உலைவகற்றிய ஊசி




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

போலந்து நாட்டுப் பெருமகன் ஒருவன் ரஷ் யப்பேரரசனால் பல ஆண்டுகள் சிறையில் வைக்கப் பட்டான். சிறையில் இராப்பகல், வாரமென்றும் திங்களென்றும் வரையறையின்றி இருந்ததால் அவனுக்கு நேரம் போவது அரிதாயிருந்தது. அத னிடையே தன் பழங் கவலைகளையே எண்ணி எண்ணி, அவன் மனம் மிகவும் உளைந்து பித்துப் பிடித்துவிடும் போலிருந்தது. அச்சமயம் அவ னுக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றிற்று. அவன் சட்டையில் அவன் மனைவி துணியினால் புனைந்த மலரொன்று குண்டூசிகளால் குத்தி வைக்கப்பட்டி ருந்தது. பெருமகன் அதனைக் கழற்றி அவ்வூசிகளை இருளடர்ந்த அவ்வறையில் வீசி எறிந்தான் பின் அவற்றைத் தடவித் தடவிப் பார்த்து எடுக்க லானான். வெளிச்சத்திலேயே கண்ணுக்குத் தெரி வது அரிதான அவ்வூசிகளை இருட்டில் தேடி எடுக்க நெடு நேரம்-சில சமயம் ஒன்றிரண்டு நாட்கள்கூட ஆயின. அவ்வேலையால் சோர்ந்த போது அயர்ந்து உறங்கி மீண்டும் அவன் அதே வேலையில் முனைவான்.
இவ்வகையில் ஆண்டுகள் பல சென்றன. ஒரு போரில் போலந்து மக்கள் வெற்றியடையவே அவன் விடுதலை பெற்று மனைவி மக்களுடன் சென்று சேர்ந்தான். அவன் தன் சட்டையில் குத்தி வைத்திருந்த நாலு குண்டூசிகளும் தனக்கு அளித்த பயனைக் கூறக்கேட்ட அவன் மனைவி அவற்றைத் தன் கழுத்தில் அணிந்த பதக்கம் ஒன் றில் பன்மணிகளுக்கு நடுவில் பதிப்பித்துஅணிந்து வந்தாள். கணவன் அமைதி காத்த அவ்வூசிகள் அவளுக்கு, அவன் உயிர் காக்கப்பட்ட அரு மையை நன்கு நினைவூட்டும் நன்மணிகளா யமைந்தன.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.