கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 1,054 
 
 

(1947ல் வெளியான கற்பனை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 11-15 | காட்சி 16-19

காட்சி – 16

தோட்டம் : 

[பாண்டியன் அமர்ந்துள்ளான்; இன்பவல்லி அவன் காலில் விழுகிறாள்.] 

பாண்டியன் :- இன்பவல்லி ! இதென்ன அலங்கோலம், எழுந்திரு. 

இன்பவல்லி :- அரசே ! என்னை மன்னிப்பீர்களா?

பாண்டியன் :- மன்னிப்பா, எதற்கு? 

இன்பவல்லி :- பிரபு! உள்ளத்திலே விஷமும் உதட்டிலே அமுதமும் வைத்துப் பேசிய பாபமே உருக் கொண்ட எனக்கு மன்னிப்பும் உண்டா? 

பாண்டியன் :- இன்பவல்லி! நீ இவ்வளவு தூரம் வருந்தும்படி என்ன நடந்தது? 

இன்பவல்லி :- துரோகியாகிய என்னை மன்னிப்பீர்களா? 

பாண்டியன் :- மன்னிப்பே வேண்டியதில்லை, விஷயத்தைச் சொல்லு. 

இன்பவல்லி :- ஸ்வாமி! குற்றம் புரிவது மனித இயல்பு. மன்னிப்பது பெருந்தகையோரின் செயல்.

பாண்டியன் :- இன்பவல்லி! உன் உள்ளத்தை அர்த்தமற்றுப் புண்படுத்திக் கொண்டு உளறுகிறாய் என்று நினைக்கிறேன். 

இன்பவல்லி :- பிரபு! இதோ என் உள்ளத்தைத் திறந்து காட்டிவிடுகிறேன். நான் இங்கே வருவதற்கு முன் உலகமே அறியாத சிறுமி. அந்தச் சேரன் என்னை வேவுகாரியாக்கி இங்கு விரட்டினான். 

பாண்டியன் :- என்ன! வேவுகாரியா? 

இன்பவல்லி :- ஆம், நான் சேர ராஜ்யத்தின் வேவு காரி. மனம் நிறைய நஞ்சுடன் தான் இங்கு வந்தேன். உங்களுடன் பழகியபோதெல்லாம் உங்களை நோக்கிச் சிரித்தபோதெல்லாம் என் நெஞ்சில் விஷமே புகைந்து கொண்டிருந்தது. உங்களை நான் அடிமைப்படுத்தி அரச ரகசியங்களைச் சேரனுக்கு அறிவித்து அவன் இந்த நாட்டை அடிமைப்படுத்த வழி கோலவேண்டு மென்பதே எனக்கு இடப்பட்ட கட்டளை. 

பாண்டியன் :- இன்பவல்லி ! உன் மென்மையான இருதயத்தில் இத்தகைய நாச எண்ணங்களுக்கா இடம் இருந்தது? என்ன அநியாயம்?

இன்பவல்லி :- அந்த அநியாயத்தைச் செய்யத்தான் பிரபு நான் இங்கு அனுப்பப்பட்டேன். மனச்சாட்சியை மறந்து அநியாயமும் செய்ய முற்பட்டேன்.

பாண்டியன்:- ஆ…!

இன்பவல்லி :- ஸ்வாமி! கற்பையே ஆபரணமாகக் கருதும் கண்ணியமான குடும்பத்தில் தோன்றிய நான், உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து தான் வேவுகாரி யாக வந்தேனே தவிர, உள்ளம் அப்பணியை விரும்ப வில்லை. ஆனால், இந்தச் சதிகார வாழ்வை என்னால் நீடித்து நடத்த இயலவில்லை. உங்கள் தூய அன்புக்கு முன் என் மனோதிடம் சின்னா பின்னமடைந் தது. மனச்சாட்சியை எதிர்த்து நிற்க இயலவில்லை.

பாண்டியன் :- இதெல்லாம் உண்மைதானா?

இன்பவல்லி :- எல்லாம் உண்மை. உங்கள் உண்மையான அன்பு, சேர அரசனால் என் உள்ளத்தில் நிரப்பியனுப்பப்பட்ட விஷத்தை எரித்துச் சாம்பலாக்கி விட்டது. யாரையும் நேசித்தறியாத என் பெண் மனம் தங்களை நேசிக்க ஆரம்பித்தது. உங்கள் அன்பின் வயப்பட்டு விட்டது, உள்ளம். அரசே! என்னை மன்னியுங்கள். ஒரு காலத்தில் உங்களைக் காட்டிக் கொடுக்க வந்த வேவுகாரி நான். இன்று உங்களை நேசிக்கும் ஊழியக்காரி; அன்பின் அடிமை. 

பாண்டியன் :- அப்படியா? 

இன்பவல்லி :- அரசே! இந்தப் பாவிக்கு நீங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்கத் தயாரா யிருக்கிறேன். நானாக ஏதும் வஞ்சகம் செய்திரா விட்டாலும் வஞ்சகியாக இருந்தேன். 

பாண்டியன் :- இதென்ன…? 

இன்பவல்லி :- உள்ள விஷயத்தைச் சொல்லாமல் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது, உடந்தையாக இருப்பதற்கு அடையாளந் தானே? சுந்தரியும் வேவுகாரியே! 

பாண்டியன் :- இந்த உலகில் மென்மைக்கு இருப்பிடமாகிய பெண் உள்ளத்தில் எவ்வளவு கொடுமை…! 

இன்பவல்லி :- தங்கள் தாயாரும் அமைச்சரும் எங்களைச் சந்தேகித்ததை அறிந்த சுந்தரி, என் மௌனத்தைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களைச் சிறையிலடைக்க வழி செய்தாள். 

பாண்டியன் :- என் தாயார் குற்றமற்றவளா?

இன்பவல்லி :- (அழுதவாறு) ஸ்வாமி! இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என் மனதில் நடந்த மனப் போராட்டத்தில் நான் அடைந்த சித்திரவதையை ஆண்டவனே அறிவான். பிரபு! நானே நினைந்து நினைந்து உருகிக் கண்ணீரால் என் பாபங்களைக் கழுவி விட்டேன். 

பாண்டியன் :- இன்பவல்லி! ம், எழுந்திரு. 

(வேலைக்காரன் ஓடிவருகிறான் ) 

வேலைக்காரன் :- அரசே! அரசே! 

பாண்டியன் :- என்ன? 

வேலைக்காரன் :- தங்கள் சகோதரியை… 

பாண்டியன் :- என்ன நடந்தது, சொல்! 

வேலைக்காரன் :- நாட்டியக்காரியின் தோழி கட்டாரியால் குத்திவிட்டாள். 

பாண்டியன் :- ஹா! என்ன? 

இன்பவல்லி :-என்ன? சுந்தரி, குமாரியைக் கொன்று விட்டாளா? 

வேலைக்காரன் :- அவளைப் பிடித்துவிட்டோம். 

பாண்டியன் :- எங்கே? எங்கே இருக்கிறாள்? குமாரி, குமாரி! 

ஓடுகிறான். 

(இன்பவல்லியும் தொடர்ந்து போகிறாள்) 

திரை. 

காட்சி – 17

[குமாரி குத்தப்பட்டுக் கிடக்கிறாள். வேலைக்காரர்கள், வைத்தியர், சேனாதிபதி முதலியோர் இருக்கின்றனர். பாண்டியனும் இன்பவல்லியும் வருகின்றனர்.] 

பாண்டியன் :- குமாரி! குமாரி ! 

குமாரி :- அண்ணா ! 

பாண்டியன் :- வைத்தியரே! என் தங்கையின் உயிருக்கு அபாயமில்லையே. 

வைத்தியர் :- இல்லை, கத்திக்குத்து பலமானதல்ல. சில நாட்களில் சௌகரியமாகிவிடும். 

குமாரி :- அண்ணா! எனக்கு அபாயமில்லை; கவலைப் படவேண்டாம். சுந்தரியிடமுள்ள படத்தையும் கடிதங்களையும் நான் கைப்பற்ற நினைத்த போது தான் அவள் என்னைக் குத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள். அவற்றைப் பாருங்கள்; எல்லா ரகசியங்களும் வெளியாகிவிடும்.

பாண்டியன் :- எங்கே அப்பாதகி? 

[இருவர் உருவிய வாளுடன் சுந்தரியை அழைத்து வருகின்றனர்.] 

பாண்டியன் :- சுந்தரி! சுந்தரியாம்…! பெண்ணாய்ப் பிறந்த பிசாசே! எவ்வளவு துணிச்சல் உனக்கு?

சுந்தரி :- என் நாட்டிற்கு நான் செய்யவேண்டிய பணியில் யார் குறுக்கிட்டாலும்… 

சேனாதிபதி :- என்ன சொல்லுகிறாய்? 

பாண்டியன் :- சேனாதிபதி! அவளுடைய பதில் நமக்குத் தேவையில்லை. அவளிடமிருக்கும் கடிதங்களை வாங்கிப் பாருங்கள். 

[சேனாதிபதி சுந்தரியிடமிருக்கும் கடிதங்களை வாங்கிப் பார்க்கிறார்.]

சேனாதிபதி :- அரசே! இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? 

பாண்டியன் :- பாண்டி நாட்டின் படமல்லவா!

சேனாதிபதி :- ஆம், பிரபு, பாண்டி நாட்டின் பாதுகாப் பற்ற இடங்கள், எதிரி படையெடுத்து வரவேண்டிய வழிகள் எல்லாம் குறிக்கப்பட்டிருக்கின்றன.

பாண்டியன் :- ஆகா! எவ்வளவு முன்னேற்பாட்டுடன் கூடிய துணிகரமான செயல்! அவளிடமிருக்கும் மற்ற கடிதங்களையும் பாருங்கள்.

சேனாதிபதி :- அரசே! தங்களைக் கைது செய்யவிருந்த வேளையில் பாண்டிமாதேவியும் அமைச்சரும் சேர்ந்து அக்காரியம் நடைபெற முடியாமல் செய்து விட்டனரென்றும், படைவீரர்கள் ஓடிவிட்டன ரென்றும்… 

பாண்டியன் :- எவ்வளவு கொடிய சோதனையிலிருந்து தற்செயலாகத் தப்பினேன்! என்னைக் காப்பாற்றியதற்கு நான் அளித்த பரிசு சிறைத் தண்டனையா?

சேனாதிபதி :- இன்பவல்லி தங்கள் மையலில் விழுந்து தான் வந்த வேலையை மறந்துவிட்டதாகவும் அவளை விஷமிட்டுக் கொல்ல அனுமதி வேண்டு மென்றும் எழுதப்பட்டிருக்கிறது. 

பாண்டியன் :- ஆகா! இவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்! எவ்வளவு பயங்கரமான செயலில் ஒரு பெண் இறங்கியிருக்கிறாள்! ஒரு சாம்ராஜ்யத்தையே நாசமாக்கி விட இரண்டு பெண்களை ஏவியிருக்கிறான், சொந்த பலத்தில் நம்பிக்கை இல்லாத சேரன்! சுந்தரி! இது மறலியுடன் போராடும் முயற்சி என்பதை அறியவில்லை நீ !

சுந்தரி :- அறிந்துதான் ஆயத்தமானேன். இன்பவல்லியின் துரோகத்தால் நான் இன்று பிடிபட்டு விட்டேன். என் நாட்டிற்கு நான் செய்யும் பணியில் எந்த ஆபத்துக்கும் தயாராகவே இருந்தேன். என் வேஷம் கலையுமானால் இதற்கு என்ன தண்டனை கிடைக்குமென்பதும் எனக்கு நன்றாய்த் தெரியும்.

பாண்டியன் :- மரண தைரியம்! 

சுந்தரி:-நான் அழிவதால் பெரியதொரு நஷ்டத்தை அடைந்துவிடாது என் நாடு. மகத்தான ஒரு நன்மைக்கு நான் பலியாவதில் அமரத்துவ பாக்கியம் கிடைக்குமானால் அதை விடப் பெரும் பேறு வேறென்ன இருக்கிறது? 

பாண்டியன் :- என்ன துணிகரமான பேச்சு! இவளை உரிய இடத்தில் சேர்ப்பித்துவிடும்…. பிறகு……

[ஒரு ஒற்றன் ஓடிவருகிறான்.]

ஒற்றன் :- அரசே! சேரன் நம் நாட்டின்மீது படை யெடுத்திருக்கிறான். 

பாண்டியன் :- சேரனா ? 

ஒற்றன் :- ஆம் அரசே! 

பாண்டியன் :- உம், சுந்தரி கொடுத்திருக்கும் தகவல் களைக்கொண்டு… சரி யுத்தப் பிரகடனம் என்ன? 

ஒற்றன் :- அரசே! சேர ராஜ்யத்தின் நாட்டியராணியான இன்பவல்லியைத் தாங்கள் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாக… 

பாண்டியன் :- அப்படியா? யுத்தப் பிரகடனத்திற்கு நல்ல காரணம் கண்டுபிடித்திருக்கிறான் சேரன்!… …சேனாதிபதி! என்ன யோசிக்கிறீர்? 

சேனாதிபதி :- சேரன் எதிர்பாராத வகையில் படை யெடுத்திருக்கிறான். அவன் படை பலம்…

இன்பவல்லி :- பிரபு! சேரனின் படைபலம் எனக்குத் தெரியும். 

பாண்டியன்:- இன்பவல்லி! 

இன்பவல்லி :- அரசே! அவனை வெல்வது எளிது. சேரனின் படைபலத்தைப்பற்றிய புள்ளி விவரங்கள், அவர்கள் தாக்குதலைப் பற்றிய ஏற்பாடுகள் எல்லாவற்றையும் சுந்தரி மூலம் நான் அறிந்திருக்கிறேன். நான் செய்த துரோகத்திற்கு இதாவது சிறு பிராயச்சித்தமாக முடியுமானால் நான் சற்று மனநிம்மதி யடைய முடியும். 

திரை. 

காட்சி – 18

சிறைக்கூடத்திற்கு முன்னால் : 

[தேவி, அமைச்சர், பாண்டியன், சேனாதிபதி] 

பாண்டியன் :- அம்மா!… அம்மா!… என்னை மன்னிப்பீர்களா? அம்மா! மதி இழந்து மகத்தான தவறுகள் பல புரிந்து விட்டேன். மாயத்திரை அறுந்து விழுந்தது. மதுவை மறந்தேன். அந்த காரம் நீங்கியது. என் கண்கள் திறக்கப்பட்டன.

தேவி :- (நகைப்பு) அப்பா! உன் கண்கள் திறக்க, உன் கண்களிலிருந்த மாசு நீங்க, உன் தங்கையின் ரத்தப் பெருக்கு தேவையிருந்தது. இப்பொழுதாவது… 

பாண்டியன் :- அமைச்சரே! என்னை மன்னியுங்கள்.

அமைச்சர் :- அரசே! அவை காலத்தின் விளைவு… மறந்து விடுங்கள்…

(போர்முரசு கொட்டும் ஒலி கேட்கிறது.)

அமைச்சர் :- என்ன! போர் முரசம் கேட்கிறது.

பாண்டியன் :- சேரன் படையெடுத்து வந்துவிட்டான். 

தேவி :- போரா? 

பாண்டியன் :- இனிதான் ஆரம்பமாக இருக்கிறது. சேரன் ஏதோ ஏமாந்த சமயத்தில் தாக்கிவிட்டதாக எண்ணி இருக்கிறான். 

அமைச்சர் :- தாங்கள் எதிர்பார்த்ததுதானா? 

பாண்டியன் :- ஆம், இந்தப் போருக்கு இன்பவல்லி எவ்வளவு காரணமுள்ளவளாக இருந்தாளோ நம் வெற்றிக்கும் அவ்வளவு காரணமுள்ளவளாகவே..

தேவி :- நீ சொல்வது விளங்க வில்லையே!

பாண்டியன்:-வாருங்கள். அரண்மனைக்குச் சென்ற பின் விவரமாகக் கூறுகிறேன். 

தேவி :- சேனாதிபதி! அறியாமை காரணமாகப் போரை ஆரம்பித்திருக்கிறான் சேரன். நிரபராதிகளான வீரர்கள் பலியாவதா? முடிந்தவரை எதிரிப் படையினரை அழித்து விடாமல் கைது செய்யும்படி நம்முடைய படை வீரர்களுக்குக் கட்டளை இடுங்கள். 

சேனாதிபதி :- அப்படியே! தங்கள் ஊழியனாக இருக்கிற ஒரே காரணத்தால் இப்பொழுது தங்களைப் பாராட்டிப் புகழவேண்டுமென்ற என் விருப்பத்தை வெளியிட முடியவில்லை அம்மணி! 

[போகின்றனர்.] 

திரை. 

காட்சி – 19

பாண்டியன் சபை: 

[பாண்டியன், தேவி, குமாரி, அமைச்சர், சேனாதிபதி முதலியோர் அமர்ந்துள்ளனர். இன்பவல்லியும் அச்சபையில் அமர்ந்துள்ளாள்.] 

[சேரன் நிற்கிறான். இருமருங்கிலும் இரண்டு வீரர் உருவிய வாளுடன் நிற்கின்றனர்.] 

பாண்டியன் :- சேரனே! வீணே படையெடுத்து எமக்குச் சேதம் விளைவித்த குற்றத்தை உம்மீது சாட்டுகிறேன். என்ன சொல்லுகிறீர்? 

சேரன் :- முயற்சி தோல்வியடைந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். 

பாண்டியன் :- உம், குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டீர் போலும்! உம்முடைய அறியாமை காரணமாகச் சேரநாட்டின் வீரர்கள் பலரை இங்கே பலி கொடுத்து விட்டீர். 

சேரன் :- என் முயற்சிக்கு அறியாமை என்று பெயர் கொடுப்பது ஒரு சுத்த வீரனுக்கு அழகல்ல.

பாண்டியன் :- உம், யுத்தம் காரணமாக உம் நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தனர். அவற்றிற்கெல்லாம் நீரே காரணமல்லவா? உம் நாட்டு மக்கள் இந்தக் குற்றத்தை உம்மீது சுமத்துவதற்கு உரிமை யுடையவர் களல்லவா? 

சேரன் :- இது உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம். 

இன்பவல்லி :- பிரபு! ஒரு வேண்டுகோள்.

பாண்டியன் :- இன்பவல்லி என்ன?  

இன்பவல்லி :- அரசே! சேரர் போரில் தோற்றார். உங்களிடம் கைதியாக நிற்கிறார். போர் முறைப்படி சேர ராஜ்யம் இப்பொழுது உங்களுடையது தான். நீங்கள் விரும்பினால் சேர மன்னரைச் சிறையிலடைக்கலாம், சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால்…

பாண்டியன் :- என்ன?

இன்பவல்லி :- இவரை மன்னித்து விடுப்படியாகக் கேட்டுக் கொள்ளுகிறேன் பிரபு, நிபந்தனையின்றி அவரை விடுதலை செய்து விடுங்கள் அரசே! உங்கள் வீரம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

பாண்டியன் :- மன்னிப்பா! 

சேரன் :- மன்னிப்பா ! துரோகி – 

[இடுப்பில் மறைத்து வைத்திருந்த கட்டாரியை எடுத்து இன்பவல்லி மீது எறிந்து விடுகிறான்] 

இன்பவல்லி :- ஹா! 

[கீழே விழுகிறாள்] 

பாண்டியன் :- பாவி! என்ன காரியம் செய்தாய்? 

[சபையிலுள்ளோர் துடிக்கின்றனர். தேவி இன்பவல்லியைத் தொட்டுப் பார்க்கிறாள்.] 

தேவி :- இறந்து விட்டாள்.

பாண்டியன் :- ஹா! இன்பவல்லி! இந்த நன்றி கெட்ட அயோக்கியனுக்கா மன்னிப்பு? இவனைக் கொண்டு போய்ச் சிறையில் அடையுங்கள். 

[காவலாளிகள் சேரனை இழுத்துச் செல்கின்றனர்.] 

திரை.

முற்றிற்று.

– இன்பவல்லி (கற்பனை நாடகம்), முதற் பதிப்பு: மார்ச் 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *