ஊராபிச் சாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2025
பார்வையிட்டோர்: 3,088 
 
 

கங்குல் இருக்கும் போதே விழித்துவிட்ட தாத்தா வரக்காபி போட்டு குடித்துவிட்டு, செங்கல் சூளைக்கு போய்விட்டார். தன் பேரன் துரைச்சாமியும் மருமவ பேத்தி தங்கமாரியும் அவர்களின் ஒரே மகள் லிசாவும் இன்று பள்ளிவிடுமுறைக்கு சென்னையிலிருந்து வருவார்கள். சீமை ஓட்டின் எரவாணத்தில் சாவி இருப்பதாக எதிர் வீட்டு அய்யம்மாவிடம் முதல் நாள் இரவே சொல்லி வைத்தார் தாத்தா.

தாத்தா சென்று சில மணி நேரத்திலேயே துரைச்சாமி தன் சொகுசு காரில் வீடு வந்து சேர்ந்தான். கோமுட்டி செட்டி அப்போதுதான் கடையை திறந்தார். பால்பாக்கெட்டு வாங்க தங்கமாரி கடைக்கு வந்திருந்தாள்.

“ஏண்டி, சீனியம்மா கெழவி போனதுக்கப்புறம் உங்க தாத்தேன் ஒண்டிக்கட்டையா கெடக்குறாரே மெட்ராசுக்கு அவரையும் கூட்டிப் போய் வச்சிகிறலாம்ல?”-ரம்பக்காரர் பொஞ்சாதி ஒச்சம்மா கேட்டாள்.

“தாத்தேன் வர மாட்டேங்குதே நாங்க என்ன செய்ய?”-தங்கமாரி.

தாத்தா போட்டு வைத்திருந்த வரக்காபியில் பாலை சூடாக்கி கலந்து துரைச்சாமிக்கு ஒரு கப் காபி தந்துவிட்டு,  “என்னங்க ஊர்ல ஒவ்வொர்தரும் ஒவ்வொருவிதமா பேசுராக. இந்த முற தாத்தாவ நாம சென்னைக்கு கூட்டிட்டு போயிடனும்”-என்றாள் தங்கமாரி.

“இந்த முற ஆசைவார்த்தை கூறி தாத்தாவ அழைச்சுட்டு போயிடனும். தாத்தா சொத்துக்கு ஆசபட்டு திரியரோம்னு என் முதுகுக்கு பின்னால ஊர்காரங்கே பேசுறது எனக்கும் தெரியுது”-துரைச்சாமி சொன்னான்.

ஊராபி தாத்தாவின் ஒரே மகன் வழி பேரன்தான் துரைச்சாமி. ஆற்றோரத்தில் இருக்கும் புஞ்சையும், ஓட்டு வீடும்தான் தாத்தாவின் ஆஸ்தி. பல தலைமுறையாக கிராமத்தில் புளங்கி வந்த குடும்பம். தன் மண்ணைவிட்டு வர அவருக்கு விருப்பம் இல்லை. பாட்டி சீனியம்மாவின் இறப்புக்கு பின் பல முறை தாத்தாவை தன்னுடன் வந்துவிடும்படி கேட்டுப் பார்த்தான் துரைச்சாமி. மசியவில்லை அவர். வெள்ளந்தியான மனுசன்.

வெயில் சுள்ளாப்பு போட்டது. பொடக்காணியில் மீன் அரிந்து கொண்டே, “லிசா, சியான் ஆத்துல இருப்பாக வெருசா கூட்டியா”-என்றாள் தங்கமாரி.

பெருமாள் கோவிலிருந்து பிரியும் கப்பி ரோட்டில் சிறிது தூரம் போனால் எறப்பு வரும். அநேகம் பேர் குளிப்பதற்காக துணிகளை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு போனார்கள். குளித்து முடித்தவர்கள் செம்பட்டை தலை பறக்க கண்கள் சிவந்து துவைத்த துணிகளை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு எதிரே வந்து கொண்டும் இருந்தார்கள். ஆற்றின் கரைகளில் நீர் கருவையும், சம்பங்கோரையும் வளர்ந்து கிடந்தது. நீரின் மேல் பிரளியடிக்கும் மீன்களின் செதில்கள் சூரியரஷ்மி பட்டு மின்னின. செட்டுசெட்டாக உள்ளான் பறவைகள் மிதந்து கொண்டிருந்தன. தணுத்த காற்று வீசியது. படித்துறையில் நின்று தாத்தா என்று கத்தினாள் லிசா. நீருக்குள் நின்றிருந்த தாத்தா அண்ணாந்து பார்த்து,  “அங்கே நில்லு வந்தர்ரேன்”-,என்று கத்தினார் தாத்தா.வேட்டியை தார்ப்பாய்ச்சியிருந்தார். நல்ல தாட்டியமான திரேகம். நீருக்குள் சிறியது முதல் பெரியது வரை பாறைகள் இருந்தன.பின்னே, ஆற்றைக் கடந்தால் அக்கரையிலும் படித்துறையும் கல்மண்டபமும் இருக்கும். எள்,நீர் தெளித்து தர்பனம் செய்பவர்களுக்குதான் கல்மண்டபம். விடிகாலையிலேயே செங்கல் சூளை வந்து செங்கல் அச்சு போடுவார். பின், வெயில் ஏறியதும் ஆற்றுக்கு வந்துவிடுவார். கல்மண்டபம்தான் அவர் இருப்பு. ஆற்றில் யாரும் மலம் கழுவவோ சிறுநீர் கழிக்கவோ விடமாட்டார். ஏழு ஊருக்கும் குடிநீர் ஆற்றில்தான். நீரேற்று எந்திரம் மூலம் உயர்மட்ட நீர் தேக்கத் தொட்டிகளுக்கு நீர் செல்கிறது. ஆற்றை காவல் காக்கும் ஊராபிக்கு கூலி இல்லை. கலைக்டர் மார்கள் வந்தால் பாராட்டு கிடைக்கும். மற்றபடி தன் தினசரி வரும்படி செங்கல் சூளையில்தான். ஒரு நாளைக்கு அனாயசமாக ஆயிரம் கல் அறுத்துவிடுவார். அதற்கு ஐந்நூறு ரூபாய் கூலிவுண்டு. உடன் சீனியம்மாவும் இருப்பாள். 

லிசாவை தன் தோளில் அமர்த்திக் கொண்டு நடந்தார். “பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்குனக்குதின் பஜன்கரே….”-என்ற பக்திப் பாடல் பெருமாள் கோவிலிருந்து கேட்டது. தாளலயத்துடன் தன் உடலை குலுக்கி நடந்தார் ஊராபி தாத்தா.

“தாத்தா, இந்த முற நீங்க என்கூட சென்னை வந்திரனும்”-துரைச்சாமி தாத்தாவின் கைபிடித்து சொன்னான். ஊராபி தாத்தா மவுனமாக இருந்தார். தட்டைக் கழுவி சோறு போட்டு மீன் குழம்பை ஊற்றினாள் தங்கமாரி. தாத்தாவும் பேரனும் , கொள்ளுப் பேத்தியும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். அது தங்கமாரியின் கைப்பக்குவம். 

“உங்களுக்கு எம்.ஜி.ஆர். சமாதி, கலைஞர் சமாதி, ஜெயலலிதா சமாதியெல்லாம் காட்டுறேன்…!”-துரை. தாத்தாவின் முகம் சற்று மலர்ந்திருந்தது.

“தாத்தா உங்களுக்கு ஆறும் குளமும்தானே தெரியும் . சமுத்திரம் தெரியுமா? கண்ணுக்கு எட்டுன தூரம்வர தண்ணீதான் தெரியும்!”-எல்லா இடங்களையும் காண்பிப்பதாக உறுதி அளித்தான் துரைச்சாமி. மறுப்பு சொல்லாமல் முக மலர்ச்சியுடன் உடன் கிளம்பினார் ஊராபி தாத்தா. விடுமுறை முடிந்து வண்டி சென்னைக்கு புறப்பட்டது.

தாத்தா வயதில் உள்ளவர்கள் எல்லோருக்கும் ஊரில் பட்டப் பெயர் உண்டு. நிஜப் பெயர்கள் யாருக்கும் தெரியாது. ‘பீவிட்ட சின்னன்’, ‘ரம்பக்காரர்’, ‘குறிப்பு தள்ள முத்து’, இதுவெல்லாம் தாத்தாவின் சக தோழர்கள். மலம் கழித்துவிட்டு கல்லை வைத்து துடைப்பது மட்டும்தான் பீவிட்ட சின்னன். கால்கழுவ மாட்டார். ஊரில் டிரைவர் சின்னன் இருப்பதால் பட்டப் பெயர் சொன்னால்தான் இன்னார் என்று  விளங்கும். தேனியில் மரக்கடையில் எந்திரம் வரும்முன் மரத்துண்டுகளை பெரிய ரம்பம் வைத்துதான் அறுப்பார்கள். அதனால் ரம்பக்காரர் என்ற பெயர் அவருக்கு வந்தது. எதையும் ஒரே கல்லில் வீழ்த்திவிடும் திறமை வாய்த்தவர் குறிப்புதள்ள முத்து. ஊராபியும் பட்டப் பெயர்தான்.

ஊராபி தாத்தா பட்டணம் வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. வந்த நாட்களில் முகம் மலர்ச்சியாக இருந்தது. சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களெல்லாம் குடும்பத்துடன் பார்த்தார். சொல்லிவிட நினைத்து விக்கித்து முடியாமல் தினரும் ஒரு சோகம் தாத்தாவின் முகத்தில் இருந்தது தெரிந்தது. நாட்கள் போகப் போக முகம் சோபை இழந்து இருந்தது.

துரைச்சாமியின் வீடு பட்டணத்தில் அடுக்கக குடியிருப்பில் உள்ளது. வீட்டிற்குள்ளேயே கழிவறை இருக்கிறது. அதுவும் வெஸ்டர்ன் இருக்கை. அருகருகே படுக்கையறையும் சமயலறையும் இருப்பதால் பேச்சு சத்தம் சன்னமாக கேட்கும். மந்தையில் காற்று வெளியில் மலம் கழித்து பழக்கப்பட்டவர். தும்பைப் பூ நிற சிராமிக் டைல்ஸ் என்றாலும் மனசு ஒத்துழைத்தால்தான் மலம் வரும். கூச்ச சுபாவம் எனும் மனஞ்சார் நிலைகள் மலச்சிக்கலை செய்துவிடுகிறது. பட்டணத்தில் ஒதுக்கலிடங்கள் இல்லை. பட்டணம் வந்தது முதல் வெளிக்கிருக்கவில்லை என்பதை பேரனிடம் சொன்னார். பின்பு ஊராபி தாத்தாவை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று எனிமா தந்து குடலை சுத்தம் செய்தார்கள். மருத்துவர், துரைச்சாமியிடம் தாத்தாவை ஊரிலே கொண்டு விட்டுவிடும்படி அறிவுரை கூறினார். 

ஒருவழியாக தாத்தாவை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து  பஸ்ஸில் ஊருக்கு அனுப்பி வைத்தான் பேரன். எப்போதும் போல் செங்கல் சூளையில் கல்லு அச்சு போடுவதும், கல்மண்டபத்தில் அமர்ந்து ஆற்றுக்கு காவல் இருப்பதும் ஊராபி தாத்தாவின் தினசரி வாழ்க்கை தொடர்ந்தது.

இரவுணவை முடித்துவிட்டு துரைச்சாமி படுத்துறங்கினான். ஒரு கனவு வந்து அவனை உலுக்கியது. வனத்தில் தனியாக சிக்கிக் கொண்டவனை கானகப்  புலி எதிர்த்து நிற்கிறது. அதன் கண்களில் பசி வெறி, நாவால் தன் உதடுகளை நக்கி உணவெடுக்கும் தீவிரத்தில் அவன் மீது பாய தயாரானது. சற்று தொலைவிலிருந்து அம்பு வேகமாக வந்து புலியை கொண்றது. வேட்டைக்காரன் ரூபத்தில் தாத்தா தெரிந்தார். சட்டென விழித்துக் கொண்டான். இரவு மின்தடை ஏற்பட்டதால் உடம்பெல்லாம் வேர்த்திருந்தது. அலைபேசியில் விளக்கை ஏற்றினான். அதில் ஒரு குறுஞ் செய்தி இருந்தது.’ ஊராபி தாத்தா மரணம்’- பதற்றத்துடன் எழுந்து தங்கமாரியை எழுப்பி விசயத்தை சொன்னான். தங்கமாரி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்துவிட்டாள். அக்கம் பக்கத்தினர் வந்து எட்டிப் பார்த்தனர். துரைச்சாமி தாத்தாவின் புகைப்படங்களை தேடி எடுத்து அதில் ஒன்றை தேர்வு செய்து தனது கட்செவி புலனம் நண்பர்கள் குழாமில் அஞ்சலி பதிவிட்டான். அதில் தாத்தாவின் நிஜப் பெயர் ‘மாசான தேவர்’-என்று குறிப்பிட்டான். உடனே தனது காரிலே ஊருக்கு கிளம்பினான்.

“மாப்ளே, நீ போறதுக்குள்ள ஊருக்கு நான் போயிடுவேன்டா என்ன செய்யனும் சொல்லுடா”- கோயம்புத்தூரிலிருந்து கல்லூரி நண்பன் கேட்டான். 

“டேய், தாத்தாவின் மரண காரியங்கள் அத்தனையும் ஊர்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்டா”-என்றான் துரை.

“இல்லடா மாப்ளே, பணம் எதுவும் யாருக்கும் தரணும்னா நான் போயி தர்றேண்டா”-நண்பன்.

“மாப்ளே! அதுவும் வேண்டாம்டா. எங்க ஊரு வழக்கப்படி சாவு வரி குடும்பத்துக்கு இருபத்தஞ்சு ரூபா போடுவாங்க. ஒரு நோட்ட போட்டு துட்டி கேக்க வர்ரவங்க கேட்டுட்டு மொய் எழுதிப் போவாக. எல்லா செலவும் சாவு மொய்யிலதான் நடக்கும். நமக்கு ஒரு வேலையும் கிடையாது. எதுவும் செய்ய விடமாட்டாக. ஒரு சேர் போட்டு பிணம் முன் உட்கார்ந்து வர்ரவுகள கையெடுத்து கும்பிட்டா போதும். வரவு செலவு போக மீதம் இவ்வளவு இருக்குனு நோட்டுல எழுதி மீதி பணத்த கையில குடுத்திருவாக. அவ்வளவுதாண்டா”-துரைச்சாமி காரை செலுத்திக் கொண்டே சொன்னான்.

சாவு வீட்டில் சங்கும், சேகண்டியும் ஒலித்துக் கொண்டிருந்தது. முழுத்த எளவட்டங்கள் ஆளுக்கொரு வேலையில் இருந்தார்கள். தாத்தாவுக்கு பாத்தியப்பட்டவுக அருகில் இருந்தார்கள். தாத்தாவின் கற்றாழை நார்க் கட்டிலில் அவரை கிடத்தி இருந்தார்கள். துட்டி கேட்டவர்கள் மொய் எழுதிவிட்டு பொடக்காணியில் உள்ள சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை மொண்டு காலில் ஊற்றிவிட்டு போனார்கள். அதிகாலையிலே நண்பனின் கார் ஊருக்குள் வந்துவிட்டது. டீக்கடையில், ” மாசான தேவர் வீடு எங்கிட்டு இருக்கு”-என கேட்டான். இன்னும் இரண்டு பேர்களிடம் மாசான தேவர் பற்றி விசாரித்தான். ஒருவரும் சரியான அடையாளம் சொல்லவில்லை.

“டேய் மாப்ளே, தலைமுறையா இருந்த ஊருன்னு சொல்றே, தாத்தா பேர் சொன்னா தெரியலைனு சொல்றாங்கடா”-என்றான்.

“டேய் மாப்ளே, ‘ஊராபி’ தாத்தானு சொல்றா”-என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான் துரை. சிறிது நேரம் கழித்து நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது.

“ம்…சொல்லு. ஊராபினு சொன்னாத்தேன் தெரியும். பட்டப் பேரு. அதுவா..! சொல்றேன், எங்க தாத்தா சின்னப் பையனா இருந்தப் போ அவங்க அக்கா கூட வெளிக்கிருக்க மந்தைக்கு போனாகளாம். அப்போ நொண்டி நொண்டி நடந்தத பாத்துட்டு அவுக அக்கா என்னடானு கேட்டாகளாம். பீய மிதிச்சிட்டேன் அக்கானு சொன்னாராம். ஊராம்பீயவா மிதிச்சேனு அவுக அக்கா கேட்க, ஊருக்குள் எல்லோரும் அதுபோலவே கேட்டாகளாம். அதுலேயிருந்து ஊராம்பீ மிதிச்சவன்னு கூப்பிட்டு மருவி ஊராபியா ஆயிடுச்சுடா”-சோகத்திலும் காரை செலுத்திக் கொண்டே சிரித்தான் துரைச்சாமி.

கேத காரியங்கள் எல்லாம் முடிந்து பட்டணம் வந்து சேர்ந்தான் துரைச்சாமி. இனி முதலாம் ஆண்டு காரியங்கள் உள்ளது. ஏறக்குறைய முதலாம் ஆண்டும் நெருங்கிவிட்ட நிலையில் ஊராபி தாத்தாவின் கல்லறையை ஒவ்வொருவராக சென்று பார்த்து வந்தவர்கள் எல்லாம் அதிசயத்து போனார்கள். தாத்தாவின் கல்லறையில் போட்ட பூமாலைகள் எதுவும் வாடவில்லை. இந்தச் செய்தி தீயாக பரவியது. ஏழு ஊர் சனங்களும் அந்த அதிசயத்தை வந்து பார்த்தவண்ணம் இருந்தார்கள். நினைவு நாள் நெருங்கிவிட்ட நிலையில் துரைச்சாமியும் தங்கமாரியும் கல்லறைக்கு வெள்ளை அடிக்க வந்தார்கள். அங்கு கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் சாமி வந்து ஆடினார். பெண்கள் எல்லோரும் குலவைச் சத்தம் போட்டார்கள். தாத்தாவே அவர் மேல் இறங்கி தனக்கு கோவில் கட்ட வேண்டியும் ஏழு ஊர்சனங்களின் நீர்நிலைகளை காப்பேன் எனவும் வாக்கு சொல்லிப் போனார். தாத்தாவின் தெய்வ சக்தியை உணர்ந்த ஏழு ஊர் சனங்களும் வரி வசூல் செய்து தாத்தாவின் விருப்பப்படியே கல்மண்டபம் அருகில் மேடை அமைத்து சுதை மண் உருவம் செய்து முதல் கொடை கொடுத்தார்கள். ஊராபி தாத்தா ஊராபிச் சாமியானார்.

இல்லறத்திலிருந்து விலகி பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் கல்மண்டபத்தில் ஊராபி தாத்தா அமர்ந்திருப்பது தெரியும். 

“தம்பி, ஆத்துல இறங்காதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல தண்ணி அதிகமா போகும்.”-திரும்பிப் பார்த்தான். ஊராபி தாத்தாதான் சொன்னார். படித்துறையிலிருந்து தண்ணீரை பார்த்தான். படிக்கும் மேல் தண்ணீர் ஏறி இருந்தது. அகமலைக்குள் மழை விழுகிறது. “பிழைச்சேன் சாமி”-என்று சொல்லி திரும்பிப் பார்த்தான்.  தாத்தா அங்கு இல்லை!

– ‘சிறுகதை’காலாண்டிதழில் (நவம்பர்2024-ஜனவரி2025) பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *