இல்லாத பூனை

இல்லாத பூனை எங்குமே இல்லை என்றும், அப்படியொரு பூனை இருக்கவே முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். இல்லாத பூனை அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். கண்களுக்குத் தெரியாததால் இல்லை என்றே எண்ணவும், நம்பவும், சொல்லவும், வாதிடவும் அவர்கள் முற்படுகின்றனர். (கட்புலனை ஆதாரமாகக் கொண்டால் இருப்பதைத்தான் நாம் அறிய இயலும். இல்லாததை அறிய இயலாது).
இல்லாத பூனை நமது கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு முதற் காரணம் அதன் இருண்மையும் சூட்சுமமும்தான். அது முற்றிலும் கருமையானது. (இன்மை நிறம் அல்லது நிற இன்மை என்பது கருமையாகத்தானே இருக்க முடியும்).
அதன் உடலில் உள்ள ஒரு லட்சத்து ஓராயிரத்து ஒரு நூற்றி ஒரு ரோமங்களும் கருமையானவை. (இந்தத் துல்லியமான தொகை, உடலிலும் வாலிலும் உள்ள மென் ரோமங்கள், முகத்தில் உள்ள நீண்ட மீசை ரோமங்கள், கண்ணிமை ரோமங்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்த மொத்த எண்ணிக்கையின் உத்தேசக் கணக்கீடாகும்). ரோமங்கள் இல்லாத மூக்கு, வாய், பற்கள், நாக்கு, நகங்கள், கண்கள் ஆகியனவும் கருமையானவையே. கண்களின் பாவை மட்டுமல்ல, விழித்திரையும்தான். ஆக, இல்லாத பூனையின் எந்த ஒரு பாகத்திலும் ரோம நுனியளவிலேனும் கருமையன்றி வேற்று நிறமே இல்லை என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். (அதன் உள்ளுறுப்புகளும் உதிரமும் கூட கருமையானவையே என்பதை அறிய நேர்ந்தால் நீங்கள் வியப்படைவீர்கள்).
அத்தகைய இல்லாத பூனையானது அடர் இருளில் மட்டுமே வசிக்கக் கூடியதும் உலவக் கூடியதுமாகும். அப்படி இருளுக்குள் இருளாக இருப்பதால்தான் அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. மேலும், வெளிச்சத்தை விரும்பாதது அது. மிக மங்கிய வெளிச்சமானாலும்தான். நீங்கள் அதைப் பார்த்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு அதன் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சினால், இருள் விலகும்போதே, இருளுக்குள் இருளாக அது மறைந்துவிடும்.
வெளிச்சத்தைக் கொண்டு செல்லாமல், வெற்றுக் கண்களாலேயே இருளை ஊடுருவி, இல்லாத பூனையைப் பார்த்துவிடலாம் என்று எத்தனித்தாலும் முடியாது. உங்களின் கண்களிலிருந்து வெளிப்படும் கட்புலனாகாக் கண்ணொளியிலேயே அது மறைந்துவிடும். நமது கண்களுக்குப் புலனாகாத இருளின் நுண்ணிய வேறுபாடுகளையும், அவ்விருள்களுக்குள் உள்ள கட்புலனாகா மீயொளியலைகளையும் கூடக் காணும் திறன், இல்லாத பூனைக்கு உண்டு. (நமக்கு செவிப்புலனாகாத மீயொலியலைகளை வௌவால்கள் உணர்வதைப் போல).
அது நமக்குப் புலப்படாததற்கு அதன் உடற் சூட்சுமமும் ஒரு காரணிதான். இல்லாமலிருப்பதற்கு ஏற்ற தகவமைப்பைக் கொண்டது அது. உடலும் உயிரும் ஒன்றேயானது. அதாவது, உயிரால் அமையப் பெற்றது அதன் உடல்.
இருளுக்குள் உள்ளபோது அது இருள் உரு கொண்டிருக்கும். கட்புலனாகா ஒளியலைகள் உள்ளிட்ட வெளிச்சங்கள் அதை நெருங்கும்போது அது காற்றாக உருவின்மை கொண்டுவிடும். அதனாலும்தான் இல்லாத பூனை நாம் காண முடியாததாகிறது.
மேலும், இல்லாத பூனை மௌனமாகக் கத்தக்கூடியது என்பதால், சப்தங்களை மட்டுமே கேட்டுப் பழகிய நம் காதுகளுக்கு அதன் குரல் கேட்பதில்லை. அதன் அடிவைப்புகள் நிசப்தமானவை என்பதால் அதுவும் நமக்குக் கேட்காது. அதைத் தொட்டு உணரலாம் என்றாலோ, காற்றோடு காற்றாகக் கலந்திருக்கும் அதன் சூட்சும உடலை நம்மால் பிரித்தறிய இயலாமல் போகிறது.
இல்லாத பூனை இல்லை என்று சொல்லப்படுவதற்கு இன்மையைப் பற்றிய புரிதல் இல்லாததுநான் மிக முக்கியமான அடிப்படைக் காரணம். இன்மையில் வேறெதுவும் இல்லாவிட்டாலும் இன்மையின் இருப்பு இருக்கிறது. எனவே, இல்லாத பூனை இருக்கிறது. (அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற இன்மையில், எங்கெங்கிலும்). இந்தப் புரிதலின் வாயிலாகத்தான் இல்லாத பூனையை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்; அதன் இருப்பை அறிய முடியும்.
அல்லது இன்னொரு வழியில். நீங்கள் இருளாகவோ, இன்மையாகவோ ஆகிவிடுவது. அப்போது, இல்லாத பூனை உங்களுக்குள் இருக்கும்; இல்லாத பூனைக்குள் நீங்கள் இருப்பீர்கள்.
இல்லாத பூனை பாலைக் குடிக்குமா, எலியைப் பிடிக்குமா என்பது பற்றி நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
– சௌந்தர சுகன், நவம்பர் 2005
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |