உலகப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 23, 2025
பார்வையிட்டோர்: 204 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரம்மாண்டமான அந்த ஊர்வலம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. கொடிகளை ஏந்தியபடியே வீராவேசமான கோஷங்கள் முழக்கிச் செல்லும் தொண்டர்கள் முன்னணியில். கைமுஷ்டிகளை மடக்கிக் குரலெழுப்பும் அவர்களைக் காண உலகப்பனுக்கும் அவர்களோடு சேர்ந்து குரலெழுப்பத் தோன்றுகிறது! ஆனால்… இனந்தெரியாத ஒரு உணர்ச்சி அவ்வாறு செய்யவிடாது அவனைத் தடுக்கிறது. தெரு ஒரத்தில், கடையொன்றின் படிக்கட்டுகளில் நின்றபடியே ஊர்வலத்தைக் கண்கொட்டாது கவனிக்கிறான். 

முன்னணியில் செல்லுந் தொண்டர்கள் அவனைக் கடந்து செல்கின்றனர். அவர்களுக்குப் பின்னாக அந்த வீரப்படையின் தானைத் தளபதிகளாம், தொழிலாளர் தலைவர்கள், கவசமனைய தொழிலாளர் படை சூழவரக் கம்பீரமாக நடந்து வருகின்றனர். அவர்கள் முகங்களில் வீரத்தின் விகசிப்பு, சினத்தாலா, அன்றிச் சிந்தனையின் தீவிரத்தாலா அம்முகங்கள் சிவந்து தோன்றுகின்றன. கொழுத்த செழுமையான, சதைப்பிடிப்பு நிறைந்த, செக்கச் சிவந்த அம்முகத்தினரைக் காணும்போது உலகப்பன் உளத்திலும் ஒரு கவர்ச்சி-ஈர்ப்பு உண்டாகிறது! 

ஊர்வலம் ஒரு வளைவில் மெல்லத் திரும்புகிறது. தொழிலாளர்கள் ‘ஆக்ரோஷமாக’க் குரலெழுப்புகிறார்கள். 

உழைப்பவனுக்கே உரிமை. 
பாட்டாளியே பாராள்பவன். 
முதலாளித்துவம் ஒழிக. 
ஏகாதிபத்தியம் ஒழிக. 
புரட்சி ஓங்குக! 

கடலலைகள் குமுறுவனபோல் தொழிலாளர் குரல் மண்ணையும் விண்ணையும் அதிரவைக்கிறது. 

உலகப்பானல் மேலும் பொறுக்கவோ, தாமதிக்கவோ முடியவில்லை. 

‘உரிமைக்காக உயிரும் கொடுப்பேன்’ உரத்த குரலெழுப்பியபடியே உலகப்பனும் அத்தொழிலாளர் பெரும்படையில் சேர்ந்து கொண்டான். 

செந்நிறக் கொடியொன்று சகதொண்டன் ஒருவனால் அவனிடம் கொடுக்கப்படுகிறது. கொடியை மேலே உயர்த்திக் குரலெழுப்பும் உலகப்பனின் பார்வையில் ‘புரட்சி’ பரிமளிக்கிறது. 

செந்நிறக் கொடிகள், சிவந்த முகங்கள், புரட்சிக் கோஷங்கள், ஊர்வலம் முன்னேறுகிறது. 

தலைவர்கள் பேசுகிறார்கள். பேச்சா அது? இரத்தத்தில் சூடேற்றிக் கனல் கொளுத்தும் வீர வார்த்தைகள். 

போராட்டம், புரட்சி இப்படித்தான் அமையவேண்டும். உலகப்பன் பெருமிதத்துடன் தன் மனதுள் பேசிக்கொள்கிறான். அஃது கனவல்ல, அவன் வாழ்வின் மறுமலர்ச்சி, நனவில் நடந்ததென்பதை எண்ணும்போது மெய்சிலிர்க்கிறது அவனுக்கு! 

உலகப்பன் சர்வதேசியவாதி இப்பொழுது! இனம், மதம், மொழி, பணம் எதுவும் அவனை, அவனது வர்க்க உணர்விலிருந்து பிரித்திடமுடியாது. எந்த விடயத்தையும் ‘ஆர அமர’ யோசித்தே அவன் முடிவுக்கு வருவான்; அதுவும் அவனது முடிவு அகிலந்தழுவியது. குறுகிய வட்டத்துள் அடங்குவதல்ல. அவன்மட்டுமல்ல அவனைப்போன்ற பல்லாயிரவர்கள் அப்படித்தான் முடிவு செய்கிறார்கள். செய்யப்படும் முடிவுகளுக்காக எத்தகைய கொடூரமான துன்பமாயினும் எதிர்த்துப் போரிட, தியாகஞ்செய்யத் தயங்கமாட்டார்கள். உலகப்பனுக்கு இந்த இலட்சியத்தில் பிரேமை மிகுத்துவிட்டது. 

‘வாழ்வே அந்த இலட்சியந்தான், அந்த இலட்சியமே வாழ்வுதான்’ என்று நம்புகிறான். ஏனைய தோழர்களுக்கும் போதிக்கிறான். தொழிற் சங்கங்கள், தொழிலாளர் போராட்டங்கள் யாவிலும் உலகப்பனுக்குப் பங்குண்டு. தொழிலாளர் இயக்கங்களில் நீக்கமற நிறைந்து நிற்கிறான். 

அவர் – தொழிலாளர் தலைவர்களில் முக்கியமானவர். அவர் பெயரைக் குறிப்பிடுவதுகூட உலகப்பனுக்குக் கௌரவக் குறைவாகத் தோன்றும். உலகப்பன் அவரது அந்தரங்கக் காரியதரிசி. தொழிலாளர் வர்க்கப் புரட்சித் தத்துவங்களையெல்லாம் அந்தத் தலைவர் கரைத்துக் குடித்தவர். மகாமேதை; தொழிலாளர்களின் இரட்சகர்! அவரது அந்தரங்கக் காரியதரிசி பதவி என்ன இலேசானதா? உலகப்பனுக்குப் பெருமைதான். சேவையில் முதிர்ந்த குட்டித் தலைவர்களுக்கு இல்லாத என்ன ‘யோக்யதையை’ உலகப்பனிடந் தலைவர் கண்டாரோ, அவனையே தமது காரியதரிசியாக்கிக்கொண்டார். ‘காரியதரிசி பதவி’ என்றால் அவர்களுக்குள் அது ‘பரமார்த்தமான’ பொருள் கொண்டது. தலைவருக்கு வேண்டியதனைத்தையும் தயாராக்கிக் கொடுப்பது முதல் கார்ச்சாரதியாக வேலை செய்வதுவரை அதற்குளடங்கும். தலைவருக்கு ஆயிரம் வேலைகள். காலை உணவு ஒரு நகரில், மதியபோசனம் இன்னொரு பட்டினத்தில், இராச்சாப்பாடு பிறிதொரு ஊரில். காரில், புகைவண்டியில், ஆகாயவிமானத்தில் தலைவர் பறந்துகொண்டிருப்பார். காரியதரிசியும் அவர் பின்னாக, நிழலாகச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாமா? 

அது கடமைமட்டுமல்ல, உயிர் நிகரான உரிமையும், உலகப்பன் தன்னை மறந்து இலட்சியத்தோடு ஒன்றிவிட்டான். அந்த வேளையில்- 

ஆலைத் தொழிலாளர்களின் அந்த உக்கிரமான போராட்டம் ஆரம்பித்தது. ஆலை கதவடைத்துவிட்டது. தொழிலாளர்களின் உரிமைகள் கோரி மீண்டும் ஆர்ப்பாட்ட ஊர்வலம், கூட்டம், செந்நிறக் கொடிகள், கனல் கக்கும் பேச்சுக்கள், கலவரங்கள். நகரமே அல்லோலகல்லோலப்பட்டது. ஒரு நாளா, இருநாளா, ஒரு மாதமாகப் போராட்டம் நீடித்தது. ஆலை நிர்வாகம் விட்டுக்கொடுப்பதாக இல்லை. தொழிலாளர் நிலையோ மிகப் பரிதாபமாகிக்கொண்டிருந்தது. உணவு, உடை, குடியிருப்புப் பிரச்சனைகளில் அவர்கள் படிப்படியாகப் பிச்சைக்காரராகிக் கொண்டு வருகின்றனர். தலைவரும் தீவரமாகப் போராடுகின்ற பாவனை, அவரது நித்தியக் கடமைகளில் எதுவும் குறையவில்லை. அங்குமிங்குமாக ஆலாய்ப் பறக்கிறார். உலகப்பன் அவரது உன்னத சேவையை எண்ணி வியக்கிறான். நெக்குருகிறான். 

இரவு பத்துமணிக்கு மேலே, தலைவரை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு காரில் விரைந்தான் உலகப்பன். அந்த இடத்துக்குத் தலைவர் அடிக்கடி சென்று வருவது சகசம். அது அந்நியநாட்டுத் தானிகர் ஒருவரின் அலுவலகம், தலைவர் எதற்காக அங்கு அடிக்கடி ‘விஜயஞ்’ செய்கிறார் என்பதுபற்றி உலகப்பனுக்குச் சமீப நாட்களாகச் சந்தேகம் வலுத்துக் கொண்டிருந்தது. ஏனெனில் தொழிலாளர்களின் இரட்சகரான அந்தத் தலைவர் விஜயஞ்செய்யுமிடமோ அரசியலில் இரும்புத்திரையினைக் கையாள்வதும், சர்வாதிகார ஆட்சிமுறையினை வலுப்படுத்துதலுமே உலகப்புரட்சிக்குச் சிறந்ததென உபதேசிக்கும் ஒரு தேசத்துப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வமான அலுவலகம். 

தேசபக்தி, தேசியவுணர்ச்சிபற்றித் தொண்டை வரளக்கத்தும் தலைவர், எதற்காக இந்த அலுவலகத்தில் தண்டனிடுகிறார் என்பது உலகப்பனின் நியாயபூர்வமான ஆய்வுக்குரிய பிரச்சினையானதில் தவறேயில்லை. அந்தப் பிரச்சனைக்கு முடிவுகாணமுன் தலைவர் வந்துவிட்டார். 

எண்ணரேகைகளின் விகாரமான பிரதிபலிப்பினை விளம்பும் முகபாவத்துடன் உலகப்பன் காரை ‘ஸ்டார்ட்’ செய்தபடியே எங்கே செல்ல வேண்டுமென்ற கேள்வி தோன்றத் தலைவரைப் பார்த்தான். 

செக்கச்சிவந்த அவர் முகத்தில் இரத்த ரேகைகள் புடைத்து நின்றன. உயர்தரக் குடிவகையினைத் தாராளமாகப் பானம் பண்ணிய நெடி; ஆனாலும் அவர் நிலை தளரவில்லை. கையினால் ஏதோ சைகை செய்தார். கார் புறப்பட்டுவிட்டது. 

‘உலகப்பன்……’ 

தலைவரின் குரல். கார் நின்றது. 

தலைவர் காரைவிட்டிறங்கினார். உலகப்பனின் தோளில் கையை வைத்தபடியே 

‘தோழர், பயப்படாமல் வா…!’ 

உலகப்பனுக்கு வியப்பால் பேசமுடியவில்லை. தலைவர் பின்னே நடக்கிறான். 

அந்தப் பெரிய மாளிகையின் முன் ‘வாரந்தா’வில் தலைவரை எதிர்பார்த்து நின்ற பிரமுகரைக் கண்டதும் உலகப்பனுக்குப் பேச நா எழவில்லை! 

அந்தப் பிரமுகர்-இந்த ஏழை பங்காளரை இரட்சகராகக் கருதும் ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் ஆலைச் சொந்தக்காரர்; முதலாளி! 

பகலில் அவரது ‘பயங்கர எதிரியாக’ விளங்கும் தலைவர் இரவில் அவரது அத்தியந்த நண்பனைப்போல… 

ஒரே மேசையில்… 

ஒரே குடிவகைகளை…தாராளமாகப் பங்கிட்டுக் கொள்கின்றனர். உலகப்பனுக்கும் பங்கு கிடைக்கிறது. தலைவரும் – ஆலை அதிபரும் பேசுகின்றனர். 

பேச்சின் முடிவில் கத்தை நோட்டுகள் கைமாறுகின்றன. காற்சட்டைச் சாக்குகள் கனக்க, பணநோட்டுகள் உள்ளிருந்து பல்லையிளிக்க, கால்கள் போதையினால் தள்ளாட தலைவர் ஆலையதிபருக்கு ‘பிரியாவிடை’ கூறிவந்ததை வருணிக்க வார்த்தைகள் கிடையா… …! 

உலகப்பன் ஊமையனாய், செவிடனாப் தலைவர் பின்னே செயலிழந்து நடக்கிறான். 

அவர்கள் பயணம் தொடர்கிறது. 

‘புரட்சி, தொழிலாளர் விடுதலை!’ 

உலகப்பன் உள்ளம்…? 

‘பைத்தியக்காரன் கனவுகள்’ 

தலைவரின் தத்துவார்த்த விளக்கம்! 

தேசிய உணர்வு, தேசபத்தி…? 

‘அவற்றின் சாரமே தேசத்துரோகம், நம்பிக்கைத் துரோகம்!’ 

பணநோட்டுகள் சில உலகப்பன் கைக்குளடக்கப்படுகின்றன. அவனால் தடுக்க முடியவில்லை. 

புதிய பொழுது புலர்கிறது. தலைவரின் ஆணையைச் சிரமேற்றாங்கிய தொழிலாளர்கள் வெற்றிகரமாகப் போராட்டத்தை முடித்து வேலைக்குத் திரும்புஞ் செய்தி பத்திரிகைகளில், கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகின. 

மந்தைகள் பழையபடி மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. 

தொழிலாளர் தலைவரும், உலகப்பனும் மீண்டும் தமது ‘போராட்டத்தில்’ தீவிரமாக ஈடுபடுகின்றனர். ஆறுமாதகால எல்லைக்குள் ஆலை நிர்வாகம் தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற இணங்கிவிட்டதாம். இல்லையேல் கோரிக்கைகளைப் போராட்டமொன்றினாலேயே அவர்கள் வென்றெடுப்பார்களாம்! 

வெற்றியின் அர்த்தம்…? 

– டிசம்பர் 1964.

– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).

நாவேந்தன் நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *