எங்க? மரத்தைக் காணோம்?




‘மரத்தக் காணோம்! ஐயோ! வச்ச மரத்தக் காணோம்!’ என்று அலறியபடி பின் தோட்டத்திலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார் அம்மா. ஹெட்போனை மாட்டிக் கொண்டு கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த நான், அம்மாவின் பதற்றமான முகத்தைப் பார்த்ததும், அவசரமாக ஹெட்போனைக் கழற்றிவிட்டு, ‘என்னாச்சும்மா?’ என்றேன். ‘மரத்தக் காணோம்டி’ என்றாள். ‘என்ன! மரத்தக் காணோமா?’ (இதென்னடா இது. வடிவேலு கெணத்தக் காணோம்னு சொன்ன கதையால்ல இருக்கு – என்று மனத்தில் நினைத்தபடி) என்றேன்.
‘ஆமாடி ஒனக்கு எத்தனை தடவ சொல்றது? எப்பப் பாத்தாலும் அதையே நோண்டிக்கிட்டு’ என்று எரிந்து விழுந்தார். ‘எந்த மரம்மா?’ என்றேன். ‘போ! ஒனக்கு எதுவும் நெனவிருக்காது. நாம வாங்கி வச்சமே, ஒரு ப்ளூ பெரி மரக்கன்னு. நெனவிருக்கா?’ என்றார்.
அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருந்தது. ஆனால், அதற்கு முன் அம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
மா, பலா, வாழை, கறிவேப்பிலை, மிளகாய், மல்லி, கனகாம்பரம் என மரம், செடி, கொடிகள் நிறைந்த பெரிய தோட்டத்துடன் கூடிய கிராமத்து வீட்டில் வளர்ந்தவர் அம்மா. அவரது கனவுத் தோட்டம் திருமணத்திற்குப் பின்னான நகர வாழ்க்கையில் அழிந்து போனது.
அம்மா அமெரிக்கா வந்த போது, எங்கள் வீட்டுக் கொல்லையில் பறந்து விரிந்திருந்த புல்வெளியையும், மரங்களையும் பார்க்கவும் அவரது தோட்டக் கனவு மீண்டும் துளிர்விட்டது.
அது மார்ச் மாதம் என்பதால், வசந்தகாலம் தொடங்கியிருந்தது. உடனடியாக ஹோம் டிப்போவிற்குப் (செடிகள் விற்கும் கடை) போய், பல வகையான விதைகள், தொட்டிகள், மண், உரம் எல்லாம் வாங்கினோம். அங்கே செடிகள் இருந்த பகுதியில், சிறு பிள்ளை போல ஓடி ஓடிச் சென்று, ஒரு கனகாம்பரச் செடி, ஒரு மிளகாய்ச் செடி மற்றும் ஒரு ப்ளூ பெரி மரக்கன்றையும் எடுத்துக் கொண்டு சிரித்தபடி வெளியே வந்தார் அம்மா. இப்படித்தான் ப்ளூ பெரி மரக்கன்று வீட்டுக்கு வந்தது.
மரக்கன்று வாங்கியதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு.
எங்கள் வீட்டுக் கொல்லையில் இருந்த உயரமான பைன் மரம், பாதி இறந்துவிட்டதால், மீதி மரம் வீட்டுக் கூரையின் மேல் விழாமல் இருக்க, H.O.A (Home Owners Association)ல் அனுமதி பெற்று ஐந்நூறு டாலர்கள் கொடுத்து அந்த மரத்தை வெட்டினோம். ஆம்! அமெரிக்காவில் ஒரு மரத்தை வெட்ட விலை ஐந்நூறு டாலர்கள். ஆனால் ஒரு மரக்கன்றின் விலையோ பதினைந்து டாலர்கள் தான்.
இந்தக் கூத்தெல்லாம் அம்மா இருந்த போது நடந்ததால், வெட்டப்பட்ட மரத்திற்கு பதில் இன்னொரு மரத்தை நடுவதற்காகத்தான் ப்ளூ பெரி மரக்கன்றை வாங்கினார் அம்மா.
எதை மறந்தாலும் செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவதையும், எனக்குத் தினமும் மோர் கலந்து தருவதையும் அம்மா மறந்ததேயில்லை.
இந்த நேரத்தில் பக்கத்து ஊரில் வசிக்கும் என் பெரியம்மா மகனின் வீட்டிற்கு என் பெரியம்மா வந்திருந்தார். தன்னோடு வந்து ஒரு மாதம் இருந்துவிட்டுப் போகும்படி பெரியம்மா விடாமல் அழைக்க, அம்மாவும் அங்கே சென்றார்.
அம்மா போயிருந்த போது நானும் என் கணவரும், திடீரென்று பொறுப்பு வர, கொல்லையில் மண்டிக் கிடக்கும் களைகளைப் பிடுங்காலம் என்று களம் இறங்கினோம்.
கைபேசியில் பேசியபடி என் கணவர், ப்ளூ பெரி மரக்கன்றின் ஒரு கிளையையும் தவறுதலாகப் பிடுங்கிவிட்டார். அப்படித்தான் ப்ளூ பெரி மரம் காணாமல் போயிருக்க வேண்டும். ஆனால், இதை நாங்கள் உணரவேயில்லை.
அம்மா ஊரிலிருந்து திரும்பி வந்ததும் முதல் வேலையாக, ப்ளூ பெரி கன்றைத் தான் பார்க்கச் சென்றார். அதைக் காணாததால் தான், ‘மரத்தைக் காணோம்’ என்று கத்திக்கொண்டு வந்தார்.
இப்போது களை பிடுங்கிய நாள் மின்னல் போல் நினைவுக்கு வர, அம்மாவுடன் கொல்லைக்கு ஓடினேன். விடாது பெய்த மழையில் மீண்டும் களைகள் மண்டிக் கிடக்க, அவற்றின் நடுவில் ஒரு சின்னச் செடியில் ஒரு சிறிய அட்டை ( இங்கே கடைகளில் விற்கப்படும் எல்லாச் செடிகளிலும், செடியின் விலை மற்றும் பராமரிப்பு விவரங்கள் அடங்கிய சிறிய அட்டையைக் கட்டியிருப்பார்கள்) தொங்கிக் கொண்டிருந்தது. அந்த அட்டையில் பாதி அழிந்த எழுத்துகளில் ‘பெரி’ என்ற சொல்லை பார்த்ததும் தான் அம்மாவிற்கு உயிரே வந்தது.
பயந்து கொண்டே அம்மாவிடம் நாங்கள் கைபேசியோடு களை பறித்த கதையைச் சொன்னேன். ‘எப்படியோ! இதாவது மிஞ்சியதே, வளர்த்துவிடலாம்!’ என்று ஆனந்தம் அடைந்தார் அம்மா.
சுற்றியிருந்த களைகளை அகற்றிவிட்டு, அந்தச் சின்னச் செடியைச் சுற்றி, மண்ணை மேவிப் பாத்தி கட்டி ஒரு அடையாளமும் வைத்தார்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி வீட்டிற்குள் வந்த என்னிடம், ‘நம்ம ஒரு வாழைக்கன்னு வாங்கி வைக்கணும்டி’ என்றார் அம்மா!
கதை பரவாயில்லை.அதில் உயிர் இல்லை