எங்கே என் குழந்தைகள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 10,516 
 
 

“டீச்சர் கவலையா இருகிங்களா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லேமா பணியில இருக்குறவுங்க ஐம்பத்தெட்டு வயசானா பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியது தானே. இதில் கவலைப்பட என்ன இருக்கு?”

“இருந்தாலும் உங்களோட பிரிவைத் தாங்கிக்கறது எங்களுக்கு ரொம்பக் கஷ்டம் தான் டீச்சர்.”

உண்மை தான். கற்பகம் டீச்சர் ஒரு சராசரி ஆசிரியை இல்லை.

பள்ளி துவங்க ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து விடுவார். வகுப்பறைகள் தூய்மையாக இருக்கின்றனவா என்று பார்வையிடுவார். மாணவர்களை குழுக்களாக அமர வைத்துப் படிக்க சொல்வார்.

சக ஆசிரியைகளுக்கு ஏதாவது சிரமம் என்றால் அவர்கள் கேட்காமலே உதவும் கரங்களாக வந்து நிற்பார்.

தலைமை ஆசிரியை விடுப்பில் இருந்தால் அந்தப் பொறுப்பைத் தலை மேல் இழுத்துப் போட்டுக் கொள்வார்.

ஓர் ஆசிரியை வேறு பணியில் ஈடுபட்டிருக்கிறாரா, அவரது வகுப்பை அவர் கேட்டுக் கொள்ளும் முன்னரே தன் வகுப்புடன் இணைத்துக் கொள்வார்.

தலைமை ஆசிரியை, கற்பகம் டீச்சர் மீது தனி மதிப்பு வைத்திருந்தார். பள்ளிக்கு கிடைக்கும் நற்பெயருக்கெல்லாம் கற்பகம் டீச்சர் தான் காரணம் என்று அடிக்கடி புகழ்வார்.

எல்லா ஆசிரியைகளுக்கும் கற்பகம் டீச்சர் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்ந்தார். பிள்ளைகளுக்கோ கேட்கவே வேண்டாம். வகுப்பு நடத்தும் போது கண்டிப்பான ஆசிரியையாக விளங்குபவர், இதர நேரங்களில் அன்பான தோழியாகப் பரிணமிப்பார்.

“டீச்சர், எங்களுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுங்க, பாட்டு சொல்லிக் கொடுங்க, கதை சொல்லுங்க” என்று சுற்றிச் சுற்றி வருவார்கள்.

இன்று பிற்பகல் கற்பகம் டீச்சர் வயது முதிர்வின் காரணமாகப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

பிரிவுபசார விழா நடத்தி பரிசுகளும், பாராட்டுரைகளும் நல்கி கற்பகம் டீச்சரை வழியனுப்பி வைத்தார்கள். பாராட்டுரை வழங்கிய ஒவ்வொரு ஆசிரியையும் அழுகையுடன் தான் தன் உரையை முடித்தனர்.

ஆனால் , கற்பகம் டீச்சர் இறுதி வரை இயல்பு பிறழாமல் நடந்து கொண்டார். ஏற்புரையில் சற்று தொண்டை கரகரத்த போதும் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகை மாறா முகத்துடன் விடை பெற்றார்.

ஐந்து மணிக்கு அலாரம் அடித்ததும் விழித்தெழுந்த கற்பகம் டீச்சர் அலாரத்தை நிறுத்தினார். ‘மெதுவாக எழலாமே. வீட்டில் தானே இருக்கப் போகிறோம்’மீண்டும் தூங்க முயன்றார். முயற்சி பயனளிக்கவில்லை. பல்லாண்டு பழக்கமாயிற்றே.

சரி. இன்று முதல் ஆற, அமரக் குளிக்கலாம் என்று குளியலறைக்குள் சென்றார். குளித்து, முடித்து, உடுத்தி, காப்பி, டிபன் முடித்து, தலை வாரிக் கொள்ள கண்ணாடி முன் நின்ற போது வழக்கம் போல் மணி எட்டடித்தது.

‘இந்நேரம் பிள்ளைகள் ஒவ்வொருவராகப் பள்ளிக்கு வரத் தொடங்கியிருப்பார்கள்’ வாசலில் வந்து நின்று சாலையை வெறித்தார். வழக்கமாகத் தான் செல்லும் தனியார் பேருந்து வீட்டை கடந்து போனது.

வரண்டாவில் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார். மிகப் பெரிய தீவு ஒன்றில் தான் மட்டும் தனித்து விடப்பட்டது போல் இருந்தது. நிஜம் நெஞ்சைச் சுட்டது. நேற்று வரை கட்டிக் காத்து வந்த நிதானம் காற்றில் பறந்தது.

எதிரில் பார்த்து விரிந்து கிடந்த சூன்ய வெளியில் கண்கள் நாலா பக்கமும் துலாவின.

‘எங்கே என் குழந்தைகள்?’

கற்பகம் டீச்சர் உடைந்து அழத் தொடங்கினார்.

– அக்டோபர் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *