உன்னத பாத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 156 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு தகப்பன் என்ற முறையில் உங்கள் கவலையை நான் நன்கறிவேன். ஆனால் ஒரு மனநோய் நிபுணர் என்ற முறையில் ஒரு மன நோயாளி ஓர் உடைந்த பாத்திரம் தான். பழைய நிலைக்குக் கொண்டு வரமுடியாது” என்று மிகவும் அசிரத்தையோடு சொன்னார் மருத்துவர்கள் மனோகரன்.

”இறைவன் பரம வைத்தியன். அவர் உடைந்த பலகைகளை ஒன்று சேர்க்கும் உலகத்தச்சன் மட்டுமல்ல, உடைந்த உள்ளங்களை ஒன்றிணைக்கும் ஆத்மீகத் தச்சனும் ஆவார். அவரால்

அவரால் ஆகாதது. ஒன்றுமில்லை” என்று சொல்லிச் சவால் விட்டுச் சென்றார், இரண்யன்.

டாக்டர் மனோ ஏளனமாகச் சிரித்தார்.

பேராசிரியர் இரண்யனின் மகன் ஜெகன், “பிஞ்சிலே மிஞ்சிய ஞானி” என்று வீட்டிலே அவனைக் கேலியாகப் பேசினார்கள்.

ஜெகன் வீட்டாரே அவனுக்கு எதிரியாயினர். அவன் மனதில் படிந்திருந்த ஆயிரக்கணக்கான வேத வசனங்களைக் கொண்டு உலகியலை எடைபோட ஆரம்பித்தான். ஒரு நாள் முதலில் வந்த பிச்சைக்காரனுக்கு அப்பா காசு போட்டார். அடுத்து வந்த பிச்சைக்காரனிடம் சில்லரை இல்லை என்றார். உடனே ஜெகன் சினந்து எழுந்தான். சில்லரை வேண்டாம், பணமாகப் போடலாம் என்று சொல்லி அப்பா பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துப் போட்டான்.

”நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்” என்று அப்பாவுக்குப் புத்தி சொல்வான். அவனுடைய நண்பன் காதல் வலையில் வீழ்ந்த போது “நெருப்பை மடியில் கட்டிக் கொள்ளாதே, நரக தண்டனைக்கு இரையாகாதே’ என்று நேருக்கு நேர் எச்சரிப்பான். அவனது அம்மா, அப்பாவை எதிர்த்துப் பேசினால், “பெண்ணானவள் புருஷனுக்குக் கீழ்ப்படியக்கடவள்” என்று ஏகத்தாளமாகச் சொல்வான். அவன் தங்கை டி.வி. போட்டுப் பார்ப்பாள். ”விஷத்தை விழுங்காதே” என்று சொல்லி டி.வி.யை ஆப் செய்வான். அவன் இதயம் முழுவதும் வேதவாக்குகளால் நிறைந்திருந்தன.

இந்தக் கொடுமையான சமூக அமைப்பை ஜெகனால் ஜீரணிக்க முடியவில்லை. கிறிஸ்தவர்களை அவனால் மன்னிக்கவும் முடியவில்லை.

அகோரமாகச் சிரித்தான். தூக்கமில்லாமல் தகித்தான். மருத்துவ சிகிச்சைக்கு மறுத்தான். ‘கோயிலுக்குப் போவோம்’ என்று சொல்லி ஏமாற்றி அவனது பெற்றோர் மனநோய் மருத்தவரிடம் கொண்டு சென்றார்கள்.

மருத்துவ ஊழியர்கள் அவனை வலுக்கட்டாயமாகத் தூக்கிப் படுக்கையில் போட்டுக் கிடத்தினர். “பிணியாளிகளுக்குத்தான் வைத்தியம் வேண்டும், எனக்கு வேண்டாம்” என்று சொல்லித் திமிறி எழுந்தான் ஜெகன்.

சமூக நீதி பேசியதால் தலைமை மருத்துவர் அவனைப் பகை உணர்வோடு பார்த்தார். ‘நூறோடு நூற்று ஒன்று; அத்தோடு இது ஒன்று’ என்று அசிரத்தையோடு மயக்க ஊசி போட்டார். ஜெகன் சுருண்டு விழுந்தான். அடுத்து கரண்ட் ஷாக் கொடுத்தார். பின்பு கடினமான தூக்க ஊசிகளை ஏற்றினார்.

மறுநாள் ஜெகன், டாக்டரிடம் சென்று உள்ளம் கொதிப்பேறி அனல் கொண்டு பேசினான். “டாக்டர் ஸார், மன நோயாளிகளை மயக்க ஊசி போட்டு, தூக்க மாத்திரைகளைக் கொடுத்து நினைவிழக்கச் செய்து நிலைத் தடுமாற வைப்பது ஒரு வைத்தியமா? பாதிப் பைத்தியத்தை முழுப்பைத்திய மாக்குவதுதான் உங்கள் சிகிச்சையா? டாக்டர் ஸார்! நீங்கள் செய்வது பெருத்த அநியாயம். உள்ளேயே மெடிக்கல் வைத்துக் ஷாப் வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு மாத்திரைகள் வாங்க வைப்பதுதான் உங்கள் தொழிலா?

பிணியாளியோடு பிரார்த்தனை செய்து பேசணும். அன்பு காட்டணும், உள்ளத்தில் தைத்திருக்கும் முள்ளை எடுக்க முயற்சிக்கணும், இங்கு வருகிற எல்லோருமே மனநோயாளிகள் அல்ல. அப்படியே இருந்தாலும் மனதோடு பேசி குணமாக்க முடியும். அளவுக்கு மிஞ்சிய ஞான ஞாயிறுகளை, அறிவுச்சுடர்களை இந்த உலகம் பைத்தியமாகக் கருதுகிறது. அவர்களோடு நீங்கள் கவுன்சிலிங் செய்யக் கூடாதா? நோயாளிகளிடம் தெய்வ பயத்தோடும், மானுட நேயத்தோடும் அணுகி நோயின் கூறுகளை ஆராயக்கூடாதா?

டாக்டர் கர்வத்தின் உச்சிக் கொம்பில் நின்றார்.

பெற்றோர் அவனை வீட்டிற்குக் கூட்டிச் சென்று விட்டார்கள். ஜெகனின் மூளை கொதிப்பேறி இருந்தது. மறுநாள் ஜெகனின் தந்தை மருத்துவரிடம் வந்து பேசியபோதுதான் மனநோயாளியை உடைந்த பாத்திரத்துக்கு உவமித்துச் சொன்னார்.

ஜெகன் கொஞ்சம் கொஞ்சமாக வேத உண்மைகளோடு உலகியலையும் உணரலானான். அவன் சகோதரன் அவனுக்கு உறுதுணையாக உதவி செய்தான். ”ஜெகன், எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. அன்பு சகலத்தையும் தாங்கும்!” இப்படியாக சமயத்துக்கேற்ற ஆலோசனைகளைக் கூறி வந்தான்.

“மிதமிஞ்சிய ஞானியாயிராதே. உன் காலத்திற்கு முன் நீ ஏன் வேண்டும்?” என்ற வேத வசனம் ஜெகனை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.

அன்று இரவு குடும்ப வழிபாட்டில் வாசித்த ஒரு தியானப்பகுதி இப்படி இருந்தது.

“குயவன் வனைந்தான் ஒரு பாத்திரம்,
கெட்டுப் போயிற்று அந்தப் பாத்திரம்,
திரும்ப வனைந்தான் வேறு பாத்திரம்,
குயவன் செய்ததைக் கடவுள் செய்யாரோ?
உடைந்ததைக் கட்ட கடவுளால் கூடாதோ?”

இந்த வாசகம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் தொட்டது. அன்று இரவு ஒரு மணி நேரம் முழங்காலில் நின்று அழுது ஜெபித்தனர். ஜெகன் இரவு நன்கு சாப்பிட்டுத் தூங்கி விட்டான். பெற்றோரும் சகோதரனும் அன்று இரவு நடுநிசிவரை கடவுளோடு பேராடினர். ‘நீர் ஜெகனை ஆசீர்வதித்தாலொழிய உம்மை விடமாட்டோம்’ என்று கடவுளோடு வாதாடினர்.

நடுநிசிக்குப் பிறகு கடவுள் ஜெகனுக்குத் தரிசனமானார். ‘அந்தக் குயவன் செய்தது போல நான் உனக்குச் செய்ய மாட்டேனோ?’ என்று கேட்டுப் புன்முறுவலித்துச் சென்றார். மகிழ்ச்சியுடன் விழித்தெழுந்து மண்டியிட்டுக் கனவுக் காட்சியை ஜெகன் ஆவிக்குள் நிறைந்து பேசினான்.

பன்னிரெண்டாம் வகுப்பில் எனக்குக் கணக்குப்பாடம் எடுத்த ஆசிரியருக்கு என் மீது கனத்த கோபம். என் நேர்மையையும், பக்தியையும் பரிகசிப்பார். வகுப்பில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு “ட்யூஷன்” எடுப்பார். அந்த மாணவர்களிடம் மட்டுமே கொஞ்சிப் பேசுவார்; கேள்விகளை இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார். மற்ற மாணவர்களை மதிக்கவே மாட்டார். ஒரு நாள் அவரை ஒரு பிடி பிடித்தேன்.

“ஸார், இந்த வகுப்பில் படிக்கிற அறுபது மாணவர்களுக்கும் கணக்குச் சொல்லித் தருவதற்குத்தான் அரசு உங்களுக்குச் சம்பளம் தருகிறது. உண்மையிலேயே கணக்கு வராத மாணவர்களுக்கு தனிப் பயிற்சி கொடுங்கள்; பணம் வாங்குங்கள். மற்றப்படி வலுக்கட்டாயமாக ட்யூஷன்ல கிடைக்கிற பணம் லஞ்சம் போன்றது. ட்யூஷன் படிக்காத மாணவர்களுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள். ஒரு நாள் நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டி வரும்” என்றேன்.

என்னை கடித்துத் தின்று விடுவது போல் பார்த்தார். அன்றிலிருந்து என்னைப் பகைத்தார். நான் நன்றாகப் படித்தது அவருக்கு இன்னும் பொறாமையைக் கிளறியது.

ரிவிஷன் டெஸ்ட் வந்தது. அன்று கணக்குப் பரீட்சை. கணக்கு வாத்தியார்தான் மேற்பார்வை. என் பெஞ்சிக்குப் பக்கத்தில் கிடந்த ஒரு கிழிந்த தாளை எடுத்து, நான் ‘பிட்’ அடித்ததாக ஒரு கதையைக் கட்டி என்னை அவமானப்படுத்தினார். உண்மையில் ‘பிட்’ அடித்த பையனை நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. நான் விடைத்தாளை மடித்துக் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். வீட்டில் இதுவரை விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை.

அது என் உள்ளத்தில் பலத்த வடுவாகப் பதிந்தது. தலைமை ஆசிரியரிடமும் ரிப்போர்ட் செய்திருந்தார். மறுநாள் அவர் என்னை கூப்பிட்டபோது கணக்கு வாத்தியாரின் முறைகேடுகளை தலைமை ஆசிரியரிடம் முறையிடாமல் அவர்கொடுத்த பிரம்படியை வாங்கிக் கொண்டேன்.

என் மனத்தில் ஓர் ஆத்திரப் புயல் எழுந்தது. உணர்ச்சிவசப்பட்டேன். உலகையே திருத்தி விட ஒரு வெறி கொண்டேன். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது. பல நாட்கள் சரியாகச் சாப்பிடவில்லை. தூக்கம் வரவில்லை. அந்த வாத்தியாரை நினைக்கும் போதெல்லாம் ‘டென்ஷன்’ ஏற்பட்டது. நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை, பைபிள் வசனம், குறள் நெறி… இப்படி எல்லாவற்றையும் குழப்பிப் பேசி ஊரையே திரட்டினேன்.

என் பெற்றோர் அதிகமாக விரக்தியடைந்து மனநோய் மருத்துவரிடம் கூட்டிச் சென்றார்கள்: அவர் மூளையை உபயோகிக்காமல் முரட்டு வைத்தியம் செய்தார். ஓர் இளைஞனின் இதயத்தைக் கனிவோடு காணாமல், இரும்பால் அடித்தார். அவருக்கு உபதேசம் செய்தேன்.

அவர் ஒரு பிரசித்திபெற்ற மனநோய் மருத்துவரே! ஆனால் அவருடைய செயல்கள் என்னைக் கொதிக்கச் செய்தன. எனக்காக என் குடும்பம், ‘குயவன்’ தியானப் பாடலை தினமும் பாடியது.

இன்று அதிகாலை இரண்டு மணிக்கு ஓர் இறை வாக்குக் கிடைத்தது.

“அந்தக் குயவன் செய்ததுபோல நான் உனக்குச் செய்ய மாட்டேனோ?” என்று சொல்லிச் சிரித்துச் சென்றார்.

நான் சிரித்து எழுந்தேன். களித்து மகிழ்ந்தேன் என்று ஜெகன் சொல்லி முடிக்கவும் ‘நன்றி, நன்றி’ என்ற வார்த்தைகள் அனைவர் உதடுகளினின்றும் உதிர்ந்தன.

பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

வருடங்கள் உருண்டன.

ஜெகன் ஒரு சிறந்த நற்செய்தித் தொண்டன் ஆனான். பிழைப்பிற்கு ஒரு சிறு கடையை நடத்தினான். பொழுது போக்கிற்கு புதுக்கவிதைகள் புனைந்தான்.

அமைதியின்றித் தவிக்கும் அநேக இளைஞர்களுக்கு ஆறுதல் கூறி, வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார். அநேகரின் மனநோய் தீர்க்கும் ஆன்மீக வைத்தியனாகவும் விளங்கி வருகிறார்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகி, கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு மருத்துவர் மனோகரனைச் சந்திக்கச் சென்றனர்.

இப்பொழுது மருத்துவமனை ஒளியிழந்து காணப்பட்டது. நோயாளிகளின் வருகை மிகவும் குறைந்திருந்தது. பாகப்பிரிவினையின் இழுபறியினால் அவருடைய பிள்ளைகளாலேயே அவமானப்பட்டார்.

சொத்துக்கள் வீண் என்று அங்கலாய்த்தார். பிரித்துக் கொடுப்பதில் தலையைப் பிய்த்துக் கொண்டார்.

மருத்துவர், ஜெகனைக் கட்டித் தழுவி ஆனந்த முத்தமிட்டார். “உடைந்த பாத்திரம், உருப்படியான உன்னத பாத்திரமாயிற்று” என்றான் ஜெகன்,

மருத்துவர் புரிந்து, சிரித்தார்.

– சலேசியச் செய்திமலர், நவம்பர் 2002.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *