ஊரு விட்டு ஊரு வந்து…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 6,137 
 
 

நான் அவளைப் பார்க்கும் போது என்னை யாராவது பார்க்கிறார்களா என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பேன். நான் தேத்தாரேக் போடும் பகுதியிலிருந்து எதிர்த்த கடையைப் பார்த்தால் அவள் குனிந்து நிமிர்ந்து சீனக் கிழவியின் வாங்கும் வேலைக்கு வளைந்து கொடுத்து வேலை செய்வது என் வாலிபத்துக்கு நல்ல தீனிதான். நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் என்னை நோக்கியே எல்லாம் செய்வது போல் இருக்கும் அவளது அத்தனை அசைவுகளும். அவளுக்கும் என் மேல் ஒரு ‘இது’ இருப்பது என்னால் சிலகாலமாகவே உணரமுடிந்தது.

அவள் பெயர் சல்பியா. எனக்கு முன்னமே இந்த நாட்டுக்கு நாடு விட்டு நாடு வந்து பிழைப்பை நடுத்தும் இந்தோனேசியாகாரி. சமைப்பது, சட்டிப் பானைகள் கழுவுவது என்று வேலை இருந்தாலும் அங்க லட்சணத்தைச் சரியாகப் பராமரித்து வைத்திருக்கும் இளம் பெண்.

நான் மலேசியாவுக்கு வந்து இப்போதுதான் ஆறு மாதங்கள் ஆகின்றன. எனக்கு மலாய் அந்தளவு வராது என்பதால் சல்பியாவுடன் வெரும் கண் ஜாடையிலும் புன்னகையிலுமே தூரமாக நின்று பேசிக்கொண்டிருந்தேன். கடைக்கு வருகிறவர்களிடம் ஆர்டர் எடுக்க முதலாளி கற்றுக் கொடுத்த ஒன்றிரண்டு மலாய் வார்த்தைகளை வைத்துக்கொண்டுதான் பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது. ‘தேத்தாரேக்’, ‘கோப்பி தாரேக்’, ‘ரொட்டி சானாய்’, ‘சத்து டூவா தீகா’…

சல்பியாவிடம் பேசுவதற்கு இவ்வளவு மலாய் போதாதே என்பதற்காக வருகிற வாடிக்கையாளர்களின் மண்டையை உருட்டி அடுப்பாங்கரை வார்த்தைகளைத் தவிர்த்து மேற்கொண்டு சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டுபோய் சல்பியாவிடம் சினேகம் பிடித்தேன். ஆனால், எடுத்த எடுப்பிலேயே சல்பியா எனக்குக் காதலியாவாள் என்பதை நானே கூட நினைத்துப் பார்க்காதச் சர்க்கரைச் சமாச்சாரம்.

காலை ஆறு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை எனக்கு வேலை நொங்கு நூலெடுத்து விடுகிறது. என் முதலாளி மகா கஞ்சப் பயல்; வேலைக்கு இன்னொரு ஆளை வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் என்னையே கவனித்துக்கொள்ளச் செய்கிறார். அனைத்தையும் தனியாளாய்ப் பார்த்துக்கொள்வதில் இருக்கும் அதீத அலுப்பும் வெறுப்பும் சல்பியா பேசும் புரியாத மொழியில் பறந்தே போய்விடும். அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
எனக்குத்தான் வேலை எட்டு மணி வரை. அவள் மாலை ஐந்து மணிக்கே வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். இரவு ஒன்பது மணியளவில் அவள் தங்கியிருக்கும் தாமானுக்குப் போய்தான் அவளைச் சந்திப்பேன். போகும் போதெல்லாம் சாப்பிட ஏதாவது எடுத்துச் செல்வேன். இருவரும் பேசிக்கொண்டேதான் சாப்பிடுவோம். சமயத்தில் இது வேண்டும், அது வேண்டும் என அவள் உரிமையோடு கேட்பது எனக்குப் பிடித்திருந்தது. சல்பியாவுக்குத் தானே…

சல்பியாவோடு ஒரே வீட்டில் பல இந்தோனேசிய பெண்கள் இருந்தாலும் அவளோடு எப்போதும் ஒன்றாய் சுற்றுபவள் அஸ்னாவாத்திதான். அவளோடு எனக்குச் சுமாரான பழக்கம்தான். அவளுக்கு வேறு யாரோ ‘பாய் ப்ரெண்ட்’ இருப்பதாகக் கேள்வி. நேப்பால்காரனாம். என்னைப் போல ஊர் விட்டு ஊர் வந்து பிழைப்பவர்களுக்கு மட்டும் உணர்ச்சிகளும் ஹார்மோன்களும் செத்துப்போய் விடவில்லையே. பணம் பன்னும் இயந்திரமாய் உழைத்து உழைத்து ஊருக்கு அனுப்பினாலும் மனிதர் தானே நாங்களும். அதிர்ஷ்டக்கார நேப்பால்காரன். அஸ்னாவாத்தி அழகுக்கும் கட்டான உடலமைப்புக்கும் எத்தனை கொடுத்தாலும் தகும். சல்பியாவை விட அவள் அழகும் அமைப்பும் கொஞ்சம் தூக்கல்தான்.

சமயங்களில் போரடிக்கிறது என்று என்னிடம் எஸ்.எம்.எஸ் அனுப்பிப் பேசிக்கொண்டிருப்பாள் அஸ்னாவாத்தி. சல்பியாவுடன் பழகும்போது அவள் கூடவே இருக்கும் அஸ்னாவாத்தியுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள ஏனோ கொஞ்சம் பயம். சல்பியா கண்டுபிடித்துவிட்டால் பிறகு என்னோடு பழகுவதை நிறுத்திக்கொண்டு விடுவாள். கிடைத்ததும் கிடைக்காமல் போய்விடும்.

மாதம் ஆரம்பித்தப் பிறகுதான் முதலாளி சம்பளமே போடுவார். அதுவரைக்கும் கொஞ்சம் இழுத்துப்பிடித்துத்தான் சமாளிக்கவேண்டும். முன்பெல்லாம் நானூரு வெள்ளியை ஊருக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். இப்போது அதைப் பாதியாகக் குறைத்தால் ஒழிய செலவைச் சமாளிக்க முடியாது. இருநூறு வெள்ளி இந்திய ரூபாய்க்கு இரண்டாயிரத்து எண்ணூத்து சொச்சம் வரும். அது போதும் ஊரில் உள்ளவர்களுக்கு. கஞ்சப் பயல் முதலாளி சம்பளத்தை ஏற்றிவிட்டால் அது உலக அதிசயமாகாதா?

நானும் சல்பியாவும் மேலும் நெருக்கமானோம். முன்பு கடையிலிருந்தே சாப்பாட்டை எடுத்துக்கொண்டுப் போய்விடுவேன். கடைச் சாப்பாட்டைக் காரம், ருசி இல்லை என்று சொல்லித் தட்டுகழிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்குப் பிடித்ததையே வாங்கித் தருவதில்தான் செலவு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. செலவைக் குறைக்கவேண்டும் என்பதற்காக கடையில் மிச்சம் தங்கிப்போன எதையாவது சாப்பிட்டுவிட்டு அந்தச் செலவை இதில் ஈடுகட்டிவிடுவேன். சல்பியா இங்கீதம் தெரிந்தவள். எனக்கு முன்னே தான் மட்டும் சாப்பிடுவதைத் தவிர்த்தாள். வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுகொள்வதாகச் சொல்லி பொட்டலத்தைப் பிரிக்காமல் வைத்திருப்பாள். நானும் பலமுறை வற்புறுத்திப் பார்த்துவிட்டேன். அவள் கேட்பதாய் இல்லை. பரவாயில்லை. சல்பியா என் மனதில் இன்னும் ஆழமான இடத்தைப் பிடித்தாள்.

அவளோடு பேசிப் பழகினால் மட்டும் போதுமா என்று என் உடலுக்குள் சுரக்கின்ற ஹார்மோன்கள் கேள்வி கேட்டன. சல்பியாவோடு நெருக்கமாய்ப் பழகி ஏழெட்டு மாதங்கள் ஆகின்றன. தனிவீடு பார்க்கலாமா என்று யதார்த்தமாய்க் கேட்டுவிட்டேன். அன்று ஆரம்பித்ததுதான் பிரச்சனையே!

சல்பியா என்னோடு பேசுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்க ஆரம்பித்தாள். முன்பு நான் தேத்தாரேக் போடும் இடத்திலிருந்து நான் பார்ப்பேன் என்று தெரிந்து முன்னாடி முன்னாடி வந்து தன்னைக் காட்டிவிட்டுப் போனவள், இப்போது அதிகம் கண்ணில் படுவதில்லை. என் வக்கிர புத்தியை அவள் அறிந்திருக்கக்கூடும். சே! அவளுக்காகச் செய்த செலவெல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சம் வளரத் தொடங்கியிருந்தது.

சமயங்களில் அஸ்னாவாத்தியிடம் அவளைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவள் சல்பியாவைப் பற்றி பட்டும் படாமல்தான் என்னிடம் பேசுவாள். எல்லாம் என் தவறுதான். இன்னும் கொஞ்ச காலம் நன்றாகப் பழகியிருந்து பிறகு ‘அதைப்’ பற்றிப் பேசியிருந்திருக்கலாமோ என்று தோன்றியது. சல்பியாவோடு மீண்டும் பேசுவதற்காகச் சில தாஜா வேலைகளையெல்லாம் செய்துபார்த்தேன். அவள் உண்டு இல்லை என்பதைத் தவிற அதிகம் என்னிடம் பேசுவதில்லை.

நான் வேலை செய்யும் கடையிலிருந்து எதிர்த்த கடை நன்றாகவே தெரியும் என்பதால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சல்பியாவைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவள் வேலை செய்யும் நேரமே அதிகம் என்றாலும் அடிக்கடி கைப்பேசியில் சிரித்துப் பேசுவதை நான் கண்டுபிடிக்காமல் இல்லை. எனக்கு உண்மையிலேயே கலவரமாகத் தொடங்கியிருந்தது அப்போதுதான். சல்பியா உண்மையிலேயே என்னை அடியோடு வெறுத்துவிட்டாளா? இப்போது அவள் வேறு யாருடனோ பழகுகிறாளோ என்பது போன்ற உணர்வு என்னைக் கலக்கமடையச் செய்ததோடு ஆத்திரத்தையும் உண்டுபன்னியது.

எதுவாக இருந்தாலும் அதை அவளிடமே நேராகக் கேட்டுவிடவேண்டும் என்று ஒரு முடிவில் இருந்தேன். இருந்த உளைச்சலிலும் வேலைப் பளுவினால் அலுப்பும் சோர்வும் என்னைக் காய்ச்சல் வரை கொண்டு சென்றிருந்தது. முதலாளி ஒரே ஒரு நாள் மட்டும் எனக்கு ஓய்வு தந்திருந்தார். புண்ணியவான் அதையாவது தந்தானே…

அந்த ஓய்வு நாளில் எப்படியாவது சல்பியாவைப் பார்த்துப் பேசிவிட வேண்டும். மறுநாள் வேலைக்குப் போயாக வேண்டும். வேலை முடிந்து ஒன்பது மணிக்குப் போய்ப் பார்க்க இப்போது நிலைமை முன்பு மாதிரி இல்லை.

சல்பியா வேலை முடிந்து ஐந்து மணிக்குக் கடையை விட்டுக் கிளம்புவாள். வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு சில்லரை வேலைகளை முடிக்க எப்படியும் மணி ஆறாகிவிடும். சரியாக மணி ஆறுக்கு அவள் தங்கியிருக்கும் வீட்டுக்குப் போனால் அவளோடு ஆறவமர மனம் திறந்து பேசலாம்.

மணியாகிக் கொண்டிருந்தது. காலையிலிருந்து எடுத்த ஓய்வில் உடல் கொஞ்சம் புத்துணர்ச்சி கொண்டிருந்தது. என் அதிகப்பட்ச மேக்கபான முகப்பௌடரைக் கொட்டி முகத்தில் அப்பிக்கொண்டி தலையை எண்ணை வைத்து வழித்துச் சீவிச் சிலிப்பிவிட்டுக்கொண்டு சல்பியா இருக்கும் தாமானை நோக்கி நடந்தேன்.

சல்பியா வேறொரு ஆடவனுடன் மோட்டார் வண்டியில் அப்போதுதான் ஏறிக் கிளம்பியதை என் கண்ணால் கண்டேன். அதுவும் அவனைப் பின்னாலிருந்து இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டு போவதைப் பார்த்ததும் எனக்கு இருந்த கொஞ்சநஞ்ச காய்ச்சலும் பறந்துபோய் கோபம் உச்சிக்குப் போனது. ஐந்து நிமிடம் முன்கூட்டியே வந்திருந்திருந்தால் அவளைக் கையும் களவுமாகப் பிடித்திருக்களாம்.

நாங்கள் வழக்கமாகச் சாப்பிட்டும் பூங்காவிலேயே உட்கார்ந்திருந்தேன். இன்று எப்படியாவது அவளைப் பார்த்தாகவேண்டும். இரண்டில் ஒன்று பார்ப்பதே சரி! நான் செலவு செய்த இவ்வளவு பணத்துக்கு என்னை அவள் தொடக்கூட அனுமதிக்கவில்லை. அந்த மோட்டார்காரன் என்னத்தைக் கொடுத்தானோ, அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு போகிறாளே! அப்புறம் நான் என்ன இளிச்சவாயனா? வரட்டும்…

மணி இரவு எட்டானது. அதே மோட்டார்காரன் மீண்டும் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனான். முதலில் முதுகுப் பக்கமாய்ப் பார்த்ததால் அந்த ஆடவனைச் சரியாகப் பார்க்கமுடியாமல் போனது. இப்போது நேர் திசையில் நின்றுகொண்டிருப்பதால் அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவன் அனேகமாக இந்தோனேசியாக்காரன் அல்லது வங்காளதேசியாக இருக்கவேண்டும். இரண்டு மணிநேரம் எங்கெங்கே சுற்றினார்களோ, என்னென்ன செய்தார்களோ. வாய் வரை வந்தப் பழம் தட்டிப் பறிக்கப்பட்டதுபோல் மனம் வெந்துகொண்டிருந்தது.

அவன் அவளை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான். நான் உடனடியாகப் போய் அவள்முன் நின்றால் அவள் தடுமாறி நான் கூப்பிட, வராமல் போகக்கூடும். அதனால் பதினைந்து நிமிடம் கழித்து ஒன்றும் தெரியாததுபோல் அவள் வீட்டுக்குமுன் போய் நின்று குரல் கொடுத்தேன். அஸ்னாவாத்திதான் வந்து பார்த்தால். “சல்பியா…” என்றேன். அவள் உள்ளே நுழைந்தபடி நேரத்தை விரயமாக்காமல் “சல்பியா! நந்தா டத்தாங்,” என்று உரக்கக் கூவினாள். சில நொடிகள் கழித்து சல்பியா வெளியே வந்தாள். என் முகத்தில் புன்னகையை வரவழைத்தேன். அது அவள் மனதில் இருந்த திருட்டுத்தனத்தை இலகுவாக்கியிருக்கவேண்டும். அது அவளது முகத்திலும் புன்னகையை வரவழைத்தது. அவளைப் பூங்காவுக்குக் கூப்பிட்டேன். முதலில் வரத்தயங்கினாள். எப்படியோ பேசி அவளை பூங்கா வரை வரவைத்திருந்தேன்.

எப்போதும் இந்தப் பூங்காவில் இரவு ஏழு மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இருக்காது. அதனால்தான் நாங்கள் முன்பிலிருந்தே இந்தப் பூங்காவுக்கு வருவோம். இந்த இடத்தை முன்மொழிந்தது சல்பியாதான். அன்று அவள் வசமாகச் சிக்கினாள்.

முதலில் மோட்டாரில் வந்து ஏற்றிச் சென்றவன் யார் என்று கேட்டேன். அண்ணன் மாதிரி என்றாள்; நண்பன் என்றாள்; எனக்குத் தெரிந்த மலாயில் ஆத்திர அவசரத்திற்கு சொற்களும் தட்டுப்படாய்ப் போயின. அவள் எதையோ பேசிக்கொண்டிருந்தாள்; நான் எதையோ உளரிக்கொண்டிருந்தேன். ஒன்றும் சரியாக வருவதாகத் தெரியவில்லை. ஏதோ சல்லாபத்துக்கு ஆசைப்பட்டு இப்படி காசை நான் கூட சாப்பிடாமல் இவளுக்குப் போய் செலவு செய்தேனே. ஐயோ, என் பணமும் போனதே!…

சல்பியா பேசுவது எனக்கு முழுமையாக விளங்கவில்லை. ஆனால், கோபமாக அவளும் கத்திக்கொண்டிருந்தாள். “பெர்கிலா பெர்கிலா” என்று அடிக்கடி அவள் சொல்வதுதான் நன்றாக விளங்கியது. காசைப் பிடுங்குகிறவரை கொஞ்சி குழாவிவிட்டு இப்போது என்னையே விரட்டுகிறாள்! இவளை…

இருந்த கோபத்தில் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்தேன். செங்கல் துண்டுகளாயின. அவள் தலையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. எனக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் இருந்தது. இதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டேன். மயக்கமே வருவதுபோல் இருந்தது. எனக்கு அங்கே இருக்கவிடாமல் பயம் விரட்டியடித்தது. அவளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன். எவ்வளவு தொலைவு ஓடினேன் என்று தெரியவில்லை. திடீரென்று ஒரு சிந்தனை! சல்பியாவை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டோமே! அவளுக்கு ஏதாவது ஆகித்தொலைத்தால்?

அங்கே மீண்டும் போக என்னால் முடியவில்லை. கண்களைச் சுற்றியது. உடல் வியர்வையால் நனைந்து போட்டிருந்த சட்டையை உடலோடு ஒட்டவைத்துக்கொண்டது. கைப்பேசியை எடுத்தேன். “அஸ்னாவாத்தி, சல்பியா சூடா ஜத்தோ லா. தோலோங் தெஙொக். டி தாமான் பூஙா,”.

எனக்கு அவசரமான வேலை இருப்பதாகச் சொல்லி அவளிடம் மழுப்பினேன். அஸ்னாவாத்திக்கு பதட்டத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவளது திணரல் மேலும் என்னைத் தடுமாறச் செய்துவிட்டது. கைப்பேசியை அடைத்துச் சட்டைப்பையில் போட்டுவிட்டு ஓடியே வீடு போய் சேர்ந்தேன். என் வீட்டில் தங்கியிருந்த மற்றவர்கள் இன்னும் வேலை முடிந்து வந்திருக்கவில்லை. மணி ஒன்பதை நெறுங்கிக்கொண்டிருந்தது. போய் குளித்துவிட்டு என் படுக்கையில் சாய்ந்து போர்வையைத் தலையோடு போர்த்திக்கொண்டேன். சல்பியாவுக்கு என்ன ஆனதோ…

மறுநாள் காய்ச்சலின் வேகம் கூடியிருந்தது. கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்தேன். கைப்பேசி ஒரு மூலையில் கிடந்தது. எடுத்துப் பார்த்தேன். முப்பத்தெட்டு ‘மிஸ்ட் கால்ஸ்’ இருந்தன. அனைத்துமே அஸ்னாவாத்தியிடமிருந்து வந்தவைதான். என்ன நடந்ததோ ஏது நடந்தது புரியவில்லை. உடனடியாக அவளுக்குப் போன் செய்தேன். “நந்தா, சல்பியா சூடா மெனிங்கால்,” என்றாள் அவள். அதற்கான அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஆனால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை நன்கு உணர்ந்திருந்தேன். என்னோடு தங்கியிருந்த மற்ற எல்லாரும் அவரவர் வேலை பார்க்கக் கிளம்பிவிட்டிருந்தனர். அந்த நேரத்தில் நான் மட்டும்தான் தனியாக இருந்தேன்.

முதலாளி என்னைத் தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார். “வாங்க முதலாளி. உடம்பு சரியில்லை…” என்றதுதான் தாமதம். “யோவ்! ஒடம்பு சரியில்லாமதான் போய் ஒரு கொலையப் பன்னிட்டு வந்தியா?” என்று கத்தினார். எனக்கு அப்போதைய அதிர்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது.

கூடவே வந்திருந்த போலீஸ்காரர்கள் என்னை வண்டியில் ஏற்றிச் சென்றனர். லாக்கப்பில் இருந்த என்னை அஸ்னாவாத்தி பார்க்க வந்திருந்தாள். பத்து நிமிட உரையாடலுக்குப் பின் சல்பியாவின் மேல் எனக்கு இருந்த வெறி மாறியிருந்தது.

சல்பியாவின் தற்காலிகக் காதலனாய் நான் மட்டுமல்ல, இன்னும் பலர் இருந்திருப்பதை அஸ்னாவாத்தி சொல்லித்தான் தெரியும். ஆண்களுடன் பழகி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தைக் கறந்து அவளது அம்மாவின் இருதய ஆபரேஷனுக்குப் பணம் அனுப்புவதாகச் சொன்னாள். அஸ்னாவாத்தி சொன்ன பின்புதான், இத்தனை நாள் தான் வாங்கிக்கொடுத்தச் சாப்பாட்டையும் சல்பியா அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு விற்றுப் பணமாக்கிச் சேர்த்து அதையும் ஊருக்கு அனுப்புகிறாள் என்று.

சல்பியாவுக்கு முன் நான் ரொம்பவும் தாழ்ந்துபோனேன். அவளை இன்னொரு முறை பார்ப்பேனா என்று மனம் அழுதது.

ஊருக்கு முதலாளி அனுப்பியிருந்தச் செய்தி கேட்டு இரண்டே நாட்களில் என் மனைவியும் மாமியாரும் வந்து சேர்ந்துவிட்டனர். என்னைப் பார்ப்பதற்காக லாக்கப்பிற்கு வந்திருந்தனர். ஆனால், என்னால் எழுந்து போகமுடியவில்லை.

– மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *