எதிர்பாராத அனுபவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2025
பார்வையிட்டோர்: 239 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுயம்புலிங்கத்துக்கு அந்த அனுபவம் முற்றிலும் புதுமை யானதாக, விசித்திரமானதாக- ஏமாற்றமும் வேதனையும் தருவதாகக் கூட அமைந்து விட்டது. 

டவுனுக்கு வந்தவன், இரவை ஒரு லாட்ஜில் தங்கிக் கழிப்பதை விட, பக்கத்துச் சிற்றூரில் வசித்த தெரிந்தவர் ஒருவரை சந்தித்து அவர் வீட்டிலேயே பொழுதைப் போக்கு வது நல்ல அனுபவமாகக் கூடும் என்று எண்ணினான். திடீ ரென்று அவர் முன்னே போய் நின்றால் ஏற்படக் கூடிய ஆச்சரியம் சந்தோஷம் முதலியவற்றை நினைக்கையில் அவனுக்கு ஒரு கிளுகிளுப்பு ஏற்பட்டது. 

அவனைப் பார்த்தால் அவர் நிச்சயம் பெரும் மகிழ்ச்சி கொள்வார். வாருமய்யா, வாரும் என்று ஆவிச் சேர்த்துக் கட்டித் தன் அன்பைக் காட்டி, மரியாதையோடு வரவேற் பார். தொடர்ந்து வருகிற உபசரிப்புகளுக்குக் குறைவே இராது. ராத்திரி தூங்கவா முடியும்? படித்தவை, எழுதி யவை, புதிய புத்தகங்கள், பழைய பத்திரிகைகள், தெரிந்தவர் கள் என்று பலப்பல விஷயங்களைப் பற்றியும் பேச்சு வளரும். அண்டை அயல் வீடுகளில் அரவம் அடங்கி, தெரு இயக்க மற்று ஒடுங்கி,ஊரே உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிற இரவின் ஆழத்திலே அவர்கள் இருவருடைய குரல்கள் மட்டும் ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும். 

இப்படி நினைத்த போதே சுயம்புவின் மனசு குளுகுளுத் தது. பஸ்சுக்காகக் காத்து நின்ற அலுப்பு கூடப் பெரிசாகத் தோன்றவில்லை. 

டவுணிலிருந்து அஞ்சு மைல் தள்ளியிருக்கிறது. அந்த ஊர். ‘டவுண் பஸ்’ அடிக்கடி போகும். அமைதியான ஊர். வசதியான வீடு… 

நண்பர் வகுளபூஷணம் தன் ஊரைப்பற்றி ஒருமுறை சொல்லியிருந்தது, சுயம்புவின் நினைவில் மின்னலிட்டது. 

‘வகுளம் கொடுத்து வைத்தவர்! சுகவாசி. பிக்கல் பிடுங்கல்கள் கிடையாது. அதனால் அவர் மனம் போல் அமைதியாக ஆனந்தமாக நாளோட்ட முடிகிறது’ என்று சுயம்பு எண்ணிக் கொண்டான். 

நம்ம ஊருக்கு ஒரு தடவை வாருமேன்! இரண்டு மூன்று நாட்கள் தங்கும்படியாக வந்து சேரும். ஊருக்குப் பக்கத் திலே ஆறு ஓடுகிறது. அழகான சூழ்நிலை, வந்து, பார்த்து, ரசித்து, மகிழ்ச்சி அனுபவம் பெறலாமே! 

வகுளபூஷணம் ஒரு கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார். பிறகும் அவ்வப்போது அழைப்பு விடுத்து எழுதினார். நேரில் சந்தித்த போதும் சொன்னார். சுயம்புலிங்கத்துக்கு இது வரை நேரமும் எப்பொழுதும் வாய்ப்பாகவில்லை. இப்போது தான் சமயம் கிட்டியது. 

அந்த நகரத்துக்கு ஒரு முக்கிய வேலையாக வர நேர்ந்த போது, அப்படியே சிவபுரம் சென்று வகுளபூஷணத் தைப் பார்த்து, இரவில் அங்கே தங்கியிருந்து பேசிப் பொழு தைப் பொன்னாக்கலாமே என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அதிகாலையில் வகுளபூஷணத்துடன் எழுந்து ஆற்றுக்குப் போய் ஜில்லென்று நீராடி, சூழ்நிலை இனிமையை ரசிக்கலாம். 

வெகுநேரம் காத்து நின்ற பிறகு பஸ் வந்தது. அந்த நேரத்திலும் கும்பல் சாடியது. சுயம்பு தாக்குப் பிடித்து ஏறி பஸ்சில் வசதியான ஒரு இடம் பிடித்துக் கொண்டான். அவனது மனம் அதன் இயல்புப்படி என்னென்னவோ எண்ணி,எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. 

இருட்டுக் காலம். ஓடும் பஸ்சின் முகப்பு விளக்குகளின் ஒளி வெளிச்சமிட்டுக் காட்டிய ரோட்டுப்பகுதி தவிர்த்த ஏனைய இடவெல்லாம் இருள் போர்வை போர்த்து சுகநித்தி ரையில் மூழ்கியிருந்தது. வழியில் அங்கங்கே பஸ் நின்றது. பலபேர் இறங்கி இருளோடு இருளாயினர். 

ஏதேதோ ஊர்கள். பகல் வேளையில் பயணம் செய்தால் என்ன ஊர், எப்படிப்பட்ட இடம் என்று தெரியும்… எல்லாம் ஊர்களே, எங்கும் மனிதர்கள்… யாதும் ஊரே, யாவரும் கேளிர் 

ஒரு திருப்பத்தில் பஸ் நின்றதும், உள்ளே இருந்தவர் களில் முக்கால்வாசிப் பேர் கீழே இறங்கிவிட்டார்கள். இரண்டு மூன்று பேர் ஏறினர். 

பஸ்சின் உள்விளக்கு வெளிச்சத்தில் வெறுமை பளீரெனப் புலனாயிற்று. 

‘இடைவழி ஊர்க் கும்பல் தான் அதிகம்னு தெரியுது. வகுளபூஷணம் ஊருக்கு அதிகமான ஆட்கள் போகவில்லை’ என்று சுயம்புவின் மனம் குறிப்பு எழுதியது. 

சுயம்பு ஊரின் எல்லையில் இறங்கிக் கொண்டான். கிழக்கு நோக்கி நெளிந்து வளைந்து கிடந்த ராஸ்தாவில் பஸ் ஓடித் திரும்பி மறைந்தது. 

சுயம்புலிங்கத்துக்கு இப்போதுதான் பிரச்னை தலை தூக்கியது. வகுளத்தின் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? தெருப் பெயர் கூடத் தெரியாதே! 

‘வகுளபூஷணம், அன்பகம், சிவபுரம்,மாவட்டம்’ இது தான் சுயம்பு அறிந்திருந்த முகவரி, அவன் அனுப்பிய தபால்கள் தவறாது போய்ச் சேர்ந்தன. பதில்களும் வந்து கொண்டிருந்தன. 

ஊருக்குள் வந்து இறங்கியதும்தான் நண்பரை கண்டு பிடிக்க இது போதுமான விலாசம் இல்லை என்ற உணர்வு சுயம்புவுக்கு ஏற்பட்டது. அவருக்குக் கடிதம் எழுதி விவர மாக அடையாளங்கள் தெரிந்து கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது சுயம்புவின் உள்ளத்தில் ஊர்ந்தது. 

மணி 9-40 ஆகியிருந்தது, வீதிகள் வெறிச்சிட்டுக் கிடந்தன. கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை.ஊர் சுமாரானது தான். ரொம்பப் பெரிது ஒண்ணுமில்லை. 

கால்போன போக்கில் நடந்தான் அவன். 

‘இந்த ஊரில் எல்லோருமே எட்டரை, ஒன்பது மணிக்குள் தூங்கப் போய் விடுவார்கள் போலிருக்கு. ஒரு வீட்டில் கூட வெளிச்சம் தெரியலியே!’ 

அவன் நடந்தான். 

ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

சுயம்பு அவர்கள் அருகே போனான். 

‘யாரு? என்னா?’ என்று ஒருவன் அதட்டினான். அதட்ட லில் கூட சந்தேகமும் ஒருவித பயமும் கலந்து ஒலித்ததாகத் தோன்றியது. 

‘வகுள பூஷணம் வீடு எங்கே இருக்கு?’ என்று சுயம்பு கேட்கவும், ‘வகுளபூஷணமா? – எந்தத் தெரு?’ என்று இழுத்தது திண்ணைக் குரல். 

‘தெருப்பேரு தெரியாது. அன்பகம்னு விலாசம்.வகுள பூஷணம், அன்பகம்னுதான் தபால்களை அனுப்புறது…’ 

‘அப்ப தபாலாபீசிலே போய் கேளுங்க… அந்தா ரெண்டாவது லைட் போஸ்டு கிட்டே ஒரு தெரு போகுதே. அதிலே கடைசியிலே இருக்குது தபாலாபீசு’ என்று வழி காட்டினார். திண்ணை நபர்களில் ஒருவர். 

‘இப்போ தபாலாபீஸ் திறந்தா இருக்கும்?’ 

‘அடைச்சுத்தான் கிடக்கும். ஆனா உள்ளே ஆள் இருக்கும். அது தந்தி ஆபீசும் கூட. அதனாலே எப்பவும் அங்கே யாராவது ஒருவர் இருப்பாரு’ என்று அருள் புரிந்தார் மற்றவர். 

சுயம்பு போனான். 

தபாலாபீஸ் கதவை தட்டினான். ‘ஸார், ஸார்!’ என்று கத்தினான். 

‘யாரது?’ என்று குரல் வெடித்தது. உள்ளே மின்விளக்கின் ஒளி படர்ந்தது. கதவு திறக்கப்பட்டது. வெளியே பாய்ந்து சிரித்த ஒளியோடு ஒருவர் எட்டிப் பார்த்தார். ‘என்ன?, என்ன வேணும்?’ அதிகாரக் குரல். 

‘வகுளபூஷணம், அன்பகம். அவரைப் பார்க்க வந்தேன் அவர் வீடு எங்கே இருக்குன்னு தெரியலே. இங்கே விசாரித்தால் தெரியும்னு ஒருவர் என்னை இங்கே அனுப்பினார்.’ 

மற்றவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.’எங்கே இருந்து வாறீங்க?’ என்று கேட்டார். 

‘டவுணிலேயிருந்து’ 

‘டவுன் தான் உங்க ஊரா?’ 

‘இல்லை’ என்று கூறி சுயம்பு தனது ஊரின் பெயரை சொன்னான் 

‘உங்க பேரு என்ன?’

ஒரு அந்நியர் தன்னை குறுக்கு விசாரணை செய்வது சுயம்புவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் தன் பெயர் ஒரு மாதிரியாக இருப்பதாக மற்றவர்கள் எண்ணுவார்கள் என்ற சந்தேகம் அவனுக்கு எப்பவும் உண்டு. அதனால் அவன் தன் பெயரை சொல்ல விரும்பவில்லை. ‘ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே’ என்ற பழமொழி அவன் உள்மனசில் சதா வேலை செய்து கொண்டிருந்தது. 

‘நான் வகுளபூஷணத்தின் நண்பன். அவர் வீடு எந்தப் பக்கம்னு சொன்னால்…’ என்று இழுத்தான். 

‘நீங்க வர்றதா அவருக்கு லெட்டர் போட்டிருந்தீங்களா?’ 

‘இல்லே. திடீர்னு டவுணுக்கு வந்தேன். அப்படியே இங்கே வந்து அவரையும் பார்த்து விட்டு போகலாமேன்னு…’ 

‘அது சரி. வகுளபூஷணம் ஊரிலே இல்லே.’ 

திக்கென்றது சுயம்புவுக்கு. ‘ஊரிலே இல்லையா?’ என்று பதறினான். 

‘அவர் வெளியூர் போயி ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சு திரும்பி வர நாளாகும்.’ 

சுயம்பு குழப்பமடைந்தான். 

‘வகுளபூஷணம் ஊரிலே இல்லையா? வெளியூர் போயிட்டாரா?’ என்று முணுமுணுத் தான். 

‘ஆமா, அவர் அடிக்கடி எங்காவது வெளியூர் போயிடு வார். எப்ப போவார், எப்ப வருவார்னு சொல்ல முடியாது…’

‘ஊம்ங்’ என்று பெருமூச்சு உயிர்த்தான் சுயம்பு. என்ன சொல்வது, என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. 

விளக்கு வெளிச்சத்தையே வெறித்துப் பார்த்தபடி நின்ற சுயம்புவை கவனித்து நின்ற அலுவலரும் ஒன்றும் பேச வில்லை. 

‘வகுளபூஷணம் ஊரிலே இருப்பார்னு நினைத்தேன். அவர் இல்லையா?’ என்று பல நிமிடங்களுக்குப் பிறகு சொல் உதிர்த்தவனை மற்றவர் கூர்ந்து நோக்கி நின்றாரே தவிர, அவராக ஒன்றும் சொல்லவில்லை, 

‘அவர் வீடு எங்கே இருக்கு? அதைக் காட்டினால் உதவியாயிருக்கும்’ என்றான் சுயம்பு. 

‘இப்ப அந்த வீட்டிலே யாருமே இல்லை. சும்மா பூட்டித் தான் கிடக்கும்.’ 

‘வீடு எங்கே இருக்குதுன்னு பார்த்துக் கொண்டால், இன்னொரு முறை வந்தால் வசதியாக இருக்குமே. அது தான்!’ 

மற்றவர் உள்ளே திரும்பி, ‘முருகா!’ என்றார். 

ஒரு ஆள் வந்தான். வேலைக்காரன். 

‘இவர் கூட போயி, வகுளபூஷணம் வீட்டைக் காட்டு’ என்றார் அலுவலர். ‘அங்கே நீங்க தங்க முடியாது. வீட்டிலே யாரும் கிடையாது… இந்த ஊரிலே வேறே யாரையாவது தெரியுமா?’ 

‘தெரியாதே!’ 

‘அப்ப நீங்க டவுனுக்குத் திரும்பறதுதான் நல்லது. கடைசி பஸ் பத்தரை மணிக்கு இருக்கு. இப்போ பத்தே காலாச்சு. நேரே பஸ் ஸ்டாப்புக்குப் போனா லாஸ்ட் பஸ்சை பிடிச்சிடலாம்.’ 

‘முதல்லே அவர் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்’ எனக் கூறி சுயம்பு நகர்ந்தான். 

‘உங்க பேரு என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே?’ என்று குறிப்பிட்டார் மற்றவர். 

‘அது உங்களுக்கு என்னத்துக்கு!’ என்று சொல்லி நடந்தான் சுயம்பு. 

அவர் ‘முருகா!’ என்று சுயம்புவோடு நடந்த ஆளை அழைத்தார். 

அவன் அவர் அருகே வந்ததும் அவர் சொன்னார்: தணிவான குரலில்தான் பேசினார். ‘இந்த ஆளைப் பார்க்கை யிலே சந்தேகமா இருக்குது. குடிச்சிருப்பான்னு தோணுது. கொஞ்சம் எச்சரிக்கையாயிரு, அந்த வீட்டிலே என்ன செய்யப் போறானோ,’ 

‘அன்பகம்’, ஊரைப் போலவே இருட்டில் அமைதியாகத் தூங்கி நின்றது. 

சுயம்பு பக்கத்தில் போய் பார்த்தான். கதவில் தொங் கிய பெரிய பூட்டை இழுத்துப் பார்த்தான். இப்படி ஆகும் என்று அவன் கற்பனை கூடப் பண்ணவில்லை. ஆகிவிட்டது! இனி என்ன செய்ய? 

‘இந்த ஊரிலே ஓட்டல் எதுவும் கிடையாதோ?’ என்று அவன் முருகனிடம் கேட்டான். 

‘கிளப்புக் கடையா… ஊகும். இரண்டு டீக்கடை உண்டு, பஸ்டாப்பிலே ஒண்ணு, வடக்குத் தெருவிலே ஒண்ணு ரெண்டுமே ஏழு, ஏழரைக்கெல்லாம் குளோஸ் ஆகிவிடும்’ என்று முருகன் விவரித்தான், 

‘கோயில்… பூசை பண்ணுகிற ஐயர் வீடு? சாப்பிட ஏதாவது கிடைத்தால், சாப்பிட்டு விட்டு, கோயிலில் படுத்துக் கொள்ளலாம்…’ 

‘அதெல்லாம் வசதிப்படாது ஐயா, முன்னெக் கூட்டியே சொல்லியிருந்தால், ஐயரு ஏதாவது ரெடி பண்ணித் தருவாரு. திடீர்னு போனா எதுவும் கிடைக்காது. நீங்க கடைசி பஸ்ஸை புடிச்சு டவுனுக்குப் போறதுதான் நல்லது’ என்று முருகன் சொன்னான். 

சுயம்புலிங்கம் தயங்கித் தயங்கி நின்றான். சிறிது நகர்ந்தான். குழம்பினான். ‘அவருக்கு லெட்டர் எழுதி, அவர் ஊரிலே இருப்பாரா என்று தெரிந்து கொண்டு வந்திருக்கணும். நான் முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்’ என்று சுய விமர்சனம் செய்தது அவன் மனம். 

வீடு இருந்த ஒதுக்குப் புறத்தை விட்டு நடந்து தெருவுக்கு வந்தார்கள் இரண்டு பேரும். 

தெருவில் ஒரு ஒளிவட்டம் நகர்ந்து வந்தது. டார்ச் லைட் வெளிச்சம். ‘முருகா!’ என்ற குரல் வந்தவரைக் காட்டிக் கொடுத்தது. 

‘ஸார்?’ என்றான் முருகன். 

‘போனவங்களைக் காணோமே; இருட்டு நேரத்திலே, ஆள் இல்லாத வீட்டிலே என்ன செய்றாங்கன்னு பார்க்க வந்தேன்’ என்றார் அலுவலர். 

முன்னே விரைந்து சென்ற முருகன், ‘அவரு கோயிலைப் பற்றி விசாரித்தாரு. ஐயரு வீட்டைக் கேட்டாரு’ என்றான். 

‘சிலை திருடுகிற நோக்கம் இருக்குமோ? ராத்திரி வேளையிலே, இவ்வளவு நேரத்துக்கு வந்து….’ மற்றவர் மெதுவாகத்தான் பேசினார். இருப்பினும்,சொற்கள் சுயம்பு வின் காதுகளைத் தொடாமலில்லை. 

‘வாறேன், சார். பஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, சுயம்பு வேகமாக நடந்தான். 

‘அவன் பஸ்சுக்குத்தான் போறானான்னு கவனி முருகா!’ என்று கூறிவிட்டு, திரும்பி நடந்தார் மற்றவர். 

சுயம்புலிங்கம் பஸ் வரும் ரஸ்தாவை நோக்கி விரைந்தான். எங்கிருந்தோ ஒரு நாய் குரைத்தது. அதை ஏற்று, மேலும் இரண்டு மூன்று நாய்கள் குரைத்தன. 

அவன் வேகமாக நடக்க அஞ்சினான். நாய்கள் பாய்ந்து வந்து தாக்கக்கூடும் என்ற பயம் அவன் இதயத்தில் உதைத்தது. 

சிறிது தூரம் இருக்கையில், பஸ் சீறிப் பாய்ந்து வேகமாக முன்னேறிச் சென்றது, அவனுக்குத் தென்பட்டது. அதன் உறுமல் கனத்துத் தேய்ந்து காற்றில் கலந்தது. 

‘ஓடிப் பிடிக்கக் கூடிய தூரம் இல்லை?’ என்றது மனம். ஓடினால் நாய்கள் கடிக்க வந்தாலும் வரும் என்றும் அது பயந்தது. 

வேறு வழியில்லை, நடக்க வேண்டியதுதான். இரண்டு மைலுக்கப்பால், திருப்பத்தில், ரொம்பப் பேர்கள் இறங்கினார்களே, ஒரு தொழில் நகரம் ஏகப்பட்ட வெளிச்சமும் பர பரப்பும் கடைகளும் உயிரியக்கமுமாக இருந்ததே ஓர் இடம் – அங்கே போனால், இராப் பொழுதுதைக் கழிக்க ஏதாவது வழி பிறக்கும் என்ற எண்ணத்தைத் தாலாட்டிய மனசோடும் பசி கிள்ளும் வயிறோடும், சோர்வு நடை நடந்தான் சுயம்பு லிங்கம். 

‘யாதும் ஊரே’ என்ற சொற்கள் அவனுள் இப்போது மீண்டும் ஒலித்தது. அதைத் தடுத்து பெரிய கேள்விக் குறி ஒன்றை வளைத்தது மனக் குறளி.

– இளந்தமிழன், செப்டம்பர்-அக்டோபர் 1989.

– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *