என்று தணியும்
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாலை நான்கு மணியிருக்கும். மத்திய மலை நாட்டின் பிரதான நகரொன்றிலிருந்து தலைநகர் நோக்கிச் செல்லும் பஸ்ஸிற்காக அந்தச் சிறிய கடை வீதியின் பஸ் தரிப்பி நிலையத்தில் காத்திருந்தேன். சற்றைக் கெல்லாம் நிரம்பி வழிந்தபடி வந்த அந்த வண்டி நிறுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பொடிப்பொடி ஆகியது. வேகம் குறைந்து நிற்காமலே நகர்ந்து கொண்டிருந்தது. இளைஞர்கள் பலர் தாவி ஏறினர். நான்?…. “விட்டுவிடுவோமா?” என்ற நினைப்பு பூர்த்தியாகாமல் பொசுங்கிப் போனது. தாமதமாவதின் விளைவுகள் விசாரணை, சம்பளக்குறைப்பு என மின்னல்களாய் மூளைக்குள் மின்னி மறைந்தன. ஒரு செக்கன்தான் கணத்தாக்கம் என்னையும் தாவி ஏறச் செய்தது.
இதயம் ஒரு நொடி நின்று பின் வேகமாகத் துடித்தது. பிடிமானம் இல்லாமல் தடுமாறிய என் கரத்தை இன்னொரு வலிமையான கை அழுத்திப் பிடித்திருந்தது. மிதிபலகையின் கடைசிப் படியிலிருந்து சிரமப்பட்டு அண்ணாந்து பார்த்தேன். நடத்துநர்தான் பிடித்திருந்தான். நான் நிற்கும் படியிலே கூட இரண்டு மூன்று இளைஞர்கள் தொற்றிக் கொண்டுதான் வந்தார்கள். மேலே ஏறுவதைப் பற்றி இப்போதைக்கு நினைக்க முடியாது. இப்படியே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்தேன். முப்பது கிலோ மீற்றர் கடந்த பின் ஒரு சிறிய டவுண் வந்தது. பத்துப் பதினைந்து பேர் இறங்கினார்கள். கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டு ‘படிப்படியாக” மேலேறினேன். பிடிமானத்திற்கொரு ஆசனத்துக் கம்பி கிடைத்தது. இப்போதுதான் டிக்கட் எடுக்கக் கிடைத்தது.
அழையா விருந்தாளிகளாய்க் காட்சிகள் விழிகளுக்குள் பிரவேசித்தன. நின்றும் அமர்ந்தும் தூங்கி வழியும் சனக்காடு. எல்லாரும் உழைப்பளிகள். இவ்வளவு நெரிசலாக பயணித்துக் கொண்டு. ஆச்சரியம் காமசேஷ்டைகள் இல்லாமலிருந்ததுதான். இயந்திர இரைச்சலும் உதடுகளின் நிசப்தமும் சுமந்து பயணம் தொடர்ந்தது. இரவு உருகி விடியலுக்குக் கட்டியம் கூறத் தொடங்கியிருந்தது. பார்க்கவோ இரசிக்கவோ விழிகளில்லை. அதற்காக இயற்கை அழவுமில்லை. பொழுது விடிந்து கொண்டுதானிருந்தது.
என் இடம் வர வண்டியிலிருந்து தள்ளப்பட்டேன். விரையும் வண்டியைப் பெருமூச்சுடன் நோக்கி மெல்லச் சுதாகரித்து நிதர்சனத்துக்கு மீண்டேன். நான்கு மணிநேரம் நிலையாக நின்றதால் கால்கள் வீங்கியிருந்தன. உடம்பு பூராவும் வலித்தது. கலைந்து பறந்த தலை கேசம் வருடிய நான் அதிர்ந்தேன். ஸ்லைட் காணாமல் போயிருந்தது. இந்த மாதமும் இருபது இருபத்தைந்து ரூபாய் அநாவசியச் செலவு.
கண்களுக்குள் மணலை அள்ளிப் போட்டது போலிருந்தது. நேற்றைக்கு முன் தினம் ‘டே அன்ட் நைட்’ வேலை.நேற்றுக் காலைதான் வேலை முடிந்தது. ஓய்வுக்காக தரப்பட்ட நேரத்தை இன்டர்வியூவுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். ஓடும் பஸ்ஸில் நழுவும் இருக்கையில் கொள்ளும் உறக்கம் இரண்டு நாளைய நித்திரைத் தியாகத்தையும் உழைப்பின் களைப்பையும் போக்குமா என்ன? ஒரு கனவைப் போல இன்டர்வியூவும் நடந்து முடிந்தது. எதிர்பாராத விதமாக என் பால்ய சிநேகிதியின் சந்திப்பு கிடைத்தமை சற்று ஆறுதலாகவும் மாறுதலாகவும் அமைந்தது. நீண்ட நாளைய பிரிவின் தாற்பரியம் இருவரையும் எங்கள் வீடு நோக்கி நகர்த்தியது.
நேற்றைய இரவும் முன்னைய மூன்று நாட்களைப் போலவே உறக்கமின்றிக் கழிந்தது. எனினும் இது பத்துவருடப் பிரிவின் ஒரு சில பகிர்வுகளைப் பதிவு செய்த சற்று மாறுதலான அனுபவமாக அமைந்தது. உணர்வுகளை மட்டுமல்ல ஓய்வையும் அடக்கியாளப் பழகிப் போன நான் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து புறப்பட்டு நான்கு மணி பஸ்பிடித்து, எட்டு மணிக்கெல்லாம் இதோ… சாவி கொடுத்த பொம்மையாய்.. நிமிர்ந்து பார்க்கிறேன். அந்த பச்சைப் பெயின்ட் அடித்த ஆடைத் தொழிற்சாலை பிரம்மாண்டமாய் என்னை வரவேற்கிறது.
இன்றைக்கு சங்குதான். ஆழ்மனம் அலறியது. வரவைப் பதிவு செய்வதற்காக அட்டையைத் தேடினேன். வழமையான இடத்தில் அது இல்லை. அதில் தான் வரவு நேரத்தையும் மாலையில் செல்லும் நேரத்தையும் இயந்திரத்தினுள் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஏனையவர்கள் நேரம் பதியும் சப்தங்கள் சடார் சடார் என செவிகளைச் சாடின. அப்போது தான் என் ஞாபகப் பொறி மின்னியது, முறைப்படி பார்க்கப் போனல் நான் நேற்றிரவு வேலைக்கு வந்திருக்க வேண்டும் வராவிட்டால் “காட்” எடுக்கப்படுவது வழமையே.
நேற்றுக்காலை விடுமுறை கொடுத்தது ஓய்வு எடுக்கத்தான். நான் போகவிருந்த நேர்முகப் பரீட்சைக்கு விடுமுறை கேட்க அவசியமே இல்லாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்ந்ததை, அலைச்சலிலும் மனக்கசப்பிலும் இரவு வேலைக்கு வரவேண்டுமென்பதை மறந்ததை இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது? எல்லாம் போச்சு. இந்த வேலையும் பறிபோய் விடுமோ என்ற அச்சம் உந்தித் தள்ள ஓடிச் சென்று கழிவறைக்கு அருகிலுள்ள ஓய்வறையில் எனது லொக்கர் திறந்து “சீருடை” என்ற பெயரில் அமைந்த ஏப்ரன், தொப்பி அணிந்து தொழிற்சாலை அடையாள அட்டையை உடையில் முன்புறமாகக் குத்திக் கொண்டேன்.
மூளை ஆணையிடாமலே உடல் முன்விரைந்தது. நுழைவாயிலில் மேற்பார்வையாளர்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் “லைன்’ சுப்பவைசர் சுதர்மாவும் நின்று கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் பார்த்தாளே ஒரு பார்வை, இடுப்பில் கை வைத்து அவள் நின்ற தோரணை! குட்டையாக வெட்டப்பட்டு சிலுப்பிக் கொண்டிருந்த கூந்தல், முட்டைக் கண்கள் எல்லாம் சேர்ந்து என்னை மேலும் பயமுறுத்தின. அவளின் காட்டுக் கத்தல் ஓயும் வரை அமைதியாகத் தலை குனிந்து நின்றேன். பேசி முடித்து என்னை மனேஜரிடம் துரத்தினாள். அங்கும் அர்ச்சனைதான். ஒப்பீட்டளவில் சுப்பவைசரை விட மனேஜர் பரவாயில்லை.
மனேஜர் மீதிருந்த அபிப்பிராயம் சில நொடிகளில் தகர்ந்தது. சொல்லாமல் லீவு எடுத்தமைக்காக அவன் கொடுத்த தண்டனை கேட்டு ஆடிப் போனேன். என்னை வேலையிலிருந்து விலகிக் கொள்ளும்படி கட்டளையிட்டான். தயங்கி நின்ற நான் ஏதாவது கூறிச் சமாளிக்க எத்தனித்த போது எனது வரவுப் பதிவு அட்டை வீசியெறியப்பட்டது. மனேஜர் வெளியேறி விட்டான்.
தொழிற்சாலையின் மத்தியில் சற்று உயரமாக மேடை போன்றும் சுற்றிவர கண்ணாடித் தடுப்புகளாலும் அமைக்கப்படடுள்ள மனேஜரின் அறைக்குள்ளிருந்து உற்பத்திப் பகுதி முழுவதையுமே நோட்டமிடலாம். முன்புறமாக விரிந்து கிடந்த அந்த மண்டபத்தின் இறுதியில் நீண்ட மேசைகளில் துணிகள் விரித்து அடுக்கிக் கிடந்தன. ஆண்களும் பெண்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். இதுதான் தைப்பதற்காக ஆடைகள் வெட்டப்படும் பகுதி. அதனை அடுத்த பரப்பில் வரிக்கு ஏறத்தாழ எழுபத்தைந்து தையல் இயந்திரங்கள் போடப்பட்டு ஐந்து வரிசைகள் காணப்பட்டன. இவ்வரிசைகளுக்கு ஆங்கில அகர வரிசையில் பெயர்களும் வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வரிசைக்கும் தனித்தனி மேற்பார்வையாளர் நியமிக்கப் பட்டிருந்தனர். தொழிற்சாலையின் உற்பத்தி மையமாக இப்பகுதியே கருதப்படும். ஏனைய பகுதிகள் அத்தியாவசியமானவையாக இருந்தாலும் இதற்குத் துணையாக அடுத்தபடியாகவே அமையும்.
மனேஜர் அறையின் பின்புறமாக ஃபைனல் செக்கிங் என்று ஒரு கண்ணாடித் தடுப்பறை காணப்பட்டது. தைக்கப்பட்டு முழுமையடைந்த ஆடைகள் இங்கு பரிசோதிக்கப்பட்டு தையல் தரம் நிர்ணயிக்கப்படும். அதன் பின் அதற்கு அடுத்த பொதி செய்யும் பிரிவிற்கு அனுப்பப்படும். அங்கு ஆடைகள் அழுத்தி, நேர்த்தியாக்கி, மடிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு காட்போட் பெட்டிகளில் அடைக்கப்படும். பின் இப்பகுதியின் பெரிய வாசல் திறக்கப்படும். அங்கு தயாராக நிற்கும் லொறிகளில் ஆடைப் பொதிகள் ஏற்றப்பட்டு வெளிநாட்டு ஏற்றுமதிக்காக விமான நிலையம் அனுப்பப்படும்.
இவை தவிர தொழிற்சாலைக்குள் களஞ்சிய அறை, சாம்பிள் ரூம், உயரதிகாரிகளுக்கான ஓய்வறை போன்றனவும் காணப்படுகின்றன. தொழிலாளர் களுக்கான உணவகம், முதலுதவி அறை, கழிப்பறை, ஓய்வறை எல்லாம் வெளியே தொழிற்சாலை வளவுக்குள் அமைந்திருக்கின்றன.
ஐநூறுக்கும் அதிகமான மனித உருவங்கள் என் விழிகளின் முன்னால் விரிந்து கிடந்தாலும் தனிமைப்பட்டு விட்டதாக உணர்ந்தேன். என்னைப் போல் இங்கு நின்ற பல யுவதியர் நேற்று வேலைக்கு வராமைக்கு ஏதேதோ காரணங்கள் கூறித் தப்பித்து கடமைக்குத் திரும்பி விட்டார்கள்.என்னைத் தான் மனேஜர் பேசவே விடவில்லையே! எல்லாம் நேரம்தான். என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆனால் ஏதாவது செய்தாக வேண்டுமே!
அந்தத் தொழிற்சாலைக்குள் நூறு மீற்றர் தூரம் ஓடி நடந்து மாடிப் படி ஏறி காரியாலயம் அடைந்தேன்.ஏ.சி. ரூமுக்குள் சுழல் நாற்காலிகளில் எழுதுவினைஞர் படை ஒன்று அமர்ந்திருந்தது. பிரதம லிகிதரின் மேசை முன் நின்றேன். கையிலிருந்த வரவுப் பதிவு அட்டை என் நிலையை பறைசாற்றியிருக்க வேண்டும். அலட்சியமாக நிமிர்ந்தான். தூக்கிச் சாய்த்த அந்தக் கிழட்டு முகத்தில் பூனைக் கண்கள் என்னை மேலிருந்து கீழாக இழிவுப் பார்வை வீசின. நிச்சயமாய் அந்தப் பார்வையில் காமமும் கலந்தே இருந்தது. அவன் நாக்கை மடித்து உதடு கடித்து வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தான். பின் அவன் பங்குக்குக் கத்தத் தொடங்கினான்.
“இது என்ன கொழுந்து மலைனு நெனைச்சதா? இங்க நீ நெனைச்ச மாதிரி நடக்க ஏலாது. வீட்டுக்குப் போ. நீ ஒரு ஆள் விலகினா வேலைக்கு சேர பத்துப் பிள்ளைகள் இருக்கு..”
தமிழர்கள் என்றாலே தேயிலை பறிப்பவர்கள் என்பது அவன் எண்ணம். சுயவிருப்பத்தின் பேரில் வேலையை விட்டு விலகுவதாக இராஜினாமாக் கடிதம் எழுதச் சொன்னான். அவர்களாக விலக்கினாலும் சுய விருப்பத்தில் விலகுவதாகத்தான் நாங்கள் எழுத வேண்டும். எனக்குள் பல எரிமலைகள் குமுறினாலும் கண்ணீரருவி தான் வழிந்தது. என் குடும்பத்தின் பொருளாதாரப் பலவீனமானது தன்மானம், கோபம் எல்லாவற்றையும் மிதித்துக் கொண்டு தலைமேல் ஏறி நின்றது.
இடைவேளைக்கான மணி ஒலித்தது. எல்லோரும் எழுந்து தேநீர் அருந்தச் சென்றார்கள். பசி வயிற்றைக் கிள்ளியது. கணனியில் வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண் கடைசியாக எழுந்தாள். அனுதாபம் சுரந்ததோ என்னவோ! அருகில் வந்தாள். கனிவு கலந்த அவளின் வினாக்களுக்கு உடைந்து உடைந்து பதிலளித்தேன்.
என் குடும்ப கஸ்டங்களையும் பொறுப்புக்களையும் கேட்டறிந்தாள். சொல்லாமல் லீவு எடுத்தமைக்கு அன்பாகக் கடிந்தாள். “இப்பதான் எல்லா இடத்திலயும் காமன்ட்ஸ் இருக்கே. இவ்வளவு பிரச்சினை இருக்கிற நீர் ஊரிலயே ஒரு வேலை தேடிக் கொள்வதுதான் சரி. நான் மனேஜருடன் கதைக்கிறன்” நான் தலையாட்டினேன். ஊரிலுள்ள காமன்ட்ஸில் கிளார்க்காக வேலை செய்து சம்பளம் போதாமல்தான் இங்கு வந்திருக்கிறேன் என்பதை இவளிடம் எப்படிச் சொல்லமுடியும்? இன்டர்கம்மில் மனேஜருடன் தொடர்பு கொண்டாள். விளைவு, ஒரு மன்னிப்புக் கடிதத்துடன் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள மனேஜர் சம்மதித்தான்.
நேரத்தை வீணடிக்காது மன்னிப்புக் கடிதமெழுதி மனேஜரிடம் நீட்டியபொழுது, சற்றே ஆச்சரியமாகப் பார்த்தான். இலக்கணப் பிழைகளின்றி நேர்த்தியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த, நான்கே வரியுள்ள அக்கடிதத்தை பதினைந்து நிமிடங்களில் சிரமப்பட்டு வாசித்து முடித்தான். இனிமேல் சொல்லிவிட்டு லீவு எடுக்க வேண்டுமெனக் கூறி வேலைக்கு அனுமதித்தான். நான் வரவைப் பதிவு செய்தபோது நேரம் பன்னிரண்டு முப்பது.
லைனுக்குள் பிரவேசித்த என்னைப் பார்த்து லீடர் பொரிந்து தள்ளியவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாகச் சென்று இரண்டிரண்டு மெஷின்களாகக் கடந்து என் மெஷினருகில் நின்றேன். களைத்துச் சோர்ந்து பயந்த முகத்துடன் என் உதவியாளர் தைத்துக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் எழுந்து, இதுவரை அவள் தைத்துப் போட்டவற்றை எடுத்து சரிபார்த்து நூல் வெட்டி முன் மெஷினுக்கு அனுப்பத் தொடங்கினாள்.
தைக்க வேண்டிய துணிமலை என்னை மலைக்கச் செய்தது. பதகளிப்பில் ஆடிப்போயிருந்த குருதி நாளங்கள் விறைத்து முறுக்கேறின. கை, கால், கண், மூளை என சகல உறுப்புகளும் தையலில் கவனம் செலுத்த சுறுசுறுப்படைந்தேன். தையல் இயந்திரங்களினதும் அதிகாரக் குரல்களினதும் இடைவிடாத பேரிரைச்சலில் என் இதய ஒலிகள் தேய்ந்து ஓய்ந்தன. உறங்கிக் கிடந்த நேர்முகப் பரீட்சைக் காட்சி எழுந்து நின்று மனத்திரையில் நர்த்தனம் ஆடியது.
முதலில் உயரம் பார்த்தார்கள். நான்கடிக்கு மேல் இருக்க வேண்டுமாம். நான் ஐந்தடி இரண்டங்குலம் இருந்தேன். நிறை ஐம்பத்திரண்டு கிலோ எனத் தராசு காட்டியது. இந்த இரண்டும் ஓகே ஆனதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. ஏனெனில் அந்தக் கணம் வரை நிறையும் உயரமும் தாதிச் சேவைக்குத் தகுதிகளாகக் கருதப்படும் என்பதை அறியாதிருந்தேன். அடுத்து உள்ளே அனுப்பப்பட்டேன். ஒருவர் தமிழரும் பெரும்பான்மை இனத்தவர் இருவருமாக மூன்று பெண்மணிகள் அமர்ந்திருந்தார்கள். கூடவே ஒரு ஆண் அதிகாரியும் இருந்தார். கேட்குமுன்பே கோவையைச் சமர்ப்பித்த என்னைச் சைகையாலேயே அமரச் சொன்னார்கள்.
எனது ஆவணங்களைச் சரிபார்க்கத் தொடங்கி இருந்தார்கள். கல்வித் தகைமை எனக்குள் சிறு நம்பிக்கையை உருவாக்கி இருந்தது. க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞானம் படித்து பல்கலைக்கழக அனுமதி பெறாவிட்டாலும் சித்தியடைந்திருந்தேன். தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்த பெண்ணின் பார்வை என்மீது வினாவாய் விரிந்தது.
“சிட்டிசன் இருக்கா?”
“இல்லை….” தடுமாறினேன்.
“அப்ளிக்கேஷன்ல இந்திய வம்சாவழின்னு போட்டிருக்கு”
“வோட் இருக்கா?”
“ஆமாம் வோட் லிஸ்ட் கொப்பி வச்சிருக்கேன்….”
“சிட்டிசன் இல்லாம வேலை தர முடியாது”
என் முகம் சுருங்கியதை அவதானித்த மற்றப் பெண்
“நீங்க போய் இன்னும் மூன்று நாளைக்குள்ள…..” அவள் முடிக்கு முன்பே ஆணதிகாரி குறுக்கிட்டு,
“வேண்டாம், ஒரு கிழமைக்கு முன்பே கடிதம் அனுப்பியும்…இனி ஒன்றும் செய்ய முடியாது”
கோவையுடன் வெளியேறினேன்.
இப்படித்தான் ஆசிரியர், எழுது வினைஞர் எனப்பல நேர்முகப் பரீட்சைகளுக்குத் தோற்றி ஏதோ காரணங்களுக்காக தோற்றுப் போவேன். இது வழமைதான் என்றாலும் இந்த முறை அவர்கள் நேரடியாகவே என்னைத் தெரிவு செய்ய முடியாதெனக் கூறியது வேதனை தந்தது.
“இந்திய வம்சாவழி’ என விண்ணப்பித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறியது அயலவர் குற்றமா? அல்லது பிரஜாவுரிமை பற்றியே சிந்திக்காது இறந்து போனது என் தந்தையின் குற்றமா? நிகழ்காலத்திலேயே குடும்பப் பொறுப்பற்றிருந்த அவர் எங்களது எதிர்காலம் பற்றிச் சிந்திக்காமலிருந்தது ஆச்சரியமல்லவே! யாரையும் நொந்து கொள்ள விரும்பாத மனம் இறுதியல் விதியிடம் தஞ்சம் கோரியது.
இயந்திரங்களோடு இயந்திரமாக உழைத்து வெளியேறிய போது இரவு எட்டுமணியாகியிருந்தது. அதன் பின்னர் பஸ் ஏறி அரைமணிநேரம் பயணித்து தங்கியிருந்த வீட்டை அடைந்தேன். இரவு உணவைக் கண்டபோது பசி அடங்கிப் போயிருந்தது. படுக்கையில் சாய்ந்தபோது உறக்கமும் என்னுடன் போராடியது. அவமானங்களும் ஏமாற்றங்களும் என் தன்மானத்தைக் கிளறிக் கொண்டிருந்தன. ‘அறிவா? உணர்வா? என்ற போட்டி வரும்போது உணர்வுக்கே முக்கியத்துவமளிக்க வேண்டும்’ யாரோ கூறியிருந்தது ஞாபகத்தில் உதித்தது. எழுந்திருந்து இராஜினாமாக் கடிதம் எழுதத் தொடங்கினேன்.
வழமையாக நான் எவ்வளவு தான் சுதாகரிக்க முயன்றாலும் ஏதோ ஒரு துயரம் கீழே இழுக்கும். இன்றென்னவோ நான் வேதனைக்குள் விழுந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு நிம்மதி மேலே மேலே காவியிழுக்கிறது. என் வேதனைகளும் சோதனைகளும் கண்ணருகிலிருந்து மெல்ல மெல்லப் பின்வாங்கி தொலைவாகிப் புள்ளியாய்த் தேய நட்சத்திரப் புள்ளியொன்று விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. எப்படியும் விடிந்துதானே யாகவேண்டும்.
(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)
– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.
– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.
ஆ.புனிதகலா
மலையகத்தில் வட்டவளையைச் சேர்ந்த செல்வி. ஆ. புனிதகலா 1975ல் பிறந்தவர். ஆசியர் தொழில் புரியும் இவர் ஒரு கலைப் பட்டதாரி. சிறுகதை, கவிதை ஆகியதுறைகளில் எழுதிவருகிறார். விபவி – 2003 சிறுகதைப் போட்டியில் பாராட்டு, தினகரன் முத்திரைக்கதை 2004, ஞானம் கலாபூஷணம் புலோலியூர். க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2005ல் பாராட்டு ஆகியவற்றைப் பெற்றுள்ளார். முகவரி இல.11 ஞானானந்தகம, வட்டவளை.