எட்டு வருட அடகு




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வழியாய்க் கொளுத்தி விட்டு வந்தாச்சு. ஜம்பகான்னு ஒரு பெண் தனக்கு மனைவியாய் இருந்தாள் என்கிறதெல்லாம் பழங்கதையாய் ஆயிட்டுதுன்னு நினைக் கிறப்போ மனசில் ஒரு பக்கத்தில் அம்மாடின்னும் இன் னொரு பக்கத்தில் வெறிச்சுன்னும் இருந்தது வேணு கோபாலனுக்கு. சுடுகாட்டுப் புகையின் மிச்சம் மீதிகள் மூக்கு நுனியில் ஒட்டிட்டு இருக்கிற மாதிரி இன்னும் அந்த எரிஞ்ச வரட்டியின் கரிப்பு நாற்றம் ஞாபகம் வந்துட்டே இருக்கு. கச்சமாகக் கட்டியிருந்த ஈர வேட்டியில் இடுப்புக் குக் கீழே உலர்ந்தும், இடுப்பில் கெட்டியாய் உருட்டி முடிந்தி ருந்த இடத்தில் உலராமலும் உலராமலும் இருந்தது. மொண மொணன்னு சாஸ்திரிகளின் திவச மந்திரம், வெட்டியானின் விடாப்பிடி பேரங்கள், மண்டபத்துக்கு மறுபக்கம் ஒரு முப் பது வயதுக்காரி தன் குழந்தையைக் குழியிலே வைக் கிறப்போ அலறின அலறலும், இங்கே இந்த ஜம்பகாவுக் காக அழுவதற்கு யாருமே இல்லைன்னு இவன் நினைச்சிட் தும் எல்லாம் பலாப்பழக்காரி என்ன விரட்டியடிச் நாலும் போகாத ஈ மாதிரி சுத்திச் சுத்தி வந்தது.
எதிர் வீட்டுக்காரர் சாப்பாட்டுத் தூக்கைக் கொண்டு வந்து வைச்சிட்டு, “சாப்பிடுங்க வேணுகோபாலன். ஆனது ஆயிட்டுது. அவள் காலம் முடிஞ்சது, போயிட்டாள். சாப்பிடாமே கீப்பீடாமே இருக்காதீங்க. கஷ்டம்தான். தேத்திக்கப் பழகிக்கணும். அதான் படிச்சவாளுக்கு லட்சணம். எது வேணுமானாலும் சங்கோஜப்படாமல் எங்க வீட்டில் கேளுங்க”ன்னு சொல்லிட்டுப் போனார்.
தேத்திக்கப் பழகிக்கணுமாம்!
ஜம்பகா போயிட்டாளேன்னு வருத்தப்பட்டால்தானே தேத்திக்கணும்?
கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சாப்பிட உட் கார்ந்தான். அடுக்கு மேலே அடுக்காய்க் கேரியரில் சாப்பாடு கைகள் வைத்திருந்தார். கூட்டில் பூண்டு மசாலாவின் பயம் கம்மென்று வந்தது. எத்தனை நாள் ஆச்சு – ஏன், எத்தனை வருஷமாச்சு!
ஜம்பகாவைக் கைப்பிடித்த காலந்தொட்டு இழந்து வந்திருக்கிற சுதந்திரங்களையெல்லாம் இந்தப் பூண்டு போட்ட கூட்டு ஞாபகப்படுத்தினப்போ இப்போ அடைஞ் சிருக்கிற விடுதலையின் மகத்துவம் அவனுக்கு மனசில் ஒரு ‘கும்’ கொடுத்தது.
நேற்றுத்தான் நடந்த மாதிரி இருக்குன்னு யாராவது சொல்றப்போ அவனுக்குச் சிரிப்பாயிருக்கும். ஆனால் இன் னிக்கு அந்த வார்த்தைதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.
அவன் அம்மா முறுக்கும் சீடையும் போட்டு அலுமி னியத் தூக்கில் வைத்துக் கொண்டு கும்பேசுவர சுவாமி கோவில் சன்னதியில் விற்று, அவனை அஞ்சாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியாமல் திண்டாடிய போது ராமா மிர்தம்தான் அவனுக்குக் கைகொடுத்தார். வாசல் பூரா வாழை மரமாய் இருந்த தன் வீட்டுக்கு அவனை அழைத் துப் போய், அவனுடைய கிழிசல் அரை டிராயரைக் கழற்றி எறியச் சொல்லிப் புது டிராயர் தந்து மாட்டிக் கொள்ளச் சொன்னார். ஆறாம் கிளாசிலிருந்து ஹைஸ்கூலில் படிப்பதற் குப் புத்தகம், நோட்டு, ஸ்பெஷல் பீஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்து, “உன் அப்பா டி.பி.யில் இறப்பதற்கு முன்னால் என்கிட்டே வேலை செஞ்சிட்டிருந்தான். நாணயமானவன் பாவம். அதான் காலணா கூடச் சேர்த்து வைக்காமல் இறந் துட்டான்” என்று சொல்லிப் பல வருடம் காப்பாத்தினார்.
பி.ஏ. பாஸ் செய்து விட்டு, டிரான்ஸ்போர்ட்டில் செக் கிங் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கிடைத்த சந்தோஷத்து டன் ராமாமிர்தத்திடம் போனபோது, முன்னைக்கு இப் போது அவர் நொடித்துப் போயிருப்பது, அந்தப் பிய்ந்த பிரம்பு நாற்காலியிலும் எண்ணெய்ச் சிக்குப் பிடித்த தலை யணைகளிலும் தெரிந்தது. “மாமா, உங்க தயவிலேதான் நான் படிச்சுத் தேறி வேலையிலே இருக்கிறேன். நமஸ்கா ரம் பண்றேன். ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்லி விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணினான். கண்ணுக்கு மேலே கையைச் சாரம் கட்டிக் கொண்டு, ‘யார்டா, வேணு கோபாலனா! சரியான சமயத்திலேதான் வந்திருக்கேப்பா” என்றார்.
கஷ்டமான தசை, ஐம்பதோ நூறோ கேட்டால் கொடுக்க வேண்டியதுதான்னு அவன் மனசுக்குள் நினைச்சி ருக்க அவர், ”ஜம்பகா! ஜம்பகா! இங்கே வாடிம்மா சித்தே”ன்னு உள் பக்கம் பார்த்துக் கூப்பிட்டார். கிழிசல் பாவாடையும் கரி பூசின கையுமாய் ஒரு பதினேழு பதினெட்டு வயசுப் பெண் வந்து நாணிக் கோணி நின்றாள்.
”நமஸ்காரம் பண்ணுடி. உன் ஆம்படையான்”னு அவர் சொன்னதுமே இவனுக்கு வியர்த்துட்டுது. அவன் என் னென்னமோ கனவு கண்டுக்கிட்டிருக்கிறப்போ இது என்ன கூத்துன்னு புரியலே. அதான் போகட்டும்னால் இப்படி இவராகவே ஒரு முடிவு பண்ணி அவனுடைய சொந்தச் சுதந்திரத்திலே தலையிடறதாவதுன்னு கோபம் வந் தது. அதே சமயம் அவனுடைய ரத்தத்தோடு ரத்தமாய் ஊறிப் போயிருக்கிற நன்றியுணர்ச்சி அவனை வாயடைக்கப் பண்ணி விட்டதால், அந்த ஒரு வினாடித் தயக்கத்துக்குள் அந்தப் பெண்ணும் டக்டக்கென்று நமஸ்காரத்தைப் பண்ணி விட்டுத் தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டு விட்டாள்.
“என்னிக்கு இருந்தாலும் நீ ஒருத்தன் நன்றி விசுவாச முள்ள பிள்ளை இருக்கிறே, உன்கிட்ட அவளைக் கையைப் பிடிச்சுக் கொடுத்துடலாம்னு தைரியமாய் இருந்தேன். அதே போல வந்துட்டேப்பா”ன்னு அவர் பேசிக்கிட்டே போறப்போ அவன் என்ன சொல்ல முடியும்? ஒப்புக்கொண்டான்.
இன்னும் கொஞ்சம் அழகாய், இன்னும் கொஞ்சம் உயரமாய், இன்னும் கொஞ்சம் சமர்த்தாய், இன்னும் கொஞ்சம் படிப்புள்ளதாய் ஒரு பெண்ணைப் பண்ணிக் கொள்ள ணும்னு அவன் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தது நடக்காமல் போச்சு.
அதோடில்லை. தான் கட்டிக் கொண்டது பெண்ணல்ல, ஒரு பெரிய பாறாங்கல் என்பது அவனுக்குப் பத்து நாளைக் குள்ளேயே புரிய ஆரம்பிச்சிட்டுது.
ஒருநாள் வீட்டில் அவள் சப்பாத்தி பண்ணியிருந்தாள். இவன் பூசணிக்காய் கீற்று வாங்கிட்டு வந்து தொட்டுக்கக் குருமா பண்ணுன்னு சொல்லிட்டு வெளியே போயிட்டான். திரும்பி வந்து ஆசையோடு மணையைப் போட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். சப்பாத்தியைப் போட் டாள். பூசணிக்காய்க் கூட்டு போட்டாள். ஆனால் பட்டை மசாலா போட்ட குருமா அல்ல.
“ஏன் குருமா பண்ணலே? தெரியாதா?”ன்னு கேட்டான்.
“தெரியும். ஆனால் நான் பண்ணமாட்டேன். அந்த நாத்தத்தை மனுஷன் சாப்பிடுவானா?”ன்னு திருப்பிக் கேட்டாள் ஜம்பகா.
ஆசையாய் எதிர்பார்த்த குருமா இல்லை என்பதைக் காட்டிலும், அவள் துச்சமாய்ப் பதில் சொன்ன விதம்தான் அவனைக் கோபம் கொள்ள வைத்தது. ”இந்தக் கூட்டை மட்டும் மனுஷன் சாப்பிடுவானா?”ன்னு தட்டைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டான்.
ராத்திரி பத்து மணிக்குத் திரும்பி வந்து பார்த்தால், வீட்டுக்குள் நுழையறதுக்கு முன்பே அவள் விசித்து விசித்து அழுகிற சத்தம் கேட்டது. அவனுக்கு என்னவோ போலாயிட்டுது.
ராமாமிர்தம் அவனுக்காகச் செலவழித்ததும், பாடுபட் டதும், ஆளாக்கி விட்டதும் அடுக்கடுக்காய் நினைவு வந்து செவிட்டிலே அறை வாங்கிக் கொண்டவன் மாதிரி தடுமாறிப் போனான்.
”ஜம்பகா… நான் ஒரு மிருகம்… நன்றி கெட்ட விலங்கு… என்னை மன்னிச்சிடு…” என்று அவள் காலைப் பிடித்துக் கொண்டு விட்டான்.
அன்று ஆரம்பமாச்சு அவனுடைய அடிமைச் சாசனம்.
சரி, மனைவின்னா ஐம்பத்தாறு குறையிருக்கும்னு அவன் மனம் சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒரு இரு பத்தேழு வயது இளைஞனுக்கு இளம் மனைவியிடம் என் னென்ன ஆசைகளெல்லாம் இருக்குமோ அதெல்லாம் கூட நிறைவேற வழியில்லாமல் போயிட்டுதுங்கிற உண்மை கொஞ்ச நாளில் புரிஞ்சது.
ஒருநாள் இரவு அவன் ஆசையோடு நெருங்கியபோது, ‘என்ன வேண்டியிருக்கு தினம் தினம்? திங்கள் கிழமை, வியாழக் கிழமை இரண்டே நாள் கிட்டே வாருங்கள், போதும்,” என்று அட்டவணை போட்டு விட்டாள் அவள்.
அதற்காகவே, அவன் மற்ற நாளெல்லாம் உடம்பை என்னவோ பண்ணுகிற உணவுகளைத் தின்னாமல், சினிமாக்களுக்குப் போகாமல், கிளர்ச்சியூட்டுகிற சமா சாரங்களில் இறங்காமல் ரொம்பக் கவனமாய் இருக்க ஆரம்பித்தான்.
அவனது சுதந்திரம் மடால் மடால்னு சரிய ஆரம்பிச்விட்டுது.
அளவுக்கு மேல் நீளமாக அவன் கிருதா வளர்த்துக் கொண்டால் அவள் ஆட்சேபிப்பாள். ரேடியோவில் இங்கிலீஷ் மியூசிக் வைத்தால் தடுப்பாள். பேப்பரைப் படிச்சப்புறம் ஒழுங்காய் மடிச்சு வைக்காமல் போனால் கோபிப்பாள்; ஆட்டோ ரிக்ஷாவின் ஆட்டத்தில் அவள் மேல் சாய்ந்தால் பிடிக்காது; பச்சை மையைப் பேனாவுக்குப் போட்டுக் கொண்டால் கழற்றிக் கொட்டுவாள்.
ராமாமிர்தம் சதா அவன் கண்ணெதிரே நின்னிட்டிருந்த காரணத்தால், அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்கிற உணர்வு இருதயத் துடிப்போடு துடிப்பாய் அடிச்சிட்டே யிருந்ததால், அவன் எதற்கும் வாயைத் திறக்கிறதில்லை என்று இந்த எட்டு வருட காலமாக வைத்துக்கொண்டு விட்டான்.
அப்படி யந்திரம் போல ஒரு அடிமைத்தனம் ஏற்பட்டு விட்டதால் தான் ஜம்பகா உடம்பு சரியில்லாமல் படுத்தபோது டாக்டர் பார்த்து, “இது ப்ளட் கான்ஸர். பிழைக்கிறது கஷ்டம்” என்று சொன்னதை எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அவனால் மனசில் வாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் அப்பவும் ராமாமிர்தத்தின் உதவிகளை மறக்காமல், நன்றி விசுவாசத்துடன் அவர் மகளுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செஞ்சான். குறைச்சல் சம்பளம்தான் அவனுக்கு. மேலே கடன் உடனெல்லாம் வாங்கி ஆறு மாசம் வைத்தியம் செஞ்சான். புண்ணியம் இல்லை.
ஆச்சு, இப்ப கொளுத்திட்டு வந்தாச்சு.
எதிர் வீட்டுக்காரர் கொண்டு வந்து கொடுத்த சப்பாத்தி குருமாவைச் சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவினான்.
ராமாமிர்தத்துக்குக் கடன் பட்டிருக்கிறோம்கிற உணர்வு, எட்டு வருஷத்தில் முதல் தடவையாக இன்னிக்குத் தான் ஏற்படாமல் இருக்குன்னு அவனுக்குத் தோன்றிற்று. சாப்பிட்டு விட்டுக் கொஞ்ச நேரம் சும்மாவே படுத்திருந்தான், தலையின் கீழ் கையைக் கோத்துக் கொண்டு. (அவளுக்குப் பிடிக்காது.) பிறகு ரொம்ப நாளாய் உள்ளேயிருந்த ஜிப்பாவை எடுத்து மாட்டிக் கொண்டான். (அவளுக்குப் பிடிக்காது.) தெருக்கோடிக் கடைக்குப் போய் பீடா வாங்கிப் போட்டுக் கொண்டான். (அவளுக்குப் பிடிக்காது.) சிகரெட் பிடித்தான். (அவளுக்குப் பிடிக்காது.) கடற்கரைக்குப் போனான். (அவளுக்குப் பிடிக்காது.) டிராமா பார்த்தான். (அவளுக்குப் பிடிக்காது.)
ஒரு வாரம் இப்படியே.
அன்று அவன் ஆபீசிலிருந்து திரும்பினப்போ வாசலில் ஒருத்தர் காத்திட்ண்டிருந்தார். வத்தலான ஆள். கட்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பையை இடுக்கிண்டிருந்தார். “என்ன வேணும்?”னு கேட்டான்.
“நான் மாதாஜி சிட்பண்டிலிருந்து வந்திருக்கேன். உங்க ஒய்ஃப் இருபதாயிரம் ரூபாய் சீட்டில் சேர்ந்து மாசம் இருநூறு ரூபாய் கட்டிட்டு வந்தாங்க…” என்றார் அவர்.
‘அட! எனக்குத் தெரியாதே’ என்று மனசுக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டான் அவன். “அவள் போயிட்டாள். இனிமேல் நான் தொடர்ந்து கட்ட முடியுமாங் கிறது சந்தேகம்தான்…” என்றான்.
அந்த ஆள் தலையை அசைத்து, “இனிமேல் கட்ட வேண்டாம். சீட்டு போன மாசமே முடிஞ்சு போச்சு. உங்களைத்தான் நாமினியாய்ப் போட்டிருக்கிறாங்க. நாளைக்கு ஆபீசில் வந்து பணத்தை வாங்கிக்கலாம். சொல்லி விட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” னார்.
அவனுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே. ”ஓ, சரி சரி”ன்னான்.
ராத்திரி பூரா தூக்கமே வரல்லே அவனுக்கு. ஜம்பகா பாவம்னு மனம் திருப்பித் திருப்பிச் சொல்லிட்டேயிருந்தது. அவளும் ஒரு மனுஷிதான். நாம் ரொம்பத்தான் இரக்கம் இல்லாமல் நடந்துனுட்டோம்னு எண்ணிக் கொண்டான்.
அடுத்த நாள் லிங்கிச் செட்டித் தெருவிலிருந்த சிட் பண்ட் ஆபீசுக்குப் போய், கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டான். “ஹண்ட்ரட்ஸா வேணுமா, டென்ஸா வேணுமா?”ன்னு கேட்டாங்க. “டென்ஸா கொடுங்க”ன்னு கேட்டு, பிளாஸ்டிக் பை நிறைய அடைச்சுக்கிட்டான்.
அவ்வளவு தொகையை அவன் மொத்தமாய்ப் பார்த்ததே கிடையாது. அன்னிக்கு அவன் குஷியாய்ச் சாப்பிட்டான் ஓட்டலில். மூன்று சினிமா ஒரே நாளில் அடுத்தடுத்த ஷோ பார்த்தான். அதற்கடுத்த நாள் ஒரு நைட் கிளப் ஷோவுக்குப் போனான். ரொம்ப உற்சாகமாயும் கிறுகிறுப் பாயும் இருந்தது. இவ்வளவு சந்தோஷங்களைக் கொடுத்த ஜம்பகாவை நினைக்க நினைக்க அவன் நெஞ்சு நெகிழ்ந்தது.
பாங்க்கில் பிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடுவதைக் காட்டிலும் தனிப்பட்ட கம்பெனிகளுக்கு வட்டிக்கு விட்டால் நிறையக் கிடைக்கும்னு அவன் சினேகிதன் ஒருவன் சொன்னான். அவனுக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல கம்பெனி இருக்காம். இருபதாயிரத்துக்கு மாசம் முன்னூறு ரூபாய் வட்டி கொடுப்பானாம். இப்போது வருகிற சம்பளத்தோடு அதையும் சேர்த்தால்…
அவனுக்குப் பரவசமாயிருந்தது.
இனிமேல் ஜம்னு வாழ்க்கை நடத்தலாம். ஜம்பகா, உன் தயவாலே நான் இனிமே..
விதிர்த்துப் போய் நின்னுட்டான் அந்த எண்ணம் ஏற்பட்டதும்.
ஜம்பகாவின் தயவா?
இனிமேல், தின்கிற ஒவ்வொரு பருக்கைக்கும், போகிற ஒவ்வொரு சினிமாவுக்கும், குடிக்கிற ஒவ்வொரு பானத்துக்கும், அணிகிற ஒவ்வொரு சட்டைக்கும் ஜம்பகாவுக்கு நன்றி சொல்லணும், அவளுக்குக் கடமைப்பட்டிருக்கணும்னு நினைக்கிறப்போ அவனுக்கு மார்பை அடைச்சுது. எட்டு வருஷத்துக்கு ஜம்பகாவின் அப்பாவுக்குக் கடமைப்பட்டு, வாழ்க்கையை, வாழ்க்கையின் ஒவ்வொரு இன்பத்தையும் அவருக்கு அடகு வச்சாச்சு. சுதந்திரம், தனியானதோர் எண்ணம், சுயேச்சையாக எடுத்துச் செய்த ஒரு முடிவு இது எதுவும் இல்லாமலே எட்டு வருஷங்கள் போயிட்டது அவள் அப்பாவுக்காக. இனி அவரது மகளுக்காக மிஞ்சியிருக்கிற காலம் பூராவையும் ஐம்பது வருஷமோ அறுபது வருஷமோ அடமானம் வைக்கணுமா என்ன? ஒவ்வொரு நிமிஷமும் ஜம்பகா ஜம்பகான்னு சொல்லித்தான் சந்தோஷப்படணுமா என்ன? அத்தோடு இல்லை. அவளுக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்யறப்போவெல்லாம் மனசு உறுத்தும். அவளுக்குத் துரோகம் பண்ணிட்ட மாதிரி தோணும்.
வேண்டவே வேண்டாம்.
போகிற வழியில் ஒரு அனாதை ஆசிரமம் இருந்தது. பிளாஸ்டிக் பையிலிருந்த கத்தை கத்தையான கரன்ஸிகளை அந்த ஆசிரமத்தின் இரும்பு உண்டியில் திணித்துப் போட்டான்.
நடந்தான் சந்தோஷமாக, சுதந்திரமாக, யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லாதவனாக.
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.