதலில் காப்பி குடிங்க, பாவம்” என்று பிளாஸ்க்கின் மூடியிலேயே ஊற்றித் தந் தான் பாலு. “குடிங்க… நான் ஓட்டல் முதலாளியின் அஸிஸ் டெண்ட். அவருக்குத் தூரத்து உறவு கூட. பிளாஸ்க்கைக்கு முந்தை நீட்டியதும் அலட்சியமாய் வாங்கினேன் பாருங்கள், டமாரென்று மேஜையில் இடித்து விட்டேன். உடைந்து விட்டது. என் சொந்த பிளாஸ்க்கை எடுத்து வந் தேன். குழந்தை ரொம்ப பயந்ததால், நானே சொல்கிறேன் வா என்று அழைத்து வந்தேன்…”

சொர்ணம் காப்பியைக் குடித்துக் கொண்டே, “ரொம்பப் பயந்தவள்தான்! வீட்டிலே அட்டகாசம் பண்ணுகிற போது பார்க்க வேண்டும்… நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள்?” என்று காலி பிளாஸ்க்கைத் திருப்பிக் கொடுத்தாள்.

“பரவாயில்லை. இது இங்கேயே இருக்கட்டும். நான் மூன்றிக்கட்டை… பிரம்மசாரி. எனக்கெதற்கு பிளாஸ்க்?” என்று அவள் பக்கமாக நகர்த்தினான்.

பானுவுக்கு அப்பாடா என்று நிம்மதியாகப் பெருமூச்சு வந்தது, விஷயம் இத்தனை எளிதாகத் தீர்ந்ததைக் கண்ட தும்.

சொர்ணம், “இது ஏதோ உசத்தி பிராண்டாகத் தோன்று கிறது. எங்கள் பிளாஸ்க் சாதாரணம். அதுவும் இவள் உடைத் து விட்டாள் என்று தெரிந்தால் இவள் அப்பா ஒரே நாளில் அரை டஜன் வாங்கி வருவார். அத்தனை செல்லம்” என்றாள்.

”இவள் அப்பா என்ன பண்ணுகிறார்?” என்று பாலு விசாரிக்கத் தவறவில்லை.

சொர்ணமும், “பஸ் கம்பெனியில் இன்ஸ்பெக்டர் வேலை” என்று சொன்னதோடு நிற்கவில்லை. ‘பாதி நாள் ஊரிலே இருக்க மாட்டார். வயசாகிட்டதாலே ராத்திரி உட னுக்குடனே திரும்ப முடிகிறதில்லை… அந்தந்த ஊரிலேயே தங்கிவிடுகிறார்…” என்றும் தெரிவித்தாள்.

”வரட்டுமா? நேரமாகிறது” என்று அரைமனதுடன் கேட்டான் பாலு.

மிகக் கச்சிதமாகக் கத்திரித்து விடப்பட்டிருந்த அவனுடைய அரும்பு மீசையில் பார்வையைப் பதித்த வண்ணம், ‘பால்காரன்கூட வந்துவிட்டான்… காப்பி சாப்பிட்டு விட்டுப் போங்களேன்” என்று சொர்ணம் உபசரித்தாள்.

“சரிதான். இருபத்து நாலுமணி நேரமும் காப்பியிலே நீச்சலடிக்கிறவன் நான். ‘கொஞ்சம் காப்பி சாப்பிடாமல் போங்களேன்’ என்று சொன்னால்தான் எனக்குச் சந்தோஷம்” என்று பாலு பதிலளிக்க, இருவரும் உரக்கச் சிரித்த பிறகு அவன் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டான்.

‘எமன்! எமன்! இதன் எதிரிலே ஒரு காரியம் பண்ணக் கூடாது!’ என்று பானுவை அடிக்கடி சொர்ணம் திட்டுவது வழக்கம். அது உண்மைதான். பதினொரு பிராயத்துக்குள், ஒரு பாட்டியம்மாவின் உலக அறிவு உண்டு பானுவுக்கு.

“மூதேவி! என்னத்தைக் கண்டுவிட்டு இப்படி மரமாட் டம் நிற்கிறே! உன் அப்பா வந்ததும் எல்லாத்தையும் ஒப் பிக்கிறதுக்காகவா? நாக்கிலே இழுத்துப் பிடுவேன் சூடு!” என்று மிரட்டினாள் சொர்ணம்.


இதற்கு மறுநாள், கையில் ஒரு பெரிய ஜாங்கிரிப் பொட்டலத்துடன் பாலு வந்தான்.

அடுத்த தினம், ‘பானுவை சினிமாவுக்கு அழைச்சிக் கிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றவாறு டெரிலின் சட்டை பளபளக்க, மினுமினுக்கும் கிராப்புடன் உள்ளே நுழைந்தான்.

”பானுவையா? அவள் எப்படித் தனியே வருவாள்?” என்றாள் சொர்ணம்.

“தனியே வருவானேன்? துணைக்கு நீங்களும் வாருங்களேன்…” என்று துணிச்சலாய் அழைத்து விட்டான் பாலு.

சொர்ணத்தின் முகம் சிவந்து விட்டது. இருதயம் துடித்த துடிப்பு! வார்த்தைகள் தடுமாற, “இப்ப வேண்டாம்… இன் றும் கொஞ்ச நாளாகட்டும்” என்றாள்.

“கொஞ்ச நாளாகட்டும் என்கிறீர்களா?” பாலு கண்ணைச் மிெட்டிக் கொண்டு கடகடவென்று சிரித்து விட்டான்.


மறு தினம் பானுவின் அப்பா ஊரிலிருந்து வந்துவிட்டார்.

வரும்போதே கடுமையான ஜூரம். நரைத்திருந்த கேசம் நெருப்புப் பட்டு எரிகிற மாதிரிக் கொதித்தது. கறுப்புக் கம்பளியைப் போர்த்துக்கொண்டு படுத்தவர், ‘குழந்தையை எங்கேயடி அனுப்பியிருக்கிறாய்? பானு, கண்ணு பானு!” என்று அரற்றினார்.

“இதோ வந்துவிடுவாள், ஏன் இப்படித் திடீரென்று ஜுரம்? மழையிலும் காற்றிலும் அலைந்தீர்களா?” என்று அவரருகே அமர்ந்து நெற்றியில் கை வைத்தாள் சொர்ணம்.

பிளாஸ்கில் காப்பி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்த பானு ஒரு வினாடி தயங்கினாள். அழகு கொழிக்கும் சித்தியின் மீது அவள் பார்வை பதிந்தது. எப் போதும் போல, சித்தி மீது பிரியமில்லாமல் முடங்கிக் கிடக்கும் தந்தையின் மீதும் விழிகளைச் செலுத்தினாள்.

“ஜூரமா அப்பா?” என்று கேட்டுக் கொண்டே அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள் பானு. “காப்பி சாப்பிடறீங்களா அப்பா?” என்றாள்.

“கொண்டாடி என் கண்ணம்மா” என்று குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டார் அவர்.

“புதுக் காப்பி, புதுப் பிளாஸ்க்கு” என்றாள் பானு. “புதுப் பிளாஸ்க்கா? ஏது?” என்று கம்பளியை விலக்கி விட்டுப் பார்த்தார்.

“அது உடைஞ்சு போயிட்டுது… இது… இது…”

”வேறே வாங்கினேன்” என்று குறுக்கிட்டாள் சொர்ணம்.

தன் சித்தியைப் பார்த்தாள். என்ன கொடுமைக்காரியானாலும் அதர்மத்தை ஒப்புக் கொள்ள அஞ்சுகிறாள்!

”சித்தி… இந்தா காகிதம்…” என்று நீட்டினாள் ஒரு துண்டுக் கடிதத்தை.

“என்ன காகிதம்?” என்று அவள் அப்பா கேட்டார்.

”வந்து… சித்தி அஞ்சு ரூபாய் நோட்டு கொடுத்தாள்… பாக்கி என்ன சில்லறையென்று ஓட்டலில் எழுதி வாங் கிட்டு வந்தேன்” என்று பானு தானாகவே சொன்னாள், சித்தியின் பேயறைந்த முகத்தைப் பார்த்தபடியே.

அந்தத் துண்டுக் காகிதத்தில்,

“இன்றைக்குச் சாயங்காலமாவது வெகுநே ரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அனுமதிப்பாயா? – பாலு”

என்று எழுதியிருப்பதைப் பானு அறிவாள்.

குப்பென்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சொர்ணம். அவள் மேனி கிடுகிடுவென்று ஆடிக் கொண்டிருந்தது. துண்டுக் காகிதத்தை சுக்கல் சுக்க லாய், பொடிப் பொடியாய்க் கிழித்தெறிந்தாள். அப்படியும் அவள் விரல்களின் நடுக்கம் நிற்கவில்லை. படீலென்று அறை மூலையை நோக்கிப் பிளாஸ்க்கை எறிந்தாள் பானு.

சடக்கென்று எழுந்து உட்கார்ந்தார் அப்பா. ‘அடிப் பாவி! எதுக்காக அந்தப் பிளாஸ்க்கை உடைத்தாய்? பைத்தியம் பிடித்துப் போச்சா உனக்கு?” என்று பதறினார்.

”ஊம்… ஆமாம்பா… இல்லேப்பா… என்னவோ ஞாப கத்திலே தெரியாமப் பண்ணிட்டேன் அப்பா…’ என்று பானு திணறினாள்.

“என்னமோ பந்து என்று நினைத்து விட்டாள் போலி ருக்கிறது…” என்றபடி பானுவை அணைத்துக் கொண்டாள் சொர்ணம், நாலு வருடங்களில் முதல் தடவையாக.

பானு நிம்மதியுடன் கண்ணை மூடிக்கொண்டு, ‘சாமி பகவானே, எனக்குச் சித்தி மாதிரி அழகு மட்டும் தந்தால் போதாது. அவளைப் போலவே மனசில் உறுதியும் கொடுக் கணும்” என்று வேண்டிக் கொண்டாள்.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *