கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 33 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மழை தற்காலிகமாக நின்றிருந்தது. ஆயினும் தெருவிலே ஒரு அங்குல உயரத்துக்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. அடிக்கடி ஓட்டையாகிப் பழுது பார்க்கப்பட்ட எனது கால் ‘பூட்ஸ்’களின் சந்து வழியாக மழை ஜலம் புகத் தொடங்கியது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சிற்சில சமயங் களில் மின்னல்கள் தோன்றி மறைந்தன என்றாலும், மழை மட்டும் பெய்யவில்லை. சாப்பாடு, பேப்பர்கள், புத்தகங்கள், காய்கறிகள, எனது பகல் சில்லறைச் சாமான்கள் ஆகியவற்றைப் பையில் போட்டு, ஒரு கையிலே பிடித்துக்கொண்டு, மறு கையிலே குடையை எடுத்துக் கொண்டு பஸ்கள் நிற்கும் ஸ்டாண்டை நோக்கி விரைவாகப் போய்க் கொண்டிருந்தேன். 

என் குடை! நான் குடை என்றழைக்கும் அந்தப் பொருள் ஒரு காலத்தில் அதன் பெயருக்கேற்ப நன்றாகத்தான் இருந்தது. போர்த்திருக்கும் கறுப்புத் துணியையும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கைப்பிடியையும் தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் இன்றும் அதைக் குடை என்றே கருதுவார்கள். ஆனால் அதைத் திறந்து விரித்தால்தான்-துருப்பிடித்த கம்பிகளெல்லாம் விரிக்கப்பட்டுக் குடை என்ற முழு உருவத்தைப் பெறும் பொழுதுதான் – அது ஒரு வடிகட்டும் சல்லடையாகக் காட்சியளிக்கும். அதன் ஓட்டைகள் வழியாக மழைத் தண்ணீர் புகுந்து சொட்டுச் சொட்டாக விழும். விழுந்தாலென்ன? தண்ணீர்தானே? அதுவும் எனது குடையால் வடி கட்டப்பட்ட பரிசுத்தமான தெள்ளிய நீர்தானே? குடை பழசாக இருந்தாலும் நல்ல வடிகட்டியாக உபயோகமாகிறதல்லவா? வீதியில் செல்லும்போது மேல்மாடி ஜன்னல் வழியாகச் சில அம்மணிகள் வீசுகின்ற காய்கறித் தோல்கள், வாழைப் பழத் தோல்கள், முட்டைத் தோல்கள், குப்பைகள், மரத்திலிருந்து விழக்கூடிய பறவை எச்சங்கள் ஆகியவை இக் குடையின் துவாரங்களின் வழியாக ஊடுருவி வர முடியாது. மழைத் தண்ணீர் நுழைவதைப்பற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவையில்லை. ஒரு பொருள் எல்லா வகையிலும் உபயோகப்பட்டு விடுமா ? குப்பை செத்தைகளைத் தலைமேல் விழாமல் தடுப்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட ஒரு குடை – மழைத்துளி விழாது காக்க வேண்டுமென்று என்ன அவசியமிருக்கிறது? சில சமயங்களில் கடலிலிருந்து நீராவி மேலே செல்லும் பொழுது சிறு மீன்களும் மேலே இழுக்கப்பட்டுச் செல்வ தால் மழை பெய்யும் பொழுது, மீன் மழையாகப் பொழியும் என எங்கோ படித்த ஞாபகம். அங்ஙனம் ஏதாவது நடந்து விட்டால் என் குடை நன்றாகப் பிரயோசனப்படும்! ஏனெனில் அதன் மிகப் பெரிய துவாரத்தின் வழியாகக்கூட மிகச் சிறிய மீனும் நுழைய முடியாது! 

நான் இவ்வளவு தூரம் எனது உடைந்த கிழட்டுக் குடையைப்பற்றி பிரஸ்தாபிக்கக் காரண மென்னவாக இருக்குமென நீங்கள் சந்தேகிக்க லாம். காரணம் இக் கதையின் கதாநாயகியே இந்தக் குடைதான். இல்லை, கதாநாயகனென்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும் சரி. ஏனென்றால் இக்கதையில் மற்றொரு கதாநாயகியும் வருகிறாள். அல்லது ஒரு கதாநாயகனுக்கும் ஒரு கதாநாயகிக்கும் பதிலாகக் கதையில் இரு கதாநாயகிகள் உள்ளனர் என்றும் நீங்கள் கொள்ளலாம் – குடை ஒரு கதாநாயகி. மற்றொரு கதாநாயகி ஒரு பெண். என்னுடைய நிலையோ இரு பெண்மணிகளுக்கு மத்தியில் அகப்பட்ட கனவானின் சங்கடமான நிலைதான் 

கனவான் என்று என்னைக் கூறிக்கொண்டது என் அகம்பாவத்தால் என்று எண்ணிவிடாதீர்கள். எனது துரதிர்ஷ்டத்தால் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கனவானாய், கனவானின் மகனாய், கனவானின் பேரனாய் இருப்பதெல்லாம் என் துரதிர்ஷ்டத்தால்தான். இதன் காரணமாகத் தான் நான் ஐந்து முறை படையெடுத்தும் பி.ஏ. பரீட்சையில் ‘பாஸ்’ செய்ய முடியவில்லை. நாலு வருஷமாக நான் ஒரு பத்திரிகாலயத்தில் ‘புரூப்’ கள் திருத்துபவனாக வேலை பார்த்து வந்தும், ஒரு நாளாவது முதலாளியிடம் சம்பளம் கூட்டித் தரு மாறு வாய் திறந்து கேட்டதே இல்லை. பிரஸ் மானேஜர், போர்மென், தலைமைப் புரூப் ரீடர், மற்ற சாதாரண புரூப் ரீடர்கள், காப்பி ஹோல்டர் கள் கூட என்னைத் திட்டினால் நான் பதில் பேசுவதேயில்லை. காரணம் என் சுய கௌரவமே யாகும்.

ஹார்ன்பிரோடு வழியாக ஒருநாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு குடிகார வெள்ளை சோல்ஜர் தமாஷாகவோ என்னவோ என்னை அறைந்து விட்டான். நானும் தமாஷாக அவனை அறைந்து விடலாமென எண்ணினேன். ஆனால் எனது பெரிய மனுஷத் தன்மை, அப்படியெல்லாம் செய்து ஒரு காவாலியின் நிலைக்கு என்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது எனக் கூறித் தடுத்து விட்டது. 

எனது போலிக் கௌவரவத்தைப் பற்றி இன்னும் அறிய விரும்புகிறீர்களா? எனக்கு முப்பத்தைந்து வயதாகிறது. எனினும் நான் பிரம்மசாரி. மாதா மாதம் கிடைக்கும் மனைவியைச் சம்ரட்சிக்க முடியுமா? வேறு மூன்று நாற்பது ரூபாயில் கல்யாணமாகாதவர்களுடன் நானும் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு அமர்த்தியுள்ளேன். மனைவி யிருந்தாலும் அவளை எங்கே இருக்கச் செய்வது சொல்லுங்கள்? என்னுடைய மூன்று சகாக்களோ சம்பளங் கிடைத்த முதல்நாளே பாரன்ரோடிலுள்ள விபசார விடுதிகளுக்குச் சென்று செலவு செய்துவிட்டு, அடுத்த சம்பள நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அன்றும் சம்பள நாளாதலால் ‘இன்று அவர்கள் நள் ளிரவுக்குப் பின்னரே வருவார்கள்’ என எண்ணினேன். எனது ஜேபியில் பர்ஸ் இருந்தது. அதில் எனது மாதச் சம்பளமான புத்தம் புதிய நான்கு பத்து ரூபாய் நோட்டுகளும், சில சில்லறைக் காசுகளும் இருந்தன. இதில் நானும் ஒன்றோ இரண்டோ அல்லது ஐந்து ரூபாயோ சிற்றின்ப விளையாட்டுக்காகச் செலவழிக்க இயலும். எனினும் அவர்களுடன் நான் என்றும் சென்றதே. இல்லை.நான் ஒரு கௌரவமான கனவான் என்று முன்னரே கூறவில்லையா? எனது குடையில் ஓட் டைகள் இருக்கலாம். ஆனால் எனது ஒழுக்கத்தில் ஓட்டைகள் எதுவும் கிடையாது. 

இதற்குள் நீங்கள் பொறுமையிழந்து “நீயும், உன் மரியாதைகளும், உன் குடையும் நாசமாய்ப் போக! அந்த ‘அவள்’ அதாவது கதாநாயகி எங்கே?” என்று நிச்சயமாய்க் கேட்டிருப்பீர்கள். இவ்வளவு நேரம் உங்களை அவளுக்காகக் காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும். நீங்களோ சில விநாடிகள்தான் காத்திருந்தீர்கள். மாரிக்கால மாலை நேரத்தில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. அப்படிக் காத்திருந்தும் பஸ்ஸோ அன்றி அவளோ வந்து சேரவில்லை. தெரு விளக்கொளி இருளைக் கிழித் துக்கொண்டு பாதைகளில் தளும்பிய நீரில் பிரதி பலிக்கும்வரை. காத்திருந்தேன். ‘கியூ’வில் காத்திருந்த மற்றவர்கள் சலிப்படைந்து டிராம் வண்டி ஒன்றைப் பிடிக்க ஓடினார்கள். நான் மட்டும் எஞ்சி, வருகின்ற பஸ்ஸின் நிழலுக்காக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவ ளுடைய வருகையை என் மூக்குக் கண்டுபிடித்து எனக்கு அறிவித்தது. அவள் வருகையை என் கண்கள் காணவில்லை. அவளது காலடி ஓசையை எனது காதுகள் கேட்கவில்லை. ஆனால், செண்ட், பவுடர் வியர்வை, மழைத்துளி, இளமை ஆகியவை கலந்த லேசான ஒரு வாசனை எனது மூக்கில் தாக் கியது. அவள் நிற்பதை உணர்ந்தேன். எனது தலையைத் திருப்பிப் பார்க்கும்பொழுது என் னருகிலே ஏறக்குறையை என்னைத் தொடுவதைப் போல் அவள் நின்றுகொண்டிருந்தாள். அவளது தோளின்மேல் ஒரு பச்சைப்பை தொங்கிக்கொண் டிருந்தது. அவ்வளவுதான். அவளிடம் குடையோ மழைக்கோட்டோ ஏதுமில்லை. அந்தச் சமயத் தில் மேலே திறப்புள்ள இரட்டை அடுக்கு பஸ் ஒன்று வந்து சேர்ந்தது. கீழ்த் தட்டு நிறைய ஆட்கள் இருந்தனர். அவள் என் பின்னே நின் றிருந்தாலும் ஒருக்கால் ஒரே ஆசனம் இருக்கலா மென நினைத்து, அவள் முதலில் செல்லும்படியாக வழி விட்டேன். மற்றொரு பஸ்ஸிற்காக நான் காத்திருக்கலாமே… நான் ஒரு கனவானல்லவா! 

எனது தியாகம் பிரயோசன மற்றதாகி விட்டது. மேல் தட்டுக் காலியாக இருப்பதால் புதி தாக ஏறிய பிரயாணிகள் அங்கு செல்லவேண்டு மெனச் சத்தம் போட்டான் பஸ் கண்டக்டர். மேடையிலும் படிக்கட்டின் அடியிலும் ஜனங்கள் நெருங்கி நின்றுகொண்டிருந்தது தான் காரணம். அவள் இதை யொன்றையும் லட்சியம் செய்யாது குதிகாலுயர்ந்த பூட்ஸ்களினால் ‘டக் டக்’ கென்று நான் பின்தொடர மாடிப்படிமேல் ஏறிச் சென்றாள். கண்டக்டர் கூறினது நிஜந்தான். மேல் தட்டில் வேறு ஒருவரும் இல்லை. நானும் அவ ளுந்தான் இருந்தோம். அவள் இடப்புறமிருந்த பெஞ்சிலே அமர்ந்தாள். நான் அதற்குப் பின் புறத்தில் வலப் பக்கமாக இருந்த ஆசனத்திலே அமர்ந்தேன். நான் சிவாஜி பார்க்கிற்கு டிக்கட் வாங்கினேன்; அவள் மாஹிமிற்கு வாங்கினாள். அவ்வளவு தூரமும் நாங்கள் இருவர் மட்டுமே தனியாகப் பிரயாணம் செய்யவேண்டியிருக்கு மென்பதை நினைத்தபோது, என்னையுமறியாது ஒரு குதூகல உணர்ச்சி தோன்றியது. அதற்குப் பின்னர் அந்தக் கண்டக்டர் கீழே போனானோ அல்லது பின்னாலுள்ள ஆசனத்தில் அமர்ந்திருந் தானோ மாயமாய் மறைந்து விட்டானோ தெரி யாது. அவனை, சிவாஜி பார்க் போய்ச் சேரும் வரை காணவில்லை. 

போர்பந்தருக்கு அருகில் பஸ் போய்ச் சேர்ந் ததும் எனது சொட்டைத் தலையின் மத்தியில் ஒரு ஒற்றை மழைத் துளி விழுந்தது. மேலே பார்த் தேன்; மின்னுகின்ற மின்சார கம்பிகளுக்கு மேல் ஆகாயம் கன்னங்கரேலென்று காட்சியளித்தது. ஆனால், ஒரே ஒரு துளி மட்டுமே விழுந்தது. அதற்குப் பின் காணோம். சிவாஜி பார்க் போய்ச் சேரும்வரை நாங்கள் நனைய வேண்டியிருக்காது என நினைத்தேன். 

கேப்பிட்டல் சினிமா’வின் அருகில் லைட் கம் பத்தினடியில் பஸ் நின்ற பொழுது அவளது முகத்தை முதன் முறையாகப் பார்த்தேன். சிவந்த கன்னங்களும், ரத்தம்போல் சிவந்த அதரங்களும், தங்கம்போன்ற தலைமுடியும் பெற்ற சிவந்த நிறத் தினளாக இருந்தாள் அவள். ‘இந்த ஐரோப்பியப் பெண்கள் தான் எவ்வளவு அழகாக இருக்கின்றனர்!’ என நினைத்து வியந்தேன். அவ்வெளிச்சம் என் முகத்திலும் விழுந்திருக்கவேண்டும். ஏனெனில் அவள் என் பக்கம் திரும்பி ‘சீ! இந்த இந்தியர்களின் லட்சணத்தைப் பார், ஆபாசம்’ என்று எண்ணியது போல் என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அந்த நேரத்தில் என் உள்ளம் வெம்பியது. எனது பழைய பூட்ஸ்கள், கிழிசல் தைக்கப்பட்ட கோட்டு, கிழிந்த கமிசு, அவலட்சணமான கால்சட்டை, க்ஷவரம் செய்யப்படாத முகம், வழுக்கைத் தலை, எல்லாவற்றிற்கும் மேலாக எனது கறுத்த முகம், அனைத்தும் என் நெஞ்சை உறுத்தி வாட்டின. அதனால் அவளை மீண்டும் திரும்பிப் பார்க்கத் துணியவில்லை. விரைவில் இவ் வெண்ணங்கள் எனது மனதிலிருந்து மறைந்து கொண்டிருந்தன. அந்நேரத்தில் என் தலையிலே இரண்டு முரட்டுத் துளிகள் விழுந்தன. என் மண்டை மீதுள்ள அந்த வழுக்கல் பிரதேசத்தில் அவற்றிற்குப் பிரி யம் தோன்றியதோ, என்னவோ! அவை தங்கள் அண்ணன், தம்பி, தங்கை, மைத்துனன்மார்களை யெல்லாம் அழைத்து வந்து குதித்துக் கூத்தாடத் தொடங்கின. ‘கிராபோட்’ மார்க்கெட்டிற்குப் போய்ச் சேரும் தருணத்தில் நல்ல மழையே பெய் யத் தொடங்கியது. 

என்னைவிட, அவள் நனைவதுதான் எனக்குச் சங்கடமாக யிருந்தது. அவள் என்னை வெறுப்புடன் நோக்கியிருந்தாலும்கூட அவள் ஒருபெண்; அதுவும் அழகிய பெண்ணல்லவா! நான் மீண்டும் அவளைப் பார்த்தபொழுது அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். இம்முறை அவள் கண்களிலே வெறுப்புணர்ச்சி இருக்க வில்லை. நான் கற்பனை செய்தேனோ அல்லது அவள் உண்மையாகவே சிரிக்கத்தான் செய்தாளோ தெரியாது. 

“உங்கள் குடையைத் திறப்பதற்கென்ன?” என்று இனிய நெகிழ்ந்த குரலிலே யோசனை கூறினாள். குடையென்று அவள் கருதிய பொருள் உண்மையில் ஒரு வடிகட்டிதான் என்று அவளி டம் எப்படிக் கூறுவது…? 

“குடை? ஆமாம்; குடைதான்!” என்று கூறிச் சங்கடத்துடன் உடைந்த துருப்பிடித்த சட்டத்தை விரித்தேன். வாழ்க்கையின் விசித்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்ததால் தம் கையிலுள்ள குடையை மறந்த, ஞாபக மறதியுள்ள தத்துவப் பேராசிரியர் தோரணையில், “ஞாபகப் படுத்தியதற்காக மிக்க வந்தனம்” என்றேன். 

மழை பெய்துகொண்டிருந்தது. அவள் தெப்பமாக நனைந்துகொண்டிருக்க நான் மட்டும் கொஞ்சங்கூட வெட்கமின்றி அந்தக் குடையின் கீழ் அல்லது வடிகட்டியின் கீழ் – நீங்கள் எப்படி அழைத்தாலும் சரி – அப்பொருளின் கீழே அமர்ந் திருந்தேன். “ஒன்றுமில்லாததற்கு இது ஒரு வகையில் பாதுகாப்புத்தானே, ஏன் நீங்களும் இந்தக் குடையின்கீழே வந்து அமர்ந்துகொள்ளுங்களேன், என்ற வார்த்தைகள் பலமுறை எனது நாக்கு நுனிவரையில் தோன்றி அப்படியே தடை பட்டு நின்றுவிட்டன. ஒருவேளை மழை வார்த்தைகளை அடித்துக்கொண்டு போய்விட்டது போலும். எனது வெட்கம் அழகிலே சொக்கிப் போனது. அவள் ஏதாகிலும் பதில் சொல்லிவிடுவாளோ என்ற பயம் என்னைப் பேசவிடாமல் செய்துவந்தது. என்ன இருந்தாலும் அவள் ஒரு துரைசானி நானோ வேற்றுப் பெண்களை ஏறிட்டுப் பார்க்காத கௌரவ முள்ளவன். அவள் அங்கிருப்பதையும், அவள் நிலைமையையும் உணராதவன்போல், மழைத்திரை ஊடே லேசாகத் தென்பட்ட மகமதலி ரோடிலுள்ள உயர்ந்த புதுக் கட்டிடங்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். 

அப்பொழுது அவள் என்னருகே வந்து நெருங்கி உட்கார்ந்த வாசனை என் மூக்குக்குப் பட்டது. மெல்லிய உடல் எனது இடது தொடை மேல் லேசாக உராய்ந்து அவளிருப்பதை மேலும் வலியுறுத்தியது. 

“வாருங்கள், வாருங்கள்! நன்றாக அமர்ந்து கொள்ளுங்கள்” என்றேன். பக்கத்தில் சாய முயன்றுகொண்டே குடையில் நல்ல பகுதியை அவள் பக்கம் நீட்டி என் பக்கம் பொத்தல் பகுதியைப் பிடித்துக்கொண்டேன்; அதனால் அவள் மீது மழைத் துளி அவ்வளவாக விழவில்லை. 

“உங்களுக்கு நான் என்ன சொல்லி வந்தனம் செலுத்துவது?” என்று உண்மையிலேயே நன்றி யறிதலுடன் கூறினாள். “நீங்கள் உதவியிரா விட்டால் என் எலும்புகூடத் தெப்பமாக நனைந்திருக்கும்” என்றாள் தொடர்ந்து. பேச்சு இப்பொழுது ஆரம்பமாகி விட்டதால் நாணத்தை விடுத்து மிகவும் சகஜமாகப் பேசத் தொடங்கி விட்டோம். 

“நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்?” 

“நான் பத்திரிகை ஆபீசில் வேலை செய்கி றேன்” என்றேன். 

ஆசிரியரா அல்லது ‘புரூப் ரீடரா’ என்பதை விரித்துக்கூறாமல் பொதுவாகக் கூறிவைத்தேன். “நீங்களும் வேலை செய்கிறீர்களா?” என்று நான் கேட்டேன், 

அதற்கு அவள் “ஆமாம்; நானும் ஏதோ செய்கிறேன், அதையும் ஒரு வேலை என்று கூடச் சொல்லலாம்!” என்றாள் ஒருமாதிரி அலுத்துக் கொண்டு. 

நான் பின்கண்டவாறு யோசிக்கலானேன். ‘இவள் சுருக்கெழுத்து எழுதுபவளாக இருக்க வேண்டும். அல்லது நாள் முழுதும் ஒரு ‘டைப் படிக்கும் மிஷின் முன் அமர்ந்து டைப் அடித்து விட்டுச் செல்லும் காரியாலயக் காரியதரிசியாக இருக்க வேண்டும். இந்த ஐரோப்பியப் பெண் களைப்பற்றி நம்மவர்கள் வீண் அவதூறுதானே கூறுகிறார்கள் ? இவள் எவ்வளவு அன்புடன் என்னுடன் பழகுகிறாள்?’ 

அந்தச் சமயத்தில் மழை பலக்க ஆரம்பித்து விட்டது. “உங்கள் உடை வீணாகப் போய் விடுமே. பஸ் கம்பெனி கொடுத்துள்ள கான்வாஸ் துணியால் உங்கள் முழங்கால்களை மூடிக் கொள்ளுங்களேன் ?” என்றேன் நான். ஒரே மறைப்பின்கீழ் இருவர் கால்கள் புகுந்துகொண்டு உராய்தல் சிறிது இருக்கத்தானே செய்யும். அவளது பட்டுப் போன்ற மெல்லிய தொடைகள் என்மேல் படவும் எனது உடலிலே மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டதுபோல் இருந்தது. 

அப்பொழுது கடலிலிருந்து ஒரு பெருங் காற்று வந்து கொண்டிருந்தது. அந்தக் குடை எந்த நிமிஷத்திலும் ‘பாரச்சூட்’டாக மாறி என்னை யும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு பறந்து ஓடும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுக்கொண்டிருந்தது. எனது வலது கையால் உடைந்த கைப்பிடியை இறுகப் பிடித்துக் கொண்டு இடது கையால் சட் டத்தைத் தாங்கி, காற்று, குடையின் உள்ளே புகாமல் பாதுகாத்துக் கொண்டேன. அப்போது எனது வலது கையின் அருகிலே மெல்லிய கை யொன்று பட்டது. குடையைச் சரிசெய்ய அவளும் உதவினாள். அவளது இடதுகை எனது கையுடன் குடையின் பிடியைச் சேர்த்துப் பிடித்தது. வலது கையோ சட்டத்தைத் தாங்குவதற்காக என் தோள்களைத் தழுவும் முறையில் வளைந்திருந்தது. ஆஹா! அதுதான் என வாழ்க்கையிலேயே இன்பகரமான நேரமாகும். 

நான் ஒரு கனவான் என்பது உண்மைதான். எனினும் காதல் உணர்ச்சி இல்லாத மரக் கட்டை யல்லவே நான் ? அந்தச் சந்தர்ப்பம் வருணிக்க முடியாத அளவு இன்பகரமானது என்று என் மனதில் பட்டது. ஒரு ஆடவனும் பெண்ணும் – அதுவும் ஒரு அழகிய பெண் – இருவரும் ஒரே குடையின் கீழ் உடல் உராயும்படி உட்கார்ந்திருந்ததை வர்ணித்து முடியுமா? 

தினசரிப் பத்திரிகையில் ‘புரூப்ரீடரா’க இருந்ததால் எனக்கு அரசியலிலும் அக்கறை யுண்டு. சுதந்திரம், சர்வதேசீயம், அட்லாண்டிக் சாஸனம், சான்பிரான்சிஸ்கோ, அணுகுண்டு இவ்வார்த்தைகளை நன்கு அறிவேன். ஆயிரக்கணக்கான அரசியல் கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியவற்றின் புரூப்களைப் பார்த்திருக்கிறேன். பயிற்சி பெற்ற விசேஷ நிருபர்களைப்போல் எல்லா சீதோஷ்ணங்களிலும் அரசியல் முக்கியத்துவம் ஏதாவதொன்று தோன்றுவதைக் காணமுடியும். உதாரணமாக வானம் மேகங்களினால் சூழ்ந்திருந்தால், சிம்லா முக்கூட்டு மகாநாடு தோல்வியடையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன என்றும், ஆனால் சிம்லாக் குன்றுகளின் உச்சியில் சூரியன் நன்கு பிரகாசித்தாலோ அரசியல் அரங்கத்திலே வெற்றியின் சின்னங்கள் தோன்றும்…என்றும் நிருபர்கள் எழுதுவது போல, அவ்வழகிய அணங்கினை நான் சந்தித்தது ஏதாவது அரசியல் முக்கியத்வம் உள்ளதாக இருக்குமோ என எண்ணினேன். உடனே என் உள்ளத்தே மின்னலைப் போன்ற எண்ணம் தோன்றி மெல்லிய குரலில் முணுமுணுத்தது. “எல்லாம் நன்றாக விளங்கி விட்டது. பூட்ஸ்களிலும் தலைவிதியிலும் ஓட்டைகள் நிறைந்த நீதான் ஏழை இந்தியா. இவ்வலங்காரியோ இந்தியர்களின் இதயத்தை ஆட்சி செய் யும் பிரிட்டானிய ராணி; இம்மழையும் காற்றும் பாசிஸ யுத்தப் புயல்கள். இக்கொடிய புயலினின்று காப்பாற்றும் இந்த உடைந்த குடைதான் இந்தியாவையும் பிரிட்டனையும் காப்பாற்றுகின்ற எளிய யுத்த உதவி நிதி… என்று ஏதேதோ சிந்தித்துக் கொண்டு வந்தேன். 

பஸ் அப்பொழுது பேண்டி பஜார் வழியாகச் சென்று கொண்டிருந்தது. வீதியின் குறுக்கே ‘பாகிஸ்தான் இன்றேல் சாவு’ என்று பொறிக்கப் பட்ட நீண்ட பதாகை கட்டப் பட்டிருந்தது, மழையினால் மை கலைந்து வார்த்தைகள் அழிந்திருந்தன. பாகிஸ்தானுக்குத் தாடி வளர்ந்தது. ‘சாவு’ என்ற வார்த்தை மிகவும் பயங்கரமாகத் தோன்றியது. நான் எனக்குள்ளாகவே ‘எனக்குச் சாவு என்றால் பயம். ஆகையால் அதற்குப் பதில் ‘பாகிஸ்தான் கொடுங்கள்’ என்று கூறிக் கொண் டேன். எனது செய்திப் பத்திரிகை உள்ளம் ‘நீ ஹிந்துஸ்தான், இந்தப் பெண்தான் பாகிஸ்தான். இக்குடைதான் இருவரையும் காக்கும் இமாலயம்…’ என்றது. 

புயல் ஓய்ந்ததையும் அவள் தனது முகத்தை எனது தோளில் சாய்த்து மெல்லிய பூனைபோல் தூக்கம் போடுவதையும் உணர்ந்தேன். இவ்வின்ப உணர்ச்சியில் அரசியல் கற்பனைகளெல்லாம் மறைந்தன. அரசியல் அர்த்தங்கள் கண்டுகொண் டிருந்ததற்காக என் மனதை நானே திட்டிக் கொண்டேன். நாங்கள் இருவரும் இந்தியா இங்கிலாந்தின் சின்னங்களோ அன்றி ஹிந்துஸ்தான் பாகிஸ்தான் சின்னங்களோ, அல்ல. சிரஞ்சீவிக் காதலின் சின்னங்களேயாம். நாங்களிருவரும் ரோமியோவும் ஜூலியட்டும் போல். லைலாவும் மஜ்னுவும் போல். ஹரினும் பர்ஹாதும் போல் பைக்கல்லா, லால்பாம், பரேல் தாதர் ஆகிய இடங்களின் வழியாக பஸ் ஓடிக்கொண்டிருக்கை யில் மேற்கண்ட இன்ப உணர்ச்சி ஏற்பட்டது. மழையும் நின்றிருந்தால் அவளை அசைக்காது குடையை மூடினேன். ‘கிரீச்’சென்று கியர் போட் டுக்கொண்டு பஸ் திலகர் பாலத்தில் ஏறும்பொழுது, அவள் கண்களை மெதுவாகத் திறந்து, சோர்வுடன் கொட்டாவி விட்டுக் கொண்டே “உங்கள் உதவிகளுக்கெல்லாம் என் நன்றி…” என்றாள். ‘உதவிகளுக்கெல்லாம்’ என்பதை அழுத்திக் கூறினாள். ‘என் வாழ்க்கையிலேயே கிடைக்காத இன்பப் பொழுதிற்காக நானல்லவா நன்றி செலுத்த வேண்டும்?’ என்று பதில் கூறலாமா என எண்ணினேன். அது அதிகப் பிரசங்கித்தனமாக இருக்குமென நினைத்து, “அதைப்பற்றிப் பரவாயில்லை. நீங்கள் ஒன்றும் நன்றி செலுத்த வேண்டாம்” என்று கூறினேன். சிவாஜி பார்க்கின் முனையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அடுத்தாற் போல நிற்கும் இடத்தில் நான் இறங்க வேண்டியதை எண்ணியதும் என் மனம் சோர்வடைந்தது. எனக்கென்னவோ அவளது பெயர், விலாசம், அடுத்த முறை எங்கு சந்திக்கலாம் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைதான். ஆனால் முப்பத்தைந்து ஆண்டுகளாகக் கனவானாக வளர்க்கப்பட்ட எனக்கு அவையெல்லாம் கேட்க வாயே வரவில்லை. 

“ஹரி வாஸ்!” என்று கீழே இருந்து பஸ் கண்டக்டர் கத்தினான். பஸ்ஸும் நின்றது. 

அவளது அழகிய முகத்தைக் கடைசியாக நோக்கி “வந்தனம்” என்று கூறிவிட்டுக் கீழே இறங்கினேன். 

ஏனோ எனக்கு அப்பொழுது வீட்டுக்குப் போகத் தோன்றவில்லை. தெரு முனையிலே அந்த. நேரத்திலும் திறந்திருந்த ஈரான் ஹோட்டல் என் கண்ணிற்பட்டது. மழையில் நனைந்ததற்குப் பின் ஒரு கப் தேநீர் அருந்தினால் நன்றாக இருக்குமென எண்ணினேன். அத்துடன் இன்னொரு நாளைக்குக் கிடைக்க முடியாத அந்த இன்பகரமான நேரத்தைப் பற்றிச் சிறிது நேரம் சிந்தித்துக் கொண்டு இருக்க லாம் என்றும் எண்ணினேன். 

தேநீரும் லேசான சூடாக இருந்ததால் ஒரே நிமிஷத்தில் குடித்து விட்டேன். பிறகு குடை யைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே கிளம்பினேன். 

“என்ன ஐயா, தேநீருக்குக் காசு எங்கே?” என்று ஹோட்டல் பையன் கத்தினான். 

வெட்கமாகப் போய்விட்டது. எனது ஞாபக மறதியை நொந்து கொண்டேன். என்னைக் கேவலமாக அல்லவா இந்தப் பையன் நினைப்பான்? எனது உயர்வைக் காண்பிக்க அவனுக்கு ஒரு அணா இனாமாகக் கொடுத்து விட்டால் போகிறது என நினைத்தேன். அதுவும் இன்று விசேஷ நாளாதலால் சிறிது அதிகமாகக் கொடுத்து விட்டால் தான் போகிறது……! 

என் கோட்டின் உட்புற ஜேபியில் கை சென்றது. ஆனால் அங்கு என் பர்ஸ் இருக்கவில்லை. வேறு எந்த ஜேபியிலும் காணோம். 

‘உதவிகளுக்கெல்லாம் என் நன்றி’ என்று ‘உதவி’ என்பதை அழுத்திக்கூறிய இனிய குரல் காதிலே தொனித்தது. அதே குரல் ‘ஆமாம், அதையும் ஒரு வேலை என்று சொல்லலாம்’ என்று கூறியது என் காதில் மறுபடியும் கேட்டது. 

அடுத்த மேஜையில் ஒரு வாடகை மோட்டார் ஓட்டி தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். வெளியே அவனது கார் எஞ்சின் வேலை செய்தபடியே நிறுத்தப்பட்டிருந்தது. நான் நினைத்திருந்தால் அந்த டாக்ஸியில் குதித்து மஹிமிற்குப் பஸ் போய்ச் சேருவதற்கு முன்னரே அந்தப் பெண்ணைக் கைது செய்து, என் ஆஸ்தி முழுதும் கொண்ட பர்ஸை மீட்டியிருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. பின்னால் செய்யவும் முடியவில்லை. ஏன்? அவள் துரைசானி; நானோ ஒரு கனவான். இத்தகைய வீண் கௌரவந்தானே என்னையும், என் தேசத்தையும் நாசமாக்குகிறது என்று முன்னரே நான் உங்களுக்குக் கூறவில்லையா?

– குங்குமப்பூ, கே.ஏ.அப்பாஸ், தமிழில்: கே.கணேஷ், முதற் பதிப்பு: ஜனவரி 1956, இன்ப நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *