இப்படியுமா…?




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட அதிவேக இரயில் வண்டி காங்கேசந்துறையை நோக்கி விரைகிறது. அது அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஆதியா மிடங்களில் மட்டும் தரித்துச் செல்லும். அதே போன்று கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட அதிவேக இரயில் வண்டிகள் தலைமன்னார், திருமலை, மட்டக் களப்பு, பதுளை, அம்பாந்தோட்டை ஆதியாமிடங்களை நோக்கியும் செல்கின்றன…
இந்த அதிவேக இரயில் வண்டிகள் பிரான்ஸ் நாட்டி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவாகும். மணிக்கு 250 கி. மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
இலங்கையில் புதிய கல்வித்திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகள் கட்டாய பாடங்களாக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. ஆறாம் ஆண்டிலிருந்து மாணவர்க்குத் தாய்மொழியோடு மற்ற இரு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஒன்பதாம் ஆண்டிலிருந்து எந்தத்துறைகளில் ஊக்கம் காட்டுகிறார்களோ அந்த துறைகளில் மேற்படிப்பு தொடர வசதி.
இலங்கை நான்கு மாநில நிர்வாகப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசம், கரை யோரப் பிரதேசம், கண்டிப் பிரதேசம், மலையகத் தமிழ் பிரதேசம். இவற்றுள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மை யாக வாழும் இடங்கள் ஒன்றிணைக்கப்பட்ட தனி அலகு.
அரசகரும மொழியாக தமிழும் சிங்களமும் அங்கீகரிக் கப்பட்டு செயற்படுகின்றன. சகல திணைக்களங்களிலும் தகுதி அடிப்படையிலேயே ஊழியர் நியமனங்கள். இரு மொழியிலும் இலங்கை முழுவதும் தொடர்புகொள்ள வசதி. மதச்சார்பற்ற நாடாக இலங்கை ஒளிர்கிறது. இன வாதம், மதவாதம், பிரதேசவாதம் பேசுவது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். மத்திய அரசாங்க ஆயுதப் படைகள், மாநிலத் தொண்டர் படை, மாநில பொலிஸ் பிரிவு ஆகிய வற்றுடன் மாநகரப் பொலிஸ் பிரிவுகளும் இயங்குகின்றன.
மத்திய அரசாங்க ஆயுதப் படைகளில் திறமை அடிப்படையில் சகல மக்களும் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மாநில தொண்டர் படைகளும் இணைந்து அந்தந்த பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆறுகள் குளங்கள் முதல் கிராமம் தோறுமுள்ள சிறு குளங்கள், கேணிகள்வரை ஆழமாக்கப் பட்டு அணைகள் அமைக்கப்பட்டு நீர் தேக்கப்பட்டு நீர்ப்பாசன வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலை யகத்தின் மண் வெள்ளத்தால் அள்ளுண்டு போகாமல் பாதுகாக்க நடவடிக்கை..
விவசாய நடவடிக்கைகள் துரிதகெதியில்… அரிசி, உப உணவுப் பொருட்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டு நீண்ட காலமாயிற்று… விவசாயத்தில் தன்னிறைவுபெற்று அரிசி, உபஉணவுப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன… பஞ்சத் தால் அவலப்படும் நாடுகளின் மக்களுக்கென நன் கொடை யாக உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன…
கிராமங்கள் தோறும் வைத்தியசாலைகள்.. மாவட்டந் தோறும் சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகள். இவ்வைத்திய சாலைகளில் சித்த ஆயுர்வேதப் பிரிவுகளும் சகல வசதிகளுடன் இயங்குகின்றன. நோய்களுக்கேற்ப அந்தந்த சிகிச்சைப் பிரிவுகளில், சுதேச மருத்துவர்களும் அலோபதி மருத்துவர்களும் கலந்தாலோசித்து சிகிச்சை அளிக்கிறார்கள். இவ்வைத்திய சாலைகளில் வெளிநாட்டு மாணவரும் பயிற்சி பெறுகிறார்கள். கிராமங்களில் வீடுகள் தோறும் சென்று மருத்துவத் தொண்டர்கள் ஆரம்ப சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், வயோதிபர் பராமரிப்பு நிலையங்களில் அதிக வசதிகள்… சராசரி வயது 91 ஆகக் கணிக்கப்படுகின்றது…. கைத்தொழில் வளர்ச்சி அபரிதமாக…குண்டூசியிலிருந்து கப்பல்கள் வரை செய்யப்பட்டு ஏற்றுமதிக்குத் தயாராகின்றன. ஜனாதிபதியும் இரு உபஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் உபஜனாதிபதிகள் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களாக இருப் பார்கள். அவ்வாறே சிறுபான்மை இனங்களைச் சேர்ந் தோரும் ஜனாதிபதியாக வருவதற்கு அரசியலமைப்பில் வழியுண்டு.தேர்தல்களில் ஒழுங்கீனங்கள் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். நீதித்துறை உச்ச அதிகாரங் கொண்ட தாக விளங்குகின்றது.
தேசியக் கொடியுடன் மாநிலங்களில் அம்மாநிலக் கொடிகளும் ஏற்றப்படுகின்றன. மகாவலி கங்கை வடக்கே தொண்டமனாறுடன் கலக்கிறது.
நயினாதீவு தினசரி பல்லாயிரம் பல சமயத்து மக்க ளாலும் தரிசிக்கப்படுகிறது. கதிர்காமம் யாத்திரிகர்களால் எப்போதும் நிரம்பியே காணப்படுகிறது. சிவனொளிபாத மலையிலும் அப்படியே… பௌத்த, சைவ மக்கள் இங்குள்ள ஆலயங்களுக்கு ஒற்றுமையாக வந்து வழிபாடு செய்கிறார்கள். அரசியலமைப்பின் பிரகாரம் மதங்களுக்கு முன்னுரிமை இல்லையாயினும் அவரவர் தமது சுய விருப்பின் பிரகாரம் தமது வழிபாடுகளைச் செய்து கொள்கிறார்கள்.
ஏற்கனவே உள்ள பெரிய கோவில்கள், விகாரைகள், தேவாலயங்கள் தவிரப் பொதுமக்களுக்கெனப் புதிதாக அமைப்பதாயின் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். எல்லா மக்களுக்குமான வேலை வாய்ப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தேவைக் கேற்றதான சம்பளத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் தேவைக்கதிகமான சொத்துக்கள் மாநில அரசினால் சுவீகரிக்கப்பட்டுத் தேவையானோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன…
ஒவ்வொரு பிரதேச மக்களும் தத்தமது கலாசாரம், பண்பாடு களைப் பேணிடவும் தமது தாய்மொழியில் சகல தொடர்புகளையும் மேற்கொள்ளவும் வசதி செய்யப் பட்டுள்ளது. இலங்கையெங்கும் சகல மக்களும் சமத்துவம், சகோதரத்துவம் பேணி அன்னியோன்னி யமாக இலங்கை மாதாவின் புத்திரர்களாக வாழ்வதைப் பார்த்து “இப்படியா…” எனப் பிற நாடுகள் வியக்கின்றன.
இப்படியான ஒரு மாற்றம் இலங்கைத் திருநாட்டில் வராதா என மனத்தால் ஏங்கினான் ஒரு மனிதன்…
‘மனித உயிர் எவ்வளவு மலினமாகிவிட்டது… சுயநல அதிகார பீடத்தினர் தம் நலன்களுக்காக பொன்னான நாட்டைச் சாம்பல் மேடாக்கிறார்கள்… இனப் பிரிவினை யையும் மதபேதங்களையும் வளர்க்கிறார்கள். அகதி முகாம்களாக எம்நாடு மாறிவருகிறது. நாட்டின் எதிர் காலத்தை, வளர்ச்சியைப்பற்றிச் சிந்திப்போர் குறைந்து விட்டனர்… மனிதத் தன்மையற்ற, திட்டமிட்ட நாச வேலைகளும் அழிப்புகளும் பெருகி, அந்நிய ஆதிக்க சக்தி களின் வேட்டைக்காடாக எம்நாடு மாறுவதை மனிதத் தன்மையுள்ளவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்… யுத்தம் ஒழிந்து எல்லா மக்களும் சம உரிமை யுடன் வாழும் காலம் வராதா..?’
இப்படி… எத்தனையோ எண்ணங்களைக் கொட்டிப் பேசுவான் அந்த மனிதன்.. என் நண்பன்..! ஆம் பிரான்ஸ் நாட்டின் துலூஸ் நகரத்தில் வசித்த, இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த மனிதன், அடிக்கடி…. ‘இப்படியான ஒரு மாற்றத்தை எண்ணிப்பார் ‘மச்சாங்’ என என்னுடன் பேசிக் கொண்டவன்.
களுத்துறையில் ஆறு சகோதரிகளுக்கு ஒரேயொரு சகோதரனாகப் பிறந்து கொழும்பில் உயர்கல்லூரியில் கல்வி கற்றவன். வசதியான குடும்பத்துச் செல்லப் பிள்ளை யாக வளர்ந்தவன்… இரு சகோதரிகள் டாக்டர்களாகப் பணிபுரிகிறார்கள். அவர்களில் ஒருவர் இலண்டனில் டாக்டரான வாழ்க்கைத் துணையுடன் வாழ்கிறார். தந்தையார் விட்டுச்சென்ற வியாபாரத்தைக் கவனித்து வந்தவனுக்கு ஒரு காதலி இருந்தாளாம்… பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் அவளையும் பூனைப்படை தீர்த்துக் கட்டிவிட்டதாம். அதனால் விரக்தியுற்றவனுக்குப் பின்னர் பல்வேறு நெருக்கடிகளாம்……. இதனால் புலம்பெயர்ந்து 1991இல் பிரான்ஸ் வந்து சேர்ந்தான்.
பிரான்ஸில் ஒரு சில வருடங்கள் மிகுந்த கஷ்டப் பட்டான். வாய்த்த நண்பர்களும் அப்படி… பின்பு பிரெஞ்சு மொழியும் ஓரளவு கற்று பகுதி நேர வேலையும் செய்து தன்னை நிலைப்படுத்தியும் வந்தான். ஓரிரு தமிழ்க் குடும்ப நண்பர்களுடனேயே நெருங்கிப் பழகி வந்தான். பணத் தட்டுபாடு ஏற்பட்டால்கூட அந்த ஓரிரு நண்பர் களிடமே உதவியும் பெறுவான். அல்லது இலண்டனி லுள்ள அக்காவிடம் கேட்டுப் பெறுவான்…
மனதில் வஞ்சகம், சூது, பொறாமையற்ற அற்புதமான இதயம் கொண்ட அந்த நண்பனின் பெயர் குலரத்தினா..
எனத் தொடங்கி நீளும் பெயர். ஜோர்ஜ் என்பது தான் அவனது செல்லப்பெயர்.. அந்தப் பெயரில் அவனைத் தெரியாத இலங்கைக் குடும்பத்தினர் பிரான்ஸ் துலூஸ் நகரில் கிடையாது. அத்தனை மக்களினதும் இதயங் கவர்ந்த இனியவன்……. நல்லவன்…… எம்மவர் எவராவது உதவி கேட்டால் இயன்றவரை உதவுவான்…
இலங்கையில், தந்தையரின் வியாபாரத்தின் பொருட்டு பல வாகனங்கள் இருந்தனவாம்… அதனால் அவன் இளமைக் காலத்திலேயே சிறந்த வாகனச் சாரதியாகவும் இருந்தான். இங்கு அவனது நெருங்கிய ஓரிரு நண்பர் குடும்பத்தினர் துலூஸ் நகரிலிருந்து ஐரோப்பாவின் எந்த நாட்டிற்கோ நகரத்திற்கோ போவதென்றால் அவன்தான் வாகனம் ஓட்டிச் செல்வான்.
அன்றும் அவ்வாறே….. அவனது நெருங்கிய நண்பன் உலகநாதன் குடும்பத்தினர் பாரிஸ் நகரம் போகையில் காரை அவனே ஓட்டிச் சென்றான்… அதிகாலை மூன்று மணியளவில்… பெருந்தெரு பெற்றோல் நிலைய மொன்றில் காரை நிறுத்திக் கோப்பி குடித்து சிகரெட்டும் புகைத்துவிட்டுப் புறப்பட்டனர். அரை மணித்தியாலம் கடந்திருக்கும்… பெருந்தெருவில் கார் சுமார் 110 கி.மீ. வேகத்தில் போய்க்கொண்டிருந்தது… திடீரென என்ஜின் இயங்க மறுக்கிறது… ஒருவாறு காரை பக்கவாட்டில் செலுத்தி நிறுத்திவிட்டு என்ஜினை தொடர்ந்து இயங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்… வெளியில் ஒரே பனிப்புகார். அது கார்த்திகை மாதப் பிற்பகுதி அருகில் வரும் வாகன வெளிச்சமே பனிப் புகாரில் தெரிவது கஷ்டம்… அதிகாலை 3.30 மணி கடந்த வேளை… … பின்னால் வந்துகொண்டிருந்த பார வண்டி பக்க வாட்டில் நின்றுகொண்டிருந்த காரை அடித்து நொருக்கிச் சென்றது …… அந்தோ……!
அந்த மனிதன் ஜோர்ஜின் தலையின் பிற்பகுதியில் பலத்த அடி…! அவனுக்கு நினைவு மயங்கி வந்தது… காரில் ஜோர்ஜ்க்குப் பக்கத்தில் முன் ஆசனத்தில் இருந்த உலகநாதனுக்கு அதிர்ஷ்டவசமாகச் சிறு காயம்தான்……!
“என்ர அம்மாள் ஆச்சியே… …” என்று கத்தியவாறு தனது பக்கத்துக் கதவை உதைத்துத் திறந்துகொண்டு இறங்கிய உலகநாதன் பின் ஆசனத்தில் காயங்களுடன் முனங்கிக் கொண்டிருந்த மனைவியையும் இரு பிள்ளை களையும் கீழே இறக்கிவிட்டான்… “ஜோர்ஜ்… மச்சான்… ஜோர்ஜ்……. என்று அவனை அழைத்தால் “ம்.. ம்… ம்…” என்ற சத்தமே அவனிடமிருந்து வந்தது. அம்புலன்ஸ்… ஹெலிகொப்டர்… எல்லாம் வந்து அனை வரையும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றன…
உலகநாதன், மனைவி, பிள்ளைகள் காயங்களுடன் ஒரு வாறு தேறி விட்டனர். ஆனால் ஜோர்ஜ்…… கோமா நிலை யிலேயே இருந்தான். இலண்டலிருந்து, டாக்டர்களான அக்காவும் கணவரும் வந்து பார்த்தனர்… மார்கழி மாதம் பிறந்து மறுநாள்…… அவனது ஆவி பிரிந்து விட்டது…
தூலூஸ் நகரிலிருந்து சுமார் 600 கி.மீ. தூரத்திலுள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த அவன் உடலை இறுதி வேளை போய்ப் பார்த்த எனக்கு……… அந்த மனிதனை.. நண்பனை… கூவி அழைத்தேன்… கதறி அழுதேன்.. கண்ணீர்விட்டேன்… எண்ண அலைகள் மோதக் கலங்கி நின்றேன்.
அவனது விருப்பப்படி உடல் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டு களுத்துறையில் தகனஞ்செய்யப்பட்டது…! 52 வயதில் அவன் வாழ்வு முடிந்துவிட்டது… ஆனால்… நாங்கள்… நண்பன் உலகநாதன் குடும்பம் அவனை நினைந்து நினைந்து ஆறாத் துயரில் ஆழ்ந்துள்ளது…
நான் அவனைக் கடைசியாக அவனது வீட்டில் சந்தித்த போது…”மச்சான்…… ரெலிபோனைத் தூக்கி வைச்சிற்று நித்திரை கொள்ளாதை… … தனி ஆளா இருக்கிறனீ… ரெலிபோன் தான் உனக்குதவி…. ரெலிபோன் வேலை செய்யாட்டி….. எங்களுக்குப் பயமா இருக்கும்… உனக்கு என்னாச்சோ… எண்டு நினைப்பம்….” என்று நான் கூறியதும்…… “மச்சாங் அப்படி ஏதும் நடந்தா… நீங்க தானே பாப்பீங்க…. … லண்டன் அக்காக்கு அறிவிச்சு… ‘என்னை…’ களுத்துறைக்கு அனுப்பிப் போடுங்கோ… மச்சாங்… …” என்றல்லவா கூறியிருந்தான். அப்படியே ஆகிவிட்டதே……!
ஓன்றரை வருடத்திற்கு மேலாகியும் அந்த இனிய நண்பனை மறவாது தினசரி நினைத்துக்கொள்கின்றேன். அவன் எண்ணத்தில் நிறைந்த இலங்கைத் தாய் நாட்டில் என்று சாந்தியும் சமாதானமும் நிலைக்கும்…? சமத்துவம், சகோதரத்துவம் பேணப்படும்… ..? நம்பிக்கை தானே வாழ்க்கை…..!
– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.