உடம்பு என்பது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 2,804 
 
 

சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க அங்கு வந்திருந்தால் பேசுவதுண்டு. அரசியல், கள்ளக் காதல்கள், கற்பழிப்பு, கொள்ளை, கொலை என்று சுவாரஸ்ய விஷயங்களை விவாதிப்பதன் மூலம் பொழுது போக்கிக்கொள்ள இருப்பவர்கள் ஆர்.வி.சலூனுக்குத் தவறாது வருவார்கள். வெளிப்புறம் திட்டு இருந்ததில் வேலுமணியின் தொழிலுக்கு இடைஞ்சலாக இல்லாமல் இந்த வெட்டிப் பேச்சும் ஒரு தொழிலாகவே நடக்கும்.

அவர்கள் பொதுவில் நாற்பத்தைந்தைக் கடந்தவர்களும் வேலைகள் எதையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அற்றவர்களுமே. பத்தரைக்குப் பேப்பர்க்காரன் வரும் முன்பாகவே ஓரிருவர் வந்துவிடுவார்கள். நேற்றுப் பார்க்காமல் விட்ட பேப்பரையோ, இலவச இணைப்பையோ பார்த்துக்கொண்டு இருப்பார்கள். பக்கத்து கேளுக்குட்டி கடையில் டீ சொல்லிக் குடித்துவிட்டு, லாட்டரிக்காரன் வந்தால் தேவையானதை வாங்கிவிட்டு, வெற்றிலையோ பீடியோ மூக்குப்பொடியோ – அவரவருக்குப் பழக்கமுள்ளதைக் கொள்ளவும் நேரமிருக்கும். கேளுக்குட்டி கடையில் மாத்ருபூமியைக் கொடுத்துவிட்டு, சைக்கிளை ஏறி மிதிக்க அவசியமில்லாத தூரமும் இறக்கமும் ஆனதால் இடது பக்கப் பெடலில் மட்டும் பாதத்தை வைத்து உந்தித் தள்ளிப் பெரும் வேகத்தில் சலூனுக்கு முன்பாக வந்து நிற்பான் பேப்பர்க்காரன். அவனுக்கு உள்ளே வந்து பேப்பரைக் கொடுக்க வேண்டி இருக்காது. வெளியில் இருக்கும் இவர்களே வாங்கிவிடுவார்கள். வாரம் ஒரு தடவை வசூல். அப்போது மட்டும் சலூனுக்குள் வந்து தலை சீவிவிட்டு, வேலுமணியிடம் பணம் வாங்கிப் போவான்.

செய்தித்தாள் வந்ததுமே பிரிந்து ஒவ்வொரு தாளும் ஒவ்வொருவர் கைகளுக்குப் போகும். பின்பு கை மாறும். அவசரமற்ற திதானத்தில் படிப்பவர்களும், தலைப்பு மட்டும் படித்து அடுத்தவர்களுக்குத் தந்துவிடுபவர்களும், விளம்பரம் உட்பட பார்க்கிறவர்களும், வாய்விட்டுப் படிக்கிறவர்களுமாய் பலவித வாடிக்கையாளர்கள் உண்டு. அங்கே அவர்கள் விவாதத்தின்போது சுரேஷ்பாபுவும் கலந்துகொள்வான். அரசியல் விவகாரங்களில் மட்டும். அவன் சலூனுக்கு வரும் முன்பாகக் கேளுக்குட்டி கடைக்குப் போய் சூடு குறைந்த டீ சாப்பிட்டு, மாத்ருபூமியில் சூடான செய்திகள் இருந்தால் அதையும் படித்துவிட்டுத்தான் வருவான். அவனுக்கு அரசியல் ஈடுபாடும், கட்சி சார்பும் இருந்தன. இதனாலேயே அவனால் மட்டும் வயது வித்தியாசம் இல்லாமல் இந்தத் திட்டுப் பேச்சாளர்களுடன் பேச முடிந்தது. சமயங்களில் அவனுக்கும் கோழி பரமசிவத்துக்கும் வாக்குவாதம் பலமாக நிகழும். கோழிக்கு அரசியல் சார்பு இல்லை என்றாலும் சுரேஷ்பாபுவின் கட்சியை மட்டம் தட்டுவதில் அலாதி. அது கட்சியைப் பற்றிய வெறுப்பினால் அல்ல, சுரேஷ்பாபுவைச் சீண்டுவதற்காகவேதான். அவனுக்கும் இது தெரியும். எப்படியும் பொழுது போக வேண்டுமே.

எனக்கு இவைகளில் நாட்டமில்லை. அரசியலிலும், விற்பனைக்காக அவசியமற்ற விஷயங்களைக் கூட பரபரப்புச் செய்திகளாகத் தருகிற செய்தித்தாள்களிலும். என்றாலும் சுரேஷ்பாபுவின் பேச்சு எனக்குப் பிடிக்கும். அவனது அலசல்களில் ஓரளவு விஷயம் தெரிந்தவன்தான் என்பது சுலபத்தில் யாருக்கும் புரியக் கூடியது. சினிமா விஷயங்களில் பெரியவர்களுக்குத் தற்போதைய சூழல் திருப்தி தராததாலும், பழம் பெருமையிலேயே இன்னும் அவர்கள் மூழ்கியிருப்பதாலும், அது பற்றி அவன் எங்களைப் போல இளைஞர்களுடன்தான் பேசுவான். நான் வேலை காரணமாகக் கோயமுத்தூர் சென்று வருபவன் என்பதால் அங்கே ஓடுகிற படங்களைப் பற்றியும், நான் பார்த்த படங்கள் குறித்த எனது கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வான்.

இப்படித் துவங்கிய பழக்கம், நாள்பட இருவரும் சென்று டீ சாப்பிடுகிற அளவுக்கு வளர்ந்து, நேரம் கிடைக்கையில் அவனை வீட்டில் சென்று பார்ப்பது வரைக்கும் வந்தது. ஞாயிறு அல்லது வேறு நாட்களில் கிடைக்கும் விடுமுறையில்தான் சுரேஷ்பாபு வீட்டுக்குப் போவேன். போனதுமே அவன் உடன் கிளம்பி வந்துவிடுவான். ஒழலப்பதி ரோடு, பாலக்காடு ரோடு, கோவை ரோடு மூன்றும் இணைகிற அல்லது பிரிகிற ஜங்ஷன் பக்கமாகப் பிள்ளையார் கோவில். பிள்ளையார் என்றதுமே ஞாபகம் வருகிற அரசமரமும் உண்டு. ஊர் வம்பு பேச அங்குதான் கூடுவது. ஒழலப்பதிக்குப் பேருந்து நிறுத்தமும் அதுவே. நாங்கள் கோவில் அருகிலோ, மூடியிருக்கிற ஏதாவது கடைகளின் முன்பாகவோ உள்ள திட்டுக்களில் அமர்ந்தும், பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்போம். இளைஞர்களும் சம வயது உடையவர்களும் ஆனதால் எங்களுக்குள் பெண்கள் பற்றிய பேச்சுகள் அடிக்கடி நிகழும். சுரேஷ்பாபு பெண்கள் விஷயத்தில் கில்லாடி. அதில் கூடுதல் அனுபவமும் ரசனையும் உள்ளவன்.

வேலந்தாவளத்தைப் பொறுத்த வரையில் பல வருடங்களுக்கு முன்பு விபசாரத்தில் பேர் பெற்ற ஊர். கோவை வழி பாலக்காடு போகிற பாதை என்பதால் முக்கியத்துவமும் அதற்கு உண்டு. தமிழ்நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் அரிசி, எருமை, பசு மாடுகள் இன்ன பிற பொருட்களும் லாரிகளில் வரும். சோதனைச்சாவடி மற்றும் சுங்கச்சாவடி அருகே லாரியை நிறுத்தி, இரவு தங்கும் ஓட்டுநர்களுக்குத் தேவையான வசதிகள் இங்கே வாய்க்கும். அவ்வப்போது நிலவும் அரசியல் நிலவரத்துக்கேற்ப தமிழகத்தில் கள், சாராயக் கடைகளை மூடுவதும் திறப்பதுமாக இருக்கையில், கேரளத்தில் அந்தப் பிரச்சனைகள் இராது. வேலந்தாவளத்தின் பாலத்திற்கு அருகாமையில் கள்ளும் சாராயமும் நித்ய காலமும் கிடைக்கும். லாரி ஓட்டுநர்கள் கண்களில் சிவப்பேறக் கள்ளோ சாராயமோ குடித்து, உடம்புச் சூடு தணிக்க, வருடத்தின் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் காணும் ஆற்றின் கரையோரத்தில் ஒதுங்குவார்கள். பத்து, இருபது ரூபாய் துவக்கம் – தரம் வாரியாக வருகிற பெண்களுடன். அந்த அளவுக்கு இப்போது இல்லை. வேலந்தாவளம் தனது பொற்காலப் பிரசித்தியை இழந்துவிட்டது. என்றாலும் ஊர் என்று இருந்தால் அதன் அமைப்பு மற்றும் தேவைக்கு இதெல்லாம் இல்லாமல் முடியுமா? இன்னமும் சில பாலியல் தொழிலாளிகள் உண்டு. பக்கத்து ஊர்களிலெல்லாம் வயது வித்தியாசமின்றி ஆண்கள் ஜெபிக்கிற பெயர் மும்தாஜ். அவள் ஒழலப்பதியில் இருக்கிறாள். கட்டினவன் கைவிட்டுப் போகவே, மூன்று மாத கர்ப்பத்தைக் கலைத்து தொழிலுக்கு வந்தவள். சுண்ணாம்புக்கல்தோட்டில் அனுமோள் சென்ற வருடம் இறங்கியிருக்கிறாள். எர்ணாகுளத்திலிருந்து வந்தவள் என்றும், லோக்கல்தான் – பிரபலத்துக்காக அப்படிச் சொல்கிறார்கள் என்றும் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்கள் எல்லாரையும் சுரேஷ்பாபு அனுபவித்திருக்கிறான். இது தவிர திருமணம் ஆகாத மற்றும் ஆன குடும்பப் பெண்கள் பலருடனும் அவனுக்கு பாலியல் தொடர்பு உண்டு. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே, “நான் போயி கெட்ட பளக்கம் பண்ணிட்டு வந்தர்றன்” என்று சொல்லிவிட்டு, சந்து பொந்துகளில் முட்டிவிடுவான். அவனது பட்டியல் நீண்டது. வேலி சாட்ட வீரப் பிரதாங்களும் நிறைய. இப்படி நடப்பதற்கு உண்டான ஜாதி நிலையும், குடும்ப கௌரவமும், அந்தஸ்தும், வசதிகளும் அவனுக்கு இருந்தன. அவனது வேலி சாட்ட சாகசங்கள் பற்றி நண்பர்கள் கதை கதையாக சொல்வார்கள். அவர்கள் சொல்வதைக் காட்டிலும் சுரேஷ்பாபு தனது அனுபவங்களை விவரிப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.

எங்களின் பழக்கம் மேலும் இறுக்கப்பட்டது. தனது எந்த விஷயத்தைக் குறித்தும் சுரேஷ்பாபு என்னிடம் அபிப்ராயம் கேட்பான். சந்தேகங்களை என்னிடத்தில் நிவர்த்தி செய்ய முயல்வான். பல நாட்களில் எங்களுக்குள் நீண்ட விவாதங்கள் நடக்கும். பேசுவதற்கு வேறு விஷயங்கள் இருப்பதால் அவன் பிற்பாடு என்னிடம் இந்தப் பெண்கள் தொடர்பு குறித்துப் பேசுவதைத் தவிர்த்தான். இப்படி இருக்கையில்தான் அவனுக்கு நந்தினி விவகாரம் ஏற்பட்டது.

பண்ணையாரின் மகள் அவள். சித்தூரில் பி.டி.சி. படித்துக்கொண்டிருந்தாள். சுரேஷ்பாபுவின் வீடு இருக்கிற வீதி வழியாகத்தான் நந்தினி வந்து போவாள். சில சமயம் அவன் அவளுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதுண்டு. சாதாராண விசாரிப்பாகத்தான். அதுவும் கூடப் பெரும்பாலும் பண்ணையாரைப் பற்றியதாகவே இருக்கும். அவர் சுரேஷ்பாபுவின் குடும்பத்துக்குப் பழக்கமுள்ளவர். அடிக்கடி அங்கே வந்து போவார். டி.வி.யில் க்ரிக்கெட் மேட்ச் உள்ள நாட்களில் அவரை சுரேஷ்பாபுவின் வீட்டில் காணலாம். பண்ணையாரின் வீட்டில் டி.வி. இருக்கிறது. ஊருக்குள் முதன்முதலாக டி.வி. வாங்கியதே அவர்கள்தான். எனினும், அவர் வீட்டுக்கு யாரும் டி.வி. பார்க்க வருவதில்லை. அவரது குடும்பத்தினர் அதை விரும்பமாட்டார்கள். க்ரிக்கெட்டை அவரது குடும்பத்தில் வேறு யாரும் பார்ப்பதில்லை. அவர் மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும். தனியே அதைக் காண்பதில் உற்சாகம் இராது என்பதால் சுரேஷ்பாபு வீட்டுக்கு வந்துவிடுவார். அங்கே சுரேஷ்பாபு மற்றும் பிற க்ரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து மேட்ச்சுகளைக் கண்டு களிப்பார்.

வழக்கமாக இருந்ததுதான் எல்லாம். எப்படியோ இருந்தாற்போல் ஒரு வதந்தி கிளம்பிவிட்டது; சுரேஷ்பாபுவும் நந்தினியும் நேசிக்கிறார்கள் என்று. இது எனது காதுக்கும் வந்தது. அவனிடம் கேட்டபோது, “அப்புடி ஒண்ணும் எங்களுக்குள்ள இல்லியப்பா. எப்புடி இந்த ரூமர் கெளம்புச்சுன்னே தெரியல! பல பேரு நம்மகிட்டக் கேட்டுட்டாங்க” என வருத்தப்பட்டான்.

“வயிசுப் பையனும் புள்ளையும் தனியா நின்னு பேசுனாலே அப்புடித்தான், லவ்வு கிவ்வுன்னு கதை கட்டியுட்ருவாங்க. இது சகஜம்தானாச்சு! உங்குளுக்குள்ள அப்புடியொண்ணும் இல்லையில்ல; அப்புறம் என்ன?”

“சொன்னா நம்ப மாட்டீங்கறாங்கப்பா.”

“நம்புலீன்னாப் போகுட்டும்; உட்டுத் தள்ளு!”

“நீ சாதாரணமாச் சொல்லீட்ட. இது பெரிய பிரச்சனையா ஆகற அளவுக்கு வந்துருச்சு தெரியுமா?”

சுரேஷ்பாபுவை விசாரித்தவர்களில் சிலர் பண்ணையாருக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் அவரது ஜாதிக்காரர்கள். அவர்கள் இதை அவரிடம் சொல்லிவிடுவோம் என மிரட்டினார்களாம்.

பண்ணையாரிடம் இந்த விஷயம் போனதா இல்லையா தெரியவில்லை. அவர் எப்போதும் போலவே சுரேஷ்பாபு வீட்டுக்கு வருவதும், அவனது அப்பாவுடன் பேசுவதும், அவனுடன் இயல்பாகப் பழகுவதுமாக இருந்தார். அதில் அவனுக்குத் திருப்தி. என்றாலும் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பித்தான். நந்தினியைப் பார்த்தாலே அந்த இடம் விட்டு விலகினான்.

கொழிஞ்சாம்பாறைக்கு அவன் போக வேண்டி இருந்தபோது நந்தினி அவனுடன் இது பற்றிப் பேசினாளாம். வழக்கமாக அவள் அந்தப் பேருந்தில்தான் கல்லூரிக்குச் செல்வாள். கொடுவாயூர் போகிற பேருந்து அது. சித்தூரில் இறங்கிக் கொள்வாள். அன்று பேருந்தின் முன் பகுதியில் அவள் இருப்பதைப் பார்த்ததால் சுரேஷ்பாபு பின் பகுதியிலேயே நின்றிருந்திருக்கிறான். கொழிஞ்சை பேருந்து நிலையத்தில் இறங்கி அவன் போக வேண்டிய இடத்துக்கு நடக்கத் துவங்கியபோது வேகமாக வந்த நந்தினி அவனை அழைத்து நிறுத்தினாளாம்.

“உங்ககிட்ட பேசணும்னுதான் எறங்கினேன். ஊருக்குள்ள பேசலாம்னா முடியல. முன்ன மாதிரி நீங்க தட்டுப்படறதே இல்ல. அதுவுமில்லாம, ஏற்கனவே அங்க வேற மாதிரி பேசிட்டிருக்கறாங்க.”

அவன் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை.

அவளே தொடர்ந்தாள். “நம்பளப் பத்தி ஊருக்குள்ள பேசிட்டிருக்கறது உங்களுக்கும் தெரியுமில்ல? சலூன்ல, டீக்கடைல, டெய்லர் கடைல இருக்கற ஆம்பளைக, பசங்கல்லாம் என்னைப் பாத்தா ஜாடை பேசறாங்க. உங்க பேரைச் சொல்லி சத்தமாக் கூப்புட்டு, எளக்கநாட்டமா சிரிக்கறாங்க.”

“டெய்லர் கடைலயும், வொர்க்ஸாப்புலயும் இப்புடித்தான் என்னையப் பாக்கும்போது உம் பேரைச் சொல்லி அவுங்குளுக்குள்ள ஏதோ பேசிக்கறாப்புல ஜாடை பேசறது, பாட்டுப் பாடி கிண்டலடிக்கறதுன்னு ரவுசு பண்றாங்க” என்றான் சுரேஷ்பாபு.

“இதுக்கு நாம என்ன பண்றது…?”

“அதுதான் தெரியல!”

“சரி. எதுவும் செய்ய வேண்டாம். அப்படியே இருக்கட்டும். விட்டுறுங்க” என்று கூறிவிட்டு, சித்தூர் பேருந்தில் ஏறிவிட்டாளாம்.

ஓட்டுநர் இருக்கைக்கு நேராக இருக்கிற இடம் அவளுக்கு அமர்ந்துகொள்ளக் கிடைத்தது. இன்னும் யோசனையோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சுரேஷ்பாபுவை அவள் நகர்கிற பேருந்திலிருந்து எட்டிப் பார்த்துச் சிரித்ததாகவும் சொன்னான்.

அது இயல்பான சிரிப்பா, பொடி வைத்த சிரிப்பா என்று தெரியவில்லை.

“பண்ணையாருக்கு ரொம்ப க்ளோஸா இருக்கற ஆளுகளே இப்புடி ரூமரைக் கெளப்பி விட்டுட்டு, ஜாடை பேசிட்டு இருக்கறாங்களே…” என்றான் என்னிடம்.

“வெளிப்படையா க்ளோஸா இருக்கற மாதிரித்தான் தெரியுது. ஆனா அவங்களுக்குள்ள பிரச்சனை இருக்கலாம். யாரு கண்டா,… அதுக்காகத்தான்

இப்புடி ஏதாவது பண்ணி அவுருக்குக் கெட்ட பேரு உண்டாக்கணும்னு நெனைக்கறாங்களோ என்னமோ. எதுக்கும் நீ ஜாக்கிரதையாவே இருக்கறது நல்லது” என்றேன்.

அவனும் அப்படியே இருந்தான். நல்ல வேளையாக மற்றவர்களின் வதந்தி தெருவுக்கு வராமல் அவர்களுக்குள்ளேயே முடங்கிவிட்டது.

வதந்திகள் ஓய்ந்ததும் சுரேஷ்பாபு தைரியமாக இருக்கலானான். நந்தினியைக் காணும்போது ஒளிந்துகொள்வதை விட்டுவிட்டான். அவளும் அவனைக் காணும்போது புன்னகைக்க ஆரம்பித்தாள். மீண்டும் சகஜமாக அவன் பேசலானதும் அவள் உரிமையோடு கிண்டல் செய்யவும், குறிப்பாக – ஆனால், புரிந்தும் புரியாத வகையில் – எதையோ சொல்லவும் முயன்றாள்.

அவற்றை சுரேஷ்பாபு என்னிடம் தெரிவித்ததிலிருந்து நந்தினியின் எண்ணத்தைப் புரிவது சுலபமாகவே இருந்தது. வதந்தியை நிஜமாக்கிவிடுவாள் போலும். எதற்கும் விலகியே இருக்கும்படி அவனுக்குச் சொன்னேன்.

எனது எச்சரிக்கையை விடவும் நந்தினியின் புன்னகை, பார்வை, ஈடு கொடுக்கும் பேச்சு இவற்றுக்கு வலிமை அதிகம் இருந்ததால் சுரேஷ்பாபு தன் நிலையிலிருந்து வழுக்கினான். பெண்ணின் கடைக் கண்களில் சாம்ராஜ்யங்களே சரிந்துவிடுமே; இவன் எம் மாத்திரம்?

வீட்டுப் பக்கம் எனில் தெரிந்துவிடும் என்று பஸ் ஸ்டாப்பில் சென்று காத்திருப்பான். அவளோடு பேசும் சில வார்த்தைகள், அல்லது அவளது புன்னகையுடனான பார்வைகள், அல்லது தான் அவளைப் பார்க்கவாவது முடிகிற வாய்ப்புகளில் பரவசமடைவான்.

வெளிப்படையாக இருவரும் தங்கள் மனதைத் தெரிவித்துக்கொள்ளாமல் இருந்த நாட்களில் தை மாதம் வந்தது. தை மாதத்தில் பொங்கல் வந்தது. பொங்கலுக்கு வாழ்த்து அட்டை ஒன்று சுரேஷ்பாபுவுக்கு வந்தது – நந்தினியிடமிருந்து. அதை அவள் நேரில் கொடுத்தாளாம். மேல் உறையில் அவன் பேர் எழுதியிருந்தது. உள்ளே வாழ்த்து அட்டை. அதனுடன் வெள்ளைத் தாளில் தனிக் கடிதம். ஸ்கெட்ச் பேனாவில் ஆட்டினுக்குள் அம்பு விட்டு, பால் பாய்ன்ட் பேனாவில் தன் காதலைப் பிதற்றியிருந்தாள் நந்தினி.

முதலில் இதெல்லாம் வேண்டாம் என்றவன், பிறகு சுரேஷ்பாபுவின் தீவிரத்தால் அவன் போக்கில் விட்டுவிட்டேன். இருவரும் ரகசியமாக சந்திப்பதும், தங்கள் காதலை வளர்ப்பதுமாக இருந்தனர்.

பழநிக்குச் சென்று வந்தபோது சுரேஷ்பாபு இரண்டு வளையல்களை வாங்கி வந்து நந்தினிக்கு அன்பளித்தான். ப்ளாக் மெட்டல் என்ற வகை உலோகத்தில் செய்தது அது. நந்தினி மாநிறத்துக்கும் கூடுதல் கருப்புடன் இருப்பவள்.

“ஏப்பா, அந்த நெறத்துல வளையல் போட்டா அது கைல இருக்கறது அந்தப் புள்ளைக்கே தெரியாது. அப்புடி சீக்ரெட்டா இருக்கோணும்னுதான் அதை வாங்குனயா?” என்றதற்கு சுரேஷ்பாபு என்னை முதுகில் அடிக்கச் சிரிப்புடன் நெருங்கினான். விலகிவிட்டேன்.

அவன் விளையாட்டுக்கு அடிப்பதும் வலிக்கும்படியாகவே இருக்கும். அப்படி இருந்தது கைகளும் உடம்பும். தினமும் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறிய உடற்கட்டு. இந்த உடம்புக்காகவே சில பெண்கள் அவனிடம் வந்திருக்கின்றனர்.

நந்தினியைத் திருமணம் செய்துகொள்வதான எண்ணம் சுரேஷ்பாபுவுக்கு இருந்தது. வீடுகளில் சேர்க்கமாட்டார்கள் என்பதால் யோசனையாக இருந்தான். நந்தினி பி.டி.சி. முடிக்க இன்னும் ஒரு வருடம் பாக்கி. அதன் பிறகு படிப்பைத் தொடரும் எண்ணம் அவளுக்கு இல்லை. சுரேஷ்பாபு தயார் எனில் அவள் படிப்பு முடித்ததும் அவனோடு வந்துவிடுவாள். குடும்பத்தை விலக நேரிடுமே என்பது அவளுக்குக் கவலையாக இல்லை. தேவை எனில் படிப்பையும் உதறிவிட்டு எந்த நிமிடத்திலும் அவனுடன் வர அவள் சம்மதிப்பாள். சுரேஷ்பாபுவுக்கு அப்படி இல்லை. வியாபாரத்தை இப்போதுதான் பழகிக்கொண்டிருக்கிறான். வெளியில் இறங்கினால் அதைத் தனியே செய்ய முடியாது. பத்தாம் வகுப்பு அட்டெம்ப்ட்டில் பாஸானவனுக்கு வேறு எந்த வேலை சொல்லும்படியானதாகக் கிடைக்கும்? கிடைக்கிற வேலை தரும் சொற்ப சம்பளத்தில் இருவரும் வாழ்க்கையைக் கழிப்பது முடிகிற காரியமா? அதைவிட, அவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் நேரக்கூடிய ஜாதிப் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள்…

இதை அவன் யோசித்தான். நானும் ஆமோதித்தேன். ஆனாலும் அவன் ஏதோ ஒரு நம்பிக்கையில் இருந்தான். எப்படியும் அவளை மணந்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாகவும்.

இப்படி அவன் இருந்தபோது அவர்களின் தனிமைச் சந்திப்பில் சுரேஷ்பாபுவை முத்தமிட நந்தினி முயன்றிருக்கிறாள். மறுத்துவிட்டானாம். தனலட்சுமியில் முதல் காட்சி சினிமாவுக்குப் போயிருந்தபோது குடும்பத்துடன் வந்திருந்த அவள் பின் வரிசை சீட்டிலிருந்து, முன் வரிசையில் அவளுக்கு நேரே இருந்த தன் காலை உரசினாள் என்றும் சொன்னான்.

“பொண்ணே வரும்போது உனக்கென்னப்பா? நீ சந்துல சிந்து பாடறவனாச்சே!”

சற்று மௌனித்தவன், “எனக்கு ஏனோ அவகிட்ட மட்டும் அப்புடித் தோணுல” என்றான்.

அதுதான் காதல் என்று நான் சொல்லியிருந்தால், தனது காதல் பற்றிய எனது மகத்தான அங்கீகாரம் இது என்று பூரித்திருப்பான். மாறாக, அவனது சுயம் சார்ந்த அக்கறையே இப்படிச் செய்ய விடாது தடுக்கிறது என்று விளக்கினேன்.

கல்யாணமாகாத மற்றும் ஆன பல பெண்களிடம் பாலுறவு கொண்டவனுக்கு, நந்தினியிடம் மட்டும் இப்போதைக்கு அதற்கான விருப்பமில்லை என்பதற்குக் காரணம், அவளை அவன் மணக்க விரும்பியதுதான். தான் எவ்வளவு ஒழுக்கக் கேடனாக இருந்தாலும், தனக்கு மனைவியாகப் போகிறவள் தூய கன்னியாக இருக்க வேண்டும், தனது மனைவி படி தாண்டாப் பத்தினியாக இருக்க வேண்டும் என நினைக்கிற ஆண் மனோபாவத்தின் நீட்சியே அது. தன்னோடேயாயினும் அவள் திருமணத்துக்கு முன் கற்போ கன்னிமையோ கெடக் கூடாது என அவனது ஆழ் மனம் விரும்புகிறது. அவனுக்கு நந்தினியை மணந்துகொள்ளும் எண்ணம் இல்லையெனில் நிச்சயமாக அவளோடு படுக்கத் தயங்க மாட்டான் என்பது மட்டுமல்ல; அவனே அதற்கு எப்போதோ முன் கை எடுத்திருப்பான் என்பது நிச்சயம்.

நான் அதைச் சொல்லவே, குழம்பியவனாக என்னைப் பார்த்தான். அப்போதைக்கு அதைப் பற்றி அவனால் தீர்மானிக்க முடியவில்லை. என்றாலும், பிற்பாடு அவனாகவே ஒரு முறை இந்தப் பேச்சைத் துவங்கி, நான் சொன்னதே சரியாக இருக்க முடியும் என ஒப்புக்கொண்டான். அவன் உணர்ச்சிவசப்படுகிற ஆள். அதனால் இந்த உண்மையை உணர்ந்ததிலிருந்து வேறு பெண்களிடம் இனி பாலியல் தொடர்பு கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்தான்.

நந்தினி பி.டி.சி. இரண்டாம் ஆண்டு படிக்கிறபோது அவளுக்கும் அவனுக்குமான காதல் விவகாரம் வெளியே தெரியலானது. இப்போது அது வெறும் வதந்தியாக இல்லாமல் சாட்சிகளுடனும் ஆதாரங்களுடனும் ஒருவருக்கொருவர் நிரூபணமாகிப் பரவியது. பண்ணையார் முதலில் மகளை விசாரித்து, அறைந்து, தன் தந்தை ஸ்தானத்தை வெளிக்காட்டிக்கொண்டார். தொடர்ந்து சுரேஷ்பாபுவின் அப்பாவிடம் வந்து பேசினார். அவர்கள் கூடி அவனை அழைத்து, எச்சரித்து, அறிவுரைத்தனர்.

அதிலிருந்து பெரும் மாறுதல் துவங்கியது. அவையாவன: 1. பண்ணையார் க்ரிக்கெட் மேட்ச்சுகளைத் தன் வீட்டில் தனித்தே பார்த்தார். 2. நந்தினி சுரேஷ்பாபு வீட்டு வழியாக அல்லாமல் சுற்று வழியில் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து போனாள். 3. சுரேஷ்பாபு ஒழுங்காக அப்பாவுடன் வியாபாரத்தில் ஈடுபட்டான்.

இந்தப் பிரச்சனைக்குப் பிறகு எனக்கு சுரேஷ்பாபுவை முன் போலச் சந்திக்கக் கூடவில்லை. அவன் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். நாள்பட அவனுக்குள் இருந்த வருத்தங்கள் விலகி, மிகவும் பொறுப்பானவனாக ஆனபோது எனக்கும் நிம்மதியாகவே இருந்தது.

நந்தினி படிப்பை முடித்ததும் அவளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். சொந்தத்தில் பார்த்த மாப்பிள்ளைகள் சரிப்படவில்லை. தனது தகுதிக்குக் குறைவான இடமாக இருந்தாலும் கொடுத்துவிட பண்ணையார் தயாராக இருந்தார்.

இப்படி இருந்த நாட்கள் ஒன்றில் நந்தினியை மாலை நான்கு மணியிலிருந்து காணவில்லை. அடுத்த வீதியில் இருக்கிற பெரியம்மா வீட்டுக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள் அவள். சில மாதங்களாக அவள் மீது ஏற்பட்டிருந்த நம்பிக்கையின் பேரில் வீட்டினர் அனுமதித்திருந்தனர். ஏழு மணிக்கு மேல் ஆகியும் வீடு திரும்பாததால் பெரியம்மா வீட்டுக்குப் போகவும், அவள் அங்கே வரவே இல்லை என்று தெரியவந்தது.

விபரீதம் புரிந்து, தேடல் தொடங்கியதும் விசாரணைகள் சுரேஷ்பாபுவைப் பற்றி வந்தன. அவன் மதியம் இரண்டு மணிக்கு வெளியில் கிளம்பிவிட்டதாகத் தகவல். ஊருக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் இருவரையும் போன வாரம் பாலத்தருகே ஒன்றாகப் பார்த்ததாகவும், ராயப்பனின் கடைசி மகள்தான் இவர்களுக்குள் கடிதப் பரிமாறலைச் செய்வதாகவும் ரகசியங்கள் அம்பலமாகின. இருவருக்கும் வேண்டப்பட்டவர்களையும், சுரேஷ்பாபுவின் நண்பர்களையும், நந்தினியின் தோழிகளையும் விசாரித்து, கெஞ்சி, அழுதும் கூடக் கிடைத்த செய்திகள் உபயோகமானதாக இல்லை. எனக்கு சுரேஷ்பாபுவுடன் பழக்கம் இருந்தாலும் அவனது நண்பன் எனும்படியான தெருக்கம் கிடையாது. இருந்தும் என்னிடமும் அவனது அப்பா விசாரித்தார்.

பண்ணையார் டாக்ஸியை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தார். மறுநாள் முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை. உறவினர்கள் சிலரிடம் தொடர்புகொண்டு மேலும் துரிதமானார்கள்.

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆர்.வி.சலூனுக்கு சவரம் செய்துகொள்ளப் போயிருந்தேன். செய்தித்தாள் விஷயங்களைவிட இந்த உள்ளூர் விவகாரத்தில் அனைவரும் நாட்டம் மிகுந்திருந்தனர். தனக்குத் தெரியாதவற்றைக் கூடத் தெரிந்ததாகவும், பார்க்காததைப் பார்த்ததாகவும் சொல்லி வம்பை வளர்த்துவிட்டு, “நமக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? பெரிய எடத்து சமாச்சாரம்” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

“ஏப்பா,… உனக்கு ஏதாவது தகவல் கீது தெரியுமா?” கோழி பரமசிவம் கேட்டபோது சுதாரித்துக் கொண்டேன். “எனக்கு நேத்தைக்குத்தான் விசியமே தெரியும். எங்கம்மா சொல்லுச்சு. இன்னும் ஆள் கெடைக்கலீங்ளா?”

“ப்ச்சு…!” என்னிடம் எதுவும் பெயராத சலிப்பு அவரிடத்தில்.

சவரம் முடிந்து வீடு திரும்பினேன்.

பதினோரு மணிக்கு மேல் இருக்கும். வீதிகள் பரபரப்பாகி, சிலர் பேசுவதும், ஓடுவதும் கேட்க, பார்க்க முடிந்தது. நீலிப்பாறைக்காரர் களத்தில் சுரேஷ்பாபு – நந்தினி இருவரின் பிணங்களும் கிடக்கிறதாம். நாற்றமடிக்கத் துவங்கி, மாடு மேய்க்க வந்த சிறுவர்கள் வந்து பார்த்துச் சொன்னதில் தெரிந்திருக்கிறது.

அந்தக் களம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருப்பது. உபயோகத்தில் இல்லாமல் பாழடைந்து கிடக்கும். பக்கத்தில் இருந்த நிலங்களும் சோளப் பயிர் அறுத்து, கட்டைகளுடன் கிடந்ததால் செருப்புக் கால்களில் கவனத்துடன் ஓடிச் சேர்ந்தேன். சிலர் கதவைத் திறக்கும் முயற்சியில் இருக்க, திறந்திருந்த ஜன்னலின் பக்கத்தில் இன்னும் சிலர் மூக்கைப் பொத்திக்கொண்டு நின்றனர். சிலர் எட்டிப் பார்ப்பதும், பார்த்துவிட்டு விலகி மீண்டும் பார்ப்பதும், பிறகு கிசுகிசுப்பதுமாக இருந்தனர்.

“என்னப்பா இது, கருமத்த… ரெண்டுகளும் இப்பிடி உடு துணியில்லாமக் கெடக்குதுக…”

நம்ப முடியாமல் ஜன்னவில் பார்த்தேன். நிஜம்தான்! உள்ளே சுரேஷ்பாபு மற்றும் நந்தினியின் நிர்வாணச் சடலங்கள் அருகருகே மல்லாந்து கிடந்தன. நந்தினியின் இடது கையும், சுரேஷ்பாபுவின் வலது கையும் இணைந்து இறுக்கமான பிடியுடன் துவண்டிருந்தன. எறும்புகள். ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் சுமிசிடின் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் காலியாகக் கிடந்தது. சற்றுத் தள்ளி அதன் மூடி. அதற்கு அப்பால் ஆடைகள். அவர்கள் இருவருடையதும்தான் அவை என்பது உறுதிப்படுத்தாமலேயே தெரியவந்தது. உள்ளாடைகள் முதற் கொண்டு இருவரின் ஆடைகளும் ஒழுங்காக மடித்து, தனித் தனியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“எங்கப்பா,… கொஞ்சம் வெலகு…”

யாரோ தோளைத் தொட்டுச் சொன்னதும் அனிச்சையாக விலகினேன்.

சுரேஷ்பாபுவின் அம்மா, தங்கை, நந்தினியின் பெற்றோர், பெரியம்மா, ஊரார்…

முகங்கள்… அழுகைகள்… தலையிலும், மார்பிலும் அடித்துக்கொள்ளும் பறிகொடுத்த நெஞ்சங்கள்.

உள்தாழ் இடப்பட்ட கதவு பெயர்க்கப்பட்டு, பிணங்களை அதனருகே இருந்த வேட்டியிலும் சேலையிலுமாக மூடி, போலீசுக்குத் தகவல் போய், எல்லாம் முடிந்தது. பெற்றவர்களுக்கும் சொந்தங்களுக்கும் கடைசியில் பிடி சாம்பலாக மிஞ்சிற்று.

வதந்திகளையும், செய்திகளையும் பரப்பிக்கொண்டிருந்தவர்களுக்குப் பேச கிளுகிளுப்பான விஷயம் கிடைத்தது. உள்ளாடைகள் முதற்கொண்டு கழற்றி, ஒழுங்காக மடித்துவைக்கப்பட்டிருந்த அந்த உடைகள் உணர்த்தும் சேதியைப் பற்றித்தான் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

– கணையாழி, ஜூலை 1996.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *