இளமைக் கோலங்கள்





(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-10
சிவப்பு விளக்கு வாகனங்களை எச்சரித்து நிறுத்தி, பொது மக்களை ‘இங்கே கடக்க’ உதவி செய்தது. சிவகுமார் வீதிக்கு மறுபக்கமாக நடந்தான்.
ஒரு ‘ரீ’ குடித்தால் நல்லது போலிருந்தது. எக்கவுண்ட் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினான் சிவகுமார். சைக்கிளில் வந்து கொண்டிருந்த பஞ்சலிங்கம் இவனைக் கண்டதும் அவதி யாய்க் குதித்து சைக்கிளை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றார்.
“தம்பியைத்தான் ஒரு அலுவலாய்க் காணவேணுமெண்டு நினைச்சனான்.”

பஞ்சலிங்கத்தார் தொழிற் திணைக்களத்தில் வேலை செய்கின்ற ஒரு ‘சீனியர் ஹான்ட்’ எக்கவுண்ட் கடைகளில் கண்டு அறிமுகமாகிய பழக்கம்.
சைக்கிளுக்கு ‘பிறேக்’ இருந்தாலும் அவர் அதைப் பாவிக்க விரும்புவதில்லை. “இப்படிப் பாவிக்கிறபடியால்தான் பதினைந்து வருசத்துக்கு மேலை அது கிடந்து உதவுது” எனப் பெருமையுடன் கூறிக் கொள்வார். பஸ் போக்குவரத்து வசதிகள் திருப்திகரமாக உள்ள கொழும்பிற்கூட அவர் தனது சைக்கிளைக் கொண்டு வந்து வைத்திருப்பது அதன் மேலுள்ள காதலினால் அல்ல. பிரயாணச் செலவுகள் மிச்சப்படுமே என்பதற்காகத்தான்.
‘என்னண்ணை… ஏதாவது அவசரமான அலுவலே?…”
“சீ! சும்மா ஒரு காரியமாய்க் கதைக்க வேணும்…. எங்க அறைக்குத்தானே போறீர்?… வாரும்… நானும் வாறன் போயிருந்து ஆறுதலாய்க் கதைப்பம்.”
“ஓம்… வாங்கோ ஒரு ரீ அடிச்சிட்டுப் போவம்…”
கடையில் இருவருமாகத் தேநீரை அருந்திவிட்டுச் சிவகுமார் கணக்குக் கொப்பியை எடுத்துத் தனது பக்கத்தில் கணக்கைக் குறித்துவிட்டு வந்தான்.
சைக்கிளை உருட்டியவாறு நடந்துகொண்டே, “எங்கை உம்மடை சிநேகிதர் அறையிலைதான் இருப்பினமோ?” எனக் கேட்டார் பஞ்சலிங்கத்தார்.
“சனிக்கிழமையெல்லே?… இப்ப போய் அவங்களைப் பிடிக்க மாட்டியள், மகேந்திரன் சிங்கள ரியூசனுக்குப் போயிருப்பான்… ஜெகநாதனும் ஏதோ படத்துக்குப் போக வேணுமெண்டவன்.”
என்ன விஷயமாகக் கதைக்கப் போகிறார் என்பது புரியாமலிருந்தது சிவகுமாருக்கு. அவரது நடவடிக்கையைப் பார்த்தால் விஷயம் ஏதோ முக்கியமானதாக இருக்கும் போலிருக்கிறது.
தனது வழுக்கைத் தலையை ஆதரவோடு தடவி விட்டவாறே அறையினுள் பிரவேசித்தார் பஞ்சலிங்கம். சிவகுமார் மேசைக்கு முன்னாலிருந்த கதிரையை இழுத்துப் போட்டபொழுது, “என்னத்துக்கு நான்… இதிலை இருக்கிறன்” என்றவாறே கட்டிலில் தனது புகழுடம்பை அமர்த்தினார். (புளிமூட்டை எனப் புகழ் பெற்றது அவரது உடம்பு) மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து விட்டுக் கொண்டு அந்த அறையை நிதானமாகப் புலனாய்வு செய்தார். கண்கள் ஒவ்வொரு பொருளையும் துளாவியெடுத்தன. அங்கு வீசப்பட்டிருந்த சிகரட் கட்டைகள் அவருக்குத் துப்புக் கொடுத்தன.
“உதார் தம்பி… அந்தக் கட்டிலிலை படுக்கிற ஆள்?”
‘ஏன் கேட்கிறியள்… அது ஜெகநாதன்ரை கட்டில்!’
“நல்லாய்ச் சிகரட் குடிப்பார் போலையிருக்கு… அங்கை பார்த்த இடமெல்லாம் சிகரட் கட்டைதானே!”
சிவகுமார் ஆமோதித்தான்; “சிகரட் இருந்தால் அவனுக்குச் சாப்பாடும் தேவையில்லை.”
ஏதோ பெரிய ஹாஸ்யத்தையே கேட்டு விட்டவர் போல பஞ்சலிங்கத்தார் தனது உடல் குலுங்க கெக்கட்டமிட்டுச் சிரித்தார். தனது வழுக்கைத் தலையை அன்போடு தடவுகின்ற பணியையும் செய்தார். அவரது அபிப்பிராயங்களும், சிரிப்பும் கதைக்கின்ற விதமும், இன்று முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருந்தது.
“நல்லாய்ச் சொன்னாய் தம்பி… சில பேருக்கு… அது ஒரு பழக்கமாய்ப் போச்சு! நானும் முந்தி இப்பிடித்தான்… இப்ப குறைவு… எப்பாலும் இருந்திட்டு டிறிங்ஸ் எடுக்கிற நேரங்களிலை பாவிப்பன்… இவர் எப்படி?… ஜெகநாதன் குடிக்கிறவரே?”
“சில வேளையிலை குடிச்சிட்டும் வருவான்… ஆனால் குழப்படி ஒண்டுமில்லை…”
“ஓம்! ஓம்…. இடைதரம் பாவிக்கிறதிலை பிழையில்லைத்தானே… இனி வயதும் அப்பிடித்தானே?”
பஞ்சலிங்கத்தாரின் கண்கள் கதவின் பின்பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கின்ற பெண்களின், கவர்ச்சிப் படங்களை இப்பொழுதுதான் கவனித்திருக்க வேண்டும் – அவற்றில் இருந்து மீள முடியாத தடுமாற்றம்.
“அங்கை… நல்ல நல்ல படங்களும் ஒட்டியிருக்கிறியள் போலை!… ஒரு மாதிரியான படங்களாயிருக்கு…” எனக் கூறியவாறு சிரிப்பை வலிந்து வரவழைத்துப் பின்னர் ஏதோ சிந்தனை வயப்பட்டவர்போல மௌனம் சாதித்து, சற்று நேரம் அப்படியே இருந்துவிட்டு;
“இவர்… எப்பிடித் தம்பி… ஜெகநாதன் வித்தியாசமான சிநேகிதங்கள் தொடர்புகள் வைச்சிருக்கிறாரே?”
‘வித்தியாசமான’ என்பதன் அர்த்தம் சிவகுமாருக்குப் புரியாமலிருந்தது.
“ஆராவது பெட்டையளோடை தொடர்பிருக்குதோ எண்டு கேட்டனான்… தெரியாதே இளந்தாரிப் பொடியள்” உடலைக் குலுக்கி வெளிப்படுத்துகின்ற சிரிப்பு.
அவருடைய ‘றூட்’ மாறிப்போவது இப்பொழுதுதான் சிவகுமாரது உணர்வுக்கு எட்டியது.
“என்னண்ணை… ஜெகநாதனுக்குக் கல்யாணம் பேசிறியள் போலையிருக்கு… அவனிலை நல்லாய்க் கரிசனைப்படுறியள்?”
பஞ்சலிங்கத்தார் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்துச் சமாளித்தார். எக்கச்சக்கமாக மாட்டுப்பட்டு விட்டதனால் இனி உண்மையை ஒப்புக் கொண்டு சரணடைய வேண்டிய சங்கடம்;
“சரியாய்ச் சொன்னாய் கண்டியோ!.. சம்பந்த விஷயம்தான்.”
“உங்கடை சொந்தத்துக்கையே?”
“இல்லை… என்ரை மனிசியின்ரை பகுதியிலை… ஒரு வழியாலை தூரத்து உறவான ஆக்கள்தான்… கண்டியோ!…. நான் இஞ்சை இருக்கிறனெண்டாப்போலை… அறிஞ்சு எழுதச் சொல்லி எழுதியிருக்கினம்.”
சிவகுமார் மௌனம் சாதித்தான்.
“எப்பிடித் தம்பி பெடியன்?… நல்லவனே?” பஞ்சலிங்கத்தார் குடைந்தார்.
இதற்கு என்ன பதில் சொல்லலாமென்று சிவகுமாருக்குப் புரியவில்லை… ஜெகநாதனிடம் சில கூடாத பழக்கங்களும் இருக்க லாம். அவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடியே சொல்லிவிடுவது அவனுடனுள்ள சிநேகிதத்துக்குச் செய்கின்ற துரோகச் செயலாகும். தான் அறியாமல் ஏற்கனவே எதையாவது சொல்லித் துலைத்து விட்டேனா என நினைத்துப் பார்த்தான்.
பஞ்சலிங்கத்தார் உற்சாகத்துடன் தனது விசாரணையைத் தொடர்ந்தார்.
“மெய்ய தம்பி? ஜெகநாதன் சிங்களச் சோதனை பாஸ் பண்ணியிட்டாரே?”
சிவகுமார் சிரிப்புடனே கேட்டான்; “என்னண்ணை கலியாணம் முடிக்கிறதுக்குச் சிங்களமும் தெரிய வேணுமே?… பொம்பிளை சிங்களத்தியே?”
“உமக்கு எல்லாம் ஒரு பகிடிப் பேச்சுத்தான் கண்டியோ!… அரசாங்க உத்தியோகக்காரர்… இருந்தாப்போலை சிங்களம் தெரியாதெண்டு நிப்பாட்டிப் போடுவாங்கள்… இனி ஒரு புறமோசன் கிறமோசன் குடுக்கிறதெண்டாலும் அதைத்தானே பாக்கிறாங்கள்!”
“என்னவோ பழமொழி சொல்லுவாங்கள் அண்ணை… நினைவு வருகுதில்லை… உங்களுக்கு உத்தியோகக்கார மாப்பிளையும் வேணும்… அவன் சிங்களம் தெரிஞ்சவனாய் இருக்கவும் வேணும்… ஒரு வேலை செய்யுங்கோவன் ஒரு சிங்கள உத்தியோகக்காரனைப் பார்த்து எடுத்தால் பொருத்தமாயிருக்கும்!”
“தம்பி சிவா… நீர் இன்னும் குழந்தைப் பொடிதான்… ஒண்டும் தெரியாத மாதிரிக் கதைக்கிறீர்… ஒரு கலியாணத்தை ஒப்பேற்றிறதுக்கிடையிலை எத்தனை அலைச்சல் தெரியுமே?”
சிவகுமார் சிந்தனை வசப்பட்டிருந்தான்; ஒவ்வொருவருடைய குணநலங்களை உண்மையாக அறிந்தே பெண் கொடுப்ப தானால் எத்தனை பேர்கள் கலியாணத்திற்குத் தகுதியானவர்களாவார்கள்?
“அண்ணை! சொல்லுறனெண்டு குறை விளங்காதையுங்கோ!… உதெல்லாம் வீண் வேலை!…. உப்பிடி மாப்பிளைமாரைப் பற்றி புலனாய்வு செய்து கொண்டு போறதெண்டால் நீங்கள் இந்த உலகத்திலை ஒரு மாப்பிளையும் எடுக்கமாட்டியள்!”
“நீர் சொல்லுறதும் சரிதான் கண்டியோ! எண்டாலும்… இவ்வளவு சீதனத்தோடை பெட்டையைக் குடுக்கிறதெண்டால்… நல்லது பொல்லாததுகளை அறியாமல் குடுப்பினமே?” பஞ்சலிங்கத்தார் சொன்ன நியாயம் சிவகுமாரது எரிச்சலைக் கூட்டியது.
“ஓ!… அப்ப பெட்டையைக் குடுக்கிறதுக்காக இல்லை… இவ்வளவு பொருள் பண்டத்தைக் குடுக்கிறபடியாத்தான் அக்கறையோடை மாப்பிளையைப் பற்றி அறிய விரும்புகினமோ?”
“அப்பிடிச் சொல்லாதையும் தம்பி!… பெடியன் எப்பிடி ஊதாரியோ… பொருள் பண்டத்தை வைச்சுப் பாதுகாக்கக் கூடியவனோ எண்டு தெரியவும்தானே வேணும்?” – பஞ்சலிங்கத் தாருடைய பேச்சிலும் சற்று சூடேறியது.
“அதைத்தானண்ணை நானும் கேட்கிறன்… பெடியன் பெட்டையை என்னபாடு படுத்தினாலும் பறவாயில்லை… பொருள் பண்டத்தை வைச்சுப் பாதுகாக்கக் கூடியவனெண்டால் போதும்!…. அப்பிடித்தானே? உங்கடை கதையைப் பார்த்தால்… பொருள் பண்டமில்லாமல் பெட்டையை எடுப்பாங்களெண்டால் எந்த நாயிட்டையும் பிடிச்சுத் தள்ளுவியள் போலையிருக்கு!”
பஞ்சலிங்கத்தாருடைய முகம் கறுத்துப் போய்விட்டது. இவனோடு கதைத்துத் தப்பேலாது என எண்ணிக் கொண்டார். இவனிடம் வாயைக் கொடுத்தால் தேவையில்லாத நியாயங்களெல்லாம் பேச வேண்டும் போலிருந்தது.
அவரது முக மாறுதலைக் கவனித்த சிவகுமார்; “என்னண்ணை முகம் கறுத்துப் போச்சுது… நான் சும்மா ஒரு கதைக்குத்தான் அப்படிச் சொன்னனான்… எங்கடை ஆக்களின்ரை சுபாவம்தானே அது?… அதுக்கு நீங்கள்தான் என்ன செய்யிறது… நான் தான் என்ன செய்யிறது?”…. எனச் சமாதானம் கூறினான்.
“இப்ப தம்பி!…. நீர் சொல்லுறதிலையும் ஞாயம் இருக்குக் கண்டியோ! எங்கடை சமூகம் முன்னேறாமல் இருக்கிறதுக்கு முக்கிய காரணமே சீதனப் பிரச்சனைதான்… இதாலை எத்தனை குமருகள் கரை சேராமல் ஏங்கிக் கொண்டிருக்குதுகள்! இதைப்பற்றி எல்லாரும்தான் வாய்கிழியக் கத்துகினம்!… ஒரு முடிவையும்தான் காணயில்லை. இதுக்குள்ளை… குலம் கோத்திரமெண்டு எத்தினை சாதி பிரிச்சு வைச்சிருக்கிறாங்கள்… ஒவ்வொரு சாதிக்குள்ளையும் பல சாதிகளாகப் பல கிளைகள் விட்டு… அந்தக் கிளைகளும் பிரிஞ்சு… எத்தனை சாதியள்! எத்தனை சிக்கல்கள்!”
அவரது மாற்றமான பேச்சைக் கேட்கச் சிவகுமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பழமையின் உருவத்தினுள் இப்படி நல்ல கருத்துக்களும் அமிழ்ந்திருக்கின்றனவா? அல்லது தனது மனதைச் சமாதானப்படுத்துவதற்காகத்தான் அப்படிக் கதைக்கிறாரோ என்பதும் புரியவில்லை.
“அண்ணை! ஒருத்தரை ஒருத்தர் மிதிச்சு வாழ வேணுமெண்ட ஆசை எல்லாருக்கும் ஊறிப் போயிருக்கு! அதாலைதான் எத்தனையோ சாதியெண்டு குறைச்சுக் குறைச்சு ஒருத்தனை ஒருத்தன் தாழ்த்திக் கொண்டே போனான்! நல்லாய் யோசித்துப் பாருங்கோ!… ஆகத் தாழ்த்தப்பட்ட சாதியெண்டு ஒருத்தரைச் சொல்லவுமேலாது… ஏனெண்டால் அவன் தனக்குக் கீழேயும் ஒருத்தனைப் போட்டு மிதிச்சுக் கொண்டுதானிருக்கிறான். அதுபோலை… நான்தான் உயர்ந்த சாதியெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறவனுக்கு மேலையும் ஒருத்தன் ஆட்சி செலுத்திக் கொண்டுதானிருக்கிறான்!”
“நல்லாய்ச் சொன்னாய் கண்டியோ!… எங்கடை சமூக அமைப்பு அப்பிடி! சமூகத்திலை ஒரு கலாசார புரட்சி வரவேணும்… அப்பத்தான் இதெல்லாம் மாறும்… அது உம்மைப்போல… நல்ல எண்ணமும் துணிவுமுள்ள பெடியளாலைதான் முடியும்! ஆனால்… இப்படிச் சீர்திருத்தம் கதைக்கிற பெடியளும் கடைசியிலை நல்ல கொழுத்த சீதனங்களோடையெல்லே கலியாணம் முடிச்சுக் கொண்டு போகினம்!”
சிவகுமார் அவரை வியப்போடு நோக்கினான். அவர் சொல்வதிலும் எவ்வளவோ நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தான் முதலிலே அவரோடு சற்றுச் சூடாகக் கதைத்ததற்காக வருத்தமேற்பட்டது. ஆனால், பஞ்சலிங்கத்தாருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் இருப்பதும் அதனாற்தான் அவருடைய திருவாய் இப்பிடி முற்போக்கான கருத்துக்களை அருளியது என்பதும் அவனுக்குத் தெரியாது.
அத்தியாயம்-11
மாலைப்பொழுது கடல் தங்கமயமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது – நீர் மட்டத்தில் கண்களைப் பதிக்க முடியாத அளவுக்கு பட்டுத் தெறிக்கின்ற சூரிய ஒளி. செவ்வானத்தில் ஒரு செப்புத் தகடு பதிக்கப்பட்டது போல வட்டமாகத் தோன்றும் சூரியன் தண்ணீரை நோக்கி மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிறான். கண்களுக்கும் மனதுக்கும் ரம்மியமான காட்சி.
கரையிலே கல்லொன்றில் அமர்ந்திருக்கிறான் சிவகுமார். பஞ்சலிங்கத்தார் வந்து போன பின்னர் அறையில் தனிமையாய் இருப்பது ‘போர’டித்தது. தனிமையென்றால் அவன் மிக விரும்புவது இந்தக் கடல்தான். இருண்டு வெகுநேரமாகும் வரையில் கடலையே பார்த்துக் கொண்டிருக்கலாம். நிலவுக் காலங்களில் இன்னும் அழகாக இருக்கும். தூரத்தில் சிறுசிறு பொட்டுக்களாகக் கண்களைச் சிமிட்டும் விளக்குகளுடன் தோன்றுகின்ற மீன்பிடி வள்ளங்கள், துறை முகத்தை நோக்கிச் செல்லும் பாரிய கப்பல்கள், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். துறைமுகத்திற்கு அண்மையாக எத்தனை கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று கணக்குப் போடலாம்.
இன்னும் இருளவில்லை. மாலை வெயில்கூட மங்கவில்லை. சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து புகையிரதப் பாதையிலே நடக்கத் தொடங்கினான். பாதையையும் கடலையும் பிரிக்கின்ற எல்லையைப்போல தாளை மரங்கள் சில இடங்களில் கூட்டம் கூட்டமாகப் பின்னிப் பிணைந்து கொண்டு நிற்கின்றன. சில மரங்கள் வளைந்து முண்டு கொடுத்துப் படுத்திருக்கின்றன. கடும் வெயிலெறிக்கும் நண்பகல் நேரங்களிலும் இந்த நிழலில் பல சோடிகள் ஆறுதலாக அமர்ந்திருப்பதைக் கவனித்திருக்கிறான். அந்த நினைவு வந்ததும் அவனையறியாமலே கால்களை இறுக்கி தாளை மர நிழலினுள் கண்களைச் செலுத்தினான்.
தங்களையும் இந்த உலகத்தையும் மறந்த நிலையில் பல இளம் சோடிகள் அவர்களது ‘கிஸ்’கிசு பேச்சுக்கள்! இவர்கள் யாராக இருக்கும்? பஸ் நிறுத்தங்களில், தியேட்டர்களில் அல்லது நடைபாதைகளில் காண நேர்ந்த தற்காலிக நண்பர்களோ? (மகேந்திரன்கூட சில வேளைகளில் அங்கலாய்த்துக் கொள்வானே, “பஸ்சுக்குள்ளை ஒரு ரொப் கேர்ள் ஆப்பிட்டிது மச்சான்… சீ? ஒரு இடம்தான் கிடைக்காமல் போச்சுது…” என்று) அல்லது முன்னரே அறிமுகமாகிய வாடிக்கையான நட்பாக இருக்குமோ? இல்லை; அலுவலக நண்பர்களாக… காதலர்களாக?
பொங்கி வருகின்ற கடலலைகள் கரையில் மோதுகின்றன; அடங்காத இன்பக் குமுறல்கள்.
“செல்வி!” என ஆசை பொங்க மனதினுள்ளே அழைத்தான்; “உன்னைப் பார்க்க வேண்டுமே!”
மல்லிகையின் நறுமணத்தை அள்ளிவரும் தென்றல் தருகின்ற இதமான சுகத்தைப் போல அவளைப் பற்றிய நினைவும் அவனுக்கு இதத்தையே அளிக்கிறது. அந்த இதத்தில் ஏற்படுகின்ற இன்ப ஏக்கமே ஓர் அலாதியான சுவைதான். அவளது குழந்தைத் தனத்தில், அடக்கமான சிரிப்பில், நாணமான பார்வைகளில் எல்லாம் தன்னை இழந்திருக்கிறான்.
நண்பன் சத்தியநாதனது தங்கை கலைச்செல்வி. அப்பொழுது க.பொ.த. உயர்தரம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த அவனைத் தனது தங்கைக்கு ரியூசன் கொடுக்குமாறு ஒழுங்கு படுத்தியவன் சத்தியன் தான்.
சிறு பிராயம் கடந்து யுவப்பருவமடைகின்ற காலங்களிலிருந்தே தன் ஒவ்வொரு செய்கைகளாலும் மெல்ல மெல்ல அவனது மனக் கதவைத் திறந்து நிரந்தரமான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவள் கலைச்செல்வி. ஒரு பெண்ணின் அழகும், அவள் மென்மையும் புன்னகையும் பார்வையும் சாதாரண விஷயங்கள் எனக் கருதிய பருவம் கடந்து, அவற்றையெல்லாம் நிறைந்த அர்த்தங்களுடனும் உணர்ச்சி வசத்துடனும் ஆராய்கின்ற வயதில் அந்த அழகிய கன்னியுடன் தனி அறையில் மிக அண்மையில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்கின்ற சந்தர்ப்பங்கள் அவனது மனக்கதவைத் தட்டியிருக்கின்றன. ஆரம்பத்தில சலனத்தை ஏற்படுத்தாத ஒவ்வொரு அசைவுகளும் நாளிலும் பொழுதிலும் அவனை அசைக்கத் தொடங்கி விட்டன. அந்த மந்திரத்தை எண்ணி அவனால் வியக்க முடியவில்லை…. தனது மனமாற்றத்தைத் தவிர்க்க முடியாத பய உணர்வுதான் ஏற்பட்டது. செல்வியை மறந்துவிட வேண்டுமென எண்ணினாலும் அடுத்த கணமே அது முடியாத காரியம் போலத் தோன்றும்.
செல்வி! இப்படி எதற்காகத் தவிக்க வைக்கின்றாய்? இந்த உள்ளத் துடிப்பு உனக்குப் புரியவில்லையா? எப்பொழுதும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கின்றாய்! அப்படியானால் உனக்கு எந்தவித சலனமுமே தோன்றவில்லையா? எனது ஆசைகள் ஏக்கங்கள் எல்லாமே வெறும் கற்பனைகளாக, கனவுகளாக அர்த்தமில்லாதவையாகவே போக வேண்டியதுதானா? மனம் உன்னைப் பற்றி எப்படியெல்லாம் கனவுகள் காண்கிறது! உன்னை நினைக்காத நாட்களே இல்லாமற் போய்விட்டது. விடியும் பொழுதெல்லாம் உன் நினைவுடனேயே எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. நாள் முழுதும் உன்னைப் பற்றிய சிந்தனைதான். இரவிலும் உன்னை வட்டமிடுகின்ற எண்ணங்கள் நீண்ட நேரம் உறங்காமற் செய்து விடுகின்றன. இதயத்தில் அடங்காமல் எழுந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி – ஒரேயொருகேள்வி; ‘நீ என்னை விரும்புகிறாயா செல்வி’ அதற்கு மாத்திரம் பதில் சொல், ‘சிவா!’ என ஒருமுறை ஆசையோடு அழைத்துவிடு. அப்பொழுது உன் கண்கள் நாணத்துடன் என்னைப் பார்க்கட்டும் – இந்த உலகத்தையே வென்று வருகிறேன்… ஆனால், நீ ஏன்… பேசாமலே பதுமையைப் போல இருக்கின்றாய்? என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? என்னை நீ விரும்ப மாட்டாயா?
அவள் விரும்பக்கூடும். அதை எப்படித் தெரியப்படுத்துவாள்? பெண். அதிலும் எனது மாணவி.
-செல்வி! டார்லிங் உன்னை என் மாணவியாகவா கருதுகிறேன்? பார்த்தாயா, என்னையறியாமலேயே ‘டார்லிங்’ என்ற வார்த்தையும் வெளிப்பட்டுவிட்டது? என் அன்புக்குரியவளாக, பிரியத்திற்குரியவளாக, என் காதலியாக, மனைவியாக! உன்னைச் சுற்றிய ஒரு வட்டத்துக்குள்ளேயே எனது எண்ணங்களையெல்லாம் சுருக்கிக் கொண்டு வந்தாய்… பின்னர் வேடிக்கையும் பார்க்கிறாய்? ஒரு சின்னக் குழந்தையைப்போல உனது மடியிலே தவழ விரும்புவது புரியவில்லையா? அப்பொழுது நீ என்னை அணைத்துக்கொள்ள வேண்டும்.
-அவன் மனதிலே ஆசைகளின் வளர்ச்சி, அவற்றைத் தடை செய்யும்பொழுது ஏக்கங்களின் வெடிப்பு. அந்த எண்ணங்களை எப்படிப் புரிய வைக்கலாம்? துணிவு எங்கிருந்து வரும்?
ஒருநாள் அந்தத் துணிவு வந்துவிட்டது.
அது ஒரு மறக்க முடியாத மாலை நேரம். அவன் சென்ற பொழுது செல்வியின் வீடு அமைதியாக இருந்தது. வீட்டில் எவருமில்லையோ என நினைத்துக் கொண்டு திரும்பினான், முற்றத்தில் பூஞ்செடிகளின் மத்தியில் நின்று கொண்டு கலைச்செல்வி குரல் கொடுத்தாள்.
“சேர்…ர்!”
இவன் நின்று திரும்பி நோக்கினான்.
அந்த ரோசா மலர்களில் ஒரு மலராக செல்வியின் முகம் மலர்ந்து போயிருந்தது. ரோசாச் செடிகளில் சிலும்பலாக இருந்த சிறிய கொப்புகளை வெட்டி அழகுபடுத்திக் கொண்டிருந்தாள்.
அந்த மலர்களைப் போலவே அவள் உடலும் மென்மையாக இருக்கும் மனது குறும்பாகச் சிந்தித்தது. மலரை ஸ்பரிசிக்க வேண்டும் போல உள்ளத்திலே பிறக்கின்ற உந்துதல் ரோசாச் செடிகளின் அண்மையில் மெல்ல நகர்ந்தான். ஒரு மலரில் இதழ்களைத் தொட்டு அதன் பட்டு மென்மையை உணர்ந்து கொண்டு;
“செல்வி! வீட்டிலே… ஒருத்தரும் இல்லையா?”
“இல்லை!”
“எங்கை போயிட்டினம்?”
“அப்பாவும் அம்மாவும்… கோயிலுக்கு… அண்ணையும் வெளியிலை எங்கையோ போட்டார்…”
“வேலைக்காரி இல்லையா?”
“அடுப்படியிலை நிற்கிறாள்.”
அது ஒரு பெரிய வீடு. குசினியில் நிற்பவளுக்கு முன்னுக்கு நடப்பவைகளைக் கவனிக்க முடியாது.
தனிமை!
அவள் செல்விக்காக எண்ணி ஏங்கிய நாட்களிலெல்லாம் கிடைக்காத தனிமை!
வெளியே சென்றவர்கள் தற்போதைக்கு வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையான துணிச்சல்.
“செ…ல்…வி…!”
-அவன் அவளை அழைத்தான். வார்த்தைகள் தொடர்ந்து வெளிவராமல் தொண்டையினுள்ளே அடங்கிப் போயின. பதட்டம் ஏற்பட்டது.
அவனது அழைப்பிற்கு நிமிர்ந்து நோக்கிய கலைச்செல்வி மறுகணமே தலையைக் குனிந்து கொண்டாள்.
என்ன பெண் பெண் இவள்! இந்த அழைப்பு அவளுக்கு அலட்சியமாகவா தோன்றுகிறது? இவ்வளவு மென்மையாக அழைத்த வித்தியாசத்திலிருந்தே புரிந்திருக்கலாமே? ஆசை பொங்க அணைப்பது போல, மென்மையாய்த் தடவிக் கொடுப்பது போல எவ்வளவு இதமான அழைப்பு! அது அன்பு நிறைந்த வார்த்தையாக இருக்கவில்லையா?
ஒரு ரோசாமலரைப் பிடுங்கினான். அதை அவளுக்குச் சூட்டிவிட வேண்டுமெனக் கைகளில் அடங்காத ஒரு துருதுருப்பு ஏற்பட்டது. அவளை ஏக்கத்துடன் நோக்கினான். அந்தப் பார்வையை அவள் புரிந்திருக்க வேண்டும்.
மெல்ல, அவளை நோக்கிக் கால்கள் நகர்ந்தன. அண்மையில், மிக அண்மையில் சென்று, பின்னர் ஏதோ தடையேற்பட்டது போல நின்றான். செல்வியும் அவனையே பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றாள். கண்கள் கலந்து கொண்டன. அவள் நாணத்துடன் கண்களை மீட்டாள். பின்னர் மீண்டும் அவனை நிமிர்ந்து நோக்கினாள். அந்த அழைப்பு விடுக்கின்ற பார்வையில் எவ்வளவு நேரமும் சிக்கித் தவிக்கலாம் போலிருந்தது.
அவன் கதைக்க முயன்றான். முடியவில்லை. சுவாசித்தலில் மூச்சு விடுவதே கஷ்டமான காரியம்போற் தோன்றியது. சுவாசப் பையினுட் சென்ற காற்று இயற்கையாகவே வெளிவர மறுத்தது. முயன்று வெளிப்படுத்திய பொழுது ஒவ்வொரு மூச்சும், “செல்வி! செல்வி!” என்ற ஓசையுடன் வெளிப்படுவது போலிருந்தது. இந்த விசித்திரத்தில் கதைப்பது எப்படி?
மீண்டும் பெரும் முயற்சி செய்து மூச்சைப் பிடித்துக் கொண்டு; “செல்வி!”
அவள் அவனை மோகத்துடன் நோக்கினாள். அந்த விழிகள் அவனை மயக்கின.
“செல்வி…உங்களுக்கு… இந்தப் பூவை நானே… குத்திவிடவா?”
இப்பொழுது அவள் கதைத்தாள்;
“ஆராவது பாத்தினமெண்டாலும்!”
-வெற்றி! அவனது உணர்ச்சிகள் கட்டுக்கடங்க மறுத்தன. ‘யாராவது பார்த்தாலும்’ என்பதில், ‘பார்க்கா விட்டால் சம்மதம்’ என்ற அர்த்தம் அடங்கியிருக்கிறதே!
ஆதரவுடன் அவள் கூந்தலைத் தொட்டு அதில் மலரைச் சூட்டினான். அவனது மனதில் பெரிய நிறைவு ஏற்பட்டது. ஆசை பொங்க அவள் முகத்தை நோக்கினான்.
-செல்வி! உன்னைப் பெருமை பிடித்தவள் என்று நினைத்தேன். ஆனால், நீ! எவ்வளவு பணிவோடு எனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறாய்? எவ்வளவு அமைதியாக எனது ஒவ்வொரு செயல்களையும் அனுமதிக்கிறாய்!
“முதல்… முதல்… என்னைத் தொட்டுப் பூக்குத்தி விட்டது நீங்கள்தான்… என்னை… நீங்களே கலியாணம் முடிப்பீங்கள்… எண்டு கடவுள் உணர்த்தினது போலையிருக்குது…”
அவன் அசந்து போனான். கலைச்செல்வி தானா இப்படிப் பேசுகிறாள்! அவளுக்கு இவ்வளவு துணிவும் எங்கிருந்து வந்தது! அல்லது தன்னைப் போலவே மன ஏக்கங்களுடன் அலைந்து…. எப்படியாவது ஒரு முடிவு அறிய வேண்டுமென்ற எண்ணத்தில் அப்பிடிச் சொன்னாளா? சிவா! நீ படு முட்டாளடா! எவ்வளவு நுட்பமாக உனது நோக்கத்தைப் புரிந்துகொண்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்தினாள்! இந்தச் சாதுரியம் யாருக்கு வரும்?
குயிலொன்று கூவுவதைப் போல விட்டுவிட்டு ஒவ்வொரு வார்த்தைகளாக அவள் கதைத்த விதம் காதுகளிலிருந்து மறைய மறுத்தது. சொல்லி முடித்து ஏதோ தவறு செய்து விட்டவள்போல கலக்கத்துடன் நின்றாள். அவளது கண்களும் கலங்கிப் போயிருந்தன.
அதைக் கண்டு இவனும் கலங்கிப் போய்விட்டான். ‘செல்வி! நான் உன்னைக் கைவிட்டு விடுவேனென்றுதான் கலங்குகிறாயோ?” எனக் கேட்க வேண்டும் போலிருந்தது. ‘கண்ணே! உன்னை என் உயிருள்ளவரை கைவிடமாட்டேன்’ எனத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொல்ல வேண்டும் போலுமிருந்தது. ஆனால், நினைத்தது போல எதையுமே செய்ய முடிய வில்லை. கண்ணீர் இமைகளின் தடையையும் மீறி வழியத் தொடங்கியது.
அவனது கண்ணீரைக் கண்டு செல்வி துடித்துப் போனாள். சற்றும் எதிர்பாராத விதமாக அவனது முகத்திலே கையைப் பதித்து கண்ணீரைத் துடைத்து விட்டாள். அந்த நேரத்தில், தாயொருத்தியின் அணைப்பில் இருக்கின்ற ஒரு குழந்தையின் உணர்வை அடைந்ததும் இன்னும் அழுகை வந்தது. செல்வியின் கையை அவன் பற்றிக் கொண்டான். அப்படியே தன் உதடுகளில் அந்தக் கையைப் பதித்து முத்தமிட்டான். அவன் சொல்ல விரும்பியதையெல்லாம் சொல்லிவிட்ட நிறைவும் அவளிடம் எதிர்பார்த்த எல்லாமே கிடைத்துவிட்ட திருப்தியும் ஏற்பட்டது.
அலையொன்று கற்களில் மோதி சிவகுமார் மீது தண்ணீரைத் தெளித்தது. பழைய நினைவலைகளில் மிதந்து வந்தவன் கல்லொன்றில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். அற்புதமான கனவொன்று கலைந்து விட்டதைப் போன்ற மனநிலை ஏற்பட்டது.
அலைகள் ஓய்வதில்லை என்பது உண்மைதான். அதோ! தூரத்திலே பொங்கி வருகின்ற கடலலைகள்! முன்னே வருகின்ற அலைகள் கரையில் மோதிச் சிதறிவிட, மீண்டும் அலைகள் பொங்கி வருகின்றன. இது தொடரும்; அலைகள் ஓயாது.
“இனிப் போய்ச் சமைக்க வேண்டுமே!” என்ற நினைவு தோன்றியதும் சலிப்புணர்வுடன் இருக்கையை விட்டு எழுந்தான் சிவகுமார்.
அத்தியாயம்-12
இருளப் போகின்றது ·
இரண்டு முப்பது மெட்னி காட்சிக்குப் போயிருந்த ஜெகநாதன் ஏற்கனவே அறைக்கு வந்து விட்டான். முகட்டைப் பார்த்தவாறு கட்டிலிற் படுத்து சிகரட்டில் லயித்துக் கொண்டிருந்த அவனைக் கண்ட சிவகுமார் “என்ன சமைக்கிற யோசனையில்லையோ?” என எழுப்பினான்.
“சமைப்பம்… இப்ப என்ன அவசரம்?” என அவனிடமிருந்து சோம்பலான பதில் வந்தது.
“சமைக்கிறதுக்கு அவசரமில்லை… பிறகு சாப்பாட்டுக்கு அவசரம் வந்திடுமல்லே?”
அவர்கள் சமைப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த பொழுது புதிய செய்தியொன்றுடன் அறைக்கு வந்தான் மகேந்திரன்.
‘மச்சான்…! ஒரு சங்கதியெல்லே! இண்டைக்கு ஓராள் என்னட்டை எக்கச்சக்கமாய் மாட்டுப்பட்டிட்டுது.’
அவனது புதிரைப் புரிந்து கொள்ள முடியாமல் நண்பர்கள் இருவரும் விழித்தார்கள்.
“என்னடாப்பா? விழங்கக் கூடியதாய்ச் சொல்லன்!” ஜெகநாதன் அவசரப்படுத்தினான். அவனது வழக்கமான மன்மத லீலைகளாகத் தான் இருக்கும். வயிற்றெரிச்சலான விஷயமென்றாலும் அவன் தத்ரூபமாக விபரிப்பதைக் கேட்காமல் இருக்கவும் மனது கேளாதே!
“சொல்லத் தானே போறன்… அந்த ரகசியத்தை அம்பலப் படுத்தாமல் விடலாமா?”
“சரி… கனக்க அலட்டாமல் சொல்லடாப்பா?” அப்படி என்ன ரகசியத்தைச் சொல்லப் போகிறான்?
“எனக்குத் தெரியும் மச்சான்! இவள் சாதாரண ஆளாய் இருக்க மாட்டாளெண்டு… ஊரை விட்டிட்டு வெளிக்கிட்டவுடனை தாங்கள் பெரிய மகாராணிகள் என்ற நினைவு… நேரிலை பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமோ எண்டு நினைக்கிற அளவுக்குப் பதுங்கிக் கொண்டு திரிவாளவை… ஊருக்குப் போனால் தாங்கள் பெரிய கற்புக்கரசிகள் என்று நடிக்கிறது… இஞ்சை அவையின்ரை ஆட்டத்தைப் பார்த்தாலல்லோ தெரியும்,” எனக் கூறிவிட்டுத் தனது பிரசங்கத்தை இடை நிறுத்தினான் மகேந்திரன், நண்பர்களின் அபிப்பிராயத்துக்குச் சந்தர்ப்பமளிப்பது போல.
ஜெகநாதனால் இனிப் பொறுக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணுடைய ரகசியம் அம்பலத்துக்கு வருகிறது. இந்த சுவாரஸ்யத்தைக் கேட்காமலிருக்க முடியுமா?
“ஆரையெடா சொல்லுகிறாய்?… என்ன விஷயம்?”
“வேறை ஆர்?… எங்கடை பக்கத்து வீட்டுப் பதிவிரதை… கற்புக்கரசி… அகிலாவைப் பற்றித்தான் சொல்லுறன்!”
சிவகுமாருக்கு இப்பொழுது அதிர்ச்சி. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக என்ன அநியாயக் கதையைச் சொல்ல வந்திருக்கிறான்? நாளுக்கு நாள் அகிலாவைப் பற்றி ஏதாவது சொட்டைக் கதைகளைக் கதைக்காவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது. இதுகூட அந்த முயற்சிதானா?
ஜெகநாதன் ஆவலோடு மகேந்திரனை உற்சாகப்படுத்தினான். “என்ன சங்கதி மச்சான்? உவள் சரியான அமுசடக்கிக் கள்ளியா யிருப்பாளெண்டுதான் நானும் நினைச்சனான்!”
ஒரு பெண் வாய் திறந்து நியாயம் கேட்க வரத் துணிய மாட்டாள் என்பதற்காக நினைத்தபடி எதையும் பேசிவிட்டுப் போகலாமா? மேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாமலே சிவகுமார் வாய் திறந்தான்.
“கதைக்கிறதை யோசிச்சுக் கதையடாப்பா… உனக்கும் அக்கா… தங்கச்சி இருக்கினம்… ஏன் ஒருத்தி மேலை தேவையில்லாமல் பழி சுமத்திறியள்?”
மகேந்திரனுக்கு அந்தச் சூட்டைத் தாங்க முடியவில்லை.
“எனக்கு அக்கா, தங்கச்சி இருக்கினமெண்டாப் போலை…. அதுகளும் உவளைப் போலை ஆடிக் கொண்டு திரியுதுகளோ?… நான் கண்ணாலை கண்டதைத்தான் சொல்லுறன்…” எனக் கூறிவிட்டுப் பின்னர் ஜெகநாதனைப் பார்த்து, “அவவைப் பற்றிக் குறை சொன்னவுடனே இவருக்கு வர்ற கோபத்தைப் பாரேன்!” என்று ஏளனமாகத் தனது எரிச்சலை வெளிப்படுத்தினான். அக்கா, தங்கச்சியைக் குறிப்பிட்டுக் கதைத்தது அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஜெகநாதனுக்குப் பெரிய ஏமாற்றம். சிவகுமாரது குறுக்கீட்டினால் மகேந்திரன் மேற்கொண்டு கதையைச் சொல்லாமல் விட்டு விடுவானோ என்ற கவலையும் தோன்றியது.
“அவன் விசரனை விட்டிட்டு… நீ சொல்லு மச்சான்!” ஆரம்பத்திலிருந்த உற்சாகம் குறைந்துவிட்டாலும் ஜெகநாதனின் தூண்டுதல் அவனைத் தொடர்ந்து பேச வைத்தது.
“அகிலாவை இண்டைக்குப் பின்னேரம் பிளாசாத் தியேட்டரிலை கண்டனான்… மெட்னிஷோவுக்கு வந்திருந்தாள்…”
“தனியவோ? அல்லது ஆரோடையேன் வந்தவளோ?” ஜெகநாதன் அங்கலாய்த்தான். அவன்கூட பிளாசாவுக்குத்தான் போயிருந்தான். தனக்கு அந்த ‘சான்ஸ்’ கிடைக்கவில்லையே! ரூ
“அவள் இன்னொருத்தனோடை வந்திருந்தாள். என்னைக் காணயில்லை… நான் ரகசியமாய் எல்லாத்தையும் நோட் பண்ணிக் கொண்டுதான் இருந்தனான்…”
“அடச்சீ! எனக்குத் தெரியாமல் போச்சுதே!” ஜெகநாதன் குறுக்கிட்டான்; “அவன் யாரெண்டு தெரியாதே?”
“தெரியாது!…. பொறு!… இன்னும் இரண்டொரு நாளிலை விசாரிச்சுப் பிடிச்சுப் போடுறன்… இவ ஒபிசிலையும் ஒரு மாதிரியெண்டுதான் கேள்வி!”
சிவகுமாருக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. “உங்களுக்கேன் மற்றவயின்ரை கதையள்?… முதலிலை உங்களைத் திருத்திக் கொண்டு மற்றவயின்ரை குறையைக் கதையுங்கோ!”
மகேந்திரன் நிதானமாகச் சொன்னான்; “நாங்கள் ஆம்பிளையள்!… எப்பிடியும் நடப்பம்… நீரேன் அவவுக்குப் பரிஞ்சு கதைக்கிறீர்?”
ஆம்பிளையள் எண்டாப் போலை என்னத்தையும் செய்யலா மெண்டு எண்ணமோ?… உங்களைப் போலை ஆம்பிளையள் இருக்கிறபடியாத்தான் அப்பிடியும் பொம்பிளையள் கெட்டுப் போகுதுகள்!”
“இவர் பெரிய திறம்! விடிஞ்சால் பொழுதறதியும் அவவின்ரை வீடே கதியெண்டு கிடக்கிறாய்; பிறகு பெரிய ஞாயம் பேசிறாய்!… எப்பிடியோ… இப்ப அவளை கெட்டவள் என்றதையாவது ஒப்புக் கொள்கிறாய்தானே?”
அவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. வரிந்து கட்டிக் கொண்டு ஒரு பெண்ணைக் கெட்டவளென்று பட்டம் சூட்டி விடுவதில் இவனுக்கு என்ன லாபம்? சில நாட்களாக அவளுக்குப் பின்னாலும் முன்னாலும் திரிந்து பல் இளித்துப் பார்த்து அதிலெல்லாம் தோல்வி கண்ட ஆற்றாமையினாற்தான் இப்படி யொரு பழியைச் சுமத்துகிறான். அல்லது… அவன் சொல்வதிலும் ஏதாவது உண்மை இருக்குமா? இல்லை; அகிலாவின் கள்ளம் கபடமில்லாத மனதில் இப்படியொரு கீழ்த்தரமான சுபாவம் ஒளிந்திருக்க முடியாது.
“மகேந்திரன்! நீ சொல்லுறதை நான் ஒருக்காலும் நம்பமாட்டன்… அகிலா பாவம்… இப்படி அநியாயமாய் பழி சுமத்தாதை” சிவகுமாரின் உறுதியான வார்த்தைகளில் இரக்கம் கலந்திருந்தது. மகேந்திரன் சினத்தோடு “அப்பிடியென்றால் நான் பொய்யா சொல்லுறன்?” எனப் பாய்ந்தான்.
“அப்பிடியும் இருக்கும்!” என எரிச்சலோடு பதிலளித்தான் சிவகுமார். இது அவனது கோபத்தை இன்னும் அதிகரித்தது.
“ஓ!… நீ எப்படி ஒப்புக் கொள்ளுவாய்!… அவள் தானே உனக்கு மருந்து போட்டு மயக்கி வைச்சிருக்கிறாள்…. அவளைக் குறை சொன்னால் உனக்குச் சுடும்தானே?”
வீட்டுக்காரரின் நாய் எதற்காகவோ, ‘வாள், வாள்’ என்று குரைக்கின்ற சத்தம் கேட்கிறது. அது இப்பிடித்தான்; சில வேளைகளில் ஒன்றுமில்லாத ஒன்றிற்குப் போய் எதையோ பேய், பிசாசைக் கண்டு விட்டது போல அவதி அவதியாகக் குரைத்து விட்டு ஓயும்.
“சிவா!…. உண்மை சுடும்தான். நீ என்ன நோக்கத்திலை அவளோடை பழகிறியோ தெரியாது!… அவள் உனக்கு நல்லவளாய் நடிச்சுக் கொண்டு வெளியிலை நடத்தை கெட்டுத் திரியறாள்!… உன்னோடை கூடிப் பழகின குற்றத்துக்கெண்டாலும் புத்தி சொல்ல வேண்டியது எங்கடை கடமை. அதுதான் சொல்லுறம்… அவளின்ரை சகவாசத்தை விட்டிடு!” ஜெகநாதன் வலு கரிசனையோடு ஆலோசனை வழங்கினான்!
“சும்மா… விசர்க்கதை கதையாதை ஜெகநாதன்!… எதையும் தீர விசாரிச்சுப் போட்டுத்தான் கதைக்க வேணும்… கண்ணாலை காணுறதும் பொய்… காதாலை கேக்கிறதும் பொய்…” சிவகுமாரது நெஞ்சிற் குமுறலெடுக்கின்ற வேதனை சீற்றமான வார்த்தைகளாக வெளிப்பட்டன.
“அது லேசிலை விடக்கூடிய சகவாசமெண்டால் விடலாம்… இது முத்திப் போன சங்கதியெல்லே?” மகேந்திரன் ஏளனமாகக் கதைத்தது சிவகுமாரை உணர்ச்சிவசப்படச் செய்தது.
“நான் எந்த வித்தியாசமான நோக்கத்தோடையும் பழகவில்லை. அப்படிப் பழகவேண்டிய அவசியமும் எனக்கில்லை… இதை எவ்வளவு சொல்லியும் நம்பாமலிருந்தால் நான் என்ன செய்யிறது?… ஒண்டை மாத்திரம் உறுதியாய்ச் சொல்லுறன் – அகிலா நல்லவள். அவளைப் பற்றி நீங்கள் என்ன சொன்னாலும் நம்பமாட்டன். எல்லா விசயத்திலையும் ஏன் பொம்பிளையளை மாத்திரம் சந்தேகத்தோடை பாக்கிறீங்கள்? இந்தச் சமூக அமைப்பிலை அதுகளுக்குக் கிடைச் சிருக்கிற சாபக்கேடு இது! உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.”
-சிவகுமார் நிச்சயமாக ஒரு மடையன் என முடிவு கட்ட வேண்டியதுதான். எப்பிடிச் சொல்லியும் கேட்கிறானில்லை, இடையிலை வந்த ஒருத்திக்காக எவ்வளவோ காலம் பழகி வந்த தங்களது சொல்லை அவன் நம்புகிறானில்லை; “கடவுளே! அந்த ஆட்டக்காரியை இவன் கலியாணம் முடிச்சுக் கொண்டு… பிறகு கிடந்து கவலைப்பட வேணும்… அப்பதான் புத்திவரும்” – மகேந்திரன் ஆவேசம் வந்தவனைப் போலக் கூறினான்.
சிவகுமார் மௌனம் சாதித்தான். என்னத்தையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். இனம் புரியாத கவலை மனதை அரிக்கத் தொடங்கியது, அது:
ஒன்றாக இருந்து சீவிக்கின்ற நண்பர்கள் ஏன் இப்படி விரோதிகளைப் போல நடந்து கொள்கிறார்கள் என்பதனாலா அல்லது ஒரு பேதைப் பெண்மேல் எதற்காகப் பழி சுமத்தித் தொலைக் கிறார்கள் என்பதனாலா என்று புரியவில்லை. உண்மை எது? பொய் எது? யாரை நம்புவது? யாரை நம்பாமல் விடுவது?
ஏதோ நினைத்துக் கொண்டவனைப்போல் சிவகுமார் எழுந்து வெளியேறினான். அவன் அகிலாவைக் காணத்தான் போகிறான் என இவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.
சற்றுநேர அமைதிக்குப் பின் ஜெகநாதன் சொன்னான், மகேந்திரன் நானும் பிளாஸாவுக்கு வந்திருந்தனான். மகேந்திரனின் முகத்தில் சற்று கலவரம் ஏற்பட்டது. தடுமாறியவாறு “நீ… அவையளைக் காணயில்லையே?” என்றான்.
“இல்லை… உன்னைக் கண்டனான்!”
“அப்ப…ஏன் வந்து கதைச்சிருக்கலாமே?” அவன் வந்தானா உண்மை பொய் அறிய வேண்டுமென்ற ஆவல் மகேந்திரனுக்கு,
“நீ…பல்கனிக்குப் போனாய்… எப்பிடி வந்து கதைக்கிறது?… நீ போன போக்கும் சரியில்லை…”
மகேந்திரன் மௌனியானான்.
ஜெகநாதன் தொடர்ந்து கேட்டான்: “ஆரடாப்பா உன்னோடை வந்த கேர்ள்?”
மகேந்திரன் கள்ளச் சிரிப்பை உதிர்த்தவாறு சொன்னான்: “அதுதான் நான் சிங்கள ரியூசன் எடுக்கிற கேர்ள்!”
வெள்ளவத்தை தேவாலய மணி கணீரென ஒலிக்கத் தொடங்கியது.
– தொடரும்…
– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.
– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.