என் பிரியசகி






(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம் – 10

மிக மிக கடினப்பட்டு கற்றுச் சூழலை உணர்ந்தாள் சத்யா. நாடிநரம்புகளில் ஊடுருவி உடம்பெங்கும் நடுக்கம் பரவியது.
”சொல்லு சத்யா… யாரந்த மகேந்திரன்?” சத்யா கண்ணீர் மல்க தலை கவிழ்ந்திருந்தாள்.
“சொல்லுன்றேன்ல… ஏமாந்தவன் கேள்வி கேட்கக் கூடாதா?”
“ஐயோ… பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க. நான் உங்களை எந்தளவு நேசிக்கிறேன்னு…”
”வசனம் பேசாதே. பதிலை சொல்லு. மகேந்திரன் யார்?”
“அ… அவன் என்னை காதலிச்சான்”
“நீ?”
“அது… அது… நான் அப்ப சின்னப் பொண்ணுங்க. உலகம் புரியாத வயசு. ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். அவன் விரட்டி, விரட்டி காதலிச்சான். அந்த இன்பாச்சுவேஷனை காதல்னு நினைச்சு… நானும்…”
“காதவிச்சே!”
“இல்லேங்க விவரம் தெரிஞ்சு நான் நேசிச்ச ஒரே ஆண் நீங்க தான்!”
“என்ன அழகாய் பேசறே சத்யா? முத்தம் வரைக்கும் இடம் கொடுத்திருக்கே யார் கண்டது அதற்கு மேலும்..”
”ப்ளீஸ்… ப்ளீஸ்… அபாண்டமாப் பேசாதீங்க. பதினாறு, பதினேழு வயசுல காதலைப் பத்தி என்னங்க தெரியும்? அவன் தப்பானவன்னு தெரிஞ்சதும், அவனை ஒரேயடியா தலை முழுகினேன்ங்க!”
“ஓஹோ… அதனாலதான். அவன் கொடுத்த லெட்டரையும், போட் டோவையும் பத்திரமா வச்சிருந்தியாக்கும்”.
“உண்மையை சொல்றேங்க அவன் எனக்கு நிறையவே கடிதம் கொடுத்தான். எல்லாத்தையும் கிழிச்செறிஞ்சுட்டேன். இது மட்டும் எப்படியோ, எதிலேயோ தங்கிடுச்சு”.
“ஏன்… இத்தனை பெரிய விஷயத்தையும் என்கிட்டே மறைச்சே?”
“பயமாயிருந்துச்சுங்க. அதனால என்னை வெறுத்திடுவீங்களோன்னு. என் மனசுல உங்களைத் தவிர யாரும் இல்லை. அப்படியிருக்க ஏன் இதையெல்லாம் சொல்லி வீணா மனத்தாங்கலை உண்டு பண்ணனும்னு…”
“சத்யா… நீ சொல்றதுல எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் பொய்னு நான் கண்டறிய விரும்பலே. அந்த மகேந்திரன் இப்ப எங்கேயிருக்கான். என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கக்கூடவிரும்பலே!”
“அவன் அப்பவே அவங்கப்பாவுக்கு மாற்றல் வந்ததால் நார்த் சைட்ல..”
“நான் தான் தெரிஞ்சுக்க விரும்பலேன்னு சொல்றேன்ல?” என்றான் அனல் கக்க.
வாயடைத்துப் போனாள்.
“நடந்ததெல்லாம் சரியா, தப்பான்னு பகுத்துப் பார்க்கிற விசாலமான மனசும் எனக்கில்லே. நான் அப்பட்டமா ஏமாத்தப்பட்டிருக்கேன். எனக்குன்னு வர்றவ மனசாலும், உடம்பாலும் சிறு கீறல் கூட இல்லாம இருக்கணும்னு சின்ன வயசிலேர்ந்தே எதிர்பார்ப்பேன், ஆசைப்பட்டேன். உன் கடந்த கால வாழ்க்கையை என்னால ஜீரணிக்க முடியவில்லை. நீ அப்பவே சொல்லியிருந்தா நம்ம கல்யாணமே நடந்திருக்காது. ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு தெரிஞ்சதால…”
“…?”
“நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாது!”
“எ… என்ன சொல்றீங்க?” சத்யாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“நாம பிரியறதைத் தவிர வேறு எந்த முடிவும் எடுக்க முடியாது”
“ஐயோ… பேசறது நீங்கதானா? அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்சு, எ… என்னால முடியாதுங்க!” அழுதாள்.
“என்னால முடியும்!” என்றான் அழுத்தமாக.
“நான் மறைச்சது தப்புதாங்க. அதுக்காக வேற என்ன தண்டனை வேணும்னாலும் குடுங்க. என்னை கைவிட்டுடாதீங்கா!”
“நீ வேற ஒருத்தனை காதலிச்சதையே தப்புங்கறேன். மறைக்காம சொல்லியிருந்தாலும் கல்யாணம், அது இதுன்னு எங்கம்மா மனசை கஷ்டப்படுத்தாம இருந்திருப்பேன். என்னை விட்ரு சத்யா! இங்கே இருந்து மேலும் என்ளை அசிங்கப்படுத்தாதே!”
வார்த்தைகளால் அசிங்கப்படுத்தினான்.
‘என்ன நடக்கிறது இங்கோ?’
‘பதினாறு வயது. வாழ்க்கையை முடிவு செய்கிற வயதா? ஒவ்வொரு பெண்ணின் ஆணின் பள்ளிப் பருவத்திலும் பெரும்பாலும் எட்டிப் பார்க்கும் சலனம் தானே இது? ஏன் இவர் கடந்த வாழ்க்கையில் எந்தப் பெண்ணையுமே பார்த்து சலனப்படாமல் இருந்திருப்பாரா? காதலுக்கும், சலனத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறதே! அந்த மகேந்திரன் தப்பானவன் என்று தெரிந்ததும் ஒதுங்கி, ஒதுக்கினேனே! அவன் முகம் நினைவுப் பெட்டகத்திலிருந்து எப்போதே… அழிந்து போனதே! இவர் எனக்கு இவ்வளவு பெரியதண்டனை தருகிறாரே! என்னால் எப்படி முடியும்? அவரைப் பிரியறதா? நினைக்கும் போதே உயிர் பிரிந்து போய்விடும் போல் இருக்கிறதே!’
அந்த வீட்டில் ஒவ்வொரு விநாடியும் வேண்டாத கசப்புடனும், மவுனத்துடனே இறந்தன. சத்யா அழுதழுது நெஞ்சம் வறண்டு போனாள். மைனாவதியோ ஆர்ப்பாட்டமே நடத்திக் கொண்டிருந்தாள்;
நாக்குதான் பெண்ணுக்கு வாள். அது எப்போதும் துருப்பிடிப்பதே யில்லை. மைனாவதி தன் நாக்கால் அவளை சுழற்றி, சுழற்றி அடித்தாள். அவளை கேவலமாய் விமர்சித்தாள். அவள் இருக்கும் வீட்டின் தானிருக்க மாட்டேன் என்று முரண்டு பிடித்தாள்.
அலுவலகம் போனாலும் அதே சிந்தனை. வீட்டிற்கு வரவும் பிடிக்க வில்லை. சத்யாமுசும் பார்க்க பிடிக்கவில்லை. அம்மாவின் கத்தல் பிடிக்கவில்லை. பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.
அம்மா தீவிரமாய் இருந்தாள். தன் வார்த்தைக்கு செவி சாய்க்க வில்லை என்று அவள் வீட்டைவிட்டு வெளிவேற… அவனைத் தடுப்பதற்குள் தாவு தீர்ந்துபோயிற்று. சத்யா எவ்வளவோ மன்றாடியும் அவளை அவளின் பெற்றோரிடம் ஒப்படைக்க அழைத்து வந்தான்.
பெட்டியுடன், முகவாட்டத்துடன் மகளையும், மாப்பிள்ளையையும் பார்த்ததும் ஏதோ பிரச்சனை என்று தான் நினைத்தனர் அவளைப் பெற்றவர்கள்.
“வாங்க மாப்பிள்ளே… தீபன் சேர் எடுத்துப் போடு. மகா… காபி போட்டு எடுத்துட்டு வா”
”பரவாயில்லைங்க…. காபியெல்லாம் வேண்டாம். உங்க பொண்ணை விட்டுட்டுப் போகத் தான் வந்தேன்!”
“விட்டுட்டு?” குழம்பியவர். நீங்க எங்கேயாவது ஊருக்குப் போறீங்களா மாப்பிள்ளே?”
“இல்லீங்க… இனி உங்க பொண்ணு உங்களோட தான் இருப்பா… நிரந்தரமா!”
“எ… என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?” தூக்கி வாரிப் போட்டது. அங்கிருந்த அனைவருக்கும்.
“தயவு செய்து என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடறதை நிறுத்துங்க முதல்ல”
விஷயம் விபரீதமானது என்று புரியவே… அரண்டு போயினர்.
“ஏன்… ஏன் இப்படியெல்லாம்?”
“நான் உங்க தங்கையை டைவர்ஸ் பண்ணப் போகிறேன் மிஸ்டர் தீபன்!”
“என்ன சார் நீங்க பாட்டுக்கு தலையுமில்லாம, வாலுமில்லாம என்னென்னவோ பேசிட்டு இருக்கீங்க? என்னமோ மளிகைக் கடைல சர்க்கரை, ரவை வாங்கிட்டு வேண்டாம்னு திருப்பித் தர்ற மாதிரி சத்யாவை வேண்டாம்னு தள்ளிட்டுப் போனா என்ன அர்த்தம்?”
“நியாயமான கோபம் மிஸ்டர் தீபன். உங்க தங்கை மலிவான நடத்தை உள்ளவங்கறதால வேண்டாம்ங்கறேன். போதுமா காரணம்?”
“இதோப் பாருங்க… என் தங்கையை அசிங்கமாப் பேசினீங்கன்னா… நான் மனுஷனா இருக்க மாட்டேன்!”
“இந்த கோபத்தையும், அக்கறையையும் அவளை வளர்க்கறதுல காட்டியிருந்தா… இந்த அவமானம் நேர்ந்திருக்காதே தீபன்! இந்தாங்க இதைப் படிச்சுப் பாருங்க… உங்க அன்பு தங்கையோட யோக்யதையை!”
சத்யா கூனிக்குறுகி மகனை இறுக்கி அணைத்துக் கொண்டு கண்ணீர் வருத்தாள்.
படித்த தீபன் முகம் சிவக்க சத்யாவைப் பார்த்து “த்தூ” என்று காறித் துப்பினான்.
அடுத்தடுத்து கடிதம் கைமாற…
சத்யாவிற்கு எதிரான காட்சிகள் அரங்கேறின.
அத்தியாயம் – 11
காதல் என்பதையே தீண்டத்தகாத வார்த்தையாக கருதி யிருந்த குடும்பம் மகள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதையே ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறி, வேறு வழியின்றி, அவர்களின் உறுதியான அன்பிற்கு கட்டுப்பட வேண்டியிருந்தது.
அப்படியிருக்க மகள் அதற்கு முன்பே இன்னொரு காதலில் ஈடுபட்டாள் என்று ஆதாரத்துடன் சொல்லும் போது எப்படி ஜீரணிக்க முடியும். சத்யாவின் மேல் கேவலமான பார்வைகள் மொய்த்தன. வெறுத்தன.
“கவுரவமான குடும்பம் எங்களோடது. எல்லாத்தையும் மறைச்சி உங்க பொண்ணு என்னை ஏமாத்திட்டா. ஆனது ஆச்சு… மறந்து மன்னிச்சு ஏத்துக்குங்கன்னு தயவு பண்ணி யாரும் டயலாக் பேசாதிங்க நான் மகான் அல்ல. இந்த ஒண்ணரை வருஷம் வாழ்ந்ததையே ரொம்ப அசிங்கமா நினைக்கிறேன். இந்த குழந்தை என்னோடது. அதை உறுதியா சொல்ல முடியும். அதனால என் குழந்தையை என்கிட்ட ஒப்படைச்சிட சொல்லுங்க… உங்க பொண்ணை நீங்களே வச்சுக்குங்க”
.”சார்… உங்களுக்கு வேண்டாம்னா துக்கி எறிஞ்சிட்டுப் போங்க. அதுக்கேன் எங்க தலைல கட்ட நினைக்கிறீங்க. நாங்களும் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க தான். தங்கச்சி வாழாவெட்டியா வந்திருக்கா. வரதட்சணை கொடுமையால வந்திருக்கானா அது ஒரு பேரு! ஆனா கல்யாணத்துக்கு முன்னால வேற ஒருத்தனை லவ் பண்ண காரணத்துக்காக இவளை கொண்டு வந்து விடறீங்கன்னா… நாங்களும் குடும்பத்தோட தூக்குல தான் தொங்கணும். எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு. இவளுக்காக என் பொண்ணோட வாழ்க்கைய சீரழிக்க விரும்பவே. எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா… அவ செத்துப் போய்ட்டா. இதோ… அவளைப் பெத்தவங்க… அவங்க அவளை வச்சுக் காப்பாத்திக்கறதாயிருந்தா… தாராளமா தனியாப் போய் வச்சுக்கட்டும். அவங்க கிட்டேயே பேசிக்குங்க சார்!” என்றான் தீபன்.
“என்ன தீபன் அப்படி சொல்லிட்டே? நாங்க மட்டுமென்ன மானம் போய் வாழறவங்களா? எனக்கு பொண்ணே இல்லே… அவளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லே… நீங்க அவளை விரட்டுவீங்களோ, வச்சுக்குவீங்களோ, இல்லே எரிப்பீங்களோ… எங்களுக்குத் தெரியாது. தயவு பண்ணி அவளை வெளியே கூட்டிட்டுப் போங்க” என்றார் வைகுந்தன்.
மகாலட்சுமி தான் அலைபாய்ந்தாள். பெற்ற வயிறு எரிந்தது.
‘ஆளாளுக்குப் பேசறாங்களே… என் குழந்தை பேச சந்தர்ப்பம் தராமல்… அவள் மனதில் என்ன இருக்கிறதென்று தெரியாமல் என்ன பேசுகிறார் இவரும்?’
கண்கள் பொங்கின.
“அ… அ..ப்…பா.., நீங்களுமா?” சத்யா நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“கூப்பிடாதே தாயே… உன் வாயால என்னை அப்படி சொல்லிக் கூப்பிடாதே… நாங்க என் பிள்ளைய நம்பி வாழறவங்க. இங்கே நின்னு அதிலே மண்ணள்ளிப் போட்றாதே… போ”
சத்யா சிரித்துக் கொண்டாள்.
பாவம்… இவர்களும் தான் என்ன செய்வார்கள்? தீபனின் நிழலில் வாழ்பவர்கள். என்னால் எதற்கு அதற்கும் கேடு! ஆமாம், நான் என்ன தவறு செய்து விட்டேன் என்று ஆளாளுக்கு என்னைப் பந்தாடுகிறார்
“ஒரு நிமிஷம்!” என்றாள், அது நேரம் வரை கவிழ்ந்திருந்த தலையை உயர்த்தி,
“உங்க எல்லோரையும் புரிஞ்சுக்க கடவுள் எனக்கொரு சந்தர்ப்பம் கொடுத்ததாகவே நினைச்சுக்கறேன். வேற எதையும் பேச விரும்ப வில்லை. என்னாலயும் தனியா வாழமுடியும். என் குழந்தைய வளர்த்து ஆளாக்க முடியும். உதவின்னு உங்களைத் தேடி வந்தா செருப்பால அடிங்க!”
“ஹலோ… நீங்க எங்கே வேணும்னாலும் போங்க. என் பிள்ளைய என்கிட்டே கொடுத்துட்டுப் போங்க!”
“பாருங்க மிஸ்டர் ராம்! நான் இன்னமும் உங்களை மதிக்கிறேன். பணம், அழகுன்னு முக்கியத்துவம் தராம அன்புக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. உங்க உயர்ந்த உள்ளத்துக்காக நான் உங்களை குறைத்து பேச விரும்பலே. உங்களுக்கு அபிலாஷ் கிட்டே எந்தளவுக்கு உரிமை இருக்கோ அந்த அளவுக்கு எனக்கும் உரிமை இருக்கு. ஏன்னா, பத்துமாசம் சுமந்து, வலிக்க, வலிக்கப் பெத்தவ நான்! இப்பவும் உங்கம்மா உங்களை உரிமை கொண்டாடலயா? உன்னை விட எனக்கு எங்கம்மா தான் முக்கியம்னு நீங்க என்கிட்ட சொன்னதில்லையா? தொப்புள்கொடி உறவுங்கறது சாதாரணமானதா என்ன? அதனால அபிலாஷ் எப்பவும் என்கிட்ட தான் இருப்பான். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம். அவ மூலமா எத்தனை குழந்தை வேணும்னாலும் பெத்துக்குங்க. ஆனா, எனக்கு இப்பவும் சரி, எப்பவும் சரி… என் பிள்ளை மட்டும் தானே உறவு?”
”நீ என்ன பேசினாலும் சரி. என் பிள்ளை எனக்கு வேணும்!”
“வற்புறுத்தினீங்கள்னா எங்க ரெண்டு பேரையும் உயிரோட பார்க்க மாட்டீங்க”
“என்ன மிரட்டறியா? என் குழந்தைய கோர்ட் மூலமாகவே வாங்கிக் கொள்ள எனக்குத் தெரியும்!” கோபத்துடன் சவால் விட்டு காரில் ஏறிச் சென்றான் ராம்.
தோளில் குழந்தையும், கையில் பெட்டியுமாக பிறந்த வீட்டைக் கூட திரும்பிப் பார்க்க மனமின்றி நடந்தாள் சத்யா!
தற்காலிகமாக தன் தோழியின் வீட்டில் சில நாட்கள் தங்கினாள். வேலைக்கு மனுப்போட ராமிடமிருந்த தன் டிகிரி சர்ட்டிபிகேட்களை கேட்டாள். அது கிடைத்தால் வேலைக்குச் சென்று விடுவாளே! அதனால் கண்ணெதிரே கிழித்துப் போட்டான்.
அப்ளை பண்ணி டூப்ளிகேட் சர்ட்டிபிகேட் வாங்க பணமோ, அவகாசமோ இல்லாததால், வேறு வேலை தேடத் தொடங்கினாள்.
தோழியின் உறவினர்கள் மூலமாக, வீடு வீடாய் சென்று கணக்கெடுக்கும் மார்க்கெட்டிங் ரெப்ரசென்டேடிவ் வேலை கிடைத்தது. குழந்தையை தோழியின் வீட்டில் விட்டுச் சென்றாள்.
கடினமான உழைப்பு, இயந்திரத்தனமான உலகில், நேரங்களை எண்ணிச் செலவிடும் மனிதர்களில், இப்படி வீடுவீடாய் வரும் செப்ரசென்டேடிவ்களை மதித்து பதில் சொல்பவர்கள் எத்தனை பேர்? என்னமோ, வீட்டை நோட்டம் விட்டு கொள்ளையடிக்கவே வருவது போலவே விரட்டுவதும், முகம் சுளிப்பதும்…
அவர்களும் மனிதர்கள்! அதுநான் அவர்கள் தொழில் என்று எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? கணக்கெடுக்கும் வீட்டின் எண்ணில் கையைக் கொண்டு தானே அவர்களுக்கு கமிஷன் நிர்ணயிக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட அனுபவம் சத்யாவுக்கும் நேர்ந்தது.
“நானும் இதே வேலை பார்ப்பவர்களை மதி த்து பதில் சொல்லாமல், பிஸியாய் இருக்கிறேன்’ என்று அனுப்பி விடவில்லையா?
அவளுக்கும் அதே மாதிரி பதில்கள் நிறையவே கிடைத்தன. ஆனால் சோர்ந்து போகவில்லை. குழந்தையின் முகம் நினைவிற்கு வரும். டானிக் பருகியது போல் சுறு சுறுப்பாகி விடுவாள்.
அலைந்தாள். திரிந்தாள். கஷ்டப்பட்டுசம்பாதித்தாள். கண்ணுக்குக் கண்ணான குழந்தையின் முகம் பார்த்து வேதனைகள் மறந்தாள்.
சின்னதாய் தனி வீடுபார்த்தாள்.
தன் தேவைகளை குறைத்தாள்.
வருமானம் வீட்டு வாடகைக்கும், குழந்தையின் பராமரிப்பிற்காகவுமே சரியாய் இருந்தது. அவளின் உணவு குறைந்தது. உடல் இளைந்தது.
ஆனாலும் வைராக்கியமாய் உழைத்தாள்.
அலுவலகம் முடித்ததும் நேரே குழந்தையைப் பார்க்க வந்து விடுவான் ராம். வீட்டிற்குள்ளே வரமாட்டான். வாசலில் தன் காரில் வைத்து மகனிடம் கொஞ்சுவான்.
அவளிடம் விவாகரத்துக் கேட்டும், குழந்தையை ஒப்படைக்க சொல்லியும் கேஸ் போட்டிருந்தான்.
சத்யா தைரியமாய், நம்பிக்கையாய் இருந்தாள். அபிலாஷ் தனக்குத் தான் என்பதில் உறுதியாய் இருந்தாள்.
அவள் வீட்டிற்கு எதிரே காலிமனை இருந்தது. அங்கே அவளையே பார்த்தபடி ஒரு ஆண் நிற்பதை சில நாட்கள் கழித்தே உணர்ந்தாள்.
அவன் தன்னையே பார்ப்பதும், அவள் பார்த்தால் இளிப்பதுமாய்…
நடுங்கினாள்.
பாதுகாப்பில்லாத பெண் என்பதை நோட்டம் விட்டிருந்தவன், ஒரு நாள் வீட்டிற்குள்ளேயே நுழைந்து விட்டான்.
அவளை எதிர்பார்க்காத சத்யா, பயத்தில் மூச்சு விடவும் மறந்தாள்.
அத்தியாயம் – 12
பயத்தில் காய்ச்சலே வந்து விட்டது சத்யாவுக்கு நினைத்துப் பார்க்கக் கூட பயந்தாள்.
அன்று உள்ளே நுழைந்த அந்த காலிப்பயலின் பார்வையும், சிரிப்பும்.
“ஏய்…ஏய்… யார் நீ? ஏன் உள்ளே வந்தே? வெளியேப் போ!”
“குழந்தைய வச்சுக்கிட்டு தனியா இருக்கேப் போல உன் பேர் என்ன?”
“இப்ப வெளியேப் போகப் போறியா, இல்லே சுத்தி ஊரைக் கூட்டவா?”
“எதுக்கு அவசரப்படறே? எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் தான். என் பொண்டாட்டியும் ஓடிப்போய்ட்டா, நீ எதுக்கு வேலைக்குப் போய் அல்லாடறே? நான் பார்த்துக்கறேன்.
தினமும் கார்ல வந்துட்டுப் போறானே அவன் யாரு? என்னை மாதிரி ரூட் போடறானா? யாரையோ நம்பி ஏமாந்துட்ட போல? பிள்ளைய குடுத்துட்டு ஓடிப்போய்ட்டானா?”
“ராஸ்கல் உன்னை!” மூலையில் சார்த்தி வைத்திருந்த துடைப்பத்தை எடுத்தாள்.
“என்னடி பத்தினி வேஷமாப் போடறே? கார் வச்சிருந்தாதான் படுப்பியா? உன்னை அப்புறமாப் பார்த்துக்கறேன். இந்த முரளியப் பகைச்சுக்கின்னா ஒழுங்கா வாழ்ந்துட முடியாதுன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்கவே! நான் யாரு, என் பலம் என்னன்னு தெரியாதுல்ல? காட்டறேன்!”
விருட்டென்று வெளியேறினான்.
அன்று படுத்தவள்தான்! வேலைக்கு போகக்கூட முடியாதளவு காய்ச்சல்!
ஒரு பெண் தனியே சுயபலத்துடன் தலை நிமிர்ந்து வாழவே முடியாதா? ஏன் என்னை நோக்கி இத்தனை அம்புகள்?
இது நாள் வரை ராம் குழந்தையைப் பார்க்க வரும் பொழுது குழந்தையை வாசலில் விட்டு விடுவாள். ராம் தூக்கிக்கொண்டு காருக்குப் போய் விடுவான். இருவரிடமும் எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக அலுவலகத்தில் அதிக பணி காரணமாக குழந்தையைப் பார்க்க ராமினால் வர முடியவில்லை.
அன்று வந்தவன், சத்யாவைப் பார்த்து வியந்தான். ‘என்னவாயிற்று இவளுக்கு? ஏனிப்படி இருக்கிறாள்?’
குழந்தையை அவனிடம் கொடுத்தவளின் பார்வை தெரு முனையில் பார்த்துக் கொண்டிருந்த முரளியைப் பார்த்து விட்டது.
உடம்பு தன்னிச்சையாய் நடுங்கியது.
குழந்தையுடன் திரும்பினான் ராம்.
“ஒரு நிமிஷம்!”
“…?”
“உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.”
“ம்…”
“உள்ளே வாங்க….”
“இல்லே இங்கேயே இருக்கிறேன். என்ன விஷயம்?”
“வாசல்ல வச்சு பேசற விசயமில்லே..”
“நம்ம விஷயம் தெருவுக்கே வந்தாச்சு. வாசல்ல வச்சுப்பேசறது தப்பில்லே….”
“வாசலோட உங்க பயணம் முடிஞ்சுப் போறதால தான் என்னை தப்பான கோனாத்துல பார்க்க வச்சிருக்கு”.
ராம் புருவம் உயர்த்தினான்.
“அதோ அங்கே நிக்கறானே அவன் பேரு முரளியாம். திடீர்னு வீட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டான்” என்றபடி அன்று நடந்த வைகளை கூறினாள். “அதனால நீங்க உள்ளே வந்து உக்கார்ந்துட்டுப் போனா அவனுக்கு ஒரு பயம் வரும்” என்றாள் மிரட்சியுடன்.
“ஸாரி கேஸ் கோர்ட்ல இருக்கிறப்ப நான் வீட்டுக்குள்ளே வர்றது சரியாயிருக்கா!” என்றவன் யோசனையுடன் காருக்குப் போனான்.
சத்யா அவன் முதுகையே வெறித்துப் பார்த்தாள்.
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. வக்கீல் வைத்துக் கொள்ள சத்யாவுக்கு வழியில்லை. அவளே வாதாடினாள்.
எதிர்க்கட்சி வக்கீல் கேட்ட கேள்விகளுக்கு உண்மையை மட்டும் பதிலாகத் தந்தாள்.
“திருமணத்திற்கு முன்பு மகேந்திரன் என்பவருடன் உங்களுக்கு காதல் இருந்ததா?”
“ஆ…ஆமாம்… ஆனால், அது”
“கேட்டதற்கு மட்டும் பதில் தந்தால் போதும். விளக்கம் வேண்டாம்”
“…?”
“குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று எனது கட் சிக்காரரிடம் மிரட்டினீர்களா?”
“ஆ…ஆமாம்!”
“இப்போது நீங்கள் பார்க்கும் வேலையில் கிடைக்கும் சம்பளம் குழந்தைக்கும், உங்களுக்கும் போதுமானதாக உள்ளதா?”
“இல்லை”
“அப்படியானால் குழந்தையை இனி வரும் காலத்தில் எப்படி படிக்க வைத்து ஆளாக்கப் போகிறீர்கள்?”
“என்னால் முடியும். என்பிள்ளைக்காக பிச்சைக்கூட எடுப்பேன்”
“முரளி என்பவரை உங்களுக்குத் தெரியுமா?”
“அவர் யாரென்றுத் தெரியாது. ஆனால் ஒரு நாள் என் வீட்டுக்குள்…”
“தெரியுமா, தெரியாதா? அதற்கு மட்டும் பதில்கூறுங்கள்”
“தெ..ரி..யு..ம்!'”
“எத்தனை வருடங்களாக?”
“வருடங்கள் அல்ல, மாதங்களாக…!”
“அதாவது, நீங்களும், உங்கள் கணவரும் பிரிந்த பிறகு. கடந்த ஒன்பது மாதங்களாக..”
“ஆமாம்…”
“முரளி உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாரா?”
“வந்திருக்கிறார்!”
“தட்ஸால் யுவர் ஆனர். மிஸஸ் சத்யா நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால்! நல்ல நடத்தைக் கொண்டவர் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லாவிட்டால், பெற்றவர்களும், சகோதரரும் கூட ஏன் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
அவர் ஒரு நல்ல மாணவியாகவோ, நல்ல மருமகளாகவோ என்றுமே நடந்து கொண்டதில்லை. சட்டென்று உணர்ச்சி வசப்படக்கூடிய இவரால் குழந்தை அபிலாஷிற்கு ஆபத்து காத்திருக்கிறது.
அவர் வாழும் வாழ்க்கையும், வீட்டிற்கு வந்து செல்லும் தொடர்புகளும், அபிலாஷ் வாழ தகுதியுடையதல்ல. குழந்தையின் எதிர்காலம் கருதி, அவனை அவனுடைய தகப்பனார் மிஸ்டர் ராமிடம் ஒப்படைக்கும் படியும், அவர் மனைவியிடமிருந்து விவாகரத்தும் கிடைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்!”
திறமையாக வாதாடினார் வக்கில் இளங்கோவன்.
சத்யா மிரள மிரள விழித்தாள்.
அதெப்படி இங்கேக்கூட பொய் பேசுகிறார்கள்?
பாவம் அவளுக்குத் தெரியவில்லை. வக்கீல் பொய்யைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று.
தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
எனக்கும், முரளிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அந்த வக்கீல் சொன்னானே அதைக் கேட்டுக் கொண்டு ராம் சும்மாதானே இருந்தார்? அவரிடமே அவனைப் பற்றி சொல்லி இருக்கிறேனே! ஏனிப்படி எல்லாருமே என் நடத்தை மீது கரிப்பூசுகிறார்கள்.
அபி… அபிக்கண்ணா! நீ சொல்லுடா. அம்மா தப்பானவளா? ம்! உன்னை என்கிட்டேர்ந்து பிரிக்க என்னை என்னென்னவோ பேசறாங்கடா. நீ அம்மாவை விட்டுப் போய்ட மாட்டியே உனக்காகத்தான்டா உயிரை சுமந்துக்கிட்டிருக்கேன். நீயும் என்னை விட்டுப் போய்டாதடா!”
“ம்மா….ம்மா….” மழலை மொழியுடன் அம்மாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டான் அபிலாஷ்.
ஆனால், தீர்ப்பு?
சத்யாவுக்கு எதிராகவே அமைந்தது.
அவளுக்கும், ராமிற்கும் விவாகரத்து வழங்கியதோடு, குழந்தையின் எதிர்கால நலன் கருதி, தந்தையிடம் ஒப்படைக்கும் படியும், வாரத்தில் ஞாயிறு பகல் முதல் மாலை வரை சத்யா குழந்தையைப் பார்க்கலாம். என்றும் ஒரு தாயின் வேதனை மீது அம்பெய்தி துடிதுடிக்க வைத்து தீர்ப்பை எழுதினார் நீதிபதி.
இடிந்துப்போன சத்யா… குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள்.
“இல்லே. நான் என் குழந்தைய தர மாட்டேன். நான் தரமாட்டேன். என்னய்யா தீர்ப்பெழுதறீங்கா உங்களுக்கு பிள்ளைக்குட்டி கிடையாதா? என் பிள்ளை எனக்குத்தான். என்கிட்டேர்ந்து அபியை பிரிச்சிடாதீங்க. நான் தரமாட்டேன்!”
வெறி பிடித்தவள் போல் கத்திக் கொண்டு, குழந்தையுடன் ஒரே ஓட்டமாய் வெளியே ஓடினாள்.
– தொடரும்…
– என் பிரியசகி (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 2007, தேவியின் கண்மணி, சென்னை.