இன்றைய பெண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,258 
 
 

(இதற்கு முந்தைய ‘நதிகள், குணங்கள்…’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

பாரதியார் மேலும் தொடர்கிறார்…

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுர் மறைப்படி மாந்தர் இருந்தநாள் தன்னிலே பொது வான் வழக்கமாம்;

போற்றி போற்றி, ஜயஜய போற்றி!! இப்புதுமைப் பெண்ணொளி வாழி பல்லாண்டிங்கே! மாற்றி வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமர்க்களாக்கவே ஆற்றல்கொண்ட பராசக்தி யன்னை நல்லருளி நாலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.

ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்; அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்; சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம் சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில் மாதவனும் ஏந்தினான்; வானோர்க் கேனும் மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ? காதல்செயும் மனைவியே சதி கண்டீர் கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

சிவன் உடலிலே பாதி மலைமகள், அயன் (பிரம்மன்) நாவினிலே சரஸ்வதி, விஷ்ணுவின் மார்பில் திருமகள், ஆணில்லாமல் பெண் இயங்க முடியாது; பெண் இல்லாமல் ஆண் இயங்க முடியாது என்று இந்துமதம் உணர்த்துகிறது. இதைத்தான் பாரதியார் தனது பாடலில் அழகாக விளக்கியுள்ளார்…

கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் 627 ல் “பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத் திருந்த பொண்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்” என்று வருகிறது. அதாவது சிவன் தனது உடலின் ஒரு பாகத்தில் உமை அம்மையை வைத்தான். தாமரையில் வீற்றிருக்கும் லெட்சுமியை விஷ்ணு தனது மார்பில் வைத்தான். பிரம்மனோ, சரஸ்வதியை தனது நாவில் வைத்தான்” என்று அர்த்தம்.

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவள் என்று அறியீரோ, உணர்ச்சி கெட்டீர்! பண்டாய்ச்சி ஒளவை அன்னையும் பிதாவும் பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?

வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு வள்ளுவர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர்போல் பசித்தொராயிரம் ஆண்டு தவஞ்செய்து பார்க்கினும் சால அரிதுகாண்.

சிங்கத்தில் ஏறி சிரிப்பாள் உலகழிப்பாள்; எதையும் காத்திடுவாள்.

பூட்டைத் திறப்பது கையாலே, நல்ல மனம் திறப்பது மதியாலே, பாட்டைத் திறப்பது பண்ணாலே, இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே!

பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும், உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவாள் எங்கள் தாய், அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவாள்.

நெக்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண், பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர்பெருந்தீ. வஞ்சனையின்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம். தஞ்சமென்றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்

மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம். போன்ற பாரதிகளின் வரிகள் நம்மை சிந்திக்கச் செய்கின்றன.

இன்றையதினம் உலகம் முழுதும் கல்யாணமான பெண்ணின் பெயரைக் கூறுகையில் திருமதி (மனைவி பெயர்) + (கணவன் பெயர்) என்று கூறுவர். மனைவியின் பெயரை முதலில் கூறிய பின்னர்தான் கணவர் பெயரைச் சொல்வார்கள். இந்த வழக்கத்தை உலகிற்கு ஈந்தோரும் இந்துக்களே.

உமாமகேஸ்வரன்; துர்காதாஸ்; சீதாராமன்; ராதாகிருஷ்ணன்; லெட்சுமி நாராயணன்; கமலாபதி; ஜானகிராமன் என்று ஆண்கள்கூட பெண்களை முன்னிறுத்தி பெயர் வைக்கின்றனர். இது இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் என்ற மாபெரும் கவிஞன் எழுதிய ரகுவம்ச காவியத்தில், முதல் பாடலிலேயே பார்வதி பரமேஸ்வரன் பாட்டைப் பாடினார். பெண்களுக்கே முதலிடம். வேறு எந்தப் பண்பாட்டில் இதைக் காணமுடியும்?

இந்த வழக்கத்தை இன்று உலகமே பின்பற்றத் தொடங்கிவிட்டது. மேல்நாட்டில் திருமணமான பெண்களை அறிமுகப் படுத்தும்போது பெண்ணின் பெயர் முதலிலும், கணவன் பெயர் பின்னாலும் வரும். உலகிற்கு இந்துமதம் கற்றுத்தந்த பாடம் இது.

பத்து தந்தைகளைவிட, ஏன் இந்த உலகையேவிட, தாயே சிறந்தவள் என்று மஹாபாரத ஸ்லோகம் கூறுகிறது.

2300 ஆண்டுகளுக்கு முன் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் “பெண்ணை ஒரு மனிதனின் மறுபாதி என்றும், சிறந்த நண்பன் என்றும், வாழ்க்கையின் மூன்று லட்சியங்களின் மூலவேர் அறம், பொருள், இன்பம் மறுமைப் பயனை எய்த உதவும் வழிகாட்டி…” என்றும் புகழ்கிறது.

மஹாபாரதமும், ராமாயணமும் தோன்றுவதற்கே திரெளபதியும், சீதையும்தானே காரணம்? அவ்விருபெண்களை துரியோதனனும், ராவணனும் அவமதித்ததற்கு பழிவாங்கவே யுத்தங்கள் ஏற்பட்டன.

பெண்களுக்கு ஆணுக்குச் சமமான இடத்தைக் கொடுக்கும் மதம் இந்துமதம். சிவனும், சக்தியும் ஒரே உருவமாக உள்ள அர்த்தநாரீஸ்வர வழிபாடு வேறு எங்கும் கிடையாது. சங்கத்தமிழ் நூலான ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்து உமையொரு பாகனைப் பாடுகிறது.

பெண்ணை ஆணின் மறுபாதி என்றழைக்கும் சொற்றொடர் வேதத்தில் உள்ளது. அர்த்தாங்கனி என்று அவள் அழைக்கப் படுகிறாள்.

மனைவியை தர்மபத்னி என்றழைக்கும் வழக்கத்தையும் வேறுஎங்கும் காணமுடியாது. பெரியோரை வணங்கும்போதும் புனித நீர்த்துறைகளில் குளிக்கும்போதும் கணவனும் மனைவியும் கையைப்பிடித்துக் கொண்டுதான் குளிப்பார்கள். மனைவி இல்லாமல் யாக யக்ஞங்களைச் செய்யமுடியாது. ராமபிரான்கூட சீதையின் தங்கப்பதுமையை செய்து வைத்தே சடங்குகளைச் செய்தார். மனைவி அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் மனைவிக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

பெண்களைப் பற்றிய நல்ல பழமொழிகள் பல இருக்கின்றன. அவற்றில் சில, தாயிற் சிறந்த கோயில் இல்லை (காளிதாசன்); அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் (மாத்ரு தேவோ பவ – வேதம்) மாதா, பிதா, குரு, தெய்வம் (வால்மீகி ராமாயணம்); பெண் என்றால் பேயும் இரங்கும் (ஆதிசங்கரர்); பெண் பாவம் பொல்லாதது.

ஆசானைவிட தந்தை நூறு மடங்கும், தந்தையைவிட, தாய் ஆயிரம் மடங்கும் உயர்ந்தவர் – மனு 2.145

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திடல் வேண்டும் அம்மா!! பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ, இந்தப் பாரில் அறங்கள் வளரும் அம்மா!! (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை).

பெண் திருந்தினால் மண் திருந்தும் (படிக்காசுப் புலவர்)

காயத்ரி, கங்கா, துளசி, காமதேனு, அருந்ததி ஆகிய ஐந்து மாதாக்களையும் கல்யை, சீதை, திரொளபதி, தார, மண்டோதரி ஆகிய ஐந்து கன்னியரையும் நினைப்பவர்களின் மஹாபாவங்கள் அழிந்துவிடும்.

பெண்கள் தொடர்பான தவறான பழமொழிகள் இருக்கின்றன. அவை ஆண்களால் சமீபத்தில் இட்டுக் கட்டப்பட்டது. அவற்றில் சில, பெண் புத்தி பின் புத்தி; கல்லாலானும் கணவன் புல்லானாலும் புருஷன்; பெண் என்றால் பிடிவாதம்; ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே…

இக்கால இளம் பெண்கள் நன்கு படித்து முன்னேறத் துடிப்பவர்கள். ஒரு குடும்பத்தின் ஆரோக்கியமான அச்சாணியே பெண்கள்தான். தற்கால பெண்கள் அனைவரும் அன்பானவர்கள், பாசமானவர்கள், வாஞ்சையானவர்கள்… காதலில் நேர்மையானவர்கள். பொய் சொல்வது; மறைப்பது, நடிப்பது போன்ற துர்குணங்கள் அவர்களுக்கு அறவே பிடிக்காது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான தங்கச் சுரங்கம். அவர்கள் ரசனைக்குரியவர்கள். பரத்தையர்களிடமும் நான் ஏராளமான நற்குணங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பையும், பண்பையும், நேர்மையும், மரியாதையையும்தான். செக்ஸ் என்பது அவர்களின் கடைசி விருப்பம் மட்டுமே. அதுவும்கூட ஆண்கள் அதை விரும்பிக் கேட்டால், அவர்களை சந்தோஷப்படும் பொருட்டுதான் தன்னையே அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை என்பது மிகப்பெரிய சோகம்.

பெண்களிடம் தனிமையில் நெருக்கமாக இருக்கும்போது கலவி என்பது ஒவ்வொரு தடவையும் அவசியமில்லை. கலவிக்கான ஆயத்தப் பணிகள் (சில்மிஷங்கள்) மட்டுமே ஒரு வித்தியாசமான, ரசனையுள்ள அனுபவம்.

நாம் எதிர்கொள்ளும் எல்லாப் பெண்களுமே தெய்வீகமானவர்கள்தான்…

(முற்றும்)

இதை எழுத உதவிய, அனுமதித்த மஹாஸ்ரீ லண்டன் சுவாமிநாதனுக்கு என் மரியாதைகளும் நன்றிகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *