உண்மைக்குத் தடையாக இருப்பது மதங்களே!
ஹஸ்ரத் ஷிப்லியிடம் ஒரு முறை கேட்கப்பட்டது: “உங்களை சூஃபி மார்க்கத்திற்கு வழிப்படுத்தியவர் யார்?”

ஷிப்லி சொன்னார்: “ஒரு நாய்.”
கேட்டவர்கள் வியந்தனர். “ஒரு நாயா உங்களை சூஃபி மார்க்கத்திற்கு வழிப்படுத்தியது?”
கேட்கிற எல்லோரையுமே இது ஆச்சரியப்பட வைக்கக் கூடியதுதான். சூஃபிஸம் என்பது ஒரு மெய்ஞான மார்க்கம். ஒரு நாயால் எப்படி அதற்கு ஒருவரை வழிப்படுத்த முடியும்?
ஷிப்லி விவரித்தார்.
“நான் ஒரு முறை ஆற்றோரம் சென்றுகொண்டிருந்தேன். ஆற்றில் நீர் பருகுவதற்காக வந்த நாய், நீரில் தெரியும் தனது பிம்பத்தைப் பார்த்து அது இன்னொரு நாய் என்று நினைத்து, பயந்து பின் வாங்கியது. அந்த நாய்க்கு மிகுந்த தாகம். எப்படியும் தண்ணீர் பருகியே ஆகவேண்டும். ஆனால் ஒவ்வொரு முறை அது நீரிடம் சொல்லும்போதும் அதில் தெரிந்த தனது பிம்பத்தைக் கண்டு பயந்தது பின்வாங்கியது. ஆனால் எப்படியும் நீர் பருகியே ஆகவேண்டும் என்கிற அதன் வேட்கை காரணமாக, பிறகு துணிந்து ஆற்றில் இறங்கி நீர் பருகியது. அப்போதுதான் அதற்குத் தெரிந்தது, நீருக்குள் இருந்தது வேறு ஒரு நாய் அல்ல என்று. அதைப் பார்த்ததும்தான் எனக்குப் புரிந்தது, உண்மையை அடைவதற்குத் தடையாக இருப்பது எனக்குள் உள்ள பிம்பங்கள் என்று. எனவே, தடையாக இருந்த பிம்பங்களை மறந்துவிட்டு, நான் உண்மைக்குள் குதித்துவிட்டேன்!”
இந்த சூஃபி கதையில் இரு விதமான பாடங்கள் உள்ளன. ஒன்று, நாம் எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும், சாதாரண நிகழ்விலிருந்தும், ஞானத்திற்கான வழிகாட்டலைக் கண்டடைய முடியும் என்பது. அடுத்தது, சுயம் என்பது வெறும் ஒரு மாயை என்பது. நம்முடைய சுயம் அல்லது அகந்தை எதுவாயினும் அது நம்மாலும் மற்றவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட பிம்பம்தானே அன்றி அவை உண்மையானவை அல்ல. அதே போலத்தான் மக்கள் ஏற்படுத்திக் கொள்கிற இனம், மதம், ஜாதி போன்ற புற அடையாளங்கள் அனைத்துமே!
ஆன்மிகமும் மெய்ஞானமுமே உண்மையான மதத்தன்மைகள். சில மதங்கள் அவற்றை வழங்குகின்றன. ஆனால், சில மதங்களோ தமது கடவுள், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை மட்டுமே சரி என்றும், அதுவே உயர்வானது என்றும், மற்றவர்களுடையவை இழிவானவை என்றும் போதிக்கின்றன. எனவேதான் மதங்களுக்குள் எப்போதும் கலவரங்கள் இருப்பதைப் பார்க்கிறோம் ஆனால் மெய்ஞான மார்க்கங்களானான தந்த்ரா, ஸென், தாவோ, சூஃபிசம், கபாலிஸம் போன்றவற்றில் இந்த பேதங்கள் எதுவும் இருக்காது. இவை அனைத்துமே உண்மையை வெவ்வேறு வழிமுறைகளில் அணுகக்கூடியவை. சுயமாக உணர்ந்து ஒவ்வொரு தனிநபரும் மெய்ஞானம் அடைவதற்கு வழி வகுக்கக் கூடியவை.
மதங்கள் கற்றுத் தராத பேருண்மையை ஒரு நாயிடமிருந்தும் கூட நாம் கற்றுக்கொள்ள முடியும். மெய்ஞானம் அப்படிப்பட்டதுதான். ஆனால், மதவாதிகள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை அவர்களின் வேத நூல்கள், கடவுள்கள், அவதாரங்கள், கடவுளின் வாரிசுகள் அல்லது கடவுளின் அதிகாரிகள்தானே தவிர, உண்மையோ மெய்ஞானமோ அல்ல!
உண்மைக்குத் தடையாக இருப்பது மதங்கள்தான்! ஞானிகள் உண்மையை நாடுகிறார்கள். மக்களோ மதங்களை நாடுகிறார்கள்.