இராயனுடையது இராயனுக்கே!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 1,106
இயேசு, ”இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்றார் – மத்தேயு 22:21
அழுக்கில்லாத புதிய பிரித்தானியப் பவுண்டு நோட்டுகளைத் தனது தோல் பையிலிருந்து எடுத்து உண்டியலுக்குள் அவசரமாகத் திணித்தான் ரவிக்குமார். உண்டியலின் சிறிய வாய் திணறிற்று. ரவிக்குமாரின் அவசரம் திணிப்பதை மேலும் சிக்கலாக்கியது.
பிரான்சின் லூர்து மாதா தேவாலயத்தை ஒட்டி நதி ஒன்று ஓடுகிறது. அந்த நதியின் அருகில் சில உண்டியல்களை வைத்திருப்பார்கள். அப்படியாக அமைந்திருக்கும் ஒரு உண்டியலுக்குள் தான், கறுப்பு நிற தோற்பையிலிருந்து கை நிறைய நோட்டுக்களை அள்ளி, பாடசாலைக்குச் செல்ல அவசரமாக இருக்கும் குழந்தையின் வாய்க்குள் அம்மா உணவைத் திணிப்பதுபோல், அவசரத்தில் உள்ளே திணிக்கும் போது, ஒரு கை அவனது கையை பிடித்துத் தடுத்தது!
பொன் நிறத்தில் இருந்த அந்த அழகிய கையின் தொடுகை, அவனது உடலில் ஆயிரம் வால்ட் மின்சாரமாகப் பாய்ந்து, அவனை நிலைகுலைய வைத்தது. தேவாலயத்தில் எரியும் சாம்பிராணி வாசனை, அப்போது அவனது சுவாசத்துள் மயக்க வாயுவாகச் சென்று, உடலை லேசாக்கி, காற்றில் மிதப்பது போன்ற மாய உணர்வை அளித்தது. நிலத்தில் விழுந்து விடாது இரும்பு உண்டியலை இடது கையாலும் பவுண்டு நோட்டுக்களை வலது கையாலும் பற்றியபடி அகலக்கால் வைத்து, உடலைத் திடப்படுத்தி, மனத்தில் நிதானித்து, மூச்சை சீராக்கினான்.
வசந்த காலத்துக்குக்குரிய அதிக நீர் சலசலத்தாலும் நிதானமாக ஓடும் கே டிபா (Gave De Pav) நதியின் ஓசை, கரையைக் கடந்து அவனது காதில் இதுவரை சங்கீதமாக ஒலித்தது, இப்பொழுது மறைந்துவிட்டது. அடர்த்தியான அமைதி ஒரு திரையாக அந்த இடத்தை ஆக்கிரமித்தது.
அவனைப் பிடித்திருந்த அந்தக் கையின் பிடியில் அழுத்தமோ இறுக்கமோ தெரியவில்லை. இலகுவாக உதற முடியும் போலிருந்தாலும் சிறு வயதில் தாய் தொடும்போது அவளது கையிலிருந்த வெப்பத்தை இந்த தொடுகையில் உணர முடிந்தது. ஆனாலும் சிறுவயதில், தம்பி அதைச் செய்யாதே, அங்கே
போகாதே, அவனோடு சேராதே என்ற உறுதியுடன் அம்மா தடுத்ததுபோல், இங்கும் அவன் பணம் போடுவதை உறுதியாகத் தடுக்கும் நோக்கம் அந்தப் பிடியில் தெரிந்தது.
அந்த உண்டியல் லூர்து மாதா கோயிலின் வெளியே நதிக்கரையில் மெழுகுவர்த்தி எடுப்பவர்கள் பணம் போடுவதற்காக அமைந்த சிறிய வாய் கொண்ட உண்டியல். அதனருகே கண்ணாடிப் பெட்டியில் ஏராளம் மெழுகுவர்த்திகள் இருந்தன.
ம்ம்ம்… யார் என்னைத் தடுப்பார்கள்?
உணவருந்தியபின் மனைவி சுகந்தி இரவுடையை அணியும்வரை காத்திருந்துவிட்டு, ”நான் மீண்டும் மாதா கோவிலுக்கு போய்விட்டு வருகிறேன். அறையின் சாவியை எடுத்துச் செல்கிறேன். நீ படுத்துக்கொள்” என்றான்.
“அட, நான் உடைமாற்ற முன்பாக சொல்லியிருந்தால் நானும் உங்களோடு வந்திருப்பேனே!”
“பரவாயில்லை நான் காலாற நடந்தது போலிருக்கும். அதே நேரத்தில் உணவு செரிப்பதுக்கும் நல்லது தானே? இரத்தத்தில் உள்ள சீனி மட்டத்தை குறைக்கவும் நல்லதே” என்று சிரித்தபடி சாவியுடன் புறப்பட்டான்.
“நீங்கள் தனியா போறது சரி, ஆனால், கெதியாக திரும்பி வாருங்கோ. நீங்கள் வரும் வரைக்கும் எனக்கு நித்திரை வராது” என்று சொல்லியபடியே சுகந்தி காலை நீட்டிப் படுக்கையில் படுத்தபடி,” கொஞ்சம் வெக்கையாக இருக்கு. ஏர் கண்டிசனை கூட்டி விடுங்கோ” என்றாள்.
ஆலயத்திற்கு வெளியே எவரும் இந்த நேரத்தில் நிற்கச் சாத்தியமில்லை என்பதால், அந்த நேரத்தைக் கணித்து ரவிக்குமார் வந்தான். இரவு உணவை அருந்தி விட்டு, தங்கு விடுதியில் ஓர் இரவு மட்டும் தங்கிவிட்டு, காலை மீண்டும் இங்கிலாந்து செல்வதுதான் திட்டம். இரவு ஒன்பது மணிக்கு மேல் அனேகர் தேவாலயத்தின் அருகே இருக்கமாட்டார்கள் என்ற கணிப்புடன்தான் அங்கு அவன் வந்தது.
ரவிக்குமாரைப் பற்றிய சிறிய அறிமுகம் தேவை…
அவன் இலங்கையில் வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்த போதிலும் பல காலம் மன்னாரில் வாழ்ந்தவன். ஊரில் சிறுவயதிலே படகோட்டியாகி, திறமையான படகோட்டி என்ற பெயரைச் சிறுவயதிலே பெற்றுக்கொண்டான். வடமராச்சியில் 1987இல் ராணுவம் நடத்திய ‘வடமராச்சி ஒப்பரேசன்’ போது அங்கிருந்து வெளியேறி, நாட்டு நிலைமை கருதி, மன்னாரில் சின்னக்கடைப்பக்கம் உறவினர்களுடன் வசித்தான். அங்கிருந்த காலத்தில் கத்தோலிக்கப் பெண்ணான சுகந்தியைத் திருமணம் செய்த பின்பு சுகந்தியும் மன்னார் வாசமும் அவனை மாதாவின் பக்தனாக்கியது. அவனது படகிற்கு ‘லூர்து மேரி’ எனப் பெயர் வேறு வைத்திருந்தான். ஞானஸ்தானம் வாங்காத கத்தோலிக்கனாகவே அவன் வாழ்ந்தான்.
இந்திய ராணுவம் சென்ற பின்பு, 1990களின் பின்பான போர்க் காலத்தில், விரும்பியும் விரும்பாமலும் இயக்கத்திற்கும் படகு ஓட்டினான். இந்தியாவிற்கு தப்பிச் செல்ல விரும்பும் அகதிகளை இந்தியக் கரைக்கு கொண்டு சேர்ப்பான். அவனது அந்த வேலையில் பணத்தை மட்டும நோக்காது அதை ஒரு சாகசத் தொழிலாகவும் மக்களைக் காப்பாற்றும் தொண்டாகவும் நினைத்திருந்தான்.
இப்படியான ஒரு நாள், இந்தியாவிலிருந்து இயக்கத்திற்கு மருந்து, பெற்றோல் என சில பொருட்களோடு கடலில் வந்தபோது, கடலில் இலங்கை கடற்படை துரத்த, இவனும் தப்புவதற்காய் அதி வேகமாய் படகை செலுத்த, டீசல் முடிந்துவிட்டது!
விளைவு?
காற்றின் திசையில் பல தூரம் கடந்து, தமிழக கரையில் நாகபட்டினம் அருகே ஒரு கிராமத்தில் வந்து ஒதுங்கினான்.
ரவிக்குமாருக்கு அப்பொழுது இருபத்தைந்து வயது. இளமைக் கனவுகள், எதிர்காலம் எனச் சிந்தித்தபடி இருந்தவனுக்கு உணவற்று ஒரு பிளாஸ்டிக் கான் தண்ணீருடன் கடலில் தத்தளித்தபோது வாழ்க்கை வெறுத்துவிட்டது. கண்ணீர் கலங்க உயிர் காக்க மாதாவை வேண்டியவன், கரை சேர்ந்ததும் கழுத்திலிருந்த பத்துப் பவுன் தங்கச் சங்கிலியைக் கழட்டி வேளாங்கண்ணியின் உண்டியலுக்குப் போட்டுவிட்டு, மீண்டும் மாதாவிடம் வெளிநாடு போக வரம் வேண்டினான். தனது படகை இந்திய கரையில் மீனவர்களுக்கு விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் பம்பாய் வழியாகப் பல நாடுகள் அலைந்து, இறுதியில் இங்கிலாந்துக்கு, தொலைதூரத்தில் விழுந்து ஆழ்கடலின் அலையில் ஒதுங்கிய ஒற்றைத் தேங்காயாக வந்து சேர, சில வருடத்தில் சுகந்தியும் வந்து அவனுடன் இணைந்துகொண்டாள்.
நிகழ்காலத்திற்கு வருவோம். கால் மணிநேர பொடி நடையாகக் கோவிலுக்கு வந்தவன், கையில் உள்ள தோல் பையைத் திறந்து அந்த உண்டியலுக்குள் தள்ளியபோதே, அவனது கை பிடித்துத் தடுக்கப்பட்டது. இந்த இடத்தில் யாராக இருக்கும்?
மெதுவாக திரும்பினான். தலையை மெல்லிய நீலநிற சல்லாத்துணியால் மூடியபடி இருந்த அந்த பெண் ஐரோப்பிய வெள்ளையில்லை. அரபிய ஒலிவ் நிறத்தில், தூய வெள்ளை நிறத்தில், நீண்ட கன்னியாஸ்திரி உடையில் இருந்த அவளுக்கு நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயது மதிக்க முடியும்.
“யாரம்மா நீ?” என சிறிது எரிச்சலுடன் கேட்டான்.
“என்னைத் தெரியவில்லையா?” அந்தப் பெண்ணின் அழகிய புன்முறுவல் அந்த மங்கிய இரவிலும் வானத்து மின்னலாக அவனது கண்களைக் கூச வைத்தது. இமைகளை மூடிவிட்டு மீண்டும் விரித்து, ”தெரியவில்லை… ஆனால், எனக்குப் பதற்றமாக இருக்கிறது. உடலில் பலம் இல்லாது இருக்கிறது” என பாதி வார்த்தையை விழுங்கினான் கரகரத்த குரலில். சிறிது நேரம் அந்த இடத்தில் சிலையாகினான்.
அப்போது தேவாலயத்தின் முன்பிருந்தே மாதா சிலை அசைந்தது. மாதா கீழே இறங்கியதும் நிலத்தில் புவி அதிர்வையும், பலமான புயல் அடிப்பதுபோல் மரங்கள் அசையும் ஓசையையும் எழுப்பியபோது ரவிக்குமார் நடுங்கினான். அந்தப் பெண் சிரித்தபடி ”பயப்படாதே மகனே” எனத் தோளில் கை வைத்தபோது அவனது நடுக்கம் மறைந்தது.
“தாயே நான் என்ன தவம் செய்தேன்? யாரம்மா நீ?”
“நான் நேரில் வந்தது உனது பாவத்தைத் தடுக்க மகனே.”
“நான் என்ன செய்தேன் தாயே? இதுவரையில் முடிந்தவரை நேர்மையாக உழைத்து வருகிறேன். யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை. சிறுவயதிலிருந்தே நான் மேரி மாதாவின் பக்தனம்மா.”
“அதுக்குதான் நான் பல வேலைகளை விட்டுவிட்டு உன்னைத் தேடி வந்தேன். இந்தப் பணத்தை எனது உண்டியலில் போடுகிறாயே! இது கறுப்புப் பணம் அல்லவா?”
“இல்லை! நான் காலை முதல் இரவு வரை என் உடலையும் குடும்பத்தையும் வருத்தி சம்பாதித்தது. அதில் ஒரு பகுதியை மாதாவுக்குக் காணிக்கையாகத் தருகிறேன், அது தவறா தாயே?”
“இந்தப் பணத்தை நீ எப்படிச் சம்பாதித்தாய் என்பது நினைவில்லையா? கடைக்கு வருபவர்களிடம் எவ்பொஸ் மெசின் பழுதாகிவிட்டது என்று அல்லது அதை மேசையின் கீழ் வைத்துவிட்டு பணமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கினாய். அது கறுப்புப்பணம் அல்லவா? அரசாங்கத்தை நீ ஏமாற்றுவதன் மூலம் யாரை ஏமாற்றுகிறாய்? உன்னைத்தான் ஏமாற்றுகிறாய் அல்லவா? அரசாங்கம் ஒழுங்காகப் பாதை போடாவிட்டால் அதில் உனது வாகனமும் பாதிப்படையும். சமீபத்தில் உனது கடைக்கு முன்பாக நடந்த வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு உடனடியாக அம்புலன்ஸ் வராது அவர்கள் மரணமடைந்தபோது நீ பலருடன் சேர்ந்து அந்த அம்புலன்ஸ்காரரை திட்டினாய். ஆனால், உண்மையில் தேவையான அளவுக்கு அம்புலன்ஸ்கள் அரசிடம் இல்லை. நாளை நீ வைத்தியசாலைக்குப் போனால் அங்கு மருந்து உட்பட, வைத்தியர், நர்ஸ் போன்றவர்கள் எப்படி பணியாற்ற முடியும்? அரசுக்கு நாம் செலுத்தும் வரி என்பது நமக்காக நாம் செலுத்தும் காணிக்கையே, புரிகிறதா?”
“இல்லை பெரும்பாலான பணத்தை வரியாக செலுத்துகிறேன் தாயே.” சிறு குழந்தையாகத் தனது பக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தான்.
“உனக்கு நினைவிருக்கிறதா? முப்பது வருடங்கள் முன்பாக கடத்தல் பொருட்களோடு சுழல் காற்றில் சிக்கிய உனது படகு, அலைகளில் மோதி தள்ளாடியபோது, நீ உணவற்று சில நாட்கள் கடலில் அலைந்தாய். அக்காலத்தில் தென் இந்திய மீனவர்கள் உன்னை ஈழத்தவன் எனக் கண்டுகொண்டார்கள். அவர்கள் உனக்குத் தந்த புளிச்சாதம் நிவைிருக்கிறதா? சந்தேகம் இருந்தால் உனது வலது கையை முகர்ந்து பார்.”
உடனே அவன் பணம் வைத்திருந்த தனது வலது கையை எடுத்து முகர்ந்தபோது… என்ன ஆச்சரியம்! புளிச்சாதம் மணத்தது! இன்று இரவு கடையில் உண்ட ஆட்டிறச்சிக் கறி மணக்கவேயில்லை. இந்த முப்பது வருடங்களில் அவன் புளிசாதம் உண்டதில்லை. கடைசியும் முதலுமாக இந்தியக் கரையில் உண்டதுதான்.
“மீண்டும் உனது கடத்தல் தொழிலில் இந்தியாவிற்கு வந்து விட்டு, இலங்கை போக இருந்தபோதே புயல் உன்னை மீண்டும் இந்தியக் கரைக்குத் தள்ளியது. இறுதியில் நீ நாகபட்டினம் வந்து அன்னை வேளாங்கண்ணி கோவில் உண்டியலில் ஆட்கடத்தலில் பெற்ற பணத்தில் வாங்கிய சங்கிலியைப் போட்டாய். அது நினைவிருக்கிறதா?”
“அது எப்படித் தெரியும் தாயே?”
“அதை விடு? அப்பொழுது நீ இளைஞன், இலங்கையில் நடந்த கொடுமைகளில் தப்பி வெளிநாடு செல்ல நீ அதைச் செய்கிறாய் என நினைத்து வாழாவிருந்தேன் ஆனால், அந்த பழக்கம் உன்னிடம் இங்கும் தொடருகிறது.”
“தாயே, என்னை மன்னிக்கவும் நான் சிறு வயதிலிருந்தே மாதாவில் அன்பு கொண்டவன்.”
“அப்போது உன்னைக் கவனித்தேன். அந்த அன்பினாலா ஆட்கடத்தலில் பெற்ற பணத்தில் வாங்கிய உனது பாவத்தை எனது தலையில் சுமத்தினாய்? பயத்தில் நடுங்கி உணவின்றி உயிர்ப் பயத்துடன் வந்ததால் அது பாவத்தின் சம்பளமென தெரிந்தும் உனது காணிக்கையை ஏற்றேன்.”
“தாயே அது எனக்கே மறந்துவிட்டது. உங்களுக்கு எப்படி?”
“நான் உன்னை மட்டுமா பார்க்கிறேன்? உன்போல் எத்தனையோ பேர் இந்த உலகமெங்கும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது பாவங்களுக்கு தங்கள் பிள்ளைகளை மட்டுமல்ல எங்களையும் அல்லவா பங்குதாரர் ஆக்குகிறார்கள்! இவற்றால் புண்ணியம் தேடமுடியுமா? நீயே யோசித்துப் பார்” என்று சொல்லிவிட்டுச் சிரித்த அந்த தாயின் சிரிப்பு, அவனது பயத்தைத் தெளிய வைத்தது. அந்த நகைச்சுவைக்குச் சிரித்ததும் தாயின் மனது இப்பொழுது இளகி இருப்பது அவனுக்கு உறுதியாகியது.
“தாயே நான் இதைத் தெரிந்து செய்யவில்லை. ஆனால், சுயநலமாக சிந்தித்தேன் என்பது உண்மை. பாவமன்னிப்புக் கேட்கத் தயார்” என கூறி அந்த இடத்திலே முழங்காலில் இருந்தான்.
“எழுந்து நில் மகனே! அது எனக்குத் தெரிந்துதான், உனக்கு அறிவுரை சொல்கிறேன். சிந்தித்துப் பார். உன்னைப்போல் எல்லாரும் செய்தால் யார் அரசுக்கு வரி கட்டுவது? எந்த நாட்டிலாயினும் அரசை கொண்டு நடத்த முடியுமா?”
“இதோ பார்… இரண்டாயிரம் வருடங்கள் முன்பான ஒரு காட்சி.”
அவன் தலையை லூர்து மேரி தேவாலயம் பக்கம் திரும்பினான்.
மணல் பாங்கான பிரதேசத்தில் ஒரு பழைய சிறிய கல்லால் அமைந்த கட்டிடம் இரண்டு ஒலிவ் மரங்கள் மத்தியில் தெரிந்தது. அந்தக் கட்டிடத்திற்கு யன்னல்கள் இல்லை. நான்கு பக்கமும் திறந்தபடி ஒரு மடம்போல் தெரிந்தது. அதற்குச் சிறிது தூரத்தில் பெரிய தேவாலயம் இருந்தது. அங்கு ஏராளம் மக்கள் போய் வந்தபடி இருந்தார்கள். வாசலில் குழந்தைகள் விளையாடின. பெண்கள் தலையைச் சல்லாத் துணிகளால் மறைத்திருந்தார்கள். ஆண்கள் தலைப்பாகை போல் துணியால் தலையைச் சுற்றி கட்டியிருந்தார்கள் இந்த இடம் எங்கோ சினிமாவில் பார்த்தது போல் தெரிந்தது. ஆனால், நினைவு வரவில்லை. இப்போது நினைவு வருகிறது: அடிக்கடி தொலைக்காட்சியில் வரும் பாலஸ்தீனம் போல் இருக்கிறதே!
அங்கு ஒருவர் தசைகள் முறுக்கியபடி விரிந்த தோள்களுடன், முகத்தில் அடர்ந்த தாடியுடன், தலையை துணியால் மூடியபடியபடி, தோளில் ஒரு வெள்ளைத்துண்டைப் போட்டபடி, முரட்டுத் தோற்றமும் அதிகார தோரணையும் வெளித்தெரியச் சிவந்த கண்களுடன் ஒரு கதிரையில் அமர்ந்து ரோமர்களது நாணயங்களை கைகளால் எண்ணியபடியிருந்தார். அவரது மேசையில் ஒரு தாள், எழுதுகோல், கறுத்த மைக்கூடு அத்துடன் மேசையில் நாணயங்கள் குவிந்திருந்தது. அந்த மேசையில் ராயனின் பணியாள் என்று ஒரு சிறிய பலகையில் எழுதப்பட்டிருந்தது. அவரது இடது புறத்தில் இருவர் பணிவுடன் கைகாட்டியபடி நின்றார்கள். பணத்தை எண்ணி
முடிந்ததும் அவர் பக்கத்தில் பணிவுடன் நின்றவர்களிடம் கொடுத்தபோது அவர்கள் அங்கிருந்த மண் ஜாடிக்குள் போட்டார்கள். அந்த சில்லறை நாணயங்கள் கலகலத்தன. வலது பக்கத்தில் பல ஆண்கள் அழுக்கான உடையணிந்து வரிசையில் அவரது முகத்தை பார்த்தபடி நின்றார்கள்.
தனது வேலையை நிறுத்திவிட்டு தாடியுடன் நின்றவர் எழுந்து நின்று, ”இவ்வளவுதான் இன்று முடியும் நாளை வாருங்கள்” எனக் கையை காட்டி அதிகாரமாகச் சொன்னார். தயங்கியபடி நின்றவர்களை அந்த இரு பணியாளர்களும், ”ஐயா சொன்னது கேட்கவில்லையா” என்று உரத்த குரலில் இரைந்தபோது வரிசையின் நின்றவர்கள் உதட்டுக்குள் முணுமுணுத்தபடி நின்ற வரிசையிலிருந்து, பாதங்களால் மிதிக்கப்பட்ட எறும்புகளாகப் பல திசைகளில் கலைந்தார்கள்.
தாடி வைத்தவர் தனது தடித்த விரல்களால் தன் வாயைக் காட்டி தனக்கு வைன் கொண்டுவரும்படி ஒரு பணியாளரை கைகளால் சைகையிட்டபடி மீண்டும் தனது கதிரையில் அமர்ந்தார். அப்பொழுது மெதுவாக நடந்தபடி ஒருவர் வந்தார். அவர் தனது உடலை வெள்ளைத்துணி அணிந்திருந்ததுடன் தாடி வைத்திருந்தார். அவரது கண்களிலிருந்து வந்த ஒளி, அந்த பகல் நேரத்திலும் கண்களைக் கூச வைத்தது. அவரை அங்கிருந்த பணியாளர்கள் ஆச்சரியமாக வாயைப் பிளந்தபடி பார்த்தனர்.
பணத்தை எண்ணியவரை நெருங்கியதும், ”மத்தேயு என்னுடன் வா!” என்றுவிட்டு பணியாளரகளிடம், ”இராயனின் பணத்தைக் களஞ்சியத்திற்குக் கொண்டு சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு மீண்டும், ”இராயனின் பங்கு இராயனுக்கே, தேவனின் பங்கு தேவனுக்கே” என முணுமுணுப்பது அந்த பணியாளர்களுக்குக் கேட்டது. மத்தேயு எந்த பதில் வார்த்தையும் பேசாது அந்த கட்டிடத்திலிருந்து இறங்கி அவரை தொடர்ந்தார்.
“மாதாவே இவர்கள் யார்? தேவனது குமரனைப்போல் தெரிகிறதே ! நான் என்ன பாக்கியம் செய்தேன்? என்ன செய்ய வேண்டும் மாதாவே?”
“அதோ அங்கே பார் அந்தக் கடையில் இருவர் உணவு அருந்துகிறார்கள். அவர்களும் உங்கள் ஊராட்களே.”
“ஆம் தாயே, அவர்கள், உன் அருளால், தொலைவில் நின்றாலும் எனக்கு நன்றாகத் தெரிகிறது. அதுவும் காலை நேரம் போல் தெரிகிறது.”
“இன்று காலையில் நடந்த விடயம், உனக்காக, நினைவு மீட்புக்காக காண்பிக்கிறேன். கண்ணையும் காதையும் கூர்மையாக்கிக் கொள். என் அருள் உனது கண்ணில் இப்பொழுது ஒளியாகிறது!”
கடையின் வெளியில் வைத்து காலை உணவை உண்ட அந்த ஆணும் பெண்ணும் எழுந்து, அந்த கடையின் உரிமையாளரான சிவப்பு உடையணிந்த பருமனான மத்திய வயதான பிரஞ்சுப் பெண்ணிடம் போகிறார்கள் என்பது ஒரு நாடக காட்சியாக அவன் கண்ணில் தெரிந்தது. அந்தக் கடையைத் தவிர்ந்த மற்றைய இடங்கள் இரவின் இருட்டிலும் சில இடங்கள் தெரு விளக்கால் பளிச்செனவும் இருந்தன.
“உங்கள் உணவு நன்றாக இருந்தது” என்றான் அந்த ஆண்.
“உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. இதற்கான பணத்தை எப்படி செலுத்துவீர்கள்? பணமாக வா அல்லது கடனட்டையாகவா?”
“உங்களுக்குப் பணமாகத் தருகிறோம். எவ்வளவு என்று சொல்லுங்கள்.”
“28 யூரோ.”
“இதில் முப்பது யூரோ உள்ளது. இரண்டு யூரோ உங்களுக்கான டிப்ஸாக இருக்கட்டும்.”
அந்தப் பெண் 30 யூரோ பணத்தை வாங்கி தனது கல்லாப் பெட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து இரண்டு யூரோக்களை எடுத்து அங்கிருந்த சிறிய உண்டியலில் போட்டாள். அந்த உண்டியலில் லூர்து மாதாவின் படம் இருந்தது. அந்த இருவரும் டிப்சை ஏற்காது மாதாவிற்காக போட்ட அந்த பெண்ணை பார்த்து ஆச்சரியத்துடன் ”மிக்க நன்றி” என வெளியேறும்போது, ”இந்தக் காலத்தில் இப்படியுமா?” என முணுமுணுத்தபடி வெளியேறினார்கள்,
“மகனே, அந்த உண்டியல் நிரம்பியதும் எனக்கு வந்து சேரும். அதை நான் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.”
“தாயே இப்பொழுது எனக்குப் புரிந்தது. என்னைப் போன்ற ஒருவனுக்கு நீங்கள் வந்து உபதேசம் செய்தீர்களே! நான் எவ்வளவு பாக்கியவான். கொண்டு வந்த இந்தப் பணத்தை என்ன செய்ய?”
“இராயனின் பணம் இராயனுக்கே; தேவனின் பணம் தேவனுக்கே என்ற வார்த்தையை கேட்டாயே?”
“தாயே நீங்கள் யார் எனக் கூறவில்லையே?”
“நீ யாருக்கு இந்த பணத்தைப் போடுகிறாயோ அந்த லூர்து மேரி நான்தான்” எனக்கூறி மறைந்தாள்.
படுக்கையிருந்து குதித்து தரையில் நின்றபடி, ”எனது கனவில் லூர்து மாதா வந்தார். எனது கனவில் வந்தார். மாதாவே நன்றியம்மா!” என்றான் ரவிக்குமார்.
“எதற்கு நடு இராத்திரியில் சத்தம் போடுகிறீர்கள்? இது வீடா? பக்கத்து அறையில் ஆட்கள் இருக்கிறார்கள் தெரியாதா?” காட்டமான வார்த்தைகள் சுகந்தியின் வாயிலிருந்து வந்தன.
“உனக்கென்ன தெரியும்? நான் கடவுளைக் கண்டேனடி!”.
“அதற்குத்தானே வியாபாரம் நடக்கும் கடையை வாரவிடுமுறை தினத்தில் மூடிவிட்டு லண்டனிலிருந்து விமானமெடுத்து வந்தோம். அது பெரிய விடயமா?”
“முட்டாள் பெண்ணே, நான் கனவில் வந்த மாதாவோடு பேசினேன்.”
இந்தாளுக்கு மரை கழண்டுவிட்டதோ? இதுவரையும் நல்லாத்தானே இருந்த மனிசனுக்கு என்ன வந்திற்று? நான் எப்படிச் சமாளிப்பேன். பிள்ளைகள் மட்டுமென்றால் பரவாயில்லை. ஆயிரக்கணக்கில் முதல் போட்ட கடையும் இருக்கிறதே! ஆனாலும் இந்தாளின் வழியில் சென்று என்னவெனக் கேட்பம்.
“என்ன பேசினிங்க? நான் கதைத்தாலே அதிகம் பேசாது ம் – ம்- ம் என்பவர் நீங்கள்! மாதாவோடு பேசினது என்னால் நம்பமுடியாது.”
“உன்னோடு கதைப்பதும் மாதாவோடு கதைப்பதும் ஒன்றா? விசரியே!”
“சரி அப்படியென்றால் நான் பக்கத்தில் படுத்திருக்கிறேன் என்று அறிமுகப்படுத்திச் சொல்லியிருக்கலாம். நானும் பேசியிருப்பேன். மகனது படிப்பு, மகளது கல்யாணம் பற்றி மாதாவிடம் கேட்டிருப்பேன். நான் பிறந்ததிலிருந்து கத்தோலிக்கப் பெண். நீங்கள் இடையில், அதுவும் என்னைக் கட்டியதால்…”
“அதுக்கு முதலே நான் வேளாங்கண்ணியின் பக்தன். ஒவ்வொருவரும் தானாக ஞானம் அடைவது. மற்றவர்கள் சொல்லி நடப்பதில்லை.”
“ஏன் புத்தர் மாதிரி பொறுப்பற்று குடும்பத்தை விட்டு வெளியேற ஏதாவது திட்டமிருக்கா? நான் மட்டும் உங்களது இரண்டு பிள்ளைகளுக்கும் அவிச்சுப்போட முடியாது. இப்பவே சொல்லிப்போட்டன். பிறகு குறை சொல்லவேண்டாம்” என்று சொல்லிக்கொண்டு தலையை விரித்தபடி சுகந்தி எழுந்து குளியலறை சென்றாள்.
அந்த நேரம் சிந்திக்க கிடைத்த இடைவேளையில், ‘வரி, கறுப்புப் பணம் என எதைச் சொல்லியும் இவளுக்குப் புரிய வைக்க முடியாது. மாதாவைப் பார்த்தேன், பேசினேன் என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். மற்றதை பின்பு பார்ப்போம்’ என நினைத்தான்.
மீண்டும் குளியலறையிலிருந்து வந்த சுகந்தி, தலையை துவட்டி முடிந்தபடி, ”மாதா உங்களை மட்டும் சந்தித்துப் பேசியது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உண்மையில் கனவில் வந்தது மாதாவோ அல்லது வேறு யாராவது பெண்ணா? நீங்கள் சொல்லும்வரை எனக்கு நிம்மதியில்லை. எனது நித்திரையையும் குழப்பி விட்டு. விடயத்தை விபரமாக சொல்லுங்கோவன்.”
“இது என்ன கதையா? நீ என்ன சின்னப்பிள்ளையா? உனக்கு சொல்லித் தூங்க வைக்க . மாதா கன்னியாஸ்திரி வடிவத்தில் வந்து என்னிடம் சுகம் விசாரித்தார். போதுமா?”
“பூ, இவ்வளவுதானா? நானும் ஏதோ உங்களைப் பெரிதாக நினைத்தேன். காலை ஆறு மணிக்கு விமானம் லண்டனுக்கு இருக்கு. நாலு மணிக்காவது எழும்பவேண்டும். மடு மாதாவே, இந்த மனுசனுக்கு நல்ல புத்தியைக் கொடு” எனச் சுவர் பக்கம் திரும்பிப் படுத்தாள்.
அன்று இரவு ரவிக்குமார், தனது முன்னிரவுக் கனவைத் துரத்தியபடி பின்னிரவைத் தொலைத்தான்.