என் தற்கொலைக்கான வாக்குமூலம்
இந்தக் காரணத்திற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். நான் சொல்லும் காரணம் நம்பும்படியாக இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று நம்புங்கள். இல்லையென்றால் எனக்கு தெரியப்படுத்தவும்.
என்ன சொல்லி அழுவது என் கதையை? எந்தப் பெண்ணும் என்னைக் காதலிப்பதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நான் ஒன்றும் அபிஷேக் பச்சன் இல்லைதான். அட ஐஸ்வர்யா ராய் வேண்டாம். குறைந்தபட்சம் என் அளவிற்கு பிரியங்கா சோப்ராவாவது திரும்பிப் பார்க்கலாம் இல்லையா? ம்ஹூம். கீழ் வீட்டுக்கு பாத்திரம் கழுவ வரும் விஜயா கூட பார்ப்பதில்லை.
இரண்டு மூன்று நாட்கள் கட்டையனோடு போனில் பேசினேன். கட்டையன் அவனாக போன் செய்ய மாட்டான். கஞ்சப்பயல். நான் செய்தால் மணிக்கணக்கில் மொக்கை போடுவான். அதுவும் இந்த முறை அறிவுரை வேறு. தமிழ்நாட்டில்தான் யார் வேண்டுமானாலும் அறிவுரை கொடுப்பார்களே. அதுவும் நொந்து கிடப்பவனிடம்தான் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள்.
கட்டையனின் அறிவுரை பெரிதாக ஒன்றுமில்லை. காதலி இல்லை என்றாலும் வருத்தப்படக் கூடாது என்றும், பொழுது போவதே தெரியாமல் ‘கடலை’ போடுவதற்கு தோழிகளை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
இப்படி எல்லாம் சொன்னால் கூட கட்டையனை மன்மதன் என்று நினைத்துக் நீங்கள் ஏமாற வேண்டாம். இவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் மாங்காய் என்பதுதான் என்னைப் பற்றிய அவன் எண்ணம். நேரம் காலம் பார்க்காமல் உடற்பயிற்சி செய்கிறேன் என்று உடம்பை மட்டும்தான் ஏற்றியிருக்கிறான். அதுவும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம், நான், சந்திரசேகர ஆசாத், தனேஷ், கட்டையன் நான்கு பேரையும் நூற்றி இருபத்தைந்தாம் எண் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.
தனேஷ்,நான்,ஆசாத் மூன்று பேரும் கிழக்கு மேற்காக படுத்துக் கொள்ள, கட்டையன் மட்டும் வடக்கு தெற்காக படுத்திருந்தான். கொஞ்ச நாளில் தன்னால் வடக்கு தெற்காக படுக்க முடியாது என்றும் பேய்க்கனவு வருகிறதென்றும் சொன்னான். மற்ற இரண்டு பேரும் மறுத்துவிட, நான் திருவளத்தானாகிவிட்டேன்.
அடக்கடவுளே. பேய்க்கனவு எல்லாம் ஒன்றுமில்லை. இந்த குண்டன் தனேஷ் இருக்கிறான் பாருங்கள். சொன்னால் சிரிக்கக் கூடாது. சனியன் உள்ளாடை போடாமல் லுங்கி கட்டித் தூங்குகிறான். வடக்கு தெற்காக படுத்த கட்டையன் வெறுப்பேறி பேய், பிசாசை எல்லாம் சொல்லி என்னை மாட்டிவிட்டான். நான் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு வருடம் ‘பேய்க்கனவோடு’தான் உறங்கினேன். அந்தச் சமயங்களில் எல்லாம் நடு ராத்திரியில் ‘எக்சர்சைஸ்’ செய்து கட்டையன் பெருமூச்சுவிடுவான். எனக்கு எரிச்சலாக வந்தாலும் அடக்கிக் கொண்டு படுத்துக் கிடப்பேன்.
உடம்புதான் கழுமுண்டராயன் மாதிரி. யாராவது கொஞ்சம் சத்தமாக பேசினால் போதும் நடுங்கி விடுவான். எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். கதை சொல்லும் போது பேச்சு மாறினால் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள்.
‘கடலை’ போடுவதற்கென்று பெண்ணை தயார் செய்வது நல்லதாகப் பட்டாலும் எப்படி ஆரம்பிப்பது என்றெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை. நல்ல வேளையாக வித்யா ஏதோ சான்றிதழ் தேர்வு எழுதுகிறாளாம். வித்யாவும் என் அலுவலகம்தான். தமிழைக் கொலை செய்து பேசுவாள். அவளின் அப்பா சென்னையில் பணிபுரிவதால் தமிழ் பேசுவதாக சொல்லியிருக்கிறாள்.
பவ்யமாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். “தேர்வுக்கு என் வாழ்த்துக்கள். நன்றாக எழுதவும்”. அடுத்த மூன்று நிமிடத்தில் எனக்கு அழைப்பு. வித்யாதான். அடேயப்பா. ‘ரத்தம் சுல்லுன்னு ஏறுச்சுடா மாப்ள’ என்று மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்பொழுதுதான் எனக்கு முதன்முதலாக ஏறியது.
அவள் கேட்ட கேள்வி கொஞ்சம் வருத்தமடையச் செய்ததுதான் என்றாலும் முழம் ஏறினால் ஜாண் சறுக்குவது சகஜம்தானே. “இந்த நெம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ் வந்துச்சு. இது யாரோட நெம்பர்ன்னு தெரியல” என்றாள்.
கொஞ்சம் வழிந்து கொண்டே “உங்களுக்கு விஷ் பண்ணலாம்ன்னு நான் தான்”.
“தேங்க்ஸ் எ லாட்” என்றாள். முத்தொன்பது வினாடிகளில் பேச்சை முடித்துக் கொண்டோம். கொஞ்சம் அதிகமாக வழிந்துவிட்டேனோ என்று சந்தேகமாக இருந்தாலும், முத்தொன்பது வினாடியில் வழிவதை அவளால் கண்டறிய முடியாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
அவள் என்னமோ சொல்லி இருக்கட்டும் ஆனால் அவள் எனக்கு போன் செய்துவிட்டாள். அதுதான் முக்கியம். இது வேறு யாராக இருந்தாலும் அவள் போன் செய்திருப்பாள் என்று சொல்லி என்னை வெறுப்பேற்றாதீர்கள்
.
ராத்திரி ரூம்மேட் வேறு இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கிறேன்.
கற்பனைக் குதிரை ஓட ஆரம்பித்துவிட்டது. கற்பனைக் குதிரை சுமாராக ஓடும் ஜப்ஷா வகைக் குதிரை இல்லை. நல்ல அரேபியக் குதிரை. தறிகெட்டு ஓடுகிறது. இழுத்துப் பிடித்தால் என்னையும் இழுத்துவிடும் போலிருக்கிறது. ஓடட்டும் என்று விட்டுவிட்டேன்.
ஒரே இரவில், கல்யாணம் வரைக்கும் போய்விட்டேன். இந்த இடத்தில் ஒரு ஸீன் சொல்லியே தீர வேண்டும். வெங்கல ராவ் பார்க்கில் என் மடி மீது தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள். நான் அந்த நிலவை பார் எவ்வளவு அழகாக இருக்கிறது என்றேன். இதை எங்கள் தாத்தா காலத்தில் என்.டி.ஆர் காரு சொல்லிவிட்டார் என்றார். வேறு என்னதான் சொல்வது என்று தெரியவில்லை. முத்தம் கொடுக்க முயன்றேன். ஆனால் இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது.
எப்படி உறங்கினேன் என்றே தெரியவில்லை. விடிந்த போது சனிக்கிழமை. இன்றுதான் தேர்வெழுதுகிறாள். மதியம் வரைக்கும் நான் நகததைக் கடித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஒரு குதிரை ஸ்லோமோஷனில் ஓடுகிறது. அவள் பாஸ் செய்தாள் அனுப்ப வேண்டிய மெஸேஜ், தோல்வியடைந்தாள் அனுப்ப வேண்டிய மெஸேஜ் என்றெல்லாம் ஓடுகிறது.
மூன்று மணிக்கு மதுபாவுவை தொலைபேசியில் அழைத்தேன். அவன் வித்யாவோடு தேர்வு எழுதினான். எடுத்தவுடன் வித்யா எவ்வளவு மதிப்பெண் என்றால் நன்றாக இருக்காது என்பதால் அவன் மதிப்பெண்ணை எல்லாம் கேட்க வேண்டியதாயிற்று. எவ்வளவு சொன்னான் என்று மறந்துவிட்டது. அவன் மதிப்பெண் எனக்கெதற்கு? கூட வேறு யார் எல்லாம் தேர்வு எழுதினார்கள் என்று கேட்டேன். அதற்கு ஒரு பட்டியலைச் சொன்னான். செள்ம்யா என்ன மதிப்பெண், மகேஷ் எவ்வளவு என்றெல்லாம் கேட்டுவிட்டு சந்தேகம் வராத சமயமாக வித்யா மதிப்பெண்ணை கேட்டுவிட்டேன்.
தொண்ணூற்று இரண்டு வாங்கியிருக்கிறாள். அவள் மனதில் வேறு எந்தப் பையனும் இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். யாராவது இருந்திருந்தால் அவனை நினைத்துக் கொண்டிருப்பாள். இந்த அளவுக்கு மதிப்பெண் வாங்க் முடியாது இல்லையா. மனோ தத்துவவியல் குறித்த என் அறிவை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கிறது.
நன்றாக யோசித்து “எனக்குத் தெரியும். நீ அறிவாளியென்று. வாழ்த்துக்கள். ட்ரீட் எப்பொழுது” என்று கேட்டு அனுப்பிவிட்டேன். பிறகுதான் யோசித்தேன். இப்பொழுது கூட ‘ட்ரீட்’ கேட்டு என் தின்னி புத்தியைக் காட்டிவிட்டேன் என்று.
அடுத்த மூன்று நிமிடம் அமைதியாக இருந்தேன். மூன்று நிமிடத்திற்கு பின்னரும் அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஒரு எஸ்.எம்.எஸ்சூம் வரவில்லை. ஒற்றை வார்த்தையில் வித்யாவை மெசேஜ் அனுப்ப வை என்று நடந்து போகும் போது தென்பட்ட கோயிலில் எல்லாம் சாமி கும்பிட்டேன். ஒரு பிள்ளையார் என்னைபார்த்து சிரிப்பது போல் இருந்தது. எட்டு ரூபாய் கொடுத்து தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டேன். இப்பொழுது வயிறன் அதிகமாக சிரிக்கிறான்.
நேரம் அதிகமாகிக் கொண்டிருந்தது ஆனாலும் பதில் வரவில்லை. சனிக்கிழமை ஆறு மணிக்கு அவள் சினிமாவிர்கு போயிருக்க வாய்ப்பிருக்கிறது. எப்படி எஸ்.எம்.எஸ் அனுப்புவாள்? ஆனால் ‘தேங்கஸ்’ என்று ஒற்றை வார்த்தை கூடவா அனுப்ப முடியாது? ஒரு வேளை செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய் இருந்தால்? யாருமில்லாத சமயத்தில் எப்படியாவது நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ளவேண்டுமல்லவா? அதுதானே மனித இயல்பு.
ஒன்பது மணி, பத்து மணி, பதினொரு மணி ஆனது. ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை. பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை விட, செல்போனை சட்டைப்பையில் வைத்தால் இதயத்திற்கருகில் இருக்கும் என்று வைத்துக் கொண்டேன். அப்பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை.
அடுத்த நாள் கட்டையனிடம் சொன்னேன். “டேய்! நீதான்னு தெரிஞ்சுமாடா அவ ரிப்ளை பண்ணுவா?” என்றான் சிரித்துக் கொண்டே. என் பீலீங்ஸ் எனக்கு. மனசுக்குள் அவனுக்கு சாபம் விட்டேன்.
திங்கட்கிழமை வித்யாவிடம் கேட்டுவிட்டேன். பிஸியில் மறந்துவிட்டாளாம். நான் மனமுறிந்துவிட்டேன். இருபத்தைந்து வயது பெண் இரண்டே நாளில் காதலிக்க வேண்டும் என நினைப்பது சரியில்லைதான் என்றாலும், என் காதலின் வீரியம் அப்படி. நான் என்ன செய்வது?
கம்பெனியிலிருந்து வீட்டிற்கு போகும் போது தற்கொலை செய்து கொள்வதாக முடிவு செய்து கொண்டேன். ‘கார்டினால்’என்ற தூக்க மாத்திரையில் பத்து விழுங்கிவிட்டேன். செவ்வாய்க்கிழமை காலையில் நான் இறந்துவிட்டதாக பேசிக் கொண்டார்கள்.
என் தற்கொலைக்கான இந்தக் காரணம் உங்களுக்கு நம்பும்படியாக இருக்கிறதா? இல்லையெனில் சொல்லவும். நம்பும்படியான இன்னொரு காரணத்தை நான் யோசித்து சொல்கிறேன்.
– அக்டோபர் 16, 2007