உயிர் காத்தான் மன்னன்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 142

நான் ஏடெடுத்துப் பாடும் சொல் ஏர் உழவன். ஆமாம். நான் ஒரு புலவன். நானும் என்னுடைய சுற்றத்தார் ஆன கட்டுடல் இளைஞர்களும் இணைந்து நடந்தே பயணம் புறப்பட்டோம். காட்டு வழியில் நடைபயணம் . வழி மாறி விட்டோமா? திசை மாறி விட்டோமா ? புரியவில்லை . புலனாகவில்லை. நடக்க நடக்க களைத்துப் போனோம். பசித்தால் புசிக்க இருக்கட்டும் என்று முன்திட்டத்தில் உண்டி எதையும் கட்டிக் கொண்டு வரவில்லை நாங்கள்.
‘என்ன அண்ணா பசி தாங்க முடியவில்லையே’ என்று முனகினார்கள் . இளம் வட்டம் அவர்களுக்கே பசி தாங்க முடியவில்லை என்றால் எனக்கு எப்படி இருக்கும்? எந்த ஊர் நோக்கிப் பயணப்பட்டோம் என்பதும் நினைவில் இல்லாதவாறு காதை அடைத்தது பெரும் பசி.
மிகப்பெரிய பலா மரத்தின் அடியில் அடைக்கலம் ஆனோம் அனைவரும்.
தோள் வலி மிகுந்தவனாய் , கம்பீரத் தோற்றம் கொண்ட உயரமான ஒருவன் அந்த வழியில் சென்றான். வில்லும் வாளும் தரித்திருந்தான். கால்களில் வீரக்கழல் . வேட்டையாடிய பொருளைக் கைவசம் வைத்திருந்தான். எங்களைக் கண்டான். அவன் தலையில் சின்னஞ்சிறு மகுடம் தரித்திருந்தான். . அடியேன் எழுந்து நின்று அவனை வணங்கினேன் . என் உடன் வந்தவர்களுக்கோ எழுந்து நிற்கவும் இயலவில்லை. அவன் சைகையால் அமரும்படி கூறினான்.
அவன் எங்களிடம் நீங்கள் எல்லாம் யார்? போவது எங்கே வருவது எங்கிருந்து என்றெல்லாம் கேள்விக் கணைகள் எதையும் தொடுக்கவில்லை. அவன் எங்கள் நிலையை உணர்ந்தான். எங்களுக்கு தேவை என்ன என்பதை அறிந்தான்.
அவன் சுள்ளிகளைப் பொறுக்கி தீக்கடை கோலால் அவற்றில் தீயை உண்டாக்கி , கைவசமிருந்த மான் கறியை நன்றாகப் பக்குவப்படுத்தி வெண்ணிற நெய் விழுது போல் ஆக்கி, ஆறச் செய்து அதனை எங்கள் அனைவருக்கும் பரிமாறினான். பசியாறினோம். உண்டி உள்ளே சென்றதால் கண்களில் தெளிவு. அருகில் இருந்த நீர்ச்சுனையில் இருந்த நீரை வேண்டிய மட்டும் பருகினோம்.
இப்பொழுதுதான் நான் பசியாற்றிய நல்லானை முழுவதுமாகப் பார்த்தேன். மலர்களின் நறுமணம் காற்றில் பரவி நிற்கும் அந்த மலையின் காடுகளின் அழகையும் பார்த்தேன்.
அவனை நன்றி உணர்ச்சியுடன் அடியேன் மீண்டும் பார்க்கும் போது, அந்த வீரன் பேசினான்: ” நீங்கள் படித்தவர் போல் காணப்படுகிறீர்கள். காடே நாடாக உள்ள எங்கள் பகுதிக்கு வந்த தங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். எங்களிடம் என்ன தான் இருக்கிறது? இருந்தாலும் இந்த மாலையையும் கடகத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்று அவன் கழுத்தில் அணிந்திருந்த விலையுயர்ந்த வெண்முத்துக்களால் கோர்க்கப்பட்ட முத்தாரத்தையும் வலது கரத்தில் அணிந்திருந்த பொற்கடகத்தையும் என் கைகளில் கொடுத்து நின்றான். அவன் பணிந்து கொடுத்த பரிசு ஆபரணத்தை அடியேன் களிப்புடன் பெற்றுக் கொண்டேன்.
நான் வினவினேன் – “மாவீரரே… தாங்கள் யார் என அறியலாமா?“
அவன் புன்னகையையே பதிலாகத் தந்து அங்கிருந்து விரைவாக நகரந்து வனத்துக்குள் சென்று மறைந்து விட்டான்.
சில நிமிடங்களில் அங்கு வந்த ஓர் அழகான சிறுவனிடம் நான் கேட்டேன் –
“அப்பா இதுகாறும் எங்களிடம் பேசிச் சென்ற அந்த மாவீரன் யார்?“
சிறுவன் பதிலிறுத்தான் –
“அவர்தான் ஐயா , எங்கள் மன்னன் இந்த தோட்டி மலைக்குத் தலைவன் நள்ளி என்பார்கள் அவரை”
வள்ளல்களில் ஒருவரான நள்ளியா அவர்?
என் விழிகளும் என் உடன் பயணித்தவர்களின் விழிகளும் வியப்பில் விரிந்தன.
(இந்தப் புனைகதையின் ஆதாரம்
1) புறநானூறு பாடல் – 150
திணை பாடாண் திணை. துறை பரிசில் துறை
பாடியவர் வன்பரணர் என்னும் புலவர் பாடப்பட்டவர் –
கண்டீரக் கோப் பெருநள்ளி
2) இந்தப் புறநானூற்றுப் பாடல் பற்றி தமிழ்த் தாத்தா டாக்டர்.உ.வே.சாமிநாதையர் அவர்கள், ‘அவன் யார்’ என்ற தலைப்பில் விரிவான, சுவையான சொற்சித்திரத்தை வடித்துள்ளார். டாக்டர்.உ.வே.சாமிநாதையர் நூலகம், சென்னை – 600 090 வெளியிட்டுள்ள ‘நல்லுரைக் கோவை’ நூலில் இடம் பெற்றுள்ளது. முன்னோடிகளின் அடிச்சுவட்டில் அடியேன் இந்த சொல் ஓவியத்தைப் படைக்க முயன்றேன்)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
