உனக்கு இது போதும்




தோட்டத்துரைமார் அந்தியில் வந்து விளையாடுகின்ற டென்னிஸ் கிளப் அது. அது கண்டி நகரில் கண்டிக் குளத்துக்குப் பின்னால் செனநாயக்கா சிறுவர் பூங்காவுக்கு அருகில் உள்ளது. அழகும் அமைதியும் மிகுந்த சூழ்நிலை. அந்த “டென்னிஸ் கிளப்” மைதானத்தில் சுப்பிரமணி நின்று வெளியே போகின்ற பந்து களை ஓடி ஓடிப் பொறுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“டேய் பொடியன் காருக்குள்ளை டென்னிஸ் மட்டை இருக்கு கொண்டு வா”
காரில் இருந்து இறங்கி வந்த தோட்டத்துரை ஒருவனின் மகன் சொன்னான். அவன் சொல்லி முடிக்க முன்னர் அவன் அதை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.
சுப்பிரமணிக்கு அது மனதுக்கு விருப்பமில்லாத வேலை. அவர்கள் கொடுக்கின்ற கூலியில் ஒரு காற்சட்டையும் வாங்க முடியாது. அவன் அணிந்திருந்த காற்சட்டை முன்னால் தையல் மடிப்போடு கிழிந்து தொங்கியது. அவன் கிடைக்கும் கூலியை தன் ஆத்தாவிடம் கொடுத்து விடுவான்.
சுப்பிரமணி அங்கு வரும் தோட்டத்துரைமாரின் பிள்ளைகளை ஆவலோடு பார்ப்பான். அவர்கள் படிக்கின்ற பாடசாலைகளின் பெயர்களைக் கேட்டுக் கொள்வான். புதிதாக அந்தக் கிளப்புக்கு வந்த துரையின் மகன் விளையாடத் தெரியாமல் டென்னிஸ் கோட்டுக்கு வெளியே நின்றான்.
அவனுக்குக் கிட்டச் சென்று நின்ற சுப்பிரமணி அவனை கால் முதல் தலைவரை பார்த்தான்.
“நீங்க எங்கை படிக்கிறீங்க?”
“றினிற்றிக் கொலிஜ்”
“நீ எங்கை படிக்கிறாய்”
“நான் படிக்கிறதில்லை. நீங்க எத்தனையாம் வகுப்பு படிக்கிறீங்க?”
“எட்டு !”
“நானும் படிச்சிருந்தா எட்டாம் வகுப்புத்தான் படிப்பன்”.
துரையின் மகன் அவன் கூறியதை அக்கறையாகக் கேட்கவில்லை.
ஒரு துரை அடித்த பந்து வெளியில் ஓடிப் போயிற்று.
“பொடியா”
“சேர்” சுப்பிரமணி கத்திக் கொண்டு ஓடிப் போய் அந்தப் பந்தை எடுத்து வந்தான். துரையின் மகன் அருகில் வந்து நின்ற சுப்பிமணி துரையின் மகனை அன்போடு பார்த்தான்.
“ஐயா! உங்க டடியிட்டச் சொல்லி என்னை டவுனில் ஒரு தமிழ் ஸ்கூலிலே சேர்த்து விர்றீங்களா?”
“போடா கழுதை. உனக்கு தோட்ட ஸ்கூல் படிப்புப் போதும். இனி அதைப் பத்தி என்னோடை பேசவேணாம்” துரையின் மகனுக்குத் தமிழ் பேச வரும்.
சுப்பிரமணி டென்னிஸ் கோட்டைப் பார்துக் கொண்டு மௌனமாக நின்றான். மனதுக்குள் கவலை பாரமேற்றியது. சேர்ட்டின் முனையால் முக வியர்வையைத் துடைத்து விட்டான். தலை ஒழுங்காகச் சீவிவிடப்படவில்லை.
துரைமார் விளையாடி விட்டுக் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்று விட்டனர்.
சுப்பிரமணி கண்டிக் குளக் கரையில் புற்றரையில் குந்தியிருந்து, குளத்திலே மீன்கள் பாய்ந்து ஓடுவதைப் பார்த்தான். இருட்டிக் கொண்டு வந்தது. அவனுக்கு “கிளப்” வேலையில் விருப்பமேயில்லை. படிக்கத்தான் ஆசை.
இப்போது அவன் மலை உச்சியில் உல்லாசப் பயண ஹோட்டலுக்கு அப்பால் உள்ள அந்தோனி மலைத் தோட்டத்துக்கு நடந்து ஏறிப் போக வேணும். காலையில் சாப்பிட்ட றொட்டித் துண்டு சமித்து விட்டது. அந்தத் தோட்டத்திலே வேலுச்சாமி கூலி. அவனும் அந்தத் தோட்டத்துக் பாடசாலையிலே தான் படித்தான். அந்தப் பாடசாலை ஆங்கிலேயர் காலத்திலே தகரத்தில் கட்டிய ஒரு சிறு மடுவம். அதிலே இப்பொழுது தொய்வு நோய்க்காரரான சின்னையா ஆசிரியர் இருபத்தைந்து முப்பது பிள்ளைகளை வைத்து அரிவரிப்பாடம் ஐந்து ஆண்டு வரை சொல்லிக் கொடுத்து வந்தார். ஆண்டிறுதிப் பரீட்சையில் எல்லாரும் சித்தியடைந்து விடுவார்கள். அப்படித்தான் சுப்பிரமணியும் ஐந்தாம் வகுப்புக்குச் சித்தியடைந்தான்.
அத்தோட்டத்துப்பிள்ளைகள் உயர்கல்வி பெற முடியவில்லை. நகரத்துப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பிக்கவும் தொழிலாளரிடம் பணம் இல்லை. அதனால் பிள்ளைகளைக் கடைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும், தோட்டத்திலே புல்லு வெட்டவும், அனுப்பி விடுவார்கள். தம்பிள்ளைகள் படிக்கமுடியவில்லையே என்ற உணர்வு தோட்டத்தொழிலாளரை பெரிதும் பாதிப்பதில்லை. தம் பிள்ளைகள் கொடுக்கின்ற கூலிப்பணத்தையிட்டுச் சந்தோசமடைவார்கள். வேலுச்சாமியும் அவர்களின் ஒருவன் தான்.
சுப்பிரமணி பசியால் சோர்ந்து போனாலும், தன் படிப்புப்பற்றிய கவலை அவனை விட்டு அகலவில்லை. அந்தக் கவலையோடு கால்களை இரு கைகளாலும் கட்டிப் பிடித்தபடி, குளத்தைப் பார்த்தவாறே இருந்தான்.
இருட்டிவிட சுப்பிரமணி எழுந்து அந்தோனி மலைத்தோட்டத்தை நோக்கிக் குளக்கரையால் நடந்து போனான். அவன் தங்கள் லயத்துக்குப் போகும் போது நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. தகப்பன் வேலுச்சாமியும், அவனுடைய இளைய சகோதரர் மூவரும் குப்பி இலாம்பு வெளிச்சத்தைச் சுற்றி இருந்தார்கள். சகோதரர்கள் மூவரும் சும்மா புத்தகங்களை விரித்து வைத்துக் கொண்டிருந் தார்கள்.
சுப்பிரமணிக்குக் களைப்பும், பசியும்.
குசினிப் பக்கஞ் சென்று ஏதாவது கிடக்கிறதா என்று தேடினான். காலையில் கண்டமாதிரியே குசினி காணப்பட்டது.
“ஆத்தா எங்க?” தாய் கறுப்பாயி அரிசி கடன் கேட்க அடுத்த லயங்களுக்குப் போய் விட்டாள்.
“ஆத்தா இப்ப வந்துடும்” அவனுடைய தங்கை இராசலட்சுமி கூறினாள்.
அவனுடைய மனதில் துரைமாரின் கிளப்பும், பங்களாவும், விதம் விதமான கார்களும், இடாம்பீக வாழ்வும் நெருடிக் கொண்டிருந்தன. அவன் தகப்பன் வேலுச்சாமி முன்னால் குந்தியிருந்தான். தகப்பனையே அடிக்கடி நிமிர்ந்து பார்த்துக் கொண்டான் சுப்பிரமணி.
“என்ன என்னைய அப்படிப் பார்க்கிறே?” வேலுச்சாமி அவனிடம் கேட்டான்.
“இல்ல உங்க அப்பன் என்னவேலை செய்தாரு?”
“கூலி வேலைதான், இதே தோட்டத்தில தான்”
“அவர் எங்கு படிச்சாரு”
“இந்தத் தோட்ட ஸ்கூலில் தான்”
“தாத்தாவும் கூலிதானே?”
”ஆமா!”
“அவரு நல்லாப் படிப்பாராமே!”
“கெட்டிக்காரன் எண்ணு தான் கூறுவாங்க?”
“அப்புறம் ஏன்படிக்கேல்லை ?”
“பணம் இல்லை. தோட்டத்திலை வேலையும் கிடைச்சுது. கல்வாத்து வெட்டுவதிலே துரைமார் புகழும் வீரனாக இருந்தார். அவர் தான் எனக்கும் கல்வாத்து வெட்டப் படிச்சுக் கொடுத்தாரு”
“பூ! அவர் படிச்சுக் குடுத்தது இதுதானா? திருக்குறள் படிச்சுக் கொடுக் கேல்லையா?”
அவருக்கு அதெல்லாம் தெரியாது பாவம்” சுப்பிரமணி குனிந்திருந்து குப்பி வெளிச்சத்திலே நிலத்தில் வலக்கையால் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
“ஏன் இதெல்லாம் கேட்டாய்?” தகப்பன் அவனிடம் கேட்டான்.
“நீங்களே ஒரு தொழிற்சங்கவாதி, நீங்களே என்னைப் படிக்கவைக்கலையே?”
சுப்பிரமணி கூறியது வேலுச்சாமியின் மனதைத் தாக்கிற்று. அந்தத் தோட்டத்தின் தொழிற்சங்கத் தலைவராகத் தெரிவ செய்யப்பட்டு வேலை செய்யும் போது தான் அவன் படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்தான்.
“எட மவனே எங்கிட்டைப் பணமேதடா நாற்கூலி உன்னைப்படிக்க வைக்க? சாப்பாட்டுக்கே காணாது?”
“அது எனக்குத் தெரியும். ஆனா நாம ஏன் பரம்பரையாக கூலிக்கார ராயிருக்கணும்.?”
“மாடா உழைக்கிறந்தான். கூலி குறையக் கொடுத்தா நாம என்ன பண்ணுறது?”
“நீங்க கூலி கூடக் கேட்கிற தானே? ஒரு புள்ளையைத் தாணும், படிப்பிக்க முடியாத கூலி, விடியாமூஞ்சிப் புழைப்பு”
“இப்பத்தாண்டா சங்கமமைச்சு கூலி கூடக் கேக்கிறோம்”
“தந்துதான் கிழிப்பாங்க, எங்களை இந்த நிலையிலே வைச்சிருக்கிறதுதான் அவங்க நோக்கம்”
“அப்படித்தான் அப்படித்தான்”
“நாங்க படிச்சா அவங்களுக் கெதிராகக் கிளம்பிடுவோமில்லையா? எருமை மாடு மாதிரி இருத்த விரும்புவாங்க! இந்தந் தோட்டத்திலை இருந்து எவனவது மேல் படிப்புக்கு போயிருக்கானா? இல்லத்தானே”
சுப்பிரமணி பசிக்கலைப்பால் குசினிக்குள் சென்று தண்ணீர் வார்த்து குடித்து விட்டு வந்தான். சேர்ட்டு முன் பக்கம் நனைஞ்சு போச்சு.
“படிக்கத்தான் முடியல்ல; மாறிக்கட்ட உடுப்பிருக்கா?”
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டு விளக்கின் முன் வந்து . அமர்ந்து, காற்சட்டைப் பக்கற்றில் வைத்திருந்த பத்திரிகைத்துண்டை விரித்து ஒவ்வொரு எழுத்தாப் படிக்க முயற்சித்தான்.
“உது என்ன பத்திரிகையடா?”
“சும்மா தெருவில் கிடந்த ஒரு துண்டு ” அவன் வாசிப்பதிலேயே கவனமாக இருந்தான்.
அரிசி வாங்கப்போன கறுப்பாயி இன்னும் வந்து சேரவில்லை.
– குமரன் 1973 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995