இளமைக் கோலங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 2,337 
 
 

(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-28

அத்தியாயம்-25

அன்றைய தபாலில் சிவகுமாருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அப்பா அனுப்பியிருந்தார். அப்பா அடிக்கடி கடிதம் போட மாட்டார். ஏதாவது முக்கிய விஷயமென்றால்தான் எழுதுவார்; 

‘சிவபெருமான் கிருபையை முன்னிட்டு வாழும் என்றும் என்மேற் பட்சம் மறவாத அன்பு மகன் அறிவது, 

-சிவகுமாருக்கு அழுகை வந்தது. அப்பா நேரிலேயே வந்து பாசம் பொங்க அழைப்பதைப்போல இருந்தது. இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விடுவது அவனது வழக்கம். அப்பா, அவனோடு அதிகம் பேசாமல் கோபக்காரனைப் போல இருந்தாலும் வழக்கமான அப்பா தான். பிள்ளை என்ற பாசம் இல்லாமற் போய்விடவில்லை. சின்ன வயதில் எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தாலும், அதையும் மீறிய அன்பினால் எல்லாம் ஆட்கொண்ட நினைவுகள் மனதிலே விரிந்தன. அவனுக்கு ஒரு தலையிடி காய்ச்சல் என்றால் துடித்துப்போய் விடுவார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புத்திமதி சொல்லி வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இப்பொழுது அதிகம் கதைக்காமல் விட்டது அவன் பெரியவனாகி விட்டதற்குக் கொடுக்கின்ற கௌரவமாக இருக்கலாம். பிள்ளைகள் மேல் அன்பாகவும் பாசமாகவும் இருப்பதைப்போல அவருக்கு இனிமையாகக் கதைக்கத் தெரியாது. அதனால் கதைப்பதைக் குறைத்திருக்கலாம். இந்தக் கல்வியும் உத்தியோகமும் அவர் இட்ட பிச்சை என்றுதான் சொல்ல வேண்டும். 

பலவிதமான மனச்சலனங்களுடன் கடிதத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தான் சிவகுமார். ஏதோ ஒருவித பயம் மனதைக் கவ்விக் கொண்டுமிருந்தது. 

‘…எனக்கும் வயது போட்டுது இன்னும் எவ்வளவு காலத்துக்கென்றுதான் உங்கடை விஷயங்கள் எல்லாத்தையும் கவனிக்காமல் இருக்கிறது? இந்தச் சின்ன வயதிலேயே உனக்கும் பொறுப்புக்கள் அதிகம் தான். இதையெல்லாம் நான் யோசிக்காமல் இல்லை. அக்காவுக்கும் வயது ஏறிக் கொண்டே போகுது. காலாகாலத்திலை அவளது காரியத்தையும் ஒப்பேற்றி வைக்க வேணுமென்று அம்மாவும் நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்……’ 

-அக்காவும் பாவம். எவ்வளவு காலத்துக்கென்று தான் இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பாள்? அவள் வயதையொத்த சிநேகிதிகள் பலர் மணமுடித்துப் பிள்ளை குட்டிகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறார்களாம்! அப்பாவும் அவளுக்கென்று பேசாத சம்பந்தங்கள் இல்லை. ஒரு பெண்ணின் அழகையும் பண்பையும் விடப் பணத்தைத் தான் பெரிய தராதரமாக எல்லோரும் கருதுகிறார்கள். அப்படி அள்ளிக் கொடுக்க அப்பாவிடம் என்ன இருக்கிறது? வீடு கட்டுவதற்குப் பட்ட கடனில் சொச்சம் இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது. தம்பியின் படிப்புச் செலவுகளுக்கு, அப்பா மாறி அவன் மாறி அனுப்ப வேண்டும். அன்றாடம் வீட்டுச் செலவுகள்… அலுக்காமல் சலிக்காமல் அதைக் கவனிக்கின்ற அப்பா! எப்பொழுதுதான் இதற்கெல்லாம் விடிவு பிறக்கப் போகிறதோ? 

‘…கடவுள் இப்பதான் கண் திறந்திருக்கிறார். அல்லும் பகலும் நான் அவனை வேண்டியது வீண் போகவில்லை. அவன் செயலால் ஆகாதது ஒன்றுமில்லை. இப்பொழுது ஒரு நல்ல இடத்துச் சம்பந்தம் கிடைத்திருக்கிறது. மாப்பிள்ளை உத்தியோககாரனில்லைதான். சொந்த வியாபாரம் செய்கிறாராம். பெடியன் நல்ல குணசாலி. சீதனமென்று அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. எங்களுக்கு விருப்பப்படி செய்துவிடச் சொன்னார்கள்… 

அக்காவின் நல்ல குணத்துக்குத்தான் இப்படியொரு வாழ்க்கை அமைந்திருக்கிறது. ஓ! இனி அக்காவும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மனம் நிறைந்த மணாளனைக் கைப்பிடித்து…. 

‘….ஆனால் அவர்கள் இதை மாற்றுச் சம்பந்தமாகத் தான் செய்ய விரும்புகிறார்கள். மாப்பிள்ளையின் தங்கைக்கு உன்னைக் கேட்கிறார்கள். அவர்களே விரும்பி நல்ல சீதனமும் தருகிறார்கள். நல்ல வசதியுள்ள இடம். பெட்டையும் படிச்சவள். இந்த இடத்திலை சம்பந்தம் வைத்தால் எங்கடை கடன் தனியெல்லாம் தீரும். அக்காவின்ரை பிரச்சினையையும் தீர்த்து வைச்ச புண்ணியம் உன்னைச் சேரும். உங்கடை காரியங்கள் ஒப்பேறியிட்டுதென்றால்…. நான் ஒரு கவலையுமில்லாமல் சின்னவன்ரை படிப்புச் செலவுகளையும் மற்றப்பாடுகளையும் கவனித்துக் கொண்டு காலத்தைக் கடத்துவன். என்ரை பிள்ளையள் என்ரை சொல்லைத் தட்டுமாட்டுதுகள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு இருக்குது. நான் அவையளுக்குச் சரியென்று வாக்கும் கொடுத்திட்டன். என்ரை வாக்கைக் காப்பாற்றிறது உனது பொறுப்பு. கடவுள்தான் இந்த வழியைக் காட்டியிருக்கிறார்…. 

-‘கடவுளே!’ எனத் தன்னை மறந்து அழைத்தான் சிவகுமார். 

அப்பா பிள்ளை மேலுள்ள அசையாத நம்பிக்கையில் வாக்குக் கொடுத்துவிட்டார். இனி என்ன செய்வது? ஒரு கலியாணத்துக்கு எத்தனை வாக்குகள் கொடுக்கப்படுகின்றன? அப்பா ஒருத்திக்குக் கொடுத்தாராம்! நானும் ஒருத்திக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் அம்மாவும் யாருக்காவது சொல்லி வைத்திருப்பாளோ என்னவோ? 

“இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று எழுதிவிட வேண்டியதுதான் என எண்ணினான்.undஎந்த முகத்தை வைத்துக் கொண்டு எழுதுவது? அப்பா அதைத் தாங்கிக் கொள்ள மாட்டார். அவருக்கு மானம்தான் பெரிசு! தான் வாக்குக் கொடுத்துவிட்டு, பிறகு இல்லையென்று போனால் அது அவருக்குப் பெரிய மானம் போகிற விஷயம். அக்கா இப்பொழுது எந்த அளவுக்கு மனக்கோட்டைகளைக் கட்டி வைத்திருப்பாளோ தெரியாது. தம்பியின் முடிவை அறிவதற்கு வழிமேல் விழி வைத்துத் தபால்காரனைப் பார்த்துக் கொண்டிருப்பாள் – அவன் கொண்டு போய்க் கொடுக்கிற கடிதத்தைப் பிரித்துப் பார்க்கின்ற நொடிப் பொழுதிலேயே அவளது மனக் கோட்டைகள் இடிந்து போகும். அதை இடித்துப் போடுகிற தைரியம் எனக்கு ஏது? ‘செல்வி! நான் உனக்குத் துரோகம் செய்யப் போகிறேன்? என்னை மன்னித்துவிடு! இந்தக் கோழையைக் காதலித்த பாவத்திற்காக, இனி நீ வாழ்க்கை முழுதும் அழப் போகிறாய். ஏனெனில் எனது அக்காவையும் பெற்றோரையும் சிரிக்க வைக்கப் போகின்ற சுயநலக் காரணத்துக்காக உன்னை அழ வைக்கப் போகிறேன். ஒரு பெண்ணைச் சிரிக்க வைக்க வேண்டுமென்றால் இன்னொரு பெண்ணை அழவைக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாத ஒரு நியதியா? 

‘…ஒரு நல்ல நாளில் பெண் பார்க்கப் போகலாம்’ திகதி குறிப்பிட்டுப் பின்னர் அறிவிக்கிறேன் வரவும். 

இப்படிக்கு, 
அன்புள்ள அப்பா. 

-அன்புள்ள அப்பாதான்! தன் பிள்ளைகள் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும். அவர்களை நல்லபடி வாழ வைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் இதையெல்லாம் செய்கிறார். அவர் பெற்று வளர்த்த பிள்ளைகளை அவர் விருப்பப்படி செய்ய உரிமையிருக்கிறது. அக்காவை வீட்டுக்குள் வைத்திருந்ததுபோல எல்லோரையுமே பூட்டி வைத்திருக்க வேண்டும். பிறகு தனது விருப்பப்படி செய்வதற்கு இலகுவாக இருந்திருக்கும்! 

சிவகுமார் கலங்கிக் கொண்டிருந்தான். சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடிய இந்த முடிவு தனது வாழ்க்கையிலும் வந்து பெரிய அதிர்ச்சியைத் தரும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அவன் நினைத்திருந்ததெல்லாம் செல்வியைத் தான். இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளுக்கு முன்னே போய் நிற்பது? தன்னை மறந்து விடும்படி கேட்பது? 

பிரமை பிடித்தவனைப்போல வானத்தை வெறித்துப் பார்த்தான். பறவைகள் பறக்கின்றன. அவை மீண்டும் வந்து பதிய இருக்கின்றன. அந்தப் பறவைகள் ஏன் வானத்தின்மீது உயர உயரப் பறக்கவில்லை? எல்லாமே ஒரு நியதிக்குட்பட்டவை போலக் குறிப்பிட்ட எல்லைக் குள்ளேயே பறந்து பறந்து மீண்டும் இறங்கி விடுகின்றன. ஒரு பறவையாவது அந்த நியதிகளை மீறி உயரமாகப் பறந்து கொண்டே செல்ல மாட்டாதா என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், ஒன்றிற்காவது அந்தத் துணிவு வரவில்லை. அவை அப்படிப் பறக்காமலிருந்தது பெரிய குறையாக இருந்தது. 

இந்த விஷயத்தை யாருடனாவது மனம் விட்டுக் கதைத்து ஒரு முடிவு காணமுடியாதா என்று மனது தவித்தது. ஜெகநாதன் ஊருக்குப் போய்விட்டான். பஞ்சலிங்கத்தாருடன் இதையெல்லாம் கதைக்கக் கூடாது. அகிலாதான் சரியான ஆலோசனை சொல்லக்கூடிய ஒருத்தி. ஆனால், அவளும் இப்போது கோபக்காரியாகிவிட்டாள். எப்படியாவது மகேந்திரனைச் சென்று சந்திக்க வேண்டும் என எண்ணினான். 

அன்று மாலை அவனது வீட்டுக்குச் சென்றான் சிவகுமார்.

“ஹலோ சிவா!…. வெல்கம்!…. என்னை நீ இன்னும் மறக்கவில்லைத் தான்!” மகேந்திரனின் சந்தோஷமான வரவேற்பு. 

“நீதான்… எங்களை மறந்திட்டாய்… அந்தப் பக்கம் வாறதுமில்லை… நான் அண்டைக்கும் வந்தனான். உன்னைக் காண முடியவில்லை.” 

“தெரியாதே….இப்பிடித் தான் எங்கையாவது போயிருப்பன்… உன்ரை பாடுகள் எப்பிடி? முகமெல்லாம் வாடிப் போயிருக்குது… என்ன விஷயம்?” 

மகேந்திரன் சந்தோஷமாய்க் காணப்பட்டான்… அவனிடம் மகிழ்ச்சிக்குக் குறைவே இருந்ததில்லை. 

“மச்சான்… உன்னைப்போல எந்த நேரமும் மகிழ்ச்சியாயிருக்க எனக்கு ஏலாது – அது உனக்குக் கிடைச்சிருக்கிற வரப்பிரசாதம்… உன்ரை விஷயங்கள் வீட்டுக்குத் தெரியுமோ?” 

“இன்னும் இல்லை… ஆறுதலாய் அறிவிப்பம்! பேரப் பிள்ளையோடை போய் நின்றால் ஏற்றுக் கொள்ளத்தானே வேணும்… எல்லாம் வெல்லலாம் மச்சான்!” 

“சரி இப்ப விஷயத்துக்கு வருவம்- 

நான் உன்னட்டை ஒரு ஆலோசனை கேட்க வந்திருக்கிறன்…” எனக் கதையைத் தனது வழிக்குத் திருப்பினான் சிவகுமார். 

“அதென்னடாப்பா நான் ஆலோசனை சொல்ல வேண்டிய விஷயம்?… நான் அவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கே தெரியாது…” 

மகேந்திரனின் மனைவி தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அந்த நேரத்தில் சிவகுமாருக்கு அது மிகவும் தேவைப்பட்டது. 

“தாங்ஸ்” சொன்னான். 

“நொட் அற்ஓல்!” 

சிவகுமார் விஷயத்தைக் கூறினான். அவனது இக்கட்டான நிலையை அறிந்ததும் ஜெகநாதனும் கரிசனையோடு பேசினான். “செல்வியும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் மனசார விரும்பி யிருக்கிறீங்கள்… அவளும் காசுக்காரிதானே? கொப்பரிட்டைப் போய் விஷயத்தைச் சொல்லு… அவருக்குத் தேவையான சீதனத்தைப் பேசி அவளையே செய்து வைக்கட்டும்.” 

“அது விசர்க் கதை… மச்சான்… ஒருத்தியைக் காதலிச்சுப் போட்டு பிறகு போய் காசு தந்தால்தான் கலியாணம் முடிப்பன் என்று நிக்கிறது எவ்வளவு கேவலம்?” 

“நீதான் அப்பிடி நினைக்கிறாய்! செல்வியே இதை அறிஞ்சால் கட்டாயம் உதவுவாள்… உங்கடை தேவைக்காகத் தானே காசு கேட்கப் போறியள்? காசில்லாமல் கொக்காவைக் கட்டிக் கொண்டு போக இந்தக் காலத்திலை ஆர் வரப் போறாங்கள்?” 

“இப்ப பேசியிருக்கிறது மாற்றுச் சம்பந்தம்… அதைச் செய்யிறதாலை அக்காவின்ரை பிரச்சினையும் தீருது எண்டு அப்பா எழுதியிருக்கிறார்… அதுதான் நானும் யோசிக்கிறன்…” 

“நீ இப்ப செல்வியையே கட்டப் பொறாய் என்று வைச்சுக் கொள்ளுவம் – கொக்காவின்ரை அலுவலைக் கவனியாமல் விட்டிடுவியோ?” 

“ஆர் சொன்னது? எப்பிடியும் அக்காவுக்கு ஒரு மாப்பிளை தேடிக் கட்டி வைச்சிட்டுத்தான் என்ரை கலியாணத்தைப் பற்றி யோசிக்கிறது என்று இருந்தனான்… அதுக்குள்ளை அப்பா தான் அவசரப்படுறார்!” 

“நீ உழைச்சு சம்பந்தம் பேசி வைக்கிறதுக்கிடையிலை கொக்கா கிழவியாய்ப் போயிடுவாள் என்று நினைச்சிருப்பார்” என வேடிக்கையாகக் கூறினான் மகேந்திரன். அதில் சற்று நியாயமும் கலந்திருப்பதைச் சிவகுமாரன் உணர முடிந்தது. 

“அப்ப என்னை என்னதான் செய்யச் சொல்லுறாய்?” எனச் சினத்தோடு கேட்டான் சிவகுமார். 

“ஆத்திரப்படாதை… ஒரு ‘ரேக் இற் ஈஸி’ பொலிசி இருக்க வேணும் மச்சான்… எல்லாம் நன்மைக்கே என்று நினை… பிரச்சினைகளைப் பெரிசு படுத்தாதை… கொஞ்சம் ஆறுதலாய் யோசிச்சு ஒரு முடிவு எடுக்கலாம்… அது சரி இப்ப உன்ரை அகிலா என்ன செய்கிறாள்?” 

சிவகுமாருக்கு முகம் ஓடிச் சிவந்தது – அகிலாவை ‘உனது’ என அவன் குறிப்பிட்டுக் கதைத்து இன்னும் தங்களைக் கரவாகத் தான் கருதுகிறானோ என்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவனது மாறாத மனநிலையை எண்ணி மெல்லச் சிரித்தவாறே சொன்னான். 

“உனக்கு இன்னும் இந்த நக்கல் கதையளை விட விருப்பமில்லை?” 

“அதுக்கில்லை மச்சான்… ஒரு முக்கியமான விஷயம். இதுக்காக நானே வந்து உன்னைச் சந்திக்க வேணுமெண்டு இருந்தனான்.” 

“என்ன?” 

“ராஜேசனுக்குக் கலியாணம் முற்றாகியிட்டது!” 

சிவகுமாருக்கு இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை; “உண்மையைத் தான் சொல்லுறியா?” 

“ராஜேசன் தான் இதைச் சொன்னான்… யாழ்ப்பாணத்திலை நல்ல சீதனத்தோடை முடிக்கப் போறான்…” 

“அப்ப அகிலா?” 

“அதை என்னட்டைக் கேட்டு நான் என்ன செய்யிறது?… அதுக்காகத்தான் உன்னைக் காணவரவேணுமெண்டு நினைச்சனான். அகிலா பாவம் தான்… நானும் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பாத்தன்… கேட்கிறானில்லை…” 

சிவகுமாருக்கு அதுக்குமேல் அவ்விடத்தில் இருப்புக் கொள்ள முடியவில்லை. உடனடியாகப் போய் அகிலாவைக் காண வேண்டும் போன்ற துடிப்பு. அகிலா சில நாட்களாகச் சோகமே உருவாக இருப்பதற்குக் காரணம் இதுதானா? அது புரியாது அவளைத் தானும் புறக்கணித்து நடந்ததை நினைக்கக் கவலை பொங்கி வந்தது. மகேந்திரனிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான். 

எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. வானத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டன. ஓட்டை விழுந்த மேகம். பொய்யான மினுக்கங்கள். வானத்திலிருந்து ஒரு நட்சத்திரத்தின் வீழ்ச்சி. நெஞ்சை அடைத்துக் கொள்கிற கவலை. 

அத்தியாயம்-26

இரவு, நேரம்கடந்த பின்னர் தான் சிவகுமார் 2G அறைக்கு வந்தான். அவன் எப்பொழுது வருவான் என்று பதட்டத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் அகிலாவின் தாய், அவனைக் கண்டதுமே வாசலுக்கு ஓடி வந்தாள். 

“தம்பி… அகிலாவுக்கு ஏதோ சுகமில்லை… ஒருக்கால் வந்து பாருங்கோ…” 

அகிலாவுக்குச் சுகமில்லை என்றதுமே மனது ‘திடுக்’குற்றது. 

“என்ன சுகமில்லை?” 

மகேந்திரன் மூலம் ராஜேசன் வேறு கல்யாணம் செய்யப்போகிற செய்தியை அறிந்து கொண்டதுமே அவனது மனதைத் தாங்க முடியாத வேதனை ஆட்கொண்டது. இப்படியொரு செய்தியோடு எப்படி அகிலாவைக் காண்பது என்று புரியாத குழப்பத்தோடு சென்று கடற்கரையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். அப்பொழு தெல்லாம் அகிலாவின் நினைவுதான் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது வந்ததும் ‘அகிலாவிற்குச் சுகமில்லை’ என்றதும் உடலியக்கங்களெல்லாமே நின்று விட்டதைப் போலுணர்ந்தான்- 

“பிள்ளை இண்டைக்கு நல்லாய் மழையிலை நனைஞ்சிட்டாள் போல… வந்து தலையிடிக்குது என்று படுத்தாள். இப்ப பாத்தால்…” 

அம்மாவைத் தொடர்ந்து சிவகுமார் வீட்டுக்குள் நுழைந்தான். அகிலா கட்டிலிற் படுத்திருந்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்ப வளைப்போல மூச்சு வாங்கினாள். முகம் வீக்கமடைந்திருந்தது. 

அம்மா அகிலாவைத் தட்டி எழுப்புவதற்கு முயற்சித்தாள், அவள் விழிக்காமல் இருக்கவே “ஐயோ..என்டை பிள்ளைக்கு என்ன வந்ததோ…” எனப் புலம்பத் தொடங்கினாள். சிவகுமாருக்கு அகிலா கிடக்கும் கோலத்தையும் செய்வதறியாது நிற்கும் தாயையும் பார்க்கப் பெரிய பரிதாபமாக இருந்தது. 

காய்ச்சல் காயுதோ?” எனக் கேட்டவாறே அகிலாவின் கழுத்திலும் கன்னத்திலும் கையை வைத்துப் பார்த்தான் சிவகுமார்; “உடல் குளிர்ந்து போயிருக்குது”… என்று கூறினான். 

“டொக்டரிட்டைக் கொண்டு போவமோ?” என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டான். அகிலா தூக்கத்திலிருந்து விழித்தாள். சிவகுமார் வந்து நிற்பது ஒரு கனவு போலத் தெரிந்தது. பெரிய முயற்சியின் பின்னர் கண்களை மெல்ல மெல்ல விழித்தாள். எல்லாம் ஒரே சுழற்சியாகவும் அந்தரத்திலே பறப்பது போலவும் இருந்தது. சிவகுமாரோடு ஏதாவது பேச வேண்டும் என்று மாத்திரம் மனது துடித்தது. 

“அகிலா! என்ன செய்யுது? எழும்புங்கோ… டொக்டரிட்டைப் போகலாம்!” என்றான் சிவகுமார். 

அவள், “ஒன்றும் இல்லை” என்பதுபோலத் தலையை அசைத்தாள். எழுந்திருப்பதற்கு முயன்றாள். அம்மா கையைக் கொடுத்து அணைத்து உதவி செய்தாள். 

கண்களை விழித்துச் சிவகுமாரை விசித்திரமாகப் பார்த்தாள்.

“அகிலா, என்ன செய்யுது என்று சொல்லுங்கோ… டொக்டரைக் கூட்டி வரவா?” எனத் திரும்பவும் கேட்டான் சிவகுமார். 

அகிலா பிடிவாதமாக மறுத்தாள். 

“வேண்டாம் சிவா!… எனக்கு ஒன்றுமில்லை… மழையிலை நனைஞ்சிட்டன்… அதுதான் தலையிடி… தலைப்பாரமாய் இருக்கு… டிஸ்பிறின் போட்டிருக்கிறன்… எல்லாம் சரியாயிடும்… நீங்க போங்க” என ஒரு பொய்யைக் கூறினாள். 

சிவகுமார் எவ்வளவோ வற்புறுத்தியும் வைத்தியரிடம் போவதற்கோ அல்லது வைத்தியரை அழைத்து வரவோ அவள் சம்மதிக்கவில்லை. 

சிவகுமார் நீண்ட நேரம் அம்மாவோடு கதைத்துக் கொண்டிருந்தான். அகிலாவும் இருந்தாள். கதிரையிலிருந்தவாறே அவள் உறங்குவதைக் கவனித்த சிவகுமார்… “நீங்கள் போய்ப்படுங்கோ அகிலா…” எனக் கூறினான். தான் போகும்வரை அவளும் படுக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் பின்னர் விடை பெற்றுச் சென்றான். 

இரவு வெகுநேரமாகியும் சிவகுமாருக்கு உறக்கம் பிடிக்க வில்லை. அகிலா சுகயீனமாகக் கிடந்த கோலம் சுற்றிச் சுற்றிக் கண்ணுக்குள் வந்து கொண்டிருந்தது… முகமெல்லாம் அதைத்து வீக்கமெடுத்தது போல… பார்க்க மிகவும் பரிதாபமாக… அப்படி என்ன சுகயீனம்?… நிறைய அழுதிருப்பாளோ?… 

ராஜேசன் இன்னொருத்தியை முடிக்கப் போகிற விசயம் அவளுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது என்ற சமசியத்தில் முதலில் வந்தான். இதை எப்படி அவளிடம் தெரியப்படுத்துவது என்ற பெரிய சங்கடத்துடனேயே வந்தான். ஆனால், ஏற்கனவே அவளுக்கு விஷயம் தெரிய வந்திருக்கிறது. அந்த அதிர்ச்சி தான் அவளை உருக்குலைத்திருக்கிறது… 

அடுத்த நாள் விடியற்காலை சிவகுமார் வந்தான். 

“இப்ப எப்படி அகிலா?” 

“எனக்கு ஒன்றுமில்லை…!” 

“நீங்கள் சொல்லத் தேவையில்லை… முகத்தைப் பார்க்கத் தெரியுது… சுகமில்லையெண்டு!” 

அவள் பேசாமலிருந்தாள். 

“காசுக்காகப் பார்த்துத்தானே டொக்டரிட்டை வரமாட்ட ணெண்டனீங்கள்? ஆருக்காகத்தான் இப்படி மிச்சம் பிடிக்கிறீங்களோ தெரியாது” எனச் சற்றுச் சினத்துடனேயே கேட்டான். 

அகிலா மெதுவாகச் சிரித்து அவனைச் சமாதானப்படுத்தினாள்.

“அதில்லை சிவா, நான் டொக்டரிட்டை வராததுக்கு வேற காரணம்…” 

“என்ன?” 

“அப்புறமாகச் சொல்லுறன்.” 

சிவகுமாரும் அன்று அடிக்கடி வந்து அகிலாவின் சுகத்தை விசாரித்துக் கொண்டிருந்தான். அம்மா ‘மாக்கற்றுக்கு’ப் போய்விட்ட பின்னர் அகிலா சொன்னாள். 

“சிவா, நான் ஏன் டொக்டரிட்டை வரயில்லைத் தெரியுமா?” 

“ஏன்?” 

‘சாகிறதுக்காக நித்திரைக் குளிசை போட்டிட்டு ஒருத்தி டொக்டரிட்டைப் போவாளா? பிடிபட்டிடுவன் என்ற பயம் தான்.” 

சிவகுமார் அதிர்ந்து போனான். எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறாள்! பதட்டத்துடனும் பயத்துடனும் அவனது நடுங்கும் குரல் கேட்டது. 

“என்ன வேலை செய்தீங்க அகிலா? டொக்டரை நான் சமாளிக்கிறன்… வாங்க போவம்…” என அவசரப்படுத்தினான். 

“பயப்பிடாதையுங்கோ… எல்லாம் சத்தியெடுத்துத் தீர்த்திட்டன்… இப்ப நல்ல சுகம்.” 

அவன் அதிசயப்பட்டான். தூக்க மாத்திரை போட்டு, பிழைத்து யே! உயிரோடு இருக்கிறாள் என்றால், எதையுமே நம்ப முடியவில்லை 

“எந்தச் சக்தி என்னைத் தப்ப வைச்சது என்று எனக்குக்கூட அதிசயமாயிருக்கு சிவா… இப்ப சொல்லட்டா?… அந்தச் சக்தி நீங்கதான். என்ட வாழ்க்கைக்காக மனப்பூர்வமாகக் கவலைப் படுகிறவர் நீங்கள்தானே?… இந்த உலகத்தைவிட்டுப் போயிட வேணுமெண்டு அடிக்கடி சொல்லுவன்… இந்த உலகத்தில இன்னும் இருப்பதே உங்கள் ஒருவருக்காகத்தான்… உங்கட அன்புதான் என்னைச் சாகவிடாமற் தடுத்திருக்கு…” 

“இப்படிச் செய்யத் தூண்டிற அளவுக்கு உங்களுக்கு என்ன கவலை அகிலா?… என்னட்டைச் சொல்லியிருக்கலாமே?” 

“சொல்ல முடியாத அளவுக்குக் கவலையென்றால் வேறு என்ன செய்யிறது? சொன்னாலும் நீங்க தீர்த்து வைக்கவா போறீங்க?… நீங்களும் சேர்ந்து கவலைப்படுவீங்க.” 

“அப்படி என்ன சொல்ல முடியாத கவலை? ராஜேசன் கைவிட்டிட்டான் என்று தானே? அந்த மடையன் தேவையில்லை… இன்னுமொருத்தனை நான் பார்த்துக் கட்டி வைக்கிறன்.” 

அகிலா சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. பின்னர் நிதானமாகச் சொன்னாள் : 

“சிவா நான் ஏமாந்து போயிட்டன்… ராஜேசனை நம்பி என்ட வாழ்க்கையையே இழந்திட்டன்.” 

சிவகுமாருக்குப் புரிந்தது போலவும் இருந்தது. அதை எப்படிக் கேட்பது என்றும் புரியாமல் அகிலாவைப் பார்த்தான். 

“நீங்க நினைக்கிறது சரி. ஒரு பெண் எதை இழக்கக்கூடாதோ அதை நான் இழந்திட்டன்.” 

-ஒருவித குழப்பமுமில்லாமல் அவள் சொல்லிவிட்டாள்! அதனால் தான் பாதிக்கப்படாதவள் போல நிதானமாக இருந்தாள். 

“அது ஒரு விபத்து போல நடந்து முடிஞ்சிட்டுது… என்ட கெட்ட காலம் அன்றைக்கு நான் ஏன் இடம் குடுத்தன் என்றதே அதிசயமாயிருக்குது… சிவா, நான் கொஞ்ச நாளாய் கவலையோடு உங்களோடை கூடக் கதைக்காமல் இருந்ததுக்கும் காரணம் அதுதான்… இனி என்ன செய்கிறது… வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க வேண்டியதுதான்.” சிவகுமாருக்கு நெஞ்சு குமுறியது.குப் 

“அகிலா நான் போய் அவனைக் கண்டு கதைக்கட்டா?” 

“தேவையில்லை சிவா! நான் எவ்வளவோ அழுது குளறியும் இரங்காதவள் நீங்கள் கேட்டா சம்மதிக்கப் போறான்?… எனக்கு இனி அவன் தேவையில்லை.” 

சிவகுமாருக்கு அவள் புரியாத புதிராகக் காட்சியளித்தாள். அகிலா அவனது மனதை ஆற்றுவது போலச் சொன்னாள்; 

“சிவா! இதிலை கவலைப்பட ஒன்றுமில்லை… நான் ஒருதற்ற தயவிலை வாழவேண்டிய அவசியமில்லை… நான் உத்தியோகம் செய்து சம்பாதிக்கிறவள்… என்ட வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு உங்களைப் போன்ற நல்ல நண்பர்களின்ரை துணையோட சீவிக்கலாம் தானே? பொம்பிளைப் பிள்ளைதானே என்று விட்டிடாமல் எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையிலும் என்னைப் படிப்பிச்சு விட்ட அப்பாவை இப்பதான் நன்றியோடு நினைச்சுக் கொள்ளுறன் சிவா! அந்தப் புண்ணியத்தாலைதான் இப்ப என்ட காலிலை நிற்க முடியுது!” 

சிவகுமாரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன – அகிலா உங்களை என்னால் அளக்கவே முடியாது!” 

அத்தியாயம்-27

எதிர்பாராத விருந்தாளியைப் போல ஒரு பெரு மழை வந்தது. வெளித்திருந்த வானம் திடுதிப்பென்று இருண்டு கொண்டு வந்து பெருமழை கொட்டத் தொடங்கியது. 

சிவகுமாருக்கு வீட்டிலிருந்து தந்தி வந்திருந்தது – அப்பா சுபநாள் குறிப்பிட்டு அறிவித்திருக்கிறார். பெண் பார்க்கப் போக வேண்டும்! 

இடி இடித்தது. 

இப்பொழுது என்ன செய்யலாம்? அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையைப்போல வீட்டிற்கு ஓடிச் சென்று அவர் காட்டுகிற பெண்ணின் கழுத்தில் முடிச்சுப் போட்டுவிட்டு வர வேண்டியதுதானா? நோ! முடிச்சுப் போடுகிறவரை அவருடைய பிள்ளையாக இருக்கலாம். பிறகு? 

செல்வி அவனைப் பரிதாபமாகப் பார்ப்பது போலப் பிரமை ஏற்பட்டது – “நீங்கள் என்னை மறந்து போகப் போகிறீர்களா?”

-இல்லை செல்வி உன்னை எப்படி மறக்க முடியும்? 

விஷயத்தை ஆரம்பத்திலேயே அப்பாவுக்குத் தெரியப்படுத்தாமல் மூடி மூடி வைத்திருந்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது! இப்பொழுது போய் ஒருத்தியை விரும்புகிறேன் என்றால் அப்பாவே குழம்பிப் போகமாட்டாரா? 

பிரச்சினைக்குத் தீர்வு காண அகிலாவிடம்தான் ஆலோசனைக்குப் போக வேண்டும், ஆனால் அவள் கூட இப்பொழுது பட்டு நொந்து போயிருக்கிறாள். முதலில் அவளது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். 

அகிலா என்றதும் அவள் எத்தனையோ வகையில் ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்த சந்தர்ப்பங்கள் நினைவில் வந்தன. பாவம் அகிலா-அவளுக்கு இந்தக் கதியா? இனி அவள் வாழ்க்கைக்கு வழிதான் என்ன? வழியே தெரியாமல்தானே அவள் இறந்து போய்விட நினைத்திருக்கிறாள். 

ராஜேசனைப் போய் கொலை செய்யலாம் போலத் தோன்றியது. அந்த அரக்கனிடம் போய் இந்தப் பேதை எப்படிக் கெஞ்சியிருப்பாளோ என இரக்கத்துடன் எண்ணிப் பார்த்தான்… 

“…ராஜேஸ்…நான் கேள்விப்பட்டது உண்மையா?…உங்களுக்குக் கலியாணமாமே?….” அவன் ஒரு புதுமணப் பெண்ணைப்போல ஒரு பதிலும் சொல்லாது தலையைக் குனிந்து கொண்டிருந் திருப்பானோ, முட்டாள். 

“உண்மைதானா…? சொல்லுங்க… ப்ளீஸ்…?” 

ஒரு தலையசைவில் அவளது தலை வெடித்துச் சிதறுகிற பதிலைச் சொல்லியிருப்பான். அவளுக்கு வாழ்வு அளிப்பதாகக் கூறி அவளது வாழ்க்கையையே அழித்திருக்கிறான்… 

அகிலா, ஏன்தானோ அவனிடம் தோற்றுப் போனாள்? அவளது புத்தி சாதுர்யமெல்லாம் எங்கே ஒளிந்து கொண்டது? அல்லது அவனது ஆசை வார்த்தைகளில் மயங்கிப் போயிருப்பாளோ? பெலவீனம் இடம் பெண்களுக்கேயுரிய இயற்கையான கொடுத்துவிட்டதா? தங்கள் அழகைப் புகழ்ந்து பேசுகிற ஆண்களின் வார்த்தைகளில் மயங்கி மோசம் போகிற எத்தனையோ பெண்களைக் கண்டிருக்கிறான்… அந்த வரிசையில் இவளுமா? அல்லது … ஆண்கள் செக்ஸை எதிர்பார்த்து அன்பைப் பொழிகிறார்கள்… பெண்கள் அன்பை எதிர்பார்த்து செக்ஸைக் கொடுக்கிறார்களாம். அந்தக் கதையா? 

‘அவரோட இவ்வளவு பழகியாச்சு…சபலபுத்தி உள்ளவரெண்டால் போல விடுகிறதா?…திருத்தியிடலாமென்ட நம்பிக்கையிருக்கு… அதுக்காகத்தான் அவர் விரும்புகிற மாதிரியெல்லாம் நடக்கிறன்… இல்லாட்டி அவர் மற்ற கேர்ள்ஸ்சோடை திரியிறதைப் பார்த்துக் கொண்டிருக்கேலுமா?’ என அகிலா முன்பொரு முறை சொல்லியிருக்கிறாள். 

அந்த எண்ணத்திற்தான் உன்னை இழந்து விட்டாயா? ப்வ(ர்) கேர்ள்… ‘என்னில இவ்வளவு அன்பும் விருப்பமும் உள்ளவரோடை… வாழுறதிலை பிழை இல்லைத்தானே? எனக்கு இப்பிடியொரு அதிஷ்டம் கிடைச்சா… பெத்தவங்களுக்கும் பாரமில்லாமற் போகலாம் தானே?…’ என ஆரம்பத்தில் நியாயம் பேசினாய்…இப்பொழுது பார்த்தாயா அந்த நாகத்தை? 

சிவகுமார் சற்று நேரம்தான் கட்டிலிற் படுத்திருந்தான். எல்லாமே ஒரு கனவுபோல இந்த உலகமே வெறும் போலியாக இருந்தது. முகட்டிலே குடியிருக்கும் குருவி கூட்டிற்குள்ளிருந்து எட்டி இவனைப் பார்த்தது… கவலையோடு எல்லாப் பக்கமும் பார்த்தது. பின்னர் மிகவும் மெல்லிய குரலில் அழத் தொடங்கியது. 

…ஆண்குருவி எங்கேயோ ஓடியிருக்குமோ? அவன் நெஞ்சு நிரம்பிய கவலையோடு தலையணையில் முகத்தைப் புதைத்தான். குருவியின் அழுகை உள்ளத்தை வருத்தியது. அதற்கு எப்படி ஆறுதல் சொல்லலாம் என மனது துடித்தது. 

இந்த உலகத்திலே இப்படி வாழ்கிற சீவன்களும் இருக்கின்றனவா? எதற்காகக் கணவன் மனைவி குடும்பம் என்ற உறவுகள்? நம்பிக்கை என்ற ஒரு சத்தியத்தை வைத்துக்கொண்டே மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் அந்த நம்பிக்கைகள் இலகுவாக ஏமாற்றப்படுகின்றன. பிறகு மனநிறைவான வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம்? 

அகிலாவின் நினைவும் அவளது தோற்றமும் விசுபரூப மெடுத்துக் கொண்டு முன்னே நின்றன. தற்செயலாக அவள் செத்துப் போயிருந்தால்… என்ற எண்ணம் தோன்றியது. ‘வாழ்ந்து என்ன பயன்? செத்தே போய்விடலாம்?’ என அவள் விரக்தியாகச் சொல்லும்போதெல்லாம் துடித்துப் போயிருக்கிறான். அப்படிப் பேசுவதையே தாங்கிக் கொள்ள முடியாதவன் உண்மையிலேயே நடந்துவிட்டால் எப்படித் தாங்கிக் கொள்வேன்? அதற்குப் பிறகு எனது பொறுப்புக்கள், பிரச்சினைகள், சுமைகள்… தம்பி, அப்பா, அம்மா, அக்கா… செல்வி? 

மேற்கொண்டு அவனால் கட்டிலிற் படுத்திருக் முடியவில்லை. சிந்தனைகள் தடைபட்டன. தன்னைப் பொறுத்தவரை அகிலாவின் ஆக்கிரமிப்பை உணர முடிந்தது. எங்கும் அகிலா, எதிலும் அகிலா. முதலில் அகிலாவின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். கவலைகள் எல்லாவற்றிற்கும் பெரிய கவலைகளாக விசுவரூபம் எடுத்துக் கொண்டு நிற்கிற அவளது கவலைகளுக்கு ஒரு தீர்வு காணவேண்டும். அதற்குப் பிறகுதான் இந்த மனசும் சுகமடையும். 

நேரத்தைப் பார்த்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தான். சில்லிடுகிற குளிர். காலி வீதியில் ஏறி நடந்தான் – பட்டாளக் காரரைப்போல அணிவகுத்து நிற்கிற வீதி விளக்குகள்…அவனை வரவேற்று மரியாதை செய்கின்றன! புதிய பலம் வந்தவனைப்போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தான்… ‘இங்கு உண்மைகள் தூங்கவும், ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்?’ 

ராஜேசன் ஒரு சாதுவைப்போல அறையில் பதுங்கியிருந்தான் இந்தப் பூனையும் பால் குடிக்குமா? சிவகுமார் நைஸாக விஷயத்திற்கு வந்தான் – அவன் மிருகத்தனமாகச் சீறினான். 

“நீயும்தான் அவளை வைச்சிருந்தனி?..மறுகா என்னட்ட வாறாய்?…அவ்வளவு கரிசனையென்றால் நீயே அவளை முடிக்க வேண்டியதுதானே?” 

இவன் இழுத்துப்போட்டு உதைத்தான். அவனும் உதைத்தான் கட்டிற் சட்டத்தை எடுத்து விளாசினான், நல்ல அடி! எழுந்து என்ன செய்வது என்று புரியவில்லை. 

பிறகு அவனைப் பார்த்து மன்றாட்டமாகக் கதைத்தான். 

“ராஜேஸ்…அகிலா பாவம்…அவளைக் கைவிட உனக்கு எப்பிடி மனம் வந்தது?…பெண் பாவம் சும்மா விடாது… தயவு செய்து அவளைக் கைவிட்டிடாதை.” 

“பெண் பாவமும்… மண்ணாங்கட்டியும்…மண் தின்னுறதை மனிசன் தின்னுறான்… நீயேன் அவளுக்காக இவ்வளவு கரிசனைப்படுகிறாய்?” அவனது ஏளனம். 

சற்று நேரம் பிரமை பிடித்தவனைப்போல நின்றான் சிவகுமார். பின்னர், “ராஜேசன்… நான் விடமாட்டன்… கடைசிவரையும் விடமாட்டன்… ஒரு முடிவு தெரியாமல் இஞ்சையிருந்து போகமாட்டன்…” என ஆவேசம் வந்தவனைப் போலக் கர்ச்சித்தான்.

அதைக் கண்டு ராஜேசனுக்கு மிரட்சி ஏற்பட்டது. எப்படியாவது அவனை அவ்விடத்தைவிட்டு அகற்றினாலே பெரிய நிம்மதி எனத் தோன்றியது. 

“சிவகுமார்… சும்மா… விளையாடாமல் போ!… நான் வேணுமெண்டா இப்படிச் செய்தனான்?” 

“எனக்கு எந்தச் சமாதானமும் வேண்டாம்…. நீ அகிலாவை முடிக்க வேணும்!” 

“தயவுசெய்து எனக்குத் தொல்லை தராமல் போ… என்ர விருப்பத்துக்கு முடிக்க பேரன்ஸ் விடமாட்டானுகள்….” 

சிவகுமார் சீறினான், “பேரன்ஸைக் கேட்டா எல்லாம் செய்தனீ?… மடையா அவளைக் கலியாணம் செய்யிறதாய் சத்தியம் செய்து குடுத்திருக்கிறாய்… கடைசி வரை கைவிடமாட்டன் எண்டு நீ சொன்னதை நம்பித் தானே அவள் மோசம் போனாள்…?” 

“பெரிய சுத்தம் பேசாதை!… அவளுடைய வீட்டிலேயே அடுகிடை படுகிடையாய்க் கிடந்தது நீதான்… மறுகா என்ரை தலையிலை கொண்டு வந்து கட்டப் பார்க்காதை…” 

ஓர் அற்ப புழுவைப் பார்ப்பதைப்போல அவனைப் பார்த்தான் சிவகுமார்… 

‘தூ!’ 

வெளியேறி நடந்தான் கடற்கரையை நோக்கிச் சென்றன கால்கள். கடற்கரைப் பாதையில் புகையிரதமொன்று விரைந்து ஓடுகிறது. பாதையோரமாகக் கடலின் கரையில் அமர்ந்திருக்கிற குடிசைத் தொடர்கள்… அவற்றிலே அமைதியாகச் சீவிக்கின்ற ஏழைமக்கள்! புகையிரதங்களின் கோரமான இரைச்சலும்… கடலின் ‘வருவேன், வருவேன்!’ எனப் பயமுறுத்துகிற ஓசையும் அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை! 

கடல் அலைகள் ஓடிவந்து மண்ணைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துச் செல்கின்றன. ஒரு நாளைக்கு ஆவேசம் கொண்டு கொந்தளித்து வந்து இந்த மண்ணையும் குடிசைகளையும் அழித்துவிட்டுப் போகவும் தயங்காது! தன்னோடு ஒட்டி உறவாடித் தன்னை நம்பிச் சீவிக்கிற ஏழைகள் என்ற இரக்கம் அதற்கு இருக்காதோ? 

சிவகுமார் ஒரு கல்லில் அமர்ந்து கொண்டான். 

‘அவளை நீயும்தான் வைச்சிருந்தனீ?… பிறகேன் என்னட்டை வாறாய்?’-கடலின் அட்டகாசமான சிரிப்பு! அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை… எழுந்து அறையை நோக்கி நடந்தான். 

நிலவு எறித்துக் கொண்டிருக்கிறது; ஒரு பாவமும் அறியாமல்! வாசலுக்கு வந்து கதவைத் திறந்தான். 

நிழல்கள்! அவனைச் சுற்றி, அவனை மையமாகக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு பருமன்களில் நிழல்கள் தென்பட்டன. அவன் மெல்ல நடந்தான். நிழல்களும் அசைவு பெற்று வெவ்வேறு கோணங்களிலும் பருமனிலும் மாற்ற மெடுத்தன. 

வீதி விளக்கின் வெளிச்சத்திலிருந்து உருவெடுத்தது ஒரு நிழல். வீட்டிலுள்ள வெவ்வேறு விளக்குகளிலிருந்து தோற்றமெடுத்தன சில நிழல்கள். முன் வீட்டு வெளிச்சத்திலிருந்து இன்னும் சில. தூர இருக்கின்ற நிலவின் பார்வையிலும் ஒரு நிழல். அவை எல்லாமே அவனது தோற்றத்தில் தாங்கள் உருக் கொடுக்கிற நிழல்களைத் தான் நிஜங்கள் என்று கருதுகின்றனவோ- மனிதர்களைப் போல! தாங்கள் பார்க்கின்ற கோணங்களில்தான் தவறு இருக்கிறது என்பதை யாருமே உணரவில்லை. சரியான நிலைக்கு வந்து உண்மையை அறிந்து கொள்ள – நிஜத்தை உணர்ந்து கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை! 

‘அகிலாவை நீயும்தான் வைச்சிருந்தனீ?… அவ்வளவு கரிசனையெண்டால் நீயே அவளை முடிக்க வேண்டியது தானே?’ 

சரிதான், அறிந்தோ அறியாமலோ அவளது வாழ்க்கை பாதிக்கப்படுவதற்குத் தானும் காரணமாயிருந்திருக்கிறேன் என்ற உண்மை புலப்பட்டது. அந்தப் பேதை செத்துப் போகத் துணியும் அளவிற்குத் தள்ளப்பட்டதற்குத் தனது பங்கும் இருக்கிறது. அதை அவள் மறுத்தாலும் உண்மை அதுதான். மற்றவர்கள் என்ன கதைகளைச் சோடித்தாலும் எங்கள் வரையில் தூய்மையாக இருந்தால் சரி என நினைத்துப் பழகியது எவ்வளவு தவறாகப் போய் விட்டது. இப்பொழுது ராஜேசனும் மற்றவர்களில் ஒருவனாக நின்று அவளைக் கைவிட்டு விட்டான். இனி? அவளுக்கு வாழ்க்கை அளிக்க வேண்டியவன் நீ தான் – என அவனது மனச்சாட்சி பேசியது. சிவகுமார் அதற்கு அடங்கினான். தனது மற்றைய சகல பிரச்சினைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் அகிலாவுக்கு வாழ்வு கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என முடிவெடுத்தான். 

அத்தியாயம்-28

வழக்கமாகவே அதிகம் பேசாத சுபாவமுடையவன் சிவகுமார். இப்பொழுது அதுவும் இல்லை! நன்றாகப் பழக்கமானவர்களுடனேயே கதைக்க விருப்பமில்லாதிருக்கிறது. ஓரிரு வார்த்தைகளில் சம்பாஷணையை வெட்டிக் கொண்டான். எல்லோரையும் தவிர்த்துத் தனிமையாக இருந்தால் போதும் எனத் தோன்றுகிறது. இந்த உலகம், மனிதர்கள், மரம், செடி, கொடி ஒன்றும் வேண்டாம், எல்லோரையும் உதறிவிட்டுத் துறவியைப்போல இருக்க வேண்டும். அப்படியானாற்தான் இப்பொழுது விட்டகுறை தொட்டகுறையாக இருக்கிற உறவுகளின் தொல்லைகளும் இல்லாமற் போகும்! 

ஓ! அதுகூட எவ்வளவு சுயநலமான எண்ணம்? தொல்லைகள் இல்லாமல் சுகமாக இருக்க விரும்புகிற மனம்! மற்றவர்களுக்காக இரங்குவதிலும் அவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பதிலும் உள்ள நிம்மதி வேறு எங்கே கிடைக்கும்? எதையும் எங்களுக்காக என எண்ணும்பொழுது தான் பிரச்சினைகளே உருவாகின்றன. 

ஊருக்குச் சென்றிருந்த ஜெகநாதன் வந்ததும் படுக்கை யிலிருந்த சிவகுமாரைக் கவனித்தான். வந்ததுமே பஞ்சலிங்கத்தார் மூலம் செய்தி கிடைத்துவிட்டது. 

“என்ரை புத்திமதியைக் கேட்டு நடந்திருந்தால் இப்படி முடிஞ்சிருக்குமே?…. அநியாயமாய்ப் போய் மாட்டுப் பட்டிட்டாய்… இப்பிடி நடக்குமென்று எனக்கு அப்பவே தெரியும்…” எனத் தனது தீர்க்கதரிசன ஞானத்தைக் குறிப்பிட்டுக் கதைத்தான். 

“சிவா! நல்லாய் யோசிச்சுத்தான் இந்த முடிவை எடுத்தனியோ?… ராஜேசனோடை அவள் ஆடித் திரிஞ்ச ஆட்டங்கள் ஏளனமாகச் சிரித்தான். 

“உங்களைப்போல ஆம்பிளையள் செய்யிற பாவங்களுக்குப் பிராயச்சித்தமாயாவது இது இருக்கட்டும்.” என அவனது வாயை அடக்குவதுபோலக் கூறினான். பின்னர் அங்கிருக்கப் பிடிக்காமல், எழுந்து அகிலாவைக் காண்பதற்குச் சென்றான். 

மலர்ச்சியோடு வரவேற்றாள் அகிலா. சில நாட்களுக்குள் அவளிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பட்டுத் தெளிந்த புன்னகை. அமைதியான பார்வை. 

அவன் கதிரையில் அமர்ந்தபொழுது நேற்றைய அடியில் பட்ட கைமூட்டு வலியெடுத்தது. கட்டிற் சட்டம் நினைவில் வந்தது. ‘அம்மா’ என முனகியவாறு நிமிர்த்திருந்தான் சிவகுமார். 

அகிலா காரணம் கேட்டாள். பாத்றூமில் சறுக்கி விழுந்ததாகப் பொய் கூறினான். 

“சிவா! சறுக்கி விழுந்தீர்களா?… ஆராவது பாத்தானுகளா?”

“இல்லையே ஏன்?” புரியாமல் விழித்தான் சிவகுமார். 

“சந்தர்ப்பம் ஒரு சகதிநிலம்… அதில் சறுக்கி விழாதவர்கள் மிகவும் சொற்பம்… ஆனால், நாலுபேரறிய விழுந்தவன் மாத்திரம் நகைக்கப்படுகிறான் என யாரோ சொல்லியது ஞாபகம் வந்தது.” 

இவளால் இப்படியெல்லாம் பேசமுடிகிறதே என ஆச்சரியமேற்பட்டது. தனது மனநிலையை மறப்பதற்குத்தான் இப்படி நடந்து கொள்கிறாளோ தெரியவில்லை. அல்லது தன்னையே தேற்றிக் கொள்கிறாளா? அவன் மௌனமாகச் சிந்தனையிலாழ்ந் திருந்தான். அகிலாவே வலிந்து கதைத்தாள். 

“என்ன சிவா, கவலைப்பட வேண்டியவள் நானே… பேசாமலிருக் கிறன்… நீங்க ஏன் உம்முனாமூஞ்சி கொட்டிக் கொண்டிருக்கிறீங்க?” 

சிவகுமார் ஒரு விசித்திரமான சிரிப்பை வெளிப்படுத்தினா கவலைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மனம் முதிர்ச்சி அடைந்த நிலை; இன்னும் பல பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு மனதை வைரமாக்கிய நிலை. மனிதாபிமானத்திற்காக தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்த ஞானம். 

அப்பா அனுப்பியிருந்த தந்தியை அவளிடம் கொடுத்தான் – சுபநாள்! அதைப் பார்த்துவிட்டு அகிலாவும் ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டவள் போல அமைதியானாள். பின்னர் கேட்டாள். 

“சிவா!… நீங்கள் ஏன் இப்பிடிக் கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்கிறீங்க?… அப்பா பேசின கலியாணம் பிடிக்காட்டில்… ஒன்றுக்கும் யோசியாமல் போய் செல்வியைக் கூட்டிக் கொண்டு வாங்க… அக்காவுக்கும் கடவுள் படி அளக்காமலா விடுவார்?… அந்தக் கவலையையும் பெரிசுபடுத்தாமல் விடுங்க… 

“…என்னைப் பற்றியும் கவலைப்பட வேணாம்… நாங்க நினைக்கிற வாழ்க்கை கிடைக்கா விட்டால்… அமைகிற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழப் பழக வேணுமெண்டு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க… எனக்கு என்ன குறை? சாப்பாட்டுக்கு வழியில்லாமலா இருக்கிறன்?… 

“சிவா!… வாழ்க்கை என்று ஒன்று…. இருந்தாலே போதும்… சந்தோஷம் வேண்டாம்… இந்த உலகத்திலை எத்தனையோ பொம்பிளையள் சீதனப் பிரச்சினையாலேயே கலியாணம் இல்லாமல்… அரைகுறை வாழ்க்கை வாழுகினம்… அப்பிடி நானும் இருந்திட்டுப் போறன்… 

“அதுக்கு நான்… ஒரு காலும் சம்மதிக்கமாட்டன் அகிலா… நான் உங்களைக் கலியாணம் செய்ய முடிவு செய்திருக்கிறன்!” 

அகிலாவுக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. என்ன இது? இப்படியும் நடக்கலாமா? சிவா விளையாட்டுக்காக அப்பிடிச் சொல்லுகிறானா? 

அவனது நிதானம் தவறாத பார்வையை ஏறிட்டு நோக்கினாள். ஒன்றையும் அளக்க முடியவில்லை. 

“சிவா… உண்மையாத்தான் சொல்லுறீங்களா?” எனப் பதட்டத்தோடு கேட்டாள். அவன் பேசாமலிருந்தான். மீண்டும் ஒரு தவறு நடப்பதற்கு தான் உடந்தையாவது போன்ற பய உணர்வு அவளுள் ஏற்பட்டது. நடுக்கத்தோடு கூறினாள். 

“சிவா… வேலை இல்லாதவனுகள்… ஆயிரம் கதையளைக் கதைப்பானுகள்… அதுக்ாக நீங்க இப்படிச் செய்ய வேணாம்!” 

“நான் ஒருத்தற்றை கதையையும் கேட்கவில்லை… நல்லாய் யோசிச்சு… நானாகத்தான் இந்த முடிவு எடுத்தனான்” 

அகிலாவுக்குக் கண்கள் கலங்கின. ராஜேசன் காரணமாக ஆண் வர்க்கத்தின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு இருந்த இடம் தெரியாமல் பறந்தது. சிவகுமாரோடு பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை நினைத்து மனதுக்குள் பெருமையடைய முடிந்தது. இவனோடு தான் சினேகிதமாய்ப் பழகியது எவ்வளவு அநியாயமாகப் போய்விட்டது என மறுகணம் தன் மீதே வெறுப்புத் தோன்றியது. சிவகுமாரின் நிலையை எண்ண இரக்கம் மேலிட்டது. 

”சிவா என்னில இரக்கப்பட்டு நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம்… மறுகா… நீங்கதான் அதுக்காகக் கவலைப்படுவீங்க… நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டன்” 

சிவகுமார் வெறிபிடித்தவனைப் போல எழுந்து தனது தலையைச் சுவரோடு பலமாக அடித்தான் “என்னை எல்லாருமாச் சேர்ந்து என்னதான் செய்யச் சொல்லுறீங்கள்?” 

அகிலா ஓடிவந்து அவனைப் பிடித்துத் தடுத்தாள். அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிந்தது. “என்ன சிவா இது?… குழந்தைப் பிள்ளை மாதிரி?…” எனக் கண்டித்தவாறே தனது சேலைத் தலைப்பால் இரத்தத்தைத் துடைத்தாள். 

அப்பொழுது அவனுக்கு அழுகை வந்தது. விம்மலெடுத்து அழுதான். 

ஆதரவோடு அவனது கண்ணீரைத் துடைத்துவிட்டவாறு அகிலா மெதுவாகக் கேட்டாள், “செல்வியைப் பற்றி நீங்க நினைச்சுப் பாக்கயில்லையா?” 

அவனுக்கு எதையுமே நினைத்துப் பார்க்க முடியாத நிலை. குழம்பிய மனசு. அசதியாக இருந்தது. அகிலா தேநீர் கொடுத்து கட்டிலிற் படுக்க வைத்தாள். 

“ஒன்றுக்கும் யோசியாமல்… ஆறுதலாய்ப் படுங்க… அப்புறமா முடிவு எடுக்கலாம்!” 

ஆழ்ந்த உறக்கத்தின் பின் மாலையில் கண்விழித்தான். குளிர்மையான காற்று வீசி வந்தது. அகிலா ஒரு தேவதையைப் போல அந்த அறைக்குள் பிரவேசித்தாள். 

கட்டிலிற்குப் பக்கத்தில் கதிரையை இழுத்து அமர்ந்து கொண்டாள். சிவகுமாரின் தலைமுடியைக் கோதிவிட்டாள். 

“சிவா?”…. 

அவன் பேசாமல் அவள் பக்கமாகத் திரும்பினான். 

“தயவு செய்து நான் சொல்லுறதை ஆறுதலாய்க் கேளுங்க… நாங்க அவசரப்பட்டு ஒரு முடிவும் எடுக்கக்கூடாதுதானே? 

“நீங்க உங்க பக்கத்திலை மட்டும் யோசிக்கிறீங்க… என்ர பக்கத்திலையும் நினைத்துப் பார்க்க வேணும்தானே?… உங்கட முடிவுக்கு நான் கட்டுப்பட வேணுமெண்டு ஏன் எதிர்பார்க்கிறீங்க?… சுதந்திரமா முடிவு எடுக்கிற உரிமை எனக்கும் இருக்குத்தானே…? 

“இரக்க உணர்வு உங்களுக்கு மட்டும்தான் இருக்க வேணுமா?… நான் அதெல்லாம் இல்லாத மரக்கட்டையெண்ணு நினைச்சீங்களா?… 

“….வெறும் மனச்சாட்சி இல்லாத மிருகமாய் என்னை இருக்கச் சொல்லுறீங்களா?… முந்தியே ஒருத்தனுக்கு, அவர்…. விருப்பப்படி யெல்லாம் வாழ்ந்த என்னை…. எப்படி இன்னொரு கலியாணம் செய்யச் சொல்லுவீங்க?… அந்த அளவுக்கு நான் கேடுகெட்டவளா?” 

-பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். சிவகுமார் எழுந்து செய்வதறியாது திகைத்தான். 

“அகிலா… ப்ளீஸ்… அழ வேண்டாம்!” 

சற்று நேரம் தனது கைகளுக்குள் அழுகையை அடக்கிக் கொண்டு குனிந்திருந்தாள் அகிலா. பின்னர் சேலையால் கண்களைத் துடைத்தவாறே நிமிர்ந்தாள். 

“இல்லை… அகிலா… ராஜேசனும் உங்களை ஏமாத்தியிட்டான்… அதுதான் நான் இந்த முடிவு எடுத்தன்” என அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தான்… 

“மற்றவனுகள் சொல்லுறதுபோலே… நான் ஆராவது ஒரு மாப்பிளை பிடிக்கத்தான் திரியிறன் என்று நீங்களும் நினைச்சிருக்கிறீங்களா…?” 

சிவகுமாரால் அந்தச் சூட்டைத் தாங்க முடியவில்லை. அவளை நேருக்கு நேர் நோக்குவதற்குக்கூடத் திராணி இல்லாதவன் போலத் தலைகுனிந்தான். பின்னர் வெளியேறி நடந்தான் கடல் அழைக்கிறது… 

மரங்கள் காற்றில் அசைகின்றன. காற்றில்லாத போது துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் காற்று வர அதே மகிழ்ச்சியோடு ஆடுகின்றன. பறவைகள் தாழப் பறக்கின்றன. தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து மகிழ்கின்றன. மனிதர்கள் இயங்குகிறார்கள். பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே இரவு வந்து விடுகிறது. யாரையும் எதிர்பாராமல் அடுத்த நாளும் விடிகிறது. 

இந்த நியதிகளை மாற்றுவதற்கு இனி யாரும் பிறந்து வரப் போவதில்லை. மாற்றவும் முடியாது. சிவகுமாருக்கு இவை விசித்திர மாகக் கற்பனையிற் தோன்றியது. அவற்றிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருப்பதாகச் சிந்தனையில் ஆழ்ந்தான். ‘எங்களைப் பார்த்து நீங்களும் சந்தோஷமாக வாழுங்கள்’ என அவை சொல்வது போல இருக்கிறது…

இரவு புகையிரதத்தில் யாழ்ப்பாணம் போவதற்காக அகிலாவிடம் விடைபெற வந்தான் சிவகுமார். அவள் ஒரு பார்சலை அவனிடம் கொடுத்தாள் – இரவுச் சாப்பாடு. இந்தச் கரிசனை!… இந்த அன்பு!… இதற்கிடையில் பெரிய பிரிவு நேரப் போவது போன்ற ஏக்கம்… உள்ளத்தில் அடங்காது உடைத்துக் கொண்டு வருகிற பாசம், கண்ணீராகத் துளிர்த்தது. 

“ரேக்…இற்…ஈஸி!” என்றாள் அகிலா. ஆனால், அவளது கண்களும் கலங்கிவிட்டன. இனி, அவன் போக வேண்டும். 

(முற்றும்)

– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.

– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *