உதவாக்கரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2025
பார்வையிட்டோர்: 354 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், “பாண்டிப் பயல்தானே? வெறும் உதவாக்கரை, ஒண்ணுக்கும் உதவாதவன்!’ என்று. 

பாண்டிப்பயல் என்று பலராலும் சொல்லப்படுகிற பாண் டியனுக்கு வயது இருபத்தாறு – இருபத்தேழு இருக்கும். உடல் வளர்த்தியிலும் குறைவு இல்லை. ஆள் வாட்டசாட்ட மாக, வயதுக்குத் தக்கபடி வளர்ந்து தடித்துதான் இருந் தான். 

இருப்பினும் அனைவரும் அவனைப் பாண்டிப்பயல் என்று மதிப்புக் குறைவாகத்தான் குறிப்பிட்டு வந்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அப்படி ஓர் இளக்காரம் அவன் மீது. 

அவன் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தது ஒரு காரணம். அவன் அதிகமாகப் படித்ததும் இல்லை. உள்ளூர் பள்ளிக்கூடத்தில் ஆறாவது வகுப்பு வரை படித்திருந்தான். அதுக்கு மேலே படிப்பு ஏறவில்லை என்று சொல்லி, பள்ளிக்குப் போவதை விட்டு விட்டான், 

சதா பையன்களோடேயே காணப்பட்டான் அவன். சகல வயதுப் பையன்களுக்கும் அவனைப் பிடித்திருந்தது. ‘பாண்டி அண்ணே! பாண்டி அண்ணே!’ என்று அழைத்துக் கொண்டு அவன் பின்னாலேயே திரிந்தார்கள் ஊர்ப் பிள்ளைகள். 

அதற்குக் காரணம், அவர்களுக்கு ஒரு தலைவன் போல் விளங்கினான் பாண்டி. ஒவ்வொரு சீசனில் ஒவ் வொரு விளையாட்டு மவுசு பெற்றிருப்பது எங்கும் ஒரு மரபு ஆகத் திகழ்கிறது. ஒரு சமயம் ‘கிட்டிப்புள்’ விளை யாட்டு சிறுவர்களால் எங்கும் ஆடப்படும். சில மாதங்கள் வானில் காற்றாடி பறக்க விடுவதில் சின்னவர்களும், அவர்களோடு சேர்ந்து பெரியவர்களும், உற்சாகம் காட்டு கிறார்கள். வேறொரு சமயம், தரையில் கட்டங்கள் கீறி, வட்டு வீசி, ‘பாண்டி ஆடுவதில்’ ஆர்வம் உடையவர்கள் ஆகிறார்கள் பையன்கள். 

இப்படி எந்த எந்த சீசனில் எந்த விளையாட்டு முனைப் பாக ஆடப்படுகிறதோ, அதுக்கு ஏற்பாடு செய்து, பையன் களை சேர்த்துக் கொண்டு பாண்டியனும் ஆடிக்களிப்பான். 

‘எருமை மாடு மாதிரி இருந்து கொண்டு இந்தத் தடியனும் சின்னப் பயல்களோடு சின்னப் பயலா குதி யாட்டம் போடுறதைப் பாரேன்!’ என்று நொள்ளாப்பு கூறாத பொம்பிளைகள் அந்த ஊரில் கிடையாது. 

தான் உருப்படாததோடு ஊர்ப்பிள்ளைகளையும் உருப்பட விடாமல் கெடுக்கிறான் என்று பெரியவர்கள் முணு முணுப்பது வழக்கம். 

‘எல்லாம் அவன் அம்மா கொடுக்கிற செல்லம். உழைச்சு சம்பாதிச்சிட்டி வந்தால்தான் உனக்குச் சாப்பாடு என்று சொல்லி விரட்டி அடிச்சால், அவனுக்குப் புத்தி வரும். அம்மாக்காரிதான் ஏ ராசா, நீ சரியாச் சாப்பிட மாட்டேன் கிறயே! இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று மூணு வேளை யும் மூக்க முட்டச் சாப்பிடும்படி ஊட்டுகிறாளே! போதும் போதாததுக்கு சாயங்காலக் காப்பி, வடை, உளுத்தங்களி, அடை என்று செய்து கொடுக்கிறா. பின்னே ஏன் அவன் வேலைக்குப் போகப் போறான்!’ இப்படி எவளாவது ஒரு பெரியம்மா நீட்டி முழக்குவாள். 

‘ஏதாவது ஒரு சவுளிக்கடையிலே, அல்லது பலசரக்கு மளிகைக் கடையிலே வேலைக்குச் சேர்ந்தால் என்ன? அச்சா பீசிலேகூட வேலைக்குச் சேர்ந்து தொழில் பழகி முன்னேற லாம்’ என்று சில பெரியவர்கள் பாண்டியனிடம் அவ்வப் போது சொன்னது உண்டு. 

‘அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று அவன் உறுதியாகத் தெரிவித்துவிட்டான். 

இதனால் எல்லாம், ‘உதவாக்கரை… வளையாவெட்டி… உருப்படாத பயல்’ என்ற பட்டங்கள் அவனுக்குக் கிடைத் துக் கொண்டிருந்தன. 

குளத்தில் நீர் பெருகி, அலையடித்துக் கொண்டிருக்கிற மாதங்களில் பாண்டிக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் பெரும் உற்சாகம்தான். கரை ஓரத்து கற்கள் மீது ஏறி நின்று, தொப்தொப்பென்று தண்ணீரில் குதிப்பார்கள். நீச்ச லடித்து மகிழ்வார்கள். தண்ணீருக்குள் மூழ்கி ஒருவரை ஒரு வர் துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். 

அவர்களுடைய பொழுதுபோக்கு மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். ‘இதென்னடா சனியன்கள் மாதிரி. குளத்திலே அமைதியாய் குளிக்க விடமாட்டேன்கிறாங்களே!’ என்று பலரும் அலுத்துக் கொள்வார்கள். 

பிறருடைய ஏசல்கள் பற்றி பாண்டியோ அவனுடைய சகாக்களோ கவலைப்படுவதில்லை. சில சமயம் நீருக்குள் ளாக வந்து, குளித்து நிற்பவர்களின் கால்களில் கிள்ளிவிட்டு அப்பால் செல்வார்கள். பிறகு மேலே வந்து, ‘எழவு மீனுக என்னமாக் கடிக்குதுங்க!’ என்று சொல்லிச் சிரிப்பார்கள். 

‘நீ பொட்டுப் பொடுக்குனு போக! உன்னை பாம்பு கடிக்க!’ என்று பொம்பிளைகள் ஏசுவார்கள். 

‘எவ்வளவு திட்டினாலும் உறைக்க மாட்டேன்குதே மூதேவிகளுக்கு!’ என்று ஒருத்தி ஒரு தடவை சொன்னாள். 

‘திட்டுங்க திட்டுங்க, நல்லாத் திட்டுங்க! ஆயிரம் திட்டுக வாங்கினால் ஒரு ஆனைப் பலம்’ என்று கூறிச் சிரித்தான் பாண்டியன். 

ஆற்றில் வெள்ளம் பெருகிப் போகிற சமயம் பாண்டி யனை கை கொண்டு பிடிக்க முடியாது. குதிப்பும் கும்மாளி யும்தான் அவனுக்கு. 

வெள்ளப் பெருக்கில் ஆர்வத்தோடு நீந்திக் களிப்பான். அக்கரைக்கும் இக்கரைக்கும் போய்வருவான். மண்டபத்தின் மீது ஏறி நின்று, பாட்டுப் பாடியபடி, ஓடும் தண்ணீரில் குதிப்பான். 

குதித்தவன் நீரோடு போய் விட்டானோ என்ற அச்சம் கரை மேல் நிற்பவர்களுக்கு உண்டாகும். பல நிமிடங்கள் பாண்டி மேலெழுந்து வரமாட்டான். 

‘ஐயோ, அநியாயமா ஆத்தோடு போயிட்டானே. வீணப்பய!’ என்று யாராவது பதட்டத்துடன் கூறுவார்கள். 

பாண்டி சற்று தள்ளி தண்ணீருக்குள்ளிருந்து மொட்டுப் போலே தலையை வெளியே நீட்டுவான். முடியை சிலிர்த்துக் கொண்டு நீந்தி வருவான். 

அவனது சாகசத்தையோ சாமார்த்தியத்தையோ பாராட்டுவதற்கு ஒருவருக்கும் மனம் வராது. 

‘தெண்டச் சோத்துத் தடிராமன்! என்ன வரத்து வாறான்! ஒரு நா இல்லாட்டா ஒரு நா பயல் ஆத்தோடு போகத் தான் போறான்’ என்று சாபம் கொடுப்பார் ஒரு பெரியவர். 

பக்கத்திலே நிற்கிற இன்னொரு பெரிய மனிதர், ‘நீரோடும் நெருப்போடும் விளையாடக் கூடாது என்பாக. இந்தக் கழுதைக்கு அது தெரியமாட்டேன்குதே. வெள்ளம் பெருகிப் போகையிலே, இது என்ன விளையாட்டு?’ என்று கடிந்து கொள்வார். 

எவர் பேச்சையும் பாண்டி தன் காதில் போட்டுக் கொள்வது கிடையாது அவனே அவனுக்கு ராஜா; அவனது போக்குகளே அவனுக்கு உகப்பானவை. 

பட்டம் பறக்க விடுகிற சீசன் வந்தது 

பாண்டியன் விதம்விதமான ‘காற்றாடிகள்’ செய்து பையன்களுக்கு உதவினான். வர்ணத் தாள்களில், வெவ் வேறு வடிவங்களில் உருவான பட்டங்கள். அவை அழகாக இருந்தன அவை உயரே வானத்தில் எவ்வியும் தாழ்ந்தும் உயர்ந்து உயர்ந்து அசைந்தும், மிதந்தும் காட்சி அளித்த போது வசீகரமாகத் தோன்றின. 

பாண்டியனது திறமையைப் பாராட்ட வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை வெட்டி வேலைகள் செய்வதிலே பாண்டிக்கு ஈடு இணை கிடையாது என்று தான் பலரும் பேசினார்கள். 

‘அக்கம் பக்கத்து ஊர்களில் தேசீயக் கொடியை உயர மான இடங்களில் கட்டிப் பறக்க விட்டிருக்கிறார்கள். நாமும் நம் ஊரில் அப்படிச் செய்ய வேண்டும்’ என்று அண்ணாச்சி ஒருவர் ஒரு நாள் சொன்னார். 

எங்கே கட்டலாம் என்ற யோசனை தலைகாட்டியது. 

கோயில் கோபுரத்தின் மீது கட்டலாம் என்றனர் சிலர். 

அந்த ஊர் கோபுரம் சாதாரணமானது; உயரம் இல் லாதது. பெயருக்கு ஒரு கோபுரம் என்று காட்சி அளித்துக் கொண்டிருந்தது அது. 

‘அதன் மீது கொடியைக் கட்டுவதும் நம்ம வீட்டுமாடி மீது கம்புநாட்டிக் கொடியை பறக்கவிடுவதும் ஒண்ணுதான். உயரம் பற்றாது’ என்றார் அண்ணாச்சி. 

கோயிலுக்கு எதிரே சிறிது தூரத்தில் ஒரு வெட்டவெளி. அதில் பெரிய அரசமரம் ஒன்று நின்றது. ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மரம் தனது எண்ணற்ற குச்சிக் கைகளிலும் ஆயிரமாயிரம் இலைகளை ஏந்தி வானவீதியைப் பெருக்க முயல்வதுபோல் சதா சலசலத்துக் கொண்டிருந்தது. 

‘இந்த மரத்தின் உச்சாணிக் கிளையிலே, ஓங்கி வளர்ந்த மூங்கில் ஒன்றை இறுக்கிக் கட்டணும். அந்த மூங்கில் உச்சி யிலே நம்ம கொடி பறக்கணும். உதயசூரியனின் பொற் கதிரிலே அது பளபளக்கும். அந்தி நேர வெயிலில் கொடி தகதகக்கும். பகல் பூராவும் பளீரென அது ரொம்ப தூரத்துக் குத் தெரியும்’ என்று அண்ணாச்சி அளந்தார். 

‘உயரமான இந்த மரத்தின் உச்சிக்கு ஏறி, கிளையிலே பலமாக யார் கொடிக் கம்பைக் கட்ட முடியும்?’ என்று மற்ற வர்கள் மலைத்தார்கள். 

‘அண்ணாச்சி பேச்சு சொல்லவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கு. ஆனால் செயலுக்கு சரிப்பட்டு வராது’ என்று ஓங்கி அடித்தார் ஊர்ப் பெரியவர். 

அத்தோடு விஷயம் முடிந்தது என்று பலரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள். இரவில் தூங்கப் போனார்கள். 

மறுநாள் காலையில் அவர்களுக்கு அதிசயம் காத்திருந்தது. 

வாய்க்காலுக்கும் வயல் பக்கமும் போனவர்கள்தான் முதலில் அதைப் பார்த்தார்கள். தண்ணீர் எடுக்கவும் குளிக்க வும் வந்த பெண்கள் பார்த்தார்கள். அனைவரும் ஆச்சரியப்பட்டு ஆகா என்றார்கள். 

விண்ணைத் தொட முயல்வது போல் உயர்ந்து நின்ற அரச மரத்தின் உயர் கிளை மீது, ஓங்கி நிமிர்ந்து நின்ற ஒரு மூங்கில் கழியில் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. 

யார் இரவோடு இரவாக அதைக்கட்டி இருக்க முடியும்? ஒருவராய், இருவராய், பலராகி, கும்பலாய் கூடிவிட்ட ஊரே அதிசயித்தது அதைக்கண்டு. மெதுவாக வந்தார் அண்ணாச்சி. ‘அண்ணாச்சி, உங்க சொல்லை செயலாக்கிப் போட்டீங்களே! எப்படி அண்ணாச்சி முடிந்தது உங்களாலே?” 

பலரின் சந்தேகமும் ஒருவரின் கேள்வியில் ஒலி செய்தது.  

அண்ணாச்சி பெருமையாய் கூட்டத்தைப் பார்த்தார். ‘எல்லாம் நம்ம பாண்டியின் வேலைதான்’ என்றார். 

‘ராத்திரி வீட்டுக்கு வந்தான். அண்ணாச்சி, மூங்கிலும் கொடியும் தயாரா இருக்குதான்னான். இருக்குன்னேன். கிளம்புங்க என்றான். கூட இரண்டு மூன்று பையன்களும் வந்தாங்க, நல்ல நிலா. பட்டப் பகல்போலே வெளிச்சம். அரச மரத்து இலைகளிலே கூட ஒரு மினு மினுப்பு. டே பாண்டி, உன்னாலே முடியுமான்னு கேட்டேன். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்னு சொல்லி மரத்து மேலே ஏறினான். சில பையன்கள் மூங்கிலைப் பற்றிக் கொண்டு கீழ்க் கிளைகளிலே நின்னாங்க. பாண்டி மேலே போயி, மூங்கிலையும் கொடியோடு சேர்த்துப் புடிச்சிக்கிட்டு, பயம் இல்லாமே ஏறினான். அனுமாரு கெட்டுது போங்க. உச்சிக் குப் போயி,மூங்கிலை நன்றாக இறுக்கிக் கட்டிப் போட்டு, மளமளன்னு இறங்கி வந்துவிட்டான். பலே பாண்டியான்னு தட்டிக் கொடுத்தேன்’ என்றும் அவர் விவரித்தார். 

ஊர் வியந்தது. ஆனாலும், அதன் வழக்கப்படி சொட்டை கூறியது. ‘கரிமுடிஞ்சு போவான் பாண்டிப் பயல். ஏன்தான் இந்தப் போக்கு போறானோ தெரியலே!’ என்றார்கள். 

‘சவத்துப் பயல் கால் தவறியோ, கிளை முறிஞ்சோ கீழே விழுந்திருந்தால் என்னத்துக்கு ஆவான்? அவன் அம்மாவுக்குப் பிள்ளைன்னு பேர் சொல்ல இருப்பானா? பிசாசுப் பயல்’ என்றார்கள். 

இன்னும் என்னென்னவோ சொன்னார்கள். அவனது துணிச்சலைப் பாராட்டி நாலு நல்ல வார்த்தை சொல்வோமே என்ற மனம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்குக்கூட இருக்க வில்லை. 

அதைப்பற்றி பாண்டி கவலைப்படவில்லை. ஆனால் அண்ணாச்சியின் மனசை உறுத்தியது அது. அண்ணாச்சி பரந்த உள்ளமும் விசால நோக்கும் கொண்டவர். புத்தகங்கள் படிப்பவர். உலகம் தெரிந்தவர். சிந்திக்கக் கற்றவர். 

மனிதரில் உதவாக்கரை என்று எவனுமே கிடையாது. ஒவ்வொருவனிடமும் ஒவ்வொரு திறமை, தனித்தனி இயல்பு கள் மறைந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டு உணர்ந்து அவன் அவன் இயல்புகள் – தகுதிகள் – திறமைகளுக்கு ஏற்ப காரியங்கள் செய்ய வாய்ப்பும் வசதியும் உண்டாக்கிக் கொடுத்தால், எவனும் நன்கு பிரகாசிக்க முடியும். 

அண்ணாச்சி இவ்வாறு எண்ணுவது உண்டு. பாண்டிய னின் இயல்புகளையும் போக்குகளையும் அவர் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். இப்போது அவனையும் அவ னது சகாக்களையும் சேர்த்து ஊருக்கு நல்லது செய்யலாமே என்று அண்ணாச்சி நினைத்தார். பாண்டியனிடமே பேசி னார். அவன் உற்சாகமாக அவரை ஆதரித்தான். 

இப்படியாக ‘கட்ட பொம்மன் நற்பணி மன்றம்’ பிறந் தது அந்த ஊரில். அண்ணாச்சியின் வீடு மன்றத்தினர் கூடும் இடம் ஆயிற்று. 

பத்திரிகைகள், புத்தகங்கள் குவிந்தன அங்கே. பொழுது போக்குக்கான விளையாட்டு சாதனங்களும் சேர்ந்தன. சுகா தாரம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, தெருக்களைச் சுத்தப் படுத்துவது, கோயில் பிரகாரங்களை அழகு செய்வது என்று வேலைத் திட்டங்கள் தடபுடல்பட்டன. 

அண்ணாச்சி தலைவர் ஆனார். பாண்டியன் தளபதி. உற்சாகம் நிறைந்த பையன்கள் தொண்டர்கள். 

தூங்கிக் கிடந்த ஊர் விழிப்பு பெற முயன்றது.

உரிய காலத்தில் மழை சீசன் வந்தது. வானமே கிழிந்து, எங்கோ பதுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் கொட்டோ கொட்டித் தீர்வது போல, மழை இரவு பகல் எந்நேரமும் பெய்தது. 

‘எந்த வருஷமும் இல்லாத மழை இந்த வருஷம்’ என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். 

ஆற்றிலே வெள்ளம் என்ற தகவல் வந்தது. வெள்ளம் அதிகரித்துக் கொண்டே போகிறது… முக்கால் மண்டபத் துக்கு சுற்றி ஓடுது. மண்டபத்தை முழுகடித்து விடும் தண் ணீர் என்று செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. 

அத்துடன் கலந்திருந்த ஒரு தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 

மண்டபத்தின் தட்டட்டியில் (‘மொட்டைமாடி’யில்) மூன்று ஆட்கள் இருக்கிறார்கள். யாரோ பரதேசிகள். ராத்திரி மண்டபத்துக்குள்ளே படுத்துக் கிடந்தார்கள் போல. வெள்ளம் வரவும் உயரே தட்டட்டிக்குப் போயிருக்கிறார்கள். அபாய நேரத்தில் அப்படி உயரே ஏறிப் போவதற்கு என்றே வசதியான இரும்பு ஏணி ஒன்று அங்கு உறுதியாகப் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. பரதேசிகள் மேலே போய் விட்டார்கள். வெள்ளம் வற்றி விடும் என்று அவர்கள் எதிர் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளம் அதிகரித்து மண்ட பத்தையே மூழ்கடித்து விடும் நிலையில் எவ்வியது… அப் புறம் பரதேசிகள் அரோகரா! 

எனவே, ஊர் கும்பலாகச் சாடியது ஆற்றங்கரையில். வேடிக்கை பார்க்கத்தான். 

மண்டபத்தின் உயரே, பொங்கிப் புரண்டு பாய்ந்தோடும் வெள்ளத்தின் நடுவில், மழையில் நனைந்து, குளிராலும் பயத்தாலும் நடுங்கி நின்ற பரதேசிகள் பரிதாபத்துக்குரிய உருவங்களாகத் தென்பட்டார்கள். 

‘சே, இவர்களை சாகவிடப்படாது. எப்படியாவது காப்பாத்தியாகணுமே’ என்றார் அண்ணாச்சி. 

‘எப்படி அண்ணாச்சி காப்பாத்துவீங்க?’ என்று கிண்டல் தொனியில் கேட்டார் ஒருவர். 

அண்ணாச்சி யோசித்தார். அவர் மூலை வேலை செய் தது. ‘கொஞ்சம் சிரமமான காரியம் தான். துணிந்தால், காப்பாத்தி விடலாம்’ என்றார். 

உறுதியான வடக்கயிறு தேவை. அதன் ஒரு நுனியை ஒரு பனை மரத்தில் இறுக்கிக் கட்ட வேண்டியது. மறு முனையை மண்டத்துக்கு எடுத்துப் போய், அங்கே ஒரு கல் லில் பலமாகக் கட்ட வேண்டும். கயிறில் சகடையும், அதில் தொட்டில் மாதிரி ஒரு அமைப்பும் சேர்க்கணும். மண்டபத்து மேலே இருந்து ஒவ்வொரு ஆளாக தொட்டிலில் ஏறி வரணும். 

அதுக்கு வசதியாக் கரையிலேயிலேயிருந்து நாம் சகடைத் தொட்டிலை இழுக்கணும் என்று அண்ணாச்சி விளக்கினார். 

‘அதுசரி அண்ணாச்சி. இந்த பேய் பயல் வெள்ளத்திலே யாரு இங்கிருந்து வடக்கயிறை மண்டபத்துக்குக் கொண்டு சேர்க்கிறது? நடக்கக்கூடிய காரியமா?’ என்றார் திருவாளர் சந்தேகம். 

‘அதுதானே! அண்ணாச்சி அய்டியா அபாரமானது. ஆனால் எப்படிச் செயல்படுத்துவது?’ என்று திருவாய் மலர்ந்தன சில ஒத்து ஊதிகள். 

‘அதைத்தான் நானும் யோசிக்கிறேன்’ என்றார் அண்ணாச்சி. 

‘யோசனை எதுக்கு அண்ணாச்சி? ஊர்க்கோயிலில் இருந்து வடம், வேறே கயிறுகள், சகடை, தொட்டில் ஊஞ்சல் எல்லாம் கொண்டு வரச் செய்யுங்க. கயிறு மண்டபம் போய்ச் சேருவதற்கு நான் ஆச்சு!’ என்று திடமான குரலில் சொன்னான் முன்னே வந்து நின்ற பாண்டியன். 

அண்ணாச்சியின் கண்கள் ஒளிர்ந்தன. பெருமிதத் தோடு பாண்டியைப் பார்த்தார். ‘உன்னால முடியுமா தம்பி?’ என்றார். 

‘நான் ரெடி. சாமான்கள் வரட்டும்’ என்றான் பாண்டி. 

சைக்கிள்கள் பறந்தன. சாமான்கள் வந்தன. சுறு சுறுப்பும் வேகமும் செயல் நர்த்தனம் புரிந்தன அங்கே. 

உறுதியாய் நின்ற பனைமரம் ஒன்றில் இறுக்கிக் கட்டம் பட்டது வடக்கயிறின் ஒரு முனை. 

மறு முனையை பாண்டி தன் இடுப்பில் நன்றாகக் கட்டிக் கொண்டான். 

கரைக்கும் மண்டபத்துக்கும் ஒரு பர்லாங் தூரத்துக்கும் அதிகம் இருந்தது. 

ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடியது. 

பாண்டி கரை மீது மேற்கு நோக்கி சிறிது தூரம் நடந் தான். வசமான இடத்தில் தண்ணீரில் இறங்கி நீரின் போக்கோடு நீந்தினான். லாவகமாக நீந்தி முன்னேறினான். 

ஒரு படையெடுப்பு மாதிரி வலிமையோடு முன்னேறிக் கொண்டிருந்தது வெள்ளம். நீரோட்டத்தின் அசைவு தெரியாதவாறு இருந்தது. செடிகள், மரங்கள் குடிசைக் கூரை கள் போன்றவை ஓடுகிற வேகத்தைக் கொண்டே ஆறு பயங்கர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. 

மண்டபம் கிழித்த நீர்ப்பரப்பு வெள்ளத்தின் ஓட்ட வேகத்தை, அதன் மூர்க்கத்தை, நன்கு புலப்படுத்தியது. 

‘பாண்டி போய் சேர்வானா? மண்டபத்தின் மீது ஏறி விடுவானா?’ என்ற சந்தேகம் எல்லாருக்குமே இருந்தது. 

பாண்டி திறமையாக, சாதுர்யமாக நீந்தி, மண்டபத்தை அடைந்து, மேலேறி நிமிர்ந்து நின்றான். கை கூப்பி வணங்கினான்.

‘பலே பாண்டியா!’ என்று கூவினார் கரை மீது நின்ற அண்ணாச்சி. கரவொலி வெடித்தது அங்கே. 

பரதேசிகள் பயபக்தியுடன் பாண்டியைக் கும்பிட்டார்கள்.  

அவன் மளமளவெனச் செயல்புரிந்தான். சகடையில் உருளும் தொட்டில் ஊஞ்சல் வந்தது. ஒருவனை அதில் உட்கார வைத்து அனுப்பினான். மெதுமெதுவாக அது கரைக்கு இழுக்கப்பட்டது. 

இப்படி மேலும் இருமுறைகள் அது இயங்கி, மற்ற இரண்டு பேரையும் கரை சேர்த்தது. 

ஊஞ்சலை அங்கேயே நிறுத்திவிட்டு, வடக்கயிறை கரைக்கு இழுத்துக் கொள்ளும்படி சொல்லுங்க!’ என்று பாண்டி, மூன்றாவது பரதேசியிடம் சேதி தெரிவித்தான். 

‘சாமி, நீங்க எப்படி கரை சேருவீங்க?’ என்று கேட் டான் பரதேசி. பயம் அவனுள் வேலை செய்தது. 

‘வந்தது போல் போவேன்!’ என்று கூறிச் சிரித்தான் பாண்டி. 

மூன்றாவது ஆளும் கரை ஏறி, வடக்கயிறும் கரை சேர்ந்த பின், பாண்டியன் வெள்ளத்தில் குதித்தான். இப் போது வெள்ளத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப, கிழக்கு நோக்கி லாவகமாக நீந்தினான். 

கரை மீது அனைவரும் கிழக்கு நோக்கி ஓடினார்கள். 

சற்று தூரம் தள்ளி, ஊரின் சுடுகாட்டுக்கு அருகில், கரை ஏறினான் பாண்டியன். 

அண்ணாச்சி ஓடிவந்து அவனைக் கட்டித் தழுவினார். ‘தம்பி, யாரும் செய்யத் துணியாத காரியத்தை நீ சாதித். தாய். உனக்குத் தன்னம்பிக்கையும் துணிச்சலும் நிறைய இருக்கு. நீ வாழ்க!’ என்று பாராட்டினார். ‘மனிதரில் உதவாக்கரை என்று யாருமே கிடையாது. அவனவன் திறமை பிரகாசிக்க சரியான சந்தர்ப்பமும் மற்றவர்களுடைய ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும்’ என்று கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். 

‘பாண்டிக்கு ஜே!’ என்று கத்தினான் ஒரு பையன். 

‘ஜே ஜே!’ என முழங்கியது கூட்டம். 

– சோவியத் நாடு, ஏப்ரல் 1991.

– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *