எங்கே தவறு?




என் மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டே சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அவளும், பாட்டியிடம் காகம் வடையைத் திருடியதையும், அதை நரி ஏமாற்றிப் பறித்ததையும் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள். எனக்கு அவள் முழுதும் சாப்பிட்ட திருப்தி.
மறுநாள்.
எனக்குத் தெரியாமல் ஃப்ரிட்ஜைத் திறந்து சாக்லேட் எடுத்துச் சாப்பிட்டதை அவள் கைகளும் வாயும் சொன்னாலும் தலை மட்டும் இல்லை என்றே சொன்னது. எங்கே தவறு?
அன்றும் அதே காகம் நரி கதை சொல்லித்தான் சாதம் ஊட்டினேன். ஆனால் அன்று காகம் பாட்டியிடம், “பசிக்குது… ப்ளீஸ் ஒரு வடை தா” என்றது. பாட்டி தந்தாள், மரத்தின் மேல் அமர்ந்து சாப்பிட்டது. அப்போது நரியும் பசி என்றது. உடனே காகம் பாதி வடையை நரிக்குத் தந்து மீதியை தான் உண்டது.
மறுநாள்…
“அம்மா… ப்ளீஸ் ஒரு சாக்லேட் தா” என்று மழலையில் கேட்டு வாங்கிய என் மகள் பக்கத்தில் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த நிக்கிக்கும் பாதி தந்தாள்.
– ஜூலை 2007