கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 6,501 
 
 

வீட்டின் கேட்டைத்திறந்து உள்ளே வர முயன்ற வயது முதிர்ந்த, அழுக்கடைந்த கந்தையான ஆடைகளை அணிந்திருந்தவரை தெரு நாயை விரட்டுவது போல் விரட்டினாள் மாதவி.

“யாரு….? யாரு….?” என வீட்டிற்குள்ளிருந்து வந்த தனது மாமியாரைப்பார்த்து “நீங்க உள்ள போங்க அத்தை. யாரோ ஒரு பிச்சைக்காரன் உள்ளே வரப்பார்த்தான். இப்பெல்லாம் பிச்சைக்காரங்க கேட்டைத்திறந்து வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பிச்சுட்டாங்க. கேட்டை திறக்க முடியாம பூட்டு போடனம்” என கூறி விட்டு வீட்டிற்குள் சென்றாள்.

உள்ளே சென்ற மாமியார் தேம்பி தேம்பி அழுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாதவி, “அத்தே…. உங்களுக்கு என்ன ஆச்சு…? எதுக்காக இப்படி அழறீங்க…? இதுவரைக்கும் எங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு வருசத்துல நீங்க அழுது நான் பார்த்ததில்லை…” என கேட்டபடி சோபாவில் தனது மாமியாரின் அருகே சென்று ஆறுதலாக அமர்ந்து கொண்டாள் மாதவி.

சிறிது நேரம் அழுத பின் நா தழுதழுக்க, “அவரோட ஞாபகம் வந்திருச்சு. அவரு கேட்டை திறக்கிற மாதிரியே சத்தம் காதுல கேட்டதுனாலதான் ஓடி வந்தேன். அவரு சொல்லாம வீட்ட விட்டுப் போயி இன்னைக்கோட அஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. இந்தக் குடும்பத்துக்காக அத்தனையும் பண்ணியிருக்காரு. ஒரு வார்த்த… ஒரே ஒரு வார்த்தைக்காக கோபப்பட்டு போனவர் எங்க தேடியும் கிடைக்கில. எப்படியாச்சும் ஒரு நாள் வீடு தேடி வருவாருன்னு தான் ஒடம்புல  இந்த உசுர வெச்சுக் காத்திட்டிருக்கறேன்” கூறி விட்டு படுக்கையறைக்குச்சென்று சோர்வுடன் படுத்துக்கொண்டாள் மாதவியின் மாமியார் மகந்தி.

“அம்மா…. அம்மா…. அப்பா வந்தாரா அம்மா …?” பதட்டத்துடன் வீட்டிற்குள் வந்தான் மாதவியின் கணவன் பரமன்.

படுத்திருந்த மகந்தியும் பதற்றத்துடன் எழுந்தவள் “அவரா…? வந்துட்டாரா….? நீ பார்த்தியா….? எங்கே….?” என கேட்க, “நாம் பாக்கலே…. பக்கத்து வீட்டு ராகவன் பார்த்ததா சொன்னான். அதுவும் நம்ம பாரதி வீதில தானாம். ரொம்ப நாள் குளிக்காம, துணியும் துவைக்காம பார்த்தா அசல் பிச்சைக்காரர் மாதரியே இருந்தாராமாம்மா….” சொன்னவன் வார்த்தை தழுதழுக்க கதறி அழுதான்.

இதைக் கேட்ட மாதவி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். ‘பிச்சைக்காரர் என நாம் விரட்டி விட்டது நம் மாமனாரா….? கடவுளே என்ன சோதனை இது? இதைச்சொன்னால் கணவர் மேலும் கவலைப்படுவாரே…? அதிக பட்சம் இந்த ஊரை விட்டு போயிருக்க மாட்டார். எதற்கும் தேடிப்பார்ப்போம்’ என முடிவு செய்தவள் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போய் வீதி, வீதியாக சல்லடை போட்டு தேடினாள்.

சைலண்ட் மோடில் போன் இருந்ததால் கணவனும், மாமியாரும் மாற்றி, மாற்றி அழைத்தும் மாதவி போனை எடுத்துப்பேசவில்லை.

“ஏங்க பிச்சைக்காரர் மாதிரி ஒருத்தர் போறதப் பார்த்தீங்களா…?” எதிரே வந்தவரிடம் கேட்டாள்.

“பிச்சைக்காரனைப் பார்த்தா விரட்டியடிக்கிற காலத்துல பிச்சைக்காரனைத் தேடிப் போற நீ யாரும்மா மகராசி. பிச்சைக்காரங்க மறுவாழ்வு மையம் ஏதாச்சும் நடத்துறியா….?” கேட்ட வயதானவரை முறைத்துப்பார்த்தாலும் “அ…ஆமாங்க….” என்றாள்.

“இப்படியே நேரா போயி லெப்ட் எடு, அப்புறம் கொஞ்சம் தூரம் போனீன்னா  அந்தக் கார்னர்ல ஒரு பேக்கரி வரும், அதுல ரைட் திரும்பி ஸ்டைட்டா ரெண்டு கிலோ மீட்டர் போனீன்னா ஒரு ஆலமரம் இருக்கும். அங்க நெறைய பிச்சைக்காரங்க இருக்காங்க. அவங்க கிட்ட அடையாளம் சொல்லி விசாரிச்சீன்னா கண்டு பிடிக்கலாம்” சொன்னவர் தனது வாகனத்தை இயக்கி சென்ற பின் சற்று தயங்கியவள், ‘எதற்கும் அங்கே சென்று பார்க்கலாம்’ என யோசனை தோன்றியதும் சென்றவளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்குமென முன்பே தெரிந்திருக்கவில்லை.

தந்தையை இழந்த மாதவிக்கு சிறு வயதிலிருந்து கேட்பதை வாங்கிக் கொடுத்து, கல்லூரி கட்டணம் வரை கட்டிய தாய் மாமன் ஒரு நாள் மனைவியுன் சண்டை போட்டு விட்டு சொல்லாமல் சென்று விட்டார். எங்கு தேடியும் கிடைக்காததால் இறந்திருப்பார் என ஈமச்சடங்கையும் செய்து விட்டார்கள். அந்த மாமா பிச்சைக்காரர்களுடன் பிச்சைக்காரராய் அமர்ந்திருந்தவர் மாதவியைக்கண்டதும் தலை மேல் கந்தைத்துணியைப்போட்டு முகம் தெரியாதவாறு மூடிக்கொண்டார்.

“பிரதாப் மாமா…?” என மாதவி அழைத்த படி அருகில் செல்ல முயன்ற போது எழுந்து ஓடியவர் அருகிலிருந்த கிணற்றில் குதித்து விட, தீயணைப்பு துறையினர் வந்து தேடி எடுத்த போது உயிரற்ற உடலாய் பார்த்து கதறி அழுதாள்.

சென்னையிலிருந்து கோவைக்கு மாமாவின் மனைவியுடன் உறவினர்களையும் வரவழைத்து தமது வீட்டிலேயே ஈமச்சடங்குகளை நடத்திய நிலையில் தான் தேடிப்போன மாமனாரை மறந்தே போயிருந்ததை நினைத்து கவலை கொண்டாள்.

‘தனது மாமாவைப்போல மாமனாரும் தேடிச்சென்று அழைத்தால் தற்கொலை செய்து கொண்டால் என்ன செய்வது? எங்கேயோ உயிருடன் இருந்து விட்டுப்போகட்டும். அவராக வந்தும் நமக்கு அடையாளம் தெரியாததால் தானே விரட்டி விட்டோம்….. வாழ்வில் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம். வேண்டும் என திட்டமிட்டு செய்யவில்லை. போட்டோவில் அவரது முகத்தைப்பார்த்திருந்தாலும் நேரில் தாடி வைத்து வேறு மாதிரி இருந்ததால் இப்படியாகி விட்டது. மறுபடியும் அவராக மனம் மாறினால் வரட்டும். இன்னொரு முறை வரும்போது நம்மால் இந்த தவறு நடக்காது. நாமாக தேடிப்போய் மாமாவைப்போல இன்னொரு உயிரை இழந்து விடக்கூடாது’ என நினைத்தவள் மாமனாரைத் தேடும் எண்ணத்தை முற்றிலும் விட்டு சாந்தமானாள்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *