உண்மை உங்களிடம் வரக் காத்திருக்கிறது!
சூஃபி மெய்ஞானிகளில் ராபியா மிகவும் புகழ் பெற்றவர். பேரழகும் தனித்தன்மையும் மிக்க அவர், ஞானிகளின் ஞானி என்று சொல்லத்தக்க அளவுக்கு மிகச் சிறந்த மெய்ஞானி. பெண்களுக்கே உரித்தான பேரன்பும் தாய்மையும் அவருக்கு உலகத்தாரிடம் இருந்தது.

ராபியா தினந்தோறும் சந்தைப் பகுதிக்கு சென்று, தான் அடைந்த உண்மைகளை மக்களிடம் உரத்துக் கூறுவது வழக்கம். அதற்காக அவர் செல்லும் வழியில் ஒரு மசூதி இருந்தது. புகழ் பெற்ற இன்னொரு சூஃபி ஞானியான ஹசன், மசூதிக் கதவுக்கு முன்பாக அமர்ந்துகொண்டு, “இறைவா! கதவைத் திற! என்னை உள்ளே அனுமதி!” என்று உரக்கப் பிரார்த்தித்துக்கொண்டிருப்பார். அதைப் பார்க்கும்போதெல்லாம் ராபியாவுக்கு சிரிப்பு வரும். உரக்க சிரித்துவிட்டுச் செல்வார். அது ஹசனுக்கும் தெரியும். எனினும் அவர்கள் இது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதில்லை.
அன்று ஹசன் மிகுந்த உணர்ச்சிமயமாக, கண்ணீர் உகுத்து, கதறி அரற்றிக்கொண்டிருந்தார். “தயவுசெய்து கதவைத் திற, இறைவா! என்னை உள்ளே அனுமதி! நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லையா? ஏன் கதவைத் திறக்க மறுக்கிறாய?”
அதைப் பார்த்ததும் ராபியாவுக்கு பொறுக்கவே இயலவில்லை. அவர் ஹசனிடம் சென்று அவரை உலுக்கினார். “தயவு செய்து இந்த அபத்தத்தை நிறுத்துங்கள்! ஏன் இப்படி அழுது புலம்புகிறீர்கள்? கதவு திறந்துதான் இருக்கிறது! அது மட்டுமல்ல; நீங்கள் உள்ளேதான் இருக்கிறீர்கள்!”
ஹசன் ஒரு கணம் திடுக்கிட்டார். பின்பு ராபியாவின் அன்பும் அருளும் ததும்பும் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். உடனே குனிந்து, அவரது பாதத்தைத் தொட்டு வணங்கினார்.
“நீங்கள் எனக்கு உண்மையை உணர்த்திவிட்டீர்கள். இதை ஏன் முன்பே செய்யவில்லை? பல வருடங்களாக, தினந்தோறும், என் வாழ்நாள் முழுதும் நான் இப்படித்தான் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன். நீங்களும் சாலை வழியே செல்லும்போது, அதைப் பார்த்து சிரித்துவிட்டு, கடந்து சென்றுகொண்டிருந்தீர்கள். முன்பே எனக்கு இந்த உண்மையைச் சொல்லி இருக்கலாமே! இவ்வளவு காலம் எனக்கு வீணாகி இருக்காதே!”
“முன்பே நான் இதைச் சொல்லியிருந்தால், அது உங்களுக்கு உறுத்தலாக இருந்திருக்கும். நீங்கள் கோபப்பட்டிருக்கக் கூடும். என்னை விரோதியாகக் கூட கருதி இருப்பீர்கள். உண்மையை எல்லோராலும், எப்போதும் உணர்ந்து கொள்ள இயலாது. அது, தக்க தருணத்தில், தக்க சூழலில், தக்க இடத்தில், அறியப்படும்போதுதான் அதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். எனவே, உண்மை எப்போது ஒருவரிடம் வர வேண்டுமோ, அப்போதுதான் வந்து சேரும். உங்களுக்கான தருணம் வருவதற்காகவே உண்மை காத்திருந்தது. நானும் அதற்காகவே காத்திருந்தேன். இப்போது உங்களுக்கான தருணம் வந்துவிட்டது!” என்றார் ராபியா.