என்று மடியும் எங்கள்





(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெய்யில் வறுத்துக் கொண்டிருந்த தெருவில் எப்போ தாவது வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. சில சைக் கிள்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள்.

உருகிக் கொப்பளிக்கும் தாரில் கால் பதியப் பதிய மாட்டு வண்டில் ஒன்றின் மாடுகள் பாய்ந்து கொண்டு போயின. முதுகில் விழும் அடிகளைத் தாங்கிக் கொண்டு மூக்குத் துவாரத்தின் ஊடாக வெண்மையாய் நுரை தள்ளத் தள்ள அவையால் என்ன செய்ய முடியும்?
எத்தகைய வேதனைகளையும் வெளிக்காட்டாமலே தமக்குள் அனுபவிக்கும் அந்த வண்டில் மாடுகளைப் போல சின்னத்தம்பியும் தன்னை நினைத்துக் கொண் டான்.
உச்சி வெய்யிலின் துளைத்தெடுக்கும் கோரத்தினைத் தாங்கிக் கொண்டு தன்னைப் போல இருக்கும் ஏனைய வர்களையும் சின்னத்தம்பி பார்வையினால் அளந்தான்.
விதவைக் கோலம் பூண்ட பெண் போல வாடித் துவண்டு இருந்த அந்த சிறிய ஆல மரத்தின் நிழலில் அவர் கள் காத்திருந்தார்கள். அதன் நிழல் சிதறுண்டு போய் பதம் இருந்தது. இடையிடையே வெய்யில் கதிர்கள் பார்த்துக் கொண்டிருந்தன
சின்னத்தம்பியுடன் சேர்த்து பன்னிரண்டு பேர் கைகளில் உடுப்புப் பார்சல்கள், சாப்பாட்டுப் பார்சல். சகிதம், மனங்களில் வேதனை சுமையாக அழுத்த குமுறிக் கொண்டு இருந்தனர்.
சின்னத்தம்பிக்குப் பக்கத்தில் இருந்த வயதான பெண் ஒருத்தி கடுமையாக இருமிக் காறித் துப்பினாள். நெஞ்சில் உண்டான எரிவைத் தடுக்க நெஞ்சைத் தடவிக் கொண்டு “என்ரை அம்மாளே” என்றாள்.
சின்னத்தம்பி அவளைப் பரிதாபமாகப் பார்த்தான். சின்னத்தம்பி வரும் நாட்களில் எல்லாம் இந்தப் பெண் ணும் வருகின்றாள்தான். என்றாலும் எதுவுமே சரி வரவில்லை.
அந்தப் பெண்ணின் விழிகளில் கண்ணீர் திரண் டிருந்தது.பரட்டைத்தலையையும் பொலிவிழந்த முகத்தை யும் பார்க்க சின்னத்தம்பிக்குத் தன் மனைவியின் நினைவு வந்தது.
சூழ்ந்து விட்ட கவலைகள் அரித்தெடுத்ததால் வயதால் மூப்படையாமல் தோற்றத்தால் மூப்படைந்து கஸ்டப்படு நாளும் பொழுதும் குசினுக்குள் இருந்து கின்றாள்,
இரவும் அவள் நித்திரை கொள்ளாமல் படுக்கையில் புரண்டு புரண்டு கடைசியில் அதிகாலை நாலு மணிக்கு எழும்பி விறகில்லாமல் வேலி மட்டை முறித்து அடுப்பு மூட்டி… சாப்பாடு செய்து பிள்ளை பாசத்தை எல்லாம் சேர்த்து பார்சலாக்கி கண்ணீருடன் தந்திருந்தாள். இப்படி எத்தனை நாட்கள் தந்திருப்பாள்.
எத்தனை தடவைகள், சாப்பாட்டுப் பார்சல்களைக் கொடுக்க முடியாமல் திருப்பிக் கொண்டு போன நாட்கள் எத்தனை?
இன்றைக்கும் காலையில் முதல் பஸ் பிடித்து இறங்கியபோது பனியில் குளித்திருந்த செடிகள் சொட்டு போட்டுக் கொண்டிருந்தன. விறைத்துப் போன முகங் களுடன் சிலர் நடந்து கொண்டிருந்தனர். தேனீர் கடைக் காரர் கடையைத் திறத்து கொண்டிருந்தார்.. மின்சார வயர்களில் அணி வகுத்திருந்த காகக்கூட்டம் ஒருவாட்டம் கரைந்து வட்டம் போட்டன்.
முன்னரே வந்துவிட்ட அந்த வயதான பெண் புழுதி தோய்ந்த கால்களுடன் குந்தியிருந்தாள். அப்போது தொடக்கம் பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்ட இந்த நேரம்வரை சின்னத்தம்பியைப் போலவே அவளும், அவள் மட்டுமா? ஏனையவர்களும் காத்திருக்கின்றனர்.
சின்னத்தம்பியின் வாழ்க்கையில் இப்படி எத்தனைச் காத்திருப்புக்கள். நினைத்துப் பார்க்கையில்…
படிப்பில் ஒரு சாலும் – தோட்டத்தில் மறுகாலுமாக இருந்து எஸ்.எஸ். சி. வரை படித்து மேலும் படிக்க முடியாமல் இருக்கும்போது ஒரு வேலை எடுத்தால் என்ன என்ற சிந்தனை பிறந்தது.
அந்தக் காலத்தில் எம்.பியைப் பிடித்தால் சி.ரி . பி பஸ் கண்டக்டர் வேலை கிடைக்கும் என ஊரில் கதைத் ததை நம்பினான். எம். பி.யின் வீட்டுப் படியேற துணி வில்லை. இலகுவாக அவரைச் சந்திக்க முடியாது. எம்.பி.யின் பன்னிரு கைகளில் ஒன்றாக இருந்த முத்துத்தம்பி யரைச் சந்திக்கக் காத்திருந்த நாட்கள் கணக்கற்றவை.
பல தடவை சந்திக்ச முடியாமல் கடும் மழை பொழி யும் மார்கழி மாதத்து அதிகாலையில் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டு போனாலும் முத்துத்தம்பி நித்திரையால் எழும்ப எட்டு மணியாகி விட்டது.
காலைக் கடன்களை முடித்துக் கொண்டு. வெளியே வந்த அவர்,
“நீ பொன்னுத்துரையின்ரை பெடியன்தானே. ஆட் களைச் சந்திக்க வாறதுக்கு ஒரு நேரக் கணக்கில்லையே சரி உதிலை இருந்து கொள் நான் ஒரு அவசர அலுவல் போட்டு வாறன்” என்று சொல்லி விட்டுப் போனவர் தான்.
அதிகாலையில் சக்கரையோடு குடித்த தேயிலைச் சாயத்துக்குப் பிறகு எதுவுமே இல்லாமல் பகல் பன்னி ரண்டு மணிவரை விஜாந்தைக் கதிரையிலும் வெளி மாமரத்து நிழலிலுமாக காத்திருந்தது தான் மிச்சம்.
இருக்கச் சொல்லி விட்டுப் போனவர் வருவார் இப்ப வருவார்…இன்னும் கொஞ்ச நேரத்தால வருவார் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.
வியர்க்க விறுவிறுக்க வந்த அவர் சின்னத்தம்பி காத் திருப்பதையே உணராதவர். போல உள்ளே போய் விட்டார். அவர் உள்ளே போன அடுத்த நிமிஷமே வெளியே வந்த ஒரு பெண்-
“ஐயா சாப்பிடப் போறார்… போட்டு பிறகு வரட் டாம்” என்று சொல்லிக் கொண்டு… முகத்தில் அடித்தாற் போல கதவை ஓங்கியடித்தாள்.
நெஞ்சம் வலியெடுக்க புற்கள் வரம்பு கட்டியிருந்த செம்பாட்டு மண் பாதையால் நடந்து வீடு திரும்பிய போது தங்களைப் போன்றவர்களுக்கு விமோசனம் எப்போ கிடைக்கும் என்ற எண்ணம் இருபது வயதும் நிரம்பாத அந்த நேரத்தில் எழுந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்ட இன்றைய நிலையிலும்கூட அந்த விமோசனம் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.
“தம்பி நேரம் என்ன” என்று கேட்டாள் அந்த வயதான பெண்.
சின்னத்தம்பி மணிக்கூடு உள்ள ஒரு ஆளிடம் கேட்டு பன்னிரண்டு ஐம்பது” என்றான்.
“சில வேளை இரண்டு மணிக்கும் விடுவினம் முந்தியு மொருக்கா இப்பிடித்தான். காலDை தொடக்கம் எங்களை காய விட்டுப் போட்டு இரண்டு மணிக்குப் பிறகு பார்க்க விட்டாலும் விடுவினம் என்றாள் பெருத்த எதிர்பார்ப்புடன் ஏக்கம் நிறைந்த முகத்தில் சிறிது சிறிது ஆர்வம் பொங்கிற்று.
இந்த எதிர்பார்ப்புடன் தானே நாளைக் கழிக்க வேண்டியுள்ளது. இந்த நிமிடம் இல்லாவிட்டால் அடுத்த நிமிடம்…அடுத்த நாள்…வாரம்… மாதம்… வருடம் என்று
கலியாணம் முடித்து மூன்று பிள்ளைகள். பிறந்த நிலையில் குத்தகைக் காணியுடன் மல்லுக் கட்டிக் கொண் டிருந்தபோதுதான் வன்னியில் வயற்காணி அரசாங்கம் கொடுக்கப் போவதாக வன்னிக்குப் போய் வந்த வன்னிய சிங்கம் சொன்னான்.
ஊரில் இருந்து காணிக்கு அப்பிளிக்கேசன் போட்ட நாலைந்து பேரில் சின்னத்தம்பியும் ஒருவனுமானான். குறிப்பிட்ட நாளில் வவுனியாவில் நடக்கும் காணிக் கச்சேரிக்கு வருமாறு கடிதமும் வந்தது.
அழகாக விடிந்த ஒரு காலைப் பொழுதில் முதன் முதலாக ரயில் ஏறி வன்னிய சிங்கத்துடன் வவுனியா பயணப்பட்டது இப்போது சின்னத்தம்பிக்கு ஞாபகம் வந்தது.
விரைந்து மறைந்த காடுகளையும் மின்னல் அடித் தாற் போலத் தோன்றும் வயல்வெளிகளையும், பசும்பாசி பொருமிய குட்டைகளையும் பார்த்து ஆனந்தப்பட்டுத் தானும் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் வாழப் போவ தாக கற்பனையில் இன்பம் அனுபவித்து வவுனியா போய் சேர்ந்தான்.
பஸ் ஸ்ராண்டுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையொன்றில் இடியப்பமும் சாப்பிட்டு தேனீரும் குடித்துக் கச்சேரியை அடைந்தபோது காலை பத்து மணி இருக்கும்.
கும்பலாக வந்திருந்த ஆட்களுடன் இவர்களும் சேர்ந் தார்கள். சின்னத்தம்பியை இருக்கச் சொல்லி விட்டு உள்ளே போன வன்னியசிங்கம் சிறு பொழுது கரையத் திரும்பி வந்தான்.
“எங்களை ஒரு மணிக்குப் பிறகுதான் கூப்பிடுவார்களாம்.”
“ம்… அதுக்கென்ன…” என்றான் சின்னத்தம்பி,
“வாவன் ஒருக்கா ரவுணைச் சுற்றிக் கொண்டு வருவம்”
“சா…என்னத்திற்கு இஞ்சை இருப்பம்”
“எவ்வளவு நேரம் எண்டு இருக்கிறது. உவன்கள் ஒரு மணி எண்டு சொல்லிப் போட்டுக் கடைசி ரண்டு… மூண்டு மணிக்குத்தான் கூப்பிடுவான்கள்” அதுவரை என்னெண்டு காத்திருக்கிறது.”
“எனக்குப் பிரச்சினையில்லை காத்திருந்து எனக்கு அனுபவம் இருக்கு” என்றான் சின்னத்தம்பி.
உண்மையில் மாலை நாலு மணி வரை காத்திருந்து காணிக்கச்சேரி முடிய இரவு மெயில் ரயினில் புறப்பட்டு காலையில் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
இன்றுவரும் கடிதம் நாளை வரும் என்று இருந்து மாதங்கள் கடந்து-
“காசு கட்டின ஆட்களுக்கும் பெரும்பான்மைக்கும் தான் காணி குடுத்தவையாம்” என்று வெகு நாட்கள் கழித்து வவுனியா போய் வந்த வன்னிய சிங்கம் சொன்னான்.
வன்னியிலே வயற்காணி எடுத்து வயல் செய்யலாம் போலவே காத் என்று ஆசையுடன் சின்னத்தம்பியைப் திருந்த வன்னியசிங்கம்.
“எங்கடை வாழ்க்கை இப்பிடியே காத்திருந்து காத் திருந்து கரைந்து போகப் போகுது. எப்பதான் எங்க ளுக்கு ஒரு நிலையான விமோசனம் கிடைக்க போகுதோ” என்றான் வேதனையுடன்.
சொன்ன வன்னியசிங்கம் அன்றைக்கு அப்படிச் இப்போது இல்லை. வன்னிக்கு நெல் வாங்கப் போனவன் வழியிலேயே காணாமற் போய்விட்டான்.
உதவிக்கு யாரும் இல்லாத அவன் குடும்பம் இப்போது படும்பாட்டை நினைத்தால் வேதனைப்படு வதைத் தவிர வேறு வழியில்லை. யார் யாருக்கு ஆறுதல் சொல்ல முடியும்.
சின்னத்தம்பி மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்குப் போனான்.
சின்னத்தம்பியின் மூத்தமகன் அட்வாண்ஸ்லெவல் ஒரு தடவைதான் எடுத்தான். பரீட்சை நன்றாகச் செய் திருந்தபடியால் அவன் பெருத்த எதிர்பார்ப்புடனேயே இருந்தான்.
ஆனால் றிசல்ட் நன்றாகவே வந்தது. மகனும் பல்கலைக்கழகம் போவான் என்று சின்னத்தம்பியும் தனக்குள் பரவசம் அடைந்திருந்தான்.
எப்போதும் போலவே சின்னத்தம்பி காத்திருந்தான். கடைசியில் அவன் காத்திருப்பு நொறுங்கியது. கனவுகள் கலைந்தது. தனக்குள் குமைந்து குமைந்து தன் வேதனையை முழுமையாக வெளிக்காட்டாமல் சோகம் ததும்பும் வதனத்துடன் திரிந்த மகனை சமாதானப் படுத்த முனைந்தான்.
எல்லோரும் சொன்னது போலவே தானும் “தம்பி- திருப்பி எடு ராசா…அடுத்த தரம் நிச்சயமாய் உனக்கு இடம் கிடைக்கும்” என்று சொன்னதை மகன் வே தனை யின் சாயல்படிய சிரித்து மறுத்தான்.
எதற்காக அவன் அப்படிச் சிரிக்கின்றான் என்பது முதல் சின்னத்தம்பிக்கு விளங்கவில்லை. மகனை ஆர்வத்துடன் பார்த்தான்.
“என்ன தம்பி” என்ற கேள்வியில் மனம் கரந்தது.
”நான் இனித் திருப்பி சோதினை எடுக்கேல்லை ஐயா… திருப்பி எடுத்தாப் போலை கம்பஸ் போக சான்ஸ் கிடைக்குமோ எண்டு எனக்கு நம்பிக்கையில்லை. உங்கடை காசையும் என்ரை காலத்தையும் ஏன். வீணாக்குவான் எண்டுதான் யோசிக்கிறன்.”
சின்னத்தம்பி அதிர்ந்து போனான். சோகம் அவனை கவ்விக் கொண்டது. மகனின் வார்த்தைகளுக்கு பூரண விளக்கம் தெரியாமல் சிறிது நேரம் தடுமாறிப் போனான்
“என்ன தம்பி நீ சொல்லுறாய்…” என்னும் போதே விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“ஐயா…நீங்கள் என்ன கஸ்டப்படுறியள் எண்டு எனக்குத் தெரியும். என்னையும் … தம்பி தங்கச்சிமாரையும் படிபிக்க நீங்கள் படும்பாடு எனக்கு நல்லாய் விளங்கும். அதாலதான் யோசிக்கிறன் நான் இந்த அட்வான்ஸ் லெவல் றிசல்டோடை எதாவது வேலைக்குத் தெண்டிச் சுப் பார்க்கப் போறன். எனக்கு ஒரு வேலை கிடைச்சால் கடைசி நான் படிக்காட்டியும் பரவாயில்லை தம்பி தங்கச்சியையாவது படிக்க வைக்கலாம்,” என்று சொன்ன அவனில் ஒரு உறுதி வெளிப் பட்டிருந்தது.
இறைஞ்சும் விழிகளுடன் மகனை சின்னத்தம்பி பார்த்தான்,
அது ஒரு இருள்கவியும் மாலை நேரம். வானச்சரிவு இருந்தது. கொக்கரித்துக் கொண்டு செம்மையாகிக் கொக்கரித்து கோழிகள் தாழ்ந்த மரக் கொப்புக்களில்” பாய்ந்து கொண்டிருந்தன.
கொட்டிலில் நின்ற ஆடு புழுதி கிளறியதால் மாலைப் பொழுது புழுதியாக மறைந்தது. அம்மன்கோயில் மாலை நேரப் பூசையின் மணியோசை கேட்டது. சின்னத்தம்பி யின் மனைவி மாட்டில் பால் கறந்து கொண்டு இருந் தாள் வேலியைப் பிடுங்கிக் கொண்டு வைக்கோல் லொறி ஒன்று நகர்ந்தது. இத்தனையையும் மீறி வெகுதூரத்தில் இருந்து அதிர்வுகள் கேட்டன.
பிரகாசமாக ஜொலிக்கும் கண்களுடன் சின்னத்தம்பி யின் மகன் தகப்பனையே பார்த்தான்.
“என்னர ராசா… ” என எதையோ கேட்பதற்கு சின்னத்தம்பி மேலும் கேட்க முடியாமல் முனைந்த தடுமாறினான்.
“ஐயா…நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பாட தேங்கோ…நான் வடிவாய் யோசிச்சுத்தான் இந்த முடிக்கு வந்தனான். தம்பி தங்கச்சியவையைத் தன்னும் நாங்கள் நல்லாய் படிப்பிக்க வேணும்,” என்று சொன்னான்,
சின்னத்தம்பி அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை. மகன் சொல்வதில் உள்ள நியாயத்தினைப் புரிந்து கொண்டான்.
இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும். சின்னத் தம்பிக்கு வேதனை நெஞ்சை முட்டி மோதியது. மூத்த மகனை நினைக்கும் போது நெஞ்சில் பாரம் ஏற்றி விட்டது போன்ற தவிப்பு உருவானது.
எத்தனை வேலைகளுக்கு அப்பிளிக்கேசன் அனுப்பி இன்டர்வியூக்களுக்குப் போய் தெரிந்த ஆட்கள், பெரிய ஆட்கள் என்று சுழியோட்டங்கள் செய்தும்… எல்லாமே வெறும் கனவாய்… கதையாய் முடிந்து விட்டன.
வேலை கிடைக்கும். வேலைகிடைக்கும் என இயல் பான எதிர்பார்ப்புடன் காத்திருந்து காந்திருந்து காலத் தைக் கடத்தியது தான் மிச்சம்.
புறச்சூழல் பாதிப்புக்கள் இருந்த போதும் சுற்றுப் புறத்து அவலங்கள் நெஞ்சத்தைக் கொடுமைப் படுத்திய போதும் அதைக் கருத்திற் கொள்ளாது தன் நெஞ்சத்தி னுள் அவற்றினை அமுக்கிக் கொண்டு தன் குடும்பத்தை நல்லாய் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற் காகவே முனைந்து நின்றேன்.
மரத்தடியின் நிழல் படர்ந்த தரை கூட நன்றாகச் சுட்டது. வயதான பெண்மணி கடுமையாக இருமத்தலைப் பட்டார். குந்தியிருந்த அனேகம் பேர் சோர்ந்து போய் இருந்தார்கள்.
சின்னத்தம்பிக்கு நாவரண்டு போய் இருந்தது. குளிர்ந்த தண்ணீர் குடித்தால் நல்லது போல இருந்தது.
தண்ணீர் குடிக்க சந்திக் கடை வரை போக வேண்டும். இந்தக் கொடிய வெய்யிலில் அதுவரை போய் வருவது என்பது சங்கடமான காரியம். அதற்கிடையில் இவர்கள் கூப்பிட்டு விட்டால்…? என்ற யோசனையும். கூடவே எழுத்தது.
பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது போலும் சந்திக்கு அப்பால் இருந்த பாடசாலையில் இருந்து அணிதிரளும் மேகங்களாக மாணவர்கள் வீடுநோக்கி புறப்படத் தொடங்கி விட்டனர்.
திடீர் என றோட்டில் வாகனங்கள் முளைத்தன. மரத்தடியில் குந்தியிருந்தவர்களில் ஒருவர் மயங்கித் தரையில் சரிய அவரை ஏனையவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
வெறும் போத்தில் ஒன்றுடன் ஒருவர் விரைந்து சந்தியை நோக்கி ஓடினார்.
சின்னத்தம்பி நடுங்கும் கால்களுடன் எழுந்து அந்த மனிதரை அண்மித்தான்.
“பாவம் எத்தினை நாள் சாப்பிடாமல் இருந்துதோ மனிசன் இண்டைக்கும் விடிய வெள்ளண வந்திட்டுது.” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் ஒரு பெண்.
சின்னத்தம்பி சுற்றி நின்ற எல்லோரையும் பார்த்தான். எல்லோரும் ஒரே விதமான முகங்களுடன் தான் இருந்தனர் வயதான கிழவி கூட எழும்பி வந்தாள்.
“தம்பி…இரண்டு மணிக்கு மேல இருக்குமே”
“ஓமெணை” என்றான் சின்னத்தம்பி…
”இண்டைக்காவது பார்க்க விடுவங்களே … என்ரை பிள்ளையைப் பாத்து எத்தனை நாளாச்சு…” என்றாள். அழுகையுடன் அவள்.
சின்னத்தம்பிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. எதை சொல்வது எப்படிச் சொல்வது.
“நானும் என்ரை மூத்தவனைப் பார்ப்பனே…” எனத் தனக்குள் கேட்டுக் கொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தான்.
– வீரகேசரி, 21-05-89.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.