இராவண சீதை
(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராவணன் சிரித்தான்!
“ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்!”
கடைசல் பிடித்து வார்த்திருந்த தூண்களில் விதாளங்கள் சிரித்தன. கூடைப் பூ கொட்டிக் கவிழ்த்தமாதிரி அவன் பத்துத் தலைகளும் சிதறியதுபோல அவன் சிரித்தான். சூழச் சிரித்தான்.
அவன் வயிற்றுக்குள் ஈரல்குலை சிரித்தது. நெஞ்சில் இதயம் சிரித்தது. மண்டை ஓட்டுக்குள் ரத்தமும் மூளை நிணமும் சிரித்தன, அவனுக்குச் சிரிப்பும் வந்தது. சிரித்தான். போர்க்களத்தில் ராமன் என்ன சொன்னான்?
ஒஹ்! “இன்று போய் நாளை வா”
அரண்மனை எங்கும் இருண்டு கிடந்தது. பணியாட்கள் அரக்கர்களைக் கூடக் காணோம். – எங்கும் சாவின் அமைதி”,
புயலுக்கு முன் நிலைக்கும் வரட்சி!
சீதையின் முகத்தில் எப்படி விழிப்பது?
சீதைக்காகவா இந்த வீழ்ச்சி?
மேகங்களும் கூடி ஆகாயத்து இருள் நீலத்தை மூடி கரும் இருளாக்கிவிட்டிருந்தது. மணிகள் குலுங்க கோவில் கதவுகளைத் திறந்தான் ராவணன் மணிகள் குலுங்கி அடித்து நின்றன. உள்ளே பிரும்மாண்டமான லிங்க வடிவம்.
கருவறையில் மீண்டும் ஒலித்தது.
“இன்று போய் நாளை வா”
ராவணன் சிரித்தான். அழ முடியவில்லையே! அழ முடிய – அவனே முடியவேண்டும்.
இதுவரை இன்று என அவனைப் போகச் சொன்னவனும் இல்லை. இன்று என அவன் போர்க்களத்தில் விட்டவனும் இல்லை. நாளை வா என்றழைத்தவனும் இல்லை. இவன் யாரையும் நாளை என்று கணக்குச் சொன்னதும் இல்லை
சிலந்து போயிருந்த அவன் கண்களும் நெஞ்சிலும் முதுகிலுமாகப் படர்ந்துகிடந்த கேசச் சுருள்களும் சிதைந்த கவசமும் இரத்தம் வழியும் அவன் மார்பும் எல்லாம் விம்முதல் உற்றன.
நாளை என்ற சொல்லும் விம்மியது.
கோவிலின் வெளியே யாரோ நடந்துவரும் பாதச் சரசரப்பு.
இராவணன் கண்களை மூடி மறுமுறை திறந்தான்.
வந்தவள் சீதை! பெண்கனி!
இராமன் பத்தினி!
இராவணனிடம்!
“சீதே! நீ ஜெயித்துவிட்டாய்!”
சீதை லேசாக அவன் எதிரே நின்று நோக்கியபடி கேட்டாள்-
“தோற்றுவிட்டாயா?”-
”நன்றாகக் கேட்டாய்! தோற்றுத்தான்? – இனி-“
”இனி நான்-”’
“இராமன் வருவான் – அழைக்க – “
“நாளை வா!” என்றழைத்திருக்கிறான் இராமன்
“நாளை நீ?”
ஆமாம் – நாளை என் பெயர் நிற்கும் நாள்! என் புகழ் உச்சியின் நாள்!
”இதென்ன?”- சீதையின் வியப்பு உயர்த்தியது.
இராவணன் பைத்தியம் பிடித்தவன்போல் குரூரமாய்ச் சிரித்தபடி பேசினான்..
“ஆமாம் இராவணன் அழிவதில்லை”
“களங்கம் இன்றி வந்த நான்…”
“களங்கமின்றியே இராமனிடம் செல்வாய்…”
“இல்லை”
”என்ன?’ – இராவணன் அதிர்ந்தான். _”அப்படியானால்?” என்றார். “ஆம் ராவணா? என் திசை திரும்பி விட்டது!”
இராவணன் குழம்பினான்…
கலகலவென்று சிரிக்கும் பெண்ணின் குரல் கேட்டு நிமிர்ந்தான்.
இருளில் இருந்து ஒரு உருவம் அவனைப் பார்த்து பலமாக நகைத்தபடியே அவளை நோக்கி வந்தது. அது யார்!? மீண்டும் கலகலவென்னும் நகைப்பு.. அது – புஞ்சிகஸ்தலை!
சீதையின் அருகே நின்றாள் அவள்!… சீதையின் கண்களுக்கு அது புலப்படவில்லை. இராவணன் உடல் புஞ்சிகஸ்தவையைக் காணும் போதெல்லாம் நடுநடுங்கும். சீதையை அணைக்க எண்ணும் கணங்களெல்லாம் சீதை அருகே தோன்றுவாள் புஞ்சிகஸ்தலை! இப்போது இராவணன் உடல் நடுக்கம் கொள்ளவில்லை – அங்கே இனி ஒன்றும் இல்லை – இராவணன் இப்போது வெறும் உடல். இராமன் இராவணனைப் பிணமாக்கி உலவ விட்டிருக்கிறான். அடித்துக் கொன்று விழுங்கும் சிங்கம் இரையைக் கடைசி முறையாக நக்குவதுபோல,
“இராவணா… என்னைக் கொன்று விடு”
சீதை ராவணன் கால்களருகே விழுந்தாள். அதிர்ந்து நகர்ந்தான் அவன்.
“சீதே! என்ன இது?” ராவனான் அதிர்ந்தே போனான்.
“என்னை நீ இவங்கையில் சிறைவைத்த போதே மடித்திருக்கவேண்டும்.”
“சீதா!” – அவள் எதிரே எரிந்து தீபத்தருகே நடந்தபடி பேசினான்.
“ஆம் ராவணா! என் தெய்வம் என்னைக் காக்கவா உன்னுடன் போரிடுகிறது? இல்லை. இல்லவே இல்லை. என்னைத் தூக்கிவந்த உன்னைப் பழிவாங்க! ஊருக்கு உலகுக்குக் காட்ட… உண்மையில் என்னைக் காக்கவென்றால் – அது – எப்போதோ முடிந்திருக்கும்.”
இராவணன் – அயர்ந்தான்.
“மாரீசன் மானாய் வந்தான் – தெரியவில்லை. நான் மானில் மயங்கினேன் தெரியவில்லை. மானுக்காக ஓடியும் புரியவில்லை. இலக்குவன் போயும் புரியவில்லை – திரும்பி வந்தும் காக்க ஏலவில்லை. நீ என்னைக் கதறக் கதற தூக்கி வந்த பின்னும் – இத்தனை நாளான பின்னும் – போர் தொடங்கி இத்தனை நாட்கள் ஆன பின்னும் – என் தெய்வம் வரவில்லை. நான் அவருக்கு அருகதையற்றவள் என்று எண்ணி விட்டார் – இனி -?” அவள் தீர்மானத்துடன் பேசி நிறுத்தினாள்.
”இல்லை சீதா! என் உலகம் நாளை முடியும். உங்கள் உலகம் நாளை தொடங்கும்”
“இல்லை என் உலகம் அன்றே முடிந்துவிட்டது!”
”என்ன?”
ஒரு மௌனம் இருவரையும் ஆட்கொண்டது. இருண்ட உலகமும் குலைந்து கிடந்த இலங்கையும் சவ அமைதியில் நின்றநிலை கண்டது. இராவணா! என்னை விரும்பினாய்! என் குடிலுக்குப் பிச்சை எடுப்பவளாய் வந்தாய், என்னைக் கவர்ந்து சிறை வைத்தாய். உன்னால் என்ன முடிந்தது? மானைத் துரத்திப் போய் ஏமாந்தார்! என்னைக் கொள்ளை கொடுத்தார்?! வெறும் கையனாய் நின்றார். இதோ உன்னை வெற்றி கண்டார். ஆனால் ஆனது என்ன?! இருவரும் கண்டது என்ன?
சீதையின் கதை ஊரறிந்துவிட்டதே! இன்றல்ல நாளையல்ல. இனி இராமபிரான் உள்ளவரை சீதையின் களங்கந்தின் கதையாக: என் வாழ்வைப் பேசாமல் இருப்பார்களா இந்த மனிதர்கள்?
சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். இராமபிரான் மானைத் துரத்திச் சென்றார். சீதை அவறினாள். இராமபிரான் காதில் விழவில்லை. இராவணன் சீதையை இலங்கையில் சிறைவைத்தான் – என்ற நிகழ்வை யார்தான் வந்தாலும் மாற்றமுடியுமா இராவணா?”
தீப்பொறி சிதறுவதுபோல இருந்தது இராவணனுக்கு-
“உண்மையிலேயே நான் பத்தினியாய் இருந்தால் இதுவரை என் உயிர் தரித்திராது.” விரக்தியின் நைப்பு அவள் குரலில் தெரிந்தது.
“இல்லை! இல்லை! இல்லை. என் நெஞ்சில் வழியும் இரத்தத்தின் ஆனையாகச் சொல்கிறேன். சீதா நீ பாக்யசாலி. உன் தெய்வத்தை நீ அடைவாய்! என்னை நாளைய போரில் இராமன் வெல்வான்!”
“ஆமாம்! நாளை அவர் வருவார்! என்னை மீட்பார்! நான் அவரிடம் இல்லை! ராவணன் என்னைத் தீண்டவும் இல்லை. நான் சுத்தமானவள்! கற்புக்கரசி| கற்புக்கன! நாள் இன்னமும் பத்தினிதான்! என்னை உற்றுப்பார்! என்னை ஏற்றுக்கொள் என்று அவரிடம் கெஞ்சுகிறேன்! பிறகு என்னைச் சோதனைக்குளாளாக்கிய பின் அவர் என்னைப் பத்தினியாக ஏற்பார் இல்லையா?” – ஏளனம் தொனித்தது-
அவள் பயங்கரமாய்ச் சிரித்தாள். சீதையின் பேச்சு அவனை ஏதோ ஒரு நுணியில் பொசுக்கியது நெஞ்சில் வலி சுண்டியது.
என் உடலை உடலின் வளப்பத்தை மரஉரியில் கானகத்தே கண்டாய் மயங்கினாய்! கவர்ந்தும் வந்தாய்! உன் களவு அது. ஆனால் என் உடவை நெருங்கவாவது உன்னால் முடிந்ததா? என்னைக் காப்பாற்ற வந்தவர் கையில் நீ அழியப் போகிறாய்! இதற்காகவா?
நீ தூக்கி வந்தே என்னைக் கெடுத்தாய். அவர் பறி கொடுத்தே என்னைக் கெடுத்தார். இனி, எப்போது என்னைப் பார்த்தாலும் இராவணனின் நினைப்பை அவர் போக்க முடியுமா? இராவணன் அரணில் இருந்த நினைவைப் போக்க முடியுமா? இராவனன் அந்தப்புரத்தில் சென்று சீதையை மீட்டதன் எண்ணத்தைப் போக்க முடியுமா?…
சீதை என்ற பெயர்கூட இராவணனை விட்டு நினைவு வராது..”
….விரக்தியுடன் ஆவேசமாய் அவள் கதறினாள். கீழே அந்த பிரும்மாண்டமான லிங்கத்தின் கீழே விழுந்தாள். அவள் கண்ணீர் அந்த இலங்கை மண்ணில் கலந்தது.
இராவணன்… உயிரற்று நின்றான்…
கோவிலின் உள்ளேயிருந்து மீண்டும் குரல் கேட்டது|
“இன்று போய் நாளை வா!”
மீண்டும் மௌனம்,
“இராவணா! என்னைக் கொன்றுவிடு!”
இராவணன் குனிந்து அஞ்சாமல் அவள் தோள்களைத் தொட்டுத் தூக்கி நிறுத்தினான். அவன் தலை எழு துண்டமாய் வெடிக்கவில்லை. சீதையும் ஏதும்செய்யாமல் விம்மினாள் அப்படியே இற்று அவள் கால்களில் விழுந்து பற்றிக் கொண்டான் இராவணன். அவள் நெஞ்சு தணிந்தது.
இராவணா! என்ன இது என்… காலில்?
“சீதே.. என்னை..மன்னித்துவிடு நான் செய்தது… தான்..”
”கால்களை விடு!” – அவள் விலகி நின்றாள்.
“சீதா நாளை நான் இறப்பேன். நான் இறக்குமுன் உன்னிடம் ஒரு வரம் கேட்பேன் தருவாயா?” அவன் மண்டியிட்டபடி – கையேந்தியபடி கேட்டான். அவள் மௌனமாய் கண்ணீருடன் அவனைப் பார்த்தாள்.
“உன்னை உன் களங்கம் இன்றி உன்னைச் சீதையாக நாள் கண்டதற்காக நீ தரத்தான் வேண்டும்”-
“என்ன அது?”
“நீ ராமனைப் பெற வேண்டும். நீ ராமனுடன் நீடு வாழவேண்டும். யார் தூற்றினும் இந்த யுகமே எழுந்து நீ களங்கமுற்றவள் என்றாலும் நீ ராமனையே அடையவேண்டும். நீ சாகக் கூடாது. நான் இறந்த பின்னும் நீ இராமனுடன் சேரும் வரை உன்னுடனேதான் இருப்பேன். நீ இராமனுடன் இணைந்த பின்தான் இராவணனின் ஆவி மறு உலகம் புகும். செய்வாயா?” சீதை உணர்வுகளில் நைந்தாள் பின்
“இராவணா! நீ நல்லவன்! ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? சொல்! சூர்ப்பனகை உன்னைத் தூண்டி இதற்கெல்லாம் வழி வகுத்து திருப்தியானாள். கும்பகர்ணன் உனக்காக மடிந்து வானோர் உலகம் பெற்றான். வீடணன் இராமனைச் சேர்ந்து உய்ந்தான். மற்றவர் உற்றவர் உனக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்து துறக்கம் பெற்றார். இராவணா? நீ என்ன செய்யப்போகின்றாய்? நீ யாரைத் துணைகொண்டு எங்கேதான் போகப்போகிறாய்?” என்றான்.
“சீதா! உன்னைப் பற்றினேன்”- இராவணன் கெம்பீரமாய் பதிலைச் சொன்னபோது சீதை பொங்கிக் கண்ணீர் வடித்தாள். அவள் துயரம் அவனைச் கட்டது, அவன் கண்ணீர் இலங்கையைச் சுட்டது. மிருத்த பிரயாசத்துடன் அவள் சொன்னாள்.
“இராவணா! நீ என்னைக் காப்பாற்றினாய். நான் இறக்க மாட்டேன்”.
இராவணனும் தலைகுனித்தான்.
சிவலிங்கம் ஜ்வல்லித்தது. நாளை-?
இராமன் சொன்னது “இன்று போய் நாளை வா!” என்று.
அது கடல் அலை ஓசையாய் இராவணன் காதுகளில் வீசியது.
இராவணனும் சீதையும் யார் வெற்றி பெறுவது என்ற பாவனையில் ஒருவரை ஒருவர் தோற்கடித்துக் கொண்டு நின்றார்கள்.
கடைசியில் இருவருமே தோற்றார்கள்.
இராவணன் தோற்பும் சீதையின் தோற்பும் இராமனின் வெற்றியில் நிலைத்தது.
இராமனின் வெற்றியே அதுதானே?!
– அங்கிள் 1971.
– தஞ்சை பிரகாஷ் கதைகள், முதல் பதிப்பு: ஜூலை 2004, காவ்யா வெளியீடு, சென்னை.