எங்கேதான் வாழ்ந்தாலும்





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உக்கிரமமாகப் பெய்து கொண்டிருந்த பனியையும் பொருட்படுத்தாமல். காற்றோ வெளிச்சமோ வராத அந்தச் சின்னஞ்சிறிய சமையல் அறைக்குள் ஈர விறகு எழுப்பிய புகை மண்டலத்திற்குள் முழுகி, இடிந்து போய்க்கிடந்த மண்ணடுப்பின் எதிரே அ மர்ந்து கொண்டு தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.
அடுப்புப் புகட்டில் குப்பி விளக்கு எரிந்து கொண் டிருந்தது. அதிகாலையின் வரவை சேவல் அறிவித்து விட்ட போதிலும் வெளியில் இன்னமும் இருள் முற்றாக விலகவில்லை.
முத்தையா அறை மூலையில், சாக்கைப் போர்த்திக் கொண்டு முடங்கிப் போயிருந்தான், அந்தச் சின்னஞ் சிறு குடிசை வீட்டில் குசினியும், ஒரு அறையும் தாவார மும் மாத்திரம்தான் இருந்தது. மலையக குச்சு லயங் களில் வாழ்ந்து பழக்கப்பட்ட இவர்களுக்கு இது ஒன்றும் புதியதல்ல.
பம்பலக்கல்லை எஸ்டேட்டில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த காலத்திலையே வறுமைக்கும் பட்டினிக்கும் பழக்கப்பட்டவர்கள் தான். மலையத்தின் கொடுங்குளிரில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, உடமை வர்க்கங்களுக்காக உழைத்து உழைத்துக் கண்ட மிச்சம் எதுவும் இல்லை. இருந்த கொஞ்ச நஞ்சப்பாத் திரம் பண்டங்களையும் பிற உடமைகளையும் 83கலவரத் தில்முற்றாக இழந்துவிட்டு, கட்டிய துணியுடன் அகதி முகாமுக்கு வந்து அங்கு ஆறேழு மாதம் அஞ்ஞாதவாசம் செய்து, கடைசியில் வன்னேரியிலுள்ள ஆணை விழுந்தான் குடியேற்றத் திட்டத்தில் வந்து சேர்ந்தான் முத்தையா.
அக்கராயன் அகதி முகாமிலிருந்தபோதுதான் கண்ணம்மாவைக் காதலித்துக் கைப்பிடித்தான். என்றாவது ஓரு நாள் விடிவு வரத்தான் செய்யும் என்ற அதீத நம்பிக்கையுடன் இருவரும் எத்தனையோ கஷ்டங் களுக்கு மத்தியிலும் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தார்கள். ‘றெட்பானா’ வழங்கும் ‘ரேசன்’ வயிற்றைக் கழுவ உதவியது. அவர்களின் உதவியோடு, தமக்கு வழங்கப் பட்ட காட்டு நிலத்தை வெட்டி, துப்பரவாக்கி மிகவும் கஷ்டப்பட்டு இந்தக் குடிசை வீட்டை அமைத்து விட்டார்கள்.
நேரிய காட்டுத் தடிகளை வெட்டிக் குத்துக்கால் நட்டு புத்துமண் வெட்டிச் சுமந்து வந்து மணலோடு கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிட்டுப் பிசைந்து குழைத்து பெரிய பெரிய உருண்டையாக்கி, இருபக்கமும் பலகை யடித்து, நேர்தப்பாமல் அடுக்கி மொங்கானிட்டு இறுக்கி அந்த நான்கு சுவர்களையும் அமைக்க முத்தையாவும் கண்ணம்மாவும் பட்ட சிரமம் அளப்பரியது.
பிறகு காட்டு மரங்களைக் குறுக்கு நெடுக்காக வைத்து வரிந்து கட்டி தென்னங் கிடுகுகளால் வேய்ந்து ஒருவாறு குடிவந்தாகி விட்டது. பாத்திரம் பண்டங்கள் இலவசமாக ‘றெட் பானா வால் வழங்கப்பட்டது. அருகிலேயே கிணறு வெட்டுவதற்கும் பண உதவி கிடைத்த தால் சீக்கிரத்திலேயே அதையும் வெட்டிக் கட்டி முடித்து விட்டான் முத்தையா. ஒரு நாள் இவனது நிலத்தைப் பார்வையிட்ட நிர்வாகி நேரிலேயே தனது பாராட்டுதல் களைத் தெரிவித்தார்.
‘எல்லோரும் முத்தையாவைப்போல உழைத்தால் விரைவிலேயே வன்னேரி பொன்னேரியாகிவிடும்’ அவரது பாராட்டுதல்கள் அவனுக்கு மேலும் உற்சாகத் தைக் கொடுத்தது.
வெட்டிப் பண்படுத்திய காணித்துண்டைச் சுற்றி நெருக்கமான வேலி அமைத்துப் பாதுகாத்து உள்ளே காய்கறித் தோட்டம் போட்டான். முத்தையா, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்றுக்களை கிளிநொச்சியி லிருந்து வாங்கி வந்து பாத்தி அமைத்து நட்டான். அவனது முயற்சியைப் பாராட்டி அவனுக்கு ஒரு வாட்டர் பம்ப் வழங்கப்பட்டது. இதனால் அவனது முயற்சிகள் மேலும் உயர்ச்சி பெற்றன.
இடையிடையே ஊன்றப்பட்ட வெண்டை, பூசனி, பயிற்றை வித்துக்களும், தூவப்பட்ட முளைக்கீரை விதை களும் பச்சை பிடித்து முளைக்கத் தொடங்கியிருந்தன.
வெறும் காய்கறித் தோட்டமாக மட்டும் நின்று விடாமல், ஒரு நிரந்தரத் தோட்டமாக அதை ஆக்கிவிட வேண்டும் என்பது கண்ணம்மாவின் ஆசை. கண்ணம்மா தன் எண்ணத்தைக் கணவனிடம் கூறியதும் அவனும் அதை ஆமோதித்து ஒரு புறத்தே வாழை மரங்களும், கரையோரமாகத் தென்னம் பிள்ளைகளும் நட்டான். தோடை, எலுமிச்சை, பலா, மா என்ற வகைக்கு ஒன் றிரண்டு மரங்களாக நட்டுப் பாதுகாத்தான்.
பெரு மரங்களை நட்டபோது விவசாய அலுவலர் களின் ஆலோசனைப்படி போதிய இடைவெளி விட்டு நாட்டிச் சதுரத்தில் இரண்டு முழ ஆழத்தில் கிடங்கு வெட்டி குழியில் உப்பும், சாம்பலும், எருவும் இட்டு பக்குவமாய் நாட்டினான், வானமும் வஞ்சகம் செய்யாத தால் வைத்த பயிரெல்லாம் வளமாய்த் துளிர்த்தன.
வரண்டு கிடந்த வாழையெல்லாம் புதிய இலைகள் விட்டு தளிர்த்து வளர்ந்து தோகை விரித்தன. தென்னைகள் குருத்துவிட்டன. மாவும் பலாவும் வேரூன்றின.
காய்கறி பலன் தரத் தொடங்கியதும் இவர்களது கடன்பழு கொஞ்சம் குறைந்தது. கிளிநொச்சியில் வாரத் தில் இரண்டு நாட்கள் முறைச் சந்தை உண்டு. நாலா பக்கத்திலிருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் வரு வார்கள். தடங்கலின்றி விற்பனையாகுமாதலினால் முத்தையாவும் வாரத்தில் ஒரு தடவை முறைச் சந்தைக்குப் போவான். காய்கறிகளோடு வாழையிலையும் வெட்டிக் கட்டிக்கொண்டு விற்பனைக்குக் கொண்டு செல்வான்.
வன்னேரியிலிருந்து கிளிநொச்சி இருபது மைல்தான் என்றாலும் காலையில் ஒரு தடவையும் பின்னர் மாலையில் ஒரு தடவையும்தான் பஸ் வந்து போகும். பெருமழை என்றால் அதுவும் வராது.
இன்றும் முத்தையா சந்தைக்குப் போகும் முறை. அதுதான் அதிகாலையிலேயே கண்ணம்மா எழுந்து தேநீர் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறாள்.
அடுப்படியின் சலசலப்பில் அருண்ட முத்தையா எழுந்து காலைக்கடன்களை முடிக்க வெளியே சென்றான். இருளுக்கும் வெளிச்சத்துக்கு மிடையிலான அந்த மைமல் பொழுதில் வானத்து வெள்ளிகள் மங்கி மறைந்து கொண்டிருந்தன.
கண்ணம்மா தேநீரும் கையுமாக வந்தபோது, அடுக் களைக்கும் திண்ணைக்கும் இடையில் உள்ள வாசற் படியில் புன்னகையோடு நின்று கொண்டு குறும்பாகச் சிரித்துக் கொண்டிருந்தான். கட்டையான சற்றே பெருத்த தோற்றம் அதனால் வயிறு தொந்தியாய்க் காணப்பட்டது.
“இவ்வளவு வேலை செய்தும் வண்டி வத்துதில்லையே” என்று செல்லமாகக் கேட்டபடி தேநீரை நீட்டினாள் கண்ணம்மா.
“ஏன்; அதால உனக்கு ஏதாவது இடைஞ்சலா?”
அவனது குறும்பைப் புரிந்து கொண்டு அவள் நாணத்தோடு சிரித்தாள்.
‘ம் நானும் கஷ்டப்படுறேன் பலன் தான் இல்லை’ அவளது மென்மையான வயிற்றுப்புறத்தையே நோக்கிய படி தேநீரை உறிஞ்சினான்.
‘ஆமா, அதுக்கென்ன இப்ப அவசரம் இரண்டொரு வருஷம் போகட்டுமே’ என்று சொன்னவள் சற்றுத் தயக்கத்தின் பின் தொடர்ந்தாள். ‘இந்த மாதம் இன்னும் முழுக்கு வரலீங்க’.
‘அப்படியா?’ என்று மகிழ்ச்சியோடு அவளை அணைத்து முத்தமிட்டான். ‘ஐயே! ஒரு நேரம் காலம் இம்லீங்களா,? எப்ப பார்த்தாலும் இதே எண்ணம்தான்’, அவள் பிகு டண்ணினாள். ‘தேத்தண்ணி ஆறுது எடுத்துக் குடிங்க’.
‘நீ குடிச்சியா?’ அன்போடு கேட்டான் முத்தையா.
அவனுக்கு மனைவிமீது அளவு கடந்த ஆசை. ‘கண்ணு கண்ணு’ என்று உருகிப்போய் விடுவான். அவளுக்கு அவன் மீது உயிர்.
‘சரி பஸ் வரப்போகுதுங்க’
மரக்கறிகளை சாக்கில் கட்டினான். கத்தரியும் வெண் டியும் நிறைய இருந்தன. இரண்டு பெரிய பூசினிக்காய்கள், வாழை இலைக்கட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சந்திக்கு பஸ் ஏறப்புறப்படும்போது கேட்டான் ‘கண்ணு உனக்கு என்னவேணும்’
‘நீங்கதான் வேணும்… அடுக்கான பற்கள் பளிச்சிட்டன.
‘வந்து கவனிக்கிறேன்’ எட்டி நடந்தான்.
பஸ் வழக்கம்போல நிறைந்த சனத்துடனேயே வந்தது, கால் வைக்க முடியாதபடி மூட்டை முடிச்சுகள். ஒருவாறு முடிச்சுக்களையும் ஏற்றித் தானும் ஏறிக் கொண்டான்.
பஸ் கிளிநொச்சியை அடைந்தது. துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ‘ஐயோ, அம்மா” என்ற அலறல்கள்!.
முத்தையாவும் வேறு சிலரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர் பாதுகாப்புப் படையினரைத் தாக்க முயன்ற பத்துப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘லங்கா யுவத்’ தெரிவித்தாக வானொலியும், ரூபவாகினியும் அறிவித்தன.
– மல்லிகை
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.