இன்பவல்லி






(1947ல் வெளியான கற்பனை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறிமுகம்
பாண்டியன் … பாண்டி நாட்டு அரசன்.
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறை … சேர நாட்டு அரசன்.
நெடுமாறன், வில்லவன் … பாண்டியனின் நண்பர்கள்.
மதிவாணர் … சேரனுடைய அமைச்சர்.
பாண்டிமா தேவி … பாண்டியனின் தாய்.
இன்பவல்லி … (நாடகத்தலைவி) பாண்டியன் மனத்தைக் கெடுக்கச் சேரனால் அனுப்பப்பட்ட ஒரு நாட்டியக்காரி; பாண்டியனைக் காதலித்தவள்.
சுந்தரி … இன்பவல்லியின் தோழி; சேரனால் பாண்டி நாட்டுக்கு அனுப்பப்பட்டவள்.
குமாரி … பாண்டியன் தங்கை; இன்பவல்லியும் சுந்தரியும் செய்த சூதை அறிந்து வெளிப் படுத்த முயன்றவள்.
மற்றும் புலவர், சேனாதிபதி, பாண்டியனுடைய அமைச்சர், வேலைக்காரர் முதலியோர்.
நாடகம் நிகழுமிடம்: பெரும்பான்மை பாண்டிநாடு, சிறுபான்மை சேரநாடு.
இனபவல்லி
காட்சி 1-5 | காட்சி 6-10
காட்சி – 1
கலா மண்டபம்:
[பாண்டிய மன்னனும் அவனுடைய நண்பர்களான நெடுமாறனும், வில்வலனும் உட் கார்ந்திருக்கின்றனர். நாட்டியம் நடந்து கொண்டிருக்கிறது. சேவகன் மூவருக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். நாட்டியம் முடிந்ததும் நாட்டியக்காரி ஒரு புறமாக நிற்கிறாள்.]
பாண்டியன் :- ஆகா ! எவ்வளவு மதுரமாக இருக்கிறது.
நெடுமாறன் :- அதனால்தான் இதற்கு மது என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!
பாண்டியன் :- நாட்டியக்காரி எங்கே?
நாட்டியக்காரி :- இதோ இருக்கிறேன் பிரபு.
பாண்டியன் :- வில்வலன் கோதை!
வில்வலன் :- ஏன் அரசே!
பாண்டியன் :– இன்று நாட்டியம் வெகு அற்புதம் அல்லவா?
வில்வலன் :- ஆம் பிரபு.
பாண்டியன் :- நெடுமாறா! எப்படி?
நெடுமாறன் :- ஆம் பிரபு! அறியாமலா, நாட்டியத்தைக் கலைகளின் சிகரமெனச் சொல்லுகிறார்கள்?
பாண்டியன் :- சரியாகச் சொன்னாய், நண்பா! நாட்டியம் இன்னும் சிறிது நேரம் நடக்கட்டுமே!
நெடுமாறன் :- அப்படியே பிரபு!
[மறுபடியும் நாட்டியம் நடந்து முடிகிறது.]
பாண்டியன் :- நாட்டிய ராணி! நீ ஊற்றிக்கொடு இந்த மதுவை.
[நாட்டியக்காரி மதுவை மதுவை ஊற்றிக் கொடுக்கிறாள்.]
பாண்டியன் :- பெண்ணே! வளையல்களின் கிண் கிணி ஒலியோடு, உன் செங்காந்தள் கரத்தால், புன் முறுவல் தவழ நீ மதுவை ஊற்றிக் கொடுக்கும்போது இந்த மது புதுமையான சுவையைப் பெற்றுவிடுகிறது. நீயும் சிறிது பருகு.
[நாட்டியக்காரியும் ஊற்றிக் குடிக்கிறாள்.]
நாட்டியக்காரி :- பிரபு! ஆகா என்ன ருசி. ஆனந்தம், இன்பம் என்றெல்லாம் சொல்லுகிறார்களே, அவை இந்த மதுவின் ஒரு துளியில் கிடைக்கின்றன. ஸ்வாமி!
பாண்டியன் :- பெண்ணே! உடலின் அணு ஒவ்வொன்றிலும் புகுந்து உத்வேகத்தைக் கிளப்பி உள்ளம் பூரிப்படையச் செய்யும் சக்தி மது ஒன்றுக்குத்தான் உண்டு.
வில்வலன் :- இதுவே பேரின்பம் அரசே!
நெடுமாறன் :- உண்மை! இன்பத்தைத் தேடிச் சிலர் எங்கேயோ போகிறார்களே. அவர்கள் உண்மையை உணராதவர்கள். மங்கையரின் மையலிலும், மதுவின் மயக்கத்திலும்தானே இன்பம் இருக்கிறது!
பாண்டியன் :- உன் தளிர்க் கரங்களால் நீ அள்ளி வழங்கிய அமுதப் பிரவாகமான மது உடலைப் பேரின்ப வாரிதியில் ஆழ்த்துகிறது. சிறிது செவிக்கும் இன்பம் வழங்கு.
நெடுமாறன் :- நல்ல யோசனை பிரபு.
[நாட்டியக்காரி பாடுகிறாள்.]
பாண்டியன் :- ஆகா ! பாடகி! உனக்கு என்ன வேண்டும் கேள், கொடுக்கிறேன்.
நாட்டியக்காரி :- பாண்டிய மன்னனின் அன்புக்குப் பாத்திரமானவள் என்ற பெருமையொன்றே எனக்குப் போதும் பிரபு.
[புலவர் முன்றுரையார் வேகமாக வந்து நிற்கிறார்.]
பாண்டியன் :- யார்?
புலவர் :- பாண்டியா? உன் கருத்தை மறைத்த திரை கண்களையும் மறைத்துவிட்டது போலும்!
பாண்டியன் :- புலவர்…
புலவர் :- ஆம், உன் அவைக்களப் புலவன் தான். பாண்டியா! பார்க்கச் சந்தர்ப்பமில்லை என்றா சொல்லி அனுப்பினாய் ?… பாண்டிய வம்சத்தின் பரம்பரையில் புலவனைக் காணக் காவலனுக்குச் சந்தர்ப்பமில்லாமற் போனதுண்டா?
பாண்டியன் :- புலவரே!…
புலவர் :- ஆ! இதென்ன காட்சிகள் ! நான் வழி தவறி வந்துவிட்டேனோ?
நெடுமாறன்:- ஏன்? மன்னனைக் காணத்தானே வந்தீர்கள்?
புலவர் :- அரசனின் கலா மண்டபத்திலிருந்தா கடுஞ் சொற்களும், நாசியைத் துளைக்கும் நாற்றமும்?
வில்வலன் :- போர்க்களத்திலே புலால் நாற்றம் வீசுவது இயற்கைதானே? மலருள்ள இடத்தில் மணம் இல்லாதிருக்குமா?
புலவர் :- பாண்டியா! மாட்சிமைமிக்க மணி மகுடம் சூடிய நீ, நாட்டை ஆட்சி செய்ய வேண்டியிருக்க உன்னை ஆட்சி செய்கிறது மது. உன்னுடைய பொறுப்பற்ற தன்மையில் உன் தந்தையின் பெயருக்கு எத்தகைய களங்கத்தை ஏற்படுத்துகிறாய் என்றறிவாயா? லட்சியப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டிய உன் வாழ்க்கை…
பாண்டியன் :- புலவரே ! வாழ்க்கை பல கிளைகள் கொண்ட நதி.
நெடுமாறன் :- ஆம், அது ஒரு வழியில்தான் ஓடு மென்று எதிர்பார்க்க முடியாது.
புலவர் :– பொன்னையும், மணியையும், சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டுவந்த அந்த நதி சேறும் சகதியுமாக மாற இடங் கொடுத்துவிட்டாயே!
பாண்டியன் :- அந்தச் சேற்றில் விளைந்த செந்தாமரையில் அமர்ந்து தேனைக் குடித்த வண்டு மந்த மாருதத் தென்றற் காற்றிலே வெறிகொண்டு தள்ளாடுவதில் வியப்பில்லை.
வில்வலன் :- சந்தர்ப்பம் தெரியாது உள் நுழைந்து நீங் கள் சாத்திரம் பேசுவதுதான் வியப்பாயிருக்கிறது.
புலவர் :- ஆம்… உங்கள் வார்த்தையும் சூழ்நிலையும் நான் இப்பொழுது இங்கு வந்ததை மட்டும் தவறு என்று சொல்லவில்லை…!
நெடுமாறன் :- …இனிமேலும் இங்கு வருவது தவறு என்று அறிவிக்கின்றனவோ?
புலவர் :- பாண்டியா! போகிறேன்… பாண்டியா! தமிழ்ச் சங்கம் தோன்றிய இடம் இது. நீதி வழுவாத மன்னர்கள் ஆண்ட இடம் இது. குடிகளுக்காகவே கோலேந்திய கொற்றவர்கள் மரபில் தோன்றிய நீ, கல்விக்கும் கலைக்கும் உழைக்க வேண்டிய மன்ன்னாகிய நீ, மக்களின் முன்னேற்றம் ஒன்றையே சிந்திக்கவேண்டிய பொறுப்புடைய நீ, ஆட்சி பீடத்தைக் களியாட்ட மந்திரமாக்கி வெறி ஆட்டம் ஆடுகிறாய்!
[புலவர் விரைந்து செல்கிறார். மன்னனும் நண்பர்களும் கேலியாக நகைக்கின்றனர்.]
திரை.
காட்சி – 2
பாண்டிமாதேவியின் அந்தப்புறம் :
[பாண்டிமாதேவியும் அமைச்சரும் அமர்ந்துள்ளனர்.]
தேவி :- தமிழ்க் கன்னிக்குப் புத்தம் புதிய அணிகலன்களைச் சூட்டிய இந்தப் பாண்டி நாட்டின் மன்னனா… என் மகனா… அவைக்களப் புலவரை எள்ளி நகையாடுவது?
அமைச்சர் :- தேவி!
தேவி :- அவர் உள்ளம் நோவது தமிழ் அணங்கின் உள்ளம் புண்படுவதைப் போன்றதல்லவா? அவர் எவ்வளவு மனம் கசிந்து என் குமாரனின் நடத்தையை எடுத்துரைத்தார். அவருடைய சொற்கள் கல்லில் கீறிய கோடுகள் போல் என் உள்ளத்தில் படிந்து துன்பப் படுத்துகின்றன.
அமைச்சர் :- தேவி! வருந்த வேண்டாம். விரைவில் தம் முயற்சி அரசர் வாழ்வை மாற்றி யமைத்துவிடும்.
தேவி :- அமைச்சரே! என் கணவர் இறந்த உடனேயே நானும் மடிந்து போகாததற்குக் காரணம், நெடுஞ்செழியனுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவேற்பட்டு விடக்கூடாதே என்பதுதான். அவன் தமிழ் மூவேந்தர்களில் முன்னோன் என்று மக்கள் பாராட்டும் நிலையை அடைய வேண்டுமென்ற ஆவலோடு அரச பீடத்தில் அமர்த்தினேன். கடமையாற்ற வேண்டிய அவன் கயவர் வசப்பட்டுக் கருத்தழிந்து நிற்கிறான். என் குமாரன் எப்படியெல்லாம் கீர்த்தியுடன் விளங்க வேண்டுமென்று பெருமிதத்துடன் கனவு கண்டு கொண்டிருந்தேனோ அதை அடியுடன் குலைத்துவிட்டான்.
அமைச்சர்:- இவ்வளவு இளமையில் இப்படியொரு சூழ்நிலை மன்னரைப் பற்றிக் கொண்டது வியப்பாயிருக்கிறது. உலகத்தின் தலைவாயிலில் காலை வைத்து முன்னேற வேண்டிய அவர் தவறிப் போய் உள்ளே இருக்கும் படுகுழிகளில் விழுந்து விட்டார்.
தேவி :- அமைச்சரே! என் மைந்தன் அந்தகாரத்திலே மூழ்கி அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்க வேண்டியது தானா? அவனைத் தடுக்கவே முடியாதா? அவன் இதயத்திலே ஒளி உண்டாக்க ஒரு வழியும் இல்லையா?
அமைச்சர் :- மற்றவர்களுடைய உபதேசத்தைக் கேட்டுச் சீர்திருந்தி விடுகிற நிலையில் அவர் போக்கு இல்லை… ஒரு நன்மையான காரியம் நடக்கட்டும் என்பதற்காக அவருடைய கசப்பு உணர்ச்சியையும் ஆத்திரத்தையும் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அவமரியாதையைச் சகிக்க முடியாது தேவி! நீங்களும் அவருக்கு நேரடியாக நீதிகளை எடுத்துச் சொல்லித் திருத்திவிட முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. அம்முயற்சி விபரீத பலனை அளித்தாலும் அளிக்கலாம். ஆகவே….
தேவி :- இதற்கு மாற்றம்?
அமைச்சர் :- ஒருவேளை…
தேவி :- என்ன?
அமைச்சர் :- திருமணத்திற்கு ஏற்பாடு செய்தால்? அச்சம்பவம் அவர் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்காதா?
தேவி :- ஹும்.
அமைச்சர் :- நான் வருகிறேன்.
தேவி :- சரி.
திரை.
காட்சி – 3
சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆலோசனை மண்டபம்:
[சேரனும், சேனாதிபதியும், அமைச்சர் மதிவாணரும் அமர்ந்துள்ளனர்.]
சேரன் :- பாண்டி நாட்டின் புகழ் நாடெங்கும் பரவி வருவதைக் கேட்டீர்களா?
சேனாதிபதி :- பாண்டிய நாட்டின் ஆட்சி முறையைப் பற்றி நம் நாட்டினருமல்லவா புகழ்ந்து பேசுகிறார்கள்!
மதிவாணர் :- இந்தப் புகழுக்குக் காரணமாய் விளங்குபவர் பாண்டிமாதேவி அரசே!
சேரன் :- ஆம். அவளே! இந்தச் சேரனை அவமதிப்பதாக அவள் எண்ணம் போலும்!
சேனாதிபதி :- தமிழ்ச் சங்கமாம்! புலவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்து ஆராய்ச்சி செய்யச் சொல்லி யிருக்கிறார்களாம்!
சேரன் :- ஹ ஹ! அந்தப் புலவர்கள் அவர்களைப் பற்றி ஊர் முற்றும் புகழ்வதிலே என்ன வியப்பு?
சேனாதிபதி :- இப்பொழுதெல்லாம் நிர்வாக அதிகாரிகளை ஆட்சி பீடத்திலிருந்து நியமிப்பதில்லையாம். குடவோலை மூலமாகப் பொதுமக்களே தேர்ந்தெடுக்கிறார்களாம்!
சேரன் :- ஆம். இப்படி அவர்கள் செய்யும் தவறுகள் பல. ஏழைகளுக்குத் தரிசு நிலங்களை விநியோகம் செய்வதாம்! நிலங்களை உழுது பண்பட்டுப் பயன் கிடைக்கும் காலம் வரை வரி கிடையாதாம்!
சேனாதிபதி :- இதுதான் அரசாங்க முறையின் அழகு!
சேரன் :- பெண்ணின் மேற்பார்வையில் ஆட்சி நடக்குமானால் இப்படிப்பட்ட தவறுகள் நடப்பது இயற்கைதானே?
சேனாதிபதி :- இந்த ஆட்சி முறையைத்தான் புலவர்களும் பாமரர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள்!
சேரன் :- இந்தப் புகழ்மொழிகளை இனியும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
சேனாதிபதி :- பாண்டியனைப் பற்றி இனி யாரும் புகழ்ந்து பேசக்கூடாதென்று ஒரு உத்திரவிட்டால் என்ன பிரபு?
சேரன் :- செய்யலாம். மதிவாணரே! ஏன் மௌனமாயிருக்கிறீர்?
மதிவாணர் :- அரசே சேனாதிபதி சொல்வது போன்று தாங்கள் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இப்பொழுது பாண்டி நாட்டைப் புகழ்ந்து மட்டும் பேசுகிறார்கள். பிறகு தங்களை நிந்தித்துக் கொண்டே அவனைப் புகழ்ந்து பேசுவார்கள்!
சேனாதிபதி :- சட்டம் என ஒன்று இல்லையா ? நடவடிக்கை எடுத்துக் கடுமையாகத் தண்டிக்க ஆரம்பித்தால் நிந்திப்பதாவது, புகழுவதாவது.
[கேலியாகச் சிரிக்கிறான்.]
சேரன் :- மதிவாணரே! பயப்படுகிறீரா?
மதிவாணர் :- ஆம் அரசே! நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பாகப் போக அஞ்சுகிறேன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டியதில்லை. பொ துமக்களைக் கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட வேண்டாம். மக்களின் இந்தச் சாதாரண உரிமையை அரசன் என்ற அதிகார பலத்தினால் பறிக்க நினைப்பது அடாத செய்கையாகும். அரசே! தாங்கள் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்படுவீர்களோ என்று அஞ்சுகின்றேன்.
சேரன் :- மதிவாணரே! நீர் சொல்லும் வழிதான் என்ன?
மதிவாணர் :- ஏன், நாமும் மக்களின் அன்பைப் பெற முயற்சிக்க வேண்டியது தான்.
சேரன் :- ப்பூ! இவ்வளவுதானா? ஏதோ புது யோசனை அல்லவா சொல்லப் போகிறீர் என்று பார்த்தேன்!
சேனாதிபதி :- பிரபு! மதிவாணர் சொல்வதைப் போல் செய்தால் பாண்டி நாட்டாரைப் பார்த்துத்தான் நாமும் இப்படிச் செய்வதாக எண்ணி மக்கள் கேலி செய்வர். அரசே ! இன்னொரு விஷயம்…
சேரன் :- என்ன?
சேனாதிபதி :- சமீபத்தில் பட்டமேற்றிருக்கும் பாண்டியன் நிர்வாகக் காரியங்களில் கவனம் செலுத்தாது கேளிக்கைகளில் பொழுதைக் கழிக்கிறான்.
சேரன் :- ஆம்.
சேனாதிபதி :- அதன் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டான்.
சேரன்:-ஆம், நானும் கேள்விப்பட்டேன். என்னுடைய நெடுநாளைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இதுவே சரியான சந்தர்ப்பம். அவனுடைய பலஹீனமான நிலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்பவல்லியால் என் எண்ணம் விரைவில் நிறைவேறிவிடும். நான் தனியே சற்று சிந்திக்கவேண்டும். நீங்கள் சென்று வரலாம்.
திரை.
[மதிவாணரும் சேனாதிபதியும்.]
மதிவாணர் :- சேனாதிபதி ! அரசர் பொறாமைப் படு குழியிலே தவறி விழுந்து விடக் கூடிய நிலையில் இருக்கிறார். அவரைக் கை தூக்கி விட வேண்டியது நம்முடைய கடமை ஐயா. விருப்பு வெறுப்புக்குப் பயந்து நம்முடைய உள்ளுணர்ச்சியை வெளியிட மறுப்பது துரோகம்.
சேனாதிபதி :- அப்படியானால் மன்னனின் போக்குக்கு மாறாகப் பேசவேண்டுமென்கிறீரா?
மதிவாணர் :- நீதிக்கு இழைக்கப்படும் களங்கத்தை விட அரசருக்கும் உமக்கும் இடையிலுள்ள அன்பு குறைந்து போகுமோ என்பதில் அதிக அச்சம் அடைகிறீர். மனச்சாட்சியை மறந்து விட்டவர்களால் மட்டும் தான் மன்னனின் போக்குக்கு ‘ஆமாம்’ போட முடியும். நான் வருகிறேன்.
[போகிறார்.]
சேனாதிபதி:- (தனிமொழி) மதிவாணருக்கு என்ன துணிச்சல்? சரி, உம்.
திரை.
காட்சி – 4
அரண்மனையில் ஓரிடம் :
[சேரனும் இன்பவல்லியும்.]
சேரன் :- இன்பவல்லி! நாட்டிய ராணி என்ற முறையில் இவ்வளவு நாள் இந்த நாட்டுக்குப் புகழையும் பெருமையும் தேடிக் கொடுத்தாய். இனி சேரநாடு என்றென்றும் வளத்தோடு வாழ்வதற்கு உன் உதவி தேவையாயிருக்கிறது. உதவி அல்ல, தியாகம் என்றே சொல்லவேண்டும். உன்னையே அர்ப்பணித்துவிடுகிற இந்த முயற்சியில் சேர நாட்டின் நலன் அடங்கியிருக்கிறது… இன்பவல்லி! என்ன யோசிக்கிறாய்?
இன்பவல்லி :- அரசே! உங்கள் உத்தரவுக்குக் கீழ்ப் படியத் தயாராயிருக்கிறேன். ஆனால், நாட்டியம் ஒன்றைத் தவிர வேறு எவ்விஷயத்தையுமே அறியாத சிறுமி நான்…
சேரன் :- அதனால்…?
இன்பவல்லி :- தாங்கள் விரும்பும் மகத்தான இப்பணியை என்னால் நிறைவேற்றி வைக்க முடியுமா என்றுதான் அச்சப்படுகிறேன்.
சேரன் :- இன்பவல்லி! நீ சிறுமி என்பது நானறியாத தல்ல. சேர நாட்டின் கலா பொக்கிஷமாகிய உன்னை இந்தப் பயங்கர முயற்சியில் ஈடுபடுத்துவதற்கு முன் நான் எவ்வளவு தூரம் யோசித்திருப்பேன் என்பதை நீ அறிய மாட்டாய். உன்னால் தான் இக்காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். கவிச் செல்வம் ஒருருக் கொண்டது போன்ற உன் அழகு, மார்பகத்தின் விம்முதல், தோட்களின் வளைவு, இடையின் இன்பமயமான நெளிவு, அனைத்தையும் உனக்குக் கணவனாக வரப் போகிற யாரோ ஒருவனுக்கு அர்ப்பணிப்பதை விட இந்த நாட்டின் நன்மைக்காகத் தியாகம் செய்வது அழியாத கீர்த்தியைக் கொடுக்குமல்லவா?
இன்பவல்லி :- அரசே! பறவையை வலையில் சிக்க வைப்பதற்கு முன் வேடன் தானிய இரையை வீசி யெறிவது போன்ற இந்த முயற்சியில் சிறுமியாகிய நான் ஈடுபடுவதன் காரணமாக விபரீதம் நேர்ந்து விடக் கூடாதே என்று அஞ்சுகின்றேன். இப்படிச் சொல்லுவதால் நாட்டுப் பற்றில் மற்றவர்களை விட நான் குறைந்தவளோ என்று நினைக்க வேண்டாம்.
சேரன் :- இன்பவல்லி! நான் தீர யோசித்துத் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். களியாட்டங்களில் தன் பொழுதைச் செலவிட்டு வரும் பாண்டியன் உன் விழிகளின் மின்வெட்டில் மயங்கி விடுவான். நீ ஒருத்தியே இதற்குத் தகுதியானவள்.
இன்பவல்லி :- அரசே! தங்கள் கட்டளைக்குக் கீழ்ப் படிகிறேன். ஆனால், சிறிதும் அரசியல் ஞான மில்லாதவள்.
சேரன் :- அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டிய தில்லை. நல்ல அரசியல் அனுபவமுள்ள சுந்தரியையும் உன்னுடன் அனுப்புகிறேன்.
இன்பவல்லி :- தங்கள் உத்தரவு
சேரன் :- இதனால் உனக்கு எவ்வளவு பெரிய பரிசு கிடைக்கப் போகிறது என்பதை விட இது உன் நாட்டிற்குச் செய்யும் எத்தகைய சேவை என்பதை நீ உணர்வாய். விரைவில் புறப்படத் தயாராகி விடுவாய் அல்லவா?
இன்பவல்லி :- நாளையே வேண்டுமாயினும் நான் புறப்படுகிறேன்.
சேரன் :- வெற்றி எனதே! இன்பவல்லி! உன்னைப் பெற்ற நாடு ஒருநாளும் சிறுமைப்படாது.
[நகைக்கிறான்.]
திரை.
காட்சி – 5
அரச சபை :
[பாண்டியனும் இன்பவல்லியும். இன்பவல்லி நாட்டியம் ஆடிக் களைத்து நிற்கிறாள்.]
பாண்டியன் :- இன்பவல்லி! இதோ இந்த ரத்தினம் இழைக்கப்பட்ட பொன் ஆசனத்திலே உட்கார். இந்த ஆசனம் இதுவரை எந்தப் பெண்மணிக்கும் இடம் கொடுத்ததில்லை. அதே போன்று என் மனம் கவர்ந்த மங்கையர் பலர். ஆனால் என் இதயத்திலே இடம் பெற்றவள் நீ ஒருத்திதான்.
இன்பவல்லி :- பிரபு! வானத்தின் நிறம் மாறுவதற்காவது சற்று நேரமாகும். மனம் மாறுவதற்கு அந்த நேரம் கூடத் தேவை யில்லையே !
பாண்டியன் :- பெண்ணே! நீ கூறியது பொதுவான உண்மை. இதுவரை என் உள்ளத்திலே இப்படி ஒரு உறுதி தோன்றியதில்லை. உள்ளம் உன்னை விரும்புகிறது. இன்பவல்லி! நீ இன்பத்தின் கொடி! என் ஆத்மாவைப் பரிபூரணமாக்கும் அன்புக்கொடி!
இன்பவல்லி :- ஸ்வாமி! உங்கள் மொழிகள் என் உள்ளத்திலே பாய்ந்து மோகன இன்பத்தை மூட்டுகின்றன. பிரபு! என் பதினாறு வருட உலக வாழ்வில் இப்பொழுது நுகரும் புதுமை உணர்ச்சியை நான் இதற்கு முன் கண்டதே இல்லை.
பாண்டியன் :- பொன்னால் ஆனதொரு பூங்கொடி நாட்டியமாடியதை நானும் இதற்குமுன் கண்டதில்லை. மின்னல் பெண்ணுருக் கொண்டு நர்த்தனம் புரிந்ததைப் போன்ற உன் நடனத்தைக் கண்டு மெய் மறந்தேன். வானத்துச் சந்திரன்தான் தன் பூரண கலைகளுடன் பூமியில் இறங்கி வந்து விட்டானோ என்று ஐயப்பட்டேன். உண்மையில் நீ ஒரு பெண் என்று அறிந்ததும், இந்தத், தமிழகம் பாக்கியம் செய்தது என்று எண்ணி மகிழ்ந்தேன்.
இன்பவல்லி :- அரசே! புத்துணர்ச்சியின் எதிரொலி என் மனத்தைத் தடுமாறச் செய்கிறது. நான் சென்று வருகிறேன்.
பாண்டியன் :- ரதம் தயாராயிருக்கிறது.
[வணங்குகிறாள்.]
திரை.
– தொடரும்…
– இன்பவல்லி (கற்பனை நாடகம்), முதற் பதிப்பு: மார்ச் 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.