உலகம் உருண்டை
இந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றான சென்னை, அலுவலக அவசரத்தில்
சுறுசுறுப்பாய் இயங்கும் மக்களை கவனித்துக் கொண்டிருந்தது. மணி ஒன்பதாக இன்னும்
பத்து நிமிடங்களே இருந்ததால் ரகு அவசர அவசரமாய் இட்லிகளை வாயில் திணித்தான்.
அவனது மனைவி மல்லிகா, ‘காலைல சீக்கிரமா எழுந்தா இந்தப் பிரச்சினை
கிடையாதுல்லே..?’ என்று செல்லமாய் கோபிக்காமல், நிஜமாகவே கோபப்பட்டாள்.
‘நாளைலேந்து எழுந்துக்குறேன்…நீ நைட் 9:30 மணி சீரியலைப் பார்க்கறதை நிறுத்திட்டு,
பெட்டுக்கு வந்துடு!’ என்று நக்கலடித்தான். கையை அலம்பிவிட்டு, எல்லாம் இருக்கிறதா
என்று ஒரு தடவை ‘செக்’ செய்து விட்டு… ‘பைக்’கை ஸ்டார்ட் செய்தான். மல்லிகா
வாசல் வரை வந்து வழியனுப்பினாள். பைக்கில் செல்வது ஒரு சுகம் தான் என்று
நினைத்தபடி, ஆக்சிலரேட்டரை முறுக்கினான். ‘இன்னும் ஒரு பதினைந்து நிமிடம்…இந்த
சாலையைக் கடந்து விட்டால் போதும்!’ என்று மனதுள் பேசிக்கொண்டே ஓட்டிக்
கொண்டிருந்தான். அப்போது………
எதிரே வந்த ‘ட்ரக்’ படுவேகமாய் வந்து ஜான் மேல் மோதியது. ‘பைக்’கில் உல்லாசமாய்
வந்து கொண்டிருந்த அவனுக்கு, இப்படி நியூஜெர்சி பிரதான சாலையில் தூக்கி
எறியப்படுவோம் என்று தெரியாது. தெரிந்திருந்தால்…காரிலேயே கிளம்பி வந்திருப்பான்.
இரவு நேரமாதலால், அந்த சாலையில் அவ்வளவாய் ஆள்நடமாட்டமில்லை. மயங்கும்
நிலையிலும் ‘ட்ரக்’ நிற்காமல் சென்று கொண்டே இருந்ததை மட்டும் ஜானால்
கவனிக்க முடிந்தது. ‘ஓ ஜீஸஸ்’ என்று அவனது உதடு முணுமுணுத்தது.
சாலையோரத்தில் யாரோ ஒருவர் முணுமுணுத்தபடி கிடப்பதைப் பார்த்தவுடன்,
‘சினியாங்கோ’வுக்கு வியர்த்து விட்டது. ‘சீனாவில் மக்கள் இரக்கமற்றவர்களாகிக்
கொண்டே வருகிறார்களே’ என்று மனசுக்குள் வருத்தப்பட்டு, ‘மோதியவனின்
மனசாட்சி உறுத்தாதா?’ என்று மனசுக்குள் பேசியபடி, மெதுவாய் மூச்சிருக்கிறதா
என்று பார்த்தார். ‘அப்பாடா..உயிரோடு தான் இருக்கிறார்!’ என்று நிம்மதிப்
பெருமூச்சு விட்டபடி, உடனே தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தார்.
‘ஹலோ…இங்கே ஒருத்தர் மோட்டார் பைக்குல அடிபட்டு கிடக்கறாரு, உடனே
வந்தீங்கன்னா அவரை காப்பாத்திடலாம்!’ என்று டேவிட் பதற்றமாய் சொன்னார்.
மறுமுனையில் இருந்த ஆஸ்பிட்டல் பணியாளர், ‘எந்த இடம்னு சொன்னீங்கன்னா
ஆம்புலன்ஸை உடனடியா அனுப்பறோம்!’ என்று கூறினார். ’11th ஸ்ட்ரீட்…நீயுஹேவன்.
ஜெர்மன் கிராசரீஸ் பக்கத்துல இருக்குற தெரு!’ என்று பதிலளித்தார். ‘உடனே..
நாங்க அங்கே வர்றோம்!’ என்று கூறி முடித்தவுடன், தொலை பேசி தொடர்பு
அறுந்தது. இப்போது தான் ‘டேவிட்’க்கு மூச்சே வந்தது.
ஆம்புலன்ஸ் வந்தவுடன், இஸ்மாயில் பரபரப்பானார். ‘இதோ இங்கே தான்.. வாங்க.
நான் என்னோட சட்டையை கிழிச்சு, ரத்தம் வர்ற இடத்துல கட்டி இருக்கேன்!’ என்று
சொன்னபடி, குவைத்தின் வீதிகளில் கேட்பாரற்று கிடந்த அவனை காண்பித்தார். அந்த
ஆஸ்பிடல் பணியாளர், ‘உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதால தான், நாடு நல்லா
இருக்கு. அல்லா உங்களை நல்லபடியா வைச்சிருப்பார்!’ என்று பாராட்டி விட்டு,
ஆம்புலன்சின் சிகப்பு விளக்குகளை சுழல விட்டார்.
ஆஸ்பிடலில் எல்லோரும் பரபரப்பாய் இருந்தார்கள். நர்சுகள் அங்குமிங்கும் ஓடியபடி,
ஏதேதோ புரியாத விஷயங்களை டென்ஷனாய் கேட்டுக் கொண்டார்கள். டாக்டர்கள்
பச்சை உடைக்கு மாறியபடி, வேகம் வேகமாக ICU என்று எழுதப்பட்ட அறைக்குள்
செல்வது மட்டும் தெரிந்தது. நிமிடங்கள், நாழிகையாகி ரொம்ப நேரமாகிவிட்டது.
டாக்டர் வெளியே வந்து, “இங்கே மல்லிகாங்கறது யாரு?” என்றவுடன், கலங்கிய
கண்களுடன் இருந்த மல்லிகா சட்டென எழுந்து “நான் தான் டாக்டர்!” என்றாள்.
“உங்க கணவர் பிழைச்சுக்கிட்டார்..கவலைப் பட வேண்டாம்!” என்றார். “ரொம்ப
தாங்க்ஸ் டாக்டர்!” என்றாள் மல்லிகா. “உலகத்தோட ஒவ்வொரு மூலையிலயும்
விபத்துகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. ஆனா, அடிபட்டு கிடக்குறவங்களை
காப்பாத்தணும்னு நினைக்குறவங்க இருக்கறதால தான், எங்க வேலை சுலபமாகுது.
அதுனால நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்லை…உங்க கணவர் அடிபட்டுக்
கிடந்தப்போ, தன்னோட சட்டையை கிழிச்சு கட்டுப் போட்டு, எங்களுக்கும் தகவல்
தெரிவிச்ச அந்த முகம் தெரியாத பெரியவருக்கு தான்!” என்று சாந்தமாய் சொன்னார்.
– அருண்