இன்பமான பூகம்பம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 3,470 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

தாதர் எக்ஸ்பிரஸ் குறித்த நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை என்றாவது ஒரு நாள் அடைந்து விட்டால், மறுநாள் பத்திரிகைகளில் அது செய்தியாக வரவேண்டியதாகும். 

அன்று, நீண்ட நேரம் சாம்பசிலம் நான்காவது பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தார். சத்யா ஆபிசிலிருந்து வருவதாகக் கூறியிருந்தான். இன்னும் காணோம். கடிகாரத்தைப் பார்த்தார். ஐந்தே முக்கால், நான்கு முப்பத்தஞ்சக்கு வரவேண்டிய ரெயில், எப்போது வரும்? அவர் சென்ட்ரலை அடைந்த போது ‘ஒரு மணி நேரம் தாமதம்’ என்று கரும்பலகையில் எழுதி இருந்தது. இப்போது அதற்கு மேலும் பத்து நிமிடங்களாகி விட்டன. 

திடீரென்று மைக் அலறியது. 

‘தாதர் இன்னும் சில நிமிடங்களில் நான்காவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்.’ 

சாம்பசிவம் தன்னைத் தயார் செய்து கொண்டார். சத்யா சொன்னபடி வரவில்லை. ஆபிசில் என்ன காரியமோ யார் கண்டார்கள். 

ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராவது போல போர்ட்டர்கள் பிளாட்பார்த்தின் நீளத்துக்கு உட்கார்த்ததைப் பார்த்தபோது சாம்பசிவம் வெட்கிப் போனார். அவர் மட்டும் இன்னும் சிமெண்ட் பெஞ்சியில் அழுந்திக் கிடப்பதா? 

“ஏசி ஸ்லீப்பர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ரெண்டும் கடைசியில இருக்கும் மாமா.” 

திடீர்க் குரல் – சத்யாவின் குரல். 

”நீ இப்பத்தான் வர்றியா?”

“நாலே காலுக்கு போன்ல விசாரிச்சேன். ஒண் ஹவர் லேட்னான். ஸாரி, பதிவுக்குரல் சொல்லிற்று. சரின்னு வேனை எடுத்துட்டு அஞ்சே காலுக்குப் புறப்பட்டேன். இங்கே வர்றப்ப அஞ்சரை” 

“எங்கே இவ்வளவு நேரமா இருந்தே?”

“இவ்வளவு நேரம்னா! பதினஞ்சு நிமிஷம்தானே. பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர் மணியோட பேசிட்டிருந்தேன், நல்ல மனுஷன், உபகாரி. என் ஃபிரண்ட்…”

“சரி, வா வண்டி வர்றாப்ல இருக்கு!” 

“நாம் நடப்போம்.. என்ஜினையே காணோம்”.

இருவரும் நடந்தார்கள். 

“எதில வர்றாளோ?”

“ஏசி ஸ்லீப்பராத்தான் இருக்கும்” என்ற சத்யா, “நான் அவளை அடையாளம் கூட கண்டு பிடிச்சுக்க முடியாது. சின்ன வயசில, ரொம்பச் சின்ன வயசில பார்த்தது” என்றான். 

“நான் மட்டும் என்னடா? அவளுக்கு ஏழெட்டு வயசு நடக்கறப்பப் பார்த்தது. அவ அம்மா மாதிரி செக்கச் செவேல்னு இருப்பா, கண் முழி பெரிசா இருக்கும்.” 

“யார் கண்டா இப்ப முழி உள்ளே தள்ளியும் போயிருக்கலாம். அதோ ரெயில் வர்றது. டயம் அஞ்சு அம்பத்தஞ்சு.” 

“நீ ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாரு. நான் ஏசிக்கு முன்னாடி நிக்றேன்!” என்றார் சாம்பசிவம். 

ரெயில் மூட்டை மூட்டையாக மனித நெல்லிக்காய்களைக் கொட்டிவிட, அவை விரைந்து மறையலாயின. 

ஒரு அழகான பெண்மணி மட்டும் வெளிறிய நீல ஜீன்சும், சிகப்புக் கட்டம் போட்ட ஷர்ட்டுமாய், கருங்கூந்தல் கழுத்தைத் தாண்டிப் போகாதபடி வைத்துக் கொண்டு கீழே ஒரு பெரிய பெட்டியும் கையில் ஒரு சிறு பெட்டியுமாக யாரையோ எதிர்பார்ப்பது போல, ஏசி ஸ்லீப்பர் கோச் எதிரே நின்று கொண்டிருந்தாள். 

சாம்பசிவத்தின் கண்ணில் அவள் படவில்லை. தம் தம்பியின் பெண் எப்படிப்பட்ட ஆடை அலங்காரத்தில் இருக்கக்கூடும் என்று அவர் யோசித்துக் கூடப் பார்க்கவில்லை. 

“மாமா உங்களுக்கு பத்து அடி தாரத்திலேயே ரேவதி நிக்கறா, தெரியலையா?” என்று சொல்லிக் கொண்டே சத்யா ஓடோடி வந்தான். 

“இவளாடா… உசரமா கிழங்கு மாதிரி இருக்காளே, என் தம்பி பொண்ணு புடவை கட்டிட்டு தலையைப் பின்னித் தொங்கப் போட்டுட்டு இருப்பான்னு நினைச்சேன்” 

“நான் அவள் அறியாம அவ பக்கமா வந்தேன். வர்றப்ப கீழே நிமிர்த்தி வைச்சிருந்த பெட்டியைப் பார்த்தேன் மாமா. ரேவதின்னு எழுதியிருந்தது.” 

“அப்பப் போய் விசாரிக்கட்டுமாடா?” 

“விசாரியுங்க, நாள் நட்சத்திரம் பார்த்துட்டு நிக்காதீங்க. நானும் உங்க பின்னாலேயே வரேன்” என்றான் சத்யா. 

அவர் முன்னேறி அவள் அருகே வந்தார். 

“ஏம்மா ரேவதி தானே?” 

“ஹாய் பெரியப்பா! எப்படி பெரியப்பா என்னை அடையாளம் கண்டு பிடிச்சிங்க… பார்த்து கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் இருக்கணுமே…” 

“இவன் சொன்னான்!”

”யார் இவர்? ஜும் ரேவதி பஞ்சநதம்!” 

“ஐ’ம் சத்யமூர்த்தி, பஞ்சநதம்ஸ் ஸிஸ்டர்ஸ் சன்.” 

“ஓ..யூ ஆர் சத்யா,, நீங்க ஒரு போட்டோவில் கூட இருக்கீங்களே…! பெரியப்பா ரெண்டு மூணு வருஷம் முன்னாடி நீங்க இவரோடதானே அப்பாவை மீட் பண்ண பாம்பே வந்தீங்க….?” 

”கரெக்ட் மிஸ்.ரேவதி… உங்க ஃபாதர்ஸ் ஃப்ரெண்ட் ஒருவர் ஓட்டல் டாஜ்ல எங்க மூணு பேரையும் நிறுத்தி வைச்சு போட்டோ எடுத்தார்…” 

”ஸோ வீ ஆர் கஸின்ஸ்!”

“க்ரெக்ட்…போவோமா, இவ்வளவுதான் லக்கேஜா?”

“ஆமாம். போகலாம்.” 

‘”சத்யா போர்ட்டரைக் கூப்பிடேண்டா.” 

“நோ போர்ட்டா பெரியப்பா… இவ்வளவு பெரிய பெட்டியை எவ்வளவு எளிதா இழுத்துட்டு வரேன்னு பாருங்க!” என்ற அவள் பெட்டி அருகே வந்தாள். 

“இழுக்கற வேலையை எங்கிட்ட விடுங்கோ. மிஸ்.ரேவதி ” 

“ஓகே..” என்ற ரேவதி, ”நாம ரெண்டு பேரும் கஸின்னு வர்றப்ப மரியாதை அவுட் ஆஃப் பிளேஸ் இல்லே. சத்யா?” 

“ஆமாம். ஆனா நீ ஏதேனும் தப்பா நினைச்சுட்டா.” 

“கம் ஆன் லெட் அஸ் கோ…” 

”ஏன் ரெயில்லே வந்தே.. பிளேன் சௌகரியம் இல்லியோ?” என்றார் சாம்பசிவம் அவளுடைய விரைவான நடைக்கு ஈடு கொடுக்க முயன்று கொண்டே.

இதைக் கவனித்த ரேவதி வேகத்தை மிகவும் அதிகமாகக் குறைத்து நடந்தாள்.

”ஓகே பெரியப்பா? உங்களுக்கு பாவம் மூச்சு வாங்கறது…என்ன கேட்டீங்க? ஹாங் ஏன் பிளேன்ல வரலேன்னு? எனக்கு ரெயில்ல வர ஆசையா இருந்தது. ஊர்கள், மலைகள், வயல்கள் இதெல்லாம் பார்க்கணும் போலப்பட்டது”.

“நீ அமெரிக்காவிலிருந்து வர்றியே, நிறைய லக்கேஜ் இருக்குமேன்னு வேனுக்கு ஏற்பாடு பண்ணினோம்” என்றார் சாம்பசிவம் ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும்.

ரேவதி சிரித்தாள்.

”நான் என்ன அமெரிக்காவையே காலி பண்ணிட்டு இந்தியாவுக்கு மொத்தமா வந்துட்டேன்னு நினைச்சீங்களா, பெரியப்பா.”

”ஆமாம்மா. பஞ்சநாதம் போனப்ப தலையில் இடி விழுந்தமாதிரி இருந்தது. எங்கேயோ பத்தாயிரம் மைலுக்குத் தள்ளி இருக்கிற எனக்கே அப்படீன்னா, கிட்டக்கவே இருக்கிற உனக்கு…”

ரேவதி சிரித்தாள்,

“பெரியப்பா நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்படறீங்க… பாத், டெத்… இதெல்லாம் ரொம்ப காமன், பர்த்துக்கும் டெத்துக்கும் நடுவே ஒரு சின்ன இண்டர்வெல் இருக்கே, அதான் லைஃப், வாழ்க்கை. இதை எப்படி. அனுபவிக்கிறோம் என்கிறதுதான் முக்யம். ஆம் ஐ கரெக்ட், சத்யா?”

“இது பத்தி அப்புறமாப் பேசலாம்னு படறது.”

வேன் மெரினா வழியாகவும் சென்றது.

”மெரினா ரொம்ப பியூட்டி ஃபுல்லா இருக்கும்னு அம்மா அப்பா சொல்லுவாங்க… என் கண்ணுக்கு எல்லாம் டர்ட்டியாத் தெரியறது. மியாமி பீச் எவ்வளவோ தேவலை…”

”அவங்க பார்த்த காலத்தில பீச் அழகாத்தாம்மா இருந்தது. இப்ப பீச் கடற்கரை இல்லை! கடைக்கரை……படகுக்கரை… மீட்டிங் போடற கரை…”

வேன் வீட்டு மூன்னால் நின்றது.

சத்யா கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.ஆறு நாப்பது.

வாசலில் சாரதம் மட்டுமே நின்று கொண்டிருந்தாள்.

“பெரியம்மா தானே?”

“கரெக்ட்…”

“பெரியம்மா, நான்தான் ரேவதி.”

“தெரியுமே உள்ளே வா”, அவளுடைய வார்த்தைகள் உயிரின்றி வருவதாகப்பட்டிருக்க வேண்டும், ரேவதிக்கு.

“ஏன் பெரியம்மா, நான் வந்தது பிடிக்கலையா?”

“சேச்சே. அதெல்லாம் இல்லே ரேவதி, வா, காப்பி கலந்து கொண்டு வரேன்.”

“நோ காப்பி!”

“டீ?”

“நோ டீ!”

“அப்ப என்னதான் சாப்பிடுவே ரேவதி?”

”நான் கோகோ கொண்டு வந்திருக்கேன். அதை அப்புறமா சாப்பிட்டுக்கலாம். இப்ப மணி ஏழு ஆகப்போறது. மொதல்ல குளியல்.. அப்புறம்தான் எல்லாம்.”

“உன் இஷ்டம்” என்றாள் சாரதம்.

“பெரியப்பா!”

“என்ன ரேவதி!”

“பெரியம்மா முகத்திலேர்ந்து ரொம்ப கிளியராத் தெரியறது. நான் திடுதிப்னு இங்கே வந்தது பிடிக்கலேன்னு. சத்யா – நீ – நீன்னு கூப்பிடறது தப்பு இல்லியே – ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுவியா?”

“சொல்லு ரேவதி”

“இந்த மெட்ராஸ்ல டாஜ், சோழா ஷெரட்டன் அடையார் பார்க், இதெல்லாம் ஃனபவ் ஸ்டார் ஓட்டல்ஸ், சவேரா ஃபோர் ஸ்டார்னு நினைக்கிறேன். உட்லண்ட்ஸும் சௌகரியமா இருக்கும்னு. ரெயில்ல வாறப்ப ஒருத்தர் சொன்னார். நீ எனக்கு உட்லண்ட்ஸ்ல ஒரு ஷூட்டுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா? பெரியம்மாவுக்கு இஷ்டமில்லாம நான் இருக்கிறது சரின்னு படலே..”

சாம்பசிவம்: சாரதத்தை விறைத்துப் பார்த்தார். சத்யாவும் கோபத்துடன் மாமியைப் பார்த்தான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே ரேவதி, நீ யாரு? என் கொழுந்தன் பொண்னு. எனக்கு காலையிலிருந்தே தலைவலி. ஒத்தைத் தலைவலி. நீ ஓட்டல்ல தங்கப்படாது. இங்கேதான் இருக்கணும்… உனக்காக வைதேகி, வீரா, சுபா மூணு பேரும் மாடியில் ஒரு ரூமைத் தயார் பண்ணிட்டிருக்கா… நீ குளிச்சிட்டு வா.”

“நீங்க கலகலப்பா இல்லேன்னா நான் இடத்தைக் காலி பண்ணிடுவேன் பெரியம்மா,” என்றாள் ரேவதி. பிறகு, சிறிய பெட்டியைத் திறந்து சோப், டவல் மற்றும் மாற்று உடைகளை எடுத்துக் கொண்டாள். 

“பாத்ரூம் காட்டறேன் வா.. கொஞ்சம் வழுக்கும். ஜாக்கிரதை!” என்றாள் சாரதம். 

சாரதம் ரேவதியைக் குளியல் அறையில் விட்டுவிட்டு வந்ததும், சாம்பசிவம், “புத்தசாலிப் பெண். ஒரு வினாடியில் உன் குணத்தைப் புரிஞ்சுக்கிட்டா.. ஏன் இப்படி இருக்கே நீ, சாரதம்?” என்றார். 

“என்னால பொய்மையாச் சிரிக்க முடியாது!” என்றாள் சாரதம். 

“என் தம்பி போனப்புறம் அவளும் எனக்கு இன்னொரு பொண்தான், இதை மறக்காதே!” 

“அதான் ஏற்கெனவே நீங்க சொல்லியாச்சே?”

“பாபு எங்கே?”

“இன்னும் வரலே.”

“ஆபிஸ்லேர்ந்து பெண்டாட்டியைப் பார்க்கப் போயிருப்பான்!” என்றார் சாம்பசிவம். 

இருபது நிமிடங்களுக்குப் பிறகு ரேவதி திரும்பினாள்.

“ஷவர்ல தண்ணி சரியா அடர்த்தியா வரலே… பாதி ஓட்டைகள் அழுக்கில அடைச்சுட்டிருக்கு,” என்ற அவள், “என் துணிகளை பார்ரூம்ல போட்டிருக்கேன். அப்புறமா வாஷ் பண்ணிக்கிறேன்…. வாஷிங் மெஷின் எங்கே இருக்கு? பாத்ரூம்ல இல்லே…” 

“வீட்லேயே இல்லே…”

“என்ன வாஷிங் மெஷின் இல்லியா!” ரேவதி நீலநிற ஹவுஸ்கோட்டில் நின்று ஆச்சரியத்துடன் பார்த்தாள். 

“எட்டாயிரம் பத்தாயிரம் கொடுத்து வாங்க வசதி இல்லை!” என்றாள் சாரதம். 

“வசதி ஏற்படுத்தினாப் போறது” என்ற ரேவதி, தரையில் சப்பணமா உட்கார்ந்து கொண்டு நான்கு அடி நீள, இரண்டரை அடி அகலமுள்ள பெட்டியைத் திறந்தாள். 

“அவங்கள்லாம் இன்னும் கீழே வரலியா?”

“எவங்க?” என்றார் சாம்பசிவம். 

“என் கஸின்ஸ்; வைதேகி, சுபா…. வீர்ராகவன்.”

“அதோ வர்றாங்க.”

மாடியிலிருந்து மூவரும் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.- 

ரேவதி அவர்களைப் பார்த்தாள், சிரித்தாள். 

“ஐ’ம் ரேவதி… யுவர் கஸின் ஃப்ரம் தி ஸ்டேட்ஸ்!” 

“யூ ஆர் வெல்கம்!” என்றாள் சுபா. 

“க்ளாட் டு ஸீ யு!” – வைதேகி.

“நாம ரொம்பச் சின்ன வயசில பார்த்துக் கொண்டது…” என்றான் வீரா. 

”ரியலாவே நீங்க மூணுபேரும் என்னை வெல்கம் பண்றதாப்படறது!” என்ற ரேவதி பெட்டி மூடியைத் தூக்கினாள். என்னவெல்லாமோ அடைத்துக் கொண்டிருந்தன. 

”பெரியம்மா, இது உங்களுக்கு. மல்டி பர்ப்பன் மிக்ஸி, வைதேகி, இது உனக்கு, ஹேர் ட்ரையர், சுபா, இது லேடஸ்ட் காமெரா, ஒரு ரோல் கலர் பிலிம் இருக்கு. வீர்ராகவன் இது கம்ப்ளீட் டாய்லெட் ஸெட்… டூ ஹண்ட்ரண்ட் பிளேட்ன், யுடிகொலோன், ஆஃப்டா ஷேவ் லோஷன், எக்ஸட்டரா எக்ஸட்டரா. பாபுவுக்கும் இதே மாதிரி ஒரு செட், அப்புறம் இந்தப் பாக்கெட்ல கலிபோர்னியா ஆர்மண்ட்டஸ். இதோ இதில ஏழெட்டு டீ ஷர்ட்ஸ். இதில அமெரிக்கன் ஜார்ஜட்… எல்லாம் அஞ்சரை மீட்டா. பத்து இருக்கு, எப்படி வேணும்னாலும் பிரிச்சு எடுத்துக்கலாம். பெரியப்பா ரொம்ப ஸாரி, உங்களுக்குன்னு நான் எதுவும் வாங்கிட்டு வரலே, என்ன வாங்கறதுன்னு தெரியலே…” 

சத்யா சிரித்தான்.

“எனக்கும் எதுவும் நீ வாங்கி வரலே, ரேவதி”

“நீ இங்கே இவங்களோடதான் இருக்கேன்னு எனக்குத் தெரியாது?” 

“இட் இன் ஆல் ரைட்” 

“ஹாங், மறந்தே போயிட்டேன், பெரியம்மா, அமெரிக்கன் டயமண்ட்ஸ் அப்புறம் அரை கிலோ கோல்ட் கொண்டு வந்திருக்கேன்… கஸ்டம்ஸ்ல கொஞ்சம் டிவுட்டி போட்டா.. மொத்தம் நூறு டயமண்ட்ஸ்…” 

அயர்ந்து போன சாரதம் அவள் நீட்டிய வைரங்களைப் பார்த்தாள். தங்க பிஸ்கட்டுகளை சாம்பசிவம் பார்க்க, கண் கூசியது. அரை கிலோ ஐநாறு கிராம். இன்றைய விலை. கிட்டத்தட்ட கிராம் நானூறு ரூபாய். ஐநூறு என்றால்? இரண்டு லட்சம்! சாம்பசிவத்துக்கு மயக்கயும் வந்தது. ரேவதி எழுப்பினாள். 

“பெரியப்பா!” 

”என்ன ரேவதி.” 

“ஒரு பிஸ்கட்டைக் கொடுங்க.” கொடுத்தார். 

”சத்யா, இது என்னுடைய அன்பளிப்பு.”

“சாதாரண பிஸ்கட்டா இருந்தாத் திங்கலாம். இதை வைச்சுட்டு நான் என்ன செய்வேன், ரேவதி?”

“உங்க மனைவிக்கு…”

”கலியாணம் ஆகலே..”

”எதிர்கால மனைவிக்கு நகை பண்ணிப் போடலாமே!”

“அப்ப சரி!” கை நீட்டி வாங்கிக் கொண்டான். பிறகு. “சுபா!” என்று அழைத்தான். 

“என்ன சத்யா?”” 

“இப்ப ரேவதி சொன்னது காதில விழுந்தது. இல்லியா?”

”அதற்கென்ன?” 

”இந்தா. இது உனக்கு.” 

ரேவதி திடீரென்று சிரித்தாள். 

“ஸோ யூ ஆர் எங்கேஜ்ட்!”

“கரெக்ட்.. ஆனா நாங்க எங்கேஜ்டாகி என்ன புண்ணியம்?” – சத்யா. 

“ஏன்?” 

“நான் இன்னும் சிங்கிளா இருக்கேனே!” என்றாள் வைதேகி. 

ரேவதி பதில் சொல்லவில்லை. 

“நீ மாடிக்கு வந்தால் உன் ரூமைக் காட்டுவேன்!” என்று சுபா கூறினாள். 

“இந்த வீட்டு மாடியில எத்தனை ரூம் இருக்கு?”

“ரெண்டு. ஒண்ல நான். இன்னொண்ல இவ. வீராவோட அலமாரியும் புஸ்தகங்களும் என் ரூம்லதான் இருக்கு.” 

“கீழே?”

”ஒண்ணே ஒண்ணு.. அதில் பாபுவும் அவன் ஓய்ஃபும்..” 

“நான் ஒரு ஃபூல்! மிஸர்ஸ் பாபுவுக்கு ஒண்ணுமே வாங்கிட்டு வரலே.. எங்கே அவ?”

‘”அம்மா வீட்ல இருக்கா.” -சுபா.

“எப்ப வருவா?” 

“கடவுளுக்குக் கூடத் தெரியாது.” 

“இன் லா ப்ராப்ளமா?” ரேவதி சிரித்தாள். பிறகு. “பாபு எங்கே?” என்றாள். 

“இன்னும் ஆபீஸ்லேர்ந்து திரும்பலே.” 

“இன்னும் திரும்பலேன்னா பாபு ஒய்ஃபை மீட் பண்ணப் போயிருக்கணும்,” என்றாள் ரேவதி.

“மாடிக்குப் போவோமா?’ 

“நான் இங்கேயே ஹால்லேயே இருந்து கொள்றேன் சுபா… உங்க ரெண்டு பேரையும் டிஸ்டர்ப் பண்ண எனக்கு இஷ்டமில்லே…” 

“இங்கே கட்டில்கூட இல்லை” 

”பெரியம்மா எங்கே தூங்கறா?” 

“இந்த ஹால்ல அந்தக் கோடியில்.” 

“நானும் இங்கேயே தூங்கிக்கறேன். பெரியப்பா நீங்க?”

சத்யா. ”நானும் பெரியப்பாவும் நிண்ணையில” என்றான். 

“நான் மாடி ஹால்ல..” என்றான் வீரா.

“இன்னொரு மாடி கட்ட முடியாதா?”

“ஏன் முடியுமே..! சிமெண்ட், ஸ்டீல், டிம்யச் இதெல்லாம் இருந்து நல்ல மேஸ்திரி ஒருத்தனும் கிடைச்சுட்டா ஈஸியா கட்டிடலாம். ஆனா அதுக்கு இன்னொண்ணு முக்கியமா தேவைப்படறது. உங்க ஊரில டாலர், இந்த ஊரில ரூபாய்!” என்றான் வீரா. 

ரேவதி சிரித்தாள். 

வைரமும் தங்கமும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் “நீ கட்டாத்தரையில படுத்துப் பழக்கப்படாதவள், ரேவதி! மாடியில் சுபா ரூம்ல உனக்காக கட்டில் மெத்தை எல்லாம் ரெடியா இருக்கு” என்றாள் சாரதம். 

”நோ பெரியம்மா, நான் இங்கேதான் தூங்கப் போறேன். நீங்க பெரிசா குறட்டைவிட மாட்டிங்களே?” 

ரேவதி சிரிப்பதற்கு முன்பாகவே, எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள்.

– தொடரும்…

– இன்பமான பூகம்பம் (நாவல்), வெளியானது: ஜூலை 1995, மாலைமதி மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *