ஊஞ்சல்




விஜி கண்களைத் திறந்ததும் இவனிடம் கேட்டான்.

என்ன ஆச்சு மது?
தலையைத் தொட்டு பார்த்தான்.
என்ன தலைல இவ்ளோ பெரியக் கட்டு?
அது ஒண்ணுமில்லே நாம வண்டில வர்றரப்ப ஒரு மாடு முட்டிடுச்சு.
எருமை மாடுதானே? ஒரு குட்டி யானை சைஸ்ல இருந்துச்சே?
சிரித்துக் கொண்டே சொன்ன விஜியின் முகம் மாறியது.
கண்களில் சிறிது குழப்பம்.
கண்களை இறுக மூடினான்.
விரல்களால் தலையைத் தடவிக் கொண்டான்.
வலியில் முகம் கோணியது.
என்ன விஜி பண்ணுது?
தலையை இறுக பற்றிக் கொண்டான்.
விநோதமாக தலையை ஆட்டினான்.
என்னடா?
விழிகள் விரிய சொன்னான்.
நம்பர் 8, ராமர் கோயில் சந்து.
என்னடா?
தடக்கென எழுந்து உட்கார்ந்தான்.
உடனே போகணும்.
எதுக்கு?
உடனே.. உடனே..
பதறினான்.
இரு.. இரு.. டாக்டர் கிட்ட கேட்டுட்டு போலாம்.
கேளு.. உடனே போவணும்.
டாக்டர் தயக்கத்துடன் சொன்னார்.
உங்க ரிஸ்க்ல அழச்சிட்டுப் போகலாம்.
விஜி மிக லேசாக புன்னகைத்தான்.
8, ராமர் கோயில் சந்து.
மெலிதான பெயிண்ட் வாசனை அடித்தது.
கதவைத் திறந்தவனுக்கு இவர்கள் வயது இருக்கும்.
எஸ்?
நாங்க மிஸஸ். அல்லியைப் பாக்க வந்துருக்கோம்.
அல்லி… என் அம்மாவையா?
அவன் தயக்கத்துடன் கேட்டான்.
விஜி வேகமாக தலையை ஆட்டினான்.
உள்ற வாங்க.
ஹால் பெரிதாக இருந்தது.
ஜஸ்ட் எ மினிட்.
அவன் உள்பக்கம் போனான்.
அந்தப் பெண் ஈரக் கையை புடவையில் துடைத்தவாறு வந்தார்.
விஜியின் கண்களில் பிரகாசம்.
ஓடிப் போய் அவர் கையைப் பிடித்தான்.
ஏய்..
அவர் இவன் கையை உதறினார்.
மது அதிர்ந்து போய் விஜியைப் பிடித்து இழுத்தான்.
அந்தப் பையன் சுதாரித்துக் கொண்டு அம்மாவுக்கு முன் வந்தான்.
என்ன சார் இது? அம்மா கிட்ட இப்படி தப்பா நடந்துக்கறார்.
அவன் குரல் நடுங்கியது.
விஜி அவன் அருகில் போனான்.
ப்ரஸான்னா.. ப்ரஸன்னாவா நீ?
அந்தப் பையன் விழித்தான்.
என்ன? என்ன?
விஜி அந்தப் பெண்னைப் பார்த்துக் கேட்டான்.
அல்லி.. என்ன மறந்துட்டியா?
திரும்ப அந்தப் பையன் கேட்டான்.
என்ன ஸார்? யார் இவர்?
மது விஜியின் கையை பிடித்து இழுத்தான்.
என்னடா விஜி?
இவன் கையை உதறி விட்டு வேகமாகக் கத்தினான்.
அல்லி.. நான் தான் ராமச்சந்திரன்.. உன்னோட ராம்.
அந்தப் பையன் கோபத்தில் கத்தினான்.
என்ன ரௌடித்தனம் பண்றிங்களா ரெண்டு பேரும்?,, வெளில போங்க.. இல்லேன்னா போலீஸக் கூப்பிடுவேன்.
ஸோடாவில் முகம் கழுவினான்.
என் அல்லி என்ன எப்டி மறந்தா மது?
என்னடா விஜி குழப்புறே?
ஆமாண்டா.. அல்லி எம்பொண்டாட்டிடா.. அவன் எம்புள்ள.. என்னை ஏன் தெரியாத மாதிரி நடிக்கறாங்க?
மது அதிர்ந்தான்.
என்னடா வெளாடறாயா? உம் பொண்டாட்டி புள்ளயா? கிறுக்குப் பிடிச்சுடுச்சா?
இல்லடா என் அம்மா மேல சத்தியம்… உம்மேல சத்தியம்.
கீழ விழுந்து அடிபட்டதுல ஒரு ஸ்க்ரூ கழண்டுடுச்சா?
என்ன எது வேணாலும் சொல்லிக்க.. என்ன அவங்ககிட்ட வுட்டுடு.
இப்டி கண்டபடி உளறினா யார் தான் நம்புவாங்க?
நான் உளறலை..
தலையை இறுகப் பிடித்துக் கொண்டான்.
ஒரு டீ சாப்பிடு.
டீ உறிஞ்சும் போதே திடும்மென கத்தினான்.
ஞாபகம் வந்திடுச்சு.. ஞாபகம் வந்திடுச்சு.
ராமச்சந்திரனின் ஸ்கூட்டர் மிக மெதுவாக ஊர்ந்தது.
பின்னாலிருந்து அல்லி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
ராம்.. ஒரு தாத்தா நம்ம வண்டியை நடந்தே ஓவர்டேக் பண்ணிட்டார்.
அவருக்கு என்ன அவசரமோ எனக்கு எப்படி தெரியும்?
சிரித்துக் கொண்டே முதுகில் குத்தினாள்.
இதுக்குத் தான் ப்ரஸன்னாவை அம்மாகிட்ட விட்டுட்டு கோவிலுக்குப் போகலாம்னு சொன்னீங்களா?
எதுக்கு?
அது சரி. கோவில் வாசல்ல என்ன நிக்க வச்சுட்டு எதுக்கு அவசரமா ஓடிட்டு வந்தீங்க் அ?
அது ஒரு சமாச்சாரம் வாங்கப் போனேன்.
ஒரு சமாச்சாரமா?
இல்ல ரெண்டு.
அய்யே… என்னது?
மல்லிப்பூவும்.. அல்வாவும்.
அட ராமா.. சினிமா பாத்து ரொம்பக் கெட்டு போய்ட்டிங்க ராம்.
ஹா..ஹா.. ப்ரஸன்னாவ சீக்கிரம் தூங்க வச்சிடு.. இன்னைக்கு தாம்.. தூம்.. பண்ணிடுவோம் லில்லி.
மிக அந்தரங்கமான தருணத்தில் மட்டும் லில்லி என்று கூப்பிடுவான்.
உன் கை எங்கே லில்லி.. வீட்லேயே விட்டுட்டு வந்துட்டியா? சீக்கிரமா என் இடுப்பை கட்டிக்கோ. கீழ விழுந்துடுவே.
முடியாது. அஞ்சு கிலோமீட்டர் வேகத்துல போற வண்டிலேர்ந்தா கீழ விழுந்துடுவேன்.
ராமசந்திரன் முகத்தைத் திருப்பி அவள் கைகளைத் தொட்டான்.
அந்த நொடியில் மிகச் சரியாக பக்கத்து சந்திலிருந்து அந்த பெரிய எருமை மாடு தரை அதிர ஓடிவந்தது.
ஸ்கூட்டர் கவிழ ராமச்சந்திரன் மிகச் சரியாக பின்னால் வந்த 128 டவுன் பஸ்ஸின் ராட்சஷ டயர்களுக்கிடையே சிக்கினான்.
திரும்பவும் அந்தப் பையன் தான் கதவைத் திறந்தான்.
இவனைப் பார்த்ததும் கத்தினான்.
இன்னுமாடா நீங்கப் போகலை?
ஸார்.. ஒரு நிமிஷம்.. என ஃப்ரெண்ட் தெரு முனை டீக்கடைல நிக்கிறான்.
ஒரு நிமிஷம் உங்க அம்மாவைக் கூப்பிடுங்களேன்.
அதுலாம் முடியாது.. என் கிட்ட சொல்லுங்க.
திரை அசைந்தது.
அவன் அம்மா வந்தார்.
என் மனசுல ஒரு திகிலா இருக்கு .. என்ன விஷயம்?
உங்க கணவர் பேரு ராமச்சந்திரன் தானே?
தலையசைத்தார்.
காலபைரவர் கோவிலுக்குப் போய்ட்டு வந்தப்ப தானே ஆக்ஸிடெண்ட் நடந்தது.
அவர் கண்களில் கண்ணீர்.
உங்க பையனை அவர் அம்மாட்ட விட்டுட்டுத் தானே கோவிலுக்கு போனீங்க?
ம்.
மல்லிப்பூ..அல்வா.
அவர் தடுமாறினார்.
மது உரத்தக் குரலில் சொன்னான்.
லில்லீ…
அவர் தலையில் அடித்துக் கொண்டே கதறினார்.
விஜி பதட்டமாய் இருந்தான்.
என்ன சொன்னா? என்ன சொன்னா?
பொறுடா? எனக்கே ஒரு மாதிரி கிறுகிறுன்னு வருது. இத நம்பறதா இல்லையான்னே தெரியலே.
டேய். மது.. அப்படி சொல்லாதேடா..
என்னதான் சொன்னா?
பொறுத்துப் பாப்போம் விஜி.
எனக்கு முடியல.. எனக்கு முடியல..
முகத்தில் வேகமாக அடித்துக் கொண்டான்.
தடக்கென அவன் முகம் மாறியது.
தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.
ஹோய்..
ஒரு யானையின் பிளிறல் போல் கத்தினான்.
ஒற்றை நொடி டீக்கடை அமைதியானது.
நட்சத்திரா கல்யாண மண்டபம்… நட்சத்திரா கல்யாண மண்டபம்.
விஜி கத்தினான்.
வண்டியை எடு.. வண்டியை எடு.
எங்கே?
நட்சத்திரா கல்யாண மண்டபம்.
சொல்லி எழுந்து வெளியே ஓடினான்.
மதுவும் பின்னால் ஓடினான்.
நட்சத்திரா கல்யாண மண்டபம்.
அவர்கள் உள்ளே நுழையும் போது கெட்டி மேளம் சப்தம் கேட்டது.
வண்டியை நிறுத்துவதற்குள் விஜி இறங்கி ஓடினான்.
மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அம்மா.. அம்மா
கதறிக் கொண்டே விஜி மணமேடையை நோக்கி ஓடினான்.
மண மேடையில் சின்ன குழப்பம்.
விஜி ஆக்ரோஷமாக அவன் கையைப் பிடித்தவனை உதறினான்.
தாவி மணப்பெண் காலடியில் விழுந்தான்.
அவள் கால்களை இறுகப் பிடித்துக் கொண்டான்.
அம்மா.. அம்மா. எங்கேம்மா போனே?
எட்டு வயது குழந்தையின் குரலில் கதறினான்.
ஆட்டோ வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
டிரைவர் எதாவது ஒரு ஹாஸ்பிட்டலுக்குப் போங்க.
விஜி திமிறிக் கொண்டிருந்தான்.
விஜி.. விஜி. கொஞ்சம்.. அமைதியா இரு..
வுடுடா.. வுடுடா..
விஜி திமிறினான்.
ஆட்டோ தடுமாறியது.
மது தான் முதலில் அதைப் பார்த்தான்.
எருமை மாடு. ஒரு குட்டி யானை சைஸில்.
டிரைவர்.. டிரைவர்..ஜாக்கிரதை
அதற்குள் டிவைடரில் மோதி ஆட்டோ இரு முறை புரண்டது.
தெரு ஓரத்தில் மது விழுந்தான்.
விஜி மிகச் சரியாக தூக்கி எறியப்பட்டு தண்ணீர் லாரியின் ராட்சஷ டயரின் அடியில் தலை கொடுத்தான்.
இது கொஞ்சம் சயின்ஸ் பிக்சன் மாதிரியும் இருக்கு நல்ல திருப்பங்கள் சுவாரஸ்யமாக கதை சொல்வதில் ஒவ்வாரு கதைக்கும் நல்ல தேர்ச்சி தெரிகிறது நல்லது சார் நன்றி