ஊரின் மிக அழகான இதயம்




ஊரின் பொது இடத்தில், மக்கள் கூட்டத்தைப் பார்த்து ஓர் இளைஞன் உரத்துக் கூவினான்: “இந்த ஊரிலேயே மிகவும் அழகான இதயம் என்னுடையதுதான். இதோ பாருங்கள்!”
மக்கள் அவனை நெருங்கி, அவன் காண்பித்த அவனது இதயத்தைப் பார்த்தனர். அது மிக மென்மையாகவும், நேர்த்தியான வடிவம் கொண்டதாகவும், பளபளப்பாகவும் இருந்தது.

“உண்மையிலேயே உன்னுடையதுதான் அழகான இதயம்!” மக்கள் ஒத்துக்கொண்டனர்.
அப்போது கூட்டத்திலிருந்து வந்த ஒரு முதியவர், “உன்னுடைய இதயம் அழகானதுதான்; ஆனால், என்னுடைய இதயம் அளவுக்கு அழகானதல்ல!” என்றார்.
“அப்படியானால் உங்களுடைய இதயத்தைக் காண்பியுங்கள் பார்க்கலாம்.”
முதியவர் தனது இதயத்தை எடுத்துக் காண்பித்தார். அது இளைஞனுடைய இதயத்தை விட உறுதியானதாகவும், துடிப்போடும் இருந்தது. ஆனால், அது ஒழுங்கற்ற வடிவத்துடன், கரடு முரடாகவும், ஆங்காங்கே வடுக்களோடும் காணப்பட்டது. அதனால் அதைப் பார்த்து மக்கள் சிரித்தனர்.
“இதைப் போய் அழகான இதயம் என்கிறீர்களே! அதுவும் என்னுடைய இதயத்தை விட உங்களுடையது அழகானது என்று எப்படி சொல்கிறீர்கள்?” இளைஞன் கேட்டான்.
முதியவர் சொன்னார்:
“இதயத்தின் அழகு என்பது அதன் வடிவத்தில் அல்ல; அதன் செயல்பாட்டில் இருக்கிறது. இதயத்தின் கடமை, பிறரிடம் அன்பு செலுத்துதல். எனவே, இதயத்தின் அழகு, அது எந்த அளவுக்கு மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிறது என்பதில் இருக்கிறது.
“நான் மற்றவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்தினேன். அவர்களுக்கு என் இதயத்தின் ஒரு சிறு பகுதியையே பிய்த்துக் கொடுத்தேன். அதில் சில பேர்
தங்களுடைய இதயத்தையும் அதே போல பிய்த்து, சிறு பகுதியை எனக்குக் கொடுப்பார்கள். அதை நான் எனது இதயத்தில் ஒட்டிக் கொள்வேன்.
“ஒவ்வொருவருடைய இதயங்களின் அளவும், அன்பு செலுத்துகிற முறையும், வெவ்வேறு மாதிரியானது. எனவே, மற்றவர்கள் தரும் இதயத் துணுக்கு, எனது இதயத்தின் வடுப் பகுதிக்கு சரியாகப் பொருந்தி வராமலும் இருக்கும். ஆகவேதான் எனது இதயம் சில இடங்களில் கரடுமுரடாகக் காணப்படுகிறது.
“சிலர், நான் கொடுத்த எனது இதயத்தின் பகுதிக்கு பதிலாக அவர்களின் இதயத்திலிருந்து எதுவும் தந்திருக்க மாட்டார்கள். எனவேதான் எனது இதயத்தில் ஆங்காங்கே சிற்சிறு குழிகளாக வடுக்கள் காணப்படுகின்றன. நிரப்பப்படாத அந்தப் வடுக்கள் எனது எதிர்பார்ப்பற்ற அன்பின் சாட்சியங்கள் ஆகும்.”
அதைக் கேட்ட மக்களும், இளைஞனும் நெகிழ்ந்து நின்றனர்.
“உண்மையிலேயே மிகவும் அழகாக இதயம் உங்களுடையதுதான்!”
ஒத்துக்கொண்ட அந்த இளைஞன், தன்னுடைய இதயத்தின் சிறு பகுதியைப் பிய்த்து எடுத்து அவரிடம் கொடுத்தான். அவரும் அதை வாங்கி தனது இதயத்தின் பழைய வடுவொன்றில் ஒட்டிக்கொண்டு, தன் இதயத்லிருந்து ஒரு பகுதியைப் பிய்த்து அவனிடம் கொடுத்தார். அவன் அதைத் தனது இதயத்தின் புதிய வடுப் பகுதியில் வைத்து நிரப்பினான். அது சரிவரப் பொருந்தாமல் கரடுமுரடாகக் காட்சியளித்தது. இப்போது அவனுடைய இதயம் முன்பு போல மென்மையாகவோ, பளபளப்பாகவோ இல்லை. ஆனால், இப்போதுதான் அது அழகாகத் தொடங்கியிருக்கிறது என அவன் எண்ணிக்கொண்டான்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |